Select Page

குறுந்தொகைக் காட்சிகள் – பாடல் கதை

பாடல் 3 – நிலத்தினும் பெரிதே

குறிஞ்சிப்பூ

முல்லை அன்று மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டாள்.
மலைச் சரிவில் பூத்துக்கிடக்கும் குறிஞ்சிப்பூக்களைப் பார்த்துவருகிறேன் என்று பொன்னியுடன் கிளம்பியவள் வழிநெடுகிலும் ஆட்டமும் பாட்டுமாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் ஒரு பட்டாம்பூச்சியைப்போல் பரபரப்பாகக் காணப்பட்டாள். அவளது வேகத்துக்குப் பொன்னியால் ஈடுகொடுக்கமுடியவில்லை.
மூச்சுவாங்க முல்லையைப் பின்தொடர்ந்து போய்க்கொண்டிருந்தாள். ஓரிடத்தில் கொத்துக்கொத்தாய்ப் பூத்துக்கிடந்த குறிஞ்சிப்பூக்களைக் கண்டதும் முல்லையின் உற்சாகம் கரைபுரண்டோடியது.
பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை கிடைக்கும் காணற்கரிய காட்சி அது. வேகமாக அந்தக் கருத்த குச்சிகளிடையே கைகளை விட்டுத்துளாவி அந்தச் சின்னஞ் சிறிய நீலநிறப் பூக்களின் மேல் உள்ளங்-கைகளைப் பரப்பி ஓட்டினாள். பின்னர் அவற்றிலிருந்து ஒரு சிறிய பூவை மெல்லப் பிடுங்கி, உடனே அதன் அடிப்பாகத்தை வாய்நுனியில் வைத்து உறிஞ்சினாள்.
“ஏண்டீ, அவ்வளவு தேனா இருக்கு இந்தச் சின்னப்பூவுக்குள்ள?” பொன்னி வியப்படங்காமல் கேட்டாள்.
“சின்னப்பூதான். கொஞ்சம் தேன்தான். ஆனா அந்த இனிப்பு என்னிக்கும் கிடைக்குமா?” என்றாள் முல்லை.
“பன்னெண்டு வருசத்துக்கொருமுறையில்ல இது பூக்குது. என்னிக்கோ ஒருநாள் பூக்குறதுனாலதான் இத இம்புட்டுப் பெரிசாக் கொண்டாடுறாங்க.
அந்த மாதிரி ..” என்று இழுத்துவிட்டு நிறுத்திக்கொண்டாள் முல்லை.
“அந்த மாதிரி?” என்று நீட்டிக்கேட்டாள் பொன்னி.
“ஒண்ணுமில்லடீ” என்ற முல்லை தொலைவிலிருந்த வேங்கை மரத்தின் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு பெரிய தேனடையைப் பார்த்து மிகப் பரவசமானாள். “பொன்னீ, இந்த சின்னப்பூவிலிருக்கிற கொஞ்சூண்டு தேனால கட்டுன தேன்கூடு எவ்ளோ பெரிசா இருக்கு பாத்தியா?” என்று கூவினாள் முல்லை. “கொஞ்சங்கொஞ்சமா எடுத்துப்போயிக் கட்டுனாலும் இவ்ளோ பெரிய கூட்டக் கட்ட எவ்ளோ நாளாகும்!” என்று வியந்தாள் பொன்னி.
“எத்தனதரம் இந்த வண்டு போய்ட்டுப் போய்ட்டு வந்துருக்கும்? அந்த மாதிரித்தான் கொஞ்சங்கொஞ்சமா சேத்துவச்சு சேத்துவச்சு .. “ என்று சொல்லி நிறுத்தினாள் முல்லை.
“அந்த மாதிரி?”
“ஒண்ணுமில்லடீ”
“என்னடீ இது. என்னத்தயோ சொல்ல வர்ர, அப்புறம் நிப்பாட்டிக்குற”
திடீரென்று மௌனமானாள் முல்லை. அவள் காலடியில் சரிந்து நீண்டு செல்லும் மலைச் சரிவைப் பார்த்தாள். அந்த மலைச்சரிவை அடுத்து ஒரு பள்ளத்தாக்கு, அதற்கும் அப்பால் குட்டிக்குட்டி மலையுச்சிகள். அப்படியே நீண்டு இறங்கிப்போய் கண்ணுக்கெட்டிய வரை நீண்டு விரிந்து கிடக்கும் இந்தப் பரந்த உலகத்தையும் பார்த்தாள் முல்லை.
“பொன்னீ, இந்த ஒலகம் எவ்வளவு பெரிசு?” என்று கேட்டாள் முல்லை.
“என்னடி, திடீர்-னு இந்தக் கேள்வி. இந்த ஒலகம் ரொம்ம்ம்பப் பெரிசு. பாரு போய்க்கிட்டே இருக்கு. எங்க போயி முடியுது இது?” என்று சொன்னாள் பொன்னி. “இந்த ஒலகத்தக் காட்டிலும் பெரிசு எதுடீ?”
“ஒலகத்தக் காட்டிலும் பெரிசா? எனக்குத் தெரியாதுடா சாமி” அடுத்து வலப்பக்கம் திரும்பி உயர்ந்து செல்லும் மலையுச்சிகளைப் பார்த்தாள் முல்லை. அதன் உயரத்தில் அவற்றை மூடிக்கொண்டு படர்ந்திருக்கும் வெள்ளை மேகக் கூட்டங்களையும் பார்த்தாள். அவற்றுக்கும் அப்பால் மேலே, மேலே உயர்ந்து செல்லும் நீல வானத்தையும் பார்த்தாள். பின்பு கையை நீட்டி அந்த வானத்தைத் தொடுவதுபோல் உயர்த்தினாள்.
“சரி, இந்த வானம் எவ்ளோ ஒசரம்?”
“ரொம்ப ரொம்ப ஒசரம், இதுவும் எங்க போயி முடியுது’ன்னு யாருக்குத் தெரியும்?” “இந்த வானத்தக் காட்டிலும் ஒசரமா ஒன்னு இருக்கு தெரியுமா?”
“வானத்தக் காட்டிலும் ஒசரமா? ஊகும், எனக்குத் தெரியாது”
அப்புறம் திரும்பி, தொலைவில் தெரியும் அடிவானத்தைப் பார்த்தாள் முல்லை.
அந்த அடிவானத்தைத் தொட்டுக்கொண்டு ஒரு நீலக் கோடு தெரிந்தது. சிறு வயதில் அப்பாவிடம் அது என்ன என்று கேட்டிருக்கிறாள்.
“அது கடல்” என்றார் அவர். “ரொம்ப ஆழமா இருக்கும்” என்றுவேறு அச்சமூட்டியிருக்கிறார். அந்தக் கடலை நோக்கிக் கையை நீட்டினாள் முல்லை.
“சரி, அந்தக் கடலக் காட்டிலும் ஆழமானது எதுன்னாவது தெரியுமா?”
“என்னடீ இது! பெரிசு, ஒசரம், ஆழம்-னுக்கிட்டு. சொல்லவந்ததச் சுத்தி வளைக்காமச் சொல்லுடி, பெரிய புதிரு போடுறவ” என்று சடைத்துக்கொண்டாள் பொன்னி. “என்னடீ, அதுக்குள்ள சடச்சுக்கிறவ?. சொல்றேன் சொல்றேன். பூமியக் காட்டிலும் பெரிசு, வானத்தக் காட்டிலும் ஒசரம், கடலக் காட்டிலும் ஆழம் – எதுன்னா….” என்று நிறுத்தினாள் முல்லை.
முல்லையின் முகத்தையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள் பொன்னி. முல்லையின் முகம் கொஞ்சம் நிறம் மாறியது. அவள் மாந்தளிர் போன்ற நிறமுள்ள முகம் கொஞ்சம் கன்னிப்போய்ச் சிவந்து காணப்பட்டது. “ஏண்டி நிறுத்திட்ட, சொல்லு” என்றாள் பொன்னி.
“அதுவா, அது, அது, … மனுசங்க நெஞ்சுக்குள்ள இருக்குற காதல்” என்று சொல்லிவிட்டுச் சட்டென்று வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள் முல்லை.
அருகில் சென்று அவள் முகத்தைத் திருப்பினாள் பொன்னி. செக்கச் செவேலென்று சிவந்து கன்னிப்போயிருந்தது முல்லையின் முகம்.
“சொல்லுடி, இது ஒனக்கு எப்படித் தெரியும்?”
“ம், ம், நான் படிச்சேன்”
“படிச்சியா, இல்ல யாராவது கத்துக்குடுத்தாங்களா?”
குப்பென்று அத்தனை இரத்தமும் முகத்துக்கு ஏற, தன் முகத்தை மூடிக்கொண்டாள் முல்லை.
“ஓகோ, இத நெனச்சுகிட்டுத்தான் ‘அந்த மாதிரி, அந்த மாதிரி’ன்னு அப்பாத சொல்லிக்கிட்டு இருந்தியா? இப்பச் சொல்லு. என்னா அந்த ‘அந்த மாதிரி’?” “என்னய்க்கோ பூக்குற இந்தப் பூவுக்கு இருக்குற பெரும மாதிரித்தான் எப்படியோ வந்த அந்த நெனப்பும்’னு சொல்ல வந்தேன்”
“அப்புறம் அந்த ரெண்டாவது “அந்த மாதிரி’?”
“இந்தச் சின்னப் பூவில இருந்து ராத்திரி பகலாக் கொஞ்சம் கொஞ்சமா தேன எடுத்துச் சேக்குற மாதிரி .. இந்தச் சின்ன நெஞ்சுக்குள்ள ராத்திரி பகலா கொஞ்சம் கொஞ்சமா நெனப்புக் கெளம்பி .. “ முல்லை முடிக்க முடியாமல் தன் முகத்தை மூடிக்கொண்டு நிறுத்தினாள்.
“யாருடீ அவன்? சும்மா எங்கிட்ட சொல்லுடீ” என்று துருவினாள் பொன்னி. தன் இடதுகையை மட்டும் எடுத்துப் பக்கத்து மலை அடிவாரத்திலிருந்த சிற்றூர்ப் பக்கம் நீட்டிக் காண்பித்தாள் முல்லை.
“யாரு, மொத மொதல்ல குறிஞ்சிப்பூ கொத்துக் கொத்தாப் பூத்துக்கெடக்கு-ன்னு சொன்னாங்களே அந்த ஊர்க்காரனா?”
தலையை மேலும் கீழும் மெதுவாக அசைத்தாள் முல்லை.


பாடல் : குறுந்தொகை 3, ஆசிரியர் : தேவகுலத்தார், திணை : குறிஞ்சி

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

அருஞ்சொற்பொருள் :

ஆர் அளவு = (அளத்தற்கு) அரிய அளவு; சாரல் = மலைச்சரிவு; கரும்கோல் = கரிய குச்சி; இழைக்கும் = சிறிதுசிறிதாகச் சேர்த்து உருவாக்கும்.

அடிநேர் உரை:-
பூமியைக் காட்டிலும் பெரியது; வானத்தைக் காட்டிலும் உயரமானது; கடலைக் காட்டிலும் அளத்தற்கு அரிய ஆழம் உடையது; மலைச் சரிவிலுள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களினின்றும் எடுத்து பெரிய (அளவு) தேனை (தேனீக்கள்) செய்யும் நாட்டைச் சேர்ந்தவனோடு யான் கொண்ட காதல்
Bigger than the earth, rising high beyond the sky;
Greatly deeper than the ocean;
Is my love for him, in whose country,
From the tiny flowers of the dark stemmed kurinjci on the mountain slopes.
The bees make big honey.

This image has an empty alt attribute; its file name is KURU-3.jpg