Select Page
கொடியர் அல்லர்


	வாசலில் உள்ள திண்ணையில் முல்லையின் தாயும், வளர்ப்புத்தாய் முத்தம்மாவும் அமர்ந்துகொண்டு பாடுபேசிக்கொண்டிருந்தனர். 
	உள் நடையில் அமர்ந்துகொண்டு பூக்கட்டிக்கொண்டிருந்த முல்லை ஆர்வமின்றி அவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“தெரியுமா சங்கதி, இன்னிக்கி ஒரு களவாணிப்பயல கையுங்களவுமாப் பிடிச்சுப்புட்டாங்களாம்” என்றாள் முத்தம்மா.

“அது யாரு? யார் வீட்டுல போயிக் களவாண்டானாம்?” என்று கேட்டாள் பேச்சித்தாய்.

“யாரோ வெளியூர்க்காரனாம். ஒரு தோட்டத்துல சோளக் கதுர கசக்கிக்கிட்டு இருந்திருக்கான். கையில ஒரு சாக்குவேற வச்சிருந்திருக்கான். 
காவக்காரன் கண்டு கையப் புடிச்சிருக்கான். இவன் கைய ஒதறிவிட்டுட்டு ஓட்டம்புடிச்சுட்டான். அப்புறம் வெரட்டிப் புடிச்சிருக்காங்க”

“அப்புறம் என்ன பண்ணுணாங்களாம்?”

“சாவடிக்குக் கொண்டாந்திருக்காங்க. ஊர்ப்பெரியவக கூடி விசாரிச்சுருக்காக. கேட்டா நான் ஒண்ணுமே பண்ணல’ங்கிறானாம்.”

“ஒண்ணுமே பண்ணாதவன் அப்புறம் ஏன் காவக்காரனப் பாத்துட்டு ஓடுனானாம்?”

“சும்மா அவசரத்துக்கு தோட்டத்துப் பக்கம் ஒதுங்கப்போனேன். காவக்காரன் சத்தம்போட்டதும் ஓடிட்டேன். இவங்கதான் 
வெரட்டுனாங்க’ங்கிறானாம்”

“கூத்தப் பாத்தியா? அப்புறம் காவக்காரன் என்ன பொய்யா சொல்லுவான்? அப்புறம் சாக்கு?”

“அதுவும் என்னது இல்லங்கிறானாம். அவன வேற என்ன செய்யுறது? இத்தனிக்கும் மரத்துல கட்டிவச்சுதான் கேட்டிருக்காங்க”

“எந்த மரம்? நம்ம சாவடி மரமா? அது சாமி மரமாச்சே. அதத் தொட்டுகிட்டே பொய் சொன்னா ரத்தங்கக்கிச் செத்துருவாங்களே!”:

“அந்த மரத்துல கட்டிப்போட்ட பயதான், களவாட நெனச்சுப்புட்டு மனசாரப் பொய்யும் சொல்லியிருக்கான். எவ்வளவு திண்ணக்கம் பாத்தீங்களா?”

“அப்புறம் அவன என்னதான் செஞ்சாங்களாம்?”

“இல்ல’ன்னு சாதிக்கிற பயல என்ன செய்யுறது? கயத்த அவுத்துவிட்டுட்டு, மரத்தக் கட்டிப்புடிச்சுக்கிட்டு, ‘நான் களவாட வரல்லே’ன்னு 
சத்தியம் பண்ணச் சொல்லியிருக்காங்க. அவனும் பண்ணிட்டு பேசாமப் போயிட்டானாம்.”

“எங்க ஊரு போயிச் சேரப்போறான். போறவழியிலேயே ரத்தங்கக்கிச் செத்துருவான்.” என்று பேச்சி அம்மா சொல்ல, உள்ளே முல்லைக்கு 
இருப்புக்கொள்ளவில்லை. வெளியில் வந்தாள்.

“ஏம்மா, நம்மூரு சாவடிமரத்துச் சாமி அவ்வளவு துடியா?” என்று கேட்டாள்.

“ஆமா, பொய்சொல்றவங்க, களவாடுறவங்க, கடன் வாங்கிட்டு இல்ல’ன்னு சொல்றவங்க, பொய்ச் சத்தியம் பண்ணுறவங்க, அப்படீனு 
யாராயிருந்தாலும் அந்தச் சாமிமரம் கெட்டவங்களைச் சும்மா விடாது”

“பொய்ச் சத்தியம்’னா என்ன?”

“கட்டாயம் ஒண்ணச் செய்வேன்’னு சத்தியம் பண்ணிட்டு, அப்புறம் அதச் செய்யாம இருக்குறது”
அந்த நேரம் பார்த்து முல்லையின் தோழி பொன்னி வந்தாள். தோழியை அழைத்துக்கொண்டு வேகமாக உள்ளே நுழைந்தாள் முல்லை.

“எனக்குப் பயமா இருக்குடி, நம்ம சாவடி மரத்தப் பாத்தா” என்றாள்.

“அத நீ ஏன்டீ பாக்குற? நீ என்ன தப்புச் செஞ்ச? அதுக்குப் பயப்புடுறவ” என்று கேட்டாள் பொன்னி.

“இல்லடீ, அவரு கொஞ்ச நாள்’ல வந்துருவேன்’னு சொல்லிட்டுப் போயி இன்னும் வரல்லயே”

“அதுக்கு எத்தனயோ காரணம் இருக்கும். அதுக்கும் இந்தச் சாமி மரத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“இல்லடீ, கட்டாயம் ஒண்ணச் செய்வேன்’னு சத்தியம் பண்ணிட்டு, அப்புறம் அதச் செய்யாம இருக்குறதுகூடச் சாமிகுத்தந்தானாம். 
அம்மா சொன்னாங்க”
பொன்னி யோசனையில் ஆழ்ந்தாள். முல்லையே தொடர்ந்தாள்.

“ந்தா பாருடீ, இந்த நெத்தியெல்லாம் வெளுத்துப்போயி, தோளெல்லாம் மெலிஞ்சுபோனதுக்கு அவரு வராததுதான் காரணம்’னு நான் 
அன்னிக்கு ஒங்கிட்டச் சொன்னேன்’ல. 

“இப்ப அதுக்கென்னடீ?”

“இல்லடீ, அப்படீன்னா அவரு கெட்டவரு’ன்னு ஆகிடும்’ல. இப்ப நான் சொல்றேன். என் நெத்தி வெளுத்துப்போனதுக்கு அவரு வராம 
இருக்குறதுதான் காரணம் இல்ல. இந்த நெத்திதான் அவருமேல ஆசப்பட்டு வெளுத்துப்போச்சு. அப்புறம் இந்தத் தோளெல்லாம் 
மெலிஞ்சுபோனதுக்கு அவரு வராததுதான் காரணம்’னு நான் சொன்னதுகூடத் தப்புத்தான். அவரு மனசு என்னய நெனச்சு எளகணுமே’ன்னு 
இந்தத் தோளெல்லாம் மெலிஞ்சுபோச்சு. இந்த ரெண்டுக்கும் அவரு காரணமே இல்லடி. அவரு நம்ம ஊருக்காரரும் இல்ல. மலநாட்டுக்காரரு. 
அப்புறம் அவரு ஒண்ணும் கெட்டவரும் இல்ல. அவர இந்தச் சாமி ஒண்ணும் செய்யாதுலடீ?”

பாடல்:குறுந்தொகை 87 – ஆசிரியர் : கபிலர் – திணை : குறிஞ்சி

	மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
	கொடியோர் தெறூஉம் என்ப யாவதும்
	கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
	பசைஇய பசந்தன்று நுதலே
	ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே

அருஞ்சொற்பொருள்

மன்றம் : அம்பலம், ஊர்ப்பொதுவிடம்; மராஅத்த = மரா மரத்தின் கீழுள்ள; பேஎம் = அச்சம்; தெறூஉம் = தண்டிக்கும்; 
பசைஇய = அன்புசெலுத்த வேண்டி; நுதல் = நெற்றி; ஞெகிழ் = இளகுதல்.

அடிநேர் உரை

	ஊர்ப்பொதுவிடத்தில் உள்ள மரா மரத்தில் இருக்கும் அச்சந்தரும் கடவுள்
	கொடியவரைத் தண்டிக்கும் என்று சொல்வர். கொஞ்சங்கூட
	கொடியவர் அல்லர் எம் மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவர்;
	அவர் அன்பைப் பெறும்பொருட்டு வெளுத்துப்போயிற்று என் நெற்றி;
	அவர் மேல் என் உள்ளம் உருகியதால் மெலிந்தன என் பெரிய மெத்தென்ற தோள்கள்.
			
	The fearful ancient God in the maraa tree in the village courtyard
	Will punish the wicked people, they say; Even a little
	Wicked is not my man from the mountainous terrain,
	My forehead had become pale just because of its longing for his love;
	My large soft shoulders have become thin just because my heart melted for him.