Select Page

”கீர, கீர, கீரேய், அரைக்கீர, தண்டங்கீர, மொளகுதக்காளி, பொன்னாங் கண்ணீஈஈஈஈஈஈ” என்ற நீண்ட ஒலியைக் கேட்டு வாசலுக்கு வந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. கொரோனா தொற்றுநோய் காரணமாக அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டதால், காலை பதினொரு மணிவரை மதியச் சாப்பாடு பற்றி சிந்திக்காமல் இருந்தவளுக்குக் கீரைச் சத்தம் கைகொடுத்தது. அவள் வாசலுக்கு வரவும், கீரைக்காரி அவளின் வாசலுக்கு முன்னால் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவளை உள்ளே அழைத்து, கைத்தாங்கலாகக் கூடையை வாசற்படிக்கட்டில் இறக்கினாள்.

:என்ன? மார்க்கெட்டுல கூட்டம் அதிகமோ?” கீரைக்காரியை விசாரித்தாள் அவள்.

“இந்தக் கூட்டத்தக்கூடச் சமாளிச்சுறலாம் போல இருக்கு, வீட்டுலதான் ஒரே ரோதனயா இருக்கு” என்று சடைத்துக்கொண்டாள் அந்த கீரைக்காரி.

”வீட்டுல என்ன கஷ்டம்?” என்று விசாரித்தாள் அவள்.

“ஒரு கொமரிய வீட்டுல ஒக்காரவாச்சுக்கிட்டு இருக்கேன்’ல’ம்மா. அவ படுத்துற பாடுதான் தாங்கல” என்றாள் கீரைக்காரி.

“யாரு? ஒம் மகளா? அவளுக்கு என்ன?”

“யாரு கண்டா’ம்மா? அவளுக்கு வெளியில போக முடியலயாம். அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? எந்திரிச்சதுல’ருந்து ”ஊங்”கிறதுக்கெல்லாம் பெரிசா மொகத்தத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கா”

“சரி, சரி, அவ வயசு அப்படி. அவகூட ரொம்பப் பேச்சு வச்சுக்கிறாத, எல்லாம் கொஞ்ச நாளயில சரியாப்போயிரும்” என்றாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை.

கீரையை வாங்கி முடித்த பின், காசைக்கொடுத்து, அவளை அனுப்பிட்டு உள்ளே வந்த தன் மனைவியுடம் பேச்சுக்கொடுத்தான் அவள் கணவன்.

அதென்ன? “ஊங்”கிறதுக்கெல்லாம்?

இது ஒரு பேச்சு வழக்கு. இது தெரியாதாக்கும். பாரதியார் கூட ரஷியப் புரட்சியப் பத்திப் பாடுறபோது சொல்வார்

“இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்” ; அதாவது, எடுத்ததுக்கெல்லாம், ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் அப்படீன்னு பொருள்.

இப்படிச்சொல்லிவிட்டு அன்றைய மதியச் சமையலைக் கவனிக்க அடுப்படிக்குச் சென்றுவிட்டாள் அவள்.

மதிய உணவு முடிந்தபின், விடுமுறையாதலால் ஒரு குட்டித்தூக்கம் போடுவது அவர்கள் வழக்கம். அதற்கு முன் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படுத்துக்கொண்டிருப்பது அவள் வழக்கம். அன்றைக்கு அவள் எடுத்தது நற்றிணை – பின்னத்தூரார் உரை.

புத்தகத்தைப் புரட்டிய அவளுக்கு வந்த பக்கத்தில் பாடல் 76 இருந்தது.

வரு மழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி
அஞ்சு_வழி அஞ்சாது அசை_வழி அசைஇ
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள்         5
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே

அவள் தமிழ்ப்பேராசிரியையாதலால், படிக்கும்போதே பாடலைப் புரிந்துகொண்டாள். வேறூர்க்காரத் தலைவன் ஒருவனிடம் காதல்கொண்ட ஒருத்தி, அவனுடன் ஒருநாள் வீட்டைவிட்டுச் சென்றுவிடுகிறாள். அவளைக் கூட்டிச் சென்ற தலைவன் நடுவழியில் அவளிடம் கூறுவதாக அமைகிறது இந்தப் பாடல்..

எதற்கும் உரைகாரர் என்ன சொல்கிறார் என்று உரையையும் படித்தாள். அவளுக்கு ஒரு பழக்கம் – படிக்கும் எந்தப் பாடலுக்கும் தானாக வரிவரியாக மனத்துக்குள் உரைசொல்லிக்கொள்வது. அப்படி அவள் இப்பாடலுக்கும் சொல்லிக்கொண்டாள்.

வருகின்ற மழையையும் மறைத்துக்கொண்ட வெள்ளைநிற மேகங்களின்
நுண்ணிய துளிகளும் மாறிப்போன காற்றடிக்கும் காட்டுவழியில்
ஆலமரத்தின் நிழலில் உன் தளர்ச்சியைப் போக்கி,
அஞ்சவேண்டியஇடத்தும் அஞ்சாமல், தங்கவேண்டிய நேரத்தில் தங்கி இளைப்பாறி
வருந்தாது வருவாயாக, தூய அணிகலன்களை அணிந்த இளமங்கையே!

அடுத்த அடியைப் பார்த்த அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை

அதென்ன ’இம்மென் பேர் அலர்’? உரையாசிரியர் இதற்கு என்ன சொல்கிறார் என்று பார்த்தாள். “இந்த மெல்லிய பெரிய பழிச்சொல்லைத் தூற்றுதலையுடைய நினது ஊரின்கணுள்ள புன்னையின்”

அதென்ன மெல்லிய பழிச்சொல்.? அலர் என்றாலே மெல்லிய பழிச்சொல்தானே! ஊரார் ’குசுகுசுவென்று பேசிக்கொள்வது. அம்பல் தான் ஊரறியத் தூற்றுவது. அப்படியென்றால் இம்மென் பேர் அலர் என்பதன் பொருள் என்ன? மனம் சமாதானம் அடையாமல், அறைக்குள் சென்று புத்தக அலமாரியில் இருந்த இன்னொரு புத்தகத்தை எடுத்துப்பார்த்தாள். அவர் கூறியிருப்பது, ”இம்மென்ற பெரிய அலர் தூற்றும் நும்முடைய ஊரிடத்து” இதிலிருந்தும் அவளுக்குத் தேவையான விளக்கம் கிடைக்கவில்லை.

அப்பொழுது அவளுக்குச் ‘சட்’டென்று காலையில் கீரைக்காரி சொன்னது நினைவுக்கு வந்தது.

”ஊங்”கிறதுக்கெல்லாம் பெரிசா மொகத்தத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கா”

அத்துடன் பாரதியாரின் ‘இம்மென்றால் சிறைவாசம்” என்ற தொடரும் நினைவுக்கு வந்தது. அவள் சிந்தித்தாள்.

தலைவன் வேறூர்க்காரன். எப்படியோ தலைவனுக்கும் தலைவிக்கும் இருக்கும் தொடர்பு ஒருசிலருக்குத் தெரிந்துவிடுகிறது. உடனே அவர்கள் தலைவியின் நடமாட்டத்தைக் கவனிக்கத் தொடங்குகிறார்கள். அவள் சாதாரணமாக எங்காவது வெளியில் சென்றால்கூட ‘அவனை’ப் பார்க்கத்தான் போகிறாளென்று
குசுகுசுத்துக்கொள்கிறார்கள். தலைவன் வேறு வேலையாய் அந்த ஊருக்கு வந்தாலும் அவனைப் பார்த்தவுடன், அவன் கண்ணெதிரிலேயே, அவனைச் சுட்டிக்காட்டிக் குசுகுசுக்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் – ஒன்றுமில்லாததற்கெல்லாம் – இம்மென்றாலே பெரிதாய்ப் பழிபேசுகிறவர்கள் – என்ற பொருள் சரியாக வரும்போல் அவளுக்குத் தோன்றுகிறது.

தொடர்ந்து அவள் தன்னுடைய உரையை இவ்வாறு முடிக்கிறாள்.

எடுத்ததற்கெல்லாம் பெரிய பழிச்சொல்லைக் கூறும் உன்னுடைய ஊரிலுள்ள புன்னையின்
காம்பற்ற மலர் உதிர்ந்ததால், தேன்மணம் கமழுகின்ற புலால் நாற்றமுடைய
கழிக்கரை சோலையின் நீண்ட மணலில் நடந்துவழக்கப்பட்ட,
இப்பொழுது கற்கள் குத்துவதால் சிவந்துபோன, உன் மென்மையான பாதங்கள் துன்பம் நீங்கப்பெற

’இம்மென் பேர் அலர்’ என்பதில் ’இம்’ என்பதையும், ‘பேர்’ என்பதையும் அழுத்திச் சொன்னால் ”ஊங்”கிறதுக்கெல்லாம் பெரிசா’ என்ற கீரைக்காரியின் சொற்களின் தொனி இங்கு தோன்றுகிறதல்லவா?

இதுதான் நம் தமிழின் சிறப்பு. எத்தனை காலமானாலும் – எத்தனை மாற்றங்கள் அடைந்தாலும் –

என்றும் மாறா இளமைத் துடிப்புடன் இருப்பது.