Select Page
# 151 குறிஞ்சி# 151 குறிஞ்சி இளநாகனார்
  
நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும்நல்ல நெற்றியில் பசலை பாய்ந்தாலும், பெருத்த தோள்கள் மெலிந்துபோனாலும்
கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கிகொல்லக்கூடிய பகையுணர்வுகொண்ட பெரிய புலியின் சேரற்கரிய சிறிய நுழைவிடத்தைத் தாக்கி
செம் மறு கொண்ட வெண் கோட்டு யானைசிவந்த கறையினைக் கொண்ட வெண்மையான கொம்பினையுடைய யானை
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல்அந்தக் கறையை மலைமேலிருந்து விழும் அருவிநீரில் கழுவும் மலைச்சாரல் நெறியில்
வாரற்க தில்ல தோழி கடுவன்5வராமலிருப்பானாக, தோழியே! – ஆண் குரங்கின்
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சிதளிர்களைத் தின்றுகொண்டிருக்கும் பெரிய சுற்றம் அறிந்துகொள்ளுமோ என்று அஞ்சி,
கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்தமிளகுக்கொடிகள் வளர்ந்திருக்கும் மலைஅடுக்கினில் யாருக்கும் தெரியாமல் உறவுகொண்ட
செம் முக மந்தி செய்குறி கரும் கால்சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கு உறவின்போது வேறுபட்ட தன் கோலத்தை, கரிய அடிமரத்தையும்
பொன் இணர் வேங்கை பூ சினை செலீஇயர்பொன் போன்ற பூங்கொத்துக்களையும் உடைய வேங்கை மரத்தின் அழகிய கிளை மீது சென்று
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன்    10ஆழமான நீரையுடைய நெடிய சுனையைப் பார்த்துத் தலையைக் கவிழ்த்துத் தன்
புன் தலை பாறு மயிர் திருத்தும்புல்லிய தலையில் குலைந்துபோன மயிரைத் திருத்தும்
குன்ற நாடன் இரவினானேமலைநாட்டினன் இரவினில் – 
  
# 152 நெய்தல்# 152 நெய்தல் ஆலம்பேரி சாத்தனார்
  
மடலே காமம் தந்தது அலரேபனைமடலால் செய்யப்பட குதிரையைக் காமம் தந்தது; ஊரார் பேசும் பழிச்சொற்களோ
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றேபல பூக்களைக் கலந்து கட்டிய எருக்கம்பூமாலையைத் தந்தது;
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படரஒளிவிடும் கதிர்கள் ஒளிமங்கிப்போய் பகலொளி விசும்பில் படர
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்தனிமைத் துயரத்தைத் தந்தது தான் விரும்பித் தொழில்செய்யும் ஞாயிறு;
எல்லாம் தந்ததன்_தலையும் பையென   5இவை எல்லாம் தந்ததற்கு மேலும், மெல்லென
வடந்தை துவலை தூவ குடம்பைவாடைக்காற்று மழைத்துளிகளைத் தூவ, கூட்டினில்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇபெடையோடு உறவுகொள்ளும் அன்றில் பறவையின் மெலிவான குரலும் கலந்து
கங்குலும் கையறவு தந்தன்றுஇரவுப்பொழுதும் செயலற்ற நிலையைத் தந்தது;
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானேஎன்ன ஆவேனோ? இரங்கத்தக்க நான்.
  
# 153 பாலை# 153 பாலை தனிமகனார்
  
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளிகிழக்குக் கடலில் நீரை முகந்து, மேற்குத்திசையில் எழுந்து, இருண்டு
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்மண் திணிந்த இந்த உலகம் ஒளிர்ந்துவிளங்க, கொல்லர் கடையும்போது
செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும்செம்புப்பொறிகளைச் சொரியும் பானையைப் போல மின்னலிட்டு, எல்லாப் பக்கங்களிலும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலிதம் பெய்தல் தொழிலை வாய்க்கச்செய்யும் இனிய ஓசையையுடைய மேகங்கள்
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு   5தென்புலப் பக்கமாகச் சென்று தேய்ந்துபோவதைப் போல்
நெஞ்சம் அவர்_வயின் சென்று என ஈண்டு ஒழிந்துஎன் நெஞ்சம் அவரிடம் சென்றதாக, இங்குத் தனியாக இருந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்உண்பதனால் காக்கப்படுகிறது என் உடம்பு; வெற்றிதரும் போரைச் செய்யும்
வெம் சின வேந்தன் பகை அலை கலங்கிமிக்க சினத்தையுடைய வேந்தனின் பகைமையால் அலைக்கழிக்கப்பட்டுக் கலங்கியதால்
வாழ்வோர் போகிய பேர் ஊர்குடிமக்கள் விட்டு ஓடிப்போன பெரிய ஊரில்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே10பாழ்பட்ட இடங்களைக் காவல்புரிந்து நிற்கும் தனி மகனைப் போல –
  
# 154 குறிஞ்சி# 154 குறிஞ்சி  நல்லாவூர்க் கிழார்
  
கானமும் கம்மென்றன்றே வானமும்கானமும் ஒலியடங்கிக் கம்மென்று இருக்கிறது; வானமும்
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பிமலைப் பிளவுகளில் இருப்பதைப் போல காரிருளைப் பரப்பி
பல் குரல் எழிலி பாடு ஓவாதேபலவிதமான ஒலிப்புகளையுடைய மேகங்களின் ஓசையை எழுப்பிக்கொண்டே இருக்கிறது;
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்தமேகமூட்டம் தவழ்கின்ற குறுங்காட்டில் களிற்றினை வெற்றிகொண்ட
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை  5மிக்க சினத்தையுடைய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்,
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாதுஅஞ்சும்படியாக முழங்கும் ஓசையைக் கேட்காமல்
துஞ்சுதியோ இல தூ இலாட்டிதுயில்கொள்கிறாயோ? ஏடி! சற்றேனும் மனவலிமை இல்லாதவளே!
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்பெருந்துன்பம் வந்து மோதியதால் குற்றமுள்ள நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்நீர் அணைக்கும் நெருப்பைப்போல தணியுமாறு, இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே சாரல்10வராமல் இருந்தால் நல்லது! மலைச் சாரலில்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும்குறுக்கிட்டுக்கிடக்கும் மலையின் கடினமான வழிகளை நினைக்கும்போதெல்லாம்
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சேஅந்த நிலத்தின் மேல் பரந்துசெல்லும் என் உறுதிப்பாடு இல்லாத நெஞ்சம்.
  
# 155 நெய்தல்# 155 நெய்தல் பராயனார்
  
ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த மகளிரோடு ஓரை என்னும் விளையாட்டையும் ஆடமாட்டாய்;
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய்பெரிய இதழ்களையுடைய நெய்தல் பூக்களாம் மாலையையும் தொடுக்கமாட்டாய்;
விரி பூ கானல் ஒரு சிறை நின்றோய்மலர்ந்த பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் ஒருபக்கமாக நிற்கின்றாய்;
யாரையோ நின் தொழுதனெம் வினவுதும்நீ யாரோ? உன்னைத் தொழுதவாறு கேட்கிறேன்;
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரை  5பார்ப்பவர்கள் மேலும் மேலும் பார்க்கக்கூடிய அழகினையுடைவளே! தெளிவான அலைகளைக் கொண்ட
பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோபெரிய கடற் பரப்பில் அமர்ந்திருக்கும் தெய்வமகளோ?
இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோகரிய கழியின் பக்கத்தே நிலைகொண்டு உறைபவளோ?
சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர்சொல்வாயாக, இப்பொழுது மடந்தையே! என்று கூறினேன்; அதற்கு விடையாக
முள் எயிற்று முறுவல் திறந்தனமுள் போன்ற கூரிய பற்களைக் காட்டிய முறுவலால் இதழ்கள் திறந்தன,
பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே       10பலவாகிய இதழ்களையுடைய மையுண்ட கண்களிலும் பரந்தன நீர்த்துளிகள்.
  
# 156 குறிஞ்சி# 156 குறிஞ்சி கண்ணன் கொற்றனார்
  
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்நீயே, காலடியைப் பார்த்து ஒதுங்கிச்செல்லமுடியாத நிறைந்த இருளில் வந்து எம்முடைய
கடி உடை வியல் நகர் காவல் நீவியும்காவலையுடைய அகன்ற மாளிகையின் காவலையும் கடந்துவரும்
பேர் அன்பினையே பெரும் கல் நாடபேரன்பினை உடையவன்! பெரிய மலைநாட்டைச் சேர்ந்தவனே!
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்நாங்களோ, உன்னையும் உன் மலையையும் பாடி, பல நாட்கள்
சிறுதினை காக்குவம் சேறும் அதனால்5சிறுதினையைக் காவல்காக்கச் செல்கிறோம்; அதனால்
பகல் வந்தீமோ பல் படர் அகலபகற்பொழுதில் வருவீராக, பலவான நம் துன்பங்கள் தீர;
எருவை நீடிய பெரு வரை சிறுகுடிகொறுக்கச்சி உயரமாய் வளர்ந்த பெரிய மலைப்பக்கத்திலிருக்கும் சிறுகுடியில்
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்கள்ளை மிகவும் குடித்தவராயினும், என் வீட்டார் பெரிதும் கொடியர்;
பாடு இமிழ் விடர் முகை முழங்கஒலியின் முழக்கம் மலைப்பிளவுகளிலும், குகைகளிலும் எதிரொலிக்க,
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே   10அசைந்துவரும் மேகங்கள் தங்கியிருக்கின்றன, எமது சிகரங்கள் உயர்ந்த குன்றுகளில்.
  
# 157 பாலை# 157 பாலை இளவேட்டனார்
  
இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிபெரிய இடத்தையுடை இந்த நிலப்பரப்பில் ஒன்றாய்க்கூடி மக்களின் வாழ்க்கைக்கு உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்துபெரும் மழை பொழிந்ததற்கு அடுத்த நாள் காலையில்
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்பபல பொறிகளைக் கொண்ட பாம்பின் ஊர்ந்துசெல்லும் முதுகைப் போல
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில்ஆற்றில் அரித்தோடும் நீரோட்டம் சிறுத்துப்போன பதமான இளவேனில் காலத்தில்
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளி-தொறும்       5பூங்கொத்துக்கள் நெருக்கமாய் அமைந்த மா மரத்தில் சேர்ந்திருக்கும் குயில்கள் கூவுந்தோறும்
நம்_வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகநம்மையே நினைத்து வருந்தும் நெஞ்சத்துடன், பிரிவுத்துன்பம் மிகுந்து,
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்டகேட்கும்போதெல்லாம் கண்ணீர் சொரிந்து புலம்புவாள் பெரிதும் – காட்டுப்பக்கம் அமைந்த
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கைசிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
அம் பூ தாது உக்கு அன்னஅழகிய பூந்தாதுக்கள் உதிர்ந்ததைப் போல
நுண் பல் தித்தி மாஅயோளே 10நுண்ணிய பலவான தேமற்புள்ளிகள் பரந்த மாநிறத்தவளான நம் தலைவி –
  
# 158 குறிஞ்சி# 158 குறிஞ்சி வெள்ளைக்குடி நாகனார்
  
அம்ம வாழி தோழி நம்_வயின்வாழ்க! தோழியே! நமது இடத்தில்
யானோ காணேன் அதுதான் கரந்தேநான் பார்த்ததில்லை; ஆனால் அது மறைவாக என்னிடத்தில் வந்து
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மேபாறைகளின் வழியான பாதையாய் என் காலை வருத்துகிறது;
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மேசெறிந்த இருளாய் என் கண்களை வருத்துகின்றது;
விடர் முகை செறிந்த வெம் சின இரும் புலி  5மலையின் பிளப்புகளிலுள்ள குகையில் பதுங்கியிருக்கும் மிக்க சினமுள்ள பெரிய புலி
புகர் முக வேழம் புலம்ப தாக்கிபுள்ளிகளையுடைய முகத்தைக் கொண்ட யானையை அது வருந்தும்படி தாக்கி,
குருதி பருகிய கொழும் கவுள் கய வாய்அதன் குருதியைப் பருகிய தன் கொழுத்த புடைத்த கன்னத்தையுடைய பெரிய வாயை
வேங்கை முதலொடு துடைக்கும்வேங்கை மரத்தின் அடிமரத்தில் துடைக்கின்ற
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறேஉயர்ந்த மலைகளையுடைய நாட்டினன் வரும் பாதையை –
  
# 159 நெய்தல்# 159 நெய்தல் கண்ணம்புல்லனார்
  
மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின்நீலமணி களங்கமின்றித் தெளிந்திருந்தாற் போன்ற பெரிய கரிய கடற்பரப்பின்
உரவு திரை கொழீஇய பூ மலி பெரும் துறைவலிமை மிக்க அலைகள் கொழித்துச் சேர்த்த பூக்கள் மலிந்த பெரிய கடல்துறையில்
நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரைநிலவைக் குவித்ததைப் போன்ற மணல்மேடு இடிந்து சரிந்த கரையில்,
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணிசங்குகளைக் குலையாகத் தொடுத்தது போன்ற குருகுகளின் வரிசையை எண்ணி,
எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல    5பகற்பொழுதை உன்னோடு கழித்ததன் பின்னரும், மெல்ல
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்காற்று துடைத்துத் தூய்மையாக்கிய வரிவரியான புன்னை மரம் உள்ள முற்றத்தில்
கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇயகொழுத்த மீனை உண்ணும் வளமான இல்லத்திற்குச் செல்வதற்காக
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும்எழுந்து வருக என்று அழைத்தால் அவளும் அதற்கு உடன்படமாட்டாள்; நாமும்
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்துநீ இங்கேயே இரு என்று சொல்ல மனமில்லாதவள் ஆயினோம்; நள்ளிரவின்
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல்      10உடைந்து விழும் அலையின் ஒலியில் தூங்கும் பரந்த கடலை ஒட்டிய
சில் குடி பாக்கம் கல்லெனசிலரே வாழும் பாக்கத்தில் உள்ளோர் கல்லென்ற ஓசையுடன் ஆரவாரிக்க,
அல்குவது ஆக நீ அமர்ந்த தேரேஇங்குத் தங்குவதாக நீ அமர்ந்திருக்கும் தேர்.
  
# 160 குறிஞ்சி# 160 குறிஞ்சி வெள்ளூர்க் கிழார் மகனார் வெண்பூதியார்
  
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்நடுவுநிலைமை, நட்பைப் போற்றல், நாணவுணர்வு நன்றாக உடைமை,
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்ஈத்து உவத்தல், நற்பண்பு, உலகவழக்கை அறிந்து ஒழுகுதல் ஆகிய நற்குணங்களை
நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மெனஉன்னைக்காட்டிலும் நன்கு அறிவேன் உறுதியாக, மெல்லென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலைமேற்புறமாக எழுந்த வயிற்றுத் தேமலையும், எழுச்சி மிக்க இளமையான அழகிய முலைகளையும்
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின்       5உதிர்த்துவிட்டதைப் போன்ற அழகிய நுண்ணிய அழகுத் தேமலையும்,
ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறிஐந்து பகுதிகளாக வகுத்த கூந்தலையும், சிவந்த புள்ளிகளைக் கொண்ட
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதிஅழகிய நெற்றியின் மேல் அழகுறப்படிந்த தேன் பாய்கின்ற கொண்டைமயிர்களையும்,
முது நீர் இலஞ்சி பூத்த குவளைநாட்பட்ட நீரினைக்கொண்ட பொய்கையில் பூத்திருக்கும் குவளை மலர்களை
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்எதிர் எதிராக வைத்துக்கட்டியதைப் போன்ற இவளது
அரி மதர் மழை கண் காணா ஊங்கே     10செவ்வரி பரந்த செழுமையும் குளிர்ச்சியும் மிகுந்த கண்களைக் காண்பதற்கு முன்னர் –
  
# 161 முல்லை# 161 முல்லை பெருந்தலைச் சாத்தனார்
  
இறையும் அரும் தொழில் முடித்து என பொறையநம்முடைய வேந்தன் தன் அருந்தொழிலாகிய போரினை முடித்தானாக, மலையிலுள்ள
கண் போல் நீலம் சுனை-தொறும் மலரகண் போன்ற நீலமலர்கள் சுனைகள்தோறும் மலர,
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின்மலர்கள் நெருக்கமாய்க் காட்சியளிக்கும் வேங்கைமரத்தையுடைய அகன்ற நெடிய முல்லைநிலத்தில்,
இம்மென் பறவை ஈண்டு கிளை இரியஇம்மென்று ஒலிக்கும் வண்டினங்களின் நெருக்கமான கூட்டம் அஞ்சியோட,
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி     5நெடிய தெருவைப் போன்ற நேராக அமைந்த நீண்ட வழியில்,
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை எனஇளையர் நடையும் ஓட்டமுமாகச் செல்ல, உடைந்த வளையலைப் போன்று
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்பகாந்தளின் செழுமையான இதழ்களைக் குதிரையின் கவிந்த குளம்புகள் அறுத்துச்செல்ல,
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினைதோள்களில் வலிமை கட்டுறுதியாய் விளங்க, மிக நெருங்கி வருகின்ற நம் வரவினை
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்புள்ளினங்கள் கரைந்து அறியும்படி தெரிவித்தனவோ? – தெளிவாக
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல்   10காதல் பொருந்திய இயல்பினளான, இயைபு இல்லாதவற்றைப்
புதல்வன் காட்டி பொய்க்கும்புதல்வனுக்குக் காட்டிப் பொய்ம்மொழி கூறும்
திதலை அல்குல் தே மொழியாட்கேமஞ்சள் புள்ளித் தேமல் படர்ந்த அல்குலையும், இனிய மொழியையும் உடைய நம் காதலிக்கு –
  
# 162 பாலை# 162 பாலை நெய்தல் தத்தனார்
  
மனை உறை புறவின் செம் கால் பேடைவீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலையுடைய பெண்ணான
காமர் துணையொடு சேவல் சேரதன் அழகிய துணையோடு ஆண்புறா சேர்ந்திருக்க,
புலம்பின்று எழுதரு புன்கண் மாலைவருத்தமுடையதாகும்படி எழுகின்ற துன்பம் செய்யும் மாலைப்பொழுதில்,
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின்தனியே இருப்பதனைப் பொறுத்துக்கொள்ளமாட்டேன் என்று உன்
பனி வார் உண்கண் பைதல கலுழ       5நீர் வடிகின்ற மையுண்டகண்கள் துன்பமுற்றனவாய்க் கலங்கிநிற்க,
நும்மொடு வருவல் என்றி எம்மொடுஉம்முடனேயே வருகிறேன் என்று கூறுகின்றாய்; எம்முடன் –
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர்பெரும் பெயர் கொண்ட தந்தையின் நீண்ட புகழ் பொருந்திய நெடிய மாளிகையில்
யாயொடு நனி மிக மடவை முனாஅதுஉன் தாயோடு மிகவும் அதிகமான அன்புச் சூழலில் வளர்ந்த இளம்பெண்ணே! – முன்பு
வேனில் இற்றி தோயா நெடு வீழ்வேனிற்காலத்து இத்தி மரத்தின் நிலத்தில் தோயாத நீண்ட விழுது
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும்      10ஒழுகுகின்ற நாரால் கட்டப்பட்ட ஊசலைப் போலக் கோடைக்காற்று வீசித்தூக்கும்போதெல்லாம்
துஞ்சு பிடி வருடும் அத்தம்அதன் அடியில் தூங்குகின்ற பெண்யானையின் முதுகில் வருடிவிடும் பாலை வழியில் –
வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கேவருவதற்குத் திறன் உள்ளவளாயிருத்தல் இயலுமோ உனக்கு.
  
# 163 நெய்தல்# 163 நெய்தல் தாயங்கண்ணனார்
  
உயிர்த்தன ஆகுக அளிய நாளும்களைப்பாறிக்கொள்ளட்டும்; இரங்கத்தக்கன; நாள்தோறும்
அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடுநுண்ணிய மணல்துகளை முகந்துகொண்டு ஓயாது வீசும் ஊதைக்காற்றில்
எல்லியும் இரவும் என்னாது கல்லெனபகலென்றும் இரவென்றும் பாராமல் கல்லென்ற ஓசையுடன்
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்பசுழன்று ஒலிக்கின்ற வரிசையான மணிகள் தமக்குள் கைகோத்து ஒலியெழுப்ப,
நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர  5நிலவொளி போன்ற ஒளிதவழும் மணல் மேட்டின் உச்சியில் ஏறிப் போய்வர,
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனிஇப்பொழுது என்னுடைய நெஞ்சம் போல, நெடுங்காலமாக மிகவும்
வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல்வருந்தின; மிகவும் இரங்கத்தக்கன அவை; பெருங்கடலின் அருகேயுள்ள
நீல் நிற புன்னை தமி ஒண் கைதைகருநிறப் புன்னையின் பக்கத்தில் தனித்திருக்கும் ஒளிபொருந்திய தாழை மடல்
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்அடிவானத்தில் மறைந்துபோன, விளங்குகின்ற ஒளிபொருந்திய நெடிய சுடரையுடைய
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று       10கதிர்கள் வெப்பத்துடன் எழுந்து உள்ளிடமெல்லாம் தகிக்கும் ஞாயிற்றின்
வைகுறு வனப்பின் தோன்றும்அதிகாலைநேர வனப்பைப் போலத் தோன்றும்
கைதை அம் கானல் துறைவன் மாவேதாழைகளையுடைய அழகிய கடற்கரைச் சோலையின் தலைவனுடைய தேர்க்குதிரைகள் –
  
# 164 பாலை# 164 பாலை பேயனார்
  
உறை துறந்து இருந்த புறவில் தனாதுமழையே முற்றிலும் இல்லாதிருந்த காட்டுப்பகுதியில், அந்த நிலத்திற்குரிய
செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பகசிவந்த கதிர்களையுடைய செல்வனான ஞாயிறு சுட்டெரித்தலால், நிலம் பிளந்துபோக,
உலகு மிக வருந்தி உயா_உறு காலைஉலகம் மிகவும் வருந்தித் துன்புறும் நேரத்தில்
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் எனபொருளீட்டப் பிரிந்து சென்றாரெனினும், நல்லதையே செய்தார் என்று நான்
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய்   5சொற்களால் விளக்கிக் கூறவும் நீ விளங்கிக்கொள்ளவில்லை;
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து எனபுதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇவெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
உறு பசி குறுநரி குறுகல் செல்லாதுமிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
மாறு புறக்கொடுக்கும் அத்தம்     10பின்னே திரும்பி ஓடும் பாலைவழியில்
ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறேதீங்கு சிறிதுமின்றி வருவார் என்பதை நினையாமால் –
  
# 165 குறிஞ்சி# 165 குறிஞ்சி நல்வெள்ளியார்
  
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காதுமருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன்குறிதப்பிய அம்பின் போக்கை நினைத்துப்பார்த்த கானவன்,
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனதெய்வம் இறங்கியது இந்த மலை, அது வானகம் செல்க என்று
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்துதெய்வம் உறையும் உயர்ந்த மலையை வழிபடும்பொருட்டு, பலிகொடுத்து எழுந்து
கிளையொடு மகிழும் குன்ற நாடன்    5தம் சுற்றத்தோடு மகிழும் குன்றுகளைச் சேர்ந்த நாட்டினன்,
அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்பநம்மிடம் வரும்போதெல்லாம் அவனைச் சந்திப்பதற்கான சிரமங்களை அவனுக்கு உரைக்க,
நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்புநம்மை மணங்கொள்ளாத அன்பில்லாதவரின் நட்பு
அன்ன ஆகுக என்னான்அப்படியே ஆகுக என்று உன்னைப்போல் அவன் கூறவில்லை,
ஒல்காது ஒழி மிக பல்கின தூதேஒதுங்கி நிற்காது அன்னையிடம் உண்மையைக் கூறு, மிகவும் அதிகமாயின வேற்று மணத்திற்கான தூது.
  
# 166 பாலை# 166 பாலை மருதன் இளநாகனார்
  
பொன்னும் மணியும் போலும் யாழ நின்பொன்னும் நீலமணியும் போன்ற உன்
நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும்நல்ல மேனியும், மணங்கமழும் கரிய கூந்தலும்;
போதும் பணையும் போலும் யாழ நின்பூக்கின்ற மலரும், மூங்கிலும் போன்ற உன்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்அழகிய மையுண்ட கண்களும், வனப்புள்ள தோள்களும் ஆகிய
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும்     5இவற்றைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் மகிழ்ந்து நானும்
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்_தலைஅறத்தில் நிலைபெற்றவரைப் போன்ற தன்மையன் ஆனேன்; அதற்கு மேலும்
பொலம் தொடி புதல்வனும் பொய்தல் கற்றனன்பொன்னாலான தோள்வளை அணிந்த புதல்வனும் விளையாடக் கற்றுக்கொண்டான்;
வினையும் வேறு புலத்து இலெனே நினையின்தொழிலும் வேறு இடத்தில் இல்லை; நினைத்துப்பார்த்தால்
யாதனின் பிரிகோ மடந்தைஎதற்காகப் பிரிந்திருக்கவேண்டும்? மடந்தையே!
காதல் தானும் கடலினும் பெரிதே    10காதல் என்பது கடலினும் பெரியது!
  
# 167 நெய்தல்# 167 நெய்தல் உலோச்சனார்
  
கரும் கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரும் சினைகரிய கொம்பினையுடைய புன்னையின் மேலோங்கி வளைந்த பெரிய கிளையிலிருந்து
விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய்புதியதாய் வந்த வெண்குருகுகள் ஒலிக்குமாயின், ஆய் என்பவனின்
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்றநிறையக் கள்ளுண்டு மகிழும் அமர்வில் பரிசிலைப் பெற்ற
பண் அமை நெடும் தேர் பாணியின் ஒலிக்கும்செயற்பாடு நன்றாக அமைந்த நெடிய தேரின் மணியொலிபோல் ஒலிக்கும்
தண்ணம் துறைவன் தூதொடும் வந்த    5குளிர்ச்சியாயுள்ள அழகிய துறையைச் சேர்ந்தவனின் தூதோடும் வந்த
பயன் தெரி பனுவல் பை தீர் பாணநீ பெறும் பயனுக்குத் தக்கவாறு கூறும் செய்தியையுடைய வருத்தம் தீர்ந்த பாணனே!
நின் வாய் பணிமொழி களையா பன் மாண்உன் வாயிலிருந்து வரும் பணிவான பொய்மொழிகள் நீக்கிப்போடமாட்டா – பலவாறாகச் சிறப்புக்கொண்ட
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம்புதிய மலர்களைக் கொண்ட ஞாழலோடு புன்னை மலரும் உதிர்ந்து பரவி
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்தமணம் கமழ்கின்ற கடற்கரைச் சோலையில் தன் மாட்சிமைப்பட்ட நலத்தை இழந்த,
இறை ஏர் எல் வளை குறு_மகள்       10இறங்கிய தோள்களில் ஏற்றிக்கட்டிய ஒளிவிடும் வளையலை அணிந்த சிறுமகளின்
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பேபிறை போன்ற அழகிய நெற்றியில் பரவிய பசலையை – 
  
# 168 குறிஞ்சி# 168 குறிஞ்சி மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
  
சுரும்பு உண விரிந்த கரும் கால் வேங்கைவண்டுகள் உண்ணும்படியாக மலர்ந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கையின்
பெரும் சினை தொடுத்த கொழும் கண் இறாஅல்பெரிய கிளையில் கட்டிய கொழுத்த கண்களையுடைய தேனடையில்
புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளைதேனீக்கள் மொய்த்ததால் கசிந்த இனிய தேன், கீழே பாறையின் மேலுள்ள குழிகளில் வழிய,
குற குறு_மாக்கள் உண்ட மிச்சிலைஅதனைக் குறவர்களின் சிறுவர்கள் உண்டபின் எஞ்சியதைப்
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் 5புல்லிய தலையைக் கொண்ட மந்தியின் வலிய குட்டிகள் நக்கும்
நன் மலை நாட பண்பு எனப்படுமோநல்ல மலை நாட்டினனே! பண்புடைய செயல் என்று சொல்லத் தகுந்ததோ?
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய்உன்னை விரும்பி உயிர்வாழ்பவளின் இனிய உயிரை எண்ணிப்பார்க்கமாட்டாய்;
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள்அச்சத்தைத் தரும் பாம்புகள் திரியும் மிகுந்த இருளைக்கொண்ட நள்ளிரவில்
மை படு சிறு நெறி எஃகு துணை ஆகமயக்கத்தைத் தருகின்ற சிறிய வழியில் கையிலுள்ள வேலே துணையாக
ஆரம் கமழும் மார்பினை    10சந்தனம் கமழும் மார்புடன்
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலேமலைச் சாரலிலுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்துக்கு நீ வருவது –
  
# 169 முல்லை# 169 முல்லை இடைக்காடனார்
  
முன்னியது முடித்தனம் ஆயின் நன்_நுதல்எண்ணிச் சென்ற காரியத்தை முடித்துவிட்டால், நல்ல நெற்றியையுடையவளே!
வருவம் என்னும் பருவரல் தீரதிரும்பிவிடுவோம் என்று கூறியவுடன் அவள் பட்ட துன்பமெல்லாம் இப்போது தீரும்படியாக,
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லிஒலித்தது, வாழ்க! நீண்ட சுவரில் உள்ள பல்லி! –
பரல் தலைபோகிய சிரல் தலை கள்ளிபரல்கற்கள் நீண்டு கிடக்கின்ற பாலை நிலத்தில், மீன்கொத்திப்பறவையின் தலையைப் போன்ற கள்ளிச் செடியின்
மீமிசை கலித்த வீ நறு முல்லை     5உச்சியில் வெகுவாய்ப் பூத்திருக்கும் பூக்களைக் கொண்ட முல்லையின் கொடிகளை
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும்ஆடுகின்ற தலையையுடைய செம்மறியாட்டின் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு திரும்பும்
வன் கை இடையன் எல்லி பரீஇவலிமையான கையையுடைய இடையன் மாலையில் அறுத்து,
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலைவெண்மையான பனங்குருத்துடன் சேர்த்துத் தைத்த, மார்பில் அசைகின்ற அழகிய மாலை
மறுகு உடன் கமழும் மாலைதெரு முழுக்க மணக்கும் மாலைப் பொழுதில்
சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரானே      10சிறுகுடிப் பக்கத்தில் உள்ள எம் பெரிய மாளிகையில் –
  
# 170 மருதம்# 170 மருதம் பரணர்
  
மட கண் தகர கூந்தல் பணை தோள்மடப்பம் பொருந்திய கண்களையும், நறுமணச் சாந்து பூசிய கூந்தலையும், பருத்த தோள்களையும்
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்வரிசையான வெண்மையான பற்களையும், திரண்டு நெருங்கிய தொடைகளையும் உடைய
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்பிணைத்த அழகிய தழைகளால் தைக்கப்பட்ட உடையை அணிந்து, தனியாக வந்திருக்கும் இவள்
விழவு_களம் பொலிய வந்து நின்றனளேஇந்த இடம் விழாக்கொண்டாடும் இடமாகப் பொலிவுடன் தோன்றுமாறு வந்து நிற்கின்றாள்;
எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம்   5கவனமாயிருங்கள், கவனமாயிருங்கள், எம் கணவனைக் காத்துக்கொள்ளுங்கள்!
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ஆரியர்கள் ஒன்று கூடிய பெரும் புகழ் படைத்த முள்ளூர்ப் போர்க்களத்தில்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனதுபலருடன் உருவிய வாளுடன் வந்த ஒளிவிளங்கும் வாட்படை, மலையனது
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம்ஒரு வேற்படைக்குத் தோற்றோடியதைப் போல, நாம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினேபலராயிருந்தும் என்ன பயன், இவள் ஒருத்தியின் வலிமை வெளிப்பட்டால்?
  
# 171 பாலை# 171 பாலை செங்கண்ணனார்
  
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானைநீர் வேட்கையால் உந்தப்பட்ட வருத்தமிகு யானையுடன்,
வேனில் குன்றத்து வெம் வரை கவாஅன்வேனில் காலத்துக் குன்றுகள் சூழவுள்ள வெப்பமான அடிவாரத்தில்
நிலம் செல செல்லா கயம் தலை குழவிநிலத்தில் செல்வதற்கு இயலாத மெல்லிய தலையையுடைய கன்று
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறியசேரியிலிருக்கும் அழகிய பெண்டிர் மனம் துணுக்குறுமாறு
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன்  5ஊரிலுள்ள பசுவின் கன்றுகளுக்குள் புகுந்துகொள்ளும் நாட்டையுடையவனே!
பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டுபலமலைகளைக் கடந்து செல்லும் கடத்தற்கரிய பாலைவழியில் சென்றுவிட்டால், நம்மைவிட்டு,
யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர்எவ்வாறு துயில்கொள்ள இயலும்? வேல்படையில்
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பநல்ல வேலைப்பாட்டுடன் கட்டப்பட்ட தெளிந்த ஓசையைக் கொண்ட மணிகள் கழன்று வீழ்ந்ததைப் போன்ற
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்பேய்கள் நிலைகொண்டு நடமாடும் பொழுதைக் கொண்ட நள்ளிரவில்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ     10ஆசையுடன் அவனுடைய நெஞ்சோடு கலந்து
மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணேஅவனது மார்பினைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதை வழக்கமாகக் கொண்ட கண்கள் –
  
# 172 நெய்தல்# 172 நெய்தல் நக்கீரனார்
  
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்திவிளையாட்டுத் தோழியருடன் வெள்ளையான மணலில் ஊன்றிவைத்துப்
மறந்தனம் துறந்த காழ் முளை அகையபின்னர் மறந்தவராய் விட்டுப்போன விதை முளைத்து, முளை தோன்ற
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்பஅதற்கு நெய் கலந்த இனிய பாலை ஊற்றி இனிதாக வளர்க்க,
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்றுஉம்மைக்காட்டிலும் சிறந்தது இந்த உமது தங்கையானவள் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே    5அன்னை கூறினாள் இந்தப் புன்னையது சிறப்பைப்பற்றி;
அம்ம நாணுதும் நும்மொடு நகையேஆதலால் வெட்கமாயிருக்கிறது உம்மோடு இங்கு சிரித்துவிளையாட;
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்பபுதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்வலம்புரியாக வெண்சங்கு ஒலிக்கும் ஒளிர்கின்ற நீரையுடைய
துறை கெழு கொண்க நீ நல்கின்துறையைச் சேர்ந்த கொண்கனே! நீ இவளிடம் அன்புசெய்தால்
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே 10தங்குவதற்குத் தகுதியான நிழல் வேறிடத்திலும் உண்டு.
  
# 173 குறிஞ்சி# 173 குறிஞ்சி பிரமன் காரி
  
சுனை பூ குற்றும் தொடலை தைஇயும்சுனையிலுள்ள மலர்களைக் கொய்தும், அவற்றை மாலையாகத் தொடுத்தும்,
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும்மலையிலுள்ள செங்காந்தள் பூவைத் தலைமாலையாகச் செய்துதந்தும்,
தன் வழி படூஉம் நம் நயந்து அருளிதன்னை வழிபாடு செய்யும் நம்மை விரும்பி, நம்மேல் இரக்கங்கொண்டு
வெறி என உணர்ந்த அரிய அன்னையைஇந்தக் காம நோய் முருகனால் வந்தது என எண்ணும் மாற்றற்கரிய அன்னையை
கண்ணினும் கனவினும் காட்டி இ நோய்5கண்ணால் குறிப்பாகக் காட்டி, கனவிலும் வந்துதோன்றி, இந்த நோய்
என்னினும் வாராது மணியின் தோன்றும்என்னாலும் வந்ததன்று, பிறதெய்வங்களாலும் வந்ததன்று, நீலமணி போல் தோன்றும்
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின்அந்த மலைநாட்டைச் சேர்ந்தவன் செய்ததாகும் இது என்று சொன்னால்
படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின்மொய்க்கின்ற வண்டுகள் ஆரவாரிக்கும் புத்தம்புதிய மாலை அணிந்த மார்பையுடைய
நெடுவேட்கு ஏதம் உடைத்தோநெடுவேளாகிய முருகனுக்கு ஒரு குற்றம் உண்டாகுமோ? 
தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே 10வளையணிந்தவளே கூறுவாய்! கேட்கிறேன் நான்.
  
# 174 பாலை# 174 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
  
கற்றை ஈந்தின் முற்று குலை அன்னஈந்தின் கற்றையான முற்றிய குலை போன்ற,
ஆள் இல் அத்த தாள் அம் போந்தைஆளரவம் அற்ற பாலைவழியில் நிற்கும் தாளிப்பனையின்
கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின்கொழுவிய கொத்துக்களையுடைய நெடிய மடலிலிருந்து ஆண்பறவை தன் பேடையை அழைத்தால்,
புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடைபுலி அதற்கு எதிரோசை எழுப்பும் கோடைக்காற்று வீழும் அரிய வழியில்
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி5பிரிந்து சென்ற காதலர் திரும்ப வந்து இனிதே தழுவிக்கொண்டு
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்துபிரியாமல் ஓரிடத்தில் தங்கியிருக்கும்போதும், பெரிதும் மனங்கலங்கி
உயங்கினை மடந்தை என்றி தோழிவருந்துகின்றாய் மடந்தையே என்று சொல்கிறாய் தோழியே!
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கேஅப்படித்தான் இருக்கும் அதனை அறியாதவர்களுக்கு;
வீழா கொள்கை வீழ்ந்த கொண்டிபிற பெண்களை விரும்பாத கொள்கையுடைய நம் தலைவன் இப்போது விரும்புகின்ற அந்தப் பரத்தையைத்
மல்லல் மார்பு மடுத்தனன் 10தன் வளப்பம் பொருந்திய மார்பினில் சேர்த்தனன்;
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையேஅவனைத் தழுவுவது எப்படி, அன்பு இல்லாத போது?
  
# 175 நெய்தல்# 175 நெய்தல் மதுரைக் கணக்காயனார்
  
நெடும் கடல் அலைத்த கொடும் திமில் பரதவர்நெடிய கடலைப் புரட்டியெடுத்த வளைந்த மீன்படகுகளைக் கொண்ட பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇநிறைய மீன்களான கொள்ளைப்பொருளைத் தாறுமாறாய்க் கிடக்கும் மணலில் குவித்து
மீன் நெய் அட்டி கிளிஞ்சில் பொத்தியமீனின் கொழுப்பை உருக்கிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்சிறிய சுடரைக் கொண்ட விளக்கு வெளிச்சத்தில் தூங்குகின்ற, மணமிக்க மலரையுடைய
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை   5புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த துறையைச் சேர்ந்தவனோடு உள்ள நட்பை நம் அன்னை
தான் அறிந்தன்றோ இலளே பானாள்தான் அறிந்திருக்கவில்லை; நள்ளிரவில்
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பிநம் சேரியிலுள்ள பெண்டிர் கூறிய இழிந்த சொற்களை நம்பிச்
சுடுவான் போல நோக்கும்சுடுவது போலப் பார்க்கிறாள் –
அடு பால் அன்ன என் பசலை மெய்யேகொதிக்கின்ற பாலைப் போன்ற என் பசலை பாய்ந்த மேனியை – 
  
# 176 குறிஞ்சி# 176 குறிஞ்சி மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தனார்
  
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்துதலைவி எம்மை நயந்து வாழ்பவளாதலால் நாமும் அவளை நயந்து
நல்கினம் விட்டது என் நலத்தோன் அ வயின்தலைவனை அவள்பால் விட்டுக்கொடுத்ததில் என்ன தவறு? நம் நலத்தை எண்ணுபவனை அவ்விடத்திற்குப்
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள்பெருந்தன்மையினால் கொடுத்திருப்பதை அறியாமல், தலைவிமேல் அவள்
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழிஅன்புடையவள் என்பார்களோ? உரைப்பாய் தோழி!
நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப 5வரிசையாய் நிற்கும் யானைகளின் முகங்களில் காணப்படும் வரிகளைப் போன்று
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள்மொட்டுகள் தளையவிழ்ந்த ஒளிவிடும் செங்காந்தள்,
வாழை அம் சிலம்பின் வம்பு பட குவைஇவாழைத் தோட்டங்கள் உள்ள மலைச் சாரலில் புதுமணம் உண்டாகும்படி செறிந்திருந்து,
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டுயாழிசையைக் கேட்டது போன்ற இனிய ஓசையையுடைய கூட்டமான வண்டுகள்
அருவி முழவின் பாடொடு ஒராங்குஅருவியின் முழவொலி போன்ற முழக்கத்தோடு ஒன்றுசேர்ந்து
மென்மெல இசைக்கும் சாரல் 10மெல்ல மெல்ல இசைக்கும் மலைச்சாரலிலுள்ள
குன்ற வேலி தம் உறைவு இன் ஊரேகுன்றுகளை வேலியாகவுடைய வாழ்வதற்கு இனிய தம் ஊரில் இருப்பவர்கள் –
  
# 177 பாலை# 177 பாலை பெருந்தலைச் சாத்தனார்
  
பரந்து படு கூர் எரி கானம் நைப்பபரந்துபட்ட பெரும் தீயானது காட்டினை அழிக்க,
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டுமரங்களெல்லாம் நெருப்புவாய்ப் பட்டு, வறண்டுபோன இடமான பாலைக்காட்டின்
ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர்ஒதுங்கிநிற்கவும் நிழலற்ற அரிய கொடிய வழியினில் பலர் சென்றிருக்கிறார்கள் என்பதை தலைவனின்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்படகுறிப்புகளால் கண்டுகொண்டேன் நான்; ஒழுங்குபட
வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும்      5வேலினையும், அதன் ஒளிர்கின்ற இலையையும் துடைக்கின்றார்; கேடயத்திற்கும்
பீலி சூட்டி மணி அணிபவ்வேமயிலிறகு சூட்டி மணி அணிவிக்கின்றார்; 
பண்டினும் நனி பல அளிப்ப இனியேமுன்னைக்காட்டிலும் மிகவும் பலவாக என்மீது இரக்கங்காட்டுகிறார்; இப்போது
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்துவந்துவிட்டது போலும் தோழி! மிகவும் நொந்துபோய்
எழுது எழில் உண்கண் பாவைதீட்டிய அழகைக் கொண்ட மையுண்ட கண்களின் கண்மணிகள்
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே    10கேடுவிளைவிக்கும் கண்ணீர்வெள்ளத்தில் நீந்தும் நாள் –
  
# 178 நெய்தல்# 178 நெய்தல் பூதன் தேவனார்
  
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்னஅசைகின்ற மூங்கிலின் ஈட்டத்தை மெல்லிதாக உரித்துப் பிசைந்தாற் போன்ற
தோடு அமை தூவி தடம் தாள் நாரைதாள்தாளாக அமைந்த சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய நாரையால்
நலன் உணப்பட்ட நல்கூர் பேடைஇன்பம் நுகரப்பெற்றுக் கைவிடப்பட்ட துயரத்தையுடைய பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாதுகழியின் கரையில் தான் திரியும் பக்கங்களில் சிறிய மீனைப் பிடித்து உண்ணாமல்
கைதை அம் படு சினை புலம்பொடு வதியும்     5தாழையின் அழகிய வளைந்த கிளையில் தனிமைத்துயருடன் தங்கியிருக்கும்
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்குளிர்ச்சி பொருந்திய அழகிய துறையைச் சேர்ந்தவனுடைய தேரினைக் கண்ணால்
காணவும் இயைந்தன்று-மன்னே நாணிகாணவும் முடியவில்லை; வெளியில் சொல்ல வெட்கப்பட்டு,
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன்நள்ளென்னும் யாமத்திலும் கண்ணுறக்கம் கொள்ளேன்;
புள் ஒலி மணி செத்து ஓர்ப்பபறவைகள் எழுப்பும் ஒலியை மணியின் ஓசையாக எண்ணி உற்றுக்கேட்டு
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே10நிலைகெட்டுப்போகிறது அவரை முற்றிலும் நம்பியிருந்த என் நெஞ்சம்.
  
# 179 பாலை# 179 பாலை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
  
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று எனவீட்டில் முளைத்தெழுந்த வயலைக்கொடியை ஈற்றுப்பசு தின்றுவிட
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிதான் விளையாடும் பந்தை நிலத்தில் எறிந்து, விளையாட்டுப்பொம்மையைத் தூக்கிப்போட்டுத்
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள்தன் அழகிய வயிற்றில் அடித்துக்கொண்ட என் காரியக்காரியான சிறுமகள்,
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடுமானின் மருண்ட பார்வையைப் போன்ற தன் மயக்கந்தரும் பார்வையோடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு     5நானும் தாயும் ஊட்டிவிட தேன்கலந்த
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மிஇனிய பாலை அருந்தாமல், ஏக்கங்கொண்டு விம்மி
நெருநலும் அனையள்-மன்னே இன்றேநேற்றைக்குக்கூட அவ்வாறே இருந்தாள்; இன்றோ,
மை அணல் காளை பொய் புகல் ஆககரிய மீசையும் தாடியையுமுடைய காளையொருவனின் பொய்மொழிகளை ஆதரவாகக் கொண்டு
அரும் சுரம் இறந்தனள் என்ப தன்கடப்பதற்கரிய பாலைவழியில் சென்றுவிட்டாள் என்கின்றனர், தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே10வெண்குருத்துப் போன்ற அழகிய வெண்மையான பற்களில் முகிழ்க்கும் இளநகையைக் காட்டி –
  
# 180 மருதம்# 180 மருதம் கயமனார்
  
பழன பாகல் முயிறு மூசு குடம்பைவயலருகே இருக்கின்ற பலாமரத்தில் முயிறு எனப்படும் சிவந்த பெரிய எறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்கழனியில் இரைதேடிவந்த நாரை தேய்த்துச் சிதைத்ததால், செந்நெல்
விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன்கலந்த வெள்ளை அரிசியைப் போல் எறும்புகளும் அவற்றின் முட்டைகளும் பரந்துகிடக்கும் ஊரைச் சேர்ந்தவன்
பலர் பெறல் நசைஇ நம் இல் வாரலனேபல பெண்களைப் பெறும்பொருட்டு நம் வீட்டுக்குள் வருவதில்லை;
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே       5அப்படி வந்தாலும் மாநிறத்த தலைவி அவனால் பெறும் நன்மையை நம்பி ஊடலை விட்டொழிக்கமாட்டாள்;
அன்னியும் பெரியன் அவனினும் விழுமியஅன்னி என்பவன் பெரியவன்; அவனைக் காட்டிலும் சிறந்த திதியன் என்பவனும் ஆகிய
இரு பெரு வேந்தர் பொரு_களத்து ஒழித்தஇரு பெரும் வேந்தர்கள் போரிட்டு அதனால் வெட்டிச்சாய்த்த
புன்னை விழுமம் போலபுன்னை மரத்தின் துயரமிக்க நிலையைப் போல
என்னொடு கழியும் இ இருவரது இகலேஎன்னொருத்தியோடு போகும் போலும் இந்த இருவருடைய பகைமை.
  
# 181 முல்லை# 181 முல்லை உம்பற்காட்டு இளங்கண்ணனார்
  
உள் இறை குரீஇ கார் அணல் சேவல்கூரைச் சாய்ப்பினுள் கூடுகட்டியிருக்கும் குருவியின் கருத்த மோவாயையுடைய ஆண்
பிற புல துணையோடு உறை புலத்து அல்கிவேறிடத்துச் சென்று அங்கு ஒரு துணையுடன் அதன் இருப்பிடத்தில் தங்கி
வந்ததன் செவ்வி நோக்கி பேடைமீண்டும் தன் கூட்டுக்கு வந்தபோது அதன் மேனியின் மாறுபாடான நிலையைப் பார்த்த பெண்குருவி
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்னஅடர்ந்திருக்கும் ஈங்கைப் பூவைப் போன்ற
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்    5சிறிய பலவான தன் குஞ்சுகளோடு சேர்ந்து, ஆண் குருவி கூட்டுக்குள் புகுவதைத் தடுத்ததால்
துவலையின் நனைந்த புறத்தது அயலதுமழைத் தூறலில் நனைந்த முதுகினையுடையதாய், வெளியே
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்துநடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு மனமிரங்கி, நெடும்பொழுது ஆராய்ந்து,
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்பஇரக்கமுள்ள மனத்தோடு தன்னிடம் அழைக்கச்
கையற வந்த மையல் மாலைசேவற்குருவியின் செயலற்ற நிலைபோல வந்த மயக்கத்தையுடைய மாலைப்பொழுது
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த      10வந்து சேர்ந்ததால், தனது இனிய ஒலியை இழந்த
தார் அணி புரவி தண் பயிர் துமிப்பமாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க,
வந்தன்று பெருவிறல் தேரேவந்தது தலைவனது தேர்,
உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினேதப்பிப்பிழைத்தது இவளின் அழகான நெற்றியின் அழகு.
  
# 182 குறிஞ்சி# 182 குறிஞ்சி அதியன் விண்ணத்தனார்
  
நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுநிலாவும் மறைந்தது; இருளும் பரவிக்கிடக்கின்றது;
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின்ஓவியம் போன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையில்
பாவை அன்ன நின் புறங்காக்கும்பாவையைப் போன்ற நம்மைப் பாதுகாக்கின்ற
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்சிறந்த மேம்பாட்டையுடைய அன்னையும் தூங்கிவிட்டாள்;
கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு     5காணாமற் போக்கிய நல்ல அணிகலனைக் கண்டெடுத்தாற் போன்று
நன் மார்பு அடைய முயங்கி மென்மெலதலைவனின் நல்ல மார்பினை அடைந்து, தழுவிக்கொள்ள, மெல்லமெல்லப்
கண்டனம் வருகம் சென்மோ தோழிபார்த்துவருவோம்! போகலாமா தோழி?
கீழும் மேலும் காப்போர் நீத்தகீழும் மேலும் நடத்திச் செல்வோர் விட்டகன்ற
வறும் தலை பெரும் களிறு போலவறிய தலையையுடைய பெருங்களிற்றைப் போல
தமியன் வந்தோன் பனியலை நீயே      10தனியனாக வந்திருக்கின்றான், கண்ணீர் விடாதே நீயும்.
  
# 183 நெய்தல்# 183 நெய்தல் கயமனார்
  
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்துதமது நாட்டில் விளைந்த வெண்ணெல்லைக் கொணர்ந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றிபிற நாட்டில் விளைந்த உப்பினுக்கு விலையாகக் கூறி,
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்திநீண்ட வழித்தடத்தில் வரிசையாகச் சென்று, நிலவு போன்ற மணலைக் கடந்து
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்துஅங்கே தங்கியிருத்தலை வெறுக்கும் சுற்றத்தோடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாது ஆகும்     5உப்பு வணிகர்கள் செல்வது அவ்வூரினருக்குத் துன்பம் தருவதாகும்;
மடவை மன்ற கொண்க வயின்-தோறுஅறியாமையையுடையாய், தலைவனே! – இடந்தோறும்
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்துன்புறுத்தி அலைக்கும் ஊதைக்காற்றோடு
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தேநீ இல்லாத தனிமைக்காலத்து வரும் மாலைப்பொழுதும் சேர்ந்துகொள்கிறது;
இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்தகூட்டமான மீன்களை நிறைய உண்ட வெண்குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல    10நீரற்ற குளத்தின் நெய்தல் மலர் போல
வாழாள் ஆதல் சூழாதோயேஇவள் உயிர்வாழமாட்டாள் என்பதனை நினைத்துப்பார்க்காத நீ –
  
# 184 பாலை# 184 பாலை நெய்தல் தத்தனார்
  
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடுபோர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்றுஇப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே    5எப்படிச் சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்நினைத்துப்பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது – மையுண்ட கண்களின்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என்மணிகளில் வாழும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்
அணி இயல் குறு_மகள் ஆடியஅழகிய சாயலையுடைய சிறுமகள் விளையாடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டேநீல மணி போன்ற நொச்சியையும் திண்ணையையும் கண்டு –
  
# 185 குறிஞ்சி# 185 குறிஞ்சி பரணர்
  
ஆனா நோயோடு அழி படர் கலங்கிகுறையாத காம நோயோடு வருத்துகின்ற துன்பத்தால் கலங்கி
காமம் கைம்மிக கையறு துயரம்காமம் எல்லைமீறிப் போக செயலற்ற நிலையிலுள்ள துயரத்தைக்
காணவும் நல்காய் ஆயின் பாணர்கண்டும் என்மீது அன்புகொள்ளாயாயின் – பாணர்கள்
பரிசில் பெற்ற விரி உளை நன் மான்பரிசிலாகப் பெற்ற விரிந்த பிடரி மயிரையுடைய நல்ல குதிரைகளின்
கவி குளம்பு பொருத கல் மிசை சிறு நெறி    5கவிந்த குளம்புகள் தடம்பதித்ததால் மலையில் ஏற்பட்ட சிறிய வழியில்
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்இரவலர்கள் வருத்தமின்றி ஏறுகின்ற பொறையனாகிய சேரமானின்
உரை சால் உயர் வரை கொல்லி குட_வயின்புகழ் பெற்ற உயர்ந்த மலையான கொல்லிமலையின் மேற்கே
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்துஅகன்ற இலைகளையுடைய காந்தளின் ஆடுகின்ற பூக்குலைகளில் தேனெடுத்து
பறவை இழைத்த பல் கண் இறாஅல்வண்டினங்கள் உருவாக்கிய பல கண்களையுடைய தேனடைகளின்
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய10தேனை உடைய நெடிய மலையின் தெய்வம் பொறிக்கப்பட்ட
வினை மாண் பாவை அன்னோள்செயல்திறன் கொண்ட கொல்லிப்பாவையைப் போன்றவள்
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானேஎன் உயிரை எடுக்க எண்ணுகிறாள் – நான் நொந்துபோவேன்.
  
# 186# 186 பாலை அறுவை வாணிகன் இளவேட்டனார்
  
கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கிகல்லில் ஊறும் ஊற்றில் சேர்ந்துள்ள நீரைக் குழியிலிருந்து முற்றிலும் அற்றுப்போகுமாறு உறிஞ்சி,
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டுகரிய சொரசொரப்பான நீண்ட கையை நீட்டி நீரைத் தாங்கிக்கொண்டு
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும்பெரிய கையையுடைய யானை தன் பிடியை எதிர்கொண்டு ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடைகாடு முற்றிலும் வெம்பிப்போன வறட்சி மிகுந்த பாலைநிலத்தில்,
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து      5வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்பாணர்கள் யாழினை இசைக்க, அதனைக் கேட்டு, அருகிலிருக்கும்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழிலநெடியதாய் நிற்கும் யா மரத்தில் ஏறும் தொழிலையுடையது –
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடுபிறருக்கு உதவவேண்டும் என்ற முனைப்பில் முயற்சிமேற்கொள்ளும் பேரருள் கொண்ட நெஞ்சத்தோடே
காமர் பொருள்_பிணி போகியயாவரும் விரும்பும் பொருளீட்டும் ஆவல் மேற்கொண்ட
நாம் வெம் காதலர் சென்ற ஆறே      10நாம் விரும்பும் காதலர் சென்ற வழி.
  
# 187 நெய்தல்# 187 நெய்தல் ஔவையார்
  
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகநெய்தல் மலர்கள் கூம்பிப்போக, நிழல்கள் கிழக்குத் திசையில் நீண்டுவிழ,
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியமலையைச் சேர்ந்த ஞாயிறு சிவந்து நிலத்தின் வெப்பம் தணிய,
பல் பூ கானலும் அல்கின்றன்றேபல பூக்களைக் கொண்ட கடற்கரைச் சோலையும் இருள்சூழ நின்றது;
இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டிவரிசையான மணிகள் ஒலிக்க, பொழுது சாய தேரில் குதிரையைப் பூட்டி,
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய     5மெய்யெல்லாம் மிகுந்துதோன்றும் காதலுடன் நாம் வணங்கி விடைபெற,
தேரும் செல் புறம் மறையும் ஊரொடுதேரும் செல்கின்ற பக்கத்தில் மறைந்துபோகும்; இந்த ஊரோடு
யாங்கு ஆவது-கொல் தானே தேம் படஎன்ன ஆகுமோ அது? தேன் மணக்க
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்மலரூதும் வண்டுகள் இசைபாடும் மலர்மாலை அணிந்த மார்பில்
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடுஒளி தவழும் வளைந்த அணிகலன்கள் அணிந்த தலைவனோடு
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே   10இனிதாக நகை செய்தபடி நாம் விளையாடிய சோலை –
  
# 188 குறிஞ்சி# 188 குறிஞ்சி கண்ணகனார்
  
படு நீர் சிலம்பில் கலித்த வாழைநீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின்
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகைவளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம்ஒளிரும் இழையணிந்த மகளிரின் ஒளிவிடும் வளையல்களைத் தொடுகின்ற
மெல் விரல் மோசை போல காந்தள்மெல்லிய விரல்களிலுள்ள மோதிரம் போல, காந்தளின்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப 5வளமையான இதழ்களில் தோய்கின்ற, வானத்தை எட்டும் மலைநாட்டினனே!
நன்றி விளைவும் தீதொடு வரும் எனநல்லது விளையுமிடத்தில் தீயதும் உடன் தோன்றும் என்பது
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துஅப்பொழுதே  நன்றாக அறிந்திருந்தாளாதலால், குன்றத்துத்
தேம் முதிர் சிலம்பில் தடைஇயதேன் மிக்க மலைச்சரிவில் வளர்ந்து திரண்ட
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னேமூங்கில் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோகுமாறு ஆகமாட்டாள்.
  
# 189 பாலை# 189 பாலை இடைக்காடனார்
  
தம் அலது இல்லா நம் நயந்து அருளிஅவர் இல்லாமல் உயிர்வாழாத நம்மை விரும்பி அருள்செய்ய
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர்இன்னும் வரவில்லை என்றாலும் பாணர்கள்
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ்சினம் தணிவதற்கரிய தெய்வத்துக்கு முன்னர், சீறியாழின்
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின்நரம்புகளை இசைக்கும் இசையைப்போல இனிய குரலையுடைய குருகினங்களையுடைய
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ     5கங்கையாற்று மரக்கலத்தில் ஏறிச் சென்றிருப்பார் போலும்; 
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினைவேறு எந்தச் செயலையேனும் செய்கிறாரோ அவர்; கொடிய செயலாகிய
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகியகொலைத்தொழிலில் வல்ல வேட்டுவன் விரித்த வலையினின்றும் தப்பிப்பறந்துபோன
கான புறவின் சேவல் வாய் நூல்காட்டுப்புறாவின் சேவல், வாயில் நூலைக்கொண்டு பின்னும்
சிலம்பி அம் சினை வெரூஉம்சிலந்தியின் அழகிய வலையைக் கண்டு வெருண்டோடும்
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே  10காற்றால் அசையும் காய்ந்த கிளைகளைக்கொண்ட பாலைக்காட்டுவழி சென்றவர் –
  
# 190 குறிஞ்சி# 190 குறிஞ்சி நக்கண்ணையார்
  
நோ இனி வாழிய நெஞ்சே மேவார்துன்புற்று நலிந்துபோவாய்! வாழ்க! நெஞ்சமே! பகைவரின்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்கடத்தற்கரிய அரண்களை வென்ற, மழைபோல் வளவிய கள்ளையும்,
திதலை எஃகின் சேந்தன் தந்தைபுள்ளிகள் படர்ந்த வேலையுமுடைய சேந்தன் என்பானின் தந்தையாகிய,
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசிதேன் கமழ்கின்ற விரிந்த மலராலான மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையும் உடைய அழிசி என்பானின்
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும்      5வண்டினம் மொய்க்கும் நெய்தல் நெற்பயிர்களுக்கிடையே மலர்கின்ற,
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்னஅந்தப் பூக்களினின்றும் தேன் வழிந்தோடும் அழகிய வயல்வெளியைக் கொண்ட ஆர்க்காடு போன்ற
காமர் பணை தோள் நலம் வீறு எய்தியஅழகிய, பருத்த தோள்களோடு பிற நலன்களும் சிறந்து விளங்கிய,
வலை மான் மழை கண் குறு_மகள்வலைப்பட்ட மானைப்போன்ற, குளிர்ச்சியான கண்களையுடைய சிறுமகளின்
சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயேசில சொற்களே பேசும் பவளம் போன்ற வாயினில் தோன்றும் சிரிப்பினால் மகிழ்ந்துபோனவனே! –
  
# 191 நெய்தல்# 191 நெய்தல் உலோச்சனார்
  
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்சிறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் தேன் செறிந்திருந்த ஒளிரும் பூங்கொத்துக்கள்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்தஅழகிய அணிகலன்களை அணிந்த மகளிர் நெடிய மணலில் செய்த
வண்டல் பாவை வன முலை முற்றத்துவண்டல்மண்ணால் ஆன பாவையின் அழகிய முலைகளின் பரப்பில்
ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம்ஒளிரும் புள்ளிகளையுடைய சுணங்கைப் போல மெல்லிதாகப் பரவிவிழும்
கண்டல் வேலி காமர் சிறுகுடி      5கண்டல் மரங்களாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிக்கு
எல்லி வந்தன்றோ தேர் என சொல்லிஇரவில் வந்தது ஒரு தேர் என்று சொல்லும்
அலர் எழுந்தன்று இ ஊரே பலருளும்ஒரு பேச்சு எழுந்தது இவ்வூரில்; இங்கு என் போல் பலர் இருக்க
என் நோக்கினளே அன்னை நாளைஎன்னைப் பார்த்தாள் அன்னை; நாளை
மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின்கழியிலுள்ள நீலமணி போன்ற முள்ளிச்செடியின் பூவைக் கொய்யமுடியாவிட்டால்
அணி கவின் உண்மையோ அரிதே மணி கழி 10அழகுமிக்க என் மேனியெழில் என்னோடிருப்பது அரிதாகும்; அந்த நீலமணிபோலும் கழியிலுள்ள
நறும் பூ கானல் வந்து அவர்மணமிக்க பூக்களைக் கொண்ட கடற்கரைச் சோலைக்கு வந்து அவரின்
வறும் தேர் போதல் அதனினும் அரிதேதேர் வறிதே திரும்பிச்செல்வது அதனைக்காட்டிலும் அரியதாகும்.
  
# 192 குறிஞ்சி# 192 குறிஞ்சி பரணர்
  
குருதி வேட்கை உரு கெழு வய_மான்இரத்த வெறிகொண்ட அச்சம் பொருந்திய வலிய புலியானது
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்வலிமை மிகுந்த ஆற்றலுடைய இளமையான களிற்றினை எதிர்பார்த்திருக்கும்
மரம் பயில் சோலை மலிய பூழியர்மரங்களடர்ந்த சோலை நிரம்பப் பூழியரின்
உருவ துருவின் நாள் மேயல் ஆரும்நல்ல நிறங்கொண்ட ஆட்டுமந்தையைப் போல அன்றைக்குரிய இரையைத் தேடி உண்ணும்
மாரி எண்கின் மலை சுர நீள் இடை   5மாரிக்காலத்து கரடிகளைக் கொண்ட மலைப்பாங்கான வறண்ட நிலத்தின் நீண்ட வழியில்
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்துநீ என்னை விரும்பி வருவது ஏன்? என்று பலவாறாக வருந்திக்கூறி
அழுதனை உறையும் அம் மா அரிவைஅழுதவளாய் இருக்கின்ற அழகிய மாமை நிறத்த அரிவையே!
பயம் கெழு பலவின் கொல்லி குட வரைபயன்தரும் பலாமரங்களையுடைய கொல்லிமலையின் மேற்குப் பக்கத்தில்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவைபூதமாகிய தெய்வங்கள் உருவாக்கிய புதிதாகச் செய்யப்பட்ட பாவை,
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின்   10விரிந்த கதிர்களையுடைய இளவெயிலில் காட்சியளிப்பதைப் போன்ற உனது
ஆய் நலம் உள்ளி வரின் எமக்குஅழகிய மேனி வனப்பினை நினைத்து வருவதால் எனக்கு
ஏமம் ஆகும் மலை முதல் ஆறேபாதுகாப்பானது இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கும் வழி.
  
# 193 பாலை# 193 பாலை நற்றாமனார்
  
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைஉருக்கிய அரக்குப் போன்ற நிறத்தையும், வட்ட வடிவினையும் கொண்ட மொட்டுக்களையுடைய ஈங்கையின்
துய் தலை புது மலர் துளி தலை கலாவபஞ்சு போன்ற தலையையுடைய புதிய மலரின் தேன்துளி உன்னோடு கலக்க,
நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய்நிறைந்த நீருள்ள புதிதாய் மழைபெய்த நிலங்களில் புகுந்து, அத்துடன் நிற்காமல்
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடைஎமது பெரிய ஊர்ப்புறத்தையும் சூழவரும் பெரிய குளிர்ந்த வாடைக்காற்றே!
நினக்கு தீது அறிந்தன்றோ இலமே    5உனக்குத் தீங்கொன்றும் நான் அறிந்தவளில்லை;
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்பருத்த என் தோள்களில் செறித்த என் ஒளிமிக்க தோள்வளைகள் நெகிழும்படி செய்த என் காதலர்
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆகஅரிய செயலான பொருளீட்டல் காரணமாகப் பிரிந்துசென்றார்; எனவே
யாரும் இல் ஒரு சிறை இருந்துயாருமில்லாமல் ஒரு மூலையில் கிடந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமேபெரிய துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவளை வருத்தவேண்டாம்.
  
# 194 குறிஞ்சி# 194 குறிஞ்சி மதுரை மருதன் இளநாகனார்
  
அம்ம வாழி தோழி கைம்மாறுவாழ்க! தோழியே! கைம்மாறு
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய்என்ன செய்வோம் நாம்? பெரிய வாயையுடைய
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்கன்று தன் பக்கத்தில் நிற்க, தன் பெண்யானையைச் சேர்ந்து இன்புறும்
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கைவலி மிகுந்த உயர்ந்த கொம்புகளையுடைய, நிலத்தைத் தொட்டுக்கொண்டு இழுத்துச் செல்லும் நீண்ட கையையுடைய
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை      5பெருமை மிக்க யானைக்கு அன்றியும், மலை மேலே
தனி நிலை இதணம் புலம்ப போகிதனித்த நிலைகொண்ட பரண்களை விட்டுப்போய்
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறைமந்தியும் அறியாத மரங்கள் செறிந்த ஒரு ஓரத்தில்
குன்ற வெற்பனொடு நாம் விளையாடகுன்றுகளையுடைய மலைநாட்டினனோடு நாம் மகிழ்ந்து விளையாடிக்கொண்டிருக்க
இரும்பு கவர்கொண்ட ஏனல்இரும்பாலாகிய அரிவாளால் அரிந்துகொள்ளப்போகும் தினையின்
பெரும் குரல் கொள்ளா சிறு பசும் கிளிக்கே 10பெரிய கதிர்களைக் கொத்தித்தின்னாத சிறிய பச்சைக்கிளிகளுக்கும் –
  
# 195 நெய்தல்# 195 நெய்தல் பெருங்குன்றூர்க் கிழார்
  
அருளாய் ஆகலோ கொடிதே இரும் கழிமனமிரங்காமலிருத்தல் மிகவும் கொடிதானது – கரிய கழியில்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்திகுட்டியான நீர்நாய் கொழுமையான மீன்களை நிறைய உண்டு
தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும்தில்லை மரப் பொந்தினில் படுத்துறங்கும்
மெல்லம்புலம்ப யான் கண்டிசினேமென்மையான கடற்கரைத் தலைவனே! நான் கண்டிருக்கிறேன்;
கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி       5கல்லென்று ஒலிக்கின்ற பறவைகளைக் கொண்ட கடற்கரைச் சோலையைக் கொண்ட அழகிய தொண்டிநகரில்
நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று எனநெற்கதிர் அறுக்கும் உழவருடைய கூரிய அரிவாளால் அறுபட்டதனால்
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்பல இதழ்களுடன் அசைந்தாடும் குவியாத நெய்தல் மலர்
நீர் அலை தோற்றம் போலநீரில் அலைபடுகின்ற தோற்றத்தைப் போல
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணேகண்ணீரால் நனைந்து கலங்கி அழுதுநிற்கும் நீ விரும்பியவளின் கண்கள் –
  
# 196 நெய்தல்# 196 நெய்தல் வெள்ளைக்குடி நாகனார்
  
பளிங்கு செறிந்து அன்ன பல் கதிர் இடையிடைபளிங்கை நெருக்கமாய் வைத்தாற் போன்ற பலவான கதிர்களின் இடையிடையே
பால் முகந்து அன்ன பசு வெண் நிலவின்பாலை முகந்து வைத்தாற் போன்ற புத்தம்புதிய வெண்மையான நிலவொளியினைக் கொண்ட
மால்பு இடர் அறியா நிறை_உறு மதியம்கண்ணேணியாலும் இடையூறு ஏற்படாத நிறைந்த முழுமதியே!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்நற்பண்புகளும், நேர்மையும் நீ உடையாய் ஆதலின்
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின்     5உன்னிடமிருந்து மறைந்து வாழும் உலக உயிர்கள் இல்லை என்பதாலும்
என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய்என்னிடமிருந்து மறைந்து வாழ்வோரின் இருப்பிடத்தைக் காட்டுவாய்!
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்நல்ல அழகெல்லாம் இழந்த என்னுடைய தோளைப் போல் மெலிவுற்று
சிறுகுபு_சிறுகுபு செரீஇசிறுகச் சிறுகக் குறைந்துபோகிறாய்;
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவேஅறிந்ததொன்றைக் கூறாது பொய்த்தலால் இக் குறைவு உனக்கு நேரிடுகிறதோ?
  
# 197 பாலை# 197 பாலை நக்கீரர்
  
தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலேதோள்கள் தம் தோள்வளைகள் நெகிழ்ந்துபோகுபடி ஆயின; நெற்றியும்
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றேபற்றியேறும் பீர்க்கங்கொடியின் மலரைப் போன்று பசலை படர்வதாயிற்று;
கண்ணும் தண் பனி வைகின அன்னோகண்களும் குளிர்ந்த கண்ணீரில் எப்பொதும் மூழ்கிக்கிடக்கின்றன; ஐயகோ!
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் எனதெளிவாக அறிந்துகொண்டோம் உறுதியாக, இனித் தேய்ந்தொழியும் என் உயிர் என்று
ஆழல் வாழி தோழி நீ நின்  5அழவேண்டாம், வாழ்க தோழி நீயே! உன்னுடைய
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடுதாழ விழுந்து நீண்ட செழுமையான கூந்தலைப் போன்று வானத்திலிருந்து நிலம்வரை கால்வீழ்த்து,
வண்டு படு புது மலர் உண்துறை தரீஇயவண்டுகள் மொய்க்கும் புதிய மலரை உண்துறையிலிருந்து கொணர்ந்த
பெரு மட மகளிர் முன்கை சிறு கோல்மிக்க மடப்பத்தையுடைய மகளிரின் முன்னங்கையிலிருக்கும், சிறிதளவே திரட்சியுள்ள
பொலம் தொடி போல மின்னி கணம்_கொள்பொன்னாலான வளையல்களைப் போல மின்னி, கூட்டமாக ஒன்று சேர்ந்து
இன் இசை முரசின் இரங்கி மன்னர்   10இனிய இசையையுடைய முரசைப் போல முழங்கி, மன்னர்களின்
எயில் ஊர் பல் தோல் போலகோட்டை மதில் உச்சியில் நடமாடும் வீரர்கள் கொண்டிருக்கும் பலவான தோல்கேடயங்கள் போல
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டேசெல்கின்ற கார்முகில்கள் தவழட்டும், அவரின் நல்ல மலைகளையுடைய நாட்டில்.
  
# 198 பாலை# 198 பாலை கயமனார்
  
சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்துதொலைவிலிருந்து வரும் மிக்க வலிமையுடைய இளைஞனே! யா மரங்கள் உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்ஓமை மரங்கள் நெடுகிலும் காணப்படும் பாலைக்காட்டு வழியில்
முன்_நாள் உம்பர் கழிந்த என் மகள்நேற்று அப்பக்கமாக சென்ற என் மகளைப் போல் இவள்
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தைஎன் கண்ணுக்குத் தெரிவதால் கண்ணீர் பெருகுகின்றது; அவளது தந்தையின்
தன் ஊர் இட_வயின் தொழுவேன் நுண் பல்      5ஊரிடத்தே உம்மை உபசரித்துத் தொழுவேன்; நுண்ணிய பல
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலைவரிகள் பொருந்திய உயர்ந்துநிற்கும் அல்குலில் அரும்பிய சுணங்கும்,
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்நேராக விளங்கும் வெண்மையான பற்களும், அழகுள்ள மாலையும்,
சில் வளை பல் கூந்தலளே அவளேஒருசில வளையல்களும், நிறைந்த கூந்தலும் உடையவள் அவள்;
மை அணல் எருத்தின் முன்பின் தட கைகரிய தாடியையும், நல்ல பிடரியையும், வலிமையுள்ள நீண்ட கைகளில்
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்10வலிய வில்லையும் அம்பையும், குன்றாத வளமிக்க கள்ளுணவையும் கொண்ட
தந்தை_தன் ஊர் இதுவேதந்தையின் ஊர் இதுவே;
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரேஅவளைப் பெற்றவள் நான்; சிறந்து விளங்குக உமது பெயர்.
  
# 199 நெய்தல்# 199 நெய்தல் பேரி சாத்தனார்
  
ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணைஉயர்ந்த மணல் மேடு கழுத்துவரை மூடிய நீண்ட கரிய பனையின்
வீங்கு மடல் குடம்பை பைதல் வெண்_குருகுபருத்த மடலில் கட்டிய கூட்டில் இருக்கின்ற பிரிவுத்துயரத்தையுடைய வெண்குருகு
நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகிநள்ளென்னும் நடுயாமத்தில் வருந்திக் குரல்கொடுக்கும்போதெல்லாம் உருகிச்
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்துசேறு போன்ற நிலையிலுள்ள என் உள்ளத்தோடு என் மனமும் உடைந்து
உளெனே வாழி தோழி வளை நீர்5இன்னும் உயிரோடு இருக்கின்றேனே வாழ்க, தோழியே! சூழ் கடலில்
கடும் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர்விரைந்து செல்லும் சுறா மீனைப் பிடிக்க வலை வீசி எறிந்த வளைவான மீன்பிடிப் படகினையுடைய பரதவரின்
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகிஇழுக்கின்ற விசையையுடைய தூண்டில் ஆங்காங்கு இருக்க,
வளி பொர கற்றை தாஅய் நளி சுடர்காற்று மோதியதால் எரிகின்ற ஒளிக்கற்றை சாய்ந்து பரவிய நெருக்கமான விளக்குகள்
நீல் நிற விசும்பின் மீனொடு புரையகருநிற விசும்பின் விண்மீன்களைப் போல்
பைபய இமைக்கும் துறைவன்  10மெல்ல மெல்ல இமைக்கின்ற துறையையுடைய தலைவனின்
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கேஉடம்பை அணைத்து முயங்கும் முயக்கத்தைப் பெறாதபோது –
  
# 200 மருதம்# 200 மருதம் கூடலூர் பல் கண்ணனார்
  
கண்ணி கட்டிய கதிர அன்னஅரும்புகளை இருபுறமும் வரிசையாக வைத்துக்கட்டிய ஒரு கதிரைப் போன்ற
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடிஒளிவிடும் கொத்தினைக் கொண்ட நொச்சி மாலையைச் சூடிக்கொண்டு
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்ஆறு நீளக் கிடந்ததைப் போன்ற அகன்ற நெடிய தெருவில்
சாறு என நுவலும் முது வாய் குயவதிருவிழா பற்றிய செய்திகளைக் கூறும் முதுமை வாய்க்கபெற்ற குயவனே!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ   5இதனையும் அங்கு தெரிவிப்பாயாக!
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துஆம்பல் நெருங்கி வளர்ந்த இனிய பெரிய நீர்நிலைகளைக் கொண்ட
பொய்கை ஊர்க்கு போவோய் ஆகிபொய்கையூருக்குப் போய்,
கை கவர் நரம்பின் பனுவல் பாணன்கையினால் தடவுதற்குரிய நரம்பினால் இசைக்கும் பாட்டுக்களைக் கொண்ட பாணன்
செய்த அல்லல் பல்குவ வை எயிற்றுசெய்த துன்பங்கள் நாளுக்குநாள் பெரிதாகின்றன, கூரிய பற்களையும்
ஐது அகல் அல்குல் மகளிர் இவன்    10மெல்லிதாக அகன்ற அல்குலையும் கொண்ட மகளிரே! இவனுடைய
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவேபொய் பொதிந்த கொடிய சொற்களினின்றும் உங்களைக் காத்துக்கொள்வீராக என்று.