துறை – தலைமகன் தோழியை வாயில் வேண்டி அவளால் தான் வாயில் பெறாது
ஆற்றாமையே வாயிலாகப் புக்குக் கூடியவன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மரபு மூலம் – புலத்தல் கூடுமோ தோழி
கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற
மீன்முள் ளன்ன வெண்கால் மாமலர்
பொய்தல் மகளிர் விழவணிக் கூட்டு
மவ்வயல் நண்ணிய வளங்கே ழூரனைப்
புலத்தல் கூடுமோ தோழி அல்கல்
பெருங்கதவு பொருத யானை மருப்பின்
இரும்புசெய் தொடியி னேர வாகி
மாக்கண் ணடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவையென மயங்கி
யானோம் மென்னவும் ஒல்லார் தாமற்
றிவைபா ராட்டிய பருவமு முளவே, இனியே
புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத்
திதலை அணிந்த தேங்கொள் மென்முலை
நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே
தீம்பால் படுதல் தாமஞ் சினரே, ஆயிடைக்
கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி மதவுநடைச்
செவிலி கையென் புதல்வனை நோக்கி
நல்லோர்க் கொத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற் கொத்தனம் யாமென மெல்லவென்
மகன்வயிற் பெயர்தந் தேனே அதுகண்
டியாமுங் காதலம் அவற்கெனச் சாஅய்ச்
சிறுபுறங் கவையின னாக உறுபெயல்
தண்துளிக் கேற்ற பலவுழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்தவற் கலுழ்ந்தே
நெஞ்சறை போகிய அறிவி னேற்கே
சொற்பிரிப்பு மூலம்
கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ தோழி அல்கல்
பெரும் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மாக் கண் அடைய மார்பு_அகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத்
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடைக்
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடைச்
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என்
மகன்வயின் பெயர்தந்தேனே அது கண்டு
யாமும் காதலம் அவற்கு எனச் சாஅய்ச்
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய்
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே
அருஞ்சொற் பொருள்:
பொய்தல் = மகளிர் விளையாட்டு; நண்ணிய = சேர்ந்த (be attached to); அல்கல் = அல்கலும் = ஒவ்வொரு நாளும்;
தொடி = பூண்; ஏர = அழகிய; மா = கரிய; ஓம் = ஓவும் என்பதன் இடைக்குறை, விலகும்; ஒல்லார் = உடன்படார்;
தடைஇ = சரிந்து; திதலை = அழகுத் தேமல்; சாந்து = சந்தனம்; கேழ் = நிறம்; அகலம் = மார்பு;
கவவுக்கை = அணைக்கும் கைகள்; மதவுநடை = ஆர்வ நடை; சாஅய் = பணிந்து; சிறுபுறம் = முதுகு;
கவை = சுற்றிவளை; கலுழ்ந்து = கலங்கி; அறைபோகிய = வஞ்சிக்கப்பட்ட.
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
மருதம் என்றாலே மணமான தம்பதியினரின் இல்லற வாழ்வும், அதில் உண்டாகும் பிணக்குகளும், அதன் பின் ஏற்படும் இணக்கமுமே இடம்பெறும். இந்தப் பாடலும் அவ்வகையைச் சார்ந்ததே. ஆனால், பொதுவாகச்
சங்க இலக்கியங்களில் காணப்படாத தலைவன் – தலைவி தனிமை இன்பக் காட்சிகளை இங்கே பெருவழுதிப் பாண்டியர் கொஞ்சம் தாராளமாகவே விவரிக்கிறார். இத்துணை தாராளம் வேறு பாடல்களில் உண்டா,
அல்லது இதுதான் அதற்கு மேல்வரம்பா என்பது போகப்போகத்தான் தெரியும்.
இப் பாடல் தலைவன் கொஞ்சம் கேளிக்கைப் பிரியன். தலைவனும் தலைவியும் திருமணமான புதிதில், காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ்சு யாமமும் விடியலும் இன்றிப் பொழுது இடை தெரியாவண்ணம் இனிய இல்லறம் நடத்துகின்றனர். தலைவி கருவுற்று ஒரு மகவையும் ஈன்றெடுக்கிறாள். தலைவனோ அப்போது வீட்டில் ‘கிடைக்காததை’ வெளியில் தேடித் திரிகிறான். தோழிக்கு இது தெரிந்து அவள் தலைவியிடம் கூறுகிறாள். தலைவன் வீட்டுக்கு வரும்போது ‘ஒரு பிடி பிடிக்க’ச் சொல்லுகிறாள். தலைவியும் கோபத்துடன் காத்திருக்கிறான். இதை உணர்ந்த தலைவன் முதலில் தோழியைப் பார்த்து ‘உள் நிலவரம்’ தெரிந்துகொள்ள முனைகிறான். தோழியோ, செவிலி கையில் குழந்தையைக் கொடுத்துவிட்டு, தோளை நொடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று மறைகிறாள். வேறு வழியில்லாமல் தலைவன் ‘சாட்சியின் காலைப் பிடிப்பதைவிடச் சண்டைக்காரன் காலைப் பிடிப்பது நல்லது’ என்று நேரே தனித்திருக்கும் தலைவியிடம் செல்கிறான். தலைவனின் நெருக்கத்தில் தன்னை மறக்கிறாள் தலைவி. வழக்கம்போல் தலைவன் அருகில் வந்து தன்னை அணைக்க வருவான் என்று ஆசையுடன் எதிர்நோக்கி இருக்கிறாள். அவனோ பால் சுமக்கும் அந்த மார்புகள் தன் மேல் பட்டுவிடுமோ என்று அஞ்சுவதுபோல் விலகி நின்ற வண்ணம் அவளை இலேசாகக் கைகளால் வளைக்கிறான். கைகளின் இறுக்கம் முன்பு போல் இல்லாததைக் கவனித்த தலைவி ஊடல் கொள்கிறாள். “இந்தக் கைக்கு என்னைப் பிடிக்குமா?, இதைக் காட்டிலும் எத்தனையோ நல்ல மேனிகளைத்தான் இதற்குப் பிடித்துப்போயிருக்கிறதே! எனக்கு என் குழந்தை போதும் – நான் அவனிடம் போகிறேன்” என்று பிணக்கம் கொண்டவள் போல் எழுந்து குழந்தை இருக்கும் இடத்துக்கு நடந்து செல்கிறாள். அது உண்மைக் கோபம் என்றால் எழுந்து ‘விடுவிடு’-வென்று போயிருப்பாள். அவள்தான் இவனிடன் மயங்கிப்போய்க் கிடக்கிறாளே! எனவே மெதுவாக நடந்து போகிறாள். சாகசத் தலைவனுக்கு இது புரியாதா? “அவன் என் பிள்ளையும்தானே! எனக்கு மட்டும் அவன் வேண்டாமா?” என்று கூறிக்கொண்டே, செல்கின்றவளின் சிறுபுறத்தைத் தழுவுகிறான். உடனே மழைநீர் விழுந்த செம்மண் புழுதிபோல் அவள் குழைந்து போகிறாள். சிறிது நேரங்கழித்துச் சிரித்துக்கொண்டே தலைவன் வெளியில் போய்விட, பெரிய இடியையும் புயலையும் எதிர்பார்த்து
அடுத்திருந்த தோழி அதிர்ந்துபோய் விரைந்து வருகிறாள். “என்னடீ, நீ ஒன்னுமே சொல்லலையா?” என்று கேட்கிறாள்.“என்னத்தச் சொல்ல” என்று நடந்ததைக் கூறிய தலைவி, “மனசக் கல்லாக்கிக்கிட்டுத்தான் காத்துக்கிட்டு இருந்தேன். மனுசன் வாட பட்டதுமே இந்தப் பாழாப்போன மனசு கூழாக் கொழஞ்சு போச்சுடீ – அப்புறம் அந்த மனுசன என்ன சொல்றது?”
இந்த முன்னுரையுடன், இந்த அடிநேர் உரையையும் படித்து மீதத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.
அடிநேர் உரை
கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை
புலத்தல் கூடுமோ தோழி! ————- 5
வளையும் முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையினின்றும் கழன்று விழுந்த
மீனின்முள்ளைப் போன்ற வெண்ணிறக் காம்புகளையுடைய கரிய மலர்களை,
விளையாட்டு மகளிர் தமது திருவிழா ஆட்டத்துக்கு அழகுசெய்ய எடுத்துச் சேர்க்கும்
அழகிய வயல்களை அருகில்கொண்ட வளம் மிகுந்த ஊரனாகிய தலைவனை
(என்னால்) கோபித்துக்கொள்ள முடியுமா?, தோழியே!
————- —————- ————- அல்கல்
ஒவ்வொரு நாளும்,
பெரும் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மா கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று 10
இவை பாராட்டிய பருவமும் உளவே, ——–
பெரிய கோட்டைக் கதவினைக் குத்தித் தாக்கிய யானையின் தந்தங்களில் உள்ள
இரும்பாலான (கரிய) வளையத்தைப் போன்ற அழகினை உடையதாகி,
கரிய கண்களை உடைய (என் கொங்கைகளைத் தன்)மார்பகத்தில் சேர்த்து
(முற்றிலும்) முயங்குவதைத் தடுக்கின்றன இவை என்று கூற, தடுமாறி
நான் “விடும்” என்று கூறவும் உடன்படாராய், தாம் மேலும்
இவற்றைப் பாராட்டிய காலங்களும் உண்டு;
————– ————— ————– இனியே
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே 15
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ————
இப்பொழுதோ,
புதல்வனுக்கே திகட்டும் பாலுடன் சரிந்து
அழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய கொங்கைகள்
மணமிக்க சந்தனம் அணிந்த நிறம் விளங்கும் (தலைவனின்) மார்பில்,
விம்மும்படி முயங்குதலை நான் விரும்பினேனாகவும்,
இனிய பால் (தன் மார்பில்) படுதலைஅவர் அஞ்சினார்;
———— —————— ———— ஆயிடை
கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர், இஃதோ
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் 20
மகன்_வயின் பெயர்தந்தேனே ———————
அப்போது,
(முன்பு இறுக)அணைத்த கை (இப்போது) நெகிழ்ந்ததைக் கண்டு, ஆர்வ நடையுள்ள
செவிலியின் கையிலுள்ள என் புதல்வனை நோக்கி
(என்னைக் காட்டிலும்)நன்றாக இருப்போர்க்கு ஒத்துப்போவீர் நீவிர், இதோ
(என்)செல்வனுடன் ஒத்துப்போகிறேன் நான் எனறு சொல்லி, மெதுவாக என்
மகனிடத்திற்குச் சென்றேன்;
————– ————– ———— அது கண்டு
யாமும் காதலம் அவற்கு என சாஅய்
சிறுபுறம் கவையினன் ஆக —————
அதைப் பார்த்து,
நானும் விருப்பமுடையேன் அவனிடம் எனப் பணிந்து
(என்) முதுகினைச் வளைத்து அணைத்துக்கொண்டாராக,
————- ————- —————- உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய்
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே 25
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே
மிகுந்த மழையின்
குளிர்ந்த துளிகளை ஏற்றுக்கொண்ட, பல முறை உழுத செங்காட்டின்
மண் போல நெகிழ்ந்து அவனுக்காகக் கலங்கிப்போய்
நெஞ்சழிந்துபோன அறிவினை உடைய என்னால்,
புலத்தல் கூடுமோ தோழி! ————- 5
(கோபித்துக்கொள்ள முடியுமா?, தோழியே!)
அருஞ்சொல் பொருள் விளக்கம்
1. முள்ளி = நீர்முள்ளி, Asteracantha longifolia, நீர்நிலைத் தாவரம், முண்டகம் என்றும் அழைப்பர்.
http://www.weatheredwind.org/notes/?m=200901
இச் செடியின் உடல் முழுக்க முள் போன்ற அமைப்பு இருப்பதைக் கவனியுங்கள். ஆனால் கூன் முள் என்று புலவர் கூறுவதன் காரணம் தெரியவில்லை. முள் வளைந்திருக்கும் என உரைகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட முட்கள் கொண்ட படங்கள் கிடைக்கவில்லை. பூவின் அடிப்பகுதியிலும் முள் போன்ற அமைப்பு இருக்கிறது. ஒரு நீண்ட தண்டில் இரு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டிருக்கும் முட்களையே புலவர் மீன்முள் அன்ன என்று கூறுகிறார் போலும். இத்துணை முள் நிறைந்த செடியினின்றும் பூக்களைப் பறிக்க யாரும் தயங்குவர். எனவேதான், தானாகக் கழன்று விழுந்த முள்ளி மலர்களை மகளிர் எடுத்துச் செல்வதாகப் புலவர் கூறுகிறார்.
2. புதல்வன் தடுத்த பாலொடு
புதல்வன் உள்ளத்தைப் பிறிதிற் செல்லாது தடுத்துக்கொண்ட பாலால் என்று உரைகள் பொருள் கூறுகின்றன. இங்கு குறிப்பிடப்படும் புதல்வன் மிகச் சிறிய குழந்தை. குழந்தை பிறந்து தீம்பால் மாறாத நிலை என அறிகிறோம்.
அப்படிப்பட்ட குழந்தையின் உள்ளம் வேறு எதில் செல்லும்? இதைப் போல வேறு சில வழக்குகளைப் பார்ப்போம்.
1. உண்ணுநர்த் தடுத்தன தேமா – மலை. 138
2. உண்ணுநர்த் தடுத்த நுண் இடி நுவணை – மலை. 445
3. ஊழுறு தீம் கனி உண்ணுநர்த் தடுத்த – அகம் 2/2
இந்த மூன்று இடங்களிலும் உரை கூறுவோர், உண்பவர்கள் வேறு எதனையும் நாடாமல் தடுக்கும் சுவையை உடைய என்பது போன்ற பொருள் தருகின்றனர். இதனையே இங்கு புதல்வனுக்கும் கூறுகின்றனர்.
ஒரு இனிப்பான மாம்பழத்தை ஒருவர் உண்கிறார். அதனை வெகுவாக விரும்பிய அவர், மேலும் மேலும் பல மாம்பழங்களைத் தொடர்ந்து உண்கிறார். ஓரளவுக்கு மேல் உண்ட பின்னர் “போதும், இனி வேண்டாம்” என்கிறார். வயிற்றில் இடமில்லையா எனக் கேட்டால், “இல்லை இல்லை, திகட்டுகிறது” என்கிறார். இந்தத் திகட்டலே அவரை மேலும் உண்ணவிடாமல் தடுக்கிறது. ஒரே ஒரு மாம்பழத்தை முழுதும் உண்பதற்கு முன்னரேயே திகட்ட ஆரம்பிக்கும் அளவுக்கு அது இனிப்பு உள்ளதாக இருந்தால்? அதனையே உண்ணுநர்த் தடுத்த தீங்கனி என்னலாமா? இதே போன்ற பொருளை நமது பாடலுக்கும் கொள்ளலாம். குழந்தை தாய் மடியை உறிஞ்சிப் பால் குடிக்கிறது. ஒரு உறிஞ்சுதலில் அதன் சிறிய வாய் கொள்ளும் அளவுக்குப் பால் வந்தால் குழந்தை தொடர்ந்து குடிக்கும். தாயின் செழுமை மிக்க மார்பினின்றும் தேவைக்கு மேல் பால் சுரந்தால் குழந்தைக்குப் புரையேறிப் போகும். அப்படிப் புதல்வன் தடுத்த பாலொடு தலைவியின் மார்புகள் சரிந்துபோய் இருப்பதாக இங்கு பொருள் கொள்வது சிறப்பாக அமையும்.
3. நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கு
ஒருவர் தன் நண்பனுடன் சேர்ந்து கூட்டு வணிகம் தொடங்குகிறார். அந்த நண்பனைப் பற்றித் தெரிந்த சிலர் இவரை எச்சரிக்கிறார்கள். ‘அவன் ஏமாற்றுப் பேர்வழி, நம்பவேண்டாம்’ என்று தடுத்துச் சொல்கிறார்கள். அதனை மீறித் தொடர்ந்த அவர் இறுதியில் ஏமாற்றப்பட்டு, பொருளை இழந்து நொந்துபோய் இருக்கிறார். அவரிடம் வந்தவர்கள், “முதலிலேயே சொன்னோம், நம்பாதே என்று. அப்போதெல்லாம் புத்தியைக் கடன்கொடுத்துவிட்டு இப்போது நொந்து என்ன பயன்?” என்கிறார்கள். அதென்ன, புத்தியைக் கடன் கொடுத்தல்? – நம்பி ஏமாறுதல், வஞ்சிக்கப்படுதல். இதையே அறிவு அறைபோகுதல் என்கிறார்கள்.
“வாயிலோயே, வாயிலோயே,
அறிவு அறை போகிய பொறி அறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே”
என்ற கண்ணகியின் சொற்கள் மறக்கமுடியாதவை. பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்டு அறிவு அறை போகியது பாண்டியனது நெஞ்சு. இங்கே, தலைவனின் துரோகத்தை எண்ணி நெஞ்சத்தைக் கல்லாக்கிக் கொண்டு காத்திருக்கிறாள் தலைவி. அவனிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டும் என்று நெஞ்சிடம் கூறுகிறாள். ஆனால், அவன் அவளைத் தொட்டதும், மழைநீர் பட்ட மண் குவியல் போல நெகிழ்ந்துபோகிறது அவள் நெஞ்சம். நெஞ்சு அறை போகிய அறிவினேன் ஆனேன் என்று தலைவி கூறுவது எத்துணை பொருத்தமான கூற்று!