கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூ
மூக்கு
மூசு
மூட்டு
மூட்டுறு
மூதரில்
மூதா
மூதாய்
மூதாலம்
மூதாளர்
மூதில்
மூதிலாளர்
மூது
மூதூர்
மூப்பு
மூய்
மூரல்
மூரி
மூவர்
மூவன்
மூவாய்
மூவெயில்
மூழ்
மூழ்கு
மூ
1. (வி) முதுமை அடை, மூப்பு எய்து, become old
– 2. (பெ.அ) மூன்று, three
1
மூத்து வினை போகிய முரி வாய் அம்பி – நற் 315/3
முதுமையுற்று, கடற்செலவாகிய வினைக்கு உதவாதாகிய விளிம்பு முரிந்து கெட்ட தோணியை
2
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள் – பரி 5/11
ஆறு மென்மையான தலைகளையும், முழவினைப் போன்ற பன்னிரண்டு தோள்களையும்,
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி – புறம் 55/2
ஒப்பில்லாததோர் அம்பை வாங்கி மூன்று மதிலையும் எய்து
மூக்கு
(பெ) 1. நாசி, nose
2. வண்டிப் பாரின் தலைப்பகுதி, Nose-shaped end of the pole of a cart
3. இலை,காய்,கனி ஆகியவற்றின் காம்பு, stem or base of a leaf or fruit
1
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற – நற் 149/2,3
மூக்கின் உச்சியில் சுட்டுவிரலை வைத்து
தெருவில் பெண்டிர் கிசுகிசுப்பாய்ப் பழிச்சொற்களால் தூற்ற
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை – அகம் 53/8
உள்ளிருக்கும் ஊன் வாடிப்போன சுருண்ட மூக்குள்ள சிறிய நத்தைகள்
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
கதிர் நுனை போலும் மூக்கையுடைய ஆரல் மீன் சேற்றின் கீழே செருக
2
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 57,58
காடி வைத்த மிடாவினுடைய மூக்கணை மீதிருந்து,
குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப
3.
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம்
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/2-4
கடற்கரைச் சோலையின் பனையின் தேனையுடைய மிக முதிர்ந்த பழம்
வளமையான இதழ்களையுடைய நெய்தல் பூ வருந்தும்படியாக, காம்பு இற்று
குழைவான கரிய சேற்றில் ஆழமாகப் புதைந்துபோகுமாறு வீழ்ந்ததாக,
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த
ஈர்ம் தண் பெரு வடு – ஐங் 213/1,2
நறிய வடுக்களையுடைய மாமரத்திலிருந்து காம்பு அற்றுப்போய் உதிர்ந்த
பசுமையான குளிர்ந்த பெரிய வடுக்களை
மூசு
(வி) 1. மொய், swarm around
2. சூழ், throng, gather around
1
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலை தண் துளி பேணார் – நெடு 32-34
முறுக்குண்ட உடம்பினையும், மிகுந்த உடற்பலமும் உடைய மிலேச்சர்
வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, களிப்பு மிக்கு,
தூரலாக விழும் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாமல்
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி
எறும்பும் மூசா இறும்பூது மரபின் – பதி 30/37,38
இரத்தம் தூவிய நிறைந்த கள்ளுடனான பெரிய பலியானது
எறும்புகளும் மொய்க்காத வியப்புத்தரும் முறைமையினை யுடையதாக
2
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் – மது 716-718
ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பினில்,
வரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனினம் சூழ்வனவாய் மொய்ப்ப,
கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலையினையும்
மூட்டு
(வி) 1. தீ மூளச்செய், பற்றவை, make a fire, kindle a flame
2. செலுத்து, cause to enter, put into
1
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும் – பரி 2/63,64
புகழ் பொருந்த இசைக்கும் வேதவிதிகளின்படி யாகத்தீயை முறையாக மூட்டி,
திகழும் ஒளியையுடைய பிரகாசமான சுடரினை மேலும் பெருக்கிக்கொள்வதும்
2
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் – கலி 8/2,3
கொடுமை செய்வதையே மேற்கொண்ட மன்னனின் கொடுங்கோலாட்சியைப் போல, ஞாயிறு
மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்
மூட்டுறு
(வி) தைக்கப்படு, பொருத்தப்படு, sewn, fastened with stitches, joined
முரசு உடை செல்வர் புரவி சூட்டு
மூட்டுறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/1,2
முரசங்களையுடைய செல்வரது குதிரையின் தலையின் உச்சியிடத்து
இணைத்துத் தைக்கப்பட்ட கவரியை நிமிர்த்து வைத்தாலொத்த
மூதரில்
(பெ) மூது + அரில், பழமையான புதர், old bush
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/18,19
வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,
மூதா
(பெ) வயதுசென்ற பசு, old cow
முதை சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந்த ஆங்கு – குறு 204/3,4
பழைய மேட்டு நிலத்தில் செழித்துவளர்ந்த முற்றாத இளம் புல்லைப்
பல்லில்லாத கிழட்டுப்பசு நாவினால் நக்கிப்பார்ப்பதைப் போன்று
மூதாய்
(பெ) இந்திரகோபம், தம்பலப்பூச்சி எனப்படும் வெல்வெட் பூச்சி,
the red velvet mite, Trombidium grandissimum
இதனை, ஈயன்மூதாய். Cochineal insect என்கிறது தமிழ்ப்பேரகராதி.
ஆனால் ஈயன்மூதாய் என்பது Cochineal insect அல்ல என்று பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் இதே ஆசிரியர்
இந்திரகோபம் என்ற ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார்.
அதனைக் காண இங்கு சொடுக்குக
மூதாய் என்ற சொல் பத்துப்பாட்டில் இல்லை. எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை, கலித்தொகை, அகநானூறு
ஆகிய நூல்களில் இச்சொல் ஒன்பது முறை வருகிறது. அதில் ஏழுமுறை இது அகநானூறில் வருகிறது. இவை
ஒவ்வொன்றும் மூதாயைப் பற்றிய ஒரு தகவலைக் கூறுகின்றன. அவற்றைப் பார்ப்போம்.
1. கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் – நற் 362/5
2. பெய் புல மூதாய் புகர் நிற துகிரின் – கலி 85/10
3. ஈயல் மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/3
4. குருதி உருவின் ஒண் செம் மூதாய் – அகம் 74/4
5. செம் புற மூதாய் பரத்தலின் நன் பல – அகம் 134/4
6. அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் – அகம் 139/13
7. வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/15
8. ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15
9. குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/12
இது செம் மூதாய்(1), குருதி உருவின் ஒண்செம் மூதாய்(4), செம்புற மூதாய்(5), அரக்குநிற உருவின் மூதாய்(6)
என்று கூறப்பட்டுள்ளதாலும், இது பவளத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளதாலும்(3), இப்பூச்சி சிவப்பு நிறத்தது என்பது
தெளிவாகின்றது. இதன் பண்புகளைப் பற்றி அறிய, இந்த அடிகளுக்கு அடுத்த, முந்தைய அடிகளையும்,
அவற்றின் உரைகளையும் பார்க்கலாம்.
1. கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் – நற் 362/5
வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனையாயின்
தலைநாட்கு எதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீ விளையாடுக சிறிதே ——- நற்றிணை 362:1-6
வேலைப்பாடு நன்கு அமைந்த பாவை போல இயங்கி, நின் தந்தையின்
மனையெல்லையைக் கடந்து (என்னுடன்) வந்திருக்கிறாய், அதனால்
முதல் மழையைப் பெய்யத் தொடங்கிய குளிர்ந்த மழையையுடைய மேகம்
அழகு மிக்க காட்டில் அகன்ற இடமெல்லாம் பரந்த
விரைந்து ஓடும் சிவந்த ஈயலின் மூதாயைப் பார்த்தும் பிடித்தும்
நீ விளையாடுக சிறிது பொழுதே —
என்பது இதன் பொருள்.
தலைவனோடு உடன்போகும் தலைவிக்கு, இடைச்சுரத்தின்கண்ணே தலைவன் கூறிய கூற்று இது.
விரைந்த செலவினையுடைய சிவந்த ஈயலின் மூதாயை நோக்கியும், அவற்றைப் பிடித்தும் சிறிதுபொழுது நீ
விளையாடுவாயாக என்று உரை கூறும் பின்னத்தூரார், பின்னர், செம்மூதாய் – தம்பலப்பூச்சியுமாம் என்கிறார்.
எனவே இவர் ஈயலின் மூதாய் என்று எதனைக் குறிக்கிறார் என்று தெரியவில்லை. ஈயல் என்பது
இன்றைக்கு ஈசல் எனப்படுகிறது. இங்கு நாம் உற்றுநோக்கவேண்டியது, தலைவனும் தலைவியும் நடந்துசெல்லும்
பாலை வழியில், முதல்மழை பெய்கிறது. உடனே, இந்த ஈயன்மூதாய் அணிமிகு கானத்து அகன்ற மேற்பரப்பில்
பரவி, அங்குமிங்கும் விரைவாகச் செல்கின்றன என்று பார்க்கிறோம். நாம் அறிந்த சாதாரண ஈசல் என்றால் அது
புற்றுக்குள்ளிருந்து புறப்பட்டு சிறிது தொலைவு பறந்து, பின்னர் தரையில் பரவி, வேகமாக அங்குமிங்கும் செல்லும்;
ஆனால் அது சிவப்பாக இருக்காதே! எனவே இது ஈசல் வகையைச் சேர்ந்த வேறொரு பூச்சியாக இருக்கவேண்டும்.
இதற்கு உரை எழுதிய ஔவை துரைசாமியார், கடும்செம் மூதாய் என்பதற்கு மிகச் சிவந்த
தம்பலப்பூச்சிகள் என்று ‘கடும்’ என்பதனை நிறத்திற்கு ஏற்றிக் கூறுகிறார்.
‘செம்மூதாய் தம்பலப்பூச்சி; இதனைக் கோபம் என்பதும் வழக்கு; இந்திரகோபம் என்பதுமுண்டு’ என்ற
கூற்றுக்களால் இது இந்திரகோபமே என உறுதி செய்கிறார். ‘இப்பூச்சிகளின் செம்மைநிறமும் மென்மைத்
தன்மையும் காண்பார்க்கு இன்பம் நல்கலின், இளையர் அவற்றை எடுத்துத் தம்முடைய ஆடைமேல் இட்டு
மேயவிடுவர்’ என்றும் அவர் கூறுகிறார்.
2. பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின் – கலி 85/10
பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின்
மையற விளங்கிய ஆனேற்று அவிர்பூண் – கலி 85:10,11
மழை பெய்த புலத்து ஈயன்மூதாயின் புகர்நிறமுள்ள பவளத்தாற் செய்த
அழுக்கற விளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண்
இங்கே துகிர் என்பது பவளம். புகர்நிறம் என்பது கருஞ்சிவப்பு நிறம் (tawny colour) அல்லது கபில
நிறம் ஆகும். பெய்புல மூதாய் என்பதால் மழை பெய்தபின் முல்லைநிலக்காடுகளில் காணப்படும் என்பது
பெறப்படுகிறது. எனவே, இது முற்கண்ட நற்றிணை அடிகளின் பொருளை மெய்ப்பிக்கிறது எனலாம்.
3. ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு – அகம் 14/3
அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந் தன்ன குன்றம் —– – அகநானூறு 14:1-4
செவ்வரக்கினை யொத்த சிவந்த நிலத்திற் செல்லும் பெருநெறியில்
காயாவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, பலவும் ஒருங்கே
தம்பலப்பூச்சிகள் வரிவரியாக ஊர்ந்து செல்ல (அவை) பவளத்தொடு
நீலமணி நெருங்கி யிருந்தா லொக்கும் குன்றம்
என்று வேங்கடசாமிநாட்டார் உரை கூறுகிறது. இங்கே வரி என்ற வினைச்சொல்லுக்கு அழகுசெய்
(adorn, decorate) அல்லது ஓடு (run, flow) என்ற பொருள் கொள்ளலாம். இங்கும் நாம் ஏற்கனவே கண்ட
செய்திகள் உறுதிப்படுகின்றன எனக் காண்கிறோம்.
4. குருதி உருவின் ஒண் செம் மூதாய் – அகம் 74/4
தண்பெயல் பொழிந்த பைதுறு காலைக்
குருதி யுருவின் ஒண்செம் மூதாய்
பெருவழி மருங்கில் சிறுபல வரிப்ப – அகநானூறு 74:3-5
குளிர்ந்த மழை பொழிந்ததாற் பசுமையுற்ற காலத்தே,
குருதியைப் போலும் சிவந்த நிறத்தையுடைய ஒள்ளிய தம்பலப்பூச்சி
பெரிய வழிகடோறும் பல சிறிய வரிகளாகப் பரக்க
என்று இதற்கு நாம் முன்னர் கண்ட வகையிலேயே பொருள் அமைந்துள்ளது.
5. செம்புற மூதாய் பரத்தலின் நன்பல – அகம் 134/4
வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென
மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்
செம்புற மூதாய் பரத்தலின் ———- – அகநானூறு 134:1-4
மழை தப்பாது பெய்தலால் காடு அழகுபெற்று,
நிறைந்த சூலுடைய கரிய மேகங்கள் கார் காலத்தினைத் தந்து தங்கிற்றாக,
நீலமணியை ஒக்கும் காயாவின் அழகிய மலர்களின் இடையிடையே
சிவந்த புறத்தினையுடைய இந்திரகோபப் பூச்சி பரத்தலோடு
என்ற பொருளும் நாம் அறிந்த செய்திகளை உறுதிசெய்கிறது.
6. அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் – அகம் 139/13
அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவை போல் பாஅய்ப் பலவுடன்
நீர்வார் மருங்கின் ஈரணி திகழ – அகம் 139/13-15
செவ்வரக்கு அனைய நிறத்தையும் அழகினையுமுடைய தம்பலப்பூச்சிகள்
பரப்பிவைத்தாற் போலப் பலவும் ஒருங்கே பரந்து
நீர் ஒழுகிய ஈரமுடைய இடத்தில் அழகுடன் விளங்க
என்பது இதன் பொருள். மழைக்காலத்தில், ஈரமான இடங்களில் இவை படைபடையாக அடைந்திருக்கும்
என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. கார்காலத்தின் கடைநாள் காட்சியாகப் பாடல் இதைக் கூறுகிறது.
எனவே, கார்காலத்தில் பிறந்து ஓடியாடித் திரிந்த இவை, கார்கால இறுதியில் அங்கங்கே திட்டுதிட்டாய்ப்
படுத்துக்கிடக்கும் என்பது தெரிகிறது.
7. வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/15
———– ———- ——— கரிமரம்
கண்அகை இளம்குழை கால்முதல் கவினி
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கப்
பசுங்கண் வானம் பாய்தளி பொழிந்தெனப்
புல்நுகும்(பு) எடுத்த நல்நெடுங் கானத்(து)
ஊட்டு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன
வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப — அகநானூறு – 283:9-15
கரிந்த மரங்கள்
தம்மிடத்தே கிளைக்கப்பெறும் இளந்தளிர்கள் அடி முதல் கிளைத்து அழகுபெறவும்,
வானில் ஒருங்கே இருட்சியுற்று, வெம்மை நீங்கவும்,
பசுமையைத் தன்பால் கொண்ட மேகம் பரந்த துளியினைச் சொரிந்ததாக,
புற்கள் குருத்தினைவிட்ட நல்ல நீண்ட காட்டில்
செந்நிறம் ஊட்டிய பஞ்சின் பிதிர் பரவியது போன்ற
செந்நிறமுடைய தம்பலப்பூச்சிகள் குளிர்ந்த நிலத்தே அழகுறுத்த
என உரை கூறப்படும் இந்த அழகிய அடிகளில், கார்காலத் தொடக்கம் அழகுற வருணிக்கப்பட்டுள்ளது.
எனவே, கார்காலத் தொடக்கத்தில் இப்பூச்சிகள் தென்பட ஆரம்பிக்கின்றன என்பது மீண்டும் உறுதிசெய்யப்படுவதோடு,
அதன் மேனி பிய்த்தெறிந்த பஞ்சுச் சிதறல்கள் போல் இருக்கும் என்பதுவும் தெளிவாகிறது. இவற்றின் இயக்கத்தை
விளக்கும் வரிப்ப என்ற சொல் இங்கும் காணப்படுகிறது. ஆனால் அதற்கு அழகுறுத்து என்ற பொருள்
கொள்ளப்பட்டுள்ளது.
8. ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப – அகம் 304/15
——— ———— ——— வரிமணல்
மணிமிடை பவளம் போல அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்
ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப
புலனணி கொண்ட காரெதிர் காலை – அகநானூறு – 12-16
வரிப்பட்ட மணலில்
நீல மணியுடன் கலந்த செம்பவளம் போல அழகு மிக
காயாவின் வாடல்பூ பலவும் சேரப் பரந்து அவற்றுடன்
தம்பலப்பூச்சியும் நிலத்தில் ஈரம்பட்ட இடத்தை அழகுசெய்ய,
காடாகிய நிலம் அழகு பெற்ற கார்காலம் தோன்றிய பொழுதில்
என்பது இதன் பொருள். இப்பூச்சியின் முன்னற்கண்ட பண்புகளை இங்கு மீண்டும் காண்கிறோம்.
9. குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/12
இடியும் முழக்கும் இன்றிப் பாணர்
வடியுறு நல்யாழ் நரம்பிசைத் தன்ன
இன்குரல் அழிதுளி தலைஇ நன்பல
பெயல்பெய்து கழிந்த பூநாறு வைகறைச்
செறிமணல் நிவந்த களர்தோன்று இயவில்
குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி
மணிமண்டு பவழம் போலக் காயா
அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய – அகநானூறு 374:7-14
இடித்தலும் குமுறுதலும் இன்றி, பாணர்
வடித்தலுற்ற நல்ல யாழ் நரம்பு ஒலிப்பது போன்ற
இனிய குரலுடன் மிக்க துளியைப் பொருந்தி, நன்றாகிய பல
மழைகளைப் பெய்து கழிந்த, பூக்கள் மணக்கும் விடியற்காலத்தில்,
செறிந்த மணல் மேடுபட்டுக் களர்மண்ணும் தோன்றும் நெறியில்
சிறு வயிற்றினையுடைய தம்பலப்பூசி குறுகுறுவென்று ஓடி
நீலமணியுடன் கூடிய பவழம் போலக் காயாவின்
அழகுமிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய —
என்பது இதன் பொருள்.
மின்னாமல் முழங்காமல் விடிய விடியப் பொழிந்த விடியற்காலையில், செறிந்த மணல் மேடுபட
அதன்மேல் களர்மண் படிந்திருக்கும் பாதையில், சிறிய வயிற்றினை உடைய தம்பலப்பூச்சி குறுகுறுவென ஓடி,
நீலமணியுடன் கூடிய பவழம் போல காயாவின் அழகு மிக்க வாடற்பூவில் ஒளிந்து மறைய என்று கூறும் இப்பகுதி
தம்பலப்பூச்சியைப் பற்றி மேலும் இரு செய்திகளைக் கூறுகிறது. இப் பூச்சியின் வயிறு குறுகியதாக இருக்கும்
(குறு மோடு). அது குறுகுறுவென ஓடி ஒளிந்துகொள்ளும். எனவே, ஆளரவம் கேட்டு அதற்கேற்ப இயங்கக் கூடியது
அது.
எனவே, இதுவரை கண்டவற்றால் இப் பூச்சியைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது:-
1. கார்காலத் தொடக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கிறது. இது காணப்படுவதைக் கார்காலத் தொடக்கத்தின்
அறிகுறியாக மக்கள் கொண்டனர்.
2. கார்கால முடிவில் இவை பலுகிப் பெருகி அங்கங்கே பரவலாக படர்ந்திருக்கும்.
3. ஒரு நாளின் தொடக்கமான வைகறைப் பொழுதில் இது தன் அன்றைய வாழ்க்கையைத் தொடங்குகிறது.
4. ஈரமான பகுதிகளில் விரும்பி உறையக்கூடியது.
5. தாம் தங்கியிருக்கும் இடத்தை அழகுசெய்வது.
6. பவளம் போல் சிவப்பு நிறத்தது.
7. மரத்தடிகளில் ஊர்ந்து திரியக்கூடியது. காயா மரத்தடிகளில் காணப்படுவதாகக் குறிப்புகள் உள்ளன.
8. பாதை ஓரங்களில் திரியக்கூடியது.
9. ஆள் அரவம் கேட்டு ஓடி ஒளிந்துகொள்ளக்கூடியது.
10. இதன் வயிற்றுப்பகுதி சிறியதாக இருக்கும்.
11. பஞ்சுப்பிசிர் போன்று மென்மையான உடலைக் கொண்டது.
12. சிறுவர்கள் பிடித்து விளையாடும் அளவுக்குச் சாதுவானது (harmless).
இத்தனை பண்புகளிலும் சிவப்பு நிறம் என்ற ஒன்றைத் தவிர ஏனையவை cochineal என
அழைக்கப்படும் தம்பலப்பூச்சிக்கு இல்லை. எனவே, இதிலிருந்து நாம் இருவித முடிவுகளுக்கு வரலாம்.
1. Cochineal எனப்படும் இந்திரகோபப்பூச்சி வேறு – மூதாய் என்றழைக்கப்படும் தம்பலப்பூச்சி வேறு.
2. இந்திரகோபம், தம்பலப்பூச்சி, மூதாய் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் பூச்சி ஒன்றே
– ஆனால் அது cochineal என்றழைக்கப்படும் coccus cacti என்ற சப்பாத்துக்கள்ளிப் புழு அல்ல.
அப்படியென்றால் இது என்ன?
இப் பூச்சியின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தபோது இது நமது கிராமங்களில் வெகுவாக அறியப்பட்ட
வெல்வெட் பூச்சியாக இருக்கலாம் எனத் தோன்றியது. இந்தத் தலைப்பில் வலைத்தளங்களில் தேடியபோது பல
தகவல்கள் கிடைத்தன.
இது ஆங்கிலத்திலும் the red velvet mite எனப்படுகிறது. இது Trombidium grandissimum என்ற
வகையைச் சேர்ந்தது. இதைப்பற்றிக் கிடைத்த பல தகவல்களில் கீழ்க்கண்டவை நம் மூதாய்க்குப் பொருந்திவந்தன.
It is a red mite about half an inch long and from a quarter to three-eighths of an inch in its
widest part. It is covered with a scarlet, velvety down, and appears on the ground at the beginning of the
rainy season. It is only to be found for a few weeks in the year.
The mites are visible in large numbers early in the Monsoon season and so are also called
rain mites in the subcontinent.
எனவே, தமிழ் இலக்கியங்களில் கோபம், கோவம், மூதாய், ஈயன் மூதாய் என்று அழைக்கப்படும்
இந்திரகோபம் எனப்படும் தம்பலப்பூச்சி என்பது வெல்வெட் பூச்சி, Trombidium grandissimum எனப்படும்
பூச்சியே என்பது தெளிவாகும்.
பார்க்க : கோபம்
பார்க்க : ஈயல்மூதாய்
மேல்
மூதாலம்
(பெ) தொன்மையான ஆலமரம், very old banyan tree
தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய
நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/2,3
மிகப் பழமையான ஆலமரத்துப் பொதுவிடத்தில் தோன்றும்
நான்கு ஊரிலுள்ள கோசர்களின் நன்மொழியைப் போல
மூதாளர்
(பெ) 1. ஒழுக்கத்தினையுடையவர், people with good character
2. வயதில் பெரிதும் முதிர்ந்தோர், eldery people
1
பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 54
பெரிய ஒழுக்கத்தினையுடைய மெய்க்காப்பாளர் காவலாகச் சூழ்ந்து நிற்ப
நச். உரை
2. பெரு மூதாளர் – ஆண்டானே பெரிதும் முதிர்ந்தோர் – பொ.வே.சோ. உரை விளக்கம்
மூதில்
(பெ) 1. பழங்குடி, ancient family
2. பழமையான் வீடு, very old house
3. பழமையான மறக்குடி, Ancient warrior-tribe
1
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி – நற் 367/6
மூதில் மகனாகிய அருமன் என்பவனின் பெரும்புகழ்பெற்ற சிறுகுடி என்ற ஊரைப் போன்ற
மூதில் – தொல்குடி என்னும்பொருட்டு – ஔவை.சு.து.உரை விளக்கம்.
2
சிவந்த காந்தள் முதல் சிதை மூதில்
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும்
புல் இலை வைப்பில் – பதி 15/11-13
சிவந்த காந்தள் வேரொடு காய்ந்தழிந்திருக்கும் பாழ் வீடுகளில்
புலால் நாறும் வில்லேந்தி உயிர்க்கொலை புரியும் புல்லிய மறவர் உறையும்
பனையோலைகளே வேய்ந்த ஊர்களையுடைய
ஔவை.சு.து.உரை
3.
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/15
முதிய மறக்குடியில் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ
ஔவை.சு.து.உரை
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதில் மகளிர் ஆதல் தகுமே – புறம் 279/1,2
இவளது சிந்தை கெடுக, இவளது துணிவு அச்சம்பொருந்தியதாகவுள்ளது
இவள் முதிய மறக்குடியில் பிறந்த மகளாமெனல் தக்கதே
ஔவை.சு.து.உரை
மூதிலாளர்
(பெ) பழமையான மறக்குடியைச் சேர்ந்தவர், person of ancient warrior-tribe
பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய
மூதிலாளருள்ளும் – புறம் 289/4,5
பெருமை பெற்ற பழைமையான குடியில் பிறந்தாரிடத்து வழிவழியடிப்பட்டு வரும் நற்பண்புகளனைத்தையும்
சோர்வுபடாது காத்துவரும்
முதுகுடி மறவருள்ளும்
தமியன் வந்த மூதிலாளன்
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக
திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/4-7
தனியனாய் வந்த மறக்குடி மறவன்
போரில்பகைவரை மேற்செல்லாதவாறு தடுத்து, தான் முன்னேநின்று வாளால் வெட்டி வீழ்த்தின
களிறாகிய பிணத்தினது கொம்புகளையே அமைப்பாகக் கொண்டு
கோணிய கூரிய வாளை நிமிர்த்துக்கொண்டு
மூது
(பெ) 1. தொன்மை, பழைமை, ancientness
2. முதுமை, oldness
1
முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும் – புறம் 382/11
முன்னாள் நீ பரிசில் தந்து விட்ட தொன்முறை அறிந்த சிறுவரும்
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/5-8
கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர்
வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால்
உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும்
நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில்
2
பசும்பழப் பாகல்
கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/13,14
அழகிய பழத்தினையுடைய பாகற்கொடிகள்
கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்தில்கிடந்து அசையும்படி செய்து
மூதூர்
(பெ) பழைமையான ஊர், ancient town
மூதூரில் விழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். கொடிகள் அசையும் அகன்ற கடைத்தெருக்கள் இருக்கும். நகருக்குக்
காவல் பலமாக இருக்கும்.
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் – பெரும் 411
விழாக்களால் மேம்பட்ட பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய தொன்மையான ஊராகிய காஞ்சிநகர்
அரும் கடி மூதூர் மருங்கில் போகி – முல் 7
அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 29,30
மாடங்கள் உயர்ந்துநிற்கும் வளப்பமுள்ள பழைய ஊரில்,
ஆறு கிடந்தால் போன்ற அகன்ற நெடிய தெருவில்,
துஞ்சா முழவின் மூதூர் வாயில் – குறி 236
செயலற்று இராத(எப்போதும் ஒலிக்கும்) முழவினையுடைய பழைய (நம்)ஊர் வாயிலில்
சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு – பட் 215
திருவிழா நிகழும் பழைமையான ஊருக்குச் சென்று குடியேறினாற்போன்று,
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/4
நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் – நற் 90/1
ஆட்டங்களைக் கொண்ட திருவிழாவின் ஆரவாரம் உள்ள பழமையான ஊரில்,
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – நற் 293/4
திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த மூதூரில்
பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/10
பெருத்த ஆரவாரத்தையுடைய நமது பழமையான ஊரின் மரங்கள் தெரிகின்றன
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்
கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்து – பதி 15/18,19
விழாக்கள் இல்லாமல் இருப்பதை அறியாத, முழவுகள் முழங்கும் மூதூர்களில்
கொடிகளின் நிழலில் இருக்கும் பொன்னை மிகவும் உடைய கடைத்தெருக்களில்
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/20
முழவுகள் முழங்குகின்ற பழமையான ஊரில் விழாவினைக் காண்பதற்காகச் செல்லுகின்ற,
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – அகம் 17/19
திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – அகம் 83/7
நீண்ட கொடிகள் அசையும் அங்காடிகளையுடைய பழைமையான ஊரில்
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/12
அணுகுதற்கு மிக்க காவலினையுடைய பகைவர்க்கு அச்சத்தைத் தரும் மூதீர்
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர் – அகம் 115/1
என்றும் நீங்காத விழாவினையுடைய பகைவர்க்கு அச்சம் தரும் இம் முதிய ஊரின்கண்ணே
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர் – புறம் 37/11
செம்பு பொருவும் மதிலையுமுடைய தலைமை பொருந்திய பழைய ஊரினுள்ளே
மூப்பு
(பெ) 1. முதுமை, old age
2. பழைமை, ancientness
1
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமை கொண்ட வழி – கலி 12/16-19
பின்பற்றாதிருப்பாயாக, பெருமானே நீ! காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
இறப்பும் முதுமையும் எல்லாருக்கும் உண்டு என்பதனை மறந்துவிட்டவரோடு ஒன்றுசேர்ந்து
உலகியலுக்கு ஒவ்வாத மாறுபட்ட வழியை
2
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய – அகம் 7/4
மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.
மூய்
1. (வி) மொய், சூழ்ந்திரு, encircle, surround
– 2. (பெ) மூடி, cover
1
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய – பதி 42/19,20
மானத்தையுடைய வலிமை மிகுந்த வீரரோடு மன்னர்களும் புகழ்ந்து போற்ற, – உன்
தேருடன் சேர்ந்த வீரர்கள் உலகமுழுவதும் சூழ்ந்திருக்க,
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/13-15
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்
கயிறுகட்டி மேலிழுத்து நீர் முகந்த பாத்திரத்தைச் சூழ்ந்துகொண்டு மொய்த்துநிற்கும்
பசுக்கள் நிறைந்த கொங்கர் நாட்டினை வென்று சேர்த்துக்கொண்ட
2
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன – குறு 233/3
பொன்னை இட்டுவைக்கும் பேழையின் மூடியைத் திறந்துவைத்ததைப் போன்று
மூரல்
(பெ) 1. புன்னகை, இளநகை, smile
2. பொலுபொலுவென்று வெந்த சோறு, rice cooked properly
1
உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழை கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே – குறு 286
நினைத்துப் பார்க்கத்தான் முடியும் போலிருக்கிறது, முள் போன்ற கூர்மையான பற்களையுடைய
அமிழ்தம் சுரக்கின்ற சிவந்த வாயையும், கமழ்கின்ற அகிலும்
சந்தனமும் மணக்கும் கருமணல் போன்ற கூந்தலையும்,
பெரிய அமர்த்த குளிர்ச்சியான கண்களையும் உடைய தலைவியின்
இளநகையோடு கூடிய செருக்கிய பார்வையை
பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீஇர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற
சில் நிரை வால் வளை பொலிந்த
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே – அகம் 390/12-17
தனது பெரிய
அரி படர்ந்த மையுண்ட கண்ணினால் மாறுபட்டனள் போல நோக்கி
எம்மைத் தடுப்பீர் நீவிர் யாவிரோ என்று கூறி
இளநகையுடையவளாய்ச் சிறிது பெயர்ந்து நின்ற
சிலவாய நிரைந்த வெள்ளிய வளைகளாற் பொலிவுற்ற
பல மாண்புடைய பேதையின் பொருட்டு என் நெஞ்சம் தன் வலியினை இழந்துவிட்டது.
மூரல் என்ற சொல் முறுவலுக்கு அடையாக வந்துள்ளதைக் கவனிக்கவேண்டும். வாய் திறந்து சிரிப்பது சிரிப்பு.
மனம் மகிழ்ந்து முகம் மட்டும் மலர்வது முறுவல். அந்த முறுவலில் ஓரளவு வாய் திறந்து இலேசாகப் பல்
தெரிய முறுவல் காட்டுவது மூரல் முறுவல். எனவே மூரல் என்பதை இளநகை எனலாம்.
மேலே காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளின் சூழ்நிலையை உற்றுக் கவனித்தால் மூரல்முறுவல் என்பதன்
முழுப்பொருளை உணரலாம். இதனை மேலும் விளக்க இன்னொரு எடுத்துக்காட்டைக் காண்போம்.
வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. திறந்து பார்த்தால் மிகவும் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர். உடனே
உங்கள் முகம் மலர்கிறது. வாயெல்லாம் பல்லாய், “வாங்க வாங்க” என்று உற்சாகத்துடன் வரவேற்கிறீர்கள். இது
மலர்ந்த சிரிப்பு.
தெருவில் போகும்போது முற்றிலும் புதிய ஒருவர் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். யாரென்று தெரியாத
நிலையில் பதிலுக்கு ஒரு சிறு முறுவல்மட்டும் காட்டிவிட்டுச் செல்கிறீர்கள்.
இப்படியில்லாமல் நெடுநாள்களுக்கு முன்னர் ஓரளவே பரிச்சயம் ஆகியிருப்பவரை எதிர்பாராமல்
காணும்போது உங்கள் முகம் ஓரளவு மலர்ந்து, வாயில் பற்கள் மிகச் சிறிய அளவே தெரிய புன்னகைக்கிறீர்களே
அதுதான் மூரல்.
இதை விருந்தின் மூரல் என்கிறது சிலம்பு.
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் – வஞ்சி 28/24
என்கிறது சிலப்பதிகாரம். இதற்கு, திருந்திய பற்கள் சிறிது தோன்றிய புதிய நகையினையும் என்று உரை
கூறுவார் வே.நாட்டார்.
2
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் – பெரும் 167,168
பெரிய சுற்றமாகிய நண்டின் (கருவிலுள்ள)சிறிய பார்ப்பை ஒத்த
பசிய தினையரிசியிலான சிலுத்த சோற்றைப் பாலோடும் பெறுவீர்
நெடும் குரல் பூளை பூவின் அன்ன
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று
இன் சுவை மூரல் பெறுகுவிர் – பெரும் 192-196
நெடிய கொத்தினையுடைய சிறு பூளையின் பூவை ஒத்த
குறிய தாளினையுடைய வரகின் சிறிய பருக்கைகளாகிய சோற்றை,
புள்ளிபுள்ளியாகத் தெரியும் கொத்தினையுடைய வேங்கைப் பூவைக் கண்டாற் போன்ற
அவரை விதையின் (தோலுரித்த)வெண்மையான பருப்பை வேகவிட்டு, துழாவுதலால்
இனிய சுவையுள்ள பருப்புச்சோறைப் பெறுவீர்.
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
உப்பைவிற்றுக்கொண்ட நெல்லினின்றும் ஆக்கிய பதமான வெண்சோற்றில்
இளநகை என்பதனைக் குறிக்கும் மூரல், எப்படி உணவுக்கானது?
நன்றாக வெந்து குழைந்துபோன சோறு நெருங்கிய உறவினரிடம் காட்டும் மலர்ந்த சிரிப்புப் போன்றது. சரியாக
வேகாத அரிசிச்சோறு விதை விதையாய் இருக்கும். இது முற்றிலும் புதியவருக்குக் காட்டும் முறுவல் போன்றது.
மிகச் சரியான பதத்தில் வெந்து, சோறு பருக்கைபருக்கையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருந்தால்
அதுவே மூரல். இளநகை போன்று இளம்பதச் சோறு எனலாம்.
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
என்று அகநானூறு கூறுவதைக் கவனியுங்கள். மூரல் முறுவல் என்பது போல, இங்கு மூரல் முறுவல்
என்று வந்திருப்பதைக் கவனிக்கவேண்டும்.
பெரும்பாணாற்றுப்படை (பெரும் 192 – 196) இதனை மேலும் விளக்கமாய் உரைக்கிறது.
அவரை விதையை வேகவைத்துக் கடைந்து வரகரிசிச் சோற்றில் ஊற்றிப் பிசைந்து உண்டிருக்கிறார்கள்.
நன்றாக மலர வெந்த வரகரிசிச்சோறு ‘பொலபொல’-வென்று இருக்கும். அதுவே அவிழ் சொன்றி. பருப்பை
வேகவைத்துக் கடைந்தாலும் அது குருணைப் பதத்தில்தான் இருக்கும். ‘குக்கரில்’ வைத்த துவரம்பருப்பு போல்
குழைய இருக்காது. இந்தக் குருணைப்பதப் பருப்புக் கடைசலை, குருணை போன்ற வரகரிசிச் சோற்றில் பிசையக்
கிடைப்பதே இன்சுவை மூரல்.
மூரி
(பெ) 1. வலிமை, strength
2. பெருமை, greatness
3. பழமை, antiquity
4. எருமை, buffallo
5. எருது, ox, bullock
6. செழுமை, கொழுமை, Plumpness, luxuriance
7. (ஊன்) துண்டம், bit, part
1
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் – பதி 45/16
வில் விசையால் வரும் அம்புகளை அடக்கிய வலிமையான வெள்ளிய தோலாலான கேடகத்தையும்,
2
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் – நற் 15/1
முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு
3.
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து – அகம் 103/6
வன்னிலத்தைச் சார்ந்திருந்த பழமையான பெரிய மன்றிலே
4.
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முது சாடி – பரி 20/53,54
பெண்ணின் தன்மையைக் கொண்ட அழகு என்னும் வயலில், காமவெறியாகிய கலப்பையைக் கட்டி
எம் தலைவரான எருமையைச் சோம்பிக்கிடக்காமல் முடுக்கிவிட்டு உழுகின்ற பலமுறை உழப்படும் உழவே!
5.
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் – பதி 67/15,16
வளைவு வளைவாக அமைந்த கொம்பினையும் பெரிய கண்ணுமுடைய எருதுகளினுடையதும்
வேறு வளைந்த தலைகளையுடைய விலங்குகளினுடையதுமான தாழ்ந்த இழிவான இறைச்சியை விற்போரின்
ஔவை.சு.து.உரை
6.
முதை சுவல் கலித்த மூரி செந்தினை – அகம் 88/1
பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்தில் தழைத்த கொழுத்த செந்தினையின்
வே.நாட்டார் உரை
7.
திருந்தா மூரி பரந்து பட கெண்டி – புறம் 391/5
திருந்தாத ஊன்கறியைச் சிறுசிறு துண்டாகப் பரக்குமாறு துண்டித்து
திருந்தா மூரி – திருந்தாத ஊன்; மூரி – ஊன், ஔவை.சு.து.உரை, விளக்கம்
திருந்தா மூரி – big pieces of meat, வைதேகி ஹெர்பர்ட் விளக்கம்
வெண் நிண மூரி அருள – புறம் 393/14
வெள்ளிய ஊன் துண்டங்களைக் கொடுத்து உண்பித்து
மூவர்
(பெ) 1. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்,
The three Tamil kings, namely CEran, COzhan and PAndiyan
2. அயன், அரி, அரன் என்னும் மூன்று தெய்வங்கள், The Hindu Trinity.
3. திருமால் உருத்திரன் இந்திரன் என்ற மூன்று தெய்வங்கள், the three hindu gods, namely
vishnu, siva and Indra
1
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே – அகம் 31/14,15
தமிழ்நாட்டினை ஆளும் மன்னர் மூவரும் காக்கும்
தமிழ் மொழியின் வேறான மொழிவழங்கும் தேயங்களின் பல மலைகளையும் கடந்து.
2
நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 160-162
நான்காகிய பெரிய தெய்வத்தையுடைய நன்றாகிய ஊர்கள் நிலைபெற்ற
உலகத்தைக் காக்கும் ஒரு தொழிலையே விரும்பிய கோட்பாட்டையுடைய செல்வன்(151)
என முன்னேகூட்டித் திருமாலுக்கு அடையாக்குக.
பலரும் புகழ்கின்ற அயன் அரி அரன் என்னும் மூவரும் தத்தமக்குரிய தொழில்களை முன்புபோல் நிறுத்தித்
தலைவராகவேண்டி
நச்.உரை
பிரமன் திருமால் உருத்திரன் இந்திரன் எனப்படும் நான்கு பெரும் தெய்வங்களிலே வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாடுடைய
பலராலும் புகழப்படுகின்ற அயனை ஒழிந்த ஏனை மூவரும் தலைவராக வேண்டி
பொ.வே.சோ உரை
மூவன்
(பெ) சேரநாட்டுச் சிற்றரசன், a chieftain of chEra country
மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல்
தெறல் அரும் தானை பொறையன் பாசறை
நெஞ்சு நடுக்கு_உறூஉம் துஞ்சா மறவர் – நற் 18/2-6
மூவன் என்பானின்
முழு வலிமை கொண்ட முள் போன்ற பற்களைப் பிடுங்கி அழுத்திவைத்த கதவினைக் கொண்ட
கடற்கரைச் சோலையைக் கொண்ட தொண்டியின் தலைவனான, வெல்லும் வேற்படையையுடைய
கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்
நெஞ்சு நடுக்கங்கொண்டதினால் தூங்காத வீரர்கள்
மூவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். இவனது நாடு நெல்வளம் மிக்கது. பெருந்தலைச்சாத்தனார் இவனை
நேரில் கண்டு பாடியுள்ளார் (புறம் 209). பொய்கையார் இவனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (நற்.18). தொண்டி அரசன்
பொறையன் இவனைப் போரில் வென்று, இவனது பல்லைப் பிடுங்கி, தன் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான்.
மூவாய்
(பெ) மூன்று பகுதிகள், திரிசூலத்தின் தலை, three parts, the head of the trident
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலும் உண்டு அ தோலாதோற்கே – அகம் 0/5,6
கையில் இருப்பது, குந்தாலியுடன் கோடரி, மூன்று கூறுகளையுடைய
சூலாயுதமும் உண்டு அந்தத் தோல்வி இல்லாதவருக்கு
மூவெயில்
(பெ) திரிபுரம், முப்புரம், பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டனவும் சிவபிரானால்
எரிக்கப்பட்டனவும் விண்ணிற் சஞ்சரித்தனவுமான மூன்று நகரங்கள்,
The three aerial cities of gold, silver and iron burnt by Siva
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 154
முப்புரத்தை எரித்த, மாறுபாடு மிக்க உருத்திரனும்
மூழ்
(வி) 1. முடிவடை, come to an end
2. மூடு, close, fold up
3. மூழ்கடி, engulf, submerge
4. மொய், swarm around, throng about
1
விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று – நற் 320/1
ஊரில் திருவிழாவும் முடிவடைந்தது; முழவுகளும் கட்டித்தொங்கவிடப்பட்டன
ச.வே.சு.உரை
2
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே – புறம் 336/5
விளங்குகின்ற வேலேந்திய வீரரும் வாய்மூடி ஒன்றும் உரையாடாராயினர்
3.
நெடு நீர துறை கலங்க
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு – பதி 33/4,5
ஆழமான நீரையுடைய குளங்களின் துறைகள் கலங்குமாறு
அதனை மூழ்கடிப்பதுபோல் தங்கிய பெரும் படையோடு
4.
புக அரும் பொங்கு உளை புள் இயல் மாவும்
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும்
அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/14-18
ஏறி அமர்வதற்கு அரிய பொங்கிய பிடரிமயிரையுடைய பறவைபோல் விரைந்துசெல்லும் குதிரைகள்,
மிக விரைவாக வந்தாலும் மேலே அமர்ந்திருக்க இனிதாக இருக்கும் பெண்யானைகள்,
அதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய
வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு
வகைவகையாகவும், முறைமுறையாகவும் விரைவாக மொய்த்துக்கொண்டு அவற்றின் மீது ஏறி,
மூழ்கு
(வி) 1. அமிழ், plunge, submerge, sink
2. மறை, be hidden
3. நுழை, புகு, enter, get in, reach
4. அழுந்து, be thrust
1
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6
பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் அமிழும் மகளிரின் கண்களை ஒக்கும்
2
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று – நற் 163/9,10
அடிவானத்தில் மறைந்துபோன, விளங்குகின்ற ஒளிபொருந்திய நெடிய சுடரையுடைய
கதிர்கள் வெப்பத்துடன் எழுந்து உள்ளிடமெல்லாம் தகிக்கும் ஞாயிற்றின்
3.
வகை பெற எழுந்து வானம் மூழ்கி
சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மது 357,358
பலவகையால் பெயர்பெற எழுந்து வானத்தே சென்று(ப்பின்)
சில்லென வீசும் காற்று ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும்
4.
குடி நிறை வல்சி செம் சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 197-201
குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள்
நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று,
பிடியின் வாயை ஒத்த, மடங்கிய வாயையுடைய கலப்பையின்
உடும்பின் முகத்தை ஒத்த பெரும் கொழு அழுந்த அமுக்கி,
வளைவாக, விதைத்தவாறே, உழுத, (பின்னர் வளர்ந்த களைகளைக்)களைக்கொட்டுச் செத்திய தோட்டத்தை