| சொற்பிரிப்பு-மூலம் | அடிநேர்-உரை |
| ஓங்கு திரை
வியன் பரப்பின் | உயர்ந்து எழும்
அலைகளையும், அகன்ற நீர்ப்பரப்பையும் |
| ஒலி முந்நீர்
வரம்பு ஆக | முழக்கத்தையும் உடைய
கடல் எல்லையாக அமையுமாறு, |
| தேன் தூங்கும்
உயர் சிமைய | தேனிறால் தொங்குகின்ற
உயர்ந்த உச்சியையுடைய |
| மலை நாறிய
வியன் ஞாலத்து | மலைகள் முளைத்துஎழும்
அகன்ற உலகத்தின்கண் – |
| வல மாதிரத்தான்
வளி கொட்ப 5 | வலமாக விசும்பிடத்தே
காற்றுச் சுழல,
5 |
| வியல் நாள்மீன்
நெறி ஒழுக | அகன்ற நாள்மீன்கள்
(தாம் நடக்கும்)பாதையில் ஒழுங்காக நடக்க, |
| பகல் செய்யும்
செம் ஞாயிறும் | பகலை உண்டாக்கும்
சிவந்த கதிரவனும் |
| இரவு செய்யும்
வெண் திங்களும் | இரவில் (ஒளி)செய்யும்
வெண்மையான திங்களும் |
| மை தீர்ந்து
கிளர்ந்து விளங்க | குற்றமற்றுத் தோன்றி
விளங்க, |
| மழை தொழில் உதவ
மாதிரம் கொழுக்க 10 | முகில் (தன்
பெய்தல்)தொழிலை (வேண்டுங்காலத்தே செய்து)உதவ, (எல்லாத்)திசைகளும் தழைக்க, 10 |
| தொடுப்பின்
ஆயிரம் வித்தியது விளைய | (ஒரே)விதைப்பில்
ஆயிரமாக வித்திய விதை விளைய, |
| நிலனும் மரனும்
பயன் எதிர்பு நந்த | விளைநிலங்களும்
மரங்களும் பயன்தருதலை மேற்கொண்டு தழைப்ப, |
| நோய் இகந்து
நோக்கு விளங்க | பிணிகள் நீங்கி அழகு
விளங்க, |
| மேதக மிக
பொலிந்த | மகிழ்ந்து நிற்க
(மேம்பாடு தக), – (மிகவும் பொலிவுபெற்ற |
| ஓங்கு நிலை வய
களிறு 15 | உயர்ந்த நிலையையுடைய
வலிமைமிக்க திசையானைகள்) 15 |
| கண்டு தண்டா
கட்கு இன்பத்து | பார்த்து (ஆசை)தணியாத
கண்ணுக்கு இனிமையினையும், |
| உண்டு தண்டா
மிகு வளத்தான் | உண்டு குறையாத மிகுந்த
வளத்தையும், |
| உயர் பூரிம
விழு தெருவில் | உயர்ந்த
(இரு)பக்கங்களையும் உடைய சீரிய தெருவிலிருக்கும், |
| பொய் அறியா
வாய்மொழியால் | பொய்மையே அறியாத
(தங்களின்)வாய்மொழியால் |
| புகழ் நிறைந்த
நன் மாந்தரொடு 20 | புகழ் நிறைந்த நல்ல
அமைச்சர்களோடு
20 |
| நல் ஊழி அடி
படர | நல்ல ஊழிக்காலம்
எல்லாம் தமக்கு அடிப்பட்டு நடக்க, |
| பல் வெள்ளம்
மீக்கூற | பல வெள்ள காலத்திற்கு
புகழ் மிகுந்து சொல்லப்பட, |
| உலகம் ஆண்ட
உயர்ந்தோர் மருக | உலகத்தை ஆண்ட
உயர்ந்தவர் குடியில் தோன்றியவனே – |
| பிண கோட்ட
களிற்று குழும்பின் | பிணங்களைக் கோத்த
கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின் |
| நிண வாய் பெய்த
பேய்மகளிர் 25 | நிணத்தைத் தின்ற
பேய்மகளிருடைய
25 |
| இணை ஒலி இமிழ்
துணங்கை சீர் | இணைத்த ஆரவாரம்
முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச் |
| பிணை யூபம்
எழுந்து ஆட | செறிந்த
குறைத்தலைப்பிணம் எழுந்து ஆட, |
| அஞ்சுவந்த
போர்க்களத்தான் | அச்சந்தரும்
போர்க்களத்தின்கண் |
| ஆண் தலை அணங்கு
அடுப்பின் | ஆண்களின் தலையால்
செய்த (பார்த்தவரை)வருத்தும் அடுப்பில் |
| வய வேந்தர் ஒண்
குருதி 30 | வலிமிக்க வேந்தருடைய
ஒள்ளிய குருதியாகிய உலை
30 |
| சின தீயின்
பெயர்பு பொங்க | வெகுளியாகிய
நெருப்பில் மறுகிப் பொங்க, |
| தெறல் அரும்
கடும் துப்பின் | வெல்லுதற்கு அரிய கடிய
வலியினையும், |
| விறல் விளங்கிய
விழு சூர்ப்பின் | வெற்றி விளங்கிய சீரிய
கொடும்தொழிலினையுமுடைய |
| தொடி தோள் கை
துடுப்பு ஆக | வீரவளையல்கள் அணிந்த
தோளையுடைய கைகளே துடுப்பாக |
| ஆடுற்ற ஊன்
சோறு 35 | துழாவிச் சமைத்த
ஊனாலாகிய சோற்றை,
35 |
| நெறி அறிந்த
கடி வாலுவன் | இடும்முறை அறிந்த பேய்
மடையன் (சமையல் செய்வோன்) |
| அடி ஒதுங்கி
பின் பெயரா | (இட்ட)அடியை வாங்கிப்
பின்போகாத |
| படையோர்க்கு
முருகு அயர | வீரர்க்கு
வேள்விசெய்யும்படி, |
| அமர் கடக்கும்
வியன் தானை | போரினை வெல்லும் அகன்ற
படையினையுடைய |
| தென்னவன்
பெயரிய துன் அரும் துப்பின் 40 | தென்னவன் என்னும்
பெயர்கொண்ட கிட்டமுடியாத வலிமையுடைய 40 |
| தொல் முது
கடவுள் பின்னர் மேய | பழைய முதிர்ந்த
கடவுளின் வழித்தோன்றிய, |
| வரை தாழ் அருவி
பொருப்பின் பொருந | மலைச்சாரலில்
வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனே – |
| விழு சூழிய
விளங்கு ஓடைய | சீரிய
முகபடாத்தையுடைய, விளங்குகின்ற நெற்றிப்பட்டத்தையுடைய |
| கடும் சினத்த
கமழ் கடாஅத்து | கடும் கோபத்தையுடைய,
கமழுகின்ற மதநீரால் |
| அளறு பட்ட
நறும் சென்னிய 45 | சேறுண்டான நறிய
தலையையுடையவாய்
45 |
| வரை மருளும்
உயர் தோன்றல | மலையென்று
(கண்டோர்)மருளும் உயர்ந்த தோற்றத்தினையுடைய, |
| வினை நவின்ற
பேர் யானை | போர்த்தொழிலே பயின்ற
பெரிய யானை |
| சினம் சிறந்து
களன் உழக்கவும் | வெகுளி மிகுந்து
போர்க்களத்தில் பகைவரைக் கொன்றுதிரியவும் |
| மா எடுத்த மலி
குரூஉ துகள் | குதிரைப்படை
தோற்றுவித்த மிகுந்த நிறத்தையுடைய புழுதி |
| அகல் வானத்து
வெயில் கரப்பவும் 50 | விரிந்த வானத்தில்
வெயிலை மறைக்கவும்,
50 |
| வாம் பரிய
கடும் திண் தேர் | தாவும் குதிரைகளையுடைய
கடிய செலவினையுடைய திண்ணிய தேர் |
| காற்று என
கடிது கொட்பவும் | (சுழல்)காற்றுப்
போன்று விரைந்து சுழலவும், |
| வாள் மிகு மற
மைந்தர் | வாட்போரில் மிகுந்த
வலிமை (கொண்ட)மைந்தர்கள் |
| தோள் முறையான்
வீறு முற்றவும் | (தம்)தோளால் முறையாகச்
செய்யும் வெற்றி முற்றுப்பெறவும் – |
| இரு பெரு
வேந்தரொடு வேளிர் சாய 55 | இரண்டு பெரிய
(முடியுடைய)வேந்தருடன் குறுநிலமன்னர் பலரும் வீழ 55 |
| பொருது அவரை
செரு வென்றும் | பொருது அவரைப் போரில்
வென்றும், |
| இலங்கு அருவிய
வரை நீந்தி | விளங்குகின்ற
அருவிகளையுடைய மலைகளைக் கடந்து |
| சுரம் போழ்ந்த
இகல் ஆற்றல் | காடுகளைப் பிளக்கும்
மாறுபாட்டையுடைய போராற்றலால், |
| உயர்ந்து
ஓங்கிய விழு சிறப்பின் | உயர்ந்து ஓங்கிய சீரிய
தலைமையினால், |
| நிலம் தந்த
பேர் உதவி 60 | நிலத்தைத்
திருத்தித்தந்த பெரிய உதவியினையும் உடைய, 60 |
| பொலம் தார்
மார்பின் நெடியோன் உம்பல் | பொன்னால் செய்த மாலையை
அணிந்த நெடியோன் வழியில் வந்தவனே – |
| மரம் தின்னூஉ
வரை உதிர்க்கும் | மரங்களைச் சுட்டு
மலைகளை நொறுக்கி விழச்செய்யும் |
| நரை உருமின்
ஏறு அனையை | பெருமையினையுடைய
இடிமின்னலின் இடி(முழக்கத்தைப்) போன்றவன் நீ, |
| அரும் குழு
மிளை குண்டு கிடங்கின் | சேர்தற்கரிய அடர்ந்த
காவல்காட்டையும், ஆழ்ந்த கிடங்கினையும், |
| உயர்ந்து
ஓங்கிய நிரை புதவின் 65 | உயர்ந்து வளர்ந்த,
வரிசையான குறுவாயில்களைக்கொண்ட 65 |
| நெடு மதில்
நிரை ஞாயில் | நெடிய மதிலினையும்,
வரிசையான ஞாயில்களையும், |
| அம்பு உமிழ்
அயில் அருப்பம் | அம்பு விடுகின்ற, வேல்
வீசுகின்ற அரண்களையும், |
| தண்டாது
தலைச்சென்று | தடைப்படாமல்
மேற்சென்று, |
| கொண்டு நீங்கிய
விழு சிறப்பின் | கைக்கொண்டு போந்த
சீரிய தலைமையோடு, |
| தென் குமரி வட
பெருங்கல் 70 | தெற்கே குமரியும்,
வடக்கே பெரிய இமயமும்,
70 |
| குண குட கடலா
எல்லை | கிழக்கிலும்
மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்) |
| தொன்று
மொழிந்து தொழில் கேட்ப | (தத்தம்)பழைமையான
தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக, |
| வெற்றமொடு
வெறுத்து ஒழுகிய | வெற்றியோடே செறிந்து
நடந்த |
| கொற்றவர்தம்
கோன் ஆகுவை | மன்னர்க்கும் மன்னர்
ஆவாய், |
| வான் இயைந்த
இரு முந்நீர் 75 | வானவெளியோடு
ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று நீர்மையுடைய 75 |
| பேஎம் நிலைஇய
இரும் பௌவத்து | அச்சம் நிலைபெற்ற கரிய
கடலில், |
| கொடும் புணரி
விலங்கு போழ | வளையும் திரை குறுக்கே
பிளவுபடுமாறு, |
| கடும் காலொடு
கரை சேர | வேகமான காற்றால்
(ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு, |
| நெடும் கொடி
மிசை இதை எடுத்து | நெடிய கொடியை
உச்சியில் உடையவாய், பாய் விரித்து |
| இன் இசைய
முரசம் முழங்க 80 | இனிய இசையை உடைய
முரசம் முழங்க,
80 |
| பொன் மலிந்த
விழு பண்டம் | பொன் மிகுதற்குக்
காரணமான சீரிய சரக்குகளை |
| நாடு ஆர நன்கு
இழிதரும் | நாட்டிலுள்ளோர்
நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும் |
| ஆடு இயல் பெரு
நாவாய் | அசையும் இயல்பினையுடைய
பெரிய மரக்கலங்கள் – |
| மழை முற்றிய
மலை புரைய | மேகங்கள் சூழ்ந்த
மலையைப் போல |
| துறை முற்றிய
துளங்கு இருக்கை 85 | துறைகள் சூழ்ந்த –
அசைகின்ற இருக்கையினையும்,
85 |
| தெண் கடல்
குண்டு அகழி | தெளிந்த கடலாகிய
ஆழ்ந்த அகழியினையும், |
| சீர் சான்ற
உயர் நெல்லின் | சிறப்புக்கள் அமைந்த
உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற) |
| ஊர் கொண்ட உயர்
கொற்றவ | (சாலியூர் என்ற)ஊரைக்
கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே – |
| நீர் தெவ்வு
நிரை தொழுவர் | நீரினை முகக்கும்
(ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள் |
| பாடு சிலம்பும்
இசை ஏற்றத்தோடு 90 | பாடுதலால் ஒலிக்கும்
இசையும், ஏற்றத்(தோடு)
90 |
| வழங்கும் அகல்
ஆம்பியின் | (ஏற்றத்)தோடு மேலும்
கீழும் இயங்கும் அகன்ற (நீரிறைக்கும்)சாலின் ஓசையும், |
| கயன் அகைய வயல்
நிறைக்கும் | குளத்தின் நீர்
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய(நீரை முகந்து) வயலை நிறைக்கின்ற |
| மென் தொடை வன்
கிழாஅர் | மென்மையான
கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும், |
| அதரி கொள்பவர்
பகடு பூண் தெண் மணி | கடா விடுபவர்
எருதுகளுக்குப் பூணும் தெளிந்த மணியின் ஓசையும், |
| இரும் புள்
ஓப்பும் இசையே என்றும் 95 | பெரிய பறவைகளைக்
கடிந்து விரட்டும் ஓசையும், எந்த நாளும் 95 |
| மணி பூ
முண்டகத்து மணல் மலி கானல் | (நீல)மணி போன்ற
பூக்களையுடைய கழிமுள்ளிகளையுடைய மணல் மிக்க கடற்கரையிலிருக்கும் |
| பரதவர் மகளிர்
குரவையோடு ஒலிப்ப | பரதவப் பெண்டிர்
(ஆடும்)குரவைக் கூத்தின் ஓசையுடன் கூடி ஆரவாரிக்க – |
| ஒருசார் விழவு
நின்ற வியல் ஆங்கண் | ஒரு பக்கத்தே,
விழாக்கள் நிறைந்த அகன்ற ஊர்களில், |
| முழவு தோள்
முரண் பொருநர்க்கு | முழவு
(போலும்)தோளினையுடைய (கல்வியால்)மாறுபடுதலையுடைய பொருநர்க்கு |
| உரு கெழு
பெரும் சிறப்பின் 100 | அச்சம் பொருந்திய
பெரிய சிறப்பினையுடைய
100 |
| இரு பெயர் பேர்
ஆயமொடு | (கன்றும் பிடியும்
என்னும்)இரண்டு பெயரையுடைய பெரிய திரளுடன் |
| இலங்கு
மருப்பின் களிறு கொடுத்தும் | ஒளிர்கின்ற
கொம்புகளையுடைய ஆண்யானைகளைக் கொடுத்தும், |
| பொலம் தாமரை பூ
சூட்டியும் | பொன்னாற் செய்த
தாமரைப் பூவைச் சூட்டியும், |
| நலம் சான்ற
கலம் சிதறும் | நன்மை அமைந்த
அணிகலன்களைக் கொடுக்கும் |
| பல் குட்டுவர்
வெல் கோவே 105 | பல குட்ட நாட்டு அரசரை
வென்ற வேந்தனே –
105 |
| கல் காயும் கடு
வேனிலொடு | பாறைகள் சூடேறும்
கடுமையான வேனிலால் |
| இரு வானம்
பெயல் ஒளிப்பினும் | பெரிய மேகம் மழையை
மறைத்துக்கொண்டாலும், |
| வரும் வைகல்
மீன் பிறழினும் | (நாள்தோறும்
முறையாக)வரும் விடியற்காலத்து வெள்ளி (தன் திசையில்)மாறினாலும், |
| வெள்ளம் மாறாது
விளையுள் பெருக | மிகுந்த நீர் மாறாது
(வருகையினால்)விளைச்சல் பெருக, |
| நெல்லின் ஓதை
அரிநர் கம்பலை 110 | நெற்கதிரின் ஓசையும்,
(அதனை)அறுப்பாரின் ஓசையும், 110 |
| புள் இமிழ்ந்து
ஒலிக்கும் இசையே என்றும் | பறவைகள் ஆரவாரித்து
ஒலிக்கும் ஓசையும், என்றும் |
| சலம் புகன்று
சுறவு கலித்த | பகைமையை விரும்பிச்
சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற |
| புலவு நீர்
வியன் பௌவத்து | புலால்
(நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில், |
| நிலவு கானல்
முழவு தாழை | நிலாப்போலும்
மணலையுடைய கரையினில் குடமுழா(ப்போலும் காயையுடைய) தாழையைக்கொண்ட |
| குளிர்
பொதும்பர் நளி தூவல் 115 | குளிர்ந்த சோலையின்
செறிந்த நீர்திவலையின் ஓசையும்,
115 |
| நிரை திமில்
வேட்டுவர் கரை சேர் கம்பலை | வரிசையாக வருகின்ற
படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும், |
| இரும் கழி
செறுவின் வெள் உப்பு பகர்நரொடு | பெரிய கழியின்
பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு, |
| ஒலி ஓவா கலி
யாணர் | முழங்குதல் ஓயாத
முழக்கத்தோடே புது வருவாயையுடைய |
| முதுவெள்ளிலை
மீக்கூறும் | முதுவெள்ளிலை (என்னும்
ஊரில் வாழும்) – புகழப்படுகின்ற |
| வியன் மேவல்
விழு செல்வத்து 120 | மிகுதியாய்
விரும்பப்படும் சிறந்த செல்வமாகிய,
120 |
| இரு வகையான்
இசை சான்ற | (கல்வி, கேள்வி
என்னும்)இரண்டு வகையாலும் புகழ் நிறைந்த |
| சிறு குடி
பெரும் தொழுவர் | சிறிய ஊர்களின் பெரிய
ஊழியர்கள், |
| குடி கெழீஇய
நால் நிலவரொடு | குடிகள் மிக்க நான்கு
நிலங்களிலும் வாழ்வாரோடு |
| தொன்று
மொழிந்து தொழில் கேட்ப | பழைமையைக் கூறி ஏவல்
கேட்டுநிற்க; |
| கால் என்ன
கடிது உராஅய் 125 | காற்றோ என்று
சொல்லும்படி விரைந்து சென்று,
125 |
| நாடு கெட எரி
பரப்பி | பகைவர் நாடு கெடத்
தீமூட்டி, |
| ஆலங்கானத்து
அஞ்சுவர இறுத்து | தலையாலங்கானம் என்கிற
ஊரின்கண் பகைவர்க்கு அச்சம் தோன்றும்படி தங்கி, |
| அரசு பட அமர்
உழக்கி | அரசர்கள் விழும்படி
போர்செய்து, |
| முரசு கொண்டு
களம் வேட்ட | முரசைக்கொண்டு
களவேள்வி வேட்ட |
| அடு திறல் உயர்
புகழ் வேந்தே 130 | கொல்லுகின்ற ஆற்றல்
மிக்க உயர்ந்த புகழையுடைய வேந்தனே – 130 |
| நட்டவர் குடி
உயர்க்குவை | (உன்னுடன்)நட்புக்
கொண்டவருடைய குடியை உயர்த்துவாய், |
| செற்றவர் அரசு
பெயர்க்குவை | (நீ)சினந்தவரின்
அரசுரிமையை எடுத்துக்கொள்வாய், |
| பேர் உலகத்து
மேஎம் தோன்றி | பெரிய நன்மக்களிடத்தே
மேலாய்த் தோன்றுகையினாலே |
| சீர் உடைய விழு
சிறப்பின் | புகழையுடைய விழுமிய
தலைமையினையும், |
| விளைந்து
முதிர்ந்த விழு முத்தின் 135 | (நன்றாக)விளைந்து
முதிர்ந்த சீரிய முத்தினையும்,
135 |
| இலங்கு வளை
இரும் சேரி | பளிச்சிடும்
சங்கினையுடைய சங்கு குளிப்பார் இருப்பினையும், |
| கள் கொண்டி
குடி பாக்கத்து | கள்ளை(யே)
உணவாகக்கொண்டோரின் குடியிருப்புப் பகுதிகளையும் உடைய, |
| நல் கொற்கையோர்
நசை பொருந | நல்ல கொற்கை என்னும்
ஊரிலுள்ளோர் விரும்பும் வீரவேந்தே – |
| செற்ற தெவ்வர்
கலங்க தலைச்சென்று | (தம்மால்)செறப்பட்ட
பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று |
| அஞ்சுவர
தட்கும் அணங்கு உடை துப்பின் 140 | (அவர்க்கு)அச்சம்
தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும், 140 |
| கோழ் ஊஉன் குறை
கொழு வல்சி | கொழுத்த ஊனையுடைய
இறைச்சித்துண்டு கலந்த கொழுமையான சோற்றினையும், |
| புலவு வில்
பொலி கூவை | புலால்
(நாறும்)வில்லையும், பொலிவுடைய கூவைக்கிழங்கையும், |
| ஒன்றுமொழி ஒலி
இருப்பின் | வஞ்சினம் கூறுதலையும்,
ஆரவாரத்தையுடைய குடியிருப்பினையும் உடையவராகிய |
| தென் பரதவர்
போர் ஏறே | தென்திசை மீனவர்களைப்
பொருது அடக்கிய அரிமா போன்றவனே – |
| அரிய எல்லாம்
எளிதினின் கொண்டு 145 | அரியவை (என்று
எண்ணப்படுபவற்றை) எல்லாம் (மிக)எளிதாகக் கொண்டு, 145 |
| உரிய எல்லாம்
ஓம்பாது வீசி | உரியவற்றை எல்லாம்
வேண்டும் என்று வைத்துக்கொள்ளாமல் (பிறர்க்குக்)கொடுத்து, |
| நனி புகன்று
உறைதும் என்னாது ஏற்றெழுந்து | மிக விரும்பி
(ஊரின்கண்)உறைவோம் என்று சொல்லாமல், மேற்கொண்டு புறப்பட்டு, |
| பனி வார் சிமைய
கானம் போகி | பனி ஒழுகுகின்ற
மலையிடத்தனவாகிய காடுகளைக் கடந்து, |
| அக நாடு புக்கு
அவர் அருப்பம் வௌவி | (பகைவர்)உள்நாடுகளில்
புகுந்து, அவரின் அரண்களைக் கைக்கொண்டு, |
| யாண்டு பல கழிய
வேண்டு புலத்து இறுத்து 150 | ஆண்டுகள் பல கழியுமாறு
(நீ)விரும்பும் இடத்திலே தங்கி,
150 |
| மேம்பட மரீஇய
வெல் போர் குருசில் | (அந்நிலங்கள்)மேன்மைபெற
அங்குத் தங்கிய வெல்லும் போரினையுடைய தலைவனே – |
| உறு செறுநர்
புலம் புக்கு அவர் | மிக்க பகையுடையோர்
நிலத்தில் புகுந்து, அவரின் |
| கடி காவின்
நிலை தொலைச்சி | காவலையுடைய
பொழில்களின் நிலையை அழித்து, |
| இழிபு அறியா
பெரும் தண் பணை | குன்றுதல் அறியாத
பெரிய மருதநிலங்களை |
| குரூஉ கொடிய
எரி மேய 155 | (செந்)நிறக்
கொழுந்துகளையுடைய நெருப்பு மேய்ந்துவிட,
155 |
| நாடு எனும்
பேர் காடு ஆக | நாடு என்னும்
பெயர்(போய்) காடு என்னும் பெயராக, |
| ஆ சேந்த வழி மா
சேப்ப | பசுக்கள் இருந்த
இடங்களில் விலங்குகள் தங்க, |
| ஊர் இருந்த வழி
பாழ் ஆக | ஊர்கள் இருந்த
இடமெல்லாம் பாழிடம் ஆக, |
| இலங்கு வளை மட
மங்கையர் | ஒளிர்கின்ற வளை அணிந்த
இள மங்கையர் |
| துணங்கை அம்
சீர் தழூஉ மறப்ப 160 | துணங்கைக்கூத்தையும்,
சீரான குரவைக்கூத்தையும் மறக்க, 160 |
| அவை இருந்த
பெரும் பொதியில் | அவையத்தோர் இருந்த
பெரிய அம்பலத்தில் |
| கவை அடி கடு
நோக்கத்து | இரட்டையான அடிகளையும்
கடிய பார்வையினையும் உடைய |
| பேய்மகளிர்
பெயர்பு ஆட | பேய்மகளிர் உலாவி ஆட, |
| அணங்கு
வழங்கும் அகல் ஆங்கண் | இல்லுறை தெய்வங்கள்
உலாவும் அகன்ற ஊரில் |
| நிலத்து
ஆற்றும் குழூஉ புதவின் 165 | நிலத்தில் கிடந்த
திரளான வாயில்(நிலை)களில்
165 |
| அரந்தை
பெண்டிர் இனைந்தனர் அகவ | துன்பம்கொண்ட பெண்கள்
வருந்தியவராய் அழுதுநிற்க, |
| கொழும் பதிய
குடி தேம்பி | வளமையான ஊர்களிலிருந்த
குடிகள் பசியால் வருந்தி, |
| செழும் கேளிர்
நிழல் சேர | செழுமையுள்ள
(தம்)உறவினரின் பாதுகாப்பில் சென்றுசேர, |
| நெடு நகர்
வீழ்ந்த கரி குதிர் பள்ளி | பெரிய மாளிகைகளில்
வீழ்ந்துகிடக்கும் கரிந்துபோன குதிர்களில் தங்கியிருக்கும் |
| குடுமி கூகை
குராலொடு முரல 170 | கொண்டையையுடைய
கூகைச்சேவல் தன் பெடையோடே ஒலிஎழுப்ப, 170 |
| கழுநீர்
பொலிந்த கண் அகன் பொய்கை | செங்கழுநீர் மிக்க
இடம் அகன்ற பொய்கைகளில் |
| களிறு மாய்
செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர | யானை(யும்)
மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர, |
| நல் ஏர் நடந்த
நசை சால் விளை வயல் | நல்ல ஏர் உழுத
விரும்புதல் அமைந்த விளைகின்ற வயல்களில் |
| பன் மயிர்
பிணவொடு கேழல் உகள | பல மயிரினையுடைய
பெண்பன்றியோடு ஆண்பன்றி ஓடித்திரிய, |
| வாழாமையின் வழி
தவ கெட்டு 175 | (மனிதர்)வாழாமற்போனதால்
பிழைப்பு மிகவும் கெட்டு 175 |
| பாழ் ஆயின நின்
பகைவர் தேஎம் | பாழ்நிலம் ஆயின நின்
பகைவர் நாடுகள் – |
| எழாஅ தோள்
இமிழ் முழக்கின் | எழுந்துயராத
தோளினையும், முழங்குகின்ற ஓசையையும், |
| மாஅ தாள் உயர்
மருப்பின் | பெருமையையுடைய
கால்களையும், உயர்ந்த கொம்பினையும் உடைய |
| கடும் சினத்த
களிறு பரப்பி | கடிய சினங்கொண்ட
யானைகளை எங்கும் பரப்பி, |
| விரி கடல்
வியன் தானையொடு 180 | விரிந்து நிற்கும்
கடல் போல் அகன்ற படையோடு
180 |
| முருகு உறழ பகை
தலைச்சென்று | முருகனைப் போன்று
பகைவரிடத்திற்குச் சென்று, |
| அகல்
விசும்பின் ஆர்ப்பு இமிழ | விரிந்த
விசும்பெங்கும் ஆரவாரம் முழங்க, |
| பெயல் உறழ கணை
சிதறி | மழை போல அம்புகளை ஏவி, |
| பல புரவி நீறு
உகைப்ப | பல குதிரைகள் துகள்களை
எழுப்ப, |
| வளை நரல வயிர்
ஆர்ப்ப 185 | சங்கம் முழங்க,
கொம்புகள் ஒலிக்க,
185 |
| பீடு அழிய
கடந்து அட்டு அவர் | பெருமை அழியும்படி
வென்று கொன்று, பகைவரின் |
| நாடு அழிய
எயில் வௌவி | நாடுகள் அழியும்படி
(அவரின்)அரண்களைக் கைக்கொண்டு, |
| சுற்றமொடு தூ
அறுத்தலின் | (பகைவரைச்)சேர்ந்தாருடைய
வலியைப் போக்குதலின், |
| செற்ற தெவ்வர்
நின் வழி நடப்ப | (நீ)சினந்த பகைவர்
நின் சொற்படி நடப்ப, |
| வியன் கண் முது
பொழில் மண்டிலம் முற்றி 190 | அகன்ற இடத்தையுடைய
பழைய நாவலந்தீவின் நாடுகளை நின்னதாக வளைத்து, 190 |
| அரசியல்
பிழையாது அற நெறி காட்டி | அரசியலறம் வழுவாது
அறவழியைக் காட்டி, |
| பெரியோர் சென்ற
அடி வழி பிழையாது | பெரியோர்கள் சொல்லிச்
சென்ற பாதை வழியிலிருந்து விலகாமல், |
| குட முதல்
தோன்றிய தொன்று தொழு பிறையின் | மேல் அடிவானத்தில்
காணப்படும் வழிவழியாகத் தொழுதுவரும் பிறையைப் போல |
| வழிவழி சிறக்க
நின் வலம் படு கொற்றம் | வழிமுறை வழிமுறையாகச்
சிறக்க நின் ஆளுமையுள்ள அரசாட்சி – |
| குண முதல்
தோன்றிய ஆர் இருள் மதியின் 195 | கீழ் அடிவானத்தில்
தோன்றும் நிறைந்த இருள் பக்கத்தையுடைய (முழு)மதியைப் போல் 195 |
| தேய்வன கெடுக
நின் தெவ்வர் ஆக்கம் | (கொஞ்சம் கொஞ்சமாகக்
குறைந்து)தேய்ந்து கெடுக நின் பகைவரின் ஆக்கம் – |
| உயர் நிலை
உலகம் அமிழ்தொடு பெறினும் | உயர்ந்த நிலையிலுள்ள
தேவருலகத்தை அமிழ்தத்துடன் பெற்றாலும், |
| பொய் சேண்
நீங்கிய வாய் நட்பினையே | பொய்யைத் தூர விலக்கிய
வாய்மையுள்ள நட்பினையுடையாய்; |
| முழங்கு கடல்
ஏணி மலர் தலை உலகமொடு | முழங்குகின்ற கடலை
எல்லையாகவுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்தாரொடு |
| உயர்ந்த
தேஎத்து விழுமியோர் வரினும் 200 | உயர்ந்த வானுலகத்துத்
தேவரும் (பகைவராய்)வந்தாலும்,
200 |
| பகைவர்க்கு
அஞ்சி பணிந்து ஒழுகலையே | (அப்)பகைவர்க்கு
அஞ்சிப் பணிந்து நடக்கமாட்டாய்; |
| தென் புல
மருங்கின் விண்டு நிறைய | தெற்கு நாட்டு
இடங்களிலுள்ள மலைகள் நிறையுமளவு |
| வாணன் வைத்த
விழு நிதி பெறினும் | வாணன் எனும் சூரன்
வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும், |
| பழி நமக்கு
எழுக என்னாய் விழு நிதி | பழி நமக்கு வரட்டும்
என்றுகூறாய், (மாறாக)சீரிய செல்வப் பெருக்கை |
| ஈதல் உள்ளமொடு
இசை வேட்குவையே 205 | வழங்கும் எண்ணத்துடன்
புகழைமட்டும் விரும்புவாய்; 205 |
| அன்னாய்
நின்னொடு முன்னிலை எவனோ | அத்தன்மையுடையாய்,
உன்னோடு ஒப்பிட்டுக் கூறவல்லோன் எவன்? |
| கொன் ஒன்று
கிளக்குவல் அடு போர் அண்ணல் | மேலான ஒன்றைக்
கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே, |
| கேட்டிசின்
வாழி கெடுக நின் அவலம் | கேட்பாயாக, நெடிது
வாழ்க, கெடுக நின் மயக்கம், |
| கெடாது
நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை | கெடாமல் நிலைபெறுக
உனது தொலைதூரத்தும் சிறந்து விளங்கும் நல்ல புகழ் – |
| தவா
பெருக்கத்து அறா யாணர் 210 | கெடாத
பெருக்கத்தினையுடைய நீங்காத புதுவருவாயும், 210 |
| அழித்து ஆனா
கொழும் திற்றி | (உண்பதற்காகச்)செலவழித்துக்
குன்றாத கொழுவிய தசையும், |
| இழித்து ஆனா பல
சொன்றி | உண்டு குறையாத பலவாகிய
சோறும், |
| உண்டு ஆனா கூர்
நறவின் | பருகிக் குறைவுபடாத
மிக்க கள்ளும், |
| தின்று ஆனா இன
வைகல் | தின்று தீராத
(இன்னோரன்ன)வகைகளும், (இவை எப்பொழுதோ அன்றி)ஒவ்வொரு நாளும், |
| நிலன்
எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை 215 | நிலம் சுமக்கமாட்டாத
நல்ல பல பொருள்திரள்களையும் உடைய, 215 |
| பயன் அறவு
அறியா வளம் கெழு திரு நகர் | பயன் அற்றுப்போதலை
அறியாத வளம் நிரம்பிய அரண்மனைகளில், |
| நரம்பின்
முரலும் நயம் வரு முரற்சி | (யாழ்)நரம்பைப் போல்
பாடும் நயப்பாடு தோன்றும் பாட்டினையுடைய |
| விறலியர் வறும்
கை குறும் தொடி செறிப்ப | விறலியரின் வெறுமையான
கைகளில் குறிய வளைகளைச் செறித்துச்சேர்க்க, |
| பாணர் உவப்ப
களிறு பல தரீஇ | பாணர்கள் மகிழும்படி
யானைகள் பலவற்றையும் கொடுத்து, |
| கலந்தோர் உவப்ப
எயில் பல கடைஇ 220 | தம்மைச்சேர்ந்தோர்
மகிழ எயில்பொருள்கள் பலவற்றைச் செலுத்திக்கொடுத்து, 220 |
| மறம் கலங்க
தலைச்சென்று | (பகைவர்)மறம்
கலங்கும்படி அவரிடத்தே சென்று, |
| வாள் உழந்து
அதன் தாள் வாழ்த்தி | வாட்போரில்
(அவரை)வருத்தி, அதன் முயற்சியைப் பாராட்டி, |
| நாள் ஈண்டிய
நல் அகவர்க்கு | (அன்றைக்)காலையில்
வந்துகூடிய நல்ல பொருநற்குத் |
| தேரொடு மா
சிதறி | தேருடன் குதிரைகளையும்
கொடுத்து, |
| சூடுற்ற சுடர்
பூவின் 225 | சூடுதலுற்ற ஒளிவிடும்
வஞ்சியினையும்,
225 |
| பாடு புலர்ந்த
நறும் சாந்தின் | பூசினபடியே புலர்ந்த
நறிய சந்தனத்தையுமுடைய |
| விழுமிய
பெரியோர் சுற்றம் ஆக | சீரிய பெரியோரைச்
சுற்றமாகக் கொண்டு, |
| கள்ளின் இரும்
பை கலம் செல உண்டு | கள்ளினையுடைய பெரிய
பச்சைக் குப்பிகள் வற்றும்படியாக உண்டு, |
| பணிந்தோர்
தேஎம் தம் வழி நடப்ப | (தமக்குப்)பணிந்தவரின்
நாடுகள் தம் சொற்படி நடப்ப, |
| பணியார் தேஎம்
பணித்து திறை கொண்மார் 230 | (தமக்குப்)பணியாதோர்
நாடுகளைப் பணியச்செய்து (அவரின்)திறையைக் கொள்ள, 230 |
| பருந்து
பறக்கல்லா பார்வல் பாசறை | பருந்துகளும்
பறக்கமுடியாத பார்வையைக் கொண்ட பாசறைகளில் |
| படு கண் முரசம்
காலை இயம்ப | ஒலிக்கின்ற கண்ணையுடைய
முரசுகள் காலையில் ஒலிப்ப, |
| வெடி பட கடந்து
வேண்டு புலத்து இறுத்த | கேடு உண்டாகக்
கடந்துசென்று, (அவர்தம் நாட்டில்)வேண்டிய இடத்தில் தங்கி, |
| பணை கெழு
பெரும் திறல் பல் வேல் மன்னர் | பெருமைகொண்ட பெரிய
வலிமையுள்ள, பல வேல்களைக் கொண்ட மன்னர்கள், |
| கரை பொருது
இரங்கும் கனை இரு முந்நீர் 235 | கரையைப் பொருது
முழங்கும் செறிதலையுடைய பெரிய கடலின் 235 |
| திரை இடு
மணலினும் பலரே உரை செல | அலைகள் குவிக்கின்ற
மணலினும் பலரே – (புகழோடு |
| மலர் தலை உலகம்
ஆண்டு கழிந்தோரே | அகன்ற இடத்தையுடைய
இந்த உலகத்தை ஆண்டு, பின் இறந்துபோனோர்) – |
| அதனால் குண
கடல் கொண்டு குட கடல் முற்றி | எனவே, கீழ்க்கடலில்
நீரை முகந்து மேலைக்கடலை வளைத்து, |
| இரவும்
எல்லையும் விளிவு இடன் அறியாது | இரவென்றும் பகலென்றும்
அறிந்துகொள்ள இடமின்றி, |
| அவலும்
மிசையும் நீர் திரள்பு ஈண்டி 240 | மேடு பள்ளங்கள்
எல்லாவற்றிலும் நீர் திரண்டு குவிந்து,
240 |
| கவலை அம்
குழும்பின் அருவி ஒலிப்ப | கவலைக்கிழங்கு எடுத்த
குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க, |
| கழை வளர் சாரல்
களிற்று இனம் நடுங்க | மூங்கில் வளர்ந்த
மலைச்சரிவுகளில் யானைகள் நடுங்கிநிற்க, |
| வரை முதல்
இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து | மலை அடிவாரத்தில்
முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி, |
| சிதரல் பெரும்
பெயல் சிறத்தலின் தாங்காது | சிதறுதலையுடைய பெரு
மழை மிகுதலால், பெருக்கெடுத்து, |
| குண கடற்கு
இவர்தரும் குரூஉ புனல் உந்தி 245 | கீழ்க்கடலுக்குப்
பாயும் (கலங்கல்)நிறத்தையுடைய மழைநீர், முனைந்து 245 |
| நிவந்து செல்
நீத்தம் குளம் கொள சாற்றி | ஓங்கிச் செல்லும்
வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப, |
| களிறு
மாய்க்கும் கதிர் கழனி | யானையை மறைக்கும்
அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும், |
| ஒளிறு இலஞ்சி
அடை நிவந்த | விளங்கும்
மடுக்களிலும், இலைக்கு மேலே உயர்ந்த |
| முள் தாள சுடர்
தாமரை | முள்ளுடைய
அடித்தண்டையுடைய ஒளிவிடும் தாமரைப்பூவினையும், |
| கள் கமழும் நறு
நெய்தல் 250 | தேன் கமழும் மணமிக்க
நெய்தல் பூவினையும்,
250 |
| வள் இதழ் அவிழ்
நீலம் | வளவிய இதழ் விரிந்த
நீலப்பூவினையும், |
| மெல் இலை அரி
ஆம்பலொடு | மெல்லிய இலையினையும்
வண்டுகளையும் உடைய ஆம்பல்பூவோடு, |
| வண்டு இறைகொண்ட
கமழ் பூ பொய்கை | வண்டுகள் தங்குதல்
கொண்ட மணங்கமழும் பூக்களைக்கொண்ட பொய்கைகளிலும், |
| கம்புள் சேவல்
இன் துயில் இரிய | கம்புட்கோழி (தன்)இனிய
உறக்கம் கெட்டோட, |
| வள்ளை நீக்கி
வய மீன் முகந்து 255 | வள்ளைக்கொடிகளை
ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு, 255 |
| கொள்ளை சாற்றிய
கொடு முடி வலைஞர் | (தாம்)கொண்டவற்றைக்
கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர், |
| வேழ பழனத்து
நூழிலாட்டு | கொறுக்கைச்சிப்
புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும், |
| கரும்பின்
எந்திரம் கட்பின் ஓதை | கரும்பு ஆட்டும்
ஆலைகளின் ஓசையும், களை பறிக்கும் ஓசையும், |
| அள்ளல் தங்கிய
பகடு உறு விழுமம் | சேற்றில்
மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை |
| கள் ஆர் களமர்
பெயர்க்கும் ஆர்ப்பே 260 | கள்ளை உண்ணும் களமர்
பெயர்க்கும் ஆரவாரமும்,
260 |
| ஒலிந்த பகன்றை
விளைந்த கழனி | தழைத்த பகன்றையின்
(நெல்)முற்றிய வயல்களில் |
| வன் கை வினைஞர்
அரி பறை இன் குரல் | வலிய கைகளைக் கொண்ட
நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும், இனிய ஓசையுடைய |
| தளி மழை
பொழியும் தண் பரங்குன்றில் | துளிகளையுடைய
முகில்கள் பெய்யும் குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில் |
| கலி கொள்
சும்மை ஒலி கொள் ஆயம் | விழாக்கொண்டாடும்
ஆரவாரமும், ஆரவாரத்தையுடைய மகளிர் திரள் |
| ததைந்த கோதை
தாரொடு பொலிய 265 | (தம்மிடத்து)தாழ
வீழ்ந்த கோதை (தம் கணவர் மார்பின்)மாலையொடு அழகுபெறக் கூட 265 |
| புணர்ந்து உடன்
ஆடும் இசையே அனைத்தும் | அவர்களுடன் சேர்ந்து
நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும் |
| அகல் இரு
வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப | அகன்ற பெரிய வானத்தில்
முழங்கி, இனிதாக இசைக்க, |
| குருகு நரல மனை
மரத்தான் | குருகுப்பறவைகள்
ஒலியெழுப்ப, மனையிலுள்ள மரங்கள்தோறும் |
| மீன் சீவும்
பாண் சேரியொடு | மீனைச்
செதுக்கி(வேண்டாதவற்றை)க் கழிக்கும் பாணர் குடியிருப்புடன் |
| மருதம் சான்ற
தண் பணை சுற்றி 270 | மருதநிலம் ஒழுக்கம்
அமைந்த குளிர்ந்த வயல்வெளிகள் சூழ்ந்த ஒருபகுதியும் – 270 |
| ஒருசார் சிறு
தினை கொய்ய கவ்வை கறுப்ப | சிறிய தினைக்கதிர்கள்
கொய்யப்பட, எள்ளின் இளங்காய்கள் முற்றிக்கறுக்க, |
| கரும் கால்
வரகின் இரும் குரல் புலர | கரிய தாளினையுடைய
வரகின் கரிதாகிய கதிர் முற்றிக் காய்ந்துபோக, |
| ஆழ்ந்த
குழும்பில் திரு மணி கிளர | ஆழமான குழிகளில்
திருவினையுடைய மணிகள் விளங்க, |
| எழுந்த
கடற்றில் நன் பொன் கொழிப்ப | வளர்ந்த காட்டில் நல்ல
பொன் மேலே பிறழ, |
| பெரும் கவின்
பெற்ற சிறு தலை நௌவி 275 | பெரும் அழகைப் பெற்ற
சிறிய தலையையுடைய நௌவிமான் 275 |
| மட கண்
பிணையொடு மறுகுவன உகள | மடப்பத்தையுடைய
கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள, |
| சுடர் பூ
கொன்றை தாஅய நீழல் | ஒளிவிடும் பூக்களுடைய
கொன்றை பரந்த நிழலில், |
| பாஅய் அன்ன
பாறை அணிந்து | பரப்பினாற் போன்ற பாறை
அழகுபெற்று, |
| நீலத்து அன்ன
பைம் பயிர் மிசைதொறும் | நீலமணியை ஒத்த
பசிய(கரும்பச்சை நிற) பயிர்களிடந்தோறும் |
| வெள்ளி அன்ன
ஒள் வீ உதிர்ந்து 280 | வெள்ளியின் நிறத்தை
ஒத்த ஒள்ளிய பூக்கள் உதிர்ந்து,
280 |
| சுரி முகிழ்
முசுண்டையொடு முல்லை தாஅய் | முறுக்குண்ட
அரும்புகளையுடைய முசுண்டையுடன் முல்லையும் பரவ, |
| மணி மருள்
நெய்தல் உறழ காமர் | நீலமணியென்று மருளும்
நெய்தல், மாறும்படி, விருப்பத்தையுடைய, |
| துணி நீர் மெல்
அவல் தொய்யிலொடு மலர | தெளிந்த நீரையுடைய
நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மலர, |
| வல்லோன் தைஇய
வெறிக்களம் கடுப்ப | வல்லவன் ஒருவன் இழைத்த
வெறியாடும் களம் போன்று |
| முல்லை சான்ற
புறவு அணிந்து ஒருசார் 285 | முல்லை ஒழுக்கம்
அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும் – 285 |
| நறும் காழ்
கொன்று கோட்டின் வித்திய | நறிய அகிலையும்
சந்தனத்தையும் வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த |
| குறும் கதிர்
தோரை நெடும் கால் ஐயவி | குறிய கதிர்களைக்
கொண்ட தோரைநெல்லும், நெடிய தண்டையுடைய வெண்சிறுகடுகும், |
| ஐவன வெண்ணெலொடு
அரில் கொள்பு நீடி | ஐவனம் என்னும் வெள்ளிய
நெல்லொடு பிணக்கம் கொண்டு வளர்ந்து, |
| இஞ்சி மஞ்சள்
பைம் கறி பிறவும் | இஞ்சியும், மஞ்சளும்,
பசுத்த மிளகுக்கொடியும், பிறவும் |
| பல் வேறு
தாரமொடு கல்லகத்து ஈண்டி 290 | பலவாய் வேறுபட்ட
பண்டங்களும் கல்தரையில் குவிக்கப்பட்டு, 290 |
| தினை விளை
சாரல் கிளி கடி பூசல் | தினை விளையும்
மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும், |
| மணி பூ அவரை
குரூஉ தளிர் மேயும் | பன்மணி போன்ற
பூவினையுடைய அவரையின் நிறமிக்க தளிரைத் தின்னும் |
| ஆமா கடியும்
கானவர் பூசல் | ஆமாவை ஓட்டுகின்ற
கானவரின் ஆரவாரமும், |
| சேணோன் அகழ்ந்த
மடி வாய் பயம்பின் | குறவன் தோண்டின, மூடின
வாயையுடைய பொய்க்குழியில்(விழுந்த) |
| வீழ் முகம்
கேழல் அட்ட பூசல் 295 | கீழ்நோக்கிய
பார்வையையுடைய ஆண்பன்றியைக் கொன்ற ஆரவாரமும், 295 |
| கரும் கால்
வேங்கை இரும் சினை பொங்கர் | கரிய அடிமரத்தைக்கொண்ட
வேங்கையின் பெரியதாய்க் கிளைத்த கொம்புகளில்(பூத்த) |
| நறும் பூ
கொய்யும் பூசல் இரும் கேழ் | நறிய பூவைப் பறிக்கும்
ஆரவாரமும், கரிய நிறத்தையுடைய |
| ஏறு அடு வய
புலி பூசலொடு அனைத்தும் | பன்றியைக் கொல்லும்
வலிமையினையுடைய புலியின் ஆரவாரத்தோடு, எல்லா ஆரவாரமும் |
| இலங்கு வெள்
அருவியொடு சிலம்பகத்து இரட்ட | விளங்குகின்ற வெள்ளிய
அருவி முழக்கத்தோடே மலைச்சாரல்களில் எதிரொலிக்க |
| கரும் கால்
குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து
300 | கரிய காலையுடைய
குறிஞ்சியின் ஒழுக்கம் அமைந்த பக்கமலைகள் சூழ்ந்து, 300 |
| அரும் கடி மா
மலை தழீஇ ஒருசார் | பெறுதற்கரிய
சிறப்பினையுடைய பெரிய மலைகள் தழுவி(நிற்கும் குறிஞ்சி நிலம்), ஒரு பக்கம் – |
| இரு வெதிர்
பைம் தூறு கூர் எரி நைப்ப | பெரிய மூங்கிலின் பசிய
புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க, |
| நிழத்த யானை
மேய் புலம் படர | (உணவின்றி)கொஞ்சம்
கொஞ்சமாக வலு இழந்த யானைகள் (வேறு)மேய் நிலங்களுக்குச் செல்ல, |
| கலித்த இயவர்
இயம் தொட்டு அன்ன | மகிழ்ந்த இசைஞர்கள்
(தம்)இசைக்கருவிகளை முழக்கினாற் போன்று, |
| கண் விடுபு
உடையூஉ தட்டை கவின் அழிந்து 305 | முங்கிலின் கணுக்கள்
திறக்கப்பட்டு உடைவதனால் தட்டை அழகு அழிந்து, 305 |
| அருவி ஆன்ற அணி
இல் மா மலை | அருவிகள் இல்லையான
அழகில்லாத பெரிய மலையிடத்தில், |
| வை கண்டு அன்ன
புல் முளி அம் காட்டு | வைக்கோலைக் கண்டாற்
போன்று புல் உலர்ந்த அழகிய காட்டில், |
| கமம் சூழ் கோடை
விடரகம் முகந்து | நிறைவினையுடைய
சூறாவளியை முழைஞ்சிடங்கள் முகந்துகொள்கையினால், |
| கால் உறு
கடலின் ஒலிக்கும் சும்மை | காற்று மிகுந்த
கடல்போல் ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய; |
| இலை வேய்
குரம்பை உழை அதள் பள்ளி 310 | குழையால் வேய்ந்த
குடியிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும், 310 |
| உவலை கண்ணி வன்
சொல் இளைஞர் | தழை விரவின
கண்ணியினையும் கடிய சொல்லினையுமுடைய இளைஞர் |
| சிலை உடை கையர்
கவலை காப்ப | வில்லையுடைய கையை
உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க; |
| நிழல் உரு
இழந்த வேனில் குன்றத்து | நிழல் தன் வடிவை
இழத்தற்குக் காரணமான முதுவேனில் காலத்தையுடைய மலையிடத்து |
| பாலை சான்ற
சுரம் சேர்ந்து ஒருசார் | பாலை ஒழுக்கம் அமைந்த
அருநிலம் சேரப்பட்டு ஒரு பக்கம் – |
| முழங்கு கடல்
தந்த விளங்கு கதிர் முத்தம் 315 | ஒலிக்கும் கடல் தந்த
விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்களும், 315 |
| அரம் போழ்ந்து
அறுத்த கண் நேர் இலங்கு வளை | அரம் கீறியறுத்த இடம்
நேரிதாகிய விளங்கும் வளைகளும், |
| பரதர் தந்த பல்
வேறு கூலம் | பரதர் கொண்டுவந்த
பலவாய் வேறுபட்ட பண்டங்களும், |
| இரும் கழி
செறுவின் தீம் புளி வெள் உப்பு | கரிய கழியிடத்துப்
பாத்தியில் விற்கும் தித்திப்புக்கூட்டிப் பொறித்த புளியோடே வெள்ளிய உப்பும், |
| பரந்து ஓங்கு
வரைப்பின் வன் கை திமிலர் | பரந்து உயர்ந்த
கானலில் வலிமையான கையினையுடைய திமிலர் |
| கொழு மீன்
குறைஇய துடி கண் துணியல் 320 | கொழுவிய மீன்களை
அறுத்த உடுக்கையின் கண் போன்ற (மீன்)துண்டங்களும்(ஏற்றப்பட்ட) 320 |
| விழுமிய நாவாய்
பெருநீர் ஓச்சுநர் | சீரிய மரக்கலங்களைக்
கடலில் இயக்கும் மாலுமிகள் |
| நனம் தலை
தேஎத்து நன் கலன் உய்ம்மார் | அகன்ற இடத்தையுடைய
நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல |
| புணர்ந்து உடன்
கொணர்ந்த புரவியொடு அனைத்தும் | பலருடன் கூடி,
தம்முடன் கொண்டுவந்த குதிரைகளோடே முழுவதும் |
| வைகல்தோறும்
வழிவழி சிறப்ப | நாள்தோறும்
வழிவழியாகச் சிறக்க, |
| நெய்தல் சான்ற
வளம் பல பயின்று ஆங்கு 325 | நெய்தல் ஒழுக்கம்
அமைந்த வளம் பலவும் நெருங்கப்பட்டு, அங்கு 325 |
| ஐம் பால்
திணையும் கவினி அமைவர | ஐந்துவகை நிலங்களும்
அழகுபெறப் பொருந்துதல் தோன்ற – |
| முழவு இமிழும்
அகல் ஆங்கண் | முழவு முழங்கும் அகன்ற
ஊரில், |
| விழவு நின்ற
வியல் மறுகின் | விழாக்கோலம் நிலைபெற்ற
அகன்ற தெருவினையும், |
| துணங்கை அம்
தழூஉவின் மணம் கமழ் சேரி | துணங்கைக்
கூத்தினையும், அழகிய குரவைக் கூத்தினையும் உடைய மணம் கமழ்கின்ற சேரியினையும், |
| இன் கலி யாணர்
குழூஉ பல பயின்று ஆங்கு 330 | இனிய செருக்கினையுடைய
புதுவருவாயினையுடைய குடித்திரளையும் உடைய அங்கே, 330 |
| பாடல் சான்ற
நல் நாட்டு நடுவண் | (புலவர்)பாடுதல்
நிறைந்த நல்ல நாட்டிற்கு நடுவணதாய் – |
| கலை தாய உயர்
சிமையத்து | முசுக்கலைகள்
தாவுகின்ற உயர்ந்த மலையுச்சியில், |
| மயில் அகவும்
மலி பொங்கர் | மயில்கள் அகவும்
நிறைந்த மரக்கிளைகளில் |
| மந்தி ஆட மா
விசும்பு உகந்து | மந்திகள் ஊசலாட, பெரிய
வானில் உயர்ந்து |
| முழங்கு கால்
பொருத மரம் பயில் காவின் 335 | ஆரவாரிக்கின்ற
பெருங்காற்று மோதிய மரங்கள் அடர்ந்த சோலையிலும், 335 |
| இயங்கு புனல்
கொழித்த வெண் தலை குவவு மணல் | ஓடுகின்ற நீர்
கொழித்துக்கொணர்ந்த வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய |
| கான் பொழில்
தழீஇய அடைகரைதோறும் | காடுகளும் சோலைகளும்
சூழ்ந்த நீரடையும் கரைகள்தோறும், |
| தாது சூழ்
கோங்கின் பூ மலர் தாஅய் | தாதுக்கள் சூழ்ந்த
கோங்கினையுடைய பூவும் (ஏனை)மலர்களும் பரந்து |
| கோதையின்
ஒழுகும் விரி நீர் நல் வரல் | மாலையைப் போன்று ஒழுகி
ஓடும் பெருநீர் நன்றாகி வருதலையுடைய |
| அவிர் அறல்
வையை துறைதுறைதோறும் 340 | விளங்குகின்ற
அறலையுடைய வையையின் துறைகள்தோறும் 340 |
| பல் வேறு பூ
திரள் தண்டலை சுற்றி | பலவாய் வேறுபட்ட
பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்த, |
| அழுந்துபட்டு
இருந்த பெரும்பாண் இருக்கையும் | நெடுங்காலம்
அடிப்பட்டிருந்த பெரும்பாணர்களின் குடியிருப்பினையும் – |
| நிலனும் வளனும்
கண்டு அமைகல்லா | நிலத்தையும்
(அதன்)வளத்தையும் கண்டு முடிவுபோகாத |
| விளங்கு பெரும்
திருவின் மான விறல் வேள் | விளங்கும் பெரிய
செல்வத்தினை உடைய மான விறல் வேள்(என்னும் குறுநில மன்னனுடைய) |
| அழும்பில் அன்ன
நாடு இழந்தனரும் 345 | அழும்பில் என்னும் ஊரை
ஒத்த நாடுகளை இழந்தவர்களும், 345 |
| கொழும் பல்
பதிய குடி இழந்தனரும் | செல்வத்தினையுடைய பல
ஊர்களிடத்தனவாகிய குடிகளை இழந்தவர்களும், |
| தொன்று கறுத்து
உறையும் துப்பு தர வந்த | அதிக நாட்களாய்
கறுவிக்கொண்டு இருக்கும் — (தன்)வலிமையினால் வந்த — |
| அண்ணல் யானை
அடு போர் வேந்தர் | தலைமைச்சிறப்புடைய
யானையைக் கொல்லும் — போர்த்தொழிலை உடைய, வேந்தரை, |
| இன் இசை முரசம்
இடை புலத்து ஒழிய | இனிய ஓசையினையுடைய
முரசம் (உழிஞைப் போர்க்கு)இடைநிலத்தே கிடக்கும்படி, |
| பல் மாறு ஓட்டி
பெயர் புறம்பெற்று 350 | பலவாய்க் கிடந்த
மாறுபாட்டினை அகற்றி, (பகைவர் அத்தனை)பேரின் முதுகைக் கண்டு, 350 |
| மண் உற ஆழ்ந்த
மணி நீர் கிடங்கின் | (கீழே)மண்ணுள்ள அளவும்
ஆழ்ந்த, நீலமணி போலும் நீரையுடைய கிடங்கினையும், |
| விண் உற ஓங்கிய
பல் படை புரிசை | விண்ணைத் தொடுமளவு
உயர்ந்த பல படைகளையுடைய மதிலினையும், |
| தொல் வலி
நிலைஇய அணங்கு உடை நெடு நிலை | தொன்றுதொட்ட வலிமை
நிலைபெற்ற, தெய்வத்தையுடைத்தாகிய நெடிய நிலையினையும், |
| நெய் பட கரிந்த
திண் போர் கதவின் | நெய் பலகாலும்
இடுதலால் கருகின திண்ணிய வாய் பொருத்தப்பட்ட கதவினையும், |
| மழை ஆடும்
மலையின் நிவந்த மாடமொடு 355 | முகில் உலாவும் மலைபோல
உயர்ந்த மாடங்களோடு,
355 |
| வையை அன்ன
வழக்கு உடை வாயில் | வைகை போன்று (மக்களின்
இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில், |
| வகை பெற
எழுந்து வானம் மூழ்கி | பலவகையால் பெயர்பெற
எழுந்து வானத்தே சென்று(ப்பின்) |
| சில் காற்று
இசைக்கும் பல் புழை நல் இல் | சில்லென வீசும் காற்று
ஒலிக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்களையும் |
| யாறு கிடந்து
அன்ன அகல் நெடும் தெருவில் | ஆறு கிடந்தாற் போன்று
அகன்ற நெடிய தெருவில் – |
| பல் வேறு
குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப 360 | பல வேறுபட்ட
குழுவினரின் ஓசை எழுந்து ஒலிக்க,
360 |
| மா கால் எடுத்த
முந்நீர் போல | பெருமையையுடைய காற்று
எடுத்த கடலொலி போல |
| முழங்கு இசை
நன் பணை அறைவனர் நுவல | முழங்கும் ஓசையையுடைய
நல்ல முரசத்தைச் சாற்றுபவர் செய்திகூற, |
| கயம் குடைந்து
அன்ன இயம் தொட்டு இமிழ் இசை | குளத்தைக் கையால்
குடைந்தது போன்று இசைக்கருவியங்களை இயக்க எழும் இசைகேட்டு |
| மகிழ்ந்தோர்
ஆடும் கலி கொள் சும்மை | மகிழ்ந்தோர் ஆடும்
செருக்கினைக் கொண்ட ஆரவாரத்தையும் உடைய, |
| ஓவு கண்டு அன்ன
இரு பெரு நியமத்து 365 | ஓவியத்தில்
கண்டாற்போன்ற இரண்டு பெரிய அங்காடித்தெருவின்கண் 365 |
| சாறு அயர்ந்து
எடுத்த உருவ பல் கொடி | விழா நிகழ்த்திக்
கட்டின அழகினையுடைய பல கொடிகளும், |
| வேறு பல் பெயர
ஆர் எயில் கொளக்கொள | வேறுபட்ட பல
பெயர்களையுடைய (உறுதி)நிறைந்த அரண்களைக் கைப்பற்றக் கைப்பற்ற |
| நாள்தோறு
எடுத்த நலம் பெறு புனை கொடி | நாள்தோறும் உயர்த்திய
நன்மையுடைய அலங்காரமான கொடியும், |
| நீர் ஒலித்து
அன்ன நிலவு வேல் தானையொடு | கடல் ஒலித்ததைப் போன்ற
நிலைபெற்ற வேல் படையோடே(பகைவரை) |
| புலவு பட
கொன்று மிடை தோல் ஓட்டி 370 | புலால் நாற்றம்
உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்து, 370 |
| புகழ் செய்து
எடுத்த விறல் சால் நன் கொடி | புகழை உண்டாக்கி
எடுத்த வெற்றி அமைந்த நல்ல கொடியும், |
| கள்ளின் களி
நவில் கொடியொடு நன் பல | கள்ளின் களிப்பைக்
கூறும் கொடியும், (அவற்றுடன்)நன்றாகிய பல |
| பல் வேறு குழூஉ
கொடி பதாகை நிலைஇ | பலவாய் வேறுபட்ட
திரண்ட கொடிகளோடு பெருங்கொடிகளும் நிலைபெற்று, |
| பெரு வரை
மருங்கின் அருவியின் நுடங்க | பெரிய மலையிடத்து
அருவியைப் போன்று நெளிந்துஆட, |
| பனைமீன்
வழங்கும் வளை மேய் பரப்பின் 375 | பனைமீன்கள் உலாவும்
சங்கு மேய்கின்ற கடலிடத்தில், 375 |
| வீங்கு பிணி
நோன் கயிறு அரீஇ இதை புடையூ | இறுகும்
பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப் |
| கூம்பு முதல்
முருங்க எற்றி காய்ந்து உடன் | பாய்மரம் அடியில்
முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக் |
| கடும் காற்று
எடுப்ப கல் பொருது உரைஇ | கடிய காற்று
எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து, |
| நெடும் சுழி
பட்ட நாவாய் போல | நெடிய சுழற்காற்றில்
அகப்பட்ட மரக்கலத்தைப் போல |
| இரு தலை பணிலம்
ஆர்ப்ப சினம் சிறந்து 380 | இரண்டு பக்கமும்
(முன்னும் பின்னும்)சங்குகள் ஒலிக்க, வெகுளி மிக்கு 380 |
| கோலோர் கொன்று
மேலோர் வீசி | கோல் கொண்டு
அடக்குவோரைக் கொன்று, பாகரைத் தூக்கி எறிந்து, |
| மென் பிணி வன்
தொடர் பேணாது காழ் சாய்த்து | மெல்லிய பிணிப்பையுடைய
வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து, |
| கந்து நீத்து
உழிதரும் கடாஅ யானையும் | கம்பத்தை விட்டுச்
சுழலும் கடாத்தையுடைய யானையும்; |
| அம் கண் மால்
விசும்பு புதைய வளி போழ்ந்து | அழகிய இடத்தையுடைய
பெரிய வானம் மறையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு |
| ஒண் கதிர்
ஞாயிற்று ஊறு அளவா திரிதரும் 385 | ஒள்ளிய கதிரையுடைய
பகலவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும் 385 |
| செம் கால்
அன்னத்து சேவல் அன்ன | சிவந்த காலையுடைய
அன்னத்தினது சேவலை ஒத்த, |
| குரூஉ மயிர்
புரவி உராலின் பரி நிமிர்ந்து | நிறமிக்க மயிரினையுடைய
குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு, |
| கால் என
கடுக்கும் கவின் பெறு தேரும் | காற்றுப்போல் விரையும்
அழகிய தேரும், |
| கொண்ட கோலன்
கொள்கை நவிற்றலின் | (கோலைக்)கொண்ட வலவன்
தான் பயிற்றுவித்தைக் கூறியபடி ஓட்டலின், |
| அடிபடு
மண்டிலத்து ஆதி போகிய 390 | தடம் பதிந்த வட்டமான
பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின 390 |
| கொடி படு சுவல
இடுமயிர் புரவியும் | ஒழுங்குபட்ட
பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும் |
| வேழத்து அன்ன
வெருவரு செலவின் | யானை போன்ற
அச்சம்தரும் போக்கினையுடைய |
| கள் ஆர் களமர்
இரும் செரு மயக்கமும் | கள்ளை உண்ட மறவரின்
பெரிய போரைச்செய்யும் கலக்கமும், |
| அரியவும்
பெரியவும் வருவன பெயர்தலின் | (இவ்வாறு
தடுத்தற்கு)அரியனவும், எண்ணிறந்தனவுமாகிய நால்வகைப் படையும் வந்து போகையினால்
– |
| தீம் புழல்
வல்சி கழல் கால் மழவர் 395 | இனிய குழல்போன்ற
தின்பண்டங்களை உணவாகக்கொண்ட கழலணிந்த காலினையுடைய மழவரின் 395 |
| பூ தலை முழவின்
நோன் தலை கடுப்ப | பூவைத் தலையில் கொண்ட
முழவின் வலிய கண்ணைப் போன்ற |
| பிடகை பெய்த
கமழ் நறும் பூவினர் | கூடைகளில் இட்டுவைத்த
கமழ்கின்ற நறிய பூவினையுடையவரும், |
| பல வகை விரித்த
எதிர் பூ கோதையர் | பலவகையாக
விரித்துவைத்த ஒன்றற்கொன்று மாறுபட்ட பூமாலையுடையவரும், |
| பலர் தொகுபு
இடித்த தாது உகு சுண்ணத்தர் | பலர் கூடி இடித்த
துகள் பறக்கும் சுண்ணாம்பு உடையவரும், |
| தகை செய் தீம்
சேற்று இன் நீர் பசும் காய் 400 | அழகு செய்யும் இனிய
களி கலந்த இனிய நீரினையுடைய பசிய பாக்குடன், 400 |
| நீடு கொடி
இலையினர் கோடு சுடு நூற்றினர் | நீண்ட கொடி(யில்
விளையும்) வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டு(ப் பொடித்த)
சுண்ணாம்பையுடையவரும், |
| இரு தலை வந்த
பகை முனை கடுப்ப | இரண்டு பக்கத்திலும்
(படை)வந்த பகைப்புலத்தை ஒக்க, |
| இன் உயிர்
அஞ்சி இன்னா வெய்துயிர்த்து | இனிய உயிருக்கு அஞ்சி,
இன்னாததாகப் பெருமூச்செறிந்து, |
| ஏங்குவனர்
இருந்து அவை நீங்கிய பின்றை | ஏங்குபவராயிருந்து,
அப்படை சென்ற பின்னர், |
| பல் வேறு
பண்ணியம் தழீஇ திரி விலைஞர் 405 | பல வேறுபட்ட
பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும், 405 |
| மலை புரை
மாடத்து கொழு நிழல் இருத்தர | மலை போன்ற மாடங்களின்
குளிர்ந்த நிழலில் இருக்க – |
| இரும் கடல்
வான் கோது புரைய வாருற்று | கரிய கடலில்
(மிதக்கும்)வெண்மையான சங்கைப் போல, வாருதல் உற்று(தலை முடியைச் சீவி) |
| பெரும் பின்
இட்ட வால் நரை கூந்தலர் | பெரியதாகப்
பின்பக்கத்தில் இட்ட (முழுதும்)வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய, |
| நன்னர் நலத்தர்
தொன் முது பெண்டிர் | நல்ல வனப்பினையுடைய,
பழைமை மூத்த பெண்டிர் — |
| செம் நீர்
பசும்பொன் புனைந்த பாவை 410 | {சிவந்த
தன்மையினையுடைய பசும்பொன்னால் செய்த பாவை 410 |
| செல் சுடர் பசு
வெயில் தோன்றி அன்ன | வீழ்கின்ற ஞாயிற்றின்
மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற |
| செய்யர்
செயிர்த்த நோக்கினர் மட கண் | சிவந்த
நிறத்தையுடையவரும்; (ஆண்களை)வருத்தும் பார்வையை உடையவரும்; மடப்பத்தையுடைய
கண்ணோடே |
| ஐஇய கலுழும்
மாமையர் வை எயிற்று | (பார்ப்பவர்)வியந்து
கலங்கும் மாமை நிறமுடையவரும்; கூர்மையான பற்களின் |
| வார்ந்த வாயர்
வணங்கு இறை பணை தோள் | ஒழுங்குபட்ட
வாயையுடையவரும்; வளைந்த மூட்டுக்களையுடைய மூங்கில்(போன்ற) தோளினையும், |
| சோர்ந்து உகு
அன்ன வயக்குறு வந்திகை 415 | நெகிழ்ந்து
விழுந்துவிடுவது போன்ற மின்னுகின்ற கைவந்திகைகளையும், 415 |
| தொய்யில்
பொறித்த சுணங்கு எதிர் இள முலை | தொய்யிலால்
பொறிக்கப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும், |
| மை உக்கு அன்ன
மொய் இரும் கூந்தல் | மை ஒழுகினாற் போன்ற
செறிந்த கரிய கூந்தலினையுமுடைய |
| மயில் இயலோரும்
மட மொழியோரும் | மயிலின்
தன்மையையுடையோரும்; மடப்பத்தையுடைய மொழியினையுடையோரும்;(ஆகிய மகளிர்) |
| கைஇ மெல்லிதின்
ஒதுங்கி கை எறிந்து | (தம்மை)அலங்கரித்து,
மெத்தெனெ நடந்து, கையைத்தட்டிக் |
| கல்லா
மாந்தரொடு நகுவனர் திளைப்ப 420 | கல்லாத இளைஞருடன்
சிரிப்பவராய் உண்டு துய்க்க,}
420 |
| புடை அமை
பொலிந்த வகை அமை செப்பில் | — புடைத்தல் அமைந்த
அழகிய பலவகைப்பட்ட செப்புக்களில், |
| காமர் உருவின்
தாம் வேண்டு பண்ணியம் | விருப்பம் மருவிய
வடிவினையுடைய நுகர்வோர் விரும்பும் பண்ணியங்களை |
| கமழ் நறும்
பூவொடு மனைமனை மறுக | கமழ்கின்ற நறிய பூவோடு
மனைகள்தோறும் எடுத்துச்செல்ல – |
| மழை கொள
குறையாது புனல் புக மிகாது | முகில்கள் முகக்கக்
குறையாது, (ஆற்று)வெள்ளம் உட்புக நிரம்பிவழியாது, |
| கரை பொருது
இரங்கும் முந்நீர் போல 425 | கரையை மோதி ஒலிக்கும்
கடலைப் போல,
425 |
| கொளக்கொள
குறையாது தரத்தர மிகாது | (வாங்குவோர்)எடுக்க
எடுக்கக் குறையாது, (வணிகர்)கொணரக் கொணர நிறையாது, |
| கழுநீர் கொண்ட
எழு நாள் அந்தி | தீர்த்த நீரில்
(திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில், |
| ஆடு துவன்று
விழவின் நாடு ஆர்த்தன்றே | ஆட்டங்கள்
நிறைவுபெறும் விழாவின்போது (மக்கள்)ஆரவாரித்ததைப் போன்று, |
| மாடம் பிறங்கிய
மலி புகழ் கூடல் | மாடத்தால் விளக்கமுற்ற
மிக்க புகழையுடைய மதுரையில் |
| நாளங்காடி நனம்
தலை கம்பலை 430 | நாளங்காடியையுடைய
அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும் – 430 |
| வெயில் கதிர்
மழுங்கிய படர் கூர் ஞாயிற்று | வெயிலையுடைய சுடர்கள்
(வெப்பம்)குறைந்த, விரிந்து பரவுதல் மிக்க ஞாயிற்றையுடைய |
| செக்கர் அன்ன
சிவந்து நுணங்கு உருவின் | செவ்வானத்தை ஒத்த,
சிவந்து நுண்ணிதான வடிவில், |
| கண் பொருபு
உகூஉம் ஒண் பூ கலிங்கம் | கண்களை மயக்கி
தெறித்துவிழப்பண்ணும் ஒள்ளிய பூவேலைப்பாடமைந்த ஆடைகளை, |
| பொன் புனை
வாளொடு பொலிய கட்டி | பொன்னால்
அலங்கரிக்கப்பட்ட உடைவாளோடு அழகுபெறக் கட்டி, |
| திண் தேர்
பிரம்பின் புரளும் தானை 435 | திண்ணிய தேரின்
பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும், 435 |
| கச்சம் தின்ற
கழல் தயங்கு திருந்து அடி | கச்சம் இறுக்கித்
தழும்பேறிப்போயிருந்த கழல் அசையும் திருத்தமான கால்களையும், |
| மொய்ம்பு
இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல் | (உலகத்தார்)வலிமையைக்
கடந்து (புகழோடு) திரியும் ஒப்பற்ற பெரிய வேப்பமாலையினையும், |
| மணி தொடர்ந்து
அன்ன ஒண் பூ கோதை | மாணிக்கம் ஒழுகினாற்
போன்ற ஒளிரும் செங்கழுநீர் மாலையினையும், |
| அணி கிளர்
மார்பின் ஆரமொடு அளைஇ | அழகு விளங்கும்
மார்பில் முத்துமாலையோடே கலந்து அணிந்து, |
| கால் இயக்கு
அன்ன கதழ் பரி கடைஇ 440 | காற்றின் இயக்கம்
போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி, 440 |
| காலோர் காப்ப
கால் என கழியும் | காலாட்கள்
(சூழ்ந்து)காக்க, காற்று என விரைந்து செல்லும், |
| வான வண் கை
வளம் கெழு செல்வர் | முகில்போன்று
(வரையாமற்கொடுக்கும்)வளவிய கையினையுடையராகிய வளப்பம் பொருந்திய செல்வர் |
| நாள் மகிழ்
இருக்கை காண்மார் பூணொடு | நாட்காலத்தே
மகிழ்ந்திருக்கின்ற இருப்பின்கண் இருந்து விழாக் காண – (ஏனைய)அணிகலன்களோடே |
| தெள் அரி பொன்
சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் | தெள்ளிய
உள்மணிகளையுடைய பொன்னாற் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி, ஒளிரும்
நெருப்பில்(இட்டு) |
| தா அற விளங்கிய
ஆய் பொன் அவிர் இழை 445 | குற்றமற்று விளங்கிய
அழகிய பொன்னாற் செய்த பளபளக்கும் அணிகலன்களையுடைய, 445 |
| அணங்கு வீழ்வு
அன்ன பூ தொடி மகளிர் | தெய்வமகளிர்
கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின், |
| மணம் கமழ்
நாற்றம் தெருவுடன் கமழ | மணம் கமழ்கின்ற வாசனை
தெருவெங்கும் வீச, |
| ஒண் குழை
திகழும் ஒளி கெழு திரு முகம் | ஒள்ளிய மகரக்குழை
விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய முகம், |
| திண் காழ் ஏற்ற
வியல் இரு விலோதம் | திண்ணிய
கொடித்தண்டுகளில் ஏற்ற அகலத்தினையுடைய பெருங் கொடிகளைத் |
| தெண் கடல்
திரையின் அசை வளி புடைப்ப 450 | தெளிந்த கடல் அலைகளைப்
போல் எழுந்து விழும்படி காற்று மோதுகையினால், 450 |
| நிரை நிலை
மாடத்து அரமியம்தோறும் | ஒழுங்குபட்ட
நிலைமையினையுடைய மாடங்களின் நிலா முற்றங்கள்தோறும் |
| மழை மாய்
மதியின் தோன்றுபு மறைய | மேகங்களில் மறையும்
திங்களைப் போன்று தோன்றித்தோன்றி மறைய – |
| நீரும் நிலனும்
தீயும் வளியும் | நீரும் நிலனும்
நெருப்பும் காற்றும் |
| மாக விசும்போடு
ஐந்து உடன் இயற்றிய | திசைகளையுடைய
வெளியுடன்(ஆன) ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த |
| மழு வாள்
நெடியோன் தலைவன் ஆக 455 | மழுவாகிய வாளையுடைய
பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க, 455 |
| மாசு அற
விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் | அழுக்கற்றுத் திகழும்
வடிவினையுடையோர், சூழ்ந்த ஒளியினையுடைய |
| வாடா பூவின்
இமையா நாட்டத்து | வாடாத பூக்களையும்,
இமைக்காத கண்ணினையும், |
| நாற்ற உணவின்
உரு கெழு பெரியோர்க்கு | அவியாகிய
உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு, |
| மாற்று அரு
மரபின் உயர் பலி கொடுமார் | பதிலீடு செய்வதற்கு
முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு, |
| அந்தி விழவில்
தூரியம் கறங்க 460 | அந்திப் பொழுதின்
விழாவில் இசைக்கருவிகள் முழங்க –
460 |
| திண் கதிர்
மதாணி ஒண் குறுமாக்களை | திண்ணியதாய் ஒளிரும்
பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப் |
| ஓம்பினர் தழீஇ
தாம் புணர்ந்து முயங்கி | பேணியவராய்
(அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து, |
| தாது அணி தாமரை
போது பிடித்து ஆங்கு | தாது சேர்ந்த
தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல |
| தாமும் அவரும்
ஓராங்கு விளங்க | தாமும் அம் மக்களும்
ஓரிடத்தே சேரநின்று திகழும்படி, |
| காமர் கவினிய
பேரிளம் பெண்டிர் 465 | ஆசைப்படும்படி
அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர், 465 |
| பூவினர்
புகையினர் தொழுவனர் பழிச்சி | பூவையுடையவராய்,
புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி |
| சிறந்து
புறங்காக்கும் கடவுள் பள்ளியும் | சிறப்பாக
(அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் – |
| சிறந்த வேதம்
விளங்க பாடி | சிறந்த வேதங்களைத்
திருத்தமாக ஓதி, |
| விழு சீர்
எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து | சீரிய தலைமையோடு
பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு, |
| நிலம் அமர்
வையத்து ஒருதாம் ஆகி 470 | நிலம் நிலைகொண்ட
(இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து) 470 |
| உயர் நிலை
உலகம் இவணின்று எய்தும் | உயர்ந்த நிலையையுடைய
வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும் |
| அற நெறி பிழையா
அன்பு உடை நெஞ்சின் | அறத்தின் வழி (ஒருக்
காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய |
| பெரியோர் மேஎய்
இனிதின் உறையும் | பெரியோர் பொருந்தி
இன்புற்று வதியும் |
| குன்று
குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் | மலையைக் குடைந்ததைப்
போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் – |
| வண்டு பட
பழுநிய தேன் ஆர் தோற்றத்து 475 | வண்டுகள் படியும்படி
பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய 475 |
| பூவும்
புகையும் சாவகர் பழிச்ச | பூக்களையும்,
புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப, |
| சென்ற காலமும்
வரூஉம் அமயமும் | சென்ற காலத்தையும்
வருகின்ற காலத்தையும் |
| இன்று இவண்
தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து | இன்று இவ்வுலகில்
தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே நன்றாக உணர்ந்து, |
| வானமும்
நிலனும் தாம் முழுது உணரும் | வானுலகத்தையும்
நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும், |
| சான்ற கொள்கை
சாயா யாக்கை 480 | (தமக்கு)அமைந்த
விரதங்களையும், இளையாத உடம்பினையும், 480 |
| ஆன்று அடங்கு
அறிஞர் செறிந்தனர் நோன்மார் | நிறைந்து அடங்கின
அறிவினையும் உடையார் நெருங்கினராய் இருந்து நோற்றற்கு, |
| கல் பொளிந்து
அன்ன இட்டு வாய் கரண்டை | கல்லைப் பொளிந்தாற்
போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப் |
| பல் புரி
சிமிலி நாற்றி நல்குவர | பல வடங்களையுடைய
நூலுறியில் தூக்கி, அருளுதலையுடைய, |
| கயம் கண்டு
அன்ன வயங்கு உடை நகரத்து | குளத்தைக் கண்டதைப்
போல விளங்குதலுடைய கோயிலிடத்து, |
| செம்பு இயன்று
அன்ன செம் சுவர் புனைந்து 485 | செம்பால் செய்ததைப்
போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி, 485 |
| நோக்கு விசை
தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி | கண்பார்க்கும்
விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து ஓங்கி, |
| இறும்பூது
சான்ற நறும் பூ சேக்கையும் | வியப்பமைந்த நறிய
பூக்களையுடைய (அமண்)பள்ளியும் – |
| குன்று பல
குழீஇ பொலிவன தோன்ற | மலைகள் பலவும் திரண்டு
பொலிவன (போலத்)தோன்ற; |
| அச்சமும்
அவலமும் ஆர்வமும் நீக்கி | அச்சத்தையும்,
வருத்தத்தையும், பற்றுள்ளத்தையும் போக்கி, |
| செற்றமும்
உவகையும் செய்யாது காத்து 490 | பகைமையையும்,
மகிழ்ச்சியையும் கொள்ளாமல் (தம்மைப்)பாதுகாத்து, 490 |
| ஞெமன் கோல்
அன்ன செம்மைத்து ஆகி | துலாக்கோலைப் போன்ற
நடுவுநிலைமை உடையதாய், |
| சிறந்த கொள்கை
அறங்கூறவையமும் | சிறந்த கொள்கைகள்
(உடைய)அறங்கூறவையமும் – |
| நறும் சாந்து
நீவிய கேழ் கிளர் அகலத்து | நறிய சந்தனத்தைப்
பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய், |
| ஆவுதி மண்ணி
அவிர் துகில் முடித்து | யாகங்களைச் செய்து,
பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி, |
| மா விசும்பு
வழங்கும் பெரியோர் போல 495 | அகன்ற வானத்தில்
நடமாடும் தேவர்களைப் போன்று,
495 |
| நன்றும் தீதும்
கண்டு ஆய்ந்து அடக்கி | நன்மை தீமைகளை(த் தம்
அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி, |
| அன்பும் அறனும்
ஒழியாது காத்து | அன்புநெறியையும்
அறச்செயலையும் (கடைப்பிடித்தல்)தவறாதபடி பாதுகாத்து, |
| பழி ஒரீஇ
உயர்ந்து பாய் புகழ் நிறைந்த | பழியை வெறுத்தொதுக்கி
உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற |
| செம்மை சான்ற
காவிதி மாக்களும் | தலைமை அமைந்த
காவிதிப்பட்டம் பெற்றாரும் – |
| அற நெறி
பிழையாது ஆற்றின் ஒழுகி 500 | அறத்தின்
வழியினின்றும் தவறாது, நல்வழியே நடந்து —
500 |
| குறும் பல்
குழுவின் குன்று கண்டு அன்ன | அருகருகேயமைந்த பலவான
சிறுமலைகளைக் கண்டாற் போன்று |
| பருந்து
இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் | பருந்துகள்
(இளைப்பாறி)இருந்து (பின்னர்)உயர்ந்தெழும் பல(தொழிலால்) சிறந்த நல்ல இல்லங்களில் |
| பல் வேறு
பண்டமோடு ஊண் மலிந்து கவினி | பலவாய் வேறுபட்ட
பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று, |
| மலையவும்
நிலத்தவும் நீரவும் பிறவும் | மலையிடத்தனவும்,
நிலத்திடத்தனவும், நீரிடத்தனவும் பிற இடத்தனவுமாகிய |
| பல் வேறு திரு
மணி முத்தமொடு பொன் கொண்டு 505 | பல் வேறான அழகிய
மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு 505 |
| சிறந்த தேஎத்து
பண்ணியம் பகர்நரும் | — சிறந்த
(அயல்)நாட்டுப் பண்டங்களை விற்போரும் – |
| மழை ஒழுக்கு
அறாஅ பிழையா விளையுள் | மழை பெய்தல்
அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய |
| பழையன் மோகூர்
அவையகம் விளங்க | பழையன் (என்னும்
மன்னனின்)மோகூரிடத்து அரசவை திகழுமாறு |
| நான் மொழி
கோசர் தோன்றி அன்ன | நான்மொழிக்கோசர்
வீற்றிருந்தாற் போன்று, |
| தாம் மேஎ
தோன்றிய நாற்பெருங்குழுவும் 510 | தாம் மேலாய் விளங்கிய
நாற்பெருங்குழுவும் –
510 |
| கோடு போழ்
கடைநரும் திரு மணி குயினரும் | சங்கினை அறுத்துக்
கடைவாரும், அழகிய மணிகளைத் துளையிடுவாரும், |
| சூடுறு நன்
பொன் சுடர் இழை புனைநரும் | சுடுதலுற்ற நல்ல
பொன்னை விளங்கும் அணிகலன் செய்வாரும், |
| பொன் உரை
காண்மரும் கலிங்கம் பகர்நரும் | பொன்னை (உரைத்து
அதன்)மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்பாரும், |
| செம்பு நிறை
கொண்மரும் வம்பு நிறை முடிநரும் | செம்பை நிறுத்துக்
கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும், |
| பூவும்
புகையும் ஆயும் மாக்களும் 515 | பூக்களையும்
சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்,
515 |
| எ வகை
செய்தியும் உவமம் காட்டி | பல வகைப்பட்ட
தொழில்களையும் ஒப்புக்காட்டிக் |
| நுண்ணிதின்
உணர்ந்த நுழைந்த நோக்கின் | கூரிதாக உணர்ந்த கூரிய
அறிவினையுடைய |
| கண்ணுள்
வினைஞரும் பிறரும் கூடி | ஓவியரும், பிறரும்
கூடி, |
| தெண் திரை
அவிர் அறல் கடுப்ப ஒண் பல் | தெளிந்த ஓடைநீரில்
பளபளக்கும் கருமணலை ஒப்ப, ஒளிருகின்ற பற்பல |
| குறியவும்
நெடியவும் மடி தரூஉ விரித்து 520 | சிறியனவும்
பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து, 520 |
| சிறியரும்
பெரியரும் கம்மியர் குழீஇ | சிறியோரும்
பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு, |
| நால் வேறு
தெருவினும் கால் உற நிற்றர | நான்காய் வேறுபட்ட
தெருக்கள்தோறும் (ஒருவர் காலொடு ஒருவர்)கால் நெருங்க நிற்றலைச் செய்ய |
| கொடும் பறை
கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் | வளைந்த பறையினையுடைய
கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும், |
| தண் கடல் நாடன்
ஒண் பூ கோதை | குளிர்ந்த கடல்
சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய |
| பெருநாள்
இருக்கை விழுமியோர் குழீஇ 525 | பெரிய நாளோலக்க
இருப்பில் சீரியோர் திரண்டு
525 |
| விழைவு கொள்
கம்பலை கடுப்ப பல உடன் | விரும்புதல் கொண்டு
(எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப – பலவுடன், |
| சேறும்
நாற்றமும் பலவின் சுளையும் | சாறும், மணமும்
(கொண்ட)பலாப்பழத்தின் சுளைகளையும், |
| வேறு பட கவினிய
தேம் மாங்கனியும் | ஒன்றற்கொன்று வேறுபட்ட
அழகிய மாவின் பழங்களையும், |
| பல் வேறு
உருவின் காயும் பழனும் | பலவாய் வேறுபட்ட
வடிவினையுடைய காய்களையும், பழங்களையும், |
| கொண்டல்
வளர்ப்ப கொடி விடுபு கவினி 530 | மழை வளர்க்கக்
கொடிவிட்டு அழகுபெற்று,
530 |
| மென் பிணி
அவிழ்ந்த குறு முறி அடகும் | மெல்லிய சுருள்
விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும், |
| அமிர்து இயன்று
அன்ன தீம் சேற்று கடிகையும் | அமிழ்தினால் செய்தது
போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும், |
| புகழ் பட
பண்ணிய பேர் ஊன் சோறும் | புகழ்ந்து கூறுமாறு
சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும், |
| கீழ் செல
வீழ்ந்த கிழங்கொடு பிறவும் | கீழே போகுமாறு வளர்ந்த
கிழங்குடன், பிற பதார்த்தங்களையும், |
| இன் சோறு
தருநர் பல் வயின் நுகர 535 | இனிய (கற்கண்டுச்)சோறு
தரப்பெற்றோர் பலவிடங்களிலும் உண்ண – 535 |
| வால் இதை
எடுத்த வளி தரு வங்கம் | வெண்மையான பாய்
விரித்த, காற்றுக் கொண்டுவந்த மரக்கலங்கள்(கொணர்ந்த) |
| பல் வேறு
பண்டம் இழிதரும் பட்டினத்து | பலவாய் வேறுபட்ட
சரக்குகள் இறங்குதலைச் செய்யும் பட்டினத்து |
| ஒல்லென் இமிழ்
இசை மான கல்லென | ஒல்லென முழங்குகின்ற
ஓசையைப் போன்று, கல்லென |
| நனம் தலை
வினைஞர் கலம் கொண்டு மறுக | அகன்ற இடத்தையுடைய
(பிறநாட்டு)வணிகர் (இங்குச் செய்த)அணிகலன்களை (வாங்கி)எடுத்துச்செல்ல, |
| பெரும் கடல்
குட்டத்து புலவு திரை ஓதம் 540 | பெரிய கடலின்
ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி 540 |
| இரும் கழி
மருவி பாய பெரிது எழுந்து | கரிய கழியில் தழுவிப்
பாய்வதற்காக மிகுந்து எழுந்து, |
| உரு கெழு
பானாள் வருவன பெயர்தலின் | அச்சம் பொருந்திய
நடுயாமத்தே வருவனவாய் மீளுதலால், |
| பல் வேறு
புள்ளின் இசை எழுந்து அற்றே | பல வேறுபட்ட பறவைகளின்
ஓசை எழுந்ததைப் போன்றது |
| அல்லங்காடி
அழிதரு கம்பலை | அந்திக்காலத்துக்
கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம் – |
| ஒண் சுடர்
உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து
545 | ஒள்ளிய கதிர்களின்
வெப்பமும் ஒளியும் மழுங்க, சினம் குறைந்து, 545 |
| சென்ற ஞாயிறு
நன் பகல் கொண்டு | (மேற்றிசையில்)சென்ற
ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு, |
| குட முதல்
குன்றம் சேர குண முதல் | மேற்கு அடிவானத்தில்
மலையினைச் சேர, கீழ் வானத்தில் |
| நாள் முதிர்
மதியம் தோன்றி நிலா விரிபு | (பதினாறு)நாள்
முதிர்ந்த (நிறை)மதி எழுந்து, நிலவுக்கதிர் பரவுகையினால், |
| பகல் உரு உற்ற
இரவு வர நயந்தோர் | பகலின் வடிவை ஒத்த
இராக்காலம் வரும்படியும், (நெஞ்சால்)விரும்பினோரான — |
| காதல் இன் துணை
புணர்மார் ஆய் இதழ் 550 | காதல் (மிக்க தம்)இனிய
துணைவரைக் கூடும்பொருட்டு, ஆராய்ந்த இதழ்களையுடைய 550 |
| தண் நறும்
கழுநீர் துணைப்ப இழை புனையூஉ | குளிர்ந்த நறிய
செங்கழுநீர் மலர்கள் துணையாக நிற்க, அணிகளை அணிந்து, |
| நல் நெடும்
கூந்தல் நறு விரை குடைய | நல்ல நீண்ட கூந்தலில்
மணமிக்க நறுமணத் தைலத்தை ஊடுருவித்தேய்க்க, |
| நரந்தம் அரைப்ப
நறும் சாந்து மறுக | கத்தூரியை அரைக்க,
நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க, |
| மெல் நூல்
கலிங்கம் கமழ் புகை மடுப்ப | மெல்லிய நூலால் செய்த
ஆடைகளுக்கு மணக்கின்ற (அகிற்)புகையை ஊட்ட, |
| பெண்
மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர் 555 | — பெண்டிரே
விரும்பும் மான்பிணை(போலும்) நோக்கினையுடைய மகளிர் 555 |
| நெடும் சுடர்
விளக்கம் கொளீஇ நெடு நகர் | நீண்ட சுடர்(விடும்)
விளக்கினை ஏற்றி, பெரிய ஊரின் |
| எல்லை எல்லாம்
நோயொடு புகுந்து | எல்லைக்குட்பட்ட
இடமெல்லாம் (நயந்தோர்க்கு)நோயைச் செய்தலோடே புகுந்து |
| கல்லென் மாலை
நீங்க நாணு கொள | கல்லெனும்
ஆரவாரத்தையுடைய மாலைக்காலம் நீங்க – நாணம் கொண்டு, |
| ஏழ் புணர்
சிறப்பின் இன் தொடை சீறியாழ் | (இசை)ஏழும் தன்னிடத்தே
கூடின சிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை, |
| தாழ்பு அயல்
கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து 560 | தாழ்ந்து (அதன்)அயலே
(பாடும் தம்)மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்களை மாறிமாறி இசைத்து(சுருதி
கூட்டி), 560 |
| வீழ் துணை தழீஇ
வியல் விசும்பு கமழ | (தம்மை)விரும்புகின்ற
துணைவரை முயங்கி, அகன்ற விண்ணில் (சென்று)மணக்கும்படி, |
| நீர் திரண்டு
அன்ன கோதை பிறக்கு இட்டு | நீர் திரண்டாற் போல
(வெள்ளிய பூக்களால் புனைந்த)மாலைகளை கொண்டையில் சூடி, |
| ஆய் கோல் அவிர்
தொடி விளங்க வீசி | அழகிய திரண்ட ஒளிரும்
தொடிகள் பளபளக்கக் கையை வீசி நடந்து, |
| போது அவிழ்
புது மலர் தெரு உடன் கமழ | மொட்டுக்கள் மலரும்
புதிய பூக்கள் தெருவெங்கும் கமழ, |
| மேதகு தகைய
மிகு நலம் எய்தி 565 | பெருமை தருகின்ற
அழகினையுடைய மிகுகின்ற நன்மையுண்டாக ஒப்பனைசெய்து, 565 |
| பெரும் பல்
குவளை சுரும்பு படு பன் மலர் | பெரிய பலவாகிய
செங்கழுநீரில் சுரும்புகள் மொய்க்கும் பல பூக்களை, |
| திறந்து மோந்து
அன்ன சிறந்து கமழ் நாற்றத்து | (கையால்)மலரச்செய்து
மோந்து பார்த்ததைப் போன்ற மிகுந்து மணக்கும் வாசனையுடன், |
| கொண்டல் மலர்
புதல் மான பூ வேய்ந்து | மழைக்கு மலர்ந்த
மலர்களின் குவியலைப் போல (ஏனைப்)பூக்களையும் பரக்கச்சூடி, |
| நுண் பூண் ஆகம்
வடு கொள முயங்கி | நுண்ணிய
அணிகலன்களையுடைய மார்பைத் (தம் மார்பில்)வடுப்படும்படியாகத் தழுவி, |
| மாய பொய் பல
கூட்டி கவவு கரந்து 570 | வஞ்சனையுடைய
பொய்வார்த்தை பலவற்றைப் பேசி, (தம் மனத்து)எண்ணத்தை மறைத்து, 570 |
| சேயரும்
நணியரும் நலன் நயந்து வந்த | தொலைவிலுள்ளாரும்
அருகிலுள்ளாரும் வடிவழகை விரும்பி வந்த |
| இளம் பல்
செல்வர் வளம் தப வாங்கி | இளவயதினராகிய பல
செல்வந்தரை (அவருடைய)செல்வம்(எல்லாம்) கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு, |
| நுண் தாது
உண்டு வறும் பூ துறக்கும் | (பூவின்)நுண்ணிய தாதை
உண்டு, (பின்னர் தாதற்ற)வறிய பூவை விட்டுவிலகும் |
| மென் சிறை
வண்டு இனம் மான புணர்ந்தோர் | மெல்லிய சிறகையுடைய
வண்டுகளைப் போன்று, (தம்மை)நுகர்ந்தோரது |
| நெஞ்சு ஏமாப்ப
இன் துயில் துறந்து 575 | நெஞ்சு கலக்கமுறும்படி
இனிய கூட்டத்தைக் கைவிட்டு,
575 |
| பழம் தேர்
வாழ்க்கை பறவை போல | பழத்தைத் தேடியலையும்
வாழ்க்கையையுடைய பறவைகளைப் போல, |
| கொழும் குடி
செல்வரும் பிறரும் மேஎய | வளவிய குடி(யிற்
பிறந்த)செல்வரும், பிறமாந்தரும் பொருந்தியுள்ள, |
| மணம் புணர்ந்து
ஓங்கிய அணங்கு உடை நல் இல் | (புதிய)மணம்
நிகழ்ந்தமையால் உயர்ச்சிபெற்ற, இல்லுறை தெய்வங்களையுடைய நல்ல இல்லங்களில், |
| ஆய் பொன் அவிர்
தொடி பாசிழை மகளிர் | ஆராய்ந்த பொன்னாலான
ஒளிரும் தொடியினையும் பசிய(புதிய) அணியையும் (உடைய)மகளிர் |
| ஒண் சுடர்
விளக்கத்து பலர் உடன் துவன்றி 580 | ஒளிரும் சுடரையுடைய
விளக்கின் ஒளியில் பலரும் சேர நெருங்கி, 580 |
| நீல் நிற
விசும்பில் அமர்ந்தனர் ஆடும் | நீல நிறத்தையுடைய
வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும் |
| வானவ மகளிர்
மான கண்டோர் | தெய்வமகளிர் போல,
(தம்மைக்)கண்டோருடைய |
| நெஞ்சு
நடுக்குறூஉ கொண்டி மகளிர் | நெஞ்சு நடுக்கமடையும்
வரைவின் மகளிர், |
| யாம நல் யாழ்
நாப்பண் நின்ற | யாமத்திற்குரிய நல்ல
யாழ்களுக்கு நடுவே (அவற்றின் இசையோடு இயைந்து)நின்ற |
| முழவின்
மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர் 585 | முழவின்
முழக்கத்திற்கு மகிழ்ந்தனராய் ஆடி, ஆழமான நீரினையுடைய 585 |
| பனி துறை குவவு
மணல் முனைஇ மென் தளிர் | குளிர்ந்த
துறையிடத்துக் குவிந்த மணலில் தீவிரமாக ஆடி, மெல்லிய தளிர்களைக் |
| கொழும் கொம்பு
கொழுதி நீர் நனை மேவர | கொழுவிய
கொம்புகளிலிருந்து கொய்து, நீரின் (அகத்தேயுள்ள)அரும்பொடு சேரக்கட்டின |
| நெடும் தொடர்
குவளை வடிம்பு உற அடைச்சி | நெடிய தொடராகவுள்ள
குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி, |
| மணம் கமழ்
மனைதொறும் பொய்தல் அயர | மணம் கமழும்
(தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய – |
| கணம் கொள்
அவுணர் கடந்த பொலம் தார் 590 | குழாம் கொண்ட
அவுணர்களைக் கொன்றருளிய, பொன்னால் செய்த மாலையினையுடைய 590 |
| மாயோன் மேய ஓண
நல் நாள் | திருமால் பிறந்த
திருவோணமாகிய நல்ல நாளில், |
| கோணம் தின்ற
வடு ஆழ் முகத்த | தோட்டி (வளைந்த
வாள்)வெட்டின வடு அழுந்தின முகத்தை உடையனவும், |
| சாணம் தின்ற
சமம் தாங்கு தட கை | சாணைக்கல்லால்
தழும்பேறின, போரைத் தாங்கும் பெரிய கையினையும், |
| மறம் கொள் சேரி
மாறு பொரு செருவில் | வீரத்தைத்
(தம்மிடத்தே)கொண்ட (மறவர்கள் வாழும்)சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த
போரில், |
| மாறாது உற்ற
வடு படு நெற்றி 595 | (அடி)மாறாமையாற்பட்ட
(கொம்பு அழுந்தின)தழும்பினையுடைய நெற்றியினையுடையனவும், 595 |
| சுரும்பு ஆர்
கண்ணி பெரும் புகல் மறவர் | வண்டுகள் நிறைந்த
போர்ப்பூவினையும், பெரிய விருப்பத்தையுமுடைய மறவர்கள் |
| கடும் களிறு
ஓட்டலின் காணுநர் இட்ட | கடிய களிறுகளை
(ஒன்றோடொன்று பொருமாறு)செலுத்துதலால், (அதனைக்)காணவந்தோர் இட்டுச்செய்த |
| நெடும் கரை
காழ் அக நிலம் பரல் உறுப்ப | நெடிய கரையாகிய கரிய
இடமுடைய நிலத்தின்கண் பரல்கற்கள் தம் கால்களை உறுத்தும்படி, |
| கடும் கள்
தேறல் மகிழ் சிறந்து திரிதர | கடிய கள்ளினது தெளிவை
உண்டு களிப்பு மிக்குத் திரிதலைச் செய்ய – |
| கணவர் உவப்ப
புதல்வர் பயந்து 600 | தம் கணவர் மகிழும்படி
குழந்தையைப் பெற்று,
600 |
| பணைத்து ஏந்து
இள முலை அமுதம் ஊற | பருத்து உயர்ந்த இளைய
முலை பால் சுரக்க, |
| புலவு புனிறு
தீர்ந்து பொலிந்த சுற்றமொடு | புலால் நாற்றமுள்ள
ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு, |
| வள மனை மகளிர்
குள நீர் அயர | வளப்ப மிக்க
செல்வத்தையுடைய இல்லத்து மகளிர் குளத்து நீரில் குளித்துநிற்க – |
| திவவு
மெய்நிறுத்து செவ்வழி பண்ணி | வார்க்கட்டினைச்
சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து, |
| குரல் புணர்
நல் யாழ் முழவோடு ஒன்றி 605 | குரல் என்னும் நரம்பு
கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி, 605 |
| நுண் நீர்
ஆகுளி இரட்ட பல உடன் | நுண்ணிய தன்மையுள்ள
சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு, |
| ஒண் சுடர்
விளக்கம் முந்துற மடையொடு | ஒளிரும் சுடரையுடைய
(நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு, |
| நன் மா மயிலின்
மென்மெல இயலி | நல்ல பெரிதான மயில்
போல மெள்ள மெள்ள நடந்து, |
| கடும் சூல்
மகளிர் பேணி கைதொழுது | முதிர்ந்த சூல்கொண்ட
மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது, |
| பெரும் தோள்
சாலினி மடுப்ப ஒருசார் 610 | பெரிய தோளினையுடைய
இறைவாக்குப்பெண் மடைகொடுக்க – ஒருபக்கத்தே, 610 |
| அரும் கடி
வேலன் முருகொடு வளைஇ | அரிய அச்சத்தைச்
செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு, |
| அரி கூடு இன்
இயம் கறங்க நேர்நிறுத்து | அரித்தெழும்
ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி, |
| கார் மலர்
குறிஞ்சி சூடி கடம்பின் | கார் (காலத்தில்
மலரும்)குறிஞ்சிப் பூவைச் சூடி, கடப்பமரத்தின்கண் |
| சீர் மிகு
நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ | புகழ் மிக்க முருகனை
வழிபடுதலால், தழுவிக் கைகோத்து, |
| மன்றுதொறும்
நின்ற குரவை சேரிதொறும் 615 | மன்றுகள்தோறும் நின்ற
குரவைக்கூத்தும் – (முதல் யாமத்தில் மாலை 6 – 9) குடியிருப்புகள்தோறும்
(நின்ற) 615 |
| உரையும்
பாட்டும் ஆட்டும் விரைஇ | புனைந்துரைகளும்
பாட்டுக்களும் (பலவகைப்பட்ட)கூத்துக்களும் (தம்முள்)கலந்து, |
| வேறுவேறு
கம்பலை வெறி கொள்பு மயங்கி | வேறு வேறான ஆரவாரம்
ஆவேசம்கொண்டு கலந்து, |
| பேர் இசை
நன்னன் பெரும் பெயர் நன்னாள் | பெரிய புகழையுடைய
நன்னனுடைய பிறந்தநாளில், |
| சேரி விழவின்
ஆர்ப்பு எழுந்து ஆங்கு | சேரிகளில் உள்ளார்
விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே |
| முந்தை யாமம்
சென்ற பின்றை 620 | முற்பட்ட (முதல்)யாமம்
நிகழ்ந்த பின்னர் – (இரண்டாம் யாமத்தில் – இரவு 9 – 12 நள்ளிரவு) 620 |
| பணிலம் கலி
அவிந்து அடங்க காழ் சாய்த்து | சங்குகள் ஆரவாரம்
ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலை வாங்கிப் |
| நொடை நவில்
நெடும் கடை அடைத்து மட மதர் | பண்டங்களுக்கு
விலைகூறும் நெடிய கடையை அடைத்து, மடப்பத்தினையும் செருக்கினையும் |
| ஒள் இழை மகளிர்
பள்ளி அயர | ஒளிவிடும்
அணிகலன்களையும் உடைய மகளிர் துயிலுதலைச் செய்ய, |
| நல் வரி இறாஅல்
புரையும் மெல் அடை | நல்ல வரிகளையுடைய
தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும், |
| அயிர்
உருப்புற்ற ஆடு அமை விசயம் 625 | கண்டசருக்கரையை
வெப்பமேற்றிச் சமைத்தல் அமைந்த பாகினை(க் கூட்டிய) 625 |
| கவவொடு பிடித்த
வகை அமை மோதகம் | உள்ளீட்டோடெ பிடித்த
வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும், |
| தீம் சேற்று
கூவியர் தூங்குவனர் உறங்க | இனிய கூழினையும் உடைய
அப்ப வாணிகரும் தூங்குவனராய் உறங்க, |
| விழவின் ஆடும்
வயிரியர் மடிய | திருநாளின்கண்
கூத்தாடும் கூத்தர் துயில்கொள்ள, |
| பாடு ஆன்று
அவிந்த பனி கடல் புரைய | ஒலி நிறைந்து அடங்கிய
குளிர்ந்த கடல் போல, |
| பாயல் வளர்வோர்
கண் இனிது மடுப்ப 630 | படுக்கையில்
துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில – (மூன்றாம் யாமத்தில் நள்ளிரவு 12 – 3
காலை) 630 |
| பானாள் கொண்ட
கங்குல் இடையது | நடுநிசியைக் கழித்த
இரவின் இடையாமத்தே |
| பேயும்
அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் | பேய்களும், வருத்தும்
தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத |
| கூற்ற கொல்
தேர் கழுதொடு கொட்ப | கூற்றுவனின் கொலைத்
தேராகிய கழுதுடன் சுழன்றுதிரிய, |
| இரும் பிடி மேஎ
தோல் அன்ன இருள் சேர்பு | கரிய பிடியின்கண்
மேவின தோலை ஒத்த கருமையுடைய இருளைச் சேர்ந்து, |
| கல்லும் மரனும்
துணிக்கும் கூர்மை 635 | கல்லையும் மரத்தையும்
வெட்டும் கூர்மையுடைய
635 |
| தொடலை வாளர்
தொடுதோல் அடியர் | தொங்குதல்
(உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்; |
| குறங்கு இடை
பதித்த கூர் நுனை குறும்பிடி | தொடையில்
(தெரியாமற்கிடக்கும்படி)அழுத்தின கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த
உடைவாளையும், |
| சிறந்த கருமை
நுண் வினை நுணங்கு அறல் | மிக்க கருமையான,
நுணுக்கமான வேலைப்பாடு(கொண்ட), நுண்ணிய கருமணலின் |
| நிறம் கவர்பு
புனைந்த நீல கச்சினர் | நிறத்தை வாங்கிப்
புனைந்த(தைப் போன்ற) நீலநிறக் கச்சினையும் உடையவராய்; |
| மெல் நூல் ஏணி
பன் மாண் சுற்றினர் 640 | மெல்லிய நூலாற் செய்த
ஏணியை (இடுப்பைச்சுற்றிப்)பல முறை சுற்றிய சுற்றினையுடையவராய்;640 |
| நிலன் அகழ்
உளியர் கலன் நசைஇ கொட்கும் | நிலத்தை அகழும்
உளியினை உடையவராய்; பேரணிகலன்களை விரும்பிச் சுற்றித்திரியும் |
| கண் மாறு ஆடவர்
ஒடுக்கம் ஒற்றி | காட்சியினின்றும்
(சடுதியில்)மறையும் கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து, |
| வய களிறு
பார்க்கும் வய புலி போல | வலிய
களிற்றை(இரையாக)ப் பார்க்கும் வலிய புலியைப் போல, |
| துஞ்சா கண்ணர்
அஞ்சா கொள்கையர் | துயில் கொள்ளாத
கண்ணையுடையவராய்; அஞ்சாத கோட்பாட்டையுடையவராய்; |
| அறிந்தோர்
புகழ்ந்த ஆண்மையர் செறிந்த 645 | அறிந்தவர்கள் புகழும்
ஆண்மையையுடையவராய்; பொருட்செறிவுடைய 645 |
| நூல் வழி
பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி | நூற்கள்
(கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய
ஆராய்ச்சியின்)தெளிவினையுடையவராய்;(உள்ள) |
| ஊர் காப்பாளர்
ஊக்கு அரும் கணையினர் | ஊர்க் காவலர்கள்,
தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்; |
| தேர் வழங்கு
தெருவில் நீர் திரண்டு ஒழுக | தேர் ஓடும் தெருவில்
நீர் திரண்டு ஒழுகும்படி |
| மழை அமைந்து
உற்ற அரைநாள் அமயமும் | மழை நின்று-பெய்த
(இரவின்)நடுநாளாகிய பொழுதினும், |
| அசைவு இலர்
எழுந்து நயம் வந்து வழங்கலின் 650 | சோம்பலற்றவராய்ப்
புறப்பட்டு நியதி உணர்வு தோன்ற சுற்றிவருதலால், 650 |
| கடவுள்
வழங்கும் கையறு கங்குலும் | தெய்வங்கள் உலாவும்
செயலற்ற இருளிடத்தும், |
| அச்சம் அறியாது
ஏமம் ஆகிய | அச்சத்தை அறியாமல்
காவலையுடைய |
| மற்றை யாமம்
பகலுற கழிப்பி | முந்திய யாமத்தை
(அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி, |
| போது பிணி
விட்ட கமழ் நறும் பொய்கை | (நான்காம் யாமத்தில் –
காலை 3 – 6)பூக்கள் தளையவிழ்ந்த
(மணம்)கமழுகின்ற நறிய பொய்கைகளில், |
| தாது உண்
தும்பி போது முரன்று ஆங்கு 655 | தாதை உண்ணும்
தும்பிகள் (அப்)பூக்களில் பாடினாற் போன்று, 655 |
| ஓதல் அந்தணர்
வேதம் பாட | ஓதுதல்
(தொழிலையுடைய)அந்தணர் வேதத்தைப் பாட, |
| சீர் இனிது
கொண்டு நரம்பு இனிது இயக்கி | தாள அறுதியை இனிதாக
உட்கொண்டு நரம்பை இனிதாகத் தெரித்து, |
| யாழோர் மருதம்
பண்ண காழோர் | யாழோர் மருதப்பண்ணை
இசைக்க, பரிக்காரர் |
| கடும் களிறு
கவளம் கைப்ப நெடும் தேர் | கடிய களிறுக்குக்
கவளம் ஊட்ட, நெடிய தேருக்கான, |
| பணை நிலை புரவி
புல் உணா தெவிட்ட 660 | கொட்டிலில்
நிற்றலையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல, 660 |
| பல் வேறு
பண்ணியம் கடை மெழுக்குறுப்ப | பலவாய் வேறுபட்ட
பண்டங்களையுடைய கடைகள் மெழுகுதல் செய்யப்பட, |
| கள்ளோர் களி
நொடை நுவல இல்லோர் | கள் விற்போர்
களிப்பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல, மகளிர் |
| நயந்த காதலர்
கவவு பிணி துஞ்சி | (தாங்கள்)விரும்பின
(தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு |
| புலர்ந்து விரி
விடியல் எய்த விரும்பி | (பொழுது)புலர்ந்து
(கதிர்)விரிகின்ற விடியற் காலத்தைப் பெறுகையினாலே, விருப்பத்தால் |
| கண் பொரா
எறிக்கும் மின்னுக்கொடி புரைய 665 | கண்களைத் தாக்கிக்
கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று 665 |
| ஒண் பொன் அவிர்
இழை தெழிப்ப இயலி | ஒளிரும் பொன்னாலான
மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து — |
| திண் சுவர் நல்
இல் கதவம் கரைய | திண்ணிய சுவர்களையுடைய
நல்ல இல்லங்களின் கதவுகள்(திறக்கப்படுவதால்) கிரீச்சிட, |
| உண்டு மகிழ்
தட்ட மழலை நாவின் | (கள்ளை முந்தின
இரவில்)உண்டு களிப்பின் ஆழத்தைத் தொட்ட, குழறும் வார்த்தையுடைய, |
| பழம்
செருக்காளர் தழங்கு குரல் தோன்ற | பழைய
களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்றி நிற்க, |
| சூதர் வாழ்த்த
மாகதர் நுவல 670 | நின்றேத்துவார்
வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல, 670 |
| வேதாளிகரொடு
நாழிகை இசைப்ப | வைதாளிகர் (தத்தம்
துறைக்குரியனவற்றைப்)பாட, நாழிகை (அறிவிப்பு)இசைப்ப, |
| இமிழ் முரசு
இரங்க ஏறு மாறு சிலைப்ப | இமிழ்கின்ற முரசு
ஒலிக்க, ஏறுகள் (தம்முள்)மாறுபட்டு முழங்க, |
| பொறி மயிர்
வாரணம் வைகறை இயம்ப | பொறிகளுள்ள
மயிரினையுடைய கோழிச்சேவல் விடியற்காலத்தை அறிந்து கூவ, |
| யானையங்குருகின்
சேவலொடு காமர் | யானையங்குருகு எனும்
நாரையின் சேவல்களோடு விருப்பத்தையுடைய |
| அன்னம் கரைய
அணி மயில் அகவ 675 | அன்னச்சேவல்களும் (தம்
பேடைகளை)அழைக்க, அழகிய மயில்கள் கூவ, 675 |
| பிடி புணர்
பெரும் களிறு முழங்க முழு வலி | பிடியைக் கூடின பெரிய
யானைகள் முழங்க, மிக்க வலியுடைய |
| கூட்டு உறை வய
மா புலியொடு குழும | கூட்டில் உறைகின்ற
(கரடி முதலிய)வலிய விலங்குகள் புலியுடன் முழங்க, |
| வானம் நீங்கிய
நீல் நிற விசும்பின் | வானத்தில் கடந்து
செல்லும் நீல நிறமுடைய முகிலினில் |
| மின்னு
நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து | மின்னுக்கொடி நுடங்கின
தன்மையுடையவராய், மதுவை உண்டு, |
| மாண் இழை
மகளிர் புலந்தனர் பரிந்த 680 | மாட்சிமைப்பட்ட
அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய், அறுத்த 680 |
| பரூஉ காழ் ஆரம்
சொரிந்த முத்தமொடு | பரிய வடமாகிய ஆரம்
சொரிந்த முத்தோடு, |
| பொன் சுடு
நெருப்பின் நிலம் உக்கு என்ன | பொன்னை உருக்குகின்ற
நெருப்புச் சிந்தின நிலம் போல், |
| அம் மென்
குரும்பை காய் படுபு பிறவும் | அழகிய மென்மையான
இளம்பாக்குக் காய் விழுந்து, (முத்தொழிந்த)பிறவும் (விழுந்து கிடப்ப), |
| தரு மணல்
முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப | கொண்டுவந்து இட்ட
மணலையுடைய (அம்)முற்றத்தே வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிப்ப, |
| மென் பூ
செம்மலொடு நன் கலம் சீப்ப 685 | — மெல்லிய பூவின்
வாடல்களுடன் நல்ல பூண்களையும் கூட்டித்தள்ள 685 |
| இரவு
தலைப்பெயரும் ஏம வைகறை | இராக்காலம்
தன்னிடத்தினின்றும் போகின்ற (எல்லாவுயிர்க்கும்)பாதுகாவலாகிய விடியலில், |
| மை படு பெரும்
தோள் மழவர் ஓட்டி | கருமை படர்ந்த பெரிய
தோளையுடைய மழவரைக் கெடுத்து, |
| இடை புலத்து
ஒழிந்த ஏந்து கோட்டு யானை | போர்க்களத்தின்
நடுவழியில் (விட்டுப்போன)ஏந்தின கொம்பினையுடைய யானைகளும், |
| பகை புலம்
கவர்ந்த பாய் பரி புரவி | பகைவர் நாட்டில்
கைக்கொண்ட பாய்ந்து செல்லும் குதிரைகளும், |
| வேல் கோல் ஆக
ஆள் செல நூறி 690 | வேலினை
(ஆனோட்டும்)கோலாகக்கொண்டு வீரரை மாள வெட்டி, 690 |
| காய் சின
முன்பின் கடுங்கண் கூளியர் | எரிகின்ற
சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவர் |
| ஊர் சுடு
விளக்கின் தந்த ஆயமும் | (பகைவரின்)ஊரைச்
சுடுகின்ற விளக்கில் கொண்டுவந்த பசுத்திரளும், |
| நாடு உடை நல்
எயில் அணங்கு உடை தோட்டி | அகநாட்டைச்
சூழவுடைத்தாகிய நன்றாகிய அரண்களில் இட்ட வருத்தத்தையுடைய கதவுகளும், |
| நாள்தொறும்
விளங்க கைதொழூஉ பழிச்சி | நாள்தோறும் (தமக்குச்
செல்வம்)மிகும்படியாகக் கையால் தொழுது வாழ்த்தி, |
| நாள் தர வந்த
விழு கலம் அனைத்தும் 695 | நாட்காலத்தே
(திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும் 695 |
| கங்கை அம்
பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு | கங்கையாகிய அழகிய
பெரிய யாறு கடலுள் படர்ந்து சென்றாற் போல, |
| அளந்து கடை
அறியா வளம் கெழு தாரமொடு | அளந்து முடிவு அறியாத
வளப்பம் பொருந்தின பண்டங்களோடு, |
| புத்தேள் உலகம்
கவினி காண்வர | தேவருலகம் போன்று
பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக, |
| மிக்கு புகழ்
எய்திய பெரும் பெயர் மதுரை | மிகுத்துப் புகழைப்
பெற்ற பெரிய சிறப்பயுடைய மதுரையின்கண் – |
| சினை தலைமணந்த
சுரும்பு படு செம் தீ 700 | மரக்கிளைகளில்
ஒன்றுகூடின சுரும்புகள் உண்டாக்குகின்ற செந்தீ(ப்போன்ற) 700 |
| ஒண் பூ பிண்டி
அவிழ்ந்த காவில் | ஒளிரும் பூக்களையுடைய
அசோக மரங்கள் மலர்ந்துள்ள பொழிலில், |
| சுடர் பொழிந்து
ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று | ஒளியைச் சொரிந்து
(உச்சிக்கு)ஏறிய பளீரிடும் கதிர்களையுடைய ஞாயிற்றின் |
| இலங்கு கதிர்
இள வெயில் தோன்றி அன்ன | (மேற்கில் இறங்கிய
பின்னர்)மென்மையாக ஒளிவிடும் கதிர்களின் இளவெயில் தோன்றினாற் போன்று |
| தமனியம் வளைஇய
தாவு இல் விளங்கு இழை | பொன்னின் ஒளி சூழ்ந்து
குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால் |
| நிலம்
விளக்குறுப்ப மேதக பொலிந்து 705 | நிலம் பிரகாசமடைந்து
மேன்மை தகப் பொலிவுபெற்று,
705 |
| மயில் ஓர் அன்ன
சாயல் மாவின் | மயிலோடு
ஒருதன்மைத்தாகிய மென்மையினையும், மாமரத்தின் |
| தளிர் ஏர் அன்ன
மேனி தளிர் புறத்து | தளிரினது அழகை ஒத்த
நிறத்தினையும், தளிரினது புறத்தில் |
| ஈர்க்கின்
அரும்பிய திதலையர் கூர் எயிற்று | ஈர்க்குப்போலத்
தோன்றிய திதலையையும் உடையராய், கூரிய எயிற்றினையும் |
| ஒண் குழை
புணரிய வண் தாழ் காதின் | ஒளிவிடும் மகரக்குழை
பொருந்திய வளவிய தாழ்ந்த காதினையும், |
| கடவுள் கயத்து
அமன்ற சுடர் இதழ் தாமரை 710 | இறைத்தன்மையுள்ள
(பொற்றாமரைக்)குளத்தில் நெருங்கி வளர்ந்த, சுடர்விடும் இதழ்களையுடைய
தாமரையின் 710 |
| தாது படு
பெரும் போது புரையும் வாண் முகத்து | தாது உண்டாகும் பெரிய
பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும், |
| ஆய் தொடி
மகளிர் நறும் தோள் புணர்ந்து | ஆராய்ந்த தொடியினையும்
உடைய மகளிருடைய நறிய தோளை முயங்கி, |
| கோதையின்
பொலிந்த சேக்கை துஞ்சி | தூக்கு மாலைகளால்
பொலிவுபெற்ற படுக்கையில் துயில் கொண்டு – |
| திருந்து
துயில் எடுப்ப இனிதின் எழுந்து | நன்றாக அமைந்த
உறக்கத்தை (சூதர் இசை பாடி)த் துயிலுணர்த்த, இனிதாக எழுந்து, |
| திண் காழ் ஆரம்
நீவி கதிர் விடும் 715 | திண்ணிய வயிரத்தையுடைய
சந்தனத்தைப் பூசி, ஒளிவிடும் 715 |
| ஒண் காழ் ஆரம்
கவைஇய மார்பின் | ஒள்ளிய வடமாகிய
முத்துச் சூழ்ந்த மார்பினில், |
| வரி கடை பிரசம்
மூசுவன மொய்ப்ப | வரிகளுள்ள
பின்பகுதியையுடைய தேனினம் சூழ்வனவாய் மொய்ப்ப, |
| எருத்தம்
தாழ்ந்த விரவு பூ தெரியல் | கழுத்திலிருந்து
தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலையினையும், |
| பொலம் செய
பொலிந்த நலம் பெறு விளக்கம் | பொன்னாற் செய்ததினால்
பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம் |
| வலி கெழு தட கை
தொடியொடு சுடர் வர 720 | வலி பொருந்தின பெரிய
கையில் வீர வளையோடு விளக்கம் வர, 720 |
| சோறு அமைவுற்ற
நீர் உடை கலிங்கம் | சோறு (தன்னிடத்தே
நன்றாக)அமையப்பெற்ற நீரை(- கஞ்சியை) உடைய துகிலை, |
| உடை அணி பொலிய
குறைவு இன்று கவைஇ | உடைக்கு மேலணியும்
அணிகலன்கள் பொலிவுறுமாறு தாழ்வின்றாக உடுத்தி, |
| வல்லோன் தைஇய
வரி புனை பாவை | (சிற்பத்துறை)வல்லோன்
செதுக்கிய அழகிதாய் (ஆபரணம்)தரித்த சிலையில் |
| முருகு இயன்று
அன்ன உருவினை ஆகி | முருகன் குடிகொண்டதைப்
போன்ற வடிவத்தைப்பெற்றவன் ஆகி – |
| வரு புனல்
கற்சிறை கடுப்ப இடை அறுத்து 725 | வருகின்ற ஆற்றுநீரைக்
கல்லணை (தாங்கினாற்)போல (ப் பகைவர் படையை)நடுவே தடுத்து, 725 |
| ஒன்னார் ஓட்டிய
செரு புகல் மறவர் | (அப்)பகைவரை விரட்டிய
போரை விரும்பும் படைத்தலைவர் |
| வாள் வலம்
புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த | வாள் வெற்றியைப்
பொருந்தின நின் முயற்சியின் வெற்றியை வாழ்த்திநிற்ப – |
| வில்லை கவைஇ
கணை தாங்கு மார்பின் | ‘வில்லை
(வலிக்கையினால் தன்னுள்ளே)அடக்கிக்கொண்ட அம்பின் விசையைத் தாங்கும்
மார்பினையும், |
| மா தாங்கு
எறுழ் தோள் மறவர் தம்மின் | குதிரையைச் செலுத்தும்
வலியையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின்; |
| கல் இடித்து
இயற்றிய இட்டு வாய் கிடங்கின் 730 | கல் (தரையைப்)பொளிந்து
பண்ணின ஒடுங்கிய (நீர்வரும்)வாயையுடைய கிடங்கினையுடைய 730 |
| நல் எயில்
உழந்த செல்வர் தம்மின் | நல்ல கோட்டைமதிலில்
சிரமப்பட்ட (மறச்)செல்வர்களைக் கொணர்மின்; |
| கொல் ஏற்று
பைம் தோல் சீவாது போர்த்த | கொல்லும் (தன்மையுள்ள
முரட்டுக்)காளையின் பதப்படுத்திய தோலை (மயிர்)சீவாமற் போர்த்த |
| மா கண் முரசம்
ஓவு இல கறங்க | பெரிய கண்ணையுடைய
முரசம் விடாமல் ஒலிக்க, |
| எரி நிமிர்ந்து
அன்ன தானை நாப்பண் | நெருப்பு நிமிர்ந்து
நின்றாற் போன்ற (பகைவர்)படைக்கு நடுவே (சென்று) |
| பெரு நல் யானை
போர்க்களத்து ஒழிய 735 | பெரிய நல்ல யானைகளைப்
போர்க்களத்தே கொன்று,
735 |
| விழுமிய
வீழ்ந்த குரிசிலர் தம்மின் | சீரிய புண்ணால்
வீழ்ந்த தலைவரைக் கொணர்மின்; |
| புரையோர்க்கு
தொடுத்த பொலம் பூ தும்பை | குற்றம்தீர்ந்த
உயர்வினையுடையோர்க்குக் கட்டப்பட்ட பொன்னாற்செய்த பூவினையுடைய தும்பையை |
| நீர் யார்
என்னாது முறை கருதுபு சூட்டி | நீர் (யார்)என்னாது,
(அவர் தகுதிக்கேற்பக் கொண்டாடும்)முறையினை உட்கொண்டு சூட்டி ஏவுதலால் |
| காழ் மண்டு
எஃகமொடு கணை அலை கலங்கி | காம்பினுள் செருகின
வேல்களுடன் அம்புகளும் சென்று நிலைகுலைத்தலின் நிலைகலங்கி, |
| பிரிபு இணை
அரிந்த நிறம் சிதை கவயத்து 740 | (பலவாய்ப்)பிரிந்து
இணைந்த (பொருத்துவாய்கள் அற்ற பழைய)நிறம் கெட்ட கவசத்தோடே, 740 |
| வானத்து அன்ன
வள நகர் பொற்ப | தேவருலகத்தை ஒத்த
வளமுடைய நகர் (மேலும் வீரப்பொலிவாலே)விளங்க, |
| நோன் குறட்டு
அன்ன ஊன் சாய் மார்பின் | வலிய குறட்டை ஒத்த ஊன்
கெட்ட மார்போடே |
| உயர்ந்த உதவி
ஊக்கலர் தம்மின் | உயர்ந்த உதவியை மேலும்
முயலுதல் உடையாரைக் கொணர்மின்; |
| நிவந்த யானை கண
நிரை கவர்ந்த | உயரமான யானைகளின்
திரண்ட கூட்டத்தைக் கவர்ந்த, |
| புலர்ந்த
சாந்தின் விரவு பூ தெரியல் 745 | (பூசி)உலர்ந்த
சாந்தினையும், பலவகையாய்க் கலந்த பூக்களின் மாலையினையும், 745 |
| பெரும் செய்
ஆடவர் தம்மின் பிறரும் | பெரிய செய்கைகளையும்
உடைய ஆடவர்களைக் கொணர்மின்; (இத்தகைய)பிறரும் |
| யாவரும் வருக
ஏனோரும் தம் என | எல்லாரும் வருக,
ஏனோரையும் கொணர்மின்’ என்று |
| வரையா வாயில்
செறாஅது இருந்து | வரைந்து கூறி,
வாயிலில் தடுத்து நிறுத்தாமல் இருந்து, |
| பாணர் வருக
பாட்டியர் வருக | ‘பாணர் வருவாராக,
பாணிச்சியர் வருவாராக, |
| யாணர் புலவரொடு
வயிரியர் வருக என 750 | புது வருவாயினையுடைய
புலவரோடு கூத்தரும் வருவாராக’, என்று அழைத்து 750 |
| இரும் கிளை
புரக்கும் இரவலர்க்கு எல்லாம் | (தம்)பெரிய
சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம் |
| கொடுஞ்சி
நெடும் தேர் களிற்றொடும் வீசி | கொடுஞ்சியையுடைய நெடிய
தேர்களை யானைகளோடும் வழங்கி, |
| களம்தோறும் கள்
அரிப்ப | களங்கள்தோறும் கள்ளை
அரிப்பவும், |
| மரம்தோறும் மை
வீழ்ப்ப | மரத்தடிகள்தோறும்
செம்மறிக்கிடாயை வெட்டவும், |
| நிண ஊன் சுட்டு
உருக்கு அமைய 755 | நிணத்தையுடைய தசைகள்
சுடுதலால் (அந்நிணம்)உருகுதல் பொருந்தவும், 755 |
| நெய் கனிந்து
வறை ஆர்ப்ப | நெய் நிறையப்பெற்று
வறுபடும் கறிகள் ஆரவாரிப்பவும், |
| குரூஉ குய்
புகை மழை மங்குலின் | நிறத்தையுடைய
தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப் |
| பரந்து தோன்றா
வியல் நகரால் | பரந்து தோன்றவும்,
அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே, |
| பல் சாலை
முதுகுடுமியின் | (பலவாகிய வேள்விச்
சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று, |
| நல் வேள்வி
துறைபோகிய 760 | நல்ல வேள்வித்துறைளில்
முற்றும் தேர்வாயாக,
760 |
| தொல் ஆணை நல்
ஆசிரியர் | தொன்மையான
மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள் |
| புணர்
கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் | சேரும் சேர்க்கையை
நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய |
| நிலம்தருதிருவில்
நெடியோன் போல | நிலந்தரு திருவில்
பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று |
| வியப்பும்
சால்பும் செம்மை சான்றோர் | இறும்பூதும்,
நிறைவும், செப்பமும் உடைய சான்றோர் |
| பலர்வாய் புகர்
அறு சிறப்பின் தோன்றி 765 | பலர் கூற்றுக்களிலும்
களங்கமற்ற சிறப்போடே காணப்பட்டு, 765 |
| அரிய தந்து
குடி அகற்றி | அரியவான பொருள்களைக்
கொணர்ந்து (எல்லார்க்கும் கொடுத்து), குடிமக்களைப் பெருக்கி, |
| பெரிய கற்று
இசை விளக்கி | பெரிய நூற்களைக்
கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து, |
| முந்நீர்
நாப்பண் ஞாயிறு போலவும் | கடல் நடுவே ஞாயிறு
போன்றும், |
| பன் மீன்
நடுவண் திங்கள் போலவும் | பல விண்மீன்களுக்கு
நடுவே திங்கள் போன்றும், |
| பூத்த
சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி 770 | பொலிவுபெற்ற
சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாக விளங்கி, 770 |
| பொய்யா நல் இசை
நிறுத்த புனை தார் | பொய்யாக்கப்படாத நல்ல
புகழை உலகிலே நிறுத்தின, அலங்கரித்த மாலையினையும், |
| பெரும் பெயர்
மாறன் தலைவனாக | பெரிய பெயரினையும்
உடைய மாறன் (எனும் பழையன் தமக்குத்)தலைவனாயிருப்ப, |
| கடந்து அடு
வாய் வாள் இளம் பல் கோசர் | (பகைவரை)வென்று
கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள் |
| இயல் நெறி
மரபின் நின் வாய்மொழி கேட்ப | நடக்கின்ற
நெறிமுறைமையால் உன்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு நடக்க, |
| பொலம் பூண்
ஐவர் உட்பட புகழ்ந்த 775 | பொன் அணிகலன்களையுடைய
ஐம்பெரும் கேளிரும் உட்பட, (அவரால்)புகழப்பட்ட 775 |
| மறம் மிகு
சிறப்பின் குறுநில மன்னர் | மறம் மிக்க
சிறப்பினையுடைய குறுநில மன்னராகிய |
| அவரும் பிறரும்
துவன்றி | அவர்களும், மற்றோரும்
நிறைந்து, |
| பொற்பு விளங்கு
புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்த | பொலிவு விளங்குகின்ற
புகழினையுடைய அரசவை உன்னைப் புகழ்ந்து வாழ்த்த, |
| இலங்கு இழை
மகளிர் பொலம் கலத்து ஏந்திய | விளங்குகின்ற
பூணினையுடைய மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களில் எடுத்த |
| மணம் கமழ்
தேறல் மடுப்ப நாளும் 780 | மணம் நாறுகின்ற
கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும் 780 |
| மகிழ்ந்து
இனிது உறைமதி பெரும | மகிழ்ச்சி எய்தி
இனிதாக இருப்பாயாக, பெருமானே, |
| வரைந்து நீ
பெற்ற நல் ஊழியையே | அறநெறியில் ஈட்டி நீ
பெற்றுள்ள நல்ல பழவினைப் பயனை உடையவனாவாய். |
| |