அந்த இளைஞனுக்கு இருபது வயதிருக்கும். நல்ல உயரம். வாட்டசாட்டமான உடம்பு. உடம்பின் தசைகள் இருக்கவேண்டிய இடத்தில் இறுக்கமாக இருக்கும். வலது கையை மடக்கிக் காண்பித்தால் உருண்டெழும் தசைத்திரளைக் கண்டு அவனது அம்மாவே அசந்துபோய் நிற்பாள்.
அவன் ஒருநாள் வீட்டுக்குள் உடற்பயிற்சியில் வேர்க்க விறுவிறுக்க ஈடுபட்டுக்கொண்டிருந்தான். இடுப்பில் மட்டும் ஒரு சிறு துண்டு. வாசலில் அப்பா செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார்.
“டமார்” என்ற சத்தத்துடன் வெராண்டா ஜன்னலின் கண்ணாடிக்கதவுகள் ‘சிலீர்’ என்று நொறுங்கிக் கண்ணாடிச் சில்லுகள் கீழே சிதறி விழுந்தன. அப்பா சுற்றுச் சுவர் கதவருகே சென்று “யாரப்பா அது?” என்று கோபமாய்க் கேட்டார். பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் வந்தான். “ஐயா, கிரிக்கட் பந்து ஒங்க வீட்டுக்குள்ள விழுந்திருச்சு, எடுத்துத்தர்ரீங்களா?” என்று இளக்காரமாகக் கேட்டான்.
“என்னப்பா? ஜன்னலையும் ஒடச்சிட்டு, ஒம் பந்தப் பத்தியே பேசிக்கிட்டிருக்கியே” என்று அப்பா சத்தம் போட்டார்.
“இப்ப என்ன ஆச்சு? தெருவுல வெளயாண்டா பந்து படத்தான் செய்யும். அதுக்குப்போயி பெரிசா” என்று அவன் குரலை உயர்த்தினான்.
வாசலில் சத்தத்தைக் கேட்ட வீட்டு இளைஞன், தன் உடற்பயிற்சியை அப்படியே நிறுத்திவிட்டுக் கட்டிய துண்டுடன்
வாசலுக்கு விரைந்தான்.
அந்தப் பெரியவருக்குப் பின்னால் திடீரென்று தோன்றிய அந்தப் பிரமாண்ட உருவத்தைக் கண்ட அந்தப் பையனின் முகம் சட்டென்று மாறியது. அப்படியே அசந்துபோய் நின்றவன், திரும்பி ஓட்டம் பரிந்துவிட்டான்.
இதுவரை இரண்டுமுறை ‘அசந்துபோய்’ என்ற சொற்றொடரை இங்கு பார்த்துவிட்டீர்கள். அதென்ன ‘அசந்துபோதல்’? மலைத்துநிற்றல், திகைத்துப்போதல், என்றெல்லாம் இதற்குப் பொருள்கொண்டாலும், பயன்பாட்டில் ‘அசந்துபோயிட்டேன்’ என்று ஒருவர் உணர்ச்சியோடு கூறும்போது அந்த உணர்ச்சிகளைச் சொற்களால் வடிக்க இயலாது. உணர்ந்துதான் தெரிந்துகொள்ளமுடியும்.
சில பெண்கள் ஓர் அருவிக் கரையில் உள்ள மலர்களைக் கொய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு இளைஞன் வருகிறான் – கையில் வில் அம்போடு. அருகில் ஒரு தினைப்புனம். அங்கு ஒரு காட்டுயானை மேய வருகிறது. தினைப்புனக் காவலர்கள் உரத்த குரல் எழுப்பிக் கவண்கல்லால் அந்த யானையை விரட்டுகிறார்கள். அதற்கு வெருண்ட யானை, இங்கு மங்கையர் இருக்குமிடம் நோக்கிச் சீற்றத்துடன் விரைந்து வருகிறது. திடீரென்று தங்களுக்கு எதிரே ஒரு காட்டுயானையைக் கண்ட பெண்கள் அந்த இளைஞனைத் தஞ்சமடைகிறார்கள். அவனும் அஞ்சாமல் தன் வில்லை வளைத்து ஓர் அம்பினை யானையின் நெற்றியில் பாய்ச்சுகிறான். அதன் நெற்றியிலிருந்து குருதி கொட்டுகிறது. விரைந்து வந்த யானை அசந்துபோய் நிற்கிறது. பின்பு அங்கு நிற்காமல் திரும்பி வேகமாய் ஓடிவிடுகிறது.
இது ஒரு சங்கக் காட்சி. குறிஞ்சிப்பாட்டு என்ற நூலில் காணப்படுவது. குறிஞ்சிக் கவிஞர் கபிலர் பாடியது. பாடல்
வரிகளைப் பாருங்கள்:
உடு உறும் பகழி வாங்கிக் கடு விசை
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதரப்
புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் – குறிஞ்சிப்பாட்டு 170 – 174
இதன் பொருள் :-
நாணில் வைத்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,
பெரிய யானையின் அழகிய முகத்தில் ஆழச் செலுத்துதலினால்,
அந்தப் புண் உமிழ்ந்த இரத்தம் அதன் முகத்தில் பரவி வழிந்துநிற்க,
புள்ளிபுள்ளியானதும் வரிகளையுடையதுமான நெற்றியின் அழகு அழிந்து, நிற்கமாட்டாமல்,
அந்த யானை அயர்ந்து திரும்பி ஓடிய பின்னர்
கோபத்தோடு வருகின்ற யானை, நெற்றியில் குறிவைத்து எய்த அம்பு தைத்து, குருதி கொட்ட, அப்படியே அசந்துபோய் நிற்கிறது. பின்பு அம்பெய்த இளைஞனின் உறுதியைப் பார்த்துத் திரும்பி ஓடிவிடுகிறது.
இங்கு ‘யானை அயர்ந்து புறங்கொடுத்தது’ என்ற புலவரின் கூற்றைத்தான் இன்றும் நாம் ‘அவன் அசந்துபோய் ஓடிவிட்டான்’ என்கிறோம்.
பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!
என்னே தமிழின் இளமை!