வீட்டுக்குள் வேகமாக நுழைந்த அவர், தன் மூத்த மகனின் பெயரைச் சொல்லிக்கொண்டே உரத்த குரலில் அவனை அழைத்தார். ஒவ்வோர் அறையாகச் சென்று தேடியும் பார்த்தார். அடுப்படியிலிருந்து முந்தானையில் கையைத் துடைத்துக்கொண்டே வந்த அவரது மனைவி, “என்ன தேடுறீங்க?” என்று நிதானமாகக் கேட்டாள். “மூத்தவனத்தா’ம்மா பாக்குறேன். அவனண்ட ஒரு முக்கியமான வேலையச் சொல்லியிருந்தேன். இன்னக்கிச் சாயங்காலத்துக்குள்ள செஞ்சு முடிச்சு’ர்ரா’ன்னு சொல்லியிருந்தேன். அவன் செஞ்சானா? இப்ப அவன் எங்கே?” ‘படபட’;-வென்று பொரிந்தார் அவர்.
அதே நிதானத்துடன் அவர் மனைவி கூறினாள், “இப்பத்தானே அவன் சத்தம் கேட்டது. அதுக்குள்ள எங்க போயிருப்பான்?” என்ற யோசிக்க ஆரம்பித்தாள்.
நடையில் அவரது அப்பா – பெரியவர் – சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே செய்தித்தாள் படிப்பதில் மும்முரமாக இருந்தார்.
“அப்பா, பெரியவனப் பாத்தியா?” அவர் கிட்டே சென்று உரக்கக் கேட்டார் அவர். பெரியவருக்குக் காது கேட்கும் திறன் கொஞ்சம் குறைவு. அவர் நிதானமாகச் செய்தித்தாளை மடக்கிக் கீழே வைத்துவிட்டு, கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு “என்ன?” என்றார்.
“பெரியவனப் பாத்தியா?” நாலு வீட்டுக்குக் கேட்கும்வகையில் உரத்துக் கேட்டார் இவர்.
அந்தப் பெரியவர், “இப்பத்தானே பாத்தேன். எங்கயோ வெளியில பொறப்பட்ட மாதிரி இருந்துது. ரொம்ப நாழி ஆகல. இங்கதான் கூப்பிடு தூரத்துல போயிண்டிருப்பான். போய்ச் ‘சட்டு’-னு பாரு” என்று சொல்லிவிட்டுக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு, மீண்டும் தினசரியில் மூழ்கிவிட்டார் அவர்.
பெரியவர் சொன்னதைக் கவனித்தீர்களா? அருகில்தான் இருப்பான் என்ற பொருள்படும்படி ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார். அது ‘கூப்பிடுதூரம்’ என்ற சொல். இந்தச் சொல்லை விளக்கத்தேவையில்லை. அமைதியான ஒரு சூழலில், ஒரு நெடிய பாதையில் நடந்து செல்லும் ஒருவரை, நல்ல குரல்வளம் உள்ள ஒருவர் இயன்ற அளவு உரத்த குரலில் ஓங்கி அழைத்தால், அவர் குரல் எந்த எல்லைவரை எட்டுமோ அதுவே கூப்பிடுதூரம். ஆங்கிலத்தில் இதனை within – ear – shot என்பார்கள். இது ஆளாளுக்கு, இடத்துக்கு இடம் மாறுபட்டாலும், குறைந்தது 100 அல்லது 150 மீட்டர் எனக்கொள்ளலாம்.
இவ்வாறு இன்றைக்கும் பல இடங்களில் வழக்கில் இருக்கும் இந்தச் சொல் சங்க இலக்கியத்திலும் காணப்படுவதுதான் விந்தையான செய்தி.
இன்றைக்குக் காட்டுவளங்கள் கொள்ளைபோகாதிருப்பதற்கு அரசு வனச் சரகர்களை அமர்த்தியிருக்கிறது. இதைப் போலவே, சங்ககால மன்னனாகிய நன்னன் என்பான் பல்குன்றக் கோட்டம் என்னும் தன் நாட்டுக் காடுகளுக்குள் ஒரு வனப்படை அமைத்திருந்தான். அவர்கள் கூளியர் எனப்படுவர். இவர்கள் வேட்டுவ மறவர்கள். கையில் வில் அம்பு வைத்திருப்பர். இவர்களின் வில்லினின்றும் புறப்படும் கூர்மையான அம்புகள் கூப்பிடுதூரத்தையும் கடந்து செல்லும் தன்மையன என்று புலவர் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் தனது மலைபடுகடாம் என்ற நூலில் கூறுகிறார்.
கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பின்
கொடுவில் கூளியர் – மலை. 421,422
என்று குறிப்பிடுகிறார் அந்தப் புலவர்.
கூப்பீடு என்ற ஒரு தமிழ்ச்சொல் உண்டு. இது அன்றைய அளவியல் நூல்களின்படி இன்றைய ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தொலைவைக் குறிக்கும். இத்துணை தொலைவு அம்பு எய்வது இயலாத ஒன்று. சங்க இலக்கியங்கள் மிகப்பெரும்பாலும் எதனையுமே மிகைப்படுத்திக் கூறுவதில்லை. எனவே மலைபடுகடாம் புலவர் குறிப்பிடும் கூப்பிடு என்ற சொல் இன்றைக்கும் வழக்கிலிருக்கும் கூப்பிடுதூரத்தையே குறிக்கும் என்பது வெளிப்படை.
பார்த்தீர்களா? கூப்பிடுதூரத்தில் எத்தனை சங்க வழக்காறுகள் இன்னும் உயிருடன் நம்மோடு உலாவருகின்றன்! எத்தனை நூற்றாண்டுகளாக இன்னும் நம்மோடு தொடர்ந்து வருகிறது இந்தப் பாரம்பரியம்!
என்னே தமிழின் இளமை!