போதல் செல்லா என் உயிர்
“மோசம்போயிட்டேனே! மோசம்போயிட்டேனே!! என் நெஞ்சுக்குழியெல்லாம் பஞ்சு பத்திக்கிட்டமாதிரி திகுதிகு’ன்னு வேகுதே” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்த முல்லையின் தாய் பேச்சியம்மாள் வெளித்திண்ணையில் மதிலோரத்தில் அமர்ந்து சுவரில் சாய்ந்து காலைநீட்டிக்கொண்டு ஓங்கிக் குரலெடுத்துக் கதறியபோது அந்தத் தெருவே கிடுகிடுத்துப்போனது. அக்கம்பக்கத்துப் பெண்கள் அடித்துப்புரண்டு ஓடிவந்தனர். வீட்டுக்குள்ளிருந்து புயல்வேகத்தில் வெளியே வந்த முத்தம்மா தெருவில் இறங்கித் தெற்குப்பக்கம் திரும்பி தலைதெறிக்க ஓடத்தொடங்கினாள்.
பேச்சியருகே குழுமிய அவளின் நெருங்கிய சிநேகிதிகள் அவளின் அருகே அமர்ந்து “என்னடீ ஆச்சு, ஏன் இப்படிப் பதர்ர?” என்று பேச்சியை உலுக்கிக்கொண்டிருந்தனர். சந்தேகப்பட்ட சிலர் வீட்டுக்குள் நுழைந்து என்னவென்று அறிந்துகொள்ள முயன்று ஒன்றும் தெரியாமல் வெளியே வந்தனர். “ஐயா மட்டும் நடையில ஒக்காந்திருக்காரு, என்னய்யா நடந்துச்சு’ன்னு கேட்டா பேசமாடேங்காரு. வீட்ல வேற யாரயும் காணொம்” என்று விவரம்
கேட்டவருக்குக் கூறினர்.
“முல்ல எங்கடி போயிட்டா? இங்க ஆத்தாக்காரி இப்படிப் பொலம்பிக்கிட்டு இருக்கா, அவளக் காணம்?” என்று ஒருத்தி நொடித்துக்கேட்டாள்.
“எனக்கு அதான்டி சந்தேகமா இருக்கு, ஓடிப்போயிட்டாளோ?” இன்னொருத்தி குசுகுசுத்தாள். பத்தவைத்தாயிற்று, இனி அது பரபரவென்று பற்றிக்கொள்ளாதோ?
வெளியே வேகமாகச் சென்ற முத்தம்மா வெறுங்கையாய்த் திரும்பிவந்தாள். பாதிப்பேர் அவளை மொய்த்துக்கொண்டனர்.
“வெள்ளன வாசப்பெருக்கி சாணி தெளிச்சுக்கிட்டு இருந்தப்ப, பக்கத்துத்தெரு வேலம்மா வேகமா ஓடியாந்தா. நம்ம முல்ல யாரோ ஒரு பையங்கூட வேகமாப் போய்க்கிட்டிருக்கா’ன்னு சொன்னா, நானு உள்ள போயி அவ படுத்திருக்கிற கட்டிலப் பாத்தேன். அங்க அவ இல்ல. வீடு முழுக்கத் தேடிப்பாத்தேன். அவள எங்கயும் காணோம். அப்புறந்தான் அவ ஆத்தாள எழுப்பிச் சொல்லிட்டு வேகமா ஊரு எல்ல வரை ஓடிப்போயிப் பாத்தேன். போன தடமே தெரியல்ல” என்று முத்தம்மா கூடியிருந்தோரிடம் விளக்கிக்கொண்டிருந்தாள்.
பேச்சியைச் சுற்றியிருந்தோர் விசயம் தெரிந்து ஆளாளுக்குப் பேச ஆரம்பித்தார்கள்.
“ஊருக்குள்ளதான் மரமும் நெழலும். ஊர விட்டு வெளிய போனா பொட்டக்காடுதான். இன்னும் செத்தவெடத்துல வெயிலு ஏறுனா, உச்சியப் பொளந்துரும்”
“உச்சி என்னடி உச்சி, கருங்கல்லுகூடத் தெறிச்சுப்போயிரும். அப்படி அடிக்கும் வெயிலு” என்றாள் இன்னொருத்தி.
“மேல பறக்குற கொக்குகூட அடிக்கிற வெயிலுல எளகிப்போயிரு-வமோ’ன்னு பயந்துகிட்டே பறக்குமாம்”
“கொக்கு என்னடி பறந்துதான போகுது, அந்தப் பாழுங்காட்டுல நடந்து போகணுமே! பாதையெல்லாம் பெரிய பெரிய சரளக் கல்லு. உளி கெணக்க இருக்கும் ஒவ்வொரு கல்லும். கால்’ல குத்துச்சுன்னா ஒரு எட்டு எடுத்துவைக்கமுடியாது”
“எப்பச் சாவு வரும்’னு சொல்லவே முடியாது.”
“அங்கங்க இருக்குற மூங்கிப்பொதரு கூட எரிஞ்சு கரிக்கட்டயா நிக்கும்”
“ஏண்டி, அவனப் பாத்திருக்கியா?” என்று ஒருத்தி குசுகுசுத்தாள்.
அதற்கு இன்னொருத்தி, “ஒரு தரம் பாத்திருக்கேன். காலயில வாசத்தெளிக்கிறப்ப, ஒரு பய இவங்க வீட்டப் பாத்துக்கிட்டே மெல்ல நடந்துகிட்டிருந்தான். வெளிய வந்த முத்தம்மா ‘யாருப்பா நீ, என்ன வேணும்’னு வெரட்டிக்கிட்டு இருந்தா. அப்பத்தான் பாத்தேன். அவனாத்தான் இருக்கணும்”
“ஆளு எப்படி?”
“நல்ல வாட்டசாட்டமா இருந்தான்’டீ”
தலைவிரிகோலமாக அரற்றிக்கொண்டிருந்த பேச்சி ஆவேசமாக நிமிர்ந்து உட்கார்ந்தாள். விரிந்து கிடந்த கூந்தலை ஒன்றுகூட்டி அள்ளிமுடிந்தாள். “ந்தா பாருங்கடி, அவ போயிட்டாளே’ன்னு நான் பொலம்பிக்கிட்டு இல்ல” என்று அதட்டும் குரலில் சத்தமிட்டுக் கூறினாள்.
கூட்டம் கப் சிப் ஆனது.
“அவ போயிட்டதுனால என் நெஞ்சுக்கூடு கொல்லன் துருத்தி கெணக்கா குமுறிக் குமுறி எந்திருக்குது’ன்னு பாக்குறீங்களா? என் நெஞ்சுக்குழியெல்லாம் வேகுறது நெசந்தான். கண்ணத் தொறந்துகிட்டே இருந்தாக்கூட, அவ பொறந்து வளந்ததெல்லாம் கண்ணுமுன்னால கனவாத் தெரியுறது நெசந்தான். ஆனா நான் அதுக்காக அழுகலடீ” என்று கூறியபடி சற்றுத் தணிந்தாள் பேச்சி.
பேச்சிக்குச் சற்று நெருக்கமானவள் – அப்போது பேச்சிக்கு வெகு அருகில் அமர்ந்திருந்தவள் – பேச்சியின் உணர்வுகளைச் சற்று மட்டுப்படுத்த அவளின் தோளைச் சற்று ஆதரவுடன் பற்றிக்கொண்டாள்.
தோழியின் நெருக்கம் கிடைத்தவுடன் பேச்சியின் உணர்வுகள் மீண்டும் கொந்தளித்தன. மீண்டும் திண்ணைச் சுவரில் சாய்ந்துகொண்டாள். கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்தது.
“பாதகத்தி உசுரு இன்னும் போகாம இருக்கே” என்று புலம்பல் குரலில் பேச்சி சொன்னபோது கூட்டமே விக்கித்தது.
“ஏன்டீ அவ போனதுக்காக அழுகல’ங்கிற அப்புறம் நீ எதுக்கடி சாகணும்?” என்று கேட்டாள் அந்த நெருக்கமானவள்.
ஒன்றும் பேசாமல் தலையை மட்டும் பின்னால் சுவரில் சாய்த்துக்கொண்ட பேச்சி தலையை இரண்டுபக்கமும் மெல்ல ஆட்டினாள்.
சற்றுநேரம் அமைதியாய் இருந்தவள், நிமிர்ந்து பின்னர் குனிந்து கைகளை நீட்டி, நீட்டிக்கொண்டிருந்த கால்களின் முழங்கால்களைப் பற்றிக்கொண்டாள். ஓங்கி ஒரு பெருமூச்சு விட்டாள். பின்னர் ஆற்றாமை பெருக்கெடுக்க அவளிடமிருந்து ஓர் அழுகைப் பாடல் வெடித்துக்கிளம்பியது.
“கரிகாலு மகாராசா —-
“களத்துமேட்டு வெண்ணியூர்ல —-
“மலநாட்டு ராசாவ —
“மண்ணக்கவ்வ வச்சபோது …
“மானமுள்ள மலநாட்டான் – தான்
“மண்ணுக்குத் திரும்பாம —
“வாளெடுத்துக் கையிலோங்கி –
“வடக்கிருந்து செத்தானே ஏஏஏஏஏஏஏஏ ——
“செத்துப்போன ராசாகூடச் ……..
“சேர்ந்திருந்த பெரியவக ………
“கத்தி குத்திச் சாகாம ….
“கதறி அழுதே செத்தாக —
“நான் வளத்த தங்கக்கிளி ………
“நாயகனத் தேடிக்கிட்டு ……….
“போன பின்னும் என்னுசுரு ……
“பொசுக்கு’ன்னு போகலியே ஏஏஏஏஏஏஏஏஏஏஏ——
பாடல் : அகநானூறு 55 ஆசிரியர் : மாமூலனார் திணை : பாலை
துறை : உடன்போக்குச் சென்ற தலைமகளுக்காக இரங்கிய தாய் அயல்வீட்டு மகளிருக்கு உரைத்தது.
காய்ந்து செலல் கனலி கல் பகத் தெறுதலின்
நீந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்
விளி முறை அறியா வேய் கரி கானம்
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யான்
ஊதுலை குருகின் உள் உயிர்த்து அசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேஎன் கனவ ஒண் படை
கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலை
பொருது புண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்து என
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
காதல் வேண்டி என் துறந்து
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே
அருஞ்சொற்பொருள்:
கனலி = சூரியன்; குருகு = கொக்கு என்றூழ் = வெப்பம்; நீள் இடை = நீண்ட இடைவெளி; பரல் = சரளைக் கற்கள்;
விளிமுறை = எதிர்பாரா ஆபத்து; வேய் = மூங்கில்; வயக்களிறு = வலிமைமிக்க ஆண்யானை;
ஊதுலை குருகு = கொல்லன் துருத்தி; கண்படை = தூக்கம்; கனவ = கனவுகாண; அரும்பெறல் உலகம் = சுவர்க்கம்;
பெரும்பிறிது ஆகுதல் = உயிர் நீத்தல்.
அடிநேர் உரை
வெம்மையுடன் செல்லும் ஞாயிறு (சூரியன்) பாறைகள் பிளக்கச் சுடுவதால்
பறக்கும் கொக்குகள் வருந்தும் வெப்பம் மிக்க நீண்ட வெளியில்,
உளிபோன்ற வாயை உடைய பரல் கற்கள் பாதங்களை வருத்துவதால்
உயிர் எப்போது போகும் என்று தெரியாத, மூங்கிலும் எரிந்து கரியாக நிற்கும் காட்டில்
வலிமைமிக்க ஆண்யானை போன்ற தலைவனுடன் என் மகள்
சென்றுவிட்டதற்காக நான் வருந்தவில்லை. அவளைப் பிரிந்து
உலையில் ஊதும் துருத்தி போல பெருமூச்சு விட்டு
தீயில் வேவது போன்ற வெம்மையான நெஞ்சமுடன்
கண்ணைமூடாமல் கனவு காண்கிறேன்; ஒளியுடைய படையையுடைய
கரிகால்வளவனோடு வெண்ணிப்பறந்தலையில்
போரிட்டு (முதுகில்) காயமடைந்த சேரலாதன்
போர்க்களத்தருகே வாளையுயர்த்தி வடக்கிருக்க,
அச் செய்தியைக் கேட்ட சான்றோர்
சுவர்க்கத்துக்கு அவனோடு செல்வதற்காக
உயிர் நீத்ததைப் போல, என் மகளைவிட்டுப் பிரிந்து இங்கே
இவ்வுலகத்து ஆசையை விரும்பி, என்னை விட்டுப் பிரிந்து
போகாத என் உயிரை வெறுத்து (அழுகின்றேன்.)