| |
# தூங்கலோரி | # தூங்கலோரி |
# 151 பாலை | # 151 பாலை |
வங்கா கடந்த
செம் கால் பேடை | ஆண் வங்காப்பறவை
நீங்கிய சிவந்த காலையுடைய பெடைவங்கா |
எழால் உற
வீழ்ந்து என கணவன் காணாது | புல்லூறு என்னும் பறவை
தன்மேல் பாய்ந்ததாக, தன் சேவலைக்காணாமல் |
குழல் இசை குரல
குறும் பல அகவும் | குழல் போன்று
இசைக்கும் குரலையுடைய அது குறிய பல ஓசைகளை எழுப்பும் |
குன்று கெழு
சிறு நெறி அரிய என்னாது | மலைகளுள்ள சிறிய
வழிகள் கடப்பதற்கு அரியன என்று கருதாமல், |
மறப்பு அரும்
காதலி ஒழிய | மறக்கமுடியாத காதலியை
விட்டுப்பிரிந்து |
இறப்பல் என்பது
ஈண்டு இளமைக்கு முடிவே | செல்வேன் என்று
சொல்வது இங்கு நம் இளமைக்கு இறுதியாகும். |
| |
#
கிள்ளிமங்கலம்கிழார் | # கிள்ளிமங்கலம்கிழார் |
# 152 குறிஞ்சி | # 152 குறிஞ்சி |
யாவதும்
அறிகிலர் கழறுவோரே | ஒருசிறிதும்
அறியமாட்டார் என்னை இடித்துரைப்போர்; |
தாய் இல்
முட்டை போல உள் கிடந்து | தாய் இல்லாத முட்டை
போல உள்ளத்துள்ளே கிடந்து |
சாயின் அல்லது
பிறிது எவன் உடைத்தே | மெலிவதன்றி வேறு என்ன
உடையது? |
யாமை
பார்ப்பின் அன்ன | ஆமையின் குஞ்சைப்
போன்ற |
காமம் காதலர்
கையற விடினே | காமமானது, காதலர்
நம்மைச் செயலற்றுப்போகப் பிரிந்து கைவிட்டால்? |
| |
# கபிலர் | # கபிலர் |
# 153 குறிஞ்சி | # 153 குறிஞ்சி |
குன்ற கூகை
குழறினும் முன்றில் | குன்றிலுள்ள பேராந்தை
குழறுவதுபோல் ஒலித்தாலும், முற்றத்திலுள்ள |
பலவின் இரும்
சினை கலை பாய்ந்து உகளினும் | பலாவின் பெரிய
கிளையில் ஆண்குரங்கு தாவித் துள்ளினாலும், |
அஞ்சும்-மன்
அளித்து என் நெஞ்சம் இனியே | முன்பு அஞ்சும்,
இரங்கற்குரியது என் நெஞ்சு; இனியே |
ஆர் இருள்
கங்குல் அவர்_வயின் | நிறைந்த இருளையுடைய
இரவில் அவர்கூடவே |
சாரல் நீள் இடை
செலவு ஆனாதே | மலைச்சாரலிலுள்ள நீண்ட
வழியில் செல்லுதலைத் தவிர்ந்திலது. |
| |
# மதுரை
சீத்தலை சாத்தன் | # மதுரை சீத்தலை
சாத்தன் |
# 154 பாலை | # 154 பாலை |
யாங்கு
அறிந்தனர்-கொல் தோழி பாம்பின் | எவ்வாறு
தெரிந்துகொண்டனரோ தோழி! பாம்பின் |
உரி நிமிர்ந்து
அன்ன உருப்பு அவிர் அமையத்து | உரித்த தோல் மேலே
எழுந்ததைப் போல வெப்பம் தகதகக்கின்ற நண்பகலில் |
இரை வேட்டு
எழுந்த சேவல் உள்ளி | இரையை விரும்பிச்
சென்ற தன் சேவலை நினைத்து |
பொறி மயிர்
எருத்தின் குறு நடை பேடை | புள்ளிகளையுடைய, மயிர்
பொருந்திய கழுத்தினைக்கொண்ட குறுநடைப் பேடை |
பொரி கால்
கள்ளி விரி காய் அம் கவட்டு | பொரிந்த
அடிமரத்தையுடைய கள்ளியின் வெடித்த காயையுடைய அழகிய கிளையில் |
தயங்க இருந்து
புலம்ப கூஉம் | மனமழிந்து இருந்து
தனிமைத் துயரத்தில் கூவும் |
அரும் சுர
வைப்பின் கானம் | அரிய பாலைநிலமாகிய
இடத்தையுடைய காட்டிடையே |
பிரிந்து சேண்
உறைதல் வல்லுவோரே | பிரிந்து சென்று
வாழும் ஆற்றல்பெறுவதற்கு – |
| |
# உரோடகத்து
கந்தரத்தன் | # உரோடகத்து
கந்தரத்தன் |
# 155 முல்லை | # 155 முல்லை |
முதை புனம்
கொன்ற ஆர் கலி உழவர் | பழமையான தினைப்புனத்தை
உழுத ஆரவாரம் மிக்க உழவரின் |
விதை குறு
வட்டி போதொடு பொதுள | விதைகளை வைக்கும்
சிறிய வட்டிகள், முல்லைமொட்டுக்களால் நிறைய |
பொழுதோ தான்
வந்தன்றே மெழுகு ஆன்று | கார்ப்பருவம்
வந்துவிட்டது; மெழுகால் செய்த உருவத்தில் இட்டு |
ஊது உலை பெய்த
பகு வாய் தெண் மணி | ஊதுகின்ற கொல்லன்
உலையில் வைத்து இயற்றிய திறந்த வாயையுடைய தெளிந்த மணிகள் |
மரம் பயில்
இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு | மரங்கள் நெருங்கி
வளர்ந்த காட்டில் மிகுந்து ஒலிக்க, கடினமான வழியைக் கடந்து |
மாலை நனி
விருந்து அயர்-மார் | மாலையில் நல்ல
விருந்தை உண்ணுவதற்குத் |
தேர் வரும்
என்னும் உரை வாராதே | தலைவனின் தேர் வரும்
என்னும் சொல் வரவில்லையே! |
| |
# பாண்டியன்
ஏனாதி நெடுங்கண்ணன் | # பாண்டியன் ஏனாதி
நெடுங்கண்ணன் |
# 156 குறிஞ்சி | # 156 குறிஞ்சி |
பார்ப்பன மகனே
பார்ப்பன மகனே | பார்ப்பன மகனே!
பார்ப்பன மகனே! |
செம் பூ
முருக்கின் நன் நார் களைந்து | சிவந்த பூக்களைக்கொண்ட
புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து |
தண்டொடு
பிடித்த தாழ் கமண்டலத்து | தண்டாக்கி அதனுடன்
பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன் |
படிவ உண்டி
பார்ப்பன மகனே | நோன்பு உணவு உண்ணும்
பார்ப்பன மகனே! |
எழுதாக்கற்பின்
நின் சொல்லுள்ளும் | எழுதாமல்
வாய்ப்பாடமாகக் கற்கும் நின் பாடங்களில் |
பிரிந்தோர்
புணர்க்கும் பண்பின் | பிரிந்தவரைச்
சேர்த்துவிக்கும் தன்மையுள்ள |
மருந்தும்
உண்டோ மயலோ இதுவே | மருந்தும் இருக்கிறதோ?
இது ஒரு மயக்க நிலையோ? |
| |
# அள்ளூர்
நன்முல்லை | # அள்ளூர் நன்முல்லை |
# 157 மருதம் | # 157 மருதம் |
குக்கூ என்றது
கோழி அதன்_எதிர் | குக்கூ என்று கூவியது
கோழிச்சேவல்; அதைக் கேட்டு |
துட்கென்றன்று
என் தூ நெஞ்சம் | துட்கென்றது என்
தூய்மையான நெஞ்சம்; |
தோள் தோய்
காதலர் பிரிக்கும் | எனது தோளைத்
தழுவிக்கிடக்கும் காதலரைப் பிரிக்கும் |
வாள் போல்
வைகறை வந்தன்றால் எனவே | வாளைப் போன்ற வைகறைப்
பொழுது வந்துவிட்டது என்றே! |
| |
# ஔவையார் | # ஔவையார் |
# 158 குறிஞ்சி | # 158 குறிஞ்சி |
நெடு வரை
மருங்கின் பாம்பு பட இடிக்கும் | உயர்ந்த மலையின்
பக்கத்திலுள்ள பாம்புகள் இறந்துபடும்படி இடிக்கும் |
கடு விசை
உருமின் கழறு குரல் அளைஇ | மிகுந்த வேகத்தையுடைய
பேரிடியின் இடிக்கும் முழக்கத்தோடு கலந்து |
காலொடு வந்த
கமம் சூல் மா மழை | காற்றோடு வந்த நிறைந்த
கருக்கொண்ட பெரிய மழையே! |
ஆர் அளி இலையோ
நீயே பேர் இசை | நிறைந்த இரக்கத்தை நீ
பெறவில்லையோ? பெரும் புகழ்கொண்ட |
இமயமும்
துளக்கும் பண்பினை | இமயமலையையும்
அசைக்கின்ற தன்மையையுடையாய்! |
துணை இலர்
அளியர் பெண்டிர் இஃது எவனே | துணையின்றி
இருக்கின்றனர், இரங்கத்தக்கவர், பெண்டிர், இது எதற்காக? |
| |
# வடம
வண்ணக்கன் பேரிசாத்தன் | # வடம வண்ணக்கன்
பேரிசாத்தன் |
# 159 குறிஞ்சி | # 159 குறிஞ்சி |
தழை அணி
அல்குல் தாங்கல் செல்லா | தழை அணிந்த
அல்குலையும் தாங்கமாட்டாத |
நுழை சிறு
நுசுப்பிற்கு எவ்வம் ஆக | நுணுகிய சிறிய
இடைக்குத் துன்பம் உண்டாக, |
அம் மெல் ஆகம்
நிறைய வீங்கி | அழகிய மென்மையுடைய
மார்பகம் நிறையும்படி பருத்து, |
கொம்மை வரி
முலை செப்புடன் எதிரின | பெரிய, தேமல் வரிகளைக்
கொண்ட முலைகள் செம்பினை ஒத்தன; |
யாங்கு
ஆகுவள்-கொல் பூ_குழை என்னும் | எந்நிலை எய்துவாளோ, பூ
வேலைப்பாடமைந்த காதணிகள் கொண்ட இவள் என்னும் |
அவல நெஞ்சமொடு
உசாவா | கவலையையுடைய
நெஞ்சத்தோடு கேட்காத |
கவலை மாக்கட்டு
இ பேதை ஊரே | வேறு கவலையையுடைய
மக்களையுடையது இந்தப் பேதைமை மிக்க ஊர். |
| |
# மதுரை மருதன்
இளநாகன் | # மதுரை மருதன்
இளநாகன் |
# 160 குறிஞ்சி | # 160 குறிஞ்சி |
நெருப்பின்
அன்ன செம் தலை அன்றில் | நெருப்பைப் போன்ற
சிவந்த தலையையுடைய ஆண் அன்றில் |
இறவின் அன்ன
கொடு வாய் பெடையொடு | இறாமீனைப் போன்ற
வளைந்த மூக்கினையுடைய பெண் அன்றிலோடு |
தடவின் ஓங்கு
சினை கட்சியில் பிரிந்தோர் | தடா மடத்தின் உயர்ந்த
கிளையிலுள்ள கூட்டிலிருந்து, பிரிந்தோர் |
கையற நரலும்
நள்ளென் யாமத்து | செயலற்று வருந்தும்படி
ஒலிக்கும் நள்ளிரவில் |
பெரும் தண்
வாடையும் வாரார் | மிக்க குளிர்ச்சியுடைய
வாடைக்காற்று வீசும் நேரத்திலும் வாரார்; |
இஃதோ தோழி நம்
காதலர் வரவே | இதுதானோ தோழி! நம்
காதலர் செய்துகொண்ட திருமணம்? |
| |
# நக்கீரர் | # நக்கீரர் |
# 161 குறிஞ்சி | # 161 குறிஞ்சி |
பொழுதும்
எல்லின்று பெயலும் ஓவாது | பொழுதோ
இருண்டுவிட்டது; மழையும் ஓயாமல் |
கழுது கண்
பனிப்ப வீசும் அதன்_தலை | பேய்களும் கண்களை
மூடிக்கொள்ள ஓங்கியடிக்கின்றது. அதற்குமேலும் |
புலி பல் தாலி
புதல்வன் புல்லி | புலிப்பல் தாலியுடைய
மகனைத் தழுவிக்கொண்டு |
அன்னா என்னும்
அன்னையும் அன்னோ | ‘அடி பெண்ணே’ என்று
கூப்பிடுகிறாள் அன்னையும்; |
என்
மலைந்தனன்-கொல் தானே தன் மலை | என்ன செய்தானோ அவன்?
தனது மலையின் |
ஆரம் நாறும்
மார்பினன் | சந்தனம் மணக்கும்
மார்பினன் |
மாரி யானையின்
வந்து நின்றனனே | மழையில்
நனைந்துநிற்கும் யானையைப் போல வந்து நின்றுகொண்டிருந்தான். |
| |
# கருவூர்
பவுத்திரன் | # கருவூர் பவுத்திரன் |
# 162 முல்லை | # 162 முல்லை |
கார் புறந்தந்த
நீர் உடை வியன் புலத்து | மேகங்களால்
காக்கப்படும் நீர்வளம் உடைய அகன்ற முல்லைநிலத்தில் |
பல் ஆ
புகுதரூஉம் புல்லென் மாலை | பல பசுக்கள் புகுகின்ற
பொலிவழிந்த மாலைப் பொழுதில், |
முல்லை வாழியோ
முல்லை நீ நின் | முல்லை! நீ வாழ்க
முல்லையே! நீ உனது |
சிறு வெண்
முகையின் முறுவல் கொண்டனை | சிறிய வெள்ளை
அரும்புகளாலே புன்னகை செய்கின்றாய்; |
நகுவை போல
காட்டல் | சிரிப்பது போன்று
காட்டுவது |
தகுமோ மற்று
இது தமியோர் மாட்டே | உனக்குத் தகுமோ,
அதுவும் தனித்திருப்போரைப் பார்த்து – |
| |
# அம்மூவன் | # அம்மூவன் |
# 163 நெய்தல் | # 163 நெய்தல் |
யார் அணங்கு
உற்றனை கடலே பூழியர் | யாரால்
பயந்துபோயிருக்கின்றாய்! கடலே! பூழியரின் |
சிறு தலை
வெள்ளை தோடு பரந்து அன்ன | சிறிய தலைகளைக் கொண்ட
வெள்ளாட்டுக்கூட்டம் பரவியதைப் போன்று |
மீன் ஆர்
குருகின் கானல் அம் பெரும் துறை | மீனைத் தின்னும்
கொக்குகள் பரவிய அழகிய கடற்கரைத் துறையில் |
வெள் வீ தாழை
திரை அலை | வெள்ளைப் பூவையுடைய
தாழையை அலைகள் மோதும் |
நள்ளென்
கங்குலும் கேட்கும் நின் குரலே | நள்ளென்ற
நடுராத்திரியிலும் கேட்கிறது உன் குரல். |
| |
#
மாங்குடிமருதன் | # மாங்குடிமருதன் |
# 164 மருதம் | # 164 மருதம் |
கணை கோட்டு
வாளை கமம் சூல் மட நாகு | கணைபோன்று திரண்ட
கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன் |
துணர் தே
கொக்கின் தீம் பழம் கதூஉம் | கொத்துக்கொத்தானை
தேமாமரத்தின் இனிய பழத்தைக் கௌவும் |
தொன்று முதிர்
வேளிர் குன்றூர் குணாது | பழமை முதிர்ந்த
வேளிர்குலத்தின் குன்றூருக்கும் கிழக்கிலிருக்கும் |
தண் பெரும்
பவ்வம் அணங்குக தோழி | குளிர்ந்த பெரிய கடல்
என்னை வருத்துவதாக! தோழி! |
மனையோள்
மடமையின் புலக்கம் | இல்லாள் அறியாமையில்
ஊடல்கொள்ளும் |
அனையேம்
மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே | தன்மையுடைவளாய்,
தலைவனுக்கு நான் ஆகிவிட்டேன் என்றால். |
| |
# பரணர் | # பரணர் |
# 165 குறிஞ்சி | # 165 குறிஞ்சி |
மகிழ்ந்ததன்
தலையும் நறவு உண்டு ஆங்கு | களிப்பேறிய பின்னரும்
கள்ளை உண்டாற்போல |
விழைந்ததன்
தலையும் நீ வெய்து_உற்றனை | விரும்பிய பின்னரும்
மேலும் விரும்புகின்றாய்! |
இரும் கரை
நின்ற உப்பு ஒய் சகடம் | பெரிய மணற்கரையில்
நின்றுபோன உப்பை எடுத்துச் செல்லும் வண்டி |
பெரும் பெயல்
தலைய வீந்து ஆங்கு இவள் | பெரிய மழை பெய்தலால்
அழிந்ததைப் போல், இவளின் |
இரும் பல்
கூந்தல் இயல் அணி கண்டே | கரிய நிறைந்த
கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு – |
| |
# கூடலுலுர்
கிழார் | # கூடலூர் கிழார் |
# 166 நெய்தல் | # 166 நெய்தல் |
தண் கடல் படு
திரை பெயர்த்தலின் வெண் பறை | குளிர்ந்த கடலில்
உண்டான அலைகள் மோதித்தள்ளியதால், வெள்ளைச் சிறகுகளைக் கொண்ட |
நாரை நிரை
பெயர்த்து அயிரை ஆரும் | நாரைக்கூடம்
இடம்பெயர்ந்து வேறிடத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும் |
ஊரோ நன்று-மன்
மரந்தை | ஊராகிய மரந்தை இனியது; |
ஒரு தனி வைகின்
புலம்பு ஆகின்றே | ஒருத்தியாய்த் தனியே
இருந்தால் வருத்தத்தைத் தருவதாயிற்று. |
| |
# கூடலூர்
கிழார் | # கூடலூர் கிழார் |
# 167 முல்லை | # 167 முல்லை |
முளி தயிர்
பிசைந்த காந்தள் மெல் விரல் | முற்றிய தயிரைப்
பிசைந்த காந்தள் போன்ற மெல்லிய விரல்களைக் |
கழுவு_உறு
கலிங்கம் கழாஅது உடீஇ | கழுவாமலேயே தன்
துவைத்த சேலையின் முன்றானையைச் சரிசெய்து, |
குவளை உண்கண்
குய் புகை கழும | குவளை போன்ற மையுண்ட
கண்களில் தாளிதப்புகை நிறைய, |
தான் துழந்து
அட்ட தீம் புளி பாகர் | தானே முயன்று துழாவிச்
சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை |
இனிது என கணவன்
உண்டலின் | “இனிது” என்று கணவன்
உண்டலின் |
நுண்ணிதின்
மகிழ்ந்தன்று ஒண்_நுதல் முகனே | மிக நுட்பமாக
மகிழ்ந்தது ஒளிமிகுந்த நெற்றியையுடைய அவளது முகம். |
| |
# சிறைக்குடி
ஆந்தையார் | # சிறைக்குடி
ஆந்தையார் |
# 168 பாலை | # 168 பாலை |
மாரி
பித்திகத்து நீர் வார் கொழு முகை | மழைக்காலத்துப்
பிச்சியின் நீர் ஒழுகும் கொழுத்த அரும்புகளைக் |
இரும் பனம்
பசும் குடை பலவுடன் பொதிந்து | கரிய பனையின்
ஓலையாற்செய்த பசிய குடைக்குள் பலவாக வைத்து மூடி, |
பெரும் பெயல்
விடியல் விரித்து விட்டு அன்ன | பெரிய மழைபெய்யும்
விடியற்காலத்தில் விரித்துவிட்டதைப் போல் |
நறும் தண்ணியளே
நன் மா மேனி | மணமும்
குளிர்ச்சியுமுள்ளவள் நல்ல மாமைநிறமுள்ள மேனியுள்ள தலைவி; |
புனல் புணை
அன்ன சாய் இறை பணை தோள் | நீரில் விடும்
தெப்பத்தைப்போல் வளைந்து இறங்கிய பருத்த தோள்களை |
மணத்தலும்
தணத்தலும் இலமே | தழுவுதலும், பிரிதலும்
இல்லையாயினோம்; |
பிரியின்
வாழ்தல் அதனினும் இலமே | அவளைப் பிரிந்தாலோ
உயிர் வாழ்தல் அதனினும் இல்லயானோம். |
| |
#
வெள்ளிவீதியார் | # வெள்ளிவீதியார் |
# 169 மருதம் | # 169 மருதம் |
சுரம் செல்
யானை கல் உறு கோட்டின் | பாலைநிலத்தில்
செல்லும் யானையின் பாறையைக் குத்திய கொம்பைப்போல் |
தெற்றென
இறீஇயரோ ஐய மற்று யாம் | விரைவாக
முறிந்துபோகட்டும், ஐயனே! நாம் |
நும்மொடு நக்க
வால் வெள் எயிறே | உம்மோடு சேர்ந்த
சிரித்த தூய வெள்ளிய பற்கள்; |
பாணர் பசு மீன்
சொரிந்த மண்டை போல | பாணர் தாம் பிடித்த
பச்சைமீனை இட்டுவைத்த ஓட்டைப் போன்று |
எமக்கும்
பெரும் புலவு ஆகி | எமக்கும் பெரும்
வெறுப்பைத் தருவதாகி |
நும்மும்
பெறேஎம் இறீஇயர் எம் உயிரே | உம்மையும் நாம்
பெறாமலாகி, அழிந்துபோகட்டும் எமது உயிரே! |
| |
# கருவூர்
கிழார் | # கருவூர் கிழார் |
# 170 குறிஞ்சி | # 170 குறிஞ்சி |
பலரும் கூறுக
அஃது அறியாதோரே | பலரும்
ஒவ்வொருவிதமாகக் கூறுவர், அதனை நன்கு அறியாதவரே! |
அருவி தந்த
நாள்_குரல் எருவை | அருவி கொணர்ந்த புதிய
கதிரையுடைய கொறுக்கச்சியை |
கயம் நாடு யானை
கவளம் மாந்தும் | குளத்தை நாடிச்சென்ற
யானை உணவாக உண்ணும் |
மலை கெழு நாடன்
கேண்மை | மலைகள் சேர்ந்த
நாட்டையுடையவனது நட்பு |
தலைபோகாமை
நற்கு அறிந்தனென் யானே | கெட்டுப்போகாமையை நான்
நன்கு அறிந்துகொண்டேன் – |
| |
#
பூங்கணுத்திரையார் | # பூங்கணுத்திரையார் |
# 171 மருதம் | # 171 மருதம் |
காண் இனி வாழி
தோழி யாணர் | இதனைக் காண்பாயாக,
வாழ்க தோழியே! புதிதாய் |
கடும் புனல்
அடைகரை நெடும் கயத்து இட்ட | விரைந்துவரும் நீரை
அடைக்கும் கரையையுடைய நீண்ட குளத்தில் இட்ட |
மீன் வலை மா
பட்டு ஆங்கு | மீன் வலையில் வேறு
விலங்கு சிக்கியதைப் போல் |
இது மற்று எவனோ
நொதுமலர் தலையே | இது என்ன கூத்து?
அயலாரிடத்தான (மணத்துக்கான இம் ) முயற்சி! |
| |
#
கச்சிப்பேட்டு நன்னாகையார் | # கச்சிப்பேட்டு
நன்னாகையார் |
# 172 நெய்தல் | # 172 நெய்தல் |
தாஅல் அம் சிறை
நொ பறை வாவல் | வலிமையான அழகிய
சிறகுகளையும், நொய்தான பறத்தலையும் கொண்ட வௌவால் |
பழு மரம்
படரும் பையுள் மாலை | பழுத்த மரத்தைத்
தேடித்திரியும் துன்பந்தரும் மாலையில் |
எமியம் ஆக
ஈங்கு துறந்தோர் | நான் தனித்திருக்க
இங்கு நம்மைவிட்டுச் சென்ற தலைவர் |
தமியர் ஆக
இனியர்-கொல்லோ | தாம் அங்கு தனியே
இருப்பது அவருக்கு இனிமையானதோ? |
ஏழ் ஊர் பொது
வினைக்கு ஓர் ஊர் யாத்த | ஏழு ஊர்களிலுள்ள
பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட |
உலை வாங்கு
மிதி தோல் போல | உலையில் மாட்டிய
துருத்தியைப் போல |
தலை வரம்பு
அறியாது வருந்தும் என் நெஞ்சே | எல்லை அறியாமல்
வருந்தும் என் நெஞ்சே! |
| |
# மதுரை காஞ்சி
புலவன் | # மதுரை காஞ்சி புலவன் |
# 173 குறிஞ்சி | # 173 குறிஞ்சி |
பொன் நேர்
ஆவிரை புது மலர் மிடைந்த | பொன்னைப்போன்ற
நிறமுடைய ஆவிரையின் புதிய பூக்களைச் செறித்துக் கட்டிய |
பல் நூல் மாலை
பனை படு கலி_மா | பலவாகிய நூல்களையுடைய
மாலையை அணிந்த பனைமடலால் இயற்றிய குதிரையில் |
பூண் மணி கறங்க
எறி நாண் அட்டு | பூட்டிய மணி
ஆரவாரிக்கும்படி ஏறி, நாணத்தைக் கொன்று |
பழி படர் உள்
நோய் வழிவழி சிறப்ப | மிக்க நினைவையுடைய
உள்ளத்தே உள்ள நோயான காமம் மேலும் மேலும் மிகுதியாக |
இன்னள் செய்தது
இது என முன் நின்று | இன்னாளால் வந்தது
இந்தக் காமநோய் என முன்னே நின்று |
அவள் பழி
நுவலும் இ ஊர் | அவளைப் பழிதூற்றும்
இந்த ஊர், |
ஆங்கு
உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே | அதனை உணர்ந்தமையால்
இதனைவிட்டுப் போகவிருக்கின்றேன். |
| |
# வெண்பூதி | # வெண்பூதி |
# 174 பாலை | # 174 பாலை |
பெயல் மழை
துறந்த புலம்பு உறு கடத்து | பெய்கின்ற மழை
பெய்யாது நீங்கிய வருத்தமுள்ள பாலைநிலத்தில் |
கவை முட கள்ளி
காய் விடு கடு நொடி | கவைத்த முள்ளையுடைய
கள்ளியின் காய் வெடிக்கும் கடிய ஒலிக்கு |
துதை மென் தூவி
துணை புறவு இரிக்கும் | நெருக்கமான மெல்லிய
சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய புறாக்கள் அஞ்சியோடும் |
அத்தம் அரிய
என்னார் நம் துறந்து | கடும் வழிகள்
கடத்தற்கு அரியன என்று கருதாமல், நம்மைத் துறந்து |
பொருள்_வயின்
பிரிவார் ஆயின் இ உலகத்து | பொருளைத் தேடிப்
பிரிந்து செல்வாராயின், இவ்வுலகத்தில் |
பொருளே மன்ற
பொருளே | பொருள்தான்
முக்கியமாகிப்போய்விட்டது, |
அருளே மன்ற
ஆரும் இல்லதுவே | அருளைத் தேட யாரும்
இல்லை. |
| |
# உலோச்சன் | # உலோச்சன் |
# 175 நெய்தல் | # 175 நெய்தல் |
பருவ தேன் நசைஇ
பல் பறை தொழுதி | எடுக்கும்
பருவத்திலுள்ள தேனை விரும்பி, பலசிறகுகளைக் கொண்ட வண்டுக்கூட்டம் |
உரவு திரை
பொருத திணி மணல் அடைகரை | வலிமைமிக்க அலைகள்
மோதி எழுப்பிய திணிந்த மணலைக் கொண்டு அடைத்த கரையில் உள்ள |
நனைந்த புன்னை
மா சினை தொகூஉம் | நனைந்த புன்னையின்
பெரிய கிளையில் கூடுகின்ற |
மலர்ந்த பூவின்
மா நீர் சேர்ப்பற்கு | மலர்ந்த பூக்களையும்
கரிய நீரையுமுடைய கடற்கரைத் தலைவனுக்கு |
இரங்கேன் தோழி
ஈங்கு என்-கொல் என்று | இரங்கமாட்டேன் தோழி!
இங்கு நீ ஏன் இப்படி ஆயினாய் என்று |
பிறர் பிறர்
அறிய கூறல் | மற்றவரெல்லாரும்
அறியக் கூறவேண்டாம்; |
அமைந்து ஆங்கு
அமைக அம்பல் அஃது எவனே | அவர்கள்
நினைப்புக்கேற்றவாறு அமையட்டும்; அவர்களின் வம்புமொழி என்னை என்ன செய்யும்? |
| |
#
வருமுலையாரித்தி | # வருமுலையாரித்தி |
# 176 குறிஞ்சி | # 176 குறிஞ்சி |
ஒரு நாள்
வாரலன் இரு நாள் வாரலன் | ஒருநாள் வந்தான்
அல்லன், இரண்டு நாள் வந்தானல்லன்; |
பல் நாள் வந்து
பணிமொழி பயிற்றி என் | பல நாள் வந்து பணிவான
மொழிகளை மீண்டும் மீண்டும் சொல்லி, என்னுடைய |
நன்னர் நெஞ்சம்
நெகிழ்த்த பின்றை | நல்ல நெஞ்சத்தை இளகச்
செய்த பின்னர், |
வரை முதிர்
தேனின் போகியோனே | மலையின் முதிர்ந்த
தேன்கூட்டைப் போல மறைந்து போனான், |
ஆசு ஆகு எந்தை
யாண்டு உளன்-கொல்லோ | எனக்குப் பற்றுக்கோடாக
இருக்கும் என் தந்தையைப் போன்றவன் எங்கு உள்ளானோ? |
வேறு புல நன்
நாட்டு பெய்த | அயலிடமாகிய ஒரு நல்ல
நாட்டில் பெய்த |
ஏறு உடை
மழையின் கலிழும் என் நெஞ்சே | பெருத்த இடியுடன்
கூடிய மழையின் நீரைப் போல என் நெஞ்சம் கலங்கி இருக்கிறது. |
| |
# உலோச்சன் | # உலோச்சன் |
# 177 நெய்தல் | # 177 நெய்தல் |
கடல் பாடு
அவிந்து கானல் மயங்கி | கடல் ஓசை அடங்கி,
கடற்கரைச் சோலை இருளால் மயங்க, |
துறை நீர்
இரும் கழி புல்லென்றன்றே | துறையையும் நீரையும்
உடைய கரிய கழி பொலிவிழந்து இருக்கிறது; |
மன்றல் அம்
பெண்ணை மடல் சேர் வாழ்க்கை | பொதுவிடத்தில் உள்ள
அழகிய பனையின் மடலில் இருந்து வாழ்கிற |
அன்றிலும்
பையென நரலும் இன்று அவர் | அன்றில் பறவையும்
மெல்லக் கூவும்; இன்று அவர் |
வருவர்-கொல்
வாழி தோழி நாம் நக | வருவாரோ? வாழ்க
தோழியே! நாம் மகிழ்ச்சியுற, |
புலப்பினும்
பிரிவு ஆங்கு அஞ்சி | ஊடல்கொள்ளினும்,
அதனால் பிரிவு வரும் என்று அஞ்சி |
தணப்பு அரும்
காமம் தண்டியோரே | நீங்குதற்கு அரிய காம
இன்பத்தை அமையப்பெற்றோர் |
| |
#
நெடும்பல்லியத்தை | # நெடும்பல்லியத்தை |
# 178 மருதம் | # 178 மருதம் |
அயிரை பரந்த
அம் தண் பழனத்து | அயிரை மீன்கள் பரந்து
திரியும் அழகிய குளிர்ந்த பொய்கையில் |
ஏந்து எழில்
மலர தூம்பு உடை திரள் கால் | எடுப்பான அழகையுடைய
பூக்களைக் கொண்ட, உள்துளையுள்ள திரண்ட தண்டுகளையுடைய |
ஆம்பல் குறுநர்
நீர் வேட்டு ஆங்கு இவள் | ஆம்பல் மலரைக்
கொய்பவர்களுக்குத் தாகம் எடுத்ததைப் போன்று |
இடை முலை
கிடந்தும் நடுங்கல் ஆனீர் | முலைகளிடையே
படுத்திருந்தும் நடுங்குகின்றீர்; |
தொழுது காண்
பிறையின் தோன்றி யாம் நுமக்கு | தொழுது காணும்
பிறையைப் போல உமக்குத் தோன்றி, நாம் உமக்கு |
அரியம்
ஆகிய_காலை | அரியவளாய் இருந்த
பொழுதில் |
பெரிய
நோன்றனீர் நோகோ யானே | பெரிதான வருத்தத்தைப்
பொறுத்துக்கொண்டிருந்தீரோ? வருந்துகிறேன் நான். |
| |
# குட்டுவன்
கண்ணன் | # குட்டுவன் கண்ணன் |
# 179 குறிஞ்சி | # 179 குறிஞ்சி |
கல்லென்
கானத்து கடமா ஆட்டி | கல்லென்ற ஓசையிடும்
காட்டினில் கடமாவை விரட்டி |
எல்லும்
எல்லின்று ஞமலியும் இளைத்தன | பகற்பொழுதும்
இருளாகிவிட்டது; வேட்டைநாய்களும் இளைத்துவிட்டன; |
செல்லல் ஐஇய
உது எம் ஊரே | உம் ஊருக்குச்
செல்லவேண்டாம், தலைவனே! இதோ பக்கத்தில் இருக்கிறது எமது ஊர்; |
ஓங்கு வரை
அடுக்கத்து தீம் தேன் கிழித்த | உயர்ந்த மலையின்
சரிவில் இனிய தேனிறாலைக் கிழித்த |
குவை உடை பசும்
கழை தின்ற கய வாய் | திரளாயிருக்கும் பசிய
மூங்கில் குருத்தைத் தின்ற பெரிய வாயையுடைய |
பேதை யானை
சுவைத்த | பேதையான யானை சுவைத்த |
கூழை மூங்கில்
குவட்டு இடையதுவே | குட்டையாகிப்போன
மூங்கிலையுடைய உச்சிக்கு இடையில் இருக்கிறது- |
| |
#
கச்சிப்பேட்டு நன்னாகையார் | # கச்சிப்பேட்டு
நன்னாகையார் |
# 180 பாலை | # 180 பாலை |
பழூஉ பல் அன்ன
பரு உகிர் பா அடி | பேயின் பல்லைப் போன்ற
பருத்த நகங்களையும், பரந்த அடியினையும் கொண்ட |
இரும் களிற்று
இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து | பெரிய
களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு வந்துபுகுந்ததால், அழிந்து |
அறை மடி
கரும்பின் கண் இடை அன்ன | பாத்தியில் விழுந்த
கரும்பின் நடுவே நிற்கும் ஒற்றைக் கரும்பு போல |
பைதல் ஒரு கழை
நீடிய சுரன் இறந்து | துன்பத்தையுடைய ஒற்றை
மூங்கில் உயர்ந்துநிற்கும் பாலைநிலத்தைக் கடந்து |
எய்தினர்-கொல்லோ
பொருளே அல்குல் | ஈட்டிவிட்டாரோ பொருளை?
அல்குலில் |
அம் வரி வாட
துறந்தோர் | அழகிய தேமல்வரிகள்
கெடும்படி துறந்துசென்றோர் |
வன்பர் ஆக தாம்
சென்ற நாட்டே | கல்நெஞ்சினராக, தாம்
சென்ற நாட்டில் – |
| |
#
கிள்ளிமங்கலங்கிழார் | # கிள்ளிமங்கலங்கிழார் |
# 181 குறிஞ்சி | # 181 குறிஞ்சி |
இது மற்று எவனோ
தோழி துனி இடை | இது என்ன பயனை உடையது,
தோழி? புலவிக்காலத்தில் |
இன்னர் என்னும்
இன்னா கிளவி | தலைவர்
இப்படிப்பட்டவர் என்னும் இனிமையற்ற சொற்கள்- |
இரு மருப்பு
எருமை ஈன்றணி காரான் | பெரிய கொம்பினையுடைய
எருமையாகிய அண்மையில் ஈன்ற கரிய பெண்ணெருமை |
உழவன் யாத்த
குழவியின் அகலாது | உழவனால்
கட்டப்பட்டுள்ள தன் கன்றைவிட்டு அகலாமல் |
பாஅல் பைம்
பயிர் ஆரும் ஊரன் | பக்கத்தேயுள்ள பசிய
பயிர்களை மேயும் ஊரையுடைய நம் தலைவனின் |
திரு மனை பல்
கடம்பூண்ட | செல்வம் மிக்க
வீட்டிலிருந்து பலவித இல்லறக் கடமைகளை மேற்கொண்டுள்ள |
பெரு முது
பெண்டிரேம் ஆகிய நமக்கே | மிகவும்
முதுமையினையுடைய பெண்டிராகிய நமக்கு – |
| |
# மடல் பாடிய
மாதங்கீரன் | # மடல் பாடிய
மாதங்கீரன் |
# 182 குறிஞ்சி | # 182 குறிஞ்சி |
விழு தலை
பெண்ணை விளையல் மா மடல் | செழித்த உச்சியையுடைய
பனையின் நன்கு விளைந்த பெரிய மடலால் செய்த குதிரைக்கு |
மணி அணி பெரும்
தார் மரபில் பூட்டி | மணிகள் அணிந்த பெரிய
மாலையை மரபுப்படி அணிவித்து, |
வெள் என்பு
அணிந்து பிறர் எள்ள தோன்றி | வெள்ளை எலும்புகளை
அணிந்துகொண்டு, பிறர் எள்ளி நகையாடத் தோன்றி |
ஒரு நாள்
மருங்கில் பெரு நாண் நீங்கி | ஒரு நாள் மட்டில் நமது
பெரிய நாணத்தை விட்டு, |
தெருவின்
இயலவும் தருவது-கொல்லோ | தெருவில் செல்லும்
செயலைத் தருவதாயிற்றோ? |
கலிழ் கவின்
அசை நடை பேதை | ஒழுகும் அழகையும்
அசைகின்ற நடையையும் உடைய பேதை |
மெலிந்திலள்
நாம் விடற்கு அமைந்த தூதே | மனம் நெகிழவில்லை;
நாம் அவளிடம் விடுவதற்கு அமைந்த தூது – |
| |
# ஔவையார் | # ஔவையார் |
# 183 முல்லை | # 183 முல்லை |
சென்ற நாட்ட
கொன்றை அம் பசு வீ | தலைவர் பிரிந்து சென்ற
நாட்டிலுள்ள கொன்றையின் அழகிய பருவத்துப் பூக்கள் |
நம் போல்
பசக்கும்_காலை தம் போல் | நம்மைப்போல பசலை
நிறத்தையுடைய கார்ப்பருவத்தில், தம்மைப் போலச் |
சிறு தலை
பிணையின் தீர்ந்த நெறி கோட்டு | சிறிய தலையையுடைய
பெண்மானைப் பிரிந்திருக்கும் நெறிந்த கொம்பினையுடைய |
இரலை மானையும்
காண்பர்-கொல் நமரே | இரலை மானையும்
காண்பாரோ? |
புல்லென் காயா
பூ கெழு பெரும் சினை | பொலிவற்ற காயாவின்
மலர்கள் நிறைந்த பெரிய கிளை |
மென் மயில்
எருத்தின் தோன்றும் | மெல்லிய மயிலின்
கழுத்தைப் போல் தோன்றும் |
புன்_புல
வைப்பின் கானத்தானே | புஞ்சை நிலத்தின்கண்
இருந்த காட்டில் – |
| |
# ஆரிய அரசன்
யாழ் பிரமதத்தன் | # ஆரிய அரசன் யாழ்
பிரமதத்தன் |
# 184 நெய்தல் | # 184 நெய்தல் |
அறிகரி
பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை | தாம் அறிந்ததனை
மறைத்துப் பொய்கூறுதல் சான்றோர்க்கு இயல்பில்லை; |
குறுகல்
ஓம்பு-மின் சிறுகுடி செலவே | சிறுகுடிக்கான
பயணத்தால் அங்குச் செல்வதைத் தவிருங்கள், |
இதற்கு இது
மாண்டது என்னாது அதற்பட்டு | இதற்கு இது சிறந்தது
என்னாமல், தலைவியின் கண்வலையில் பட்டு |
ஆண்டு
ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம் | அங்குத் தங்கிவிட்டது
என் சிறப்புப்பெற்ற நெஞ்சம்; (எனவே) |
மயில் கண் அன்ன
மாண் முடி பாவை | மயில்தோகையின்
கண்ணைப்போன்ற சிறந்த முடியைக் கொண்ட பாவைபோன்ற |
நுண் வலை
பரதவர் மட_மகள் | நுண்ணிய வலையைக் கொண்ட
மீனவரின் இளமையான மகளின் |
கண் வலை படூஉம்
கானலானே | கண்ணாகிய வலையில்
மாட்டிக்கொள்ளும் கடற்கரைச் சோலையிடத்து இருக்கும் – |
| (சிறுகுடிக்கான
பயணத்தால் அங்குச் செல்வதைத் தவிருங்கள்,) |
# மதுரை அறுவை
வாணிகன் இளவேட்டனார் | |
# 185 குறிஞ்சி | # 185 குறிஞ்சி #
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
நுதல் பசப்பு
இவர்ந்து திதலை வாடி | நெற்றியில் பசலை
படர்ந்து, சுணங்கு நிறம் குன்றி |
நெடு மென் பணை
தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து | நீண்ட மென்மையான
பருத்த தோள்கள் மெலிந்து, வளையல்கள் கழன்று, |
இன்னள் ஆகுதல்
நும்மின் ஆகும் என | இப்படி ஆவது உம்மாலே
ஆனது என |
சொல்லின் எவன்
ஆம் தோழி பல் வரி | சொன்னால் என்ன தோழி?
பல கோடுகளையுடைய |
பாம்பு பை
அவிந்தது போல கூம்பி | பாம்பின் படம்
குறைந்ததைப் போல் குவிந்து |
கொண்டலின்
தொலைந்த ஒண் செம்_காந்தள் | கீழ்க்காற்றால்
விழுந்த ஒளிரும் வெங்காந்தள் மலர், |
கல் மிசை
கவியும் நாடற்கு என் | பாறையின்மேல்
கவிழ்ந்துகிடக்கும் நாட்டினராகிய தலைவனுக்கு என் |
நன் மா மேனி
அழி படர் நிலையே | நல்ல மாமைநிறமுள்ள
மேனி துன்பமுறும் நிலையை – |
| |
# ஒக்கூர்
மாசாத்தியார் | # ஒக்கூர்
மாசாத்தியார் |
# 186 முல்லை | # 186 முல்லை |
ஆர் கலி
ஏற்றொடு கார் தலைமணந்த | மிகுந்த ஓசையுடைய
இடியுடன் கார்காலம் கூடிவந்த |
கொல்லை புனத்த
முல்லை மென் கொடி | கொல்லைப் புனத்திலுள்ள
முல்லையின் மெல்லிய கொடி |
எயிறு என
முகையும் நாடற்கு | பற்கள் போன்று
அரும்பிநிற்கும் நாட்டையுடைய தலைவனுக்காக |
துயில்
துறந்தனவால் தோழி எம் கண்ணே | தூக்கத்தைத் தொலைத்தன
தோழி, என்னுடைய கண்கள். |
| |
# கபிலர் | # கபிலர் |
# 187 குறிஞ்சி | # 187 குறிஞ்சி |
செ வரை சேக்கை
வருடை மான் மறி | செம்மையான மலையில்
வாழும் வருடைமானின் குட்டி |
சுரை பொழி தீம்
பால் ஆர மாந்தி | தன் தாயின்
மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து |
பெரு வரை நீழல்
உகளும் நாடன் | பெரிய மலைப்பக்கத்து
நிழலில் துள்ளிவிளையாடும் நாட்டைச் சேர்ந்தவன் |
கல்லினும்
வலியன் தோழி | பாறையைக் காட்டிலும்
வலிமைமிக்கவன் தோழி! |
வலியன் என்னாது
மெலியும் என் நெஞ்சே | அவ்வாறு வலியவன்
என்றுகொள்ளாது மெலியும் என் நெஞ்சு! |
| |
# மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் மன்னார் | # மதுரை அளக்கர்
ஞாழார் மகனார் மன்னார் |
# 188 முல்லை | # 188 முல்லை |
முகை முற்றினவே
முல்லை முல்லையொடு | முதிர்ந்துவிட்டன
முல்லையின் அரும்புகள்; முல்லையோடு |
தகை முற்றினவே
தண் கார் வியன் புனம் | முற்றும் அழகுகொண்டன
குளிர்ந்த கார்ப்பருவத்தின் அகன்ற தினைப்புனங்கள்; |
வால் இழை
நெகிழ்த்தோர் வாரார் | என் நேர்த்தியான
அணிகலன்களை நெகிழச் செய்தவர் வரவில்லை; |
மாலை வந்தன்று
என் மாண் நலம் குறித்தே | மாலையும் வந்தது; என்
சிறப்புமிக்க பெண்மை நலத்தைக் குறிவைத்து – |
| |
# மதுரை ஈழத்து
பூதன் தேவன் | # மதுரை ஈழத்து பூதன்
தேவன் |
# 189 பாலை | # 189 பாலை |
இன்றே சென்று
வருதும் நாளை | இன்றே சென்று நாளை
வரவேண்டும்; |
குன்று இழி
அருவியின் வெண் தேர் முடுக | குன்றிலிருந்து விழும்
அருவியைப் போல வெள்ளிய தேர் விரைந்து செல்க; |
இளம் பிறை அன்ன
விளங்கு சுடர் நேமி | இளம்பிறையைப் போன்ற
ஒளிவிளங்கும் சக்கரங்கள் |
விசும்பு வீழ்
கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப | வானத்திலிருந்து
விழும் நெருப்பைப் போன்று பசிய பயிர்களை அழித்து |
கால் இயல்
செலவின் மாலை எய்தி | காற்று வீசுவதைப்
போன்று சென்று மாலையில் அடைந்து |
சில் நிரை வால்
வளை குறு_மகள் | சிலவே உள்ள வரிசையான
வெள்ளிய வளைகளை அணிந்த இளையவளின் |
பல் மாண் ஆகம்
மணந்து உவக்குவமே | பலவகையில்
சிறப்புப்பெற்ற மார்பைத் தழுவி மகிழ்வோம்! |
| |
# பூதம்புல்லன் | # பூதம்புல்லன் |
# 190 முல்லை | # 190 முல்லை |
நெறி இரும்
கதுப்பொடு பெரும் தோள் நீவி | நெறிப்புடைய கரிய
கூந்தலோடு, பெரிய தோள்களையும் தடவிக்கொடுத்து, |
செறி வளை நெகிழ
செய்_பொருட்கு அகன்றோர் | செறிந்த வளைகள் நெகிழ,
பொருள் செய்வதற்கு அகன்றோர் |
அறிவர்-கொல்
வாழி தோழி பொறி வரி | அறிவாரா வாழ்க தோழியே!
புள்ளிகளையும், கோடுகளையும் கொண்ட |
வெம் சின
அரவின் பைம் தலை துமிய | கடுங்கோபமுள்ள
பாம்பின் பசிய தலைகள் துண்டுதுண்டாக |
நரை உரும்
உரரும் அரை இருள் நடுநாள் | வெள்ளை இடி முழங்கும்
நள்ளிரவின் நடுச்சாமத்தில் |
நல் ஏறு
இயங்கு-தொறு இயம்பும் | நல்ல காளை
இயங்குதோறும் ஒலிக்கும் |
பல் ஆன்
தொழுவத்து ஒரு மணி குரலே | பல பசுக்கள் கொண்ட
தொழுவத்திலுள்ள ஒரு மணியின் குரலை- |
| |
# 191 முல்லை | |
உது காண் அதுவே
இது என மொழிகோ | # 191 முல்லை |
நோன் சினை
இருந்த இரும் தோட்டு புள்_இனம் | இன்னும் சிறிது நாளில்
பார்ப்பாய், அவ்வாறு செய்வதை; அவர் செயலை என்னவேன்று சொல்வேன்? |
தாம்
புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ள | வலிய கிளையில் இருந்த
பெரிய கூட்டமான பறவையினம் |
தீம் குரல் அகவ
கேட்டும் நீங்கிய | தாம்
சேர்ந்திருப்பதால் பிரிந்தவரைப் பற்றி நினைக்காமல் |
ஏதிலாளர் இவண்
வரின் போதின் | இனிய குரலில் அழைத்து
ஒலிக்க, அதனைக் கேட்டும் நீங்கிய |
பொம்மல்
ஓதியும் புனையல் | வேற்றுமனிதர் இங்கே
வந்தால், மலர்மொட்டுகளால் |
எம்மும்
தொடாஅல் என்குவெம்-மன்னே | பொங்கிவரும்
கூந்தலையும் புனையவேண்டாம்; |
| எம்மையும் தொடவேண்டாம்
என்று சொல்வோம் – நிச்சயமாக! |
#
கச்சிப்பேட்டு நன்னாகையார் | |
# 192 பாலை | # 192 பாலை #
கச்சிப்பேட்டு நன்னாகையார் |
ஈங்கே வருவர்
இனையல் அவர் என | அவர் இங்கு வருவார்,
வருந்தவேண்டாம் என்று சொல்வதால் |
அழாஅற்கோ இனியே
நோய் நொந்து உறைவி | இனிமேல்
அழாமலிருப்பேனோ? என் நோயினால் தானும் நொந்து என்னுடன் உறைபவளே! |
மின்னின் தூவி
இரும் குயில் பொன்னின் | மின்னுகின்ற இனிய
இறகுகளையுடைய கரிய குயில், பொன்னின் |
உரை திகழ்
கட்டளை கடுப்ப மா சினை | உரைத்த துகள்
திகழ்கின்ற உரைகல்லைப் போன்று, மாமரத்தின் கிளையில் |
நறும் தாது
கொழுதும் பொழுதும் | நறிய பூந்தாதைக்
கோதுகின்ற காலத்தும் |
வறும் குரல்
கூந்தல் தைவருவேனே | கொத்தான
வெறுங்கூந்தலைத் தடவிக்கொண்டிருக்கின்றேனே! |
| |
# அரிசில்
கிழார் | # அரிசில் கிழார் |
# 193 முல்லை | # 193 முல்லை |
மட்டம் பெய்த
மணி கலத்து அன்ன | கள்ளை எடுத்துவைத்த
நீல நிறக்குப்பியைப் போல் |
இட்டு வாய்
சுனைய பகு வாய் தேரை | சிறிய வாயையுடைய
சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள் |
தட்டை_பறையின்
கறங்கும் நாடன் | தட்டைப் பறையைப் போல
ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன் |
தொல்லை திங்கள்
நெடு வெண்ணிலவின் | பல மாதங்களுக்கு
முன்னர் ஒரு நீண்ட வெள்ளைநிலாவொளியில் |
மணந்தனன்-மன்
எம் தோளே | தழுவினான் என் தோளை |
இன்றும் முல்லை
முகை நாறும்மே | இன்றைக்கும் அவன்
குடுமியிற்சூடியிருந்த முல்லைமொட்டுகளின் மணம் நிற்கிறது. |
| |
# கோவர்த்தனார் | # கோவர்த்தனார் |
# 194 முல்லை | # 194 முல்லை |
என்
எனப்படும்-கொல் தோழி மின்னு வர | (இந்த நெஞ்சின்
நிலையை)என்னவென்று சொல்வது தோழி? மின்னல்வர |
வான் ஏர்பு
இரங்கும் ஒன்றோ அதன்_எதிர் | முகில்கள் எழுந்து
ஒலிக்கும், அதுமட்டுமோ? அதற்கு எதிராக |
கான மஞ்ஞை கடிய
ஏங்கும் | காட்டு மயில்கள்
விரைவாக ஏக்கத்துடன் கூவும் |
ஏதில கலந்த
இரண்டற்கு என் | ஒன்றற்கொன்று
தொடர்பிலாது கலந்த இந்த இரண்டு ஒலிகளாலும் என் |
பேதை நெஞ்சம்
பெரு மலக்கு_உறுமே | பேதை நெஞ்சம் பெரிய
அளவில் கலக்கமடையும். |
| |
# தேரதரன் | # தேரதரன் |
# 195 நெய்தல் | # 195 நெய்தல் |
சுடர் சினம்
தணிந்து குன்றம் சேர | ஞாயிறு வெப்பம்
தணிந்து குன்றினைச் சேர |
படர் சுமந்து
எழுதரு பையுள் மாலை | நினைவுகூரும்
துன்பத்தை மேற்கொண்டு தோன்றிய துன்பந்தரும் மாலையில் |
யாண்டு
உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் | எங்கு இருக்கின்றாரோ?
வேண்டிய செயலை முடிக்கச் சென்றவர், |
இன்னாது
இரங்கும் என்னார் அன்னோ | மாலை துன்பத்தைத்
தருவது, அதற்கு அவள் வருந்துவாளே என்று நினைக்கமாட்டார், அந்தோ! |
தைவரல் அசை வளி
மெய் பாய்ந்து ஊர்தர | தடவிக்கொடுத்து
அசையும் காற்று மேனியிற் பாய்ந்து பரவ |
செய்வு_உறு
பாவை அன்ன என் | அரக்கால் செய்யப்பட்ட
பாவை போல, என் |
மெய் பிறிது
ஆகுதல் அறியாதோரே | மேனி மாறுபடுவதை
அறியாதவர். |
| |
# மிளை கந்தன் | # மிளை கந்தன் |
# 196 மருதம் | # 196 மருதம் |
வேம்பின் பைம்
காய் என் தோழி தரினே | வேப்பமரத்தின் பசிய
காயை என் தோழி தரும்போது |
தேம் பூம்
கட்டி என்றனிர் இனியே | இனிப்பான நல்ல
வெல்லக்கட்டி என்று சொன்னீர்; இப்பொழுதோ, |
பாரி பறம்பில்
பனி சுனை தெண் நீர் | பாரியின் பறம்பு
மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை |
தைஇ திங்கள்
தண்ணிய தரினும் | தை மாதத்துக்
குளிர்போன்று குளிரவைத்ததாகக் கொடுத்தாலும் |
வெய்ய
உவர்க்கும் என்றனிர் | மிகவும் உவர்ப்பாய்
இருக்கிறதென்று கூறுகின்றீர்; |
ஐய அற்றால்
அன்பின் பாலே | தலைவனே! அப்படி
ஆகிவிட்டது உம் அன்பின் தன்மை. |
| |
#
கச்சிப்பேட்டு நன்னாகையார் | # கச்சிப்பேட்டு
நன்னாகையார் |
# 197 நெய்தல் | # 197 நெய்தல் |
யாது
செய்வாம்-கொல் தோழி நோ_தக | என்ன செய்வோம் தோழி!
துன்பம் தங்கியிருக்கும்படி |
நீர் எதிர்
கருவிய கார் எதிர் கிளை மழை | நீரைக் கொண்ட,
மின்னல், இடி ஆகியவை சேர்ந்த கார்காலத்தைக் கொண்ட கிளைத்துவிழும் மழையையுடைய |
ஊதை அம்
குளிரொடு பேது உற்று மயங்கிய | வாடைக் காற்றின்
குளிரோடு மனம் குழம்பி மயங்கிய |
கூதிர் உருவின்
கூற்றம் | குளிர்காலம் என்னும்
உருவில் உள்ள கூற்றுவன் |
காதலர் பிரிந்த
என் குறித்து வருமே | காதலரைப்
பிரிந்திருக்கும் என்னை நோக்கி வருகிறது – |
| |
# கபிலர் | # கபிலர் |
# 198 குறிஞ்சி | # 198 குறிஞ்சி |
யாஅம் கொன்ற
மரம் சுட்ட இயவில் | யா மரத்தை வெட்டிய
மரங்களைச் சுட்ட வழியில் |
கரும்பு மருள்
முதல பைம் தாள் செந்தினை | கரும்பைப் போன்ற
அடியைக் கொண்ட பசிய தாளைக் கொண்ட செந்தினையின் |
மட பிடி தட கை
அன்ன பால் வார்பு | இளமையான பெண்யானையின்
அகன்றுருண்ட கையைப்போன்றனவாகி, பால் நிரம்பி |
கரி குறட்டு
இறைஞ்சிய செறி கோள் பைம் குரல் | கரியை எடுக்கும்
குறடுபோல வளைந்த, செறிந்த குலைகளையுடைய பசிய கதிரில் |
படு கிளி
கடிகம் சேறும் அடு போர் | வீழ்கின்ற கிளிகளை
ஓட்டுவதற்கு அங்குச் செல்வோம்; கொல்லும் போர்க்குரிய |
எஃகு விளங்கு
தட கை மலையன் கானத்து | வேல் திகழும் பெரிய
கையையுடைய மலையனின் காட்டிலுள்ள |
ஆரம் நாறும்
மார்பினை | சந்தனம் கமழும்
மார்பையுடையவனே! |
வாரற்க தில்ல
வருகுவள் யாயே | வரவேண்டாம், அங்கு
வருவாள் எம் அன்னை. |
| |
# பரணர் | # பரணர் |
# 199 குறிஞ்சி | # 199 குறிஞ்சி |
பெறுவது
இயையாது ஆயினும் உறுவது ஒன்று | தலைவியைப் பெறுவது
கூடாததாயினும், நடக்கப்போவது ஒன்று |
உண்டு-மன்
வாழிய நெஞ்சே திண் தேர் | உண்டு – உறுதியாக;
வாழ்க நீ நெஞ்சே! திண்ணிய தேரினையும் |
கைவள் ஓரி
கானம் தீண்டி | வள்ளண்மைமையும் மிக்க
ஓரியின் காட்டினைத் தொட்டுக்கொண்டு |
எறி வளி கமழும்
நெறிபடு கூந்தல் | வீசுகின்ற காற்றுப்
போல மணங்கழும் நெறிப்புள்ள கூந்தலும், |
மை ஈர் ஓதி
மாஅயோள்_வயின் | கருமையான,
நெய்ப்பினைக் கொண்ட கொண்டைமுடியையும் கொண்ட மாநிறமுள்ள தலைவியிடம் |
இன்றை அன்ன
நட்பின் இ நோய் | இன்றிருப்பதைப் போன்ற
காதலையுடைய இந்தக் காம நோய் |
இறு முறை என
ஒன்று இன்றி | அழிந்துபோகும் வழி
என்று ஒன்று இல்லாமல் |
மறுமை உலகத்து
மன்னுதல் பெறினே | மறுமை உலகத்திலும்
நிலைபெற்றிருக்கும். |
| |
# ஔவையார் | # ஔவையார் |
# 200 நெய்தல் | # 200 நெய்தல் |
பெய்த
குன்றத்து பூ நாறு தண் கலுழ் | மழைபெய்த குன்றத்தில்
மலர் மணக்கின்ற குளிர்ந்த கலங்கல்நீரின் |
மீமிசை தாஅய்
வீசும் வளி கலந்து | மேற்பரப்பில் பரவி
வீசும் காற்று அந்த மணத்துடன் |
இழிதரும்
புனலும் வாரார் தோழி | விழுகின்றது வெள்ளம்;
வந்திலர் தோழி! |
மறந்தோர் மன்ற
மறவாம் நாமே | மறந்துவிட்டார்
நிச்சயமாக; மறக்கவில்லை நாம்; |
கால மாரி மாலை
மா மலை | கார்ப்பருவத்து மழை
மாலையில் பெரிய மலையில் |
இன் இசை உருமின
முரலும் | இனிய ஓசையுடைய
இடியுடன் முழங்கும் |
முன் வரல் ஏமம்
செய்து அகன்றோரே | முன்னரேயே வருவேன்
என்ற பாதுகாப்பைச் செய்துவிட்டுப் போனவர் – |
| |