Select Page

அன்றில் பாடம்

மாலை நேரம். முல்லையைத் தேடி வீடுமுழுக்கச் சுற்றிவந்த பொன்னி, பின்புறத்தில் உள்ள கொல்லையின் வேலியருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முல்லையைக் கண்டதும், “என்ன மதினி, இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேட்டவாறு அவளை நெருங்கினாள். ஆளரவம் கேட்டதும் ‘சட்’-டென்று சுதாரித்துக்கொண்ட முல்லை, சற்றே குனிந்து கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவள் அழுதுகொண்டிருந்திருக்கிறாள் என்பதை யூகித்த பொன்னி, முல்லையின் முகத்தைத் திருப்பி, “ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?” என்றாள். “ஒண்ணுமில்லையே” என்று சமாளிக்க முயன்றாள் முல்லை. “இப்படிச் சொன்னா விடுவேனா, மனசுல இருக்கிறத சும்மா ஒளிக்காம சொல்லு மதினி, அப்பத்தான் பாரங்கொறயும்” என்றாள்.
“பாரமுமில்ல, ஒரு மண்ணுமில்ல” என்று மீண்டும் திமிறினாள் முல்லை. விடுவாளா பொன்னி? “அப்புறம் ஏன் கண்ணு கலங்கிக் கெடக்கு?” என்று வினவினாள். “தூசி விழுந்திருச்சு’ன்னு சும்மா சமாளிக்கக்கூடாது” என்று கட்டளை வேறு போட்டாள். “ஒண்ணுமில்ல தாயி, செத்த சும்மா இருக்கவிடுறயா?” என்றாள் முல்லை.

பொன்னிக்குத் தெரியாதா உண்மையான காரணம்? வீட்டை விட்டு வெளியில் ‘மேயப்போன’ அண்ணாச்சி மூன்று நாட்களாய் வீடு திரும்பவில்லை. அவனை நினைத்தே முல்லை அழுதுகொண்டிருக்கிறாள் என்பது பொன்னிக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் மேலும் மேலும் அதைக் கிளறி முல்லையை நோகவைக்க அவள் விரும்பவில்லை. கைத்தாங்கலாக அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்தாள். அடுத்த நாள் என்ன செய்யவேண்டும் என்பதை முடிவுசெய்துவிட்டாள் அவள்.

மறுநாள் நேரம் கிடைத்தபோது அந்தப் பாணனைத் தேடிச்சென்றாள் பொன்னி. அவன்தான் அண்ணனின் தோழன். அண்ணன் இருக்குமிடத்தை அறிந்தவன். “என்னக்கா இந்நேரத்துல?” என்று ஆரம்பித்தான் அவன்.

“என்னத்தச் சொல்ல, எங்கபோயிச் சொல்ல?” என்று ஆரம்பித்தாள் பொன்னி. “நீயே சொல்லு, கட்டிக்கிறதுக்கு முன்னாடி, ஒங்க அண்ணன், எம்புட்டு நேரம் இங்க வந்து காத்துக்கெடக்கும்? ஊரே வேலைக்குப் போகாம, ஒரு தோணி தண்ணியில மிதக்காம, அம்புட்டுச் சனமும் இங்கக் கரையில கூடிக்கிட்டு இருந்தாக்கூட, நெளிவுசுழிவா வந்து பாத்துட்டுப்போவாருல்ல! பிடிக்க ஆளில்லாம பெரிய மீனெல்லாம் இந்தக் கழியில துள்ளிகிட்டுத் திரிய, ஆம்புளங்க அங்க அங்க கம்பு வெளயாடிக்கிட்டு இருந்தாக்கூட யாரு கண்ணுலயும் படாம கண்ணாமூச்சி ஆடுறதக் கணக்கா வந்துட்டுப் போவாருல்ல! அங்கன இங்கன பாத்த பொம்பளங்க அள்ளித்தூத்தாத குறையா சாடப்பேச்சு பேசுனாக்கூட சட்டசெய்யாம, பூட்டுன வண்டிய காக்கப்போட்டு பொழுதெல்லாம் இங்கிட்டுத் திரிவாருல்ல, ஒங்க அண்ண்ண்ண்ணன், இப்ப என்னடான்னா அறுபது நாள் முப்பது நாள் கணக்குப் பார்த்தாப்போல கட்டிக்கிட்ட கொஞ்ச நாளுல்ல, இந்தப் பக்கம் ஆசை முடிஞ்சுபோயி, அந்தப்பக்கம் போயிட்டாரே, இந்த மனுசன் இனிமே நமக்கு யாரோ, வந்தா என்ன வராட்டி என்ன’ன்னு அப்படியே விட்டுற முடியுமா சொல்லு?” என்று மூச்சுப்பிடிக்கப் பேசி மூச்சுவாங்கி நின்றாள் பொன்னி.

“இப்ப என்னக்கா செய்யச் சொல்ற?” என்றான் பாணன்.

“டே, யாரு கண்ணுலயும் படாம அங்க போ”

“எங்கக்கா?”

“இந்தா பாரு, சும்மா பூச்சிபிடிக்காத. ஒனக்குத் தெரியும் ஒங்கண்ணன் எங்க இருக்காரு’ன்னு. அங்க போயிச் சொல்லு”

“என்னண்டு?”

“இன்னமாதிரி, வீட்டுக்குப் போயிருந்தேன். அங்க அண்ணியப் பாத்தேன். கண்ணெல்லாம் கலங்கிக்கெடந்துச்சு. என்னாண்ணி’ன்னு பதறிப்போயிக் கேட்டேன். அதுக்கு அவக, ‘ஒன்னுமில்லடா, வீட்டுக்குப் பின்னாடி பனமரத்துல ஒரு ஒத்தப்பறவ ஒக்காந்திருந்துச்சு. பாவம், அதுக்குத் துணையக் காணோம். ஒன்னு இல்லாட்டி இன்னொன்னு தூங்காதுடா. அத நெனச்சேன். கண்ணுல தண்ணி வந்துருச்சு, வேற ஒன்னுமில்ல’ன்னு சொல்லிச் சமாளிக்கிறாக. நான் இப்ப என்ன செய்யுறதுண்ண’ன்னு சொல்லிட்டு வந்தா என்னடா?” என்றாள் பொன்னி.

#அகநானூறு 50 – நெய்தல் – கருவூர் பூதஞ்சாத்தனார்

தோழி பாணனுக்குச் சொல்லியது.

கடல் பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இரும் கழி கடுமீன் கலிப்பினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்,
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப,
பகலும் நம்வயின் அகலான் ஆகி,

 

பயின்று வரும்மன்னே பனி நீர்ச் சேர்ப்பன்!
இனியே, மணப்பு அரும் காமம் தணப்ப, நீந்தி,
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது,
மல்லல் மூதூர் மறையினை சென்று,
சொல்லின் எவனோ? பாண! “எல்லி

 

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண்” என
கண் நிறை நீர் கொடு கரக்கும்
ஒண் நுதல் அரிவை, யான் என் செய்கோ? எனவே.

அருஞ்சொற் பொருள்

பாடு=ஓசை; அவிந்து=முற்றிலுமாக அடங்கி; கடுமீன்=சுறாமீன்; கலிப்பினும்=செருக்கித் திரியினும்;
வெவ்வாய் = கொடுஞ்சொற்கள்; கௌவை=அலர், பழிச்சொல்; மாண் இழை = நன்றாகச் செய்த; பாணி = காத்திரு;
பயின்று=அடுத்தடுத்து; மணப்ப அரும் = கூடுதற்கரிய; தணப்ப = நீங்க; நீந்தி= துறந்து; மல்லல் = வளமை;
எல்லி = இரவில்; பெண்ணை = பனைமரம்; மடிவாய் = வளைந்த மூக்கு; கரக்கும் = ஒளிக்கும், மறைக்கும்.

அடிநேர் உரை

கடலில் ஓசை குன்றி, தோணிகள் கடலைவிட்டு நீங்கி(க் கரையில் கிடக்க)
நெடியவாய் நிறைந்த நீரைக்கொண்ட பெரிய கழியில் சுறாமீன்கள் செருக்கித் திரிந்தாலும்,
கொடிய பேச்சைக்கொண்ட பெண்டிர் பழிசொல்லித் திரிந்தாலும்,
நன்கு அலங்கரிக்கப்பட்ட நீண்ட தேர் காத்துநிற்கப்,
பகலிலும் நம்மைவிட்டு அகலாதவனாகி,

(முன்பெல்லாம்)அடிக்கடி வருவானே! குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன்; இப்பொழுதோ,
ஒன்றுசேர்வதற்கு அரிதாயிருந்த (பழைய)விருப்பம் நீங்கிவிட, (இப்பொழுது இருக்குமிடத்தைத்) துறந்து
வராமலிருப்பவர் நமக்கு யார் என்று வாளாவிராமல்,
(இப்பொழுது தலைவன் இருக்கும் அந்த)வளமிக்க பழமையான ஊருக்கு மறைவாகச் சென்று
(அவனிடம்) சொன்னால் என்ன பாணனே!, “இரவில்

(நம்)வீட்டைச் சேர்ந்துள்ள பனைமரத்தில், வளைந்த அலகையுடைய அன்றில் பறவைகள்
ஏதேனும் ஒரு துணை பிரிந்திருந்தாலும் தூங்கமாட்டா, காண்பாயாக என்று
கண்ணில் நிறைந்து இருக்கும் கண்ணீரைக்கொண்டு தன் துயரை மறைப்பாள்
ஒளிபொருந்திய நெற்றியையுடைய தலைவி, இதற்கு யான் என்ன செய்வேன்?” என்று.

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

தலைவனும் தலைவியும் காதல் மணம் புரிந்து இனிதே வாழ்ந்திருந்த காலத்தில், தலைவன் புதிய உறவை விரும்பிப் பரத்தையர் இல்லம் செல்ல, அப்படிச் சென்ற தலைவனிடம் கோபம்கொண்டு தலைவி அவனிடம் ஊடல்கொண்டால் அது மருதத்திணையின்பாற்படும். ஆனால் இப் பாடலில் பிரிந்துசென்ற தலைவனை எண்ணி தலைவி வருந்தித் துயருறுகிறாள். இது இரங்கல். எனவே இது நெய்தல் திணைக்குரிய பாடலாக அமைந்துள்ளது. அதனால் பாடலுக்குப் பின்புலமாக கடற்கரைக் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

தலைவியைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வெளியூரில் வேற்று மனையில் தங்கிவிடுகிறான் தலைவன். அவனுடைய நண்பனான பாணனிடம் தலைவியின் தோழி தலைவியின் இரங்கத் தக்க நிலையை எடுத்துக்கூறுகிறாள். அதனைப் பாணன் தலைவனிடம் சென்று சொல்லவேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொள்கிறாள்.

தான் துயருற்ற நிலையிலும் தலைவி தலைவனைப் பழிசொல்லாமல் தன் கண்ணீரை மறைத்துக்கொள்வதுமன்றி, வேற்று மகளை நாடிச் சென்றவனையும் அவள் வெறுக்கவில்லை என்பதைத் தோழி பாணனுக்குத் தெளிவுபடுத்துகிறாள்.

குறிப்பு:- இது ஒரு நாடகப் பாங்கு. சங்ககாலத்து மக்களிடையே விலைமகளிரும் இருந்தனர். ஆடவர் அவர்களைத் தேடிச் செல்லும் பழக்கம் இருந்தது. இது பரவலாக இல்லாவிடினும், அரசல்புரசலாக இருந்தது. அதனையே சங்கப் புலவர்கள் பாடிச் சென்றனர். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற காதல் வாழ்க்கையே சங்க இலக்கியத்தில் பெரிதும் புகழ்ந்து போற்றப்படுகிறது.