ஒரு தாய் தன் மகனுக்குப் பெண்பார்க்கப் போகிறாள். பையன் அவள்கூட வரவில்லை. ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கிறான் – ‘பொண்ணு நல்ல அழகா இருக்கணும்’. தாய் சென்று பார்த்த பெண் உண்மையிலேயே நல்ல அழகு. நல்ல சிவப்பாக – மூக்கும் முழியுமாய் – வைத்த கண் வாங்காமல் பார்க்கவைக்கும் அழகு.
திரும்பி வந்த தாயை மகன் வினவுகிறான். “பொண்ணு எப்படி?” தாய் சொல்கிறாள், “ அழகுன்னா அம்புட்டு அழகுடா!”.
அதென்ன ‘அம்புட்டு அழகு’? இம்புட்டு, அம்புட்டு’ன்னு சொல்ல முடியாதபடி அம்புட்டு அழகு! இங்கே அம்புட்டு என்ற பேச்சு வழக்குக்கு ‘ அவ்வளவு’ என்று பொருள். அதாவது இவ்வளவு, அவ்வளவு என்று சொல்ல முடியாதபடி, அவ்வளவு அழகு! இந்த அம்புட்டு அழகு – அவ்வளவு அழகு – என்பதை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லவேண்டும். அப்போதுதான் அதன் முழுப்பொருள் வெளியாகும். ‘அவ்வளவு அழகில்லை” என்று சொல்லும்போது வருகிற ‘அவ்வளவு’-க்கு வேறு பொருள். இது சாதாரணமாகச் சொல்லுவது. உணர்ச்சிபூர்வமாக ‘அவ்வளவு அழகு’ என்று சொல்லும்போது, ரொம்ப அழகு – ரொம்ப ரொம்ப அழகு – ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு என்று கூட்டிக்கொண்டே போகலாம்.
இந்த அம்புட்டு அழகு – அவ்வளவு அழகு – என்பது தமிழரின் வாழ்வில் இன்று நேற்றல்ல, நூற்றாண்டுக்காலமாய் புழங்கி வருகிறது. சொல்லப்போனால், பேச்சு வழக்கிலுமட்டுமன்றி, இலக்கியத்திலும் இடம்பெற்றுள்ளது.
ஒரு பெண் ஒருவனைக் காதலிக்கிறாள். இலக்கியங்கள் அவளைத் தலைவி என்றும், அவனைத் தலைவன் என்றும் சொல்கின்றன. இந்தத் தலைவிக்கு ஒரு தோழி இருக்கிறாள். அவளுக்கும் இந்தச் சங்கதி தெரியும். எத்தனை நாள் மறைவான காதலிலேயே இருப்பது? ஒருநாள் வீட்டிலிருக்கும் செவிலித்தாயிடம் சொல்லிவிடலாம் என்று முடிவுகட்டுகிறாள் தோழி. பெரிய பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள். “முத்தும், மணியும், பொன்னும் சேர்ந்து செய்த ஒரு அருமையான நகை அறுந்துபோனால் ஒட்டவைக்கமுடியும். ஆனால் நல்ல குணங்கள் குறைவுபட்டுப்போனால் அதனைச் சீர்செய்ய முடியாதல்லவா?” அவள் சொல்லவந்தது, “காதலிப்பதால் நாங்களொன்றும் குணம் கெட்டுப்போகுமாறு நடந்துகொள்ளவில்லை. அந்தக் காதலன் மிகவும் நல்லவன் – நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். பார்த்து யோசித்துத்தான் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளோம்” என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தலைவியின் காதல்கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறாள் அந்தத் தோழி. இதனை அருமையான உளவியல் நோக்கில் உருவாக்கியிருக்கிறார் குறிஞ்சிப் புலவர் கபிலர், தன் குறிஞ்சிப்பாட்டு என்ற பாடலில்.
இப்பொழுது அந்தத் தோழி சொன்ன முதல் பகுதி இதுதான்:
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும் – குறிஞ்சிப்பாட்டு 13, 14
இதன் பொருள்:
“முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும், அவ்வளவு
நேர்த்தியாக அமைந்த நகைகள் சீர்குலைந்துபோனால் (மீண்டும்)சேர்த்துக்கட்ட முடியும்;
இங்கே பார்த்தீர்களா? அத்துணை நேர்வரும் கலம் என்கிறார் புலவர். கலம் என்பது அணிகலன். நேர்வரும் என்பது நேர்த்தியான. குரைய என்பது அசை – பொருளற்றது – செய்யுள் ஓசைக்காகச் சேர்க்கப்பட்டது.
அத்துணை நேர்வரும் கலம் = அவ்வளவு நேர்த்தியான நகை = அம்புட்டு அழகான நெக்லசு!
இந்தச் செய்யுளைப் படிக்கும்போது இந்த ‘அத்துணை’-யில், உணர்ச்சியைக்கொட்டிப் படிக்கவேண்டும்!
பார்த்தீர்களா? எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!
என்னே தமிழின் இளமை!