துறை – ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.
மரபு மூலம் – கை கவர் முயக்கம் அவரும் பெறுகுவர்
வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காட்
டிலையில மலர்ந்த முகையி லிலவங்
கலிகொள் ளாய மலிபுதொகு பெடுத்த
வஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றிக்
கயந்துக ளாகிய பயந்தபு கான
மெம்மொடு கழிந்தன ராயின் கம்மென
வம்புவிரித் தன்ன பொங்குமணற் கான்யாற்றுப்
படுசினை தாழ்ந்த பயிலிண ரெக்கர்
மெய்புகு வன்ன கைகவர் முயக்க
மவரும் பெறுகுவர் மன்னே நயவர
நீர்வார் நிகர்மலர் கடுப்ப வோமறந்
தறுகுள நிறைக்குந போல வல்கலு
மழுதல் மேவல வாகிப்
பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே
சொற்பிரிப்பு மூலம்
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடும் கொடி பொற்பத் தோன்றிக்
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென
வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்றுப்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
அவரும் பெறுகுவர் மன்னே நயவர
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவல ஆகி
பழி தீர் கண்ணும் படுகுவ மன்னே
அடிநேர் உரை
வானத்தில் ஊர்ந்துசெல்லும், சுடர்கின்ற ஒளியையுடைய சூரிய மண்டிலம் நெருப்போ என்னுமாறு சிவந்துபோய், வெப்பம் தகிக்கின்ற காட்டில் இலையே இல்லாமல் மலர்ந்த, மொட்டுக்கள் அற்ற இலவ மலர்கள் – ஆரவாரத்துடன் மகளிர்கூட்டம் மகிழ்வுடன் ஒன்றுசேர்ந்து எடுத்த அழகிய விளக்குகளின் நீண்ட வரிசையைப் போலத் தோன்ற, குளங்கள் புழுதிக்காடாய் ஆகியிருக்கும் வளம் அற்றுப்போன காட்டில், நம்மோடு சென்றிருந்தால், மனதிற்கினிமையாகப் புதுத்துணியை விரித்தாற்போன்ற செழித்து எழும் மணலைக் கொண்ட காட்டாற்றின் பெரிய கிளைகள் தாழ்ந்திருக்கும், நிறைந்த பூங்கொத்துகளைக் கொண்ட மணல்மேட்டில், உடம்பினுள் புகுந்துவிடுவதைப் போன்று கைகள் சூழ்ந்த அணைப்பினை அவரும் பெற்றிடுவாரே பாசத்துடன், நீர் ஒழுகும் ஒளியுள்ள மலரைப் போன்று, இடைவிடாமல் (அம் மலர்கள்)நீரற்ற குளத்தை நிறைப்பது போல நாளும்
அழுதலை மேற்கொள்ளாதவை ஆகி, குற்றமற்ற (எமது)கண்களும் தூங்கப்பெறுமே.
அருஞ்சொற்கள்:
வயங்கு = தானாக ஒளிவிடு; மண்டிலம் = சூரிய/சந்திர வட்டம்; உருப்பு = வெப்பம்; அவிர் = ஒளிர்; முகை = மொட்டு; கலி = ஆரவாரம்,
மகிழ்வொலி; ஆயம் = மகளிர் கூட்டம்; மலிபு = நிறைந்து; தொகுபு = கூடி; பொற்ப = போல; கயம் = குளம்; பயம் = பயன், நன்மை;
தபு = கெட்டுப்போ; வம்பு = மார்க்கச்சை, புதியதுணி; பயில் = நிறை; இணர் = பூங்கொத்து; எக்கர் = மணல்மேடு; கவர் = தழுவு;
முயக்கம் = அணைப்பு; நிகர் = ஒளிவிடு; கடுப்ப = போல; ஓ = ஒழிதல்; அல்கலும் = எந்நேரமும்;
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
தலைவன் பொருள் சேர்த்துவரப் பிரிந்துசென்றுவிட்டான். அவன் சென்ற பின்னர் தலைவியைத் துயரம் ஆட்கொள்ளுகிறது. ‘என்னையும் அவன் கூட்டிச் சென்றிருக்கலாமே’ என்று அவள் எண்ணுகிறாள். அப்படிச் சென்றிருந்தால், போகிற வழியில் தலைவன் இரவைத் தனியே கழித்திருக்கத் தேவையில்லையே. தானும் இங்கே அழுது அழுது கண்ணீர் பெருக்கிக்கொண்டிராமல் அவனுடன் இனிமையாகத் துயில்கொண்டிருப்போமே என்று ஏக்கத்துடன் தோழியிடம் சொல்கிறாள் தலைவி.
ஔவையாரின் திகட்டாச் சொல்லமுதம்
அமுதம் என்பது தித்திக்கும் உணவைக் குறிக்கும் – அக்காரவடிசில் போல. அதனை ஓரளவுக்கு மேல் உண்ணமுடியாது. காரணம் தித்திப்பு திகட்டும். இப்பாடலில் ஔவையார் நமக்குக் கொடுத்திருப்பது திகட்டாத சொல் அமுதம். அதில் ஓரொரு கவளங்களைச் சுவைத்துப் பார்ப்போம்.
பாடலின் தொடக்கத்தில், பாலைநில வெம்மையை உணர்த்த, வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த என்கிறார் புலவர். வயக்கு என்பது ஒளிரச்செய்தல் – புளி போட்டுத் தேய்த்த பித்தளைப் பாத்திரம் போல. வயங்கு என்பது தானாக ஒளிவிடுதல். மண்டிலம் என்பது சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றிச் சிலநேரங்களில் ஏற்படும் ஒளிவட்டம். சந்திரனுக்குத் தானாக ஒளிவிடும் பண்பு இல்லை. மேலும் அது நெருப்பெனச் சிவந்து தோன்றாது. எனவே, இந்த மண்டிலம் சூரிய மண்டிலமே என்பதைக் குறிக்கவே வயங்கொளி மண்டிலம் என்கிறார் புலவர். மாலைச் சூரியன் நெருப்பெனச் சிவந்திருக்கும். ஆனால் அதன் வெப்பம் சுட்டுப் பொசுக்காது. காரணம் அது அடிவானத்தில் காணப்படுவதால். இது உச்சிவெயில் சூரியன். காலையில் எழுந்த சூரியன், வானத்தில் ஊர்ந்து உச்சிக்கு வருகிறான். எனவேதான் புலவர் வானம் ஊர்ந்த என்கிறார். நெருப்பெனச் சுட்டெரிக்கும் சூரியன் கண்கூசும் அளவுக்கு வெண்மையாகத் தோன்றும் – சிவப்பாக இருக்காது. ஆனால் அதன் மண்டிலம் சிவந்த நெருப்புப் போல் தோன்றும். எனவேதான் வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த என்கிறார் புலவர். பாடலின் தொடக்கத்தில் இத்தனை பொருள்களையும் பொதித்துவைத்திருக்கிறார் புலவர். உருப்பு அவிர் அம் காடு என்று பாலைநிலத்தைக் குறிப்பிடுகிறார் புலவர். உருப்பு என்பது வெம்மை, அனல் எனலாம். அதிகச் சூட்டின்போது வெப்பம் அலையலையாக வந்து நம்மைத் தாக்குவதை உணரலாம். அதிகமாய்ச் சூடு உற்ற காய்ந்த நிலத்தினின்றும் அனல் பறக்கும். மிகவும் காட்டமான பேச்சை, அனல் பறக்கும் பேச்சு என்கிறோம் இல்லையா? திறந்தவெளி வறண்ட காட்டில், உச்சி வெயிலில் தரையிலிருந்து மேலே எழும் அனலைக் கானல்நீர் (mirage) என்கிறோம். இலக்கியங்கள் அதனைப் பேய்த்தேர் என்னும். இவ்வாறு கானல்நீர் தோன்றும் அளவுக்குக் கடுமையான வெப்பம் உள்ள காடுதான் புலவர் நமக்குக் காட்டும் பாலைநிலம்.
இந்தக் காட்டில் ஓர் இலவமரத்தைக் காட்டுகிறார் புலவர். இலை இல் மலர்ந்த முகை இல் இலவம் என்கிறார் புலவர். இந்த வறட்சியில் எந்த மரத்தில் இலை இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? எந்த வறட்சியிலும் பட்டுப்போகாமல் நிற்கும் மரம் இலவமரம். வறட்சியினால் இலைகள் இல்லாமற்போயிருந்தால் மலர்கள் மட்டும் எப்படி இருக்கும்? ஒருவேளை இலையுதிர் காலமாக இருக்குமோ? அப்படியும் இல்லை. இது வேனிற்காலம். இலைகளே இல்லாமல் பூக்கள்மட்டும் இருப்பது சாத்தியமா?
தாவரவியலாரைக் கேட்போம். அவர்கள் கூறுகிறார்கள் :
This tree shows two marked growth sprints in India- in spring (March / April) and during the monsoon months. The large lobed leaves drop at that time, and masses of large red / orange flowers appear and the tree is then completely void of leaves.
பார்த்தீர்களா? இலவமரம் பூப்பூக்கையில் இலைகள் முழுவதும் விழுந்துவிடும் என்று தெரிகிறது. அப்புறம், தென்ன முகை இல் இலவம்? முகை என்பது மொட்டு. இலவ மொட்டு சற்று உருண்டையாகப் பச்சையாக இருக்கும். இலவமரம் குறுகிய காலமே பூத்திருக்கும் என்பதால், மொட்டுவிட்டவை எல்லாம் முழுதும் மலர்ந்திருக்கும் காலத்தைக் குறிக்கவே முகை இல் இலவம் என்கிறார் புலவர். இவ்வாறு அவர் சொல்வதற்கும் காரணம் உண்டு. அடுத்து, இவர் இந்த இலவம் பூக்களைக் கார்த்திகை விளக்குகளுக்கு ஒப்பிடப்போகிறார்.
அஞ்சுடர் நெடுங்கொடி என்பது வரிசையாக வைக்கப்பட்ட விளக்குகளைக் குறிக்கும். விளக்குகளை வரிசையாக வைக்கும்போது அவற்றுக்கு இடையே வேறு எதனையும் வைக்கமாட்டார்கள் அல்லவா? எனவேதான் முகையே இல்லாத இலவம் – மலர்களால் மட்டுமே நிறைந்த இலவம் – என்கிறார் புலவர். silk cotton tree எனப்படும் இலவ மரம், காட்டுப்பருத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இலவம் பூக்கள் இரு வண்ணங்களில் கிடைக்கின்றன. சிவப்பு நிறத்தில் ஒரு வகை – மஞ்சள் நிறத்தில் ஒரு வகை. சிவப்புப் பூக்களைக் கொண்டவை Bombax ceiba or Bombax malabaricum எனப்படும். இதன் பூக்களின் இதழ்கள் வெளிப்பக்கமாக மடிந்திருக்கும். மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டவை Cochlospermum religiosum எனப்படும். இதன் பூக்கள் கிண்ணம் போன்ற அமைப்பைக் கொண்டவை.
Cup-shaped Flowers solitary or clustered, axillary or sub-terminal, fascicles at or near the ends of the branches
என்பர் தாவரவியலார். இந்தப் பூக்களைப் புலவர் கார்த்திகை விளக்குகளுக்கு ஒப்பிடுவதால், உருவத்திலும் நிறத்திலும் புலவர் குறிப்பிடுவது மஞ்சள்பூ இலவமரமாக இருக்கலாம்.
ஒரு பாலைநிலத்தின் கடுமையை வருணிக்க வந்த புலவர், அது கார்த்திகை விளக்கு வைத்த தெருவைப் போல் இருக்கிறது என்று ஓர் இனிமையான காட்சியைக் கூறுவதன் காரணம் என்ன? அதனை அடுத்துக் காண்போம்.
தலைவியின் கனவு
பாடல் முழுக்கத் தலைவியின் மனக்காட்சிகளாக அமைந்திருக்கிறது. முதலில் தலைவி தலைவன் சென்றிருக்கக்கூடிய கானக வெளியை எண்ணிப்பார்க்கிறாள். அங்கே குளங்கள் காய்ந்து அவற்றின் அடிப்பரப்புகள் ஒரே புழுதிக்காடாய் இருப்பதைக் கூறுகிறாள் (கயம் துகள் ஆகிய). எனவே அவை காட்டில் வாழும் உயிரினங்களுக்கும், வழிச்செல்வோருக்குக்கும் எந்தவிதப் பயனும் இன்றி இருக்கின்றன என்கிறாள் (பயம் தபு கானம்). வானத்தில் ஊர்ந்து செல்லும் சூரியன் நெருப்பெனச் சிவந்த வட்டமான ஒளிமண்டிலத்தைக் கொண்டிருக்கிறது. அதன் வெம்மையினால் காட்டு நிலம் வறண்டுபோய், அனல் தகிக்க பேய்த்தேர் என்னும் கானல்நீரை உருவாக்குகிறது.
தகிக்கின்ற சூரியன், தணல் போன்ற கட்டாந்தரை, தண்ணீரற்ற குளங்கள் என்றெல்லாம் கூறி, தலைவன் அவளைப் பயமுறுத்தியிருக்கவேண்டும். இருப்பினும், தலைவனுடன் கைகோத்து நடக்கும்போது இவை எல்லாம் தனக்கு ஒரு பொருட்டல்ல என்பதுபோல், இந்தக் கானத்தைத் தலைவன் தன்னுடன் கடந்துசென்றிருந்தால் (எம்மொடு கழிந்தனராயின்) என்று நினைக்கிறாள் தலைவி. அது மட்டுமல்ல, இந்தக் கடுமையிலும் அவள் ஓர் இனிய காட்சியைக் காண்கிறாள். கடும் வறட்சியிலும் பூத்துக் குலுங்கக்கூடிய இலவ மரத்தை அறிவாள் அவள்.மேலும், அது வேனிற் காலத்தில் பூக்கும், அப்படிப் பூக்கும்போது இலைகளை எல்லாம் உதிர்த்துவிடும் என்றும் அவள் அறிவாள்.
மொட்டுக்களே இல்லாமல் முழுவதுவாய் மலர்ந்து காட்சிதரும் இலவமரம், கார்த்திகை மாதத்தில் கன்னியர்கள் வீடுகளிலும், தெருக்களிலும் ஏற்றிவைத்திருக்கும் விளக்குவரிசைகளைப் போல் காட்சியளிக்கும் என்றும் கூறுகிறாள் அவள். ‘தலைவனே, நான் உன் கூட இருந்தால், நெருப்பெனச் சுடும் வேனில்காலமும் எனக்கு கார்த்திகை மாதமே. உருப்பு அவிர் அம் காடும், கயம் துகள் ஆகிய பயம் தபு கானமும் எனக்குக் கார்த்திகை விளக்கு வைத்த கவின்மிகு இல்லம் ஆகும்’ என்று சொல்லாமல் சொல்லும் தலைவியின் கூற்றில் எத்துணை இனிமையைப் புதைத்துவைத்திருக்கிறார் புலவர் என்று பாருங்கள். இப்பொழுது புரிகிறதா, கடுமையான பாலைநிலத்தை வருணிக்கக் கண்ணுக்கினிய கார்த்திகை விளக்கை ஏன் கையிலெடுத்தார் ஔவையார் என்று? பெண்ணின் மனது பெண்ணுக்குத்தானே தெரியும்!
‘இதோ பார், உன்னைக் காட்டு வழியில் அழைத்துச் சென்றால் உனக்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம்; தலைவனுக்கு அது வேதனையைத் தராதா, நம் தலைவியை இத்தனை கடுமையான வழியில் கூட்டிச் செல்கிறோமே என்று?’ என்று தோழி தலைவியைக் கேட்டிருக்கலாம். அதற்குப் பதில் இறுக்கும்வண்ணம் தலைவி தன் அடுத்த கனவை விரிக்கிறாள்.
கடுமையான காட்டுநிலத்தைக் கடந்தாயிற்று. மற்ற மரம், செடி கொடிகள் கண்ணுக்குத் தென்படுகின்றன. ஆனால் ஊர் எதையும் காணோம். பொழுதோ போய்க்கொண்டிருக்கிறது. எங்கே, எப்படி இரவைக் கழிப்பது? அதோ! அங்கே ஒரு காட்டாறு. சிறிதளவு நீர் அதில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் ஓடிய வெள்ளத்தால் அடித்துக் கொணரப்பட்ட மணல் அங்கங்கே திட்டுகளாய் ஆற்று நடுவே மேடாகப் பரவிக்கிடக்கிறது. அவற்றில் கரையை ஒட்டிய ஒரு மணல் மேடு. அருகில் தாழ்ந்து வளைந்து தொங்கிக்கொண்டிருக்கும் மரக் கிளையிலிருந்துபூங்கொத்துக்கள் அந்த மேட்டில் விழுந்து சிதறிக்கிடக்கின்றன. அவை நிழலில் கிடந்ததினால் வாடாமல் இருக்கின்றன. ஒரு பூப்போட்ட புதிய துணியை விரித்துவிட்டது போல் அந்த மணல்திட்டு காட்சியளிக்கிறது. அங்கே படுத்துத் தூங்கலாமே! அந்த மணல்மேட்டை அவள் ஒரு மலர்ப்படுக்கையாகவே பாவித்துக்கொள்கிறாள் அவள். வம்பு விரித்தன்ன … படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்’ என்ற சொற்களில் தலைவியின் எண்ண ஓட்டத்தை எவ்வளவு அற்புதமாக நம்முன் காட்டுகிறார் புலவர் பாருங்கள்! வம்பு என்பது பொதுவாக மார்க்கச்சை என்பர். அது ஒரு சிறிய துண்டு போன்ற அளவில்தானே இருக்கும். இருவர் படுத்துறங்க அது போதுமா? வம்பு என்பதற்குப் புதுமை, புதியது என்றும் பொருள் உண்டு. எனவே இங்கே புதிய பூப்போட்ட துணியை விரித்துவிட்டாற் போன்ற மணல் என்று பொருள் கொள்ளுவது பொருத்தமாக இருக்கும்.
வெட்டவெளியில் படுத்துறங்கினாலும் கணவன் மார்பில் படுத்திருக்கிறோம் என்ற பாதுகாப்பு உணர்வோடு, மார்பில் தலையை வைத்து, தன்னை முழுவதுமாக முடக்கிக்கொண்டு தன் கரங்களால் அவனைத் தழுவிக்கொண்டு, தன்னையே அவனுள் புதைத்துக்கொள்வது போல் படுத்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று அவள் கற்பனைசெய்து பார்க்கிறாள்.
மெய்புகுவன்ன கைகவர் முயக்கம் என்ற சொற்களில் அவள் மனம் எத்துணை ஏக்கத்தைப் புதைத்துவைத்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புலவர் மிக அழகாக வெளிக்கொணர்கிறார். இவ்வாறு தலைவனுடன் சென்று அவனுடன் தூங்குவதால், தனித்திருக்கும் அவனுக்குத் தன்னுடைய தழுவிய கைகளின் அணைப்பு கிடைக்குமே என்று எண்ணிய தலைவி, அப்படியே தவித்திருக்கும் அவளுக்குக் கொஞ்சம் உறக்கமும் கிடைக்குமே என்று எண்ணுகிறாள். பொதுவாகப் பகலில் பெண்கள் தூங்கமாட்டார்கள். இரவில் அழுதுகொண்டே இருந்தால் எப்படித் தூங்குவது? எனவே, இரவும் பகலும் அவனை நினைத்தவண்ணம் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் இருக்கும் அவளது நிலையை வருணிக்க, புலவர் ஓர் ஒப்பற்ற உவமையைக் கூறுகிறார்.
பொதுவாகப் பெண்களின் கண்களை மலருக்கு ஒப்பிடுவார்கள். அந்தக் கண்கள் வறண்டுபோய்த் தோன்றாமல் சற்றே ஈரப்பசையுள்ளவையாய் இருத்தல் சிறப்பு. எனவே அவற்றைக் குவளை, நெய்தல் போன்ற நீர்நிலைப் பூக்களுடன் ஒப்பிடுவது வழக்கம்.
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து / அறுகுள நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவல ஆகிப் / பழிதீர் கண்ணும் படுகுவ
என்று தலைவி எண்ணுகிறாள். நிகர் என்பதற்கு இங்கே ஒளிர்தல் என்று பொருள். ஓ என்பது ஒழிதல், நின்றுபோதல் என்ற பொருள் தரும்.
அழுகின்ற கண்கள் நீர் சொரிகின்ற மலர்களைப் போன்று இருக்கிறதாம். மலர் எப்படி நீர் சொரியும்? இரவில் பூவின் மேல் படிந்த பனித்துளிகள் காலையில் பூ மலரும்போது, அதிலிருந்து சொட்டுச் சொட்டாய்க் கீழே வடியும். இந்தக் காட்சியைத்தான் புலவர் அழும் கண்களுக்கு ஒப்பாகச் சொல்கிறார்.
இது பொதுவாகப் புலவர்கள் பயன்படுத்தும் உவமைதான். இந்த மலர் இருக்கிறதே இது அறுகுளத்தில் உள்ளது. அறுகுளம் என்ற வினைத்தொகை அறுகின்ற குளம், அற்ற குளம், அறப்போகும் குளம் என்று மூன்று காலத்தையும் குறிக்கும். இங்கே இது அறுகின்ற குளத்தைக் குறிக்கும். (அற்ற குளம் என்று எடுத்துக்கொண்டு பலரும் பலவிதமாய்ப் பொருள் கொண்டிருக்கிறார்கள்) குளத்தில் நீர் வற்றிக்கொண்டிருக்கிறது. ஓரளவு சேறும் சகதியுமாய்க் கிடக்கும் கிடங்கு ஒன்றில் இரண்டு குவளை மலர்கள் தப்பிப்பிழைத்துக்கொண்டிருக்கின்றன. காலையில் அவை தம் மீது படிந்திருக்கும் பனித்துளிகளைக் குளத்தில் சொரிவது, அற்றுக்கொண்டிருக்கும் அந்தக் குளத்தை அவை நிறைக்க முயலுவது போல் இருக்கிறது என்கிறார் புலவர். இதை ஓர் உவமையாக மட்டும் காட்டாமல் ஓர் உருவகக் காட்சியாகவே விவரிக்கிறார் புலவர். மலர்கள் கண்களுக்கு உவமை. பனித்துளிகள் கண்ணீர்த் துளிகளுக்கு உவமை. இரு துளிகளும் சொரிகின்றன. இது போதுமே! பின்னர், மலர்த்துளிகள் அறுகுளத்தை நிறைப்பது போல என்று சொல்வது எதற்காக? அப்படியென்றால் அறுகுளம் எதற்கு உவமை. நிறைப்பது எதனைக் குறிக்கிறது? புலவர் நிறையப் பொடிவைத்துக் கூறியிருக்கிறார். கண்ணிலிருந்து சொரியும் நீர் எதன் மீது விழும்? படுத்துக்கொண்டு அழுதால் கண்ணீர் தலையனையில் விழும். தலையணைதான் அறுகுளமா? இதில் சிறப்பு இல்லை. தலைவிக்குப் படுக்க மனமில்லை. எனவே கால்நீட்டி அமர்ந்து, பின்னால் மதிலில் சாய்ந்து, தலையைச் சிறிதளவே அண்ணாந்து வைத்துக்கொண்டிருக்கிறாள். சொட்டுச் சொட்டாய் வடியும் கண்ணீர் அவளின் மார்பு மீது விழுந்து சற்று நேரம் அங்கேயே நிற்கிறது. அடுத்த துளி அதன்மீது விழுந்தால்துளி பெரிதாகிக் கீழே உருண்டோடும். ஆனால் அதற்கு முன்னர், உடலின் வெம்மையால், காதல் தவிப்பினால் தகிக்கின்ற மேனியால், முதல் துளி காய்ந்துபோகிறது. அடுத்தடுத்து வரும் துளிகளுக்கும் அந்த நிலையே. அவ்வாறு மார்பை நனைத்து, நனைத்து மார்பையே நிறைக்க முயலுகின்றவாம் அந்தக் கண்ணீர்த்துளிகள். மார்புக்குள் என்ன இருக்கிறது? இதயம் அன்றோ!. இதயத்துக்குள் என்ன இருக்கிறது? இனிய நினைவுகள். இப்போது தனிமையினால் அந்த இனிமை அற்றுப்போய்க்கொண்டிருக்கிறது. பனித்துளிகளால் குளம் நிறையுமா? பாழாய்ப்போன கண்ணீரால் இதயம் நிறையுமா? இதைத்தான் உருவகக் காட்சியாய்ப் புலவர் அடுத்தடுத்த உவமைகளால் விவரிக்கிறார். அதென்ன பாழாய்ப்போன கண்ணீர்? கண்கள் என்ன பாவம் செய்தன – கண்ணீரைச் சொரிவதற்கு? இது தலைவன் தந்த தனிமைத் துயரால் வந்தது அன்றோ?. அதற்கு இந்தக் கண்கள் என்ன செய்யும்? எனவேதான் பழிதீர் கண் என்கிறார் புலவர். கணவன் செய்த குற்றத்துக்காக அழுகின்ற இந்தக் கண்கள் குற்றமற்றவை என்பதைக் குறிக்கவே இவ்வாறு கூறுகிறார் புலவர்.
இவ்வாறு சொல்லாலும் பொருளாலும் சுவைசேர்த்த இந்த அமுதம், ‘போதும், போதும்’ என்று சொல்லாத அளவுக்குத் திகட்டாத தேனமுதமாய் இனிப்பதில் வியப்பில்லை.