| |
# 16 வெள்ள
குருகு பத்து | # 16 வெள்ள குருகு
பத்து |
# 151 | # 151 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
மிதிப்ப நக்க
கண் போல் நெய்தல் | மிதித்துவிட,
சிரிக்கின்ற கண்போல் மலர்ந்த நெய்தல் |
கள் கமழ்ந்து
ஆனா துறைவற்கு | தேன் மணத்தை ஒழியாமல்
பரப்பும் துறையைச் சேர்ந்தவனுக்காக |
நெக்க நெஞ்சம்
நேர்கல்லேனே | உடைந்துபோன என்
நெஞ்சத்துடன் அவனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். |
# 152 | # 152 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
கையறுபு
இரற்றும் கானல் அம் புலம்பு அம் | செயலற்றுப்போய்
ஓங்கிக் குரலெழுப்பும் கடற்கரைச் சோலையுடைய அழகிய நிலப்பகுதியின் |
துறைவன்
வரையும் என்ப | துறையைச் சேர்ந்தவன்
தன் காதற்பரத்தையை மணந்துகொள்வான் என்பார்கள்; |
அறவன் போலும்
அருளும்-மார் அதுவே | அறநெஞ்சினன்தான்
போலும்! அவனது அருட்பண்பும் அதுவேயாகும். |
| |
# 153 | # 153 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
உளர ஒழிந்த
தூவி குலவு மணல் | தன் சிறகைக் கோதியதால்
உதிர்ந்த இறகுகள் திரண்டுயர்ந்த மணல் |
போர்வின்
பெறூஉம் துறைவன் கேண்மை | குவியலில்
எடுத்துக்கொள்ளப்படும் துறையைச் சேர்ந்தவனின் உறவினை |
நன் நெடும்
கூந்தல் நாடுமோ மற்றே | நல்ல நெடிய
கூந்தலையுடையவள் நாடுவாளோ? |
# 154 | # 154 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
கானல் சேக்கும்
துறைவனோடு | கடற்கரைச் சோலையில்
தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனோடு |
யான் எவன்
செய்கோ பொய்க்கும் இ ஊரே | நான் எதனைச் செய்வேன்?
பொய்கூறுகிறது இந்த ஊர்! |
| |
# 155 | # 155 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக, |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
பதைப்ப ததைந்த
நெய்தல் கழிய | சிறகடித்து
அங்குமிங்கும் பறந்துதிரிவதால் சிதைந்துபோன நெய்தல் மலர், கழியின் |
ஓதமொடு பெயரும்
துறைவற்கு | நீர்ப்பெருக்கு
வழியும்போது அதனோடு செல்லும் துறையைச் சேர்ந்தவனுக்கு |
பைஞ்சாய் பாவை
ஈன்றனென் யானே | நான் பஞ்சாய்க் கோரைப்
பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன். |
# 156 | # 156 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
பதைப்ப ஒழிந்த
செம் மறு தூவி | சிறகடித்து
அங்குமிங்கும் பறந்துதிரிவதால் உதிர்துவிட்ட சிவந்த மறுவையுடைய இறகுகள் |
தெண் கழி
பரக்கும் துறைவன் | தெளிந்த கழியின்
நீரில் பரவலாய்க் கிடக்கும் துறையைச் சேர்ந்தவன் |
எனக்கோ காதலன்
அனைக்கோ வேறே | என்னைப்பொருத்தமட்டிலும்
அன்புடையவன்தான்! ஆனால் என் அன்னை போன்ற தலைவிக்கு அப்படி இல்லையே! |
| |
# 157 | # 157 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
காலை இருந்து
மாலை சேக்கும் | ககலையிலிருந்து
மாலைவரை அங்கு தங்கியிருக்கும் |
தெண் கடல்
சேர்ப்பனொடு வாரான் | தெளிந்த நீரையுடைய
கடலைச் சேர்ந்த தலைவனாகிய தன் தந்தையோடு வராமல், |
தான் வந்தனன்
எம் காதலோனே | தானே தனியாக வந்தான்
என் அன்புக்குரிய புதல்வன். |
# 158 | # 158 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
கானல் அம்
பெரும் துறை துணையொடு கொட்கும் | கடற்கரைச் சோலையுள்ள
அழகிய பெரிய துறையில் தன் துணையோடு சுற்றித்திரியும் |
தண்ணம் துறைவன்
கண்டிகும் | குளிர்ந்த அழகிய
துறைவனே! சென்று காண்பாயாக! |
அம் மா மேனி
எம் தோழியது துயரே | அழகிய மாந்தளிர் போன்ற
மேனியையுடைய எமது தோழியாகிய உன் பரத்தையின் துயரத்தை – |
| |
# 159 | # 159 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
பசி தின
அல்கும் பனி நீர் சேர்ப்ப | பசி தன்னை வாட்டவும்
அங்கேயே தங்கியிருக்கும் குளிர்ந்த கடல்நீர்ப்பரப்பின் தலைவனே! |
நின் ஒன்று
இரக்குவன் அல்லேன் | உன்னிடம் ஒன்றனைக்
கேட்கிறேன், ஆனால் இரந்து கேட்கவில்லை! |
தந்தனை சென்மோ
கொண்ட இவள் நலனே | தந்துவிட்டுச் செல்,
நீ எடுத்துக்கொண்ட இவளின் பெண்மைநலத்தை. |
# 160 | # 160 |
வெள்ளாங்குருகின்
பிள்ளை செத்து என | வெள்ளைக் கொக்கின்
குஞ்சு இறந்ததாக |
காணிய சென்ற மட
நடை நாரை | அதனைக் காணச் சென்ற
இளமையான நடையைக் கொண்ட நாரை |
நொந்ததன்
தலையும் நோய் மிகும் துறைவ | வருந்தியதற்கு மேலும்
மிகுந்த துயரநோய் கொள்ளும் துறையைச் சேர்ந்தவனே! |
பண்டையின் மிக
பெரிது இனைஇ | உன் பரத்தை முன்னைக்
காட்டிலும் மிகவும் பெரிதாக வருந்துவதால் |
முயங்கு-மதி
பெரும மயங்கினள் பெரிதே | சென்று அவளைத்
தழுவிக்கொள்க பெருமானே! மனம் குன்றிப்போனாள் பெரிதும். |
| |
# 17 சிறுவெண்
காக்கை பத்து | # 17 சிறுவெண் காக்கை
பத்து |
# 161 | # 161 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
கரும் கோட்டு
புன்னை தங்கும் துறைவற்கு | கரிய கிளைகளையுடைய
புன்னையில் தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனுக்காகப் |
பயந்த நுதல்
அழிய சாஅய் | பசந்துபோன நெற்றி தன்
அழகழிந்து வாட, |
நயந்த நெஞ்சம்
நோய்ப்பாலஃதே | அவனை விரும்பிய
நெஞ்சமும் காமநோய்வாய்ப்பட்டதே! |
# 162 | # 162 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
நீத்து நீர்
இரும் கழி இரை தேர்ந்து உண்டு | நீந்துமளவுக்கு நீரைக்
கொண்ட கரிய கழியில் தன் இரையைத் தேடி உண்டு |
பூ கமழ்
பொதும்பர் சேக்கும் | பூ மணக்கும் பொழிலில்
தங்கியிருக்கும் |
துறைவன் சொல்லோ
பிற ஆயினவே | துறையைச் சேர்ந்தவனின்
சொல்லோ பொய்த்துப் போயினவே! |
| |
# 163 | # 163 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
இரும் கழி
துவலை ஒலியின் துஞ்சும் | கரிய கழியில் அலைகள்
நீர்திவலைகளைத் தெறிக்கும் ஒலியைக் கேட்டுத் தூங்கும் |
துறைவன்
துறந்து என துறந்து என் | துறையைச் சேர்ந்த
தலைவன் பிரிந்து சென்றானாக, கழன்று விழுந்தன என் |
இறை ஏர் முன்கை
நீங்கிய வளையே | இறங்கிவரும் அழகிய
முன்கையிலிருந்து நீங்கிய வளையல்கள். |
# 164 | # 164 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
இரும் கழி
மருங்கின் அயிரை ஆரும் | கரிய கழியின் ஓரத்தில்
அயிரை மீனை நிறைய உண்ணும் |
தண்ணம் துறைவன்
தகுதி | குளிர்ச்சியான அழகிய
துறையைச் சேர்ந்தவனின் தகுதியானது |
நம்மோடு
அமையாது அலர் பயந்தன்றே | நம்மை வருத்துவதோடு
மட்டும் நில்லாமல், ஊரே பேசும் பழிச் சொல்லையும் உண்டாகிவிட்டது. |
| |
# 165 | # 165 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
அறு கழி சிறு
மீன் ஆர மாந்தும் | வற்றிக்கொண்டுவரும்
கழியில் சிறிய மீன்களை வயிறார விரைந்துண்ணும் |
துறைவன்
சொல்லிய சொல் என் | துறையைச் சேர்ந்தவன்
சொன்ன சொல் என் |
இறை ஏர் எல்
வளை கொண்டு நின்றதுவே | இறங்கி வரும்
தோள்களின் அழகிய ஒளிவிடும் வளையல்களைக் கழற்றிக்கொண்டுபோய்விட்டது. |
# 166 | # 166 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
வரி வெண் தாலி
வலை செத்து வெரூஉம் | வரிகளையுடைய வெண்மையான
சோழிகளைக் கண்டு வலையோ என்று எண்ணி வெருளும் |
மெல்லம்புலம்பன்
தேறி | மென்மையான
நெய்தல்நிலத் தலைவனின் சொற்களை நம்பி |
நல்ல ஆயின
நல்லோள் கண்ணே | தம் நலம் இழந்தனவாயின
இந்த நல்லவளின் கண்கள். |
| |
# 167 | # 167 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
இரும் கழி இன
கெடிறு ஆரும் துறைவன் | கரிய கழியில் கூட்டமான
கெடிற்றுமீன்களை நிறைய உண்ணும் துறையைச் சேர்ந்தவன் |
நல்குவன் போல
கூறி | முன்னர் விரும்பி
அன்புசெய்பவன் போல இனிய மொழிகளைக் கூறி, |
நல்கான்
ஆயினும் தொல் கேளன்னே | இப்போது
அன்புசெய்யானாயினும் நெடுங்காலம் நம்மீது நட்புக்கொண்டவனல்லவோ? |
# 168 | # 168 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
துறை படி அம்பி
அகம்_அணை ஈனும் | துறையில் கிடக்கும்
தோணியின் உள்கட்டைக்குள் கூடுகட்டி முட்டையிடும் |
தண்ணம் துறைவன்
நல்கின் | குளிர்ச்சியான அழகிய
துறையைச் சேர்ந்தவன் விரும்பி அன்புசெய்தால் |
ஒண் நுதல்
அரிவை பால் ஆரும்மே | ஒளிரும் நெற்றியை உடைய
இந்தப் பெண் பால் மிக அருந்தும். |
| |
# 169 | # 169 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
பொன் இணர்
ஞாழல் முனையின் பொதி அவிழ் | பொன்னைப் போன்ற
பூங்கொத்துக்களையுடைய ஞாழல் மரத்தை வெறுத்தால், அரும்புகள் மலர்ந்த |
புன்னை அம் பூ
சினை சேக்கும் துறைவன் | புன்னையின் அழகிய
பூக்களைக் கொண்ட கிளையில் வந்து தங்கும் துறையைச் சேர்ந்தவனின் |
நெஞ்சத்து
உண்மை அறிந்தும் | நெஞ்சத்தில் இருக்கும்
உண்மையான எண்ணத்தை அறிந்திருந்தும் |
என் செய
பசக்கும் தோழி என் கண்ணே | என்னத்திற்காகப்
பசந்திருக்கின்றன தோழியே! என் கண்கள்? |
# 170 | # 170 |
பெரும்
கடற்கரையது சிறு_வெண்_காக்கை | பெரிய கடற்கரையில்
உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம் |
இரும் கழி
நெய்தல் சிதைக்கும் துறைவன் | கரிய கழியில்
பூத்திருக்கும் நெய்தல் மலரைச் சிதைக்கும் துறையைச் சேர்ந்த தலைவன் |
நல்லன் என்றி
ஆயின் | நல்லவன் என்று
சொல்கிறாய், எனினும் |
பல் இதழ்
உண்கண் பசத்தல் மற்று எவனோ | பல இதழ்களைக் கொண்ட
மலர் போன்ற என் மையுண்ட கண்கள் பசப்பது எதனாலோ? |
| |
# 18 தொண்டி
பத்து | # 18 தொண்டி பத்து |
# 171 | # 171 |
திரை இமிழ் இன்
இசை அளைஇ அயலது | கடலலைகள் முழங்கும்
இனிய இசையோடு கலந்து, அடுத்திருக்கும் |
முழவு இமிழ்
இன் இசை மறுகு-தொறு இசைக்கும் | முழவுகளும் முழங்கும்
இனிய இசை தெருக்கள்தோறும் ஒலிக்கும் |
தொண்டி அன்ன
பணை தோள் | தொண்டியைப் போன்ற
பருத்த தோள்களைக் கொண்ட |
ஒண் தொடி அரிவை
என் நெஞ்சு கொண்டோளே | ஒளிரும் தோள்வளை
அணிந்த பெண்தான் என் நெஞ்சினைக் கவர்ந்தவள். |
# 172 | # 172 |
ஒண் தொடி அரிவை
கொண்டனள் நெஞ்சே | ஒளிரும் தோள்வளை
அணிந்த பெண் கவர்ந்தனள் என் நெஞ்சத்தை! |
வண்டு இமிர்
பனி துறை தொண்டி ஆங்கண் | வண்டுகள் ஒலிக்கும்
குளிர்ச்சியான துறையைக் கொண்ட தொண்டியில் இருக்கும் |
உரவு கடல் ஒலி
திரை போல | எப்போதும்
இயங்கிக்கொண்டிருக்கும் கடல் ஒலிக்கின்ற அலைகளைப் போல |
இரவினானும்
துயில் அறியேனே | இரவுநேரத்திலும்
தூக்கத்தை அறியேன். |
| |
# 173 | # 173 |
இரவினானும் இன்
துயில் அறியாது | இரவிலேயும் இனிய
தூக்கத்தை அறியாமல் |
அரவு உறு
துயரம் எய்துப தொண்டி | பாம்பு தீண்டினாற்
போன்ற துயரத்தை அடைவார்கள், தொண்டியின் |
தண் நறு
நெய்தல் நாறும் | குளிர்ந்த நறிய
நெய்தல் மலரின் மணம் கமழும் |
பின் இரும்
கூந்தல் அணங்கு உற்றோரே | பின்னப்பட்ட கரிய
கூந்தலையுடையவளின் வருத்துகின்ற பார்வையால் தீண்டப்பட்டவர்கள். |
# 174 | # 174 |
அணங்கு உடை பனி
துறை தொண்டி அன்ன | வருத்தும் தெய்வங்களை
உடைய குளிர்ந்த துறையைக் கொண்ட தொண்டியைப் போன்ற |
மணம் கமழ்
பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை | மணம் கமழும் பொழிலையே
சந்திக்கும் இடமாகக் குறிப்பிட்டாள், நுண்ணிய அணிகலன்களைக் கொண்டவள்; |
பொங்கு அரி
பரந்த உண்கண் | மிகுந்த செவ்வரி
படர்ந்த மையுண்ட கண்களையும், |
அம் கலிழ் மேனி
அசைஇய எமக்கே | அழகு ஒளிரும்
மேனியையும் நினைந்து வருந்திய எமக்கு – |
| |
# 175 | # 175 |
எமக்கு நயந்து
அருளினை ஆயின் பணை தோள் | எனக்குக் கனிவோடு
அருள்செய்வதென்றால், மூங்கில் போன்ற தோளையும் |
நன் நுதல்
அரிவையொடு மென்மெல இயலி | நல்ல நெற்றியையும்
கொண்ட உன் தோழியோடும் மெல்ல மெல்ல நடந்து |
வந்திசின்
வாழியோ மடந்தை | வரவேண்டும், வாழ்க
மடப்பமுள்ள நங்கையே! |
தொண்டி அன்ன
நின் பண்பு பல கொண்டே | தொண்டியைப் போன்ற உன்
பண்புகள் பலவற்றையும் கூடக்கூட்டிக்கொண்டு – |
# 176 | # 176 |
பண்பும்
பாயலும் கொண்டனள் தொண்டி | எனக்குரிய
பண்புகளையும், என் உறக்கத்தையும் கவர்ந்துகொண்டாள், தொண்டியின் |
தண் கமழ் புது
மலர் நாறும் ஒண் தொடி | குளிர்ந்த மணங்கமழும்
புதிய மலர் போன்று மணக்கும் ஒளிரும் தொடி அணிந்தவள்; |
ஐது அமைந்து
அகன்ற அல்குல் | மென்மையானதாக அமைந்த
அகன்ற அல்குலையும், |
கொய் தளிர்
மேனி கூறு-மதி தவறே | கொய்யப்பட்ட
தளிர்போன்ற மேனியையும் உடையவளே! கூறுவாயாக! நான் செய்த தவறினை! |
| |
# 177 | # 177 |
தவறு இலர்
ஆயினும் பனிப்ப மன்ற | தவறு செய்யாதவராயினும்
நடுங்குவர், உறுதியாய்; |
இவறு திரை
திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு | உருண்டு எழும் அலைகள்
மோதி மகிழும் மணல்திட்டுகளை உடைய நெடிய கரையில் |
முண்டக நறு
மலர் கமழும் | கழிமுள்ளிச் செடிகளின்
பூக்கள் மணங்கமழும் |
தொண்டி அன்னோள்
தோள் உற்றோரே | தொண்டியைப் போன்றவளின்
தோள்களைத் தழுவியவர். |
# 178 | # 178 |
தோளும்
கூந்தலும் பல பாராட்டி | தோளையும், கூந்தலையும்
பலபடப் பாராட்டி |
வாழ்தல்
ஒல்லுமோ மற்றே செங்கோல் | இவளுடன் வாழ்வது
வாய்க்குமோ, செங்கோலையுடைய |
குட்டுவன்
தொண்டி அன்ன | குட்டுவனின்
தொண்டியைப் போன்ற |
என் கண்டு
நயந்து நீ நல்கா_காலே | என்னைக் கண்டு
விருப்பத்துடன் நீ அன்புசெய்யாதபோது. |
| |
# 179 | # 179 |
நல்கு-மதி
வாழியோ நளி நீர் சேர்ப்ப | இவள் மீது
அன்புசெலுத்துவாயாக, வாழ்க நீ, பரந்த கடல் நீர்ப்பரப்புக்குரியவனே! |
அலவன் தாக்க
துறை இறா பிறழும் | நண்டு தாக்கியதால்
துறையிலுள்ள இறாமீன் புரளும் |
இன் ஒலி தொண்டி
அற்றே | இனிய ஒலியைக் கொண்ட
தொண்டியைப் போன்றது, |
நின் அலது
இல்லா இவள் சிறு நுதலே | நீ இல்லாமல்
தனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லாத இவளின் சிறிய நெற்றி. |
# 180 | # 180 |
சிறு நனி
வரைந்தனை கொண்மோ பெரு_நீர் | மிகக் குறுகிய
காலத்தில் மணந்து உரியதாக்கிக்கொள்! கடலில் |
வலைவர் தந்த
கொழு மீன் வல்சி | வலைவீசும் மீனவர்
கொண்டுவந்த மிகுதியான மீனைத் தனக்கு உணவாகக் கொள்ள |
பறை தபு முது
குருகு இருக்கும் | பறத்தல் இயலாத முதிய
நாரை பார்த்துக்கொண்டிருக்கும் |
துறை கெழு
தொண்டி அன்ன இவள் நலனே | துறையைப் பொருந்திய
தொண்டியைப் போன்ற இவளது நல்ல அழகை! |
| |
# 19 நெய்தல்
பத்து | # 19 நெய்தல் பத்து |
# 181 | # 181 |
நெய்தல் உண்கண்
ஏர் இறை பணை தோள் | நெய்தல் மலர் போன்ற
மையுண்ட கண்களையும், அழகாக இறங்கும் பருத்த தோள்களையும் உடையவரான |
பொய்தல் ஆடிய
பொய்யா மகளிர் | மணல்வீடு கட்டி
விளையாடிய, பொய்யுரையை அறியாத மகளிர் |
குப்பை வெண்
மணல் குரவை நிறூஉம் | குவிந்திருக்கும்
வெண்மையான மணலில் குரவைக் கூத்துக்காக நின்றுகொண்டிருக்கும் |
துறை கெழு
கொண்கன் நல்கின் | துறையைப் பொருந்திய
தலைவன் நம்மீது அன்புசெய்தால் |
உறைவு இனிது
அம்ம இ அழுங்கல் ஊரே | வாழ்வதற்கு
இனியதாயிருக்கும் இந்த ஆரவாரமுள்ள ஊர். |
# 182 | # 182 |
நெய்தல் நறு
மலர் செருந்தியொடு விரைஇ | நெய்தலின் நறுமணமுள்ள
மலரைச் செருந்திப்பூவோடு கலந்து |
கை புனை நறும்
தார் கமழும் மார்பன் | கையால் புனையப்பட்ட
மணமுள்ள மாலை கமழும் மார்பினையுடையவன் |
அரும் திறல்
கடவுள் அல்லன் | அரிய செயல்களைச்
செய்யும் ஆற்றல் உள்ள கடவுள் அல்லன்; |
பெரும் துறை
கண்டு இவள் அணங்கியோனே | பெரிய துறையில் இவளைக்
கண்டு வருத்தும் தெய்வத்தைப் போல் இவளை வருத்தமுறச் செய்தவன். |
| |
# 183 | # 183 |
கணம்_கொள்
அருவி கான் கெழு நாடன் | திரண்ட நீரைக் கொண்ட
அருவியையுடைய கானத்தைச் சேர்ந்த நாடனும், |
குறும் பொறை
நாடன் நல் வயல் ஊரன் | சிறிய குன்றுகளையுடைய
நாடனும், நல்ல வயல்களைக் கொண்ட ஊரினையுடையவனும், |
தண் கடல்
சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் | குளிர்ந்த
கடற்பரப்பின் உரிமையாளனுமாகிய தலைவன் பிரிந்து சென்றானாக, முன்னைக்காட்டிலும், |
கடும் பகல்
வருதி கையறு மாலை | இப்போது கடும்
பகலிலேயே வரத்தொடங்கிவிட்டாய், பிரிந்தோரைச் செயலற்றுப்போகச் செய்யும் மாலையே! |
கொடும் கழி
நெய்தலும் கூம்ப | வளைவான கழியில் உள்ள
நெய்தல் மலர்களும் இதழ்குவிந்துபோக, |
காலை வரினும்
களைஞரோ இலரே | நீ காலையிலேயே
வந்தாலும் என் துயரத்தைக் களைபவர் யாருமில்லை. |
# 184 | # 184 |
நெய்தல் இரும்
கழி நெய்தல் நீக்கி | நெய்தல் நிலத்திலுள்ள
கரிய கழியில் உள்ள நெய்தல் பூக்களை விலக்கிவிட்டு |
மீன் உண்
குருகு_இனம் கானல் அல்கும் | மீனை உண்ணும் குருகுக்
கூட்டம் கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கும் |
கடல்
அணிந்தன்று அவர் ஊரே | கடலை அழகுறப்பெற்றது
அவரின் ஊர்; |
கடலினும்
பெரிது எமக்கு அவர் உடை நட்பே | அந்தக் கடலினும்
பெரியது எனக்கு அவருடைய நட்பு. |
| |
# 185 | # 185 |
அலங்கு இதழ்
நெய்தல் கொற்கை முன்துறை | அசைகின்ற இதழ்களையுடைய
நெய்தல் மலர்ந்திருக்கும் கொற்கையின் துறைமுகத்தில் காணப்படும் |
இலங்கு முத்து
உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் | ஒளிவிடும் முத்தினைப்
போன்ற பற்கள் பொருந்திய சிவந்த வாயினையும் |
அரம் போழ் அம்
வளை குறு_மகள் | அரத்தால் பிளவுபட
அறுத்த அழகிய வளையணிந்த இள மகள் |
நரம்பு ஆர்த்து
அன்ன தீம் கிளவியனே | யாழ் நரம்பை இசைத்தது
போன்ற இனிய சொல்லினையுடையவள். |
# 186 | # 186 |
நாரை நல் இனம்
கடுப்ப மகளிர் | நாரையின் நல்ல
கூட்டத்தைப் போல, மகளிர் |
நீர் வார்
கூந்தல் உளரும் துறைவ | தம் நீர் ஒழுகும்
கூந்தலை கோதிவிட்டு உலர்த்தும் துறையைச் சேர்ந்தவனே! |
பொங்கு கழி
நெய்தல் உறைப்ப இ துறை | நீர் மிகுந்து வரும்
கழியின் நெய்தல் பூக்கள் நீர்த்துளிகளை உதிர்க்க, இந்தத் துறைக்குப் |
பல்_கால்
வரூஉம் தேர் என | பலமுறை வருகின்றது ஒரு
தேர் என்பதற்காக, |
செல்லாதீமோ
என்றனள் யாயே | அங்குச் செல்லவேண்டாம்
என்று கூறினள் தாய். |
| |
# 187 | # 187 |
நொதுமலாளர்
கொள்ளார் இவையே | (நாங்கள் உம்
தழையுடைகளை அணிந்தால்) அயலார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இவற்றை; |
எம்மொடு வந்து
கடல் ஆடு மகளிரும் | எம்மோடு வந்து கடலில்
நீராடுகின்ற மகளிரும் |
நெய்தல் அம்
பகை தழை பாவை புனையார் | நெய்தல் பூவினின்றும்
மாறுபட்ட இந்தத் தழையுடையைத் தம் பாவைக்கும் அணியமாட்டார்; |
உடல்_அகம்
கொள்வோர் இன்மையின் | உடலுக்கு அகமாக இதனை
அணிந்துகொள்வோர் யாரும் இங்கே இல்லையாதலால், |
தொடலைக்கு உற்ற
சில பூவினரே | மாலை தொடுப்போரும் தம்
மாலைக்குத் தேவையாக வெகு சில பூக்களையே கொள்வார்கள். |
# 188 | # 188 |
இரும் கழி
சே_இறா இன புள் ஆரும் | கரிய கழியில் சிவந்த
இறால் மீன்களைக் கூட்டமான பறவைகள் நிறைய உண்ணும் |
கொற்கை கோமான்
கொற்கை அம் பெரும் துறை | கொற்கைக் கோமானின்
கொற்கையிலுள்ள அழகிய பெரிய துறையில் |
வைகறை மலரும்
நெய்தல் போல | வைகறைப் பொழுதில்
மலரும் நெய்தல் பூவைப் போல |
தகை பெரிது
உடைய காதலி கண்ணே | பேரழகு உடையது என்
காதலியின் கண்கள் |
| |
# 189 | # 189 |
புன்னை நுண்
தாது உறைத்தரு நெய்தல் | புன்னை மலர்களின்
நுண்ணிய பூந்துகள் உதிர்ந்துகிடக்கும் நெய்தல் பூ |
பொன்படு
மணியின் பொற்ப தோன்றும் | பொன் துகள் படிந்த நீல
மணியைப் போலத் தோன்றும் |
மெல்லம்புலம்பன்
வந்து என | மென்புலத் தலைவன்
மணம்பேச வந்ததால் |
நல்லன ஆயின
தோழி என் கண்ணே | நன்றாக ஆகிவிட்டன தோழி
என் கண்கள். |
# 190 | # 190 |
தண் நறு
நெய்தல் தளை அவிழ் வான் பூ | குளிர்ந்த நறிய
நெய்தலின் முறுக்கு அவிழ்ந்த அழகிய பூவை |
வெண்ணெல்
அரிநர் மாற்றினர் அறுக்கும் | வெண்ணெல்லை அறுக்கின்ற
உழவர்கள் நீக்கிவிட்டு அறுக்கும் |
மெல்லம்புலம்பன்
மன்ற எம் | மென்புலத்துக்குத்
தலைவனே எனது |
பல் இதழ்
உண்கண் பனி செய்தோனே | பல இதழ்களைக் கொண்ட
மலர் போன்ற மையுண்ட கண்களில் நீர் வரச் செய்தவன். |
| |
# 20 வளை பத்து | # 20 வளை பத்து |
# 191 | # 191 |
கடல் கோடு
செறிந்த வளை வார் முன்கை | கடலின் சங்கினால்
செய்யப்பட்ட செறிவான வளைகள் ஒழுங்குபட இருக்கும் முன்கையினையும் |
கழி பூ
தொடர்ந்த இரும் பல் கூந்தல் | கழியிலுள்ள பூக்களால்
தொடுக்கப்பட்ட மலர்ச் சரத்தை அணிந்த கரிய பலவான கூந்தலையும் கொண்ட, |
கானல் ஞாழல்
கவின் பெறும் தழையள் | கடற்கரைச் சோலையிலுள்ள
ஞாழலின் அழகுபெற்ற தழையாடை அணிந்தவள், |
வரை
அர_மகளிரின் அரியள் என் | மலையில் வாழும்
தெய்வப்பெண்டிரைக் காட்டிலும் காண்பதற்கு அரிதானவள் – அவள் என் |
நிறை அரு
நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே | பொறுமையற்ற
நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டு தன்னை ஒளித்துக்கொண்டவள். |
# 192 | # 192 |
கோடு புலம்
கொட்ப கடல் எழுந்து முழங்க | சங்கினங்கள்
கடலோரநிலத்தில் சுழன்று திரிய, கடலலைகள் எழுந்து முழங்க, |
பாடு இமிழ் பனி
துறை ஓடு கலம் உகைக்கும் | ஓசை முழங்கும்
குளிர்ந்த துறையில் ஓடுகின்ற கலங்களை தரையில் உதைத்துச் செலுத்தும் |
துறைவன்
பிரிந்து என நெகிழ்ந்தன | துறையைச் சேர்ந்தவன்
பிரிந்தான் என்றவுடன் தொளதொளவென்று ஆகி |
வீங்கின மாதோ
தோழி என் வளையே | பெரிதானவை போல்
தோன்றுகின்றன தோழி! என் வளைகள். |
| |
# 193 | # 193 |
வலம்புரி உழுத
வார் மணல் அடைகரை | வலம்புரிச் சங்குகள்
தரையை உழுதவாறு நகரும் நெடிய மணல் பரந்த அலைகளால் இறுக்கப்பட்ட கரையில் |
இலங்கு கதிர்
முத்தம் இருள் கெட இமைக்கும் | ஒளிரும் கதிர்களையுடைய
முத்துக்கள் இருள் நீங்குமாறு பளிச்சிடும் |
துறை கெழு
கொண்க நீ தந்த | துறையைச் சேர்ந்த
தலைவனே! நீ தந்த |
அறை புனல் வால்
வளை நல்லவோ தாமே | மோதியடிக்கும்
நீரையுடைய கடலில் பிறந்த வெண்மையான வளையல்கள் நல்லவையோ தாமும்? |
# 194 | # 194 |
கடல் கோடு
அறுத்த அரம் போழ் அம் வளை | கடல் சங்கினை அறுத்த,
அரத்தால் பிளக்கப்பட்ட அழகிய வளையல்களையும் |
ஒண் தொடி
மடவரல் கண்டிகும் கொண்க | ஒளிரும்
தோள்வளைகளையும் கொண்ட இளமை பொருந்தியவளைக் காண்பாயாக தலைவனே! |
நன் நுதல்
இன்று மால் செய்து என | நல்ல நெற்றி இன்று
மாறிப்போய்த் தோன்றியதாக, |
கொன் ஒன்று
கடுத்தனள் அன்னையது நிலையே | இதில் ஏதோ ஒன்று உண்டு
என ஐயம் கொண்டாள் அன்னை; அது இவளின் நிலையாகும். |
| |
# 195 | # 195 |
வளை படு
முத்தம் பரதவர் பகரும் | சங்கு ஈன்ற
முத்துக்களைப் பரதவர் விலைக்கு விற்கும் |
கடல் கெழு
கொண்கன் காதல் மட_மகள் | கடலைச் சேர்ந்த
தலைவனின் அன்பிற்குரிய இளமையான மகள் |
கெடல் அரும்
துயரம் நல்கி | தீர்ப்பதற்கு முடியாத
துயரத்தைக் கொடுத்து |
படல் இன் பாயல்
வௌவிளே | படுத்துத்தூங்கும்
இனிய உறக்கத்தைக் கவர்ந்துகொண்டாள். |
# 196 | # 196 |
கோடு ஈர் எல்
வளை கொழும் பல் கூந்தல் | சங்கை அறுத்துச் செய்த
ஒளிவிடும் வளையல்களையும், செழுமையான பலவான கூந்தலையும், |
ஆய் தொடி
மடவரல் வேண்டுதி ஆயின் | ஆய்ந்தெடுத்த
தோள்வளையையும் கொண்ட இளமையான மகள் வேண்டுமாயின் |
தெண் கழி
சே_இறா படூஉம் | தெளிந்த கழிநீரில்
சிவந்த இறால் மீன் அகப்படும் |
தண் கடல்
சேர்ப்ப வரைந்தனை கொண்மோ | குளிர்ந்த
கடல்பகுதிக்குச் சொந்தக்காரனே! மணம்செய்து அவளை உரிமையாக்கிக்கொள். |
| |
# 197 | # 197 |
இலங்கு வளை
தெளிர்ப்ப அலவன் ஆட்டி | ஒளிவிடும் வளைகள்
கலகலக்க நண்டுகளை விரட்டி விளையாடி |
முகம் புதை
கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே | தன் முகத்தைக்
கூந்தலுக்குள் மறைத்துக்கொண்டவளாய்த் தலைகுனிந்து நின்றவள், |
புலம்பு கொள்
மாலை மறைய | தனிமைத் துயரத்தைத்
தன்னகத்தே கொண்ட இந்த மாலைப் பொழுது மறையும்போது |
நலம் கேழ் ஆகம்
நல்குவள் எனக்கே | நலம் பொருந்திய தனது
மார்பினை வழங்குவாள் எனக்கு. |
# 198 | # 198 |
வளை அணி முன்கை
வால் எயிற்று அமர் நகை | வளையல் அணிந்த
முன்கையினையும், வெண்மையான பற்களில் கண்டோர் விரும்பும் சிரிப்பையும் கொண்ட |
இளையர் ஆடும்
தளை அவிழ் கானல் | இளம்பெண்கள்
விளையாடும் மலர்கள் கட்டவிழ்ந்த கடற்கரைச் சோலையில் |
குறும் துறை
வினவி நின்ற | சிறிய துறை எங்கு
உள்ளது என்று கேட்டுக்கொண்டு நிற்கும் |
நெடும் தோள்
அண்ணல் கண்டிகும் யாமே | நெடிய தோள்களைக் கொண்ட
பெருமகன் ஒருவனைக் காண்போம் நாம். |
| |
# 199 | # 199 |
கானல் அம்
பெரும் துறை கலி திரை திளைக்கும் | கடற்கரைச் சோலையில்
உள்ள அழகிய பெரிய துறையில் உள்ள ஆரவாரிக்கும் கடலலைகள் வந்துவந்து தழுவிச்
செல்லும் |
வான் உயர் நெடு
மணல் ஏறி ஆனாது | வானத்தளவு உயர்ந்த
நெடிய மணல்மேட்டில் ஏறி நின்று ஓய்வின்றிப் |
காண்கம் வம்மோ
தோழி | பார்த்துக்கொண்டிருப்போம்,
வருவாயாக, தோழியே! |
செறி வளை
நெகிழ்த்தோன் எறி கடல் நாடே | செறிந்து கிடக்கும்
வளையல்களைக் கழன்றுபோகச் செய்தவனின் அலைகள் மோதும் கடலையுடைய நாட்டினை. |
# 200 | # 200 |
இலங்கு வீங்கு
எல் வளை ஆய் நுதல் கவின | ஒளிவிட்டுப் பெரிதாக
இருக்கும் பளபளத்த வளையல்களை அணிந்தவளே! உன் ஒளி மங்கிய நெற்றி அழகு
பெறும்படியாக |
பொலம் தேர்
கொண்கன் வந்தனன் இனியே | பொன்னாலான தேரினையுடைய
தலைவன் வந்துவிட்டான் இப்போது; |
விலங்கு அரி
நெடும் கண் ஞெகிழ்-மதி | குறுக்காக ஓடும்
செவ்வரிகளைக் கொண்ட நீண்ட கண்களைத் திறப்பாயாக! |
நலம் கவர்
பசலையை நகுகம் நாமே | உன் நலத்தையெல்லாம்
கவர்ந்துகொண்ட பசலையைப் பார்த்து நகைப்போம் நாம். |
| |