துறை – (1)தோழி தலைமகன் குறை கூறியது.
(2)பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியதுமாம்,
(3)தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉமாம்.
மரபு மூலம் – பைதலன் பெயரலன் கொல்லோ
விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்
தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்
அஞ்சிலை யிடவ தாக வெஞ்செலற்
கணைவலந் தெரிந்து துணைபடர்ந் துள்ளி
வருதல் வாய்வது வான்றோய் வெற்பன்
வந்தன னாயி னந்தளிர்ச் செயலைத்
தாழ்வி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்
றூசல் மாறிய மருங்கும் பாய்புட
னாடா மையிற் கலுழ்பில தேறி
நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலங்
கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை
மடக்கிளி யெடுத்தல் செல்லாத் தடக்குரற்
குலவுப் பொறை யிறுத்த கோற்றலை யிருவி
கொய்தொழி புனமும் நோக்கி நெடிதுநினைந்து
பைதலன் பெயரலன் கொல்லோ ஐதேய்
கயவெள் ளருவி சூடிய வுயர்வரைக்
கூஉங்கண் ணஃதெம் மூரென
வாங்கதை யறிவுறல் மறந்திசின் யானே
சொற்பிரிப்பு மூலம்
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்
அம் சிலை இடவது ஆக வெம் செலல்
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன்
வந்தனன் ஆயின் அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை
மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக் குரல்
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு
அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
கூஉம் கண்ணஃது எம் ஊர் என
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே
அருஞ்சொற் பொருள்:
வேங்கை – Indian kino tree, pterocarpus bilobus/marsupium, செயலை – அசோக மரம், uvaria longifolia, saraca asoca;
நீலம் – கருங்குவளை, blue nelumbo; வண் பறை = வளமிக்க சிறகுகள்; குரல் = தினைக் கதிர்; குலவு = வளைந்த;
பொறை = பாரம்; இறுத்த = அறுத்த, முறித்த; இருவி = பயிர்களின் அடிக்கட்டை; பைதலன் = துன்பமுடையவன்;
ஐ = அழகு; அயம் = சுனை;
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
தினைப்புனக் காதல் கதை இது. தினைப்புனத்தில் காவல் காக்கச் சென்ற தலைவியைச் சந்தித்துக் காதல்கொள்கிறான் மலைநாட்டுத் தலைவன். ஒருநாள் அல்ல, இருநாள் அல்ல, பலநாள் சந்தித்துப் பலவிதமாய் மகிழ்ந்து இருக்கிறார்கள் – ஊஞ்சலில் ஆடி – சுனையினில் நீராடி – அந்தத் தினைப்புனம் முழுக்கச் சுற்றிசுற்றி வந்து களித்திருக்கிறார்கள். பொதுவாகக் காதலர்க்குப் பொழுது போவதே தெரியாது – இவர்களுக்கோ நாட்கள் சென்றதுவும் தெரியவில்லை. தினைக்கதிர் முற்றி அறுப்புக்கும் வந்துவிடுகிறது. திடீரென ஒருநாள் அவள் வீட்டில் இருத்தப்படுகிறாள். இனி அவளுக்குப் புனத்தில் வேலை இல்லை. எனவே அவளால் புனத்துக்குச் செல்லமுடியவில்லை. அவளைச் சந்திக்க வரும் தலைவன் தட்டையாய் நிற்கும் தினைத் தாள்களையும், மொட்டையாய் நிற்கும் தினைப்புனத்தையும் பார்த்து ஏமாந்துபோவானே என்று தலைவி தவிக்கிறாள். அவனுடன் நேரத்தைக் கழித்த மகிழ்ச்சியில், அவளது வீடு இருக்கும் ஊர் எதுவென்றுகூட அவனிடம் தெரிவிக்க மறந்துவிட்டாள். இதை எண்ணி தன்னைத்தானே நொந்துகொள்ளும் தலைவியின் கூற்றாக அமைகிறது இப் பாடல்.
எனினும் தலைவனைச் சீக்கிரமாய் மண ஏற்பாடுகளைச் செய்யுமாறு தூண்ட, தோழி தலைவியிடம் தலைவனுக்குக் கேட்கிற மாதிரி கூறுவதாக இதன் துறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்
விரிஇணர் வேங்கை வண்டுபடு கண்ணியன்
தெரிஇதழ்க் குவளைத் தேம்பாய் தாரன்
அம்சிலை இடவது ஆக வெம்செலல்
கணைவலம் தெரிந்து துணைபடர்ந்து உள்ளி
வருதல் வாய்வது வான்தோய் வெற்பன் 5
மலர்ந்த கொத்துக்களை உடைய வேங்கைப்பூவால் செய்த, வண்டுகள் மொய்க்கும் கண்ணியன்-
ஆய்ந்தெடுத்த இதழ்களையுடைய குவளை மலர்களால் ஆன தேனொழுகும் மாலையன் –
அழகிய வில் இடக்கையது ஆக, கடிதாய்ப் பறக்கும்
அம்பினை வலக்கையில் தெரிந்துகொண்டு, காதலியை அடைய எண்ணி
வருவது (இன்றும்)நடக்கும் – அந்த வானளாவிய மலைநாட்டவன்
தலைவன் தன்னைச் சந்திக்க இன்றும் வருவானே என்று அங்கலாய்க்கிறாள் தலைவி. அவனும் மலைநாட்டவன்தான். ஆனால் அவனது மலை தானிருக்கும் மலையினும் மிகப் பெரியது என்று பெருமையுடன் கூறுகிறாள் தலைவி (வான்தோய் வெற்பன்). தலைவனின் ஊர் எங்கிருக்கிறது என்று கேட்டுத் தெரிந்திருக்கிறாள் அவள். ஏனோ அவள் மட்டும் தனது ஊர் இருக்குமிடத்தைக்
கூறவில்லை – அவனாகக் கேட்டால் கூறலாம் என்று இருந்துவிட்டாளோ என்னவோ! அவனும் கேட்கவில்லை. இது அவனது தவறுதானே. அதனால்தான் தோழி தலைமகன் குறை கூறியது என்ற துறை இதற்கு வகுக்கப்பட்டுள்ளது.
கண்ணி என்பது தலைக் குடுமியில் அதைச் சுற்றிலும் வளைத்துச் சூடுவது. அதில் இன்னும் வண்டுகள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன. தார் என்பது கழுத்தில் அணிவது. நல்ல இதழ்களைக் கொண்ட குவளைமலர்களாகப் பார்த்துத் தெரிந்தெடுத்து கழுத்தில் சூடிக்கொண்ட மாலையிலிருந்து இன்னும் தேன் ஒழுகிக்கொண்டிருக்கிறது. கண்ணியும் தாரும் புதுக்கருக்கு மாறாதவை என்ற செய்தியால் பெறப்படுவது அவனும் பக்கத்து ஊர்க்காரன்தான். அவன் வந்து நின்ற கோலம் இன்னும் அவள் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. விரி இணர் வேங்கைக் கண்ணியன் – தேம்பாய் குவளைத் தாரன் – அழகு வில் இடதுகையில் – தெரிந்து கொண்ட கணை வலக்கையில் – நேற்று வந்தது போலவே இன்றும் வருவான் – அந்த வானைத் தொடும் வெற்பைச் சேர்ந்தவன் – அது உறுதி.
வந்தனன் ஆயின் அம்தளிர்ச் செயலைத்
தாழ்வுஇல் ஓங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று
ஊசல் மாறிய மருங்கும் பாய்புடன்
ஆடா மையின் கலுழ்புஇல தேறி
நீடுஇதழ் தலைஇய கவின்பெறு நீலம் 10
கண்என மலர்ந்த சுனையும் வண்பறை
மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்
குலவுப் பொறை இறுத்த கோல்தலை இருவி
கொய்துஒழி புனமும் நோக்கி —————
அவ்வாறு அவன் வந்தால், அழகிய தளிர்களை உடைய அசோக மரத்தின்
தாழ்வாக இல்லாமல் நீண்டிருக்கும் கிளையில் கட்டிய, கீழிறங்கும் கயிற்றின்
ஊஞ்சல் இல்லாமல்போன இடத்தையும், (நீரில்)பாய்ந்து ஒன்றாக
விளையாடாததினால் கலங்கல் இல்லாமல் தெளிந்து,
நீளமான இதழ்களைக் கொண்ட அழகுபெற்ற நீலப்பூக்கள்
கண் போல மலர்ந்துகிடக்கும் சுனையையும், வளவிய சிறகுகளையுடைய
இளங்கிளிகள் தூக்கிச் செல்ல முடியாத பெரிய கதிர்களின்
வளைந்த பாரத்தை அறுத்துவிட்ட தட்டைகளே தலையாய்க் கொண்ட அரிதாள்களைக்கொண்ட
அறுவடை முடிந்த தினைப்புனத்தையும் பார்த்து –
அவன் முதன்முதலில் அங்கு வந்தபோது தலைவி ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள். இன்று அவன் வந்ததும், பலகை இல்லாமல் வெறும் கயிறுகள் மட்டுமே தொங்கியவண்ணம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்ப்பானே! செயலை என்ற அசோகமரம் தளிர்விடும் காலம். அந்த மரத்தில் தாழ்வான கிளைகள் வெட்டிவிடப்பட்டுள்ளன. கிளைகள் தாழ்வாகப் படர்ந்து இருந்தால் தினைப்புனத்தின் தட்டைகளை உரசி உரசி அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் அல்லவா! எனவே, அடிமரத்துக் கிளைகள் இல்லாத அசோக மரம் அது. தாழ்வு இல் ஓங்கு சினை என்ற தொடர் தாழ்வாக இல்லாமல் உயரமாக இருக்கும் கிளை என்று பொருள்கொள்ளப்படுகிறது. தாழ்வாக இல்லாத கிளை என்றாலே உயரமாக இருக்கும் கிளை என்றுதானே பொருள்? எனவே இங்கு ஓங்கு சினை என்பது நீண்டிருக்கும் கிளை எனக் கொள்ளப்படுகிறது. நீண்ட கிளையில்தானே ஊஞ்சல் கட்டமுடியும்? அறுவடை முடிந்துவிட்டதால் இனி ஆடுவதற்கு அங்கு ஆட்கள் வரமாட்டார்கள் அல்லவா! எனவே, கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் பலகையை அவிழ்த்துக்கொண்டுபோய்விட்டார்கள். வெறும் கயிறு மட்டும் காற்றுக்கு ஆடிக்கொண்டிருக்கிறது.
தான் ஊக்கி ஊக்கித் தள்ள, உயர உயர எழும்பி ஆடிய தலைவியைக் காணாமல் அவன் அந்த வெறும் கயிற்றைப் பார்த்து வெம்பிப்போகமாட்டானா?
அப்படிப் பார்க்கும்போது அருகில் உள்ள சுனையைக் கண்டு, ஒருவேளை அங்கு இருப்பாளோ தலைவி என அங்கும் போய்ப் பார்க்கமாட்டானோ? தலைவி முதலில் நீருள் பாய, அவள் பின்னாலேயே அவனும் உடன் பாய்ந்து இருவரும் சுனைநீரையே ஒரு கலக்குக் கலக்குவார்களே அதை எண்ணிப்பார்க்கமாட்டானோ? இன்று அந்தச் சுனை கொஞ்சங்கூடக் கலங்காமல் மிகத் தெளிவாக இருப்பதைப் பார்த்து அவன் கலங்கிப்போகமாட்டானோ? அங்கு பூத்திருக்கும் நீலமலர்களைப் பார்த்து, இந்த மலர்களைப் போன்றவை உன் கண்கள் என்று அன்று போற்றினானே, இன்று என் கண்களைப் போல மலர்ந்திருக்கும் அந்த மலர்களைப் பார்த்து என் கண்களைத் தேடமாட்டானா?
விடியற்காலையிலேயே ஆட்கள் சென்று தினைக் கதிர்களைக் கொய்து குவித்துவிட்டு வந்திருப்பர். கொய்யப்பட்ட தினைக் கதிர்களைக் கொத்தித்தின்ன வரும் கிளிகளை ஆட்கள் விரட்ட, அந்தக் கதிர்களைத் தூக்கிச் சென்றுவிடலாமே என முயன்று தோற்றுப்போகும் கிளிகள் – அந்த கிளிகள் என்ன நோஞ்சான் கிளிகளா? – இல்லை – நல்ல செழுமையான சிறகுகள் கொண்டவை (வண்பறைக் கிளி) – வயதான கிழட்டுக் கிளிகளா? – இல்லை இளம்கிளிகள் (மடக்கிளி ). அந்த அளவுக்குக் கிளிகளும் தூக்கிச் செல்ல முடியாத அளவுக்கு பெரிய முரட்டுக் கதிர்கள் (கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல்) – நன்றாக முற்றித் தம் பாரத்தினாலேயே வளைந்துகிடப்பவை (குலவுப் பொறை ). இந்தக் கதிர்கள் அறுக்கப்பட்ட பின்னர் வெறும் தட்டைக்குச்சியாய் நிற்கும் அரிதாள்கள் (தடக்குரல் .. இறுத்த கோல்தலை இருவி). இவ்வாறு அறுவடை முடிந்து அழகிழந்து நிற்கும் அந்த தினைப்புனத்தையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கமாட்டானோ (கொய்துஒழி புனமும் நோக்கி) என் தலைவன்?
———— ————— ————- நெடிதுநினைந்து
பைதலன் பெயரலன் கொல்லோ ————– 15
நீண்ட நேரம் நினைத்துக்கொண்டே இருந்து
துயருற்றவனாய்ப் பெயர்வானல்லனோ!
திரும்பிப்போக மனமில்லாமல் நீண்ட நேரம் அங்கேயே நின்றுகொண்டிருப்பானே என் தலைவன்!
மனம் என்ன வேதனைப்படுமோ? எப்படித்தான் அந்த இடத்தைவிட்டு அகலப்போகிறானோ?
———– ————— ————- ஐதேய்கு,
அயவெள் அருவி சூடிய உயர்வரைக்
கூஉம்கண் ணஃதுஎம் ஊர்என
ஆங்குஅதை அறிவுறல் மறந்திசின் யானே
என் அழகு தேய்ந்துபோகட்டும்!
சுனையிலிருந்து வரும் வெள்ளிய அருவியை உச்சியில் கொண்ட உயர்ந்த மலையில்
கூப்பிடுதூரத்தில்தான் உள்ளது எம் ஊர் என்று
அப்பொழுதே அதனை அறிவுறுத்தலை மறந்துவிட்டேனே நான்!
தன்னைத்தானே சபித்துக்கொள்கிறாள் தலைவி (ஐ தேய்கு). தினைப்புனத்தைச் சுற்றிலும் பல மலைகள் இருந்தாலும், உச்சியில் உருக்கிவிட்ட வெள்ளியாய் விழும் அருவியைக் காட்டி, “இதோ அங்கேதான் இருக்கிறது என் ஊர், கூப்பிடுதூரம்தான்” என்று சொல்லித்தொலைக்க மறந்து போச்சே! அடையாளம் காண்பதுவும் எளிது (அருவி சூடிய உயர்வரை); சென்று அடைவதுவும் எளிது (கூஉம்கண்ணஃது).
அந்த நேரத்தில்கூடத் தலைவிக்குத் தலைவனைக் குறைசொல்ல மனமில்லை. “இத்தன நாள் வந்துட்டுப்போனானே! ‘ஒம் வீடு எங்க இருக்கு’-னு ஒரு வார்த்த கேட்டானா பாவி?” என்று அவள் கூறவில்லை. அவன் சார்ந்த மலை எதுவென்று கேட்டுத் தெரிந்துகொண்ட அவள் (வான்தோய் வெற்பன்), ‘எங்க மலை இதுதான்’ என்று சொல்ல மறந்துபோய்விட்டது என்று தன்னைத்தான் நொந்துகொள்கிறாள்.
விரி இணர் வேங்கை
வேங்கை மரம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளைவது. மிகச் சிறிய மஞ்கள் நிறப் பூக்களை உடையது. இது ஜூன் முதல் அக்டோபர் முடிய பூக்கும் என்பர். அக்டோபர் இறுதி ஐப்பசி மாதத் தொடக்கம். அதுவே கூதிர்காலத் தொடக்கம். இது குறிஞ்சித் திணைக்கு உரியது. எனவே இங்கு குறிக்கப்படும் வேங்கைப் பூ பூக்கும் பருவத்தின் இறுதிக்காலத்தில் பூத்திருப்பது. இம் மரம் கொத்துக் கொத்தாகப் பூக்கும். கொத்திலுள்ள சிறிய பூக்கள் அனைத்துமே மலர்ந்திருக்கும் காட்சியையே விரி இணர் என்கிறார் புலவர்.
நன்கு விளைந்த ஒரு வேங்கை மரத்தின் அடிமரத்தின் உட்பகுதியில் (வைரம் பாய்ந்த பகுதி) ஒரு சிறிய துண்டு எடுத்து, அதை ஒரு குவளை (டம்ளர்) போலக் குடைந்து அதில் நீர் ஊற்றி, இரவு முழுக்க வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைத் தொடர்ந்து குடித்தால் நீரிழிவு நோய் குணமாகும் என்பர். இப்படி உள்மரமும் கசக்கும்போது, அதன் பூவில் உள்ள தேன் இனிக்கவா செய்யும்? வேங்கைப் பூவைத் தேனீக்கள் மொய்க்குமா? நம் பாடல் தலைவன் சூடியுள்ள வேங்கைக் கண்ணியில் வண்டுகள் மொய்க்கின்றன என்கிறார் புலவர். அந்தக் காலத்தில் neem tooth paste என்று ஒன்று இருந்தது. கசக்கும். அப்படியிருந்தும் பலர் அதைக் கொண்டு பல் தேய்ப்பர். இன்றும் வேப்பங்குச்சியில் பல் துலக்குவோர் உண்டு. நாம் பாகற்காய்க் குழம்பு சாப்பிடுவது போல தேனீக்களும் வேங்கைத்தேன் உண்டிருக்குமோ?
சிலை இடவதாக – கணை வலம் தெரிந்து
தலைவன் தன் வில்லை இடதுகையில் பிடித்திருக்கிறான். தெரிந்தெடுத்த ஓர் அம்பை வலது கையில் கொண்டிருக்கிறான். தோளில் வில்லும், அம்பறாத்தூணியில் அம்பும் வைத்துக்கொண்டு தலைவன் சாதாரணமாக (casual) வரவில்லை. அவன் மலைகளையும், காடுகளையும் கடந்து வருவதால் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு வருகிறான். அவ்வாறு வருவது வேட்டையாட அல்ல. துணை படர்ந்து உள்ளி. இத்துணை ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல் வருகின்ற அவன், தன்னைக் காணாவிட்டால், நெடிது நினைந்து பைதலன் பெயரலன் கொல்லோ என்று தலைவி உருகுவது நியாயம்தானே.