Select Page
# 11 வையை – பாடியவர் : நல்லந்துவனார்# 11 வையை
பண் அமைத்தவர் : நாகனார்  பண் : பண்ணுப்பாலையாழ் 
  
விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்பவிரிந்த ஒளிக்கதிர்களையுடைய திங்களுடன் அகன்ற வானத்தில் சேர்க்கப்படுவனவாகிய,
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்துஎரி என்னும் கார்த்திகை, சடை என்னும் திருவாதிரை, அழகிய யானை என்னும் பரணி ஆகிய நாள்கள் முதலாக, இவற்றின் பெயரால்
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்இடபவீதி, மிதுனவீதி, மேடவீதி என்று வேறுபடுத்திக்கூறப்பட்ட ஒவ்வொன்றும் ஒன்பது நாட்களைக்கொண்ட, மூவகை இராசிகளுள்
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேரமிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர,
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரிமேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க, பொருள்களை ஆராய்ந்தறிகின்ற
புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல்புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க, இருள் புலரும் விடியலில்
அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின்கார்த்திகை உச்சமாக நிற்க, வியாழன் சனியின்
இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன்இரட்டை இல்லங்களாகிய மகரம், கும்பம் ஆகியவற்றுக்கு மேலேயுள்ள மீனராசியைச் சேர, யமனைத் தமையனாகக் கொண்ட சனி
வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லைதனுராசியின் பின்னர் உள்ள மகரராசியில் நிற்க, இராகு விரைவாக
மதியம் மறைய வரு நாளில் வாய்ந்ததிங்களை மறைக்க வருகின்ற நாளில், இப்படியாக வாய்ந்த,
பொதியில் முனிவன் புரை வரை கீறிபொதிகை முனிவனின் பெயர்கொண்ட அகத்தியன் என்னும் மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து
மிதுனம் அடைய விரி கதிர் வேனில்மிதுன ராசியைச் சேர, விரிந்த கதிர்களையுடைய வேனிற்காலம்
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால்எதிர்கொள்ளும் கார்காலத்தில் மழை பெய்க என்ற இந்த முறையினால்,
புரை கெழு சையம் பொழி மழை தாழஉயர்ச்சி பொருந்திய சையமலையில் பொழிகின்ற மழை மிகுதியாய் இறங்கிப்பாய
நெரிதரூஉம் வையை புனல்கரைகளை உடைத்துக்கொண்டு வருகிறது வையை ஆற்றில் வெள்ளம்;
வரையன புன்னாகமும்மலையில் உள்ள புன்னை மரன்களும்,
கரையன சுரபுன்னையும்ஆற்றங்கரையில் உள்ள சுரபுன்னை மரங்களும்,
வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம்வண்டுகள் ஓங்கி ஒலிக்கின்ற வரிசையான சண்பக மரங்களும், குளிர்ந்த தன்மையுடைய
மனைமாமரம் வாள்வீரம்தேற்றா மரங்களும் வாள்வீரமரங்களும்,
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள்கிளைகள் செழித்து வளரும் வேங்கை மரங்களும், செவ்வலரியும், காந்தளும்
தாய தோன்றி தீ என மலராதீ போன்று மலரும் தழைத்த தோன்றியும் ,
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம்ஊதைக் காற்றால் கட்டவிக்கப்பட்ட நெகிழ்ந்த இதழ்களையுடைய ஒளிரும் நீலம் ஆகியவற்றின் மலர்களை
வேய் பயில் சோலை அருவி தூர்த்தரமூங்கில்கள் நிறைந்து வளர்ந்திருக்கும் சோலையில் அருவிநீர் கொணர்ந்து குவிக்க,
பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல்பாய்கின்ற அலைநீர் தள்ளிக்கொண்டு வந்து தருதலால், ஆராய்ந்து மலர் பறிப்பதற்குரிய கோலினையுடைய 
வயவர் அரி மலர் துறை என்கோவலிய மக்கள் தாம் பறித்த மலர்களைக் கொண்டுவந்து குவிக்கும் துறை என்று கூறவா?
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின்அழகிய மலர்களான மேற்போர்வையினையும், முத்தாரம் தொங்கும் மார்பினைப் போன்று விளங்கும்
திரை நுரை மென் பொகுட்டு தேம் மண சாந்தின்அலைகளின் நுரைகளாகிய மென்மையாகிய குமிழ்களையும், இனிய மணத்தோடு சேர்ந்த சந்தனக் குழம்பினையும் உடைய
அரிவையது தானை என்கோ கள் உண்ணூஉவையைப் பெண்ணின் முன்தானை என்று கூறவா? கள்ளினை வாயில் கொண்டு
பருகு படி மிடறு என்கோ பெரியபருகும் நிலமகளின் கழுத்து என்று கூறவா? பெரிய
திருமருத நீர் பூ துறைதிருமருத நீர்ப்பெருந்துறையை;
ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்தோன்றிய நாள் தொடங்கி, மிகுந்துகொண்டுவரும் மதியின் வளர்பிறை போல
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டுநாளுக்கு நாள், செறிந்த மலைச் சாரல் தொடங்கி
நிலவு பரந்து ஆங்கு நீர் நிலம் பரப்பிநிலவொளி எங்கும் பரவுவது போல, நீரை நிலமெங்கும் பரப்பி,
உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம்உலகத்துக்குப் பயனைத் தந்து பாதுகாத்து, பெருகுகின்ற பக்கத்துக்கு
வழியது பக்கத்து அமரர் உண்டிஅடுத்த தேய்கின்ற பக்கத்தில், தேவர்களின் உணவாகிய
மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்கதிங்கள் தன் கலையில் குறைவுபடுவது போல, ஆற்றில் நீர் வரவு குறைய
எண் மதி நிறை உவா இருள் மதி போலஎட்டாம் நாள் திங்களாகி, அமாவாசைக் காலத்து இருண்ட மதியினைப் போன்று
நாள் குறைபடுதல் காணுநர் யாரேஒரு நாளில் நீர் இல்லாமல்போவதை காண்பவர் யாரோ?
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையைநெடுந்தொலைவைக் கடந்து மலைகளில் ஊர்ந்துவந்த சிறப்புமிக்க அணிகலன்களை அணிந்த வையையே!
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெறஉன் வலிமை தணிந்து செல்வாயாக! உன் புதுவெள்ளத்தை வற்றிய நாட்களிலும் மக்கள் பெறுவதற்காக,
மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர்நீல மயிலைப் போன்ற பெண்கள், மறைவாகத் தம்மைக் கூடும் காளையரின்
காமம் கள விட்டு கை கொள் கற்பு_உற்று எனகாமக் கூட்டமாகிய களவொழுக்கத்தை விட்டு, சிறப்பற்ற கற்பொழுக்கத்தை மேற்கொண்டதைப் போல்,
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல்மிக்க வெள்ளத்தையுடைய வையையே! உன் பெரிய மலையை விட்டு நிலையாகத் தங்கியிருக்கும்
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல்இல்லமாகிய கடலுக்கு நீ தனியே சென்றடைவது சிறப்பானதன்று
என ஆங்குஎன்று கூறும் வண்ணம், அங்கு,
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளைகடைக்கண் இல்லையோ என்னுமாறு நீண்டு அகன்ற கண்ணையுடையவளான தன் காதலியைக் காதலன்
படையொடும் கொண்டு பெயர்வானை சுற்றம்தன் படைக்கலன்களோடு கூட்டிக்கொண்டு செல்லும்போது, பெண்ணின் சுற்றத்தார்
இடை நெறி தாக்கு_உற்றது ஏய்ப்ப அடல் மதுரைஇடைவழியில் தடுத்து அவனைத் தாக்கியது போல, பகைவரை வெல்லும் மதுரை மக்கள்
ஆடற்கு நீர் அமைந்தது யாறுஇடையில் புகுந்து நீராடுவதற்கு ஏற்றது இந்த ஆறு.
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர்ஆற்றில் அணிஅணியாக, வெண்மையான வாளைச் சுழற்றுவோரும், ஒளிரும் குத்துவேலை ஏந்திக்கொண்டிருப்போரும்,
கொள்வார் கோல் கொள்ள கொடி திண் தேர் ஏறுவோர்வாரினைப் பிடித்திருப்பவர்கள், கைக் கோலினை உயர்த்த, கொடியையுடைய திண்ணிய தேரில் ஏறுவோரும்,
புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவைபறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும்
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும்வெள்ள நீர்ப் பெருக்கினுள் மேலும் மேலும் செலுத்தி நீரைக் கலக்குவோரும்,
கண் ஆரும் சாயல் கழி துரப்போரைகண்ணுக்கு நிறைந்த அழகையுடைய மூங்கில்குழாயில் நீரை உறிஞ்சிப் பீச்சுவோரின்மேல்,
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்சாயம் கலந்த நீரை உள்ளேகொண்ட வட்டினை விட்டெறிவோரும்,
மணம் வரு மாலையின் வட்டிப்போரைமணம்தருகின்ற மாலையினால் சுழற்றியடிப்போரின்மேல்
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்அறுக்கப்பட்ட சொரசொரப்பான கொம்பில் நீரை மொண்டு வீசுவோரும், இவர்களுடன்
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும்தெரிந்தெடுத்த மாலையினையுடைய மகளிர் தம் காதலரோடு இன்புற்று மகிழும்
உரு கெழு தோற்றம் உரைக்கும்_கால் நாளும்அழகு பொருந்திய காட்சியினைக் கூறினால், ஒவ்வொருநாளும்
பொரு_களம் போலும் தகைத்தே பரி கவரும்போர்க்களத்தைப் போன்ற தன்மையினையுடையது, குதிரைகளை வென்று கவர்ந்துகொள்ளும்
பாய் தேரான் வையை அகம்பாய்கின்ற தேரினையுடைய பாண்டியனின் வையையாற்றின் உள்ளிடம்;
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண்நீராடுவதற்கேற்ற அணிகலன்களோடு, தேன் செறிந்த மலர்களால் புனைந்த மணங்கமழும் குளிர்ந்த
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழைமாலையணிந்த மலைபோன்ற மார்பினில், அந்த அழகிய ஒப்பனையையும், நேரிய பிற அணிகலன்களையும்
ஒளி திகழ் தகை வகை செறி பொறிஒளி திகழும் தகைமையுடைய பல வகைகளால் செறிவுற்ற மூட்டுவாய்
புனை வினை பொலம் கோதையவரொடுபுனைந்த தொழிலையுடைய பொன்னால் செய்யப்பட்ட கழுத்துமாலைகளை அணிந்த மகளிரோடு
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்துபாகு தங்கிய இளம் கள்ளைப் பருகி, களிப்பு மிகுந்து,
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார்நாகர்களைப் போன்று நல்ல வளமையான அறச்செயல்களில் நாட்டம் மிக, நெருங்கிச் சேரும்பொருட்டு
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு_உறஅழகாகிய மதுவை ஒருவருக்கொருவர் கண்களாலேயே கவர்ந்து பருகும்படியாக,
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவிதாளம் அமைந்த பாடல் இன்பத்தால் தமது கிளர்ச்சியையுடைய செவி தெவிட்டும்படியாக நிறைத்துக்கொள்ள,
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்தேவர்கள் வாழும் ஒளி மிகுந்த வானத்தில் ஊர்ந்து செல்லும்
அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதைவிமானங்களையும் மறைக்காமல் தெளிவாகக் காட்டுகின்ற நீரோட்டத்தையுடையது அந்த வையை ஆறு;
கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல்கார்காலத்திலும், அதற்கு ஒவ்வாத வேனிற்காலத்திலும் முறையே கலங்கலான நீரோடும், தெளிவான நீரோடும் வருகின்ற
நீர் ஒவ்வா வையை நினக்குஇந்த இயல்பு எப்பொழுதும் ஒத்துவருவதில்லையே, வையையே! உனக்கு!
கனைக்கும் அதிர் குரல் கார் வானம் நீங்கமுழங்கி அதிர்கின்ற குரலைக் கொண்ட கார்காலத்து மேகங்கள் நீங்கிப்போக,
பனி படு பைதல் விதலை பருவத்துபனி மிகுந்த குளிரால் நடுக்கத்தையுடைய முன்பனிப் பருவத்தில்,
ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்துசூரியன் காயாத குளிர்ந்த மாரிக்காலத்துக்குப் பின்னர் வரும் மார்கழி மாதத்தில்
மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரைமிகப் பெரிய திங்கள் மண்டிலம் தன்னுள்ளே கொண்டுள்ள களங்கம் நிறைந்த திருவாதிரைநாளில்
விரி நூல் அந்தணர் விழவு தொடங்கவிரிந்த மெய்நூல்களைக் கற்றறிந்த அந்தணர் திருவிழாவைத் தொடங்க,
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்பமுப்புரியாக பூணுலை அணிந்த அந்தணர் பொன்னாலான கலன்களை ஏந்தி நிற்க’
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என‘வெம்மையால் வாடாது இருக்கட்டும் இந்த அகன்ற நிலப்பரப்பு’ என்று
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர்தம் தாய்மாருடன் நீராடும் அம்பா ஆடலை மேற்கொண்டதினால், அழகிய வளையணிந்த கன்னியர்,
முனி துறை முதல்வியர் முறைமை காட்டசடங்குகளை அறிந்த முதுபெண்டிர் நோன்பு செய்யும் முறையினைக் காட்ட,
பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின்பனி மிக்க வைகறைப் பொழுதில் நீராடி, பெரிய மணலில் ஓடும் நீரில்
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர்குளிர்வாடை தவழ்ந்து வருதலால், கரையில் இருக்கும் அந்தணரால்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்வேதநெறியின்படி வளர்க்கப்பட்ட நிமிர்ந்தும் வளைந்தும் எரியும் தீயினை வழிபடும் சிறப்பான
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தரஒப்பனையையுடைய அந்தக் கன்னியர், தம் ஈர உடையை அந்தத் தீயில் உலர்த்திநிற்க,
வையை நினக்கு மடை வாய்த்தன்றுவையையே! உனக்கு அந்தத் தீயிலிடும் அவியுணவு வாய்ப்புடையதாயிருக்கும்!
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்துமையோலையைக் கையில் பிடித்து சுவடி தூக்கி ஆடும் இளம் சிறுவரின் ஆட்டத்திற்கு மாறாக எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர்பொய்யாக ஆட்டத்தை ஆடுகின்ற தோழியரைக் கொண்ட அந்தக் கன்னி மகளிர், அவரின் –
தீ எரி பாலும் செறி தவம் முன் பற்றியோஎரிகின்ற தீயின் பக்கத்தில் நின்று செறிந்த நோன்பினை முற்பிறப்புகளிலும் மேற்கொண்டமையாலோ?
தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல்– தாய்மார் அருகே நின்று நோன்புடைய இந்தத் தைந்நீராடுதல்,
நீ உரைத்தி வையை நதிநீ உரைப்பாய் வையை நதியே!
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள்அவ்விடத்தில், நீல மலரைத் தன் காதில் செருகிக்கொண்டு, ஓர் இள மங்கையை நோக்கினாள்
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கிமூங்கிலின் அழகை வெல்லும் அழகுமிக்க தோளினையுடைய ஒருத்தி, அதனைப் பார்த்த அந்த இள மங்கை,
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்சாய்ந்து குழைந்த அசோகின் தளிரைத் தன் காதில் செருகியிருந்தவள், தான் அணிந்திருந்த அசோகந்தளிரின் செம்மையால் 
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள்ஒளிபாயும் குழையையுடையவள் அணிந்திருந்த நீலமலர் இளவெயில் படர்ந்தது போன்று ஆகும்படி சூடிக்கொண்டாள்,
குவளை குழை காதின் கோல செவியின்குவளை மலரை, குழையணிந்த காதான அழகிய செவியில்
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்றுஇவள் செருகிக்கொண்டு நான்கு விழிகளை உடையவள் ஆயினாள் என்று
நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளேநெற்றிக்கண் போலத் தோன்றும் நிறைந்த திலகத்தை நெற்றியில் இட்டாள்,
கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண்கொற்றவையின் கோலம் கொண்டு ஒரு பெண்;
பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சைபவள வளையலைச் செறிய அணிந்திருந்தாள் ஒருத்தியைக் கண்டு, இன்னொருத்தி அணிந்தாள் பச்சையான
குவளை பசும் தண்டு கொண்டுகுவளையின் இளம் தண்டினைக் கையில் வளையல்போல்,
கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளைகுளிரிப்பூவால் தலைமாலை தொடுக்கும் ஒருத்தியை
நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளேஅவ்வாறு தொடுப்பதை நிறுத்துக என்பாள் போல் நெய்தல் மலரைத் தொடுத்தாள்
மல்லிகா மாலை வளாய்மல்லிகை மாலையில் இடையிடையே கலந்து;
தண்டு தழுவா தாவு நீர் வையையுள்ஓர் இளைஞன் வாழைத்தண்டைத் தழுவிக்கொண்டு பாய்ந்து வரும் நீரைக் கொண்ட வையை ஆற்றில்,
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்ககரையினில் இருந்த கன்னி ஒருத்தியைக் கண்ட மாத்திரத்தில், விரையும் நீர் அவன் கைகளை நெகிழ்க்க,
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்கஅவன் நெஞ்சத்தை அவள் நெகிழ்க்க, நீண்ட வாழைமரத்தை வெள்ளம் இழுத்துச் செல்ல,
நேர்_இழை நின்று_உழி கண் நிற்ப நீர் அவன்நேரிய இழையணிந்த அவள் நின்ற இடத்திலேயே அவன் கண்கள் நிலைத்து நிற்க, தண்ணீரோ அவன்
தாழ்வு_உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்பவிரும்பிய அவளிடத்தில் கொண்டுசெல்லாமல் தன் போக்குக்கு அவனை இழுத்துக்கொண்ட செல்ல,
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉஅவளோ, தன் தோழியருடன் நிற்காமல், அங்கு அவனைப் பின்தொடர்ந்து செல்ல,
தாய் அ திறம் அறியாள் தாங்கி தனி சேறல்தாயானவள் தன் மகளின் அன்பின் திறத்தை அறியாதவளாய், அவளைத் தடுத்து, ‘தனியே போகவேண்டாம்
ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றேதோழிமாரோடு சேர்ந்திரு’ என்று உரத்துக் கூவ, கரையினை மோதியது
சேய் உற்ற கார் நீர் வரவுசிவந்துபோன கார்கால நீரின் வரவு;
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்நீ மேன்மை பெற்றாய், தைநீரே! உன்னுடைய செம்மை நிறம் தெளிந்துவருகிறாய் என்போரும்,
கழுத்து அமை கை வாங்கா காதலர் புல்லஎம் கழுத்தில் அமைந்த கையை அகற்றாமல் என் காதலர் அணைத்திருக்கும்
விழு_தகை பெறுக என வேண்டுதும் என்மாரும்சிறப்பான நிலையை நாம் பெறுக என்று வேண்டுகிறோம் என்போரும்,
பூ வீழ் அரியின் புலம்ப போகாதுபூவினை விரும்பிவரும் வண்டினைப் போல, எம்மைத் தனித்திருக்க விட்டுவிட்டுப் போகாமல்
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்நாம் விரும்புவாரிடத்தில் நீங்காத இன்பம் எய்யவேண்டும் என்று வேண்டிநிற்போரும்,
கிழவர் கிழவியர் என்னாது ஏழ்_காறும்கிழவர், கிழவியர் என்று சொல்லப்படாமல், எமது ஏழாம் பருவத்தினை யாம் அடையும்வரைக்கும்
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும்இளமையைத் தந்து யாம் செல்வத்தோடும் சுற்றத்தோடும் நிலைபெறவேண்டும் என்போரும் ஆக,
கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின்தம்மைக் கண்டவரைத் தாக்கி வருத்தும் அணங்கைப் போன்ற இந்தக் காரிகையைப் பாருங்கள்!
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின்காமதேவனின் கருவூலமும், படைக்கலங்களும் ஆகும் இவளின் கண்களைப் பாருங்கள்!
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாதுமுதிர்ந்த நீல நிறத் தேன் சொரியும் மாலைகளை அணிந்திருக்கும் பெண்கள் விலக்கிய போதும், நிற்காமல்
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின்பூக்களை மொய்க்கும் வண்டினம் யாழிசை போன்று இசைக்கின்ற பாடலைக் கேளுங்கள்!
கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்டபாடலின் பொருள் தெரியும்படி பாடாமல், குரல்,
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின்கிளை, உழை என்ற பாட்டின் அமைதிகள் பொருந்திய, வண்டுகள் பாடும் வண்ணங்கள் கொண்ட பாலைப் பண்ணைக் கேளுங்கள்!
பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடிபண்ணைத் தெரிந்து, அதன் திறத்தைப் பெற்று, அதன் தாளத்திற்கும் பொருந்தப் பாடி,
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்தாம் மேற்கொண்ட இன்னிசைக்கும் பொருந்திய தாளத்திற்கும் ஏற்றபடி, தம் சிறகை விரித்து ஆடும்
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளைகுளிர்ந்த தும்பிக்கூட்டங்களைப் பாருங்கள்! தான் விரும்பி மொய்த்த பூவினை நசுக்கியவளை
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும்போர்முனையிடத்தில் பொருந்திய சினத்தைக் கொண்ட நெஞ்சினையுடையதாய் முதலில் தாக்கி, அதன் பின்னும்
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின்விரைந்து வருகின்ற ஒரு வண்டின் கடும் சினத்தின் தன்மையைக் காணுங்கள்!
என ஆங்குஎன்று இவ்விதமாக,
இன்ன பண்பின் நின் தை_நீராடல்இத்தகைய சிறப்புமிக்க உனது தைநீராடலானது,
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்டமின்னுகின்ற அணிகலன்களையும் நறுமணம் கமழும் நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, தன் பெண்தன்மை மேம்பட்ட
கன்னிமை கனியா கைக்கிளை காமகன்னித்தன்மை முதிராத ஒருதலைக்காதலின் காமத்தின்
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்இனிய தன்மையினையும், சிறந்த தேர்ச்சியினையும் கொண்ட இசையோடு கூடிய பரிபாடலே!
முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம்இதனை, முற்பிறப்பில் செய்த தவத்தினால் இப் பிறப்பில் நாங்கள் பெற்றோம்!
மறு முறை அமையத்தும் இயைகமீண்டும் ஒரு முறை பிறக்கும்போதும் இது எமக்குக் கிட்டுக!
நறு நீர் வையை நய_தகு நிறையேநறிய நீரினைக் கொண்ட வையையே! உன் விரும்பத்தக்க நிறைந்த நீர் –
  
# 12 வையை – பாடியவர் : நல்வழுதியார்# 12 வையை
பண் அமைத்தவர் : நந்நாகனார்- பண் : பண்ணுப்பாலையாழ் 
  
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பிகாற்று மோதுவதால், மின்னலுடன், மேகங்கள் இருளையும் பரப்பி,
விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றிஇடையறாமல், தம் தொகுதியோடு மலையின் மேல்பக்கத்தை வளைத்துக்கொண்டு
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய்மழையைப் பொழிகின்ற மலைச்சாரலில், தன்மேல் உதிர்கின்ற மலர்களைப் பரப்பிக்கொண்டு,
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம்ஒளி விளங்கும் படப்புள்ளிகளைக் கொண்ட, பார்ப்பதற்கு அச்சந்தரக்கூடிய பாம்பின் பெயரைக்கொண்ட நாகமரமும்,
அகரு வழை ஞெமை ஆரம் இனையஅகிலும், சுரபுன்னையும், ஞெமை மரமும், சந்தன மரமும் ஆகிய இவை வருந்தும்படியாக,
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கிதகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவற்றைச் சாய்த்துச் சுமந்துகொண்டு,
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்செறிந்த நீரையுடைய கடல் பொங்கி வருவதைப் போன்றிருக்கிறது – இனிய நீரையுடைய
வளி வரல் வையை வரவுகாற்றோடு கலந்து வரும் வையையின் வரவு;
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய்இவ்வாறு வந்து மதுரை நகரின் மதிலை மோதுகின்றது, தூய மலர்களைப் பரப்பிக்கொண்டு
அம் தண் புனல் வையை யாறு என கேட்டுஅழகிய குளிர்ந்த நீரையுடைய வையையாறு என்று சொல்லக் கேட்டு,
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும்மின்னல் போல் ஒளிர்கின்ற ஒளிவிடும் அணிகலன்களை எடுத்து அணிந்துகொள்வோரும்,
பொன் அடர் பூ புனை திருத்துவோரும்பொன் தகட்டால் செய்யப்பட்ட பூவாகிய அணிகலன்கள் அணிந்திருப்பதைத் திருத்திக்கொள்வோரும்,
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்றஅகில்புகை கலந்த சந்தனம் பூசியிருப்பதை மாற்றி, பெருமளவில்
புகை கெழு சாந்தம் பூசுவோரும்வேறு மணமுள்ள புகை கலந்த சந்தனத்தைப் பூசிக்கொள்வோரும்,
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும்கருமை கொண்ட கூந்தலைக் குழலாக முடிந்துகொள்வோரும்,
வேர் பிணி பல் மலர் வேயுமோரும்வெட்டிவேரை இடையிடையே வைத்துக் கட்டிய பலவித மலர்களைச் சூடிக்கொள்வோரும்,
புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்புடவைகளில் தமக்குப் பொருத்தமானவற்றை உடுத்திக்கொள்வோரும்,
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும்கட்டப்பட்ட கொக்கிகளையுடைய அணிகலன்களை வடங்களாகப் பூண்டுகொள்வோரும்,
வாச நறு நெய் ஆடி வான் துகள்வாசமுள்ள நறிய நெய்யைப் பூசி, வெண்மையான நுண்துகளால்
மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும்அழுக்கு நீங்க கண்ணாடியைப் பளபளப்பாக்கி, அதில் தம் இயற்கையழகும்,
தேசும் ஒளியும் திகழ நோக்கிசெயற்கையழகும், மேனியெழிலும் தோன்ற, அவற்றைக் கண்டு மகிழ்ந்து
வாச மண துவர் வாய் கொள்வோரும்வாசனைப் பொருள்களோடு கூடிய பாக்கினை வாயில் போட்டுக்கொள்வோரும்,
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர்ஆணியிட்டுச் சேர்க்கப்படும் வளையல்களோடு, செறிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும்,
கட்டுவட கழலினர் மட்டு மாலையர்கட்டுவடத்தோடு, கால்விரலில் மோதிரம் அணிந்துகொண்டோரும், தேன் துளிக்கும் மாலையினரும்,
ஓசனை கமழும் வாச மேனியர்நெடுந்தொலைவுக்கு மணம் வீசும் வாசமுள்ள மேனியரும்,
மட மா மிசையோர்மிகவும் இளைய குதிரையின் மீது ஏறிவருவோரும்,
பிடி மேல் அன்ன பெரும் படை அனையோர்பெண்யானையின் மேல் வரும் பெரிய பெடையன்னம் போன்றவரும்,
கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும்விரைவாகச் செல்லும் குதிரையின் மீது ஏறிச் செலுத்துவோரும், ஆண்யானையின் மீது ஏறி வருவோரும்,
வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும்நன்கு வடிக்கப்பட்ட மணிகளைக் கொண்ட நெடிய தேரின் குதிரைகளை முள்கோலால் குத்தி ஓட்டுவோரும்,
விரைபு_விரைபு மிகை_மிகை ஈண்டிவிரைந்து விரைந்து மிகமிக நெருக்கமாய்ச் செல்ல,
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்வையை நீரில் நீராடுவது அங்கங்கே சிறந்துவிளங்க, மதுரை மக்கள்
உரைதர வந்தன்று வையை நீர் வையைதன்னைப் புகழ்ந்து போற்ற வருகின்றது வையையின் நீர்; வையை ஆற்றின்
கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம்கரையோ என வந்தது காணவந்தவரின் கூட்டம்;
நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம்உயர்ந்தது வெள்ளம் கரைக்கு மேலே; வெள்ளமானது
கவர்ந்தது போலும் காண்பவர் காதல்கவர்ந்துகொண்டு பெருகியது போலிருந்தது, மக்களின் ஆசைவெள்ளத்தை;
முன்துறை நிறை அணி நின்றவர் மொழி மொழிதிருமருத முன்துறையில் நிறைய அணியணியாக நின்றுகொண்டிருந்தவர் பேசிக்கொண்ட பேச்சுக்கள்
ஒன்று அல பல_பல உடன் எழுந்தன்று அவைஒரே தன்மையதாய் இல்லாமல் பலப்பலவாக ஒன்றுசேர்ந்து எழுந்தன; அவற்றை
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவைஎல்லாம் தெளிவாகக் கேட்டுப் புரிந்துகொள்பவர் யார்? அவை
கில்லா கேள்வி கேட்டன சில_சிலகேட்பதற்கு முடியாதவை; எம்மால் கேட்கப்பட்டன ஒருசிலவே;
ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்ஒன்றோடொன்று ஒத்து இசைக்கும் குழல் வாத்தியங்களினின்றும் இசை எழ, முழவின் முழக்கத்தோடு
மத்தரி தடாரி தண்ணுமை மகுளிமத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின்
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின்அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின்இவள் வெட்கப்படமாட்டாளோ? தோழி! ஒரு நன்மையும் இல்லாத பரத்தையின்
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்திதோள்களின் அழகை நுகர நம்மைவிட்டுப் பிரிந்து சென்றான் என்றிருந்த இவள்
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடிபுதிதாக நிறைந்து வரும் நீராகிய வெள்ளத்தில், பெரிய பெண்யானையின்
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்உயரமான முதுகில் அந்தக் கணவனோடு ஏறிவருகிறாள்
நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும்நாணம் குறைவுபடாத இந்தக் குலமங்கை என்று சொல்வோரும்,
கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்கூடவருகின்றவர்களுள், பூங்கொம்பு போன்ற ஒரு பெண்ணின் குவிந்த முலையைக் கூர்ந்து பார்ப்பவன்
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும்ஓட்டையான மனத்தையுடையவன், நெஞ்சுரம் அற்றவன் என்று சொல்வோரும்,
சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள் நிறம் திரிந்தாள்தனக்கு எதுவும் தந்தோ, தன்னிடம் ஏதாவது பேசியோ அவள் அறியாள், எனினும் அவனுக்காக ஏங்கிநின்றாள்,
நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறைதன் மனத்தை ஓடவிட்டாள் அந்த வழிப்போக்கனின் பின்னே, தன் பெண்மையாகிய மாட்சிமை
அஞ்சி கழியாமோ அன்பு உற்றால் என்மரும்அழிந்துபோவதற்கு அஞ்சி இதனைக் கைவிடமாட்டாளோ, என்னதான் காதல் கொண்டாலும் என்று சொல்வோரும்,
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன்பூண்டுள்ள ஆரத்தைப் பார்ப்பது போல, நெருங்கியிருக்கும் இவளின் முலைகளைப் பார்த்தான் ஒருவன்
நாணாள் அவனை இ நாரிகை என்மரும்நாணுகின்றாளில்லை அவனைக்கண்டு இந்த மடந்தை என்று சொல்வோரும்,
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்பஅமிழ்தத்தைப் போன்ற இனிய பார்வையால் பெண் ஒருத்தி (தன் கணவனைப்)பார்க்க,
கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில்மணங்கமழும் தன் மாலையைக் கழற்றி அதனைக் கோலாகக்கொண்டு அவனைப் புடைத்து, தன் மார்பின்
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கிவடத்தைக் கழற்றி அவனது கைகளைக் கட்டி, அவனை மிகவும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டு
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான்“தவறிழைத்தாய்” என்று சொல்ல, தன் மீது பிழையொன்றும் காணாதவனாய்
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின்கைகூப்பி “என்ன பிழை” என்று கேட்கும் குற்றமற்றனைப் பாருங்கள்;
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை“பார்த்தாள் ஒருத்தி உன்னை” என்று சொல்லி, “அவ்வாறு பார்த்தவள்
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்துஉன்னால் சூளுரைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டவள்” என்று கூற, “நீ கூறுவது ஒன்றும் அறியேன் நான்” என்று பணிந்து
மெய் சூள்_உறுவானை மெல்லியல் பொய் சூள் என்றுமெய்யாகவே சூளுரைப்பானை, அந்த மெல்லியலாள், “இதுவும் பொய்ச்சத்தியம்” என்று
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்லஅவன் பொறுக்கும்படியான சொற்களைச் சொல்லாமல், தன் கூற்று குற்றமுடையதாகக் கூற,
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைஅவன் மீண்டும் வலியுறுத்திக்கூறியும், சினந்து மொழிந்தும் அவளைத் தெளிவிப்பானை,
புல்லாது ஊடி புலந்து நின்றவள்அணைத்துக்கொள்ளாது ஊடல்கொண்டவளாகக் பிணக்குற்றிருப்பவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறியபூவின் மணத்தையும் அழகையும் கொண்ட, அரக்கு வண்ணமூட்டப்பட்ட நீரால் நிறைக்கப்பெற்ற, வட்டினை எறிய,
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்வேலாகிய அழகிய மையுண்ட கண்கள் வீசிய பார்வை பட்டதுபோல் புண்ணிலிருந்து
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோரபாய்கின்ற குருதியாக வண்ணநீர் வடிய, அவன் அவளிடம் பகைமை கொள்ளாமல் உள்ளம் சோர்ந்துபோக,
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்துஅவ்விடத்தில் நிற்காமல் நீங்கிச் சென்று நிலத்தில் வீழ, மனம் கலங்கி,
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்துஅவனது மற்போருக்கு இயைந்த மார்பில் பட்ட புண்ணுக்காக அச்சமுற்று, துயரங்கொண்டு
எல்லா துனியும் இறப்ப தன் காதலன்தன் கோபம் தணிந்தவளாய், தன் காதலனின்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்நல்ல பொலிவுள்ள அழகிய மார்பினைத் தழுவிக்கொள்ளச் செய்தது, எக்காலத்திலும்
வல்லதால் வையை புனல்வல்லமை மிக்க வையையின் நீர்,
என ஆங்குஎன்று சிலர் கூறினர், இவ்வாறு அங்கே
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம்மல்லிகை, முல்லை, மணங்கமழும் சண்பகம்,
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்அல்லி, செங்கழுநீர், தாமரை, ஆம்பல்,
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரிவெட்சி, மகிழம், குருக்கத்தி, பாதிரி,
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னைநல்ல கொத்துக்களையுடைய நாகம், நறவம், சுரபுன்னை
எல்லாம் கமழும் இருசார் கரை கலிழஆகிய எல்லாவகையான கமழ்கின்ற இருபக்கக் கரைகளையும் மோதிக் கலங்கிப் பின்னர்
தேறி தெளிந்து செறி இருள் மால் மாலைமிகத் தெளிந்து செறிந்த இருள் மயங்கியிருக்கும் மாலைப்பொழுதில்
பாறை பரப்பில் பரந்த சிறை நின்றுபாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் பரந்த கல்லணையால் தடைப்பட்டு தேங்கி நின்று
துறக்கத்து எழிலை தன் நீர் நிழல் காட்டும்சொர்க்கத்தின் அழகினை தனது நீரின் நிழலில் காட்டிநிற்கும்,
கார் அடு காலை கலிழ் செம் குருதித்தேமேகங்கள் மழைபொழியும் காலைப்பொழுதில் கலங்கியதாய் சிவந்த குருதியின் தன்மையைக் காட்டி நிற்கும்
போர் அடு தானையான் யாறுபோரில் பகைவரை வெல்லும் படையினையுடைய பாண்டியனின் வையை ஆறு;
சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்தநெருப்பிலிட்டுச் சுடுகின்ற தன்மையுள்ள வேலைப்பாடு அமைந்த குழையினைப் போல, மிகவும் சிவந்த
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇவாசமுள்ள மலரான அசோகமலரைத் தன் காதில் செருகிக்கொண்டு,
விடு மலர் பூ கொடி போல நுடங்கிகட்டுவிட்ட மலர்ந்த மலரையுடைய கொடியினைப் போல மடங்கி அசைந்து,
அடி மேல் அடி மேல் ஒதுங்கி தொடி முன்கைமுன்னிருக்கும் அடிச்சுவட்டின்மேல் அடியெடுத்து வைத்து, ஒருபக்கமாக ஒதுங்கி, வளையணிந்த முன்கையைக் கொண்ட
காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள்பெண்ணொருத்தி தன் தலைமாலையைச் சரிசெய்துகொண்டாள்,
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின்நேராக இறங்கும் முன்கையைக் கொண்ட அந்த நல்லவளின் கணவனைப் பாருங்கள்;
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்றுஆடையில் செய்யப்பட்டுள்ள பூவேலைப்பாட்டைப் போன்று மணிகளின் நீரோட்டத்தால் நிறைந்தது
புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரைவையை நீர் என்று மதுரையில் மிக்குப் பரவியது நீராடியோர் கூறிய பேச்சு;
உரையின் உயர்ந்தன்று கவின்இந்தப் பேச்சைக் காட்டிலும் சிறந்து விளங்கியது அங்கு நீராடியோரின் அழகு;
போர் ஏற்றன்று நவின்று தகரம்அந்தப் புத்தழகு பிற அழகுகளுடன் மிகுதியாகப் போட்டிபோட்டு நின்றது; மணப்பொருளுடன்,
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்றுமார்பிலிருந்து வழித்து எறியப்பட்ட சந்தனக் குழம்பால் ஆற்றோர மணல் சகதியாய்ப்போனது;
துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்றுஆடையிலிருந்து சிந்திய நீர்த்துளிகளால் கரை மழைபெய்த பூமியாயிற்று;
விசும்பு கடி விட்டன்று விழவு புனல் ஆங்கவானுலகம் தன் சிறப்பை இழந்தது, விழாக்காலத்து நீராட்டத்தால்;
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர்உன்னால் இன்பமும், அழகும், ஆரவாரமுள்ள மூதூராகிய மதுரை மக்களுக்கு ,
நன் பல நன் பல நன் பல வையைபலவான நன்மைகளாய் அமைந்தன வையையே!
நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகேஉன் புகழைக் கொள்ளமுடியாதது இந்த அகன்ற இடத்தையுடைய உலகம்.
  
# 13 திருமால் – பாடியவர் : நல்லெழுநியார்# 13 திருமால்
பண் அமைத்தவர் : தெரியவில்லை      பண் : நோதிறம் 
  
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்றுநீலமணியைப் போன்று விளங்கும் மலையில் இறங்குகின்ற மஞ்சள்பூத்த மாலைக் கதிரவனின்
அணி வனப்பு அமைந்த பூ துகில் புனை முடிஅழகிய செவ்வனப்பினைக் கொண்ட பூவேலைப்பாடான துகிலையும், அலங்கரிப்பட்ட திருமுடியினையும்,
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின்செங்குத்தான மலைப்பகுதியில் இறங்கும், பொன்னையும் மணியையும் கொண்ட அருவியின்
நிறனொடு மாறும் தார் புள்ளு பொறி புனை கொடிநிறத்தோடு மாறுபட்ட மலர்மாலையினையும், கருடன் வரையப்பட்ட ஒப்பனை செய்த கொடியினையும்,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளவானத்திலிருந்து காத்தலை மேற்கொண்ட முழுமதியைப்போன்று அழகு கொள்ள
தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால்குளிர்ந்த கருணையைக் கொண்ட, பகைவர்க்கு அச்சத்தைத்தரும் சக்கரப்படையினைக் கொண்ட திருமாலே!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்தகார்ப்பருவத்து பெரிய முகிலானது அணிந்துகொண்ட
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போலஇரு வேறுபட்ட ஞாயிறு, திங்கள் ஆகியவற்றின் பிரகாசத்தைப் போல
நேமியும் வளையும் ஏந்திய கையான்சக்கரத்தையும், சங்கினையும் ஏந்திய கைகளுடனே,
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண்கூட்டமான மின்னல்கள் போன்று ஒளிர்ந்து பிரகாசிக்கும் பொன்னாரத்தை
அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின்அருவியின் நிறத்தைப் போன்ற முத்தாரத்தோடு அணிந்த உனது
திரு வரை அகலம் தொழுவோர்க்குஅழகிய மலைபோன்ற மார்பினைத் தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்துஉனக்கு உரித்தாய்க் கொண்டிருக்கும் திருவைகுண்டமும் நன்கு உரிமையுடையது;
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறுசுவை, ஒலி, ஒளி, நாற்றம், ஊறு ஆகிய
அவையும் நீயே அடு போர் அண்ணால்ஐம்புலன்களும் நீயே! பகைவரைக் கொல்லும் போரினையுடைய அண்ணலே!
அவை_அவை கொள்ளும் கருவியும் நீயேஅந்த ஐம்புலன்களையும் அறிந்துகொள்ளும் கருவியும் நீயே!
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்முன்னர் நாம் கூறிய ஐந்தனுள்ளும்
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயேமுதற்புலனாகிய ஓசையினால் உணரப்படும் வானமும் நீயே!
இரண்டின் உணரும் வளியும் நீயேஓசையும், ஊறும் ஆகிய இரண்டு புலன்களால் உணரப்படும் காற்றும் நீயே!
மூன்றின் உணரும் தீயும் நீயேஓசை, ஊறு, ஒளி ஆகிய மூன்றனால் உணரப்படும் தீயும் நீயே!
நான்கின் உணரும் நீரும் நீயேஓசை, ஊறு, ஒளி, சிவை ஆகிய நான்கினாலும் உணரப்படும் நீரும் நீயே!
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயேஇவ்வைந்து புலன்களாலும் உணரப்படும் நிலனும் நீயே!
அதனால்அதனால்,
நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும்உன்னையே சார்ந்திருப்பன மூவேழ் உலகின் உயிர்களும்,
மூலமும் அறனும் முதன்மையின் இகந்தஅனைத்துக்கும் மூலமான ஆதிப்பொருளும், அறமும், முதன்மை என்பதைக் கடந்த
காலமும் விசும்பும் காற்றொடு கனலும்காலமும், வானமும், காற்றோடு தீயும்;
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்தன் நீலமேனியினின்றும் மாறுபட்ட வெண்மையான பாற்கடலின் நடுவே
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்தமின்னல் போன்று ஒளிரும் ஒளியினையுடைய மணிகளோடே, ஆயிரமாய் விரிந்து நிற்கும்
கவை நா அரும் தலை காண்பின் சேக்கைபிளவுபட்ட நாவினையுடைய அரிய தலைகளையுடைய, காண்பதற்கு இனிய படுக்கையில்
துளவம் சூடிய அறிதுயிலோனும்துளசி மாலை அணிந்த யோகநித்திரையில் இருப்பவனும்,
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்வீரம் மிக்கு மிகுந்த முழக்கத்தோடு பகைவரைக் கொல்லுகின்ற படைகளுடன்,
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்தம் ஆற்றலையும் மீறி தன் மேல் படையெடுத்து வரும் பகைவரின் உயிரைப் போக்கும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்வெற்றி மிகுந்த ஆற்றலும், ஆரவாரத்தால் பொலிந்து தன்னால் அகழப்படும் புழுதியை உழுவது போல
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்பகைவரின் மார்பை உழுகின்ற வளைந்த வாயினையுடைய கலப்பைப் படையையும் உடைய பலதேவனும்,
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றியஇம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணிபொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற பூணினைக் கொண்ட
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகிபிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனைமூன்று கடவுளராகப் பிரிந்த ஒரே முழுமுதற்கடவுளாகிய பெருமானே!
படர் சிறை பல் நிற பாப்பு பகையைவிரிந்த சிறகுகளைப் பல நிறங்களில் கொண்டதும், பாம்பின் பகையுமான கருடனைக்
கொடி என கொண்ட கோடா செல்வனைகொடியாகக் கொண்ட மனக்கோட்டமில்லாத செல்வனாவாய்!
ஏவல் இன் முதுமொழி கூறும்ஓதுவதற்கு இனிய வேதங்கள் கூறுகின்ற,
சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நன் புகழவைகருடச் சேவல் எழுதப்பட்ட மிகவும் உயர்ந்த கொடியையுடைய செல்வனே! நல்ல புகழினை உடையவன் நீ;
கார் மலர் பூவை கடலை இருள் மணிகருமேகம், காயாமலர், கடல், இருள், நீலமணி
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியைஆகிய இவை ஐந்தும் சேர்ந்த நிறத்தினை ஒத்த அழகு விளங்கும் மேனியையுடைவன்!
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல்வலம்புரிச் சங்கின் முழக்கமும், வேதங்கள் ஓதும் ஒலியும், மேகங்களின் அதிர்ந்த ஒலியும், இடிமுழக்கமும்
அவை நான்கும் உறழும் அருள் செறல் வயின் மொழிஆகிய நான்கையும் போன்ற அருளுடைமை, சினத்தல் ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டவை உன் மொழிகள்;
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவைகடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை;
இருமை வினையும் இல ஏத்துமவைநல்வினை, தீவினையாகிய இரு வினையின் பற்றுதலும் இல்லை, உன்னைப் போற்றும் உயிர்களுக்கு;
ஒருமை வினை மேவும் உள்ளத்தினைஉயிர்களைக் காக்கும் ஒரு வினையில் பொருந்திய உள்ளத்தையுடையவன் நீ!
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரைஇலைகளைவிட்டு உயர்ந்தெழுந்து மலர்ந்த பெரிய இதழ்களைக் கொண்ட தாமரையைப் போன்றவை
அடியும் கையும் கண்ணும் வாயும்உன் திருவடியும், கைகளும், கண்ணும், வாயும்;
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும்உன் கைவளையும், தொப்புளும், தோளில் அணிந்திருக்கும் வளையமும்
தாளும் தோளும் எருத்தொடு பெரியைதிருவடியும், தோளும், உன் பிடரியுடனே பெரியனவாகக் கொண்டிருக்கிறாய்;
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியைஉன் மார்பும், பின்புறமும் உன் மனத்தோடு மிக்க பருமையுடையனவாகக் கொண்டிருக்கிறாய்;
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியைஉன் கேள்வியும், அறிவும், அறப்பண்புடன் மிக்க நுண்ணிதாகக் கொண்டிருக்கிறாய்;
வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யைவேள்வியில் விருப்பமும், வீரத்தில் வெம்மையும் கொண்டிருக்கிறாய்;
அறாஅ மைந்தின் செறாஅ செம் கண்குன்றாத வலிமையினையும், சினவாத சிவந்த கண்களையும்
செரு மிகு திகிரி_செல்வ வெல் போர்வெல்லும் போரினில் செருக்களத்தில் மேம்பட்டுநிற்கும் சக்கரப்படையையும் கொண்டுள்ள செல்வனே! 
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார்நெருப்பினைப் போன்று மலர்ந்த வெட்சிப்பூவை இடையிட்டுத் தொடுத்த நறிய மாலையில்
புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய்முறுக்குடைய மலரையுடைய துளசி பொருந்திய மார்பினையுடையவனே!
அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம்உன்னை எம் அன்னையாகவே நினைத்து உன் திருவடிகளைத் தொழுகின்றோம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்பலமுறை அடுத்தடுத்து உன்னை வேண்டுகின்றோம், வாழ்த்துகின்றோம் –
முன்னும் முன்னும் யாம் செய் தவ பயத்தால்முன்னர் பல பிறவிகளில் நாம் செய்த தவத்தின் பயனாக –
இன்னும் இன்னும் எம் காமம் இதுவேஇனிவரும் பல பிறவிகளிலும் எம் விருப்பம் இதுவே!
  
# 14 செவ்வேள் – பாடியவர் : கேசவனார்# 14 செவ்வேள்
பண் அமைத்தவர் : கேசவனார்- பண் : நோதிறம் 
  
கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்றமேகம் மிக விரைவான மழையைப் பெய்தலால், அதனை ஏற்றுக்கொண்ட
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவேநீர் மிகவும் நிறைந்த சுனையில் பூக்கள் மலர்ந்தனவே!
தண் நறும் கடம்பின் கமழ் தாது ஊதும்குளிர்ந்த நறிய கடம்பின் மணங்கமழும் பூந்தாதுக்களை உண்பதற்காக
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவேநிறம் மிக்க வண்டுகள் எழுப்பும் இசை, பண்களைப் போன்றிருந்தனவே!
அடியுறை_மகளிர் ஆடும் தோளேஉன் திருமுன்னர்க் கூத்தாடும் மகளிரின் தோள்கள்
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவேநெடிய மலைச் சாரலில் உள்ள மூங்கில்கள் போன்றனவே!
வாகை ஒண் பூ புரையும் முச்சியவாகையின் ஒளிரும் பூவினைப் போன்ற கொண்டையைக் கொண்ட
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரைமயில்களின் நிறைந்த அகவல் குரல், மணம்செய்துவிட்டுப் பின் பிரிந்துசென்றோரை
நீடன்-மின் வாரும் என்பவர் சொல் போன்றனவேபிரிவை நீட்டிக்காது வாருங்கள் என்பவரின் கூற்றுப்போல் இருந்தனவே!
நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றனஅன்றைக்குப் பூத்த கொன்றைச் சரங்கள் பொன்மாலை போன்றிருந்தன;
மெல் இணர் வேங்கை வியல் அறை தாயினமெல்லிய பூங்கொத்துக்களையுடைய வேங்கையின் மலர் அகன்ற பாறைகளில் உதிர்ந்து பரவ,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்பஅழுகின்ற மகளிர்க்குப் ‘புலி புலி’ என்று அச்சுறுத்திச் சொல்லும்படி இருந்தன;
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள்நீர்நிலையின் அருகே தழைத்திருக்கும் சுருக்கங்களையுடைய அரும்புகளையுடைய காந்தளின்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும்நெடிய பூங்கொத்துக்கள் மலர்ந்த வளமையான இதழ்களின் வரிசைகள்தோறும்
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றிகொழுந்துவிட்டுப் படர்ந்த கொடியில் தோன்றிய மென்மையான அழகுடைய தோன்றி
பவழத்து அன்ன வெம் பூ தாஅய்பவழம் போன்ற செந்நிறமுடைய மலர்கள் பரவிநிற்க,
கார் மலிந்தன்று நின் குன்று போர் மலிந்துகார்காலத்துத்தன்மை மிக்கது உன் குன்று! போரினை மேற்கொண்டு
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயேசூரனை அவன் சுற்றத்தோடும் அழித்த ஒளிவிடும் வேற்படையையுடையவனே!
கறை இல் கார் மழை பொங்கி அன்னகளங்கமில்லாத கார்காலத்து வெண்மேகம் பொங்கி எழுந்தாற்போன்று
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயேநறிய பொருள்களால் எழுப்பப்பட்ட நறுமணப் புகையை மிகவும் விரும்புகின்றவனே!
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றிஆறு முகங்களும், பன்னிரு கைகளும் உடையவனாய், மணத்தால் மற்ற மலர்களை வெற்றிகொண்ட
நறு மலர் வள்ளி பூ நயந்தோயேநறிய மலரான வள்ளியம்மை என்ற மலரினை விரும்பியவனே!
கெழீஇ கேளிர் சுற்ற நின்னைதம்மைச் சேர்ந்த கணவர் தம்மைவிட்டு நீங்காமல் இருக்க, உன்னைப் பெண்கள்
எழீஇ பாடும் பாட்டு அமர்ந்தோயேஇசையெழுப்பிப் பாடும் பாட்டை விரும்புபவனே!
பிறந்த ஞான்றே நின்னை உட்கிநீ பிறந்த அந்த நாளிலேயே உன்னைக் கண்டு அச்சங்கொண்டு
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயேதேவர்களெல்லாம் அஞ்சிய பெருமையை உடையவனே!
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்துஇருபிறப்பும், இருபெயரும் கொண்டு அருளுடைய நெஞ்சத்தினராய்
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயேஉயர்ந்த புகழைக்கொண்ட அந்தணர்களின் அறவாழ்வில் பொருந்தியிருப்பவனே!
அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னைஅப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டவனாதலால். உன்னை விரும்பி நாம் உன்னை
துன்னி துன்னி வழிபடுவதன் பயம்அடுத்தடுத்து வழிபடுவதன் பயனாக,
இன்னும் இன்னும் அவை ஆகுகமேலும் மேலும் அந்த வழிபாடுகள் இருப்பதாக,
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவேதொன்மையான முதிர்ந்த மரபினையுடைய உன் புகழினும் பலவாக –
  
# 15 திருமால் – பாடியவர் : இளம்பெருவழுதியார்# 15 திருமால்
பண் அமைத்தவர் : மருத்துவன் நல்லச்சுதனார் – பண் : நோதிறம் 
  
புல வரை அறியா புகழொடு பொலிந்துஅறிவின் எல்லையே அறியாத மிகுந்த புகழோடு பொலிவுடன் விளங்கி,
நில வரை தாங்கிய நிலைமையின் பெயராநிலத்தின் எல்லையைத் தாங்கி நிற்கும் நிலைமையிலிருந்து நீங்காத,
தொலையா நேமி முதல் தொல் இசை அமையும்அழிவற்ற சக்கரவாளம் முதலாக, தொன்மையான புகழ் அமைந்த
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடும் குன்றம்புலவர்கள் ஆய்ந்து கூறிய அழகுடன் உயர்ந்து நிற்கும் மலைகள்
பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும்பல என்றால், அந்த மலைகள் பற்பல என்பது உண்மையேயாயினும் அம்மலைகள் பலவற்றிலும்
நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன்இந்த நிலவுலகிற்கு உதவும் வகையில் பல பயன்களைத் எல்லாம்
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவேஎப்பொழுதும் தந்து நிலையாக அமைந்து விளங்கும் மலைகள் சிலவே!
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும்அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமியமலர்களையுடைய அகன்ற பகுதிகளையுடைய மேகங்கள் படியும் உச்சிகளையுடைய
குல வரை சிலவே குல வரை சிலவினும்குலமலைகள் சிலவே! அந்தக் குலமலைகள் சிலவற்றிலும்
சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும்சிறந்தது, கல்லென்று ஒலிக்கும் நீலக் கடலும், கடலையொட்டிய வெண்மணற்பரப்பும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்பிரிவில்லாத சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர்எல்லாமே வேறுபட்ட உருவத்தையும், தம்முள் வேறுபடாத ஒரு தொழிலையும் உடைய இருவரையும்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்தாங்கும் பெரிய நிலைமையையுடைய புகழ் அமைந்த இருங்குன்றம் என்ற திருமாலிருஞ்சோலை;
நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதைமணங்கமழும் பூங்கொத்துக்களோடு கூடிய துளசிமாலையை அணிந்தோனாகிய நீ அளித்தால் அல்லாமல்
ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம்ஏறிச் சென்று அடைதல் எளிதோ, சிறப்பினைக் கொண்ட அந்தத் துறக்கத்தை?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்அவ்வாறு அரிதில் பெறக்கூடிய துறக்கத்தை, மாலிருங்குன்றமானது
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்பஎளிதில் பெறக்கூடிய உரிமையை நல்கும்; போற்றித்தொழுவோம் மிக்க ஒலியுடன்;
அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின்பாம்பாய் நிமிர்ந்து நிற்கும் மென்மையான தலைகளைக் கொண்ட ஆதிசேடனின் அவதாரமாகிய பலராமன் மார்பில் உள்ள
மரா மலர் தாரின் மாண் வர தோன்றிவெண்கடம்பு மலர் மாலையைப் போன்று மாட்சிமை தோன்றக் காணப்பட்டு,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழியஅசைகின்ற அருவிநீர் ஆரவாரித்து மிக்க ஒலியுடன் இறங்குதலால்
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின்சிலம்பாற்றினை அழகு செய்ய, அழகு பொருந்திய திரு என்ற சொல்லோடும்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்சோலை என்ற சொல்லோடும் தொடர்மொழியாக வருகின்ற மாலிருங்குன்றத்தில்
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்மக்கள் தாம் விரும்பும் இச்சைகளை உன்முன்னே விதைத்து, அதன் விளைவான பயனைக் கொள்வர்;
நாம தன்மை நன்கனம் படி எழதன்னுடைய பெயரின் தன்மை நன்றாக இவ்வுலகத்தில் பரவிநிற்க,
யாம தன்மை இ ஐ இருங்குன்றத்துகூதிர் யாமத்தைத் தன் இயல்பாகக் கொண்ட இந்த வியக்கத்தக்க இருங்குன்றத்தில்,
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு எனநிலையான குளிர்ச்சியையுடைய இளவெயில் தன்னைச் சூழ்ந்து நிற்க, உள்ளே இருள் வளர்ந்திருப்பதைப் போல்,
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையேபொன்னால் புனையப்பட்ட ஆடையினை அணிந்திருப்போன் தன் முன்னோனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் நிலையை
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர்நினையுங்கள் மாந்தர்காள்! கேளுங்கள்! மணம்பொருந்திய அதன் சிறப்பை!
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ்சுனைகளிலெல்லாம் நீலப்பூக்கள் மலர, சுனையைச் சூழ்ந்துள்ள
சினை எலாம் செயலை மலர காய் கனிமரக்கிளைகளிலெல்லாம் அசோக மலர்கள் பூத்திருக்க, காய்களும் கனிகளும்
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலரகலந்து திகழ, அரும்புகளைக் கொண்ட வேங்கை மரத்தில் ஒளிரும் கொத்துக்களாய் பூக்கள் மலர,
மாயோன் ஒத்த இன் நிலைத்தேஇவ்வாறு இந்த மலை திருமாலைப் போன்ற இனிய நிலையினைக் கொண்டிருக்கிறது;
சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மேஅங்குச் சென்று தொழுதுகொள்ளுங்கள்! அதனைக் கண்டு பணிந்துகொள்ளுங்கள்!
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவேஇருங்குன்றம் என்ற பெயர் பரந்த அந்த மலை
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழதுகடல்சூழ்ந்த நிலவுலகில் தொன்மையான இயல்பையுடைய புகழினைக் கொண்டது;
கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள்அதனைக் கண்ட அளவில் காண்போரின் மயக்கத்தைப் போக்கும் வழிபடும் கடவுள் அது;
மக முயங்கு மந்தி வரை_வரை பாயகுட்டி இறுகப்படித்துக்கொண்ட குரங்கு மலைக்கு மலை தாவ,
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்டஅரும்புகள் நெருங்கியிருக்கின்ற முல்லை மகளிரின் முறையாக நடக்கின்ற கற்புநெறியைக் காட்ட,
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவநீலமணியைப் போன்ற நல்ல இயல்பினைப் பெற்ற, கிளைகளில் இருக்கும் இளம் மயில்கள் அகவ,
குருகு இலை உதிர குயில்_இனம் கூவகுருக்கத்தி இலைகள் உதிரும்வண்ணம் குயில் கூட்டங்கள் கூவ,
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் ஒலியெழுப்பும்போது, பாடுவோர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்னநாவால் இசைத்துப் பாடும் பாடலானது முழவின் இசையை எதிர்கொண்டது போல
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்மலைக்குகைகளில் முழங்கி எதிரொலிக்கின்ற இசை முடிவின்றி ஒலிக்கும், பகைவரை
கடந்து அட்டான் கேழ் இருங்குன்றுவென்று அவரை அழித்தவனின் நிறத்தையுடைய இருங்குன்றத்தில்;
தையலவரொடும் தந்தாரவரொடும்உங்கள் மனைவியரோடும், உம்மைப் பெற்ற தாய்தந்தையரோடும்
கைம்_மகவோடும் காதலவரொடும்கைக்குழந்தைகளோடும், உம்மேல் அன்புகொண்டவரோடும்
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின்தெய்வமாக எண்ணி வணங்கி, அம் மலை இருக்கும் திசையைத் தொழுதவாறு செல்லுங்கள்;
புவ்வ_தாமரை புரையும் கண்ணன்தனது தொப்புள்தாமரையைப் போன்ற கண்ணையுடையவன்,
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்நம்மைக் கவ்விக்கொள்ளும் கரிய இருள் போன்ற நீலமணி நிற மேனியன்,
எ வயின் உலகத்தும் தோன்றி அ வயின்எல்லா உலகங்களிலும் வெளிப்பட்டு, அங்கங்குள்ள
மன்பது மறுக்க துன்பம் களைவோன்உயிர்களின் மயக்கம் தரும் துன்பத்தைக் களைவோன்,
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்அன்பு பொருந்தியவனாய் இருங்குன்றத்தில் இருப்பவன்;
கள் அணி பசும் துளவினவை கரும் குன்று அனையவைதேன் துளிக்கும் பசிய துளசிமாலையை அணிந்துள்ளாய்; கரிய மலையைப் போன்றிருக்கின்றாய்;
ஒள் ஒளியவை ஒரு குழையவைமிகுந்த ஒளியினையுடையவனாயிருக்கிறாய்; ஒப்பற்ற குழையினை அணிந்திருக்கிறாய்;
புள் அணி பொலம் கொடியவைகருடப்பறவை எழுதிய அழகிய பொன்னாலான கொடியினைக் கொண்டிருக்கிறாய்;
வள் அணி வளை நாஞ்சிலவைகூர்மை வாய்ந்த வளைந்த கலப்பையினை வைத்திருக்கிறாய்;
சலம் புரி தண்டு ஏந்தினவைசினம் பொருந்திய தண்டாகிய படைக்கலத்தைக் கொண்டிருக்கிறாய்;
வலம்புரி வய நேமியவைவலம்புரிச் சங்கோடு வெற்றி மிக்க சக்கரப்படையையுடையவனாயிருக்கிறாய்;
வரி சிலை வய அம்பினவைவரிந்த வில்லுடன் வெற்றி மிக்க அம்புகளையும் கொண்டிருக்கிறாய்;
புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவைபுள்ளிகள் நெருக்கமாய்ச் சூழ்ந்திருக்கும் சுழல்வட்டத்தையும், புள்ளிகளுடைய வாளினையும் வைத்திருக்கிறாய்;
என ஆங்குஎன்று இவ்வாறாக
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழிதனக்கு நன்மை விளைவதை விரும்பி, அழகிய ஒழுங்கையும், பெருமையையும் உடைய வேதம்
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறைஅவரின் பெருமை இப்படிப்பட்டது என்று சொல்லுவதால், எமது உள்ளத்தில் விரும்பி இசைத்து, இறைவனே!
இருங்குன்றத்து அடியுறை இயைக எனதிருமாலிருஞ்சோலையின் அடியினில் வாழ்கின்ற பேறு அமைக என்று,
பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதேபெரும் புகழையுடைய இருவராகிய கண்ணனும் பலராமரும் ஆகிய உம் அடிகளைப் போற்றித் தொழுகின்றோம்.