துறை – வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது
மரபு மூலம் – உடைமதில் ஓரரண் போல .. துஞ்சாதேனே
வாட லுழுஞ்சில் விளைநெற் றந்துண
ராடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக்
கோடை நீடிய வகன்பெருங் குன்றத்து
நீரிலா ராற்று நிவப்பன களிறட்
டாளி லத்தத் துழுவை யுகளுங்
காடிறந் தனரே காதலர் மாமை
யரிநுண் பசலை பாஅய்ப் பீரத்
தெழின்மலர் புரைதல் வேண்டு மலரே
யன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
தொன்னிலை முழுமுதற் றுமியப் பண்ணிப்
புன்னை குறைத்த ஞான்றை வயிரிய
ரின்னிசை யார்ப்பினும் பெரிதே யானே
காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்
தாதி மந்தி போலப் பேதுற்
றலந்தனெ னுழல்வென் கொல்லோ பொலந்தார்க்
கடல்கால் கிளர்ந்த வென்றி நன்வேல்
வான வரம்ப னடல்முனைக் கலங்கிய
வுடைமதி லோரரண் போல
வஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே
சொற்பிரிப்பு மூலம்
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடு_களப் பறையின் அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே காதலர் மாமை
அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
தொல் நிலை முழு_முதல் துமியப் பண்ணிப்
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
ஆதிமந்தி போலப் பேது உற்று
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார்க்
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல்
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
உடை மதில் ஓர் அரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே
அருஞ்சொற் பொருள்:
உழிஞ்சில் = வாகை (மரம்) Albizia lebbeck, Mimosa lebbeck – Womans tongue, Siris-tree; துணர் = கொத்து;
அரிப்பன = விட்டு விட்டு ஒலிப்பன; அட்டு = கொன்று; அத்தத்து = ஆளரவம் அற்ற பாதையில்; உழுவை = புலி;
உகளும் = ஓடித்திரியும்; அரி = மெல்லிய; பசலை = அழகுத்தேமல்; பீரத்து = பீர்க்கின்; அலர் = ‘கிசுகிசு’;
துமிய = துண்டாக; பொலம் = பொன்; அடல் = வலிமை; வயிரியர் = கூத்தர்;
பாடலின் பின்புலமும் பாடல் சுருக்கமும்
வெளியூர் சென்றிருந்த தலைவன் வெகுநாட்களாகியும் வீடு திரும்பவில்லையே என்ற கவலையுடன் இருக்கிறாள்
தலைவி. “கவலையே வேண்டாம், குறித்த காலத்தில் தலைவர் வந்துவிடுவார்” என்று பலவாறாகத் தலைவியிடம் உறுதிபடக்
கூறுகிறாள் தோழி. எனினும் தலைவி முதலில் தலைவன் சென்ற கடினமான பாதையையும், அதில் நேரக்கூடிய தீங்குகளையும்
எண்ணி மறுகுகிறாள். அடுத்து, அவனது பிரிவால் மெலிந்துபோய்விட்ட தன் மேனியையும் அதற்குரிய காரணம்
என்னவாயிருக்கும் என்று ஊரார் ஆளாளுக்குப் பேசும் ஏளனப் பேச்சையும் எண்ணி கவலையுறுகிறாள். ஒருவேளை
தலைவன் வராமலே போய்விட்டால் அவனை எங்கெங்கே போய்த் தேடுவது – ஆற்றுவெள்ளம் ஒரு காதலனை
அடித்துக்கொண்டு சென்றுவிட, அவனது காதலியாகிய ஆதிமந்தி கரையோரமாகவே சென்று அவனைத் தேடித்திரிந்தது போலத்
தன் பிழைப்பும் ஆகிவிடுமோ என்று தலைவி அஞ்சுகிறாள். இந்த மயக்கத்தையும், கவலையையும், அச்சத்தையும் வெளிப்படுத்தும்
அழகுமிக்க கவிதை இது.
அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்
வாடல் உழுஞ்சில் விளைநெற்று அம்துணர்
ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக்
கோடை நீடிய அகன்பெரும் குன்றத்து
நீர்இல் ஆர்ஆற்று நிவப்பன களிறுஅட்டு
ஆள்இல் அத்தத்து உழுவை உகளும்காடு இறந்தனரே காதலர்
உலர்ந்த வாகைமரத்திலுள்ள விளைந்த நெற்றுக்களின் கொத்து
ஆடுகளத்தில் (ஒலிக்கும் கழைக் கூத்தர்களின்) பறையினைப் போல் விட்டுவிட்டு ஒலிக்கும்
கோடைக்காலம் நீடித்திருக்கும் அகன்ற பெரிய குன்றில்
நீரற்று இருக்கும் அரிய வழியில் நிமிர்ந்துவரும் களிற்றினைக் கொன்று
போய்வருவோர் இல்லாத கிளைவழிகளில் புலிகள் புரண்டுவிளையாடும்
பாலைக் காட்டைக் கடந்துதான் காதலர் சென்றிருக்கிறார் —
‘சுளீர்’என அடிக்கும் உச்சி வெயில். சுற்றுவட்டாரத்தில் கண்ணுக்கெட்டிய வரை யாரையும் காணோம். உயர்ந்த மரங்கள் இருந்தாலும் ஒதுங்குவதற்கு நிழல் அங்கு இல்லை. காய்ந்துபோன வாகை மரத்துக் கிளைகளில் உலர்ந்துபோன நெற்றுகள் கொத்துக் கொத்தாய்த் தொங்கிக்கொண்டிருக்கின்றன. காற்றடிக்கும்போது அவை கூட்டமாக ஆட, அந்த நெற்றுகள் ஒன்றோடொன்று உராய்வதால் ‘சலசல’வென்ற ஓசையை எழுப்புகின்றன. அதே நேரத்தில் நெற்றுகளின் சுருங்கிய தோல்களுக்குள் இருக்கும் சின்னஞ்சிறு குழிவுகளுக்குள் இருக்கும் முத்து முத்தான விதைகள் உள்ளுக்குள்ளேயே குலுங்குவதால் அவை ‘கலகல’வென்ற ஓசையை எழுப்புகின்றன. விட்டுவிட்டு காற்றடிக்க அந்த நெற்றுகள் விட்டுவிட்டு எழுப்பும் ஒலி, கழைக்கூத்தாடிகளின் ஆட்டத்தின்போது, பறையடிப்போர் விட்டுவிட்டு விரைவாக பறை முழக்கும்போது எழும் ஓசையைப்போல் கேட்கிறது.
அரித்து எழும் ஓசை என்பது தவளை எழுப்பும் ஓசையைப் போன்றது என்பர். அரி என்பது கிராமங்களில் காணப்படும் உறுமிக் கொட்டின் ஒலி போன்றது. அடிப்பக்கம் தட்டையாக உள்ள ஒரு வளைவான கோலை, பறையின் ஒரு பக்கத்தில் பக்கவாட்டில் இழுத்து இழுத்துத் தேய்த்து எழுப்ப எழும் ஒலி இது. அடுத்த பக்கத்தில் ஒரு நீண்ட கோலால் விரைவாக அடித்து ஒலி எழுப்புவர். தவளையின் அரிக் குரலைக் கேட்க இங்கே சொடுக்கவும்.
சங்க இலக்கியங்களில் அரிக்குரலும் ஆடுகளப் பறையும் பரவலாகப் பேசப்படுகின்றன.
———– —————- —————— ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. – குறு 7
——————- —————– ———– வியலூர்ச்
சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறூர் பாணியின் ————– —————- குறிஞ்சிப்பாட்டு 191- 194
ஒரு யானை ஒரு நாளைக்குச் சராசரியாக 80 லிட்டர் நீர் அருந்துமாம். எனவேதான் யானைக்கூட்டம் நீரைத் தேடி காடுகளில் நெடும்பயணம் மேற்கொள்கிறது. கோடைக் காலம் முடிந்தும் வறட்சி நீடித்துச் சென்றதால் (கோடை நீடிய) நீரே அற்றுப்போன (நீர்இல் ஆர் ஆற்று) அந்த அகன்றுயர்ந்த மொட்டைமலை வெளியில் (அகன்பெரும் குன்றத்து) ஆர்வத்துடன் அங்குமிங்கும் நீரைத்தேடி அலைகிறது ஒரு யானைக்கூட்டம். தலையை நிமிர்த்தி அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு அவசரமாகச் செல்லும் யானைக்கூட்டத்தை நிவப்பன களிறு என்கிறார் புலவர்.
அப்படி வரும் யானைகளில் ஒன்றைக் குறிபார்த்துத் தாக்கி வீழ்த்துகிறது ஓர் உழுவை – புலி. வீழ்ந்த யானையைத் தன் குடும்பத்துடன் கூட்டுணவு உண்கிறது புலி. மற்ற விலங்குகளும் பறவைகளும் மெதுவாகக் கிட்டே வருகின்றன. அவற்றுக்குள் போட்டிவேறு! அந்தக் கலவர பூமியில் இருக்கப்பிடிக்காமல் உண்டு முடித்த புலிக்குடும்பம் ஒதுங்கிச் செல்கிறது. ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு கிளைப்பாதையில் (ஆள்இல் அத்தத்து) பெற்ற புலிகள் படுத்திருக்க, குட்டிகள் அவற்றின் மீது புரண்டுகொண்டும் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டும் விளையாடிக்கொண்டிருக்கின்றன(உழுவை உகளும்).
வறட்சியைத் தாங்கும் வாகை மரமும் வாடலாய் நிற்கிறது (வாடல் உழுஞ்சில்). பூத்துக் குலுங்கும் மரம் பொலிவிழந்து நெற்றுகளை மட்டும் ஆட்டிக்கொண்டிருக்கிறது. குன்றமோ அகன்று நீண்டது. ஆனால் வழியெல்லாம் நீரின்றி வறண்டுகிடக்கிறது. பெரு வழிகளில் யானைக்கூட்டங்கள் நீர்தேடி அலைந்துகொண்டிருக்கின்றன. அவற்றை வேட்டையாடிய புலிகள் குறும்பாதைகளில் கொட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. “இதுதான் என் ‘அவர்’ சென்ற பாதை. (காடு இறந்தனரே காதலர்) எனக்கு எப்படித் தூக்கம் வரும்?” எனக் கலங்குகிறாள் தலைவி.
————— ————— ————– மாமை
அரிநுண் பசலை பாஅய்ப் பீரத்து
எழில்மலர் புரைதல் வேண்டும், அலரே
அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிப் 10
புன்னை குறைத்த ஞான்றை வயிரியர்
இன்இசை ஆர்ப்பினும் பெரிதே
———————— எனது மாமை நிறமானது
மெல்லிய நுண்ணிய பசலை பரத்தலால், பீர்க்கின்
அழகிய மலரைப் போன்று மாறிவிட்டது. ஊர்மக்கள் பேச்சோ
அன்னி என்பவன், குறுக்கை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பானின்,
நெடுங்காலம் நின்றிருக்கும் அடிமரத்தை வெட்டச் செய்து,
அந்தப் புன்னை மரத்தை மொட்டையாக்கிய போது, கூத்தர்கள்
(எழுப்பிய) இன்னிசையின் ஆரவாரத்தினும் பெரிதே
“நான் தூங்காமல் தவிப்பதற்குத் தலைவன் சென்ற காட்டுவழியின் தீங்குகள் மட்டுமா காரணம்?” என்று தொடர்ந்து புலம்புகிறாள் தலைவி. தலைவனின் பிரிவால் ஏற்பட்ட ஏக்கத்தால் சரியாக ஊணுறக்கம் இழந்த தலைவியின் ‘தளதள; மேனி மெலிந்து வாடியதும் இல்லாமல் மேனியின் நிறமும் வெளுத்துப் போனது. மாந்தளிர் போன்ற மாமை நிறத்துடன் மின்னிய மேனி(மாமை), பசலை பாய்ந்து படப்பையின் பீர்க்கம் பூவைப் போல் பழுப்பேறிப் போனது (அரிநுண் பசலை பாஅய்ப் பீரத்து எழில் மலர் புரைதல் வேண்டும்). ஊர் வாய் சும்மா இருக்குமா? (அலரே பெரிதே) “எவன் தவிக்கவிட்டுட்டுப் போனானோ பாவி, இவ இப்படி ஓடாத் தேஞ்சு உருக்கொலஞ்சு போயிட்டா”.
“ஏண்டி, ஒனக்குத் தெரியுமா? அந்தக் குறுக்கையில சண்ட (அன்னி குறுக்கைப் பறந்தலை) நடந்துச்சே – இந்த அன்னிக்கும் திதியனுக்கும்? அதுல நம்ம அன்னி கெலிச்சுட்டானாம், கெலிச்சு, அந்தத் திதியன் வீட்டு வாசல்ல இருந்த காவ மரத்த தூரோட தொலச்சுப்புச்சாடானாம்” (திதியன் தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி புன்னை குறைத்த)தலைவியின் கவனத்தைத் திருப்ப தோழி வேறு செய்தி கூறுகிறாள்.
“அதான், என்னக் கெலிச்ச என் ராசா, என்னை விட்டுட்டுப் போயி, என் மேனியை இப்படி உருக்குலச்சிட்டாரேடி- அத விடவா?”. தலைவி தன் நிலையில் மாறவில்லை.
தோழி அசரவில்லை. “மரத்த வெட்டுனவுடனே கூட இருந்தவங்க எல்லாம் கொலவ போட்டு, கொட்டு அடிச்சி, ‘கோ’-ன்னு கூவியிருக்காங்க” (ஞான்றை வயிரியர் இன்னிசை ஆர்ப்பின்)
“இங்க என் தலயப்போட்டு இந்த ஊர்க்காரிக உருட்டுற உருட்டும், எளக்காரமா பேசுற பேச்சும் அதக் காட்டிலும் பெருசா இருக்கேடீ.” (அலரே .. ஆர்ப்பினும் பெரிதே)
இப்படியே நினைத்துக்கொண்டு இருக்கும் தலைவிக்கு எப்படித் தூக்கம் வரும்?
————— —————— —————– யானே
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து,
ஆதிமந்தி போலப் பேதுற்று,
அலந்தனென் உழல்வென் கொல்லோ! பொலம்தார்க் 15
கடல்கால் கிளர்ந்த வென்றி நல்வேல்
வான வரம்பன் அடல்முனைக் கலங்கிய
உடைமதில் ஓர்அரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சா தேனே
—————– —————— —————— நான்
என் தலைவனைக் காணாமற்போக்கிய சிறுமையால் மனநோய் மிகுந்து
ஆதிமந்தி போல பித்துப்பிடித்து
துயரத்துள் மூழ்கித் திரிவேனோ! பொன் மாலை அணிந்தவனும்
கடலையே கலக்கிய வெற்றியை உடையவனும் நல்ல வேலினை உடையவனும் ஆகிய
வானவரம்பன் தாக்குமுனையில் கலங்கிய
உடைந்துபோன மதிலைக் கொண்ட ஒரே அரணைப் போல
அச்சமெனும் பிணியோடு தூங்காமல் கிடக்கின்றேன்.
ஆட்டன் அத்தி என்ற தன் கணவன் காவிரி வெள்ளத்தில் அடித்துக்கொண்டுபோகப்பட, கரைவழியே ஊர் ஊராகச் சென்று “என் கணவனைக் கண்டீரா?” என்று வீடு வீடாகக் கேட்டுத் தேடிக்கொண்டிருந்த ஆதிமந்தி என்ற பெண்ணைப் போலத் தானும் துன்பவெள்ளத்தில் மூழ்கிடவேண்டுமோ என்று தலைவி எண்ணி எண்ணி மாய்ந்துபோகிறாள். இனியும் அவளுக்கு எப்படித் தூக்கம் வரும்?
ஒரு நாட்டின் தலைநகருக்கு மூன்று வித அரண்கள் உண்டு. ஊரைச் சுற்றிக் காடாய் மண்டிக்கிடக்கும் முட்புதர்கள் நிறைந்த காவற்காடு. இதை மிளை என்பர். பகைவர் இதை அழித்து ஊடுருவி வருவது மிகக் கடினம். இந்த மிளையை அடுத்து நகரைச் சுற்றித் தோண்டப்பட்டிருக்கும் ஆழமான அகழி அடுத்த அரண். அகழியைத் தாண்டி ஊருக்குள் செல்ல தூக்கு பாலங்கள் அமைத்திருப்பர். போர்க்காலங்களில் இந்தப் பாலங்கள் உயர்த்தப்ப்பட்டுவிடும். முதலைகள் போன்ற நீர்வாழ் கொடிய விலங்குகள் நிறைந்த இந்த அகழியைத் தாண்டி ஊருக்குள் வருவது மிகக் கடினம். அகழியை ஒட்டி உயரமாகக் கட்டப்பட்டிருக்கும் கோட்டைச் சுவர் மூன்றாவது அரண். இதன் உச்சியில் இருக்கும் வீர்ர்கள் வில், வேல் முதலியவற்றைக் கொண்டு பகைவரை அண்டவிடாமல் துரத்துவர். காட்டை அழித்து, அகழியையும் தூர்த்துவிட்டான் பகைவன். இப்போது இருப்பது கோட்டை மதில் என்ற ஓர் அரண் மட்டுமே. அதன் மதிலையும் ஒரு பக்கம் தகர்த்துவிட்ட பின்னர் இருட்டிவிட்டதால் விடியட்டும் என்று பகைவன் வெளியே காத்திருக்கிறான். அந்த உடை மதில் ஓர் அரணுக்கு உள்ளே இருப்பவர்களுக்கு அன்று இரவு எப்படித் தூக்கம் வரும்? அதிலும்
வெளியே இருப்பவன் வானவரம்பனாயிருந்தால்? தன் நாட்டுக் கடல் வணிகரைக் கொள்ளையடித்த கடற்கொள்ளைக்காரர்களை அலற அலறத் தாக்கிக் கடலையே கலக்கியவன் அவன். அப்படிப்பட்ட பகைவன் உடைந்த கோட்டைக்கு வெளியே இருக்கும்போது உள்ளே இருப்பவர் தூங்கத்தான் முடியுமா? அந்த நிலையில் தான் இருப்பதாகத் தவித்துப் புலம்புகிறாள் தலைவி.
ஒரு தற்செயல் ஒற்றுமை
வாகை மரத்தில் ஏறக்குறைய அனைத்துக் காலங்களிலும் விளைந்த நெற்றுகள் தொங்கியவண்ணம் இருக்கும். காற்றடித்தால் அவை ‘கலகல’-வென்று சலசலத்த ஒலியை எழுப்பிவாறு இருக்கும். இதனால் அதற்கு ஆங்கிலத்தில் woman’s tongue என்று பெயர். தலைவன் சென்ற பின் தலைவி ஏங்கிப்போக, இங்கே ஊருக்குள் அலர் எழ ஆரம்பித்துவிட்டது. அவன் ஊரைவிட்டு நெடுந்தொலைவில் உள்ள காட்டைக் கடக்கும்போது, அங்கே வாகை ‘சலசல’-க்க, இங்கே பெண்களின் நா ‘சள சள’-க்கத் தொடங்கியது என எடுத்துக்கொள்ளலாமா?