யாரினும் இனியன் வாசற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. உள்ளே முல்லையுடன் பேசிக்கொண்டிருந்த பொன்னி திரும்பி வாசல்பக்கம் பார்த்தாள். “யாரா இருக்கும்?” மெதுவாகக் கேட்டுக்கொண்டாள் அவள். “போய்த் தொறந்து பாத்தாத்தான தெரியும். யாராயிருந்தாலும் சரி, ‘அது’ன்னா போயிட்டு அப்புறம் வரச்சொல்லு. இங்க இன்னும் அடுப்புப் பத்தவைக்கவே இல்லை”. ‘அது’ என்று முல்லை குறிப்பிட்டது தன் கணவனை. காதலித்துத் திருமணம் செய்துகொண்டவன்தான். திருமணம் ஆகிப் பல மாதங்களுக்கு முல்லையை நன்றாகவே கவனித்துக்கொண்டும் இருந்தான். முன்னோர் சேர்த்துவைத்துவிட்டுப்போன நிலங்களிலிருந்து அவ்வப்போது வருவாய் வந்துகொண்டிருந்தது. சோற்றுக்குப் பஞ்சம் இல்லை. ஏதோ கிடைத்த வேலையைச் செய்வான். இருப்பினும் குடும்பப் பொறுப்பு வேண்டாமா? முல்லைதான் வரவுசெலவுக் கணக்குகளைப் பார்த்துக்கொள்வாள். வெளிவிவகாரங்களைப் பார்த்துக்கொள்ள பொன்னி உதவுவாள். இதற்கிடையில் முல்லை கருவுற்றாள். அவன் ரொம்பவே விலகிச் செல்ல ஆரம்பித்தான். எந்த நேரத்தில் கணவனின் அன்பும் பாசமும் கவனிப்பும் அவளுக்குத் தேவைப்பட்டதோ அப்போது அவன் விட்டேற்றியாகத் திரிந்தது முல்லையை வெகுவாகவே பாதித்தது. இப்போது முல்லை முதுசூலி. எனவே பொன்னி எப்போதும் அவள் அருகிலேயே இருக்கிறாள். அவனோடு இருவருமே அதிகமாய்ப் பேச்சு வைத்துக்கொள்வதில்லை. அதிலும் முல்லை அவனுடன் பேசுவதே இல்லை. சாப்பிடும் நேரத்தில் மவுனமாய்ப் பொன்னி பரிமாற, அள்ளிப்போட்டுக்கொண்டு அவன் வீட்டைவிட்டுப் போய்விடுவான். இப்போதெல்லாம் அவனிடம் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. அதிகநேரம் வீட்டிலிருக்கத் தொடங்கினான். சாடைமாடையாக முல்லையிடம் பேச்சுக்கொடுத்துப்பார்த்தான். முல்லை மசியவில்லை. அவ்வப்போது பொன்னியிடம் நேரிடையாகப் பேசுவான். அவளும் கேட்டதற்குப் பதில் சொல்லுவதோடு சரி. காலையில் சாப்பிட்டுவிட்டுப் போனவன்தான். மதியச் சாப்பாட்டுக்கு வருகிறான் போலும் என்று எண்ணியே முல்லை பொன்னியிடம் அவ்வாறு கூறினாள். பொன்னி எழுந்து வாசல்பக்கம் சென்று, மூடியிருந்த கதவைத் திறந்தாள். கதவைத் திறந்தவுடன் ‘விருட்’-டென்று பறந்துவந்தது அந்த ஆண்குருவி. இது தன் பெட்டையுடன் வாசல் கூரையின் இடுக்கில் கூடுகட்டிக்கொண்டு நீண்டநாள்கள் அங்குத்தான் வசிக்கிறது. பொதுவாகவே இரண்டும் நடு முற்றத்தின் திறந்தவெளி வழியாகவேதான் உள்ளே வந்து செல்லும். இப்போது பெட்டைக்குருவி கருவுற்றிருக்கிறது. முட்டைபோடும் நேரம். அதனால் அந்தப் பெட்டைக்குருவி வெளியில் செல்வதில்லை. அவ்வப்போது பொன்னி தன் வீட்டுக்குச் சென்றுவரும் நேரங்களில் இவைதான் முல்லைக்குத் துணை. கீச்கீச் என்று கத்திக்கொண்டு அவை இன்பமாய்க் குடித்தனம் நடத்தும் அழகை ஆசையுடனும் ஏக்கத்துடனும் முல்லை ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பாள். வாசல்வழியாக உள்ளே வந்த ஆண்குருவி முதலில் உள் நடையில் அமர்ந்தது. அதன் மூக்கில் எதனையோ கொத்தி எடுத்துவந்திருந்தது. உற்றுப்பார்த்தாள் பொன்னி. அது ஒரு நீண்ட பூவின் இதழின் ஒரு பகுதி. வாசமே இல்லை. வெள்ளையாக இருந்தது. கரும்புப் பூவாக இருக்கவேண்டும். பெட்டைக்குருவி முட்டையிடவும், முடிந்து அடைகாக்கவும் அதற்கு வசதியான இருப்பிடம் தேவை. தனது பேடை வசதியாகப் படுத்து முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கத் தேவையான கூடுகட்ட மென்மையான கரும்புப் பூவைக் கொத்திக்கிழித்துத் தன் அலகினால் தூக்கிவந்திருக்கிறது அந்த ஆண்குருவி. நடையில் தாவித்தாவித் துள்ளுநடை போட்ட சேவல் குருவி விருட்டென்று உயர எழுந்து தன் பெட்டை இருக்குமிடத்தில் அமர்ந்துகொண்டு பொன்னியைப் பார்த்தது. பொன்னி சிறிது சிரித்துக்கொண்டாள். பின்னர்தான் வாசல் கதவு தட்டப்பட்டதை நினைவுகூர்ந்தாள் பொன்னி. வாசலை நன்கு திறந்து உள்ளிருந்தவாறே கழுத்தை நீட்டி இடப்பக்கம் பார்த்தாள். அங்கு ஒருவரும் இல்லை. பின்பு வலப்பக்கம் பார்த்தாள். அங்கு மதிலை ஒட்டி பதுங்கிக்கொண்டிருப்பவன்போல் அந்தப் பாணன் நின்றுகொண்டிருந்தான். அவன் முல்லையின் கணவனின் கையாள். “என்னடா வேணும், நீதான் கதவத் தட்டினயா?” என்று அதட்டலாய்க் கேட்டாள் பொன்னி. அவளைப் பொருத்தமட்டில் இவன்தான் முல்லையின் கணவனின் மாற்றத்துக்குக் காரணம். இவன் சகவாசம் கிட்டிய பின்னர்தான் முல்லையின் கணவனின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. அதை அவள் ஏற்கனவே முல்லையிடம் சொல்லியிருக்கிறாள். முதலில் இவனை அறுத்துவிடுவதற்கான வழியைப் பார்க்கவேண்டும் என்று பொன்னி நினைத்துக்கொண்டிருந்தபோது, அவனே அவள்முன் ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டு நின்றான். “ஏந்த்தா நல்லாயிருக்கியா?” “நான் எப்படியிருந்தா ஒனக்கென்னடா? இப்ப எதுக்குடா இங்க வந்திருக்குற?” “அண்ணன் ….” என்று அவன் இழுத்தான். “ஒங்கண்ணன் இங்க இல்லை. அவரத்தான் எங்கயோ கொண்டுபோயில்ல நீ வச்சுருக்க. அங்க போயித் தேடு” “அண்ணன்கிட்ட இருந்துதாந்த்தா நான் வர்ரேன்” “இங்க ஒனக்கு என்ன சோலி” “கொஞ்சம் பொறுமையாக் கேளுத்தா. அண்ணன் ரொம்ப வருத்தப்படுறாரு” “நீதான் இருக்கல்ல, அவரு வருத்ததுக்கு மருந்துபோட” “வெடுக் வெடுக்-குன்னு பேசாதத்தா. அண்ணன் ரொம்ப நல்லவரு.” “ஆமாமா, அவரு ரொம்ப நல்லவரா இருக்குறனாலதான் அவரு வீட்டுல இருக்குற சேவக்குருவிகூட, தாம் பொட்டக்குருவி முட்டைபோடக் கூடுகட்டுது. வேற ஏதாவது குச்சி கூளத்தக் கொண்டுவந்தாக்கூட தாம் பொட்டைக்குக் குத்துமோ’ன்னு நெனச்சு, பூவாக் கொண்டுவருது. அதுலயும் வாசமா இருந்தா மயக்கமா வருமுண்ணு, வாசமில்லாத கரும்புப்பூவாக் கொண்டுட்டு வருது. ஒங்கண்ணன் என்னத்தப் பண்’ணாரு. ஒரு குருவிக்கு இருக்கிற அக்கறகூட இல்லாம, சும்மா சோத்தச் சோத்தத் தின்னுக்கிட்டு சொகத்தத் தேடிக்கிட்டு?’” “இல்லத்தா, அவரு அக்காகிட்ட கொள்ளப் பாசம் வச்சிருக்காருத்தா, எங்கிட்ட சொன்னாரு.” “அத நீதான் சொல்லி மெச்சிக்கணும். இப்படிப் பேசிக்கிட்டுத் திரியாம, ஒன்னயத்தூக்கி ஒடப்புல போட்டுட்டு, மனுசன வீட்டுலயே இருந்து நெற சூலியா நிக்குற பொண்டாட்டியக் கவனிக்கச் சொல்லு. அத எப்படி நீ போய்ச் சொல்லுவ? ஒம்பொழப்பு என்னாகிறது? போ, போ வேற சோலியிருந்தா பாரு” கதவை இழுத்துச் சாத்திவிட்டு, தொங்கிக்கிடக்கும் முந்தானையை இழுத்து ஒரு உதறு உதறிவிட்டு, முல்லையிடம் வந்தாள் பொன்னி. “யாருடீ அது, கொள்ளச் சத்தம் போட்டுக்கிட்டு’ருந்தே?” “அவந்தான், அந்தக் கேடுகெட்ட பாணன். எப்படியிருந்த எங்கண்ணன இப்படி ஆக்கிட்ட பாவி, அவன் நல்லா’ருப்பானா?” “அவன் என்னடி சொன்னான்?” “ஆமா, சொன்னான் சொரக்காய்க்கு உப்பில்ல’ன்னு. என்னமோ ஒன் வீட்டுக்காரருதான் ஊருலயே நல்லவராம். ஒம் பேருல கொள்ளப் பிரியம் வச்சுருக்காராம். இவந்தான் அதச் சொல்லிக்கணும்” பாடல் : குறுந்தொகை 85 ஆசிரியர் : வடமவண்ணக்கண் தாமோதரன் திணை: மருதம் யாரினும் இனியன்! பேர் அன்பினனே! உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர், தேம்பொதிக்கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன்! பாணன் வாயே! அருஞ்சொற்பொருள் குரீஇ = குருவி; ஈன் இல் = குஞ்சுபொரிக்கக் கூடு; இழைஇயர் = பின்னுவதற்காக; தேம்பொதிக்கொண்ட = இனிய சுவையைப் பொதிந்துவைத்துள்ள; நாறா = மணமில்லாத; கொழுதும் = கொத்திக்கிழித்து கோதி எடுத்துவரும்; யாணர் = புதுவருவாய். அடிநேர் உரை எவரையும் விட இனியவன்; மிகுந்த அன்பினன்; உள்ளூர்ச் சிட்டுக்குருவியின் குதித்துக்குதித்து நடக்கும் ஆண்குருவி சூல் நிறைந்த தன் பெட்டைக்குருவிக்கு அடைகாத்துக் குஞ்சுபொரிக்கும் கூடு கட்ட இன்சுவையைத் தன்னுள் பொதிந்துவைத்துள்ள இனிய கழையான கரும்பின் மணமில்லாத வெள்ளைநிறப் பூக்களைக் அலகால் கோதி எடுத்துவரும் புதுவருவாயை உடைய தலைவன், தன் பாணனின் கூற்றில் மட்டும். He - With fresh incoming wealth - In whose village, the male house sparrow with hopping gait, In order to lace a nest for laying eggs and hatching, Rends the fragrance-less white flowers of the sugarcane holding so much sweetness; He – In Sweetness is second to none; His love is so abounding; So says his friend, the bard.