ஒருவர் ஓரூருக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு பகல்முழுதும் பல வேலைகளை முடித்துவிட்டு இரவுக்குள் வீடு திரும்ப வேண்டும். அதற்கு அவர் அதிகாலையிலேயே புறப்படவேண்டும். அப்போது வீட்டிலுள்ளவர்கள் சொல்லுவார்கள், “வெள்ளெனப் பொறப்பட்டு, சட்டுப்புட்டுன்னு அங்க சோலிய முடிச்சுட்டு, வெள்ளென திரும்பி வந்துரு”.
இங்கே இரண்டுமுறை ‘வெள்ளென’ என்ற சொல் வருவதைப் பார்க்கிறோம். முதல் ‘வெள்ளென’ என்பது அதிகாலை – அதாவது நல்ல வெளிச்சம் வருவதற்கு முன். அடுத்த ‘வெள்ளென’ என்பது அந்தி மாலை – அதாவது நல்ல இருட்டு வருவதற்கு முன் அல்லது கொஞ்சமாவது வெளிச்சம் இருக்கும்போதே. வெள் என்பதற்கு வெளிச்சம் என்று பொருள். இங்கு ‘வெள்ளென’ என்பது ஒரு மரபுச் சொல்லாக (idiom) கொஞ்சம் வெளிச்சம் என்ற பொருள் கொள்கிறது.
மேற்கண்ட கூற்றுக்கு, ‘கொஞ்சம் வெளிச்சம் இருக்கும்போதே புறப்பட்டு, கொஞ்சம் வெளிச்சம் இருக்கும்போதே வந்துவிடு” என்று பொருள் கொள்ளலாம். இதன் அடிப்படையில் இந்த ‘வெள்ளென’ என்ற சொல்லுக்குச் ‘சீக்கிரம்’ என்ற பொருளையும் நீட்டித்துக்கொள்ளலாம்.
இறந்துவிட்ட ஒருவனைப் ‘போயிட்டான்’ என்று சொல்வார்கள். இளம் வயதில் இறந்துவிட்ட ஒருவனை இழந்த சோகத்தில், சுவரில் தலையைச் சாய்த்துக்கொண்டு, கண்ணீரோடு, “அவன்பாட்டுக்கு வெள்ளெனப் பொறப்பட்டுப் போயிட்டான்” என்றும் புலம்புவார்கள்.
அப்படி ஒரு சங்கப் புலவர் கூறுவதைப் பாருங்கள்.
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
கொள் என விடுவை ஆயின், வெள்ளென
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே! – புறம் 359/15-18
இழை அணிந்த நெடிய தேர்களை இரவலர்க்குக் குறையில்லாமல்
கொள்ளுங்கள் என்று கொடுத்து அனுப்பிவைப்பாயானால், வெள்ளென
மேலுலகத்துக்கு நீ சென்ற பின்னாலும்
இங்கு நீண்டகாலம் விளங்கும் நீ எய்திய புகழ்
என்பது இதன் பொருள்.
இங்கு வரும் ‘வெள்ளென’ என்பதற்கு ‘வெளிப்படையாக’ ‘யாவர்க்கும் தெரிய’ என்று உரைகாரர்கள் பொருள்கூறுகிறார்கள். அதைக்காட்டிலும், ‘வெள்ளென’ என்பதற்குச் ‘சீக்கிரமாகவே’ என்ற பொருள் ொருந்திவருகிறது எனலாம். அதாவது, ‘நல்ல புகழை எய்தி, பிரகாசமான வாழ்வை வாழ்வதற்கு முன்னரேயே’ என்ற பொருள் சரியாகவே பொருந்திவருகிறது எனலாம். இது இப்போதும் நாம் பயன்படுத்தும் ‘வெள்ளென’ என்பதனோடு ஒத்துப்போகிறது இல்லையா? அதாவது, இந்த ‘வெள்ளென’ என்பது ‘சீக்கிரமாகவே’ என்ற மரபுப்பொருளை அன்றே எட்டியிருக்கிறது எனலாம்.
ஈராயிரம் ஆண்டுகட்கு மேலாகத் தமிழில் இவ்வாறு தொட்டுத் தொடர்ந்து வரும் பாரம்பரியம் அதன் இறவாத்தன்மையை
எடுத்தோதுகிறது அல்லவா!
என்னே தமிழின் இளமை!