| |
நெய்தல் அம்மூவனார் | நெய்தல் அம்மூவனார் |
| |
# 11 தாய்க்கு
உரைத்த பத்து | # 11 தாய்க்கு உரைத்த
பத்து |
# 101 | # 101 |
அன்னை வாழி
வேண்டு அன்னை உது காண் | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! அதோ பாருங்கள்! |
ஏர் கொடி
பாசடும்பு பரிய ஊர்பு இழிபு | அழகிய கொடிகளையுடைய
பசுமையான அடும்பு அற்றுப்போகும்படி ஏறி இறங்கி |
நெய்தல் மயக்கி
வந்தன்று நின் மகள் | நெய்தலையும் சிதைத்து
வந்தது, உன் மகளின் |
பூ போல் உண்கண்
மரீஇய | பூப் போன்ற மையுண்ட
கண்களில் பொருந்திய |
நோய்க்கு
மருந்து ஆகிய கொண்கன் தேரே | நோய்க்கு மருந்தாகிய
தலைவனின் தேர். |
# 102 | # 102 |
அன்னை வாழி
வேண்டு அன்னை நம் ஊர் | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள |
நீல் நிற
பெரும் கடல் புள்ளின் ஆனாது | நீல நிறப் பெரும்
கடலில் உள்ள பறவையைப் போல, இடைவிடாது |
துன்புறு
துயரம் நீங்க | துன்புறுதலாகிய துயரம்
நீங்கிப்போகுமாறு |
இன்புற
இசைக்கும் அவர் தேர் மணி குரலே | இன்பம் எய்தும்படி
ஒலிக்கிறது தலைவனின் தேரில் கட்டப்பட்டுள்ள மணியின் குரல். |
| |
# 103 | # 103 |
அன்னை வாழி
வேண்டு அன்னை புன்னையொடு | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையோடு |
ஞாழல் பூக்கும்
தண்ணம் துறைவன் | ஞாழலும் பூக்கும்
குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன் |
இவட்கு
அமைந்தனனால் தானே | இவளுக்கு உரியவனாக
அமைந்துவிட்டான்; எனவே |
தனக்கு
அமைந்தன்று இவள் மாமை கவினே | இவளிடம்
நிலைத்துவிட்டது இவளது மாநிற மேனியழகு. |
# 104 | # 104 |
அன்னை வாழி
வேண்டு அன்னை நம் ஊர் | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள |
பலர் மடி
பொழுதின் நலம் மிக சாஅய் | பலரும் தூங்கும்
பொழுதில் தன் சிறப்பெல்லாம் மிகவும் மங்கிப்போய் |
நள்ளென வந்த
இயல் தேர் | நடு இரவில் வந்த
பண்புநலன் மிக்க தேரின் |
செல்வ கொண்கன்
செல்வனஃது ஊரே | செல்வனாகிய தலைவனின்
புதல்வனது ஊர் அதுவாகும். |
| |
# 105 | # 105 |
அன்னை வாழி
வேண்டு அன்னை முழங்கு கடல் | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! முழக்கமிடும் கடலின் |
திரை தரு
முத்தம் வெண் மணல் இமைக்கும் | அலைகள் கொண்டுவந்த
முத்துக்கள் வெண்மணலில் கண்சிமிட்டிக்கிடக்கும் |
தண்ணம் துறைவன்
வந்து என | குளிர்ந்த அழகிய
துறையைச் சேர்ந்தவன் மணம்பேசி வந்தான் என்றதும் |
பொன்னினும்
சிவந்தன்று கண்டிசின் நுதலே | பொன்னைக்காட்டிலும்
அழகாகச் சிவந்துபோனது, இதோ பார், இவளின் நெற்றி |
# 106 | # 106 |
அன்னை வாழி
வேண்டு அன்னை அவர் நாட்டு | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! தலைவனின் நாட்டிலுள்ள |
துதி கால்
அன்னம் துணை செத்து மிதிக்கும் | தோலுறை போன்ற
கால்களையுடைய அன்னமானது தன் துணை என எண்ணி மேலேறும் |
தண் கடல்
வளையினும் இலங்கும் இவள் | குளிர்ந்த கடலின்
சங்கினைக் காட்டிலும் வெளுத்துப்போய்த் தோன்றுகிறது இவளின் |
அம் கலிழ் ஆகம்
கண்டிசின் நினைந்தே | அழகொழுகும் மேனி, இதோ
பார், அவனை நினைத்து. |
| |
# 107 | # 107 |
அன்னை வாழி
வேண்டு அன்னை என் தோழி | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! என் தோழியான தலைவி |
சுடர் நுதல்
பசப்ப சாஅய் படர் மெலிந்து | தன் ஒளிவிடும் நெற்றி
பசந்துபோக மெலிவடைந்து துன்பத்தால் வாடி |
தண் கடல் படு
திரை கேள்-தொறும் | குளிர்ந்த கடலில்
ஒலிக்கும் அலைகளைக் கேட்கும்போதெல்லாம் |
துஞ்சாள்
ஆகுதல் நோகோ யானே | உறங்காமல்
கிடக்கிறாள்; வருந்துகிறேன் நான். |
# 108 | # 108 |
அன்னை வாழி
வேண்டு அன்னை கழிய | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! கழியிலுள்ள |
முண்டகம்
மலரும் தண் கடல் சேர்ப்பன் | நீர்முள்ளிகள்
மலர்ந்திருக்கும் குளிர்ந்த கடற்பகுதிக்குத் தலைவன் |
எம் தோள்
துறந்தனன் ஆயின் | என் தலைவியின் தோளைப்
பிரிந்துவிடுவானாயின், |
எவன்-கொல்
மற்று அவன் நயந்த தோளே | அந்த அளவுக்கு
இளப்பமானவைகளா, அவன் விரும்பிய தோள்கள்? |
| |
# 109 | # 109 |
அன்னை வாழி
வேண்டு அன்னை நெய்தல் | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! நெய்தலின், |
நீர் படர்
தூம்பின் பூ கெழு துறைவன் | நீரில் படர்ந்த
உள்துளையுள்ள தண்டுகளில் பூக்கள் பொருந்தியிருக்கும் துறையைச் சேர்ந்தவன் |
எம் தோள்
துறந்த_காலை எவன்-கொல் | என் தலைவியின் தோளைத்
துறந்துசென்ற காலத்தில், எப்படி |
பல் நாள் வரும்
அவன் அளித்த போழ்தே | பல நாள்களுக்கு
நெஞ்சில் தோன்றுகிறது அவன் பரிவுடன் நம்மை இன்புறச் செய்த காலங்கள்? |
# 110 | # 110 |
அன்னை வாழி
வேண்டு அன்னை புன்னை | அன்னையே! நான் கூறுவதை
விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையின் |
பொன் நிறம்
விரியும் பூ கெழு துறைவனை | பொன்னின் நிறத்தில்
மலர்ந்திருக்கும் பூக்கள் பொருந்திய துறையைச் சேர்ந்தவனை |
என் ஐ என்றும்
யாமே இ ஊர் | என் தலைவிக்குரிய
தலைவன் என்று கொண்டிருக்கிறோம் நாங்கள்; இந்த ஊரோ |
பிறிது ஒன்றாக
கூறும் | வேறு விதமாகக்
கூறுகிறது; |
ஆங்கும்
ஆக்குமோ வாழிய பாலே | அப்படியே
செய்துவிடுமோ, அந்த நல்ல ஊழ். |
| |
# 12 தோழிக்கு
உரைத்த பத்து | # 12 தோழிக்கு உரைத்த
பத்து |
# 111 | # 111 |
அம்ம வாழி தோழி
பாணன் | கேட்பாயாக, தோழியே!
பாணனானவன் |
சூழ் கழி
மருங்கின் நாண் இரை கொளீஇ | ஊரைச் சூழ்ந்துள்ள
கழியின் பக்கத்திலிருந்து தூண்டிலில் இரையை மாட்டி |
சினை கயல்
மாய்க்கும் துறைவன் கேண்மை | கருவுற்ற மீனைப்
பிடித்துக்கொல்லும் துறையைச் சேர்ந்த தலைவனின் நட்பினைப் |
பிரிந்தும்
வாழ்துமோ நாமே | பிரிந்தும் வாழ்வோமா?
– |
அரும் தவம்
முயறல் ஆற்றாதேமே | அவ்வாறு பிரியாமல்
வாழ்வதற்கான அரிய தவத்தை மேற்கொள்ள இயலாதவராகிய நாம். |
# 112 | # 112 |
அம்ம வாழி தோழி
பாசிலை | கேட்பாயாக, தோழியே!
பசிய இலைகளைக் கொண்ட |
செருந்தி தாய
இரும் கழி சேர்ப்பன் | செருந்தி மரங்கள்
பரவிய கரிய கழியினையுடைய தலைவன் |
தான் வர
காண்குவம் நாமே | தாமே மணம்பேச வருவதைக்
காண்போம் நாம்! |
மறந்தோம் மன்ற
நாண் உடை நெஞ்சே | அவன் கூறிய
உறுதிமொழிகளை மறந்துவிட்டோம், நாணம் நிறைந்த நெஞ்சினையுடைமையால். |
| |
# 113 | # 113 |
அம்ம வாழி தோழி
நென்னல் | கேட்பாயாக, தோழியே!
நேற்று, |
ஓங்கு திரை
வெண் மணல் உடைக்கும் துறைவற்கு | உயர்ந்தெழும் கடலலைகள்
வெள்ளிய மணல் மீது மோதி உடைக்கும் துறையைச் சேர்ந்தவனுக்கு |
ஊரார் பெண்டு
என மொழிய என்னை | இந்த ஊரார் நான் காதலி
என்று கூற, என்னைப்பற்றி, |
அது கேட்டு
அன்னாய் என்றனள் அன்னை | அதனைக் கேட்டு
அப்படிப்பட்டவளா நீ என்றாள் தாய்; |
பைபய எம்மை
என்றனென் யானே | மெதுவாக, என்னையா?
என்றேன் நான். |
# 114 | # 114 |
அம்ம வாழி தோழி
கொண்கன் | கேட்பாயாக, தோழியே!
நம் தலைவன் |
நேரேம் ஆயினும்
செல்குவம்-கொல்லோ | நேரில்
எதிர்ப்படவில்லையெனினும், நாம் போகலாமா, |
கடலின் நாரை
இரற்றும் | கடலோரத்திலுள்ள நாரை
ஓங்கிக் குரலெழுப்பும் |
மடல் அம்
பெண்ணை அவன் உடை நாட்டே | மடல்கள் உள்ள அழகிய
பனைகளைக் கொண்ட அவனுடைய நாட்டிற்கு? |
| |
# 115 | # 115 |
அம்ம வாழி தோழி
பல் மாண் | கேட்பாயாக, தோழியே! பல
தடவை |
நுண் மணல்
அடைகரை நம்மோடு ஆடிய | நுண்மணல் செறிந்த
கரையில் நம்மோடு விளையாடிய |
தண்ணம் துறைவன்
மறைஇ | குளிர்ந்த அழகிய
துறையைச் சேர்ந்தவன், இப்போது மறைந்துகொண்டு |
அன்னை அரும்
கடி வந்து நின்றோனே | அன்னையின் அரிய
காவலையும் மீறி இங்கு வந்து நிற்கின்றான். |
# 116 | # 116 |
அம்ம வாழி தோழி
நாம் அழ | கேட்பாயாக, தோழியே!
நாம் அழும்படியாக |
நீல இரும் கழி
நீலம் கூம்பும் | கரிய பெரிய கழியின்
நீலமலர்கள் கூம்பிநிற்க |
மாலை வந்தன்று
மன்ற | மாலைக்காலம்
வந்துவிட்டது உறுதியாக, |
காலை அன்ன காலை
முந்துறுத்தே | காலைப் பொழுதைப் போன்ற
ஒளிக்கதிர்களை முன்னால் அனுப்பிவிட்டு. |
| |
# 117 | # 117 |
அம்ம வாழி தோழி
நலனே | கேட்பாயாக, தோழியே!
பெண்மை நலன் |
இன்னது ஆகுதல்
கொடிதே புன்னை | இவ்வாறு சிதைந்து
போதல் கொடியதாம்; புன்னைமரத்தின் |
அணி மலர்
துறை-தொறும் வரிக்கும் | அழகான மலர்கள்
துறைகள்தோறும் கோலமிட்டுக்கிடக்கும் |
மணி நீர்
சேர்ப்பனை மறவாதோர்க்கே | நீலமணி போன்ற நிறமுள்ள
கடலையுடைய தலைவனை மறக்காமலிருப்போருக்கு – |
# 118 | # 118 |
அம்ம வாழி தோழி
யான் இன்று | கேட்பாயாக, தோழியே!
நான் இன்று |
அறன் இலாளன்
கண்ட பொழுதில் | அறநெறியில்லாத அந்தக்
கொடியவனைக் காணும்பொழுது |
சினவுவென்
தகைக்குவென் சென்றனென் | வெகுண்டு
ஊடிக்கொள்வேன், இனி வரவேண்டாம் என்று சொல்வேன் என்று எண்ணிக்கொண்டு சென்றேன்; |
பின் நினைந்து
இரங்கி பெயர்தந்தேனே | பின்னர் அவனை நினைந்து
அவனுக்காக இரங்கி ஒன்றும் சொல்லாமல் மீண்டேன். |
| |
# 119 | # 119 |
அம்ம வாழி தோழி
நன்றும் | கேட்பாயாக, தோழியே!
திருமணத்திற்குரிய நல்ல வழிகளை |
எய்யாமையின்
ஏது இல பற்றி | அறியாமையினால், அதற்கு
ஏதுவானவைகளைத் தவிர மற்ற வழிகளைப் பற்றிக்கொண்டிருப்பதால் |
அன்பு இலன்
மன்ற பெரிதே | நம்மீது அன்பு
இல்லாதவன், தெளிவாக, பெரிதும் – |
மென்_புல
கொண்கன் வாராதோனே | மென்புலமாகிய நெய்தல்
நிலத்துக்குரிய தலைவன் – நம்மை மணந்துகொள்ள இன்னும் வராதவன் – |
# 120 | # 120 |
அம்ம வாழி தோழி
நலம் மிக | கேட்பாயாக, தோழியே!
நலம் மிகப் பெற்று |
நல்ல ஆயின அளிய
மென் தோளே | நன்றாக ஆகிவிட்டன,
இரங்கத்தக்க என் மென்மையான தோள்கள்! |
மல்லல் இரும்
கழி மல்கும் | வளமிக்க பெரிய கழியில்
நீர் நிறைந்திருக்கும் |
மெல்லம்புலம்பன்
வந்த மாறே | நெய்தற்புலத்துத்
தலைவன் வந்ததனால் – |
| |
# 13 கிழவற்கு
உரைத்த பத்து | # 13 கிழவற்கு உரைத்த
பத்து |
# 121 | # 121 |
கண்டிகும்
அல்லமோ கொண்க நின் கேளே | கண்கூடாகப் பார்த்தேன்
அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை, |
முண்டக கோதை
நனைய | கழிமுள்ளிப் பூவால்
தொடுத்த மாலை நனையும்படி, |
தெண் திரை
பௌவம் பாய்ந்து நின்றோளே | தெளிந்த அலைகளையுடைய
கடலில் பாய்ந்து நீராடியவளை – |
# 122 | # 122 |
கண்டிகும்
அல்லமோ கொண்க நின் கேளே | கண்கூடாகப் பார்த்தேன்
அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை, |
ஒள் இழை உயர்
மணல் வீழ்ந்து என | தனது ஒளிரும்
அணிகலன்கள் உயர்ந்த மணல்மேட்டில் விழுந்துவிட்டதாக |
வெள்ளாங்குருகை
வினவுவோளே | வெள்ளாங்குருகைப்
பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்தவளை – |
| |
# 123 | # 123 |
கண்டிகும்
அல்லமோ கொண்க நின் கேளே | கண்கூடாகப் பார்த்தேன்
அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை, |
ஒண் நுதல் ஆயம்
ஆர்ப்ப | ஒளிவிடும்
நெற்றியையுடைய தன் தோழிமார் ஆரவாரிக்கக் |
தண்ணென் பெரும்
கடல் திரை பாய்வோளே | சில்லென்ற பெரிய கடல்
அலைகளில் பாய்ந்துகொண்டிருந்தவளை – |
# 124 | # 124 |
கண்டிகும்
அல்லமோ கொண்க நின் கேளே | கண்கூடாகப் பார்த்தேன்
அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை, |
வண்டல் பாவை
வௌவலின் | மணற்பாவையைக் கடலலை
கவர்ந்துசெல்ல |
நுண் பொடி அளைஇ
கடல் தூர்ப்போளே | நுண்ணிய குறுமணலை
வாரியெடுத்துக் கடலை நோக்கி வீசிக் கடலைத் தூர்க்க முயல்கின்றவளை – |
| |
# 125 | # 125 |
கண்டிகும்
அல்லமோ கொண்க நின் கேளே | கண்கூடாகப் பார்த்தேன்
அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை, |
தெண் திரை பாவை
வௌவ | தெளிந்த அலைகள்
மணற்பாவையை அடித்துச் செல்ல |
உண்கண் சிவப்ப
அழுது நின்றோளே | மையுண்ட கண்கள்
சிவந்துபோகுமாறு அழுதுகொண்டு நின்றிருந்தவளை – |
# 126 | # 126 |
கண்டிகும்
அல்லமோ கொண்க நின் கேளே | கண்கூடாகப் பார்த்தேன்
அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை, |
உண்கண் வண்டு
இனம் மொய்ப்ப | மையுண்ட கண்களை
மலரென்று வண்டினம் மொய்க்க, |
தெண் கடல்
பெரும் திரை மூழ்குவோளே | தெளிவான கடலின் பெரிய
அலைகளில் மூழ்கிக்கொண்டவளை – |
| |
# 127 | # 127 |
கண்டிகும்
அல்லமோ கொண்க நின் கேளே | கண்கூடாகப் பார்த்தேன்
அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை, |
தும்பை மாலை இள
முலை | தும்பை மலரால்
தொடுக்கப்பட்ட மாலையைத் தன் இளமையான முலைகள் அமைந்த |
நுண் பூண் ஆகம்
விலங்குவோளே | நுண்ணிய பூண்கள்
அணிந்த மார்பினில் குறுக்காகப் போட்டிருந்தவளை – |
# 128 | # 128 |
கண்டிகும்
அல்லமோ கொண்க நின் கேளே | கண்கூடாகப் பார்த்தேன்
அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை, |
உறாஅ வறு முலை
மடாஅ | நன்கு வளராத வறிய தன்
முலையை வாயில் வைத்து, |
உண்ணா பாவையை
ஊட்டுவோளே | உண்ணாத பாவைக்கு
ஊட்டிக்கொண்டிருந்தவளை – |
| |
# 129
கிடைக்காத பாடல் | # 129 கிடைக்காத பாடல் |
# 130
கிடைக்காத பாடல் | # 130 கிடைக்காத பாடல் |
| |
# 14 பாணற்கு
உரைத்த பத்து | # 14 பாணற்கு உரைத்த
பத்து |
# 131 | # 131 |
நன்றே பாண
கொண்கனது நட்பே | நல்லதாக இருக்கும்
பாணனே! தலைவனது நட்பு! |
தில்லை வேலி இ
ஊர் | தில்லை மரங்களை
வேலியாகக் கொண்ட இந்த ஊரில் |
கல்லென் கௌவை
எழாஅ_காலே | கல்லென்று எங்களைப்
பற்றிய வீண்பேச்சு எழாதவரையில். |
# 132 | # 132 |
அம்ம வாழி பாண
புன்னை | வாழ்க பாணனே நீ!
புன்னை மரத்தின் |
அரும்பு மலி
கானல் இ ஊர் | அரும்புகள்
மிகுந்திருக்கும் கடற்கரைச் சோலையைக் கொண்ட இந்த ஊரில் |
அலர் ஆகின்று
அவர் அருளும் ஆறே | அனைவரும் தூற்றும்
பழிச்சொல்லாகி நிற்கிறது அவர் நமக்கு அருளும் அழகு! |
| |
# 133 | # 133 |
யான் எவன்
செய்கோ பாண ஆனாது | நான் என்ன செய்வேன்
பாணனே? பொறுக்கமாட்டாமல் |
மெல்லம்புலம்பன்
பிரிந்து என | மென்னிலமான
நெய்தல்நிலத் தலைவன் எம்மைவிட்டுப் பிரிந்துசென்றான் என்பதற்காக |
புல்லென்றன என்
புரி வளை தோளே | சிறுத்துப்போய்விட்டன
என் முறுக்குண்ட வளையைக் கொண்ட தோள். |
# 134 | # 134 |
காண்-மதி பாண
இரும் கழி பாய் பரி | இங்கே பார் பாணனே!
கரிய கழியோரத்தில் பாய்ந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட |
நெடும் தேர்
கொண்கனோடு | நீண்ட தேரையுடைய
தலைவன் வர, அவனோடு |
தான் வந்தன்று
என் மாமை கவினே | தானும் வந்துவிட்டது
என் மாநிற மேனியழகு. |
| |
# 135 | # 135 |
பைதலம் அல்லேம்
பாண பணை தோள் | வருத்தப்படமாட்டேன்
பாணனே! மூங்கில் போன்ற தோள்களையும், |
ஐது அமைந்து
அகன்ற அல்குல் | மென்மையாக அமைந்து
அகன்றிருக்கும் அல்குலையும் கொண்ட |
நெய்தல் அம்
கண்ணியை நேர்தல் நாம் பெறினே | நெய்தல் போன்ற அழகிய
கண்களையுடையவளை நேரிலே காண நேர்ந்தாலும் – |
# 136 | # 136 |
நாண் இலை மன்ற
பாண நீயே | உனக்கு வெட்கம் என்பது
இல்லை, நிச்சயமாக, பாணனே! |
கோள் நேர்
இலங்கு வளை நெகிழ்த்த | இறுகப்பிடித்த அழகிய
ஒளிரும் வளையல்கள் நெகிழும்படி செய்த |
கானல் அம்
துறைவற்கு சொல் உகுப்போயே | கடற்கரைச் சோலையையுடைய
அழகிய துறையைச் சேர்ந்தவனுக்காக நீ பரிந்து பேசுகிறாயே! |
| |
# 137 | # 137 |
நின் ஒன்று
வினவுவல் பாண நும் ஊர் | உன்னை ஒன்று கேட்பேன்
பாணனே! உன் ஊரைச் சேர்ந்த |
திண் தேர்
கொண்கனை நயந்தோர் | திண்ணிய தேரைக் கொண்ட
தலைவனை விரும்பிய மகளிர் |
பண்டை தம் நலம்
பெறுபவோ மற்றே | முன்பு தாம்
கொண்டிருந்த அழகைத் திரும்பப் பெறுவார்களோ? |
# 138 | # 138 |
பண்பு இலை மன்ற
பாண இ ஊர் | நல்ல குணம் இல்லை
நிச்சயமாக, பாணனே! இந்த ஊருக்கு – |
அன்பு இல கடிய
கழறி | அன்பில்லாத, கடுஞ்
சொற்களைக் கூறி |
மென்_புல
கொண்கனை தாராதோயே | அந்த மென்புல நாயகனை
கூட்டிக்கொண்டு வராமலிருக்கின்ற உனக்கு – |
| |
# 139 | # 139 |
அம்ம வாழி
கொண்க எம்_வயின் | வாழ்க நீ தலைவனே!
என்னிடம் உள்ள |
மாண் நலம்
மருட்டும் நின்னினும் | சிறந்த அழகினைப்
பாராட்டி மயக்குமொழி பேசும் உன்னைக் காட்டிலும் |
பாணன் நல்லோர்
நலம் சிதைக்கும்மே | உன் பாணன் நல்ல மகளிர்
பலரின் பெண்மை நலத்தைச் சிதைக்கவல்லான். |
# 140 | # 140 |
காண்-மதி பாண
நீ உரைத்தற்கு உரியை | இங்கே பார் பாணனே! இதை
நீ சொல்லவேண்டியது உன் கடமை! |
துறை கெழு
கொண்கன் பிரிந்து என | துறையைப் பொருந்திய
தலைவன் பிரிந்து சென்றானாக, |
இறை கேழ் எல்
வளை நீங்கிய நிலையே | என் இறங்கும்
தோள்களைப் பொருந்திய ஒளிவிடும் வளைகள் கழன்று போன நிலையை – |
| |
# 15 ஞாழ பத்து | # 15 ஞாழ பத்து |
# 141 | # 141 |
எக்கர் ஞாழல்
செருந்தியொடு கமழ | மணல் மேட்டினில் உள்ள
ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க, |
துவலை தண் துளி
வீசி | மழைத்தூவலாகக்
குளிர்ந்த நீர்த்துளிகளை என் மேல் வீசி, |
பயலை செய்தன
பனி படு துறையே | என்னைப் பசக்கும்படி
செய்தன குளிர்ச்சியைத் தோற்றுவிக்கும் நீர்த்துறைகள். |
# 142 | # 142 |
எக்கர் ஞாழல்
இறங்கு இணர் படு சினை | மணல்மேட்டிலுள்ள
தாழ்வான பூங்கொத்துகள் மலர்ந்த கிளையினில் |
புள் இறை
கூரும் துறைவனை | பறவைகள் வந்து
நெடும்பொழுது தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனை |
உள்ளேன் தோழி
படீஇயர் என் கண்ணே | நினைத்துப்பார்க்கமாட்டேன்
தோழி! உறங்கிப்போகட்டும் என் கண்கள். |
| |
# 143 | # 143 |
எக்கர் ஞாழல்
புள் இமிழ் அகன் துறை | மணல் மேட்டில் உள்ள
ஞாழல் மரத்தில் பறவைகள் ஒலிக்கும் துறையானது |
இனிய செய்த
நின்று பின் | முதலில்
இன்பமானவற்றைச் செய்தன; சிறிது காலங்கழித்து, பின்னர் |
முனிவு செய்த
இவள் தட மென் தோளே | வெறுப்பையும்
தருகின்றன இவளின் பெரிய மென்மையான தோள்கள். |
# 144 | # 144 |
எக்கர் ஞாழல்
இணர் படு பொதும்பர் | மணல் மேட்டில் உள்ள
ஞாழல் மரத்தில் பூங்கொத்துள் தோன்றும் பொழிலில் |
தனி குருகு
உறங்கும் துறைவற்கு | தனியே ஒரு நாரை
உறங்கும் துறையைச் சேர்ந்தவனை எண்ணி, |
இனி பசந்தன்று
என் மாமை கவினே | இப்போது பசந்துபோகிறது
என் மாநிற மேனியழகு. |
| |
# 145 | # 145 |
எக்கர் ஞாழல்
சிறியிலை பெரும் சினை | மணல்மேட்டிலுள்ள ஞாழல்
மரத்தின் சிறிய இலைகளைக் கொண்ட பெரிய கிளையைப் |
ஓதம் வாங்கும்
துறைவன் | பெருகிவரும் கடல்நீர்
உள்ளிழுத்து வளைக்கும் துறையைச் சேர்ந்தவன் |
மாயோள் பசலை
நீக்கினன் இனியே | மாமை நிறத்தவளின்
பசலையை நீக்கினான் இப்போது. |
# 146 | # 146 |
எக்கர் ஞாழல்
அரும்பு முதிர் அவிழ் இணர் | மணல் மேட்டில் உள்ள
ஞாழல் மரத்தில் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள் |
நறிய கமழும்
துறைவற்கு | நறுமணத்தோடு கமழும்
துறையைச் சேர்ந்தவனுக்கு |
இனிய மன்ற என்
மாமை கவினே | இன்பமானது,
உறுதியாக, என் மாநிற மேனியழகு. |
| |
# 147 | # 147 |
எக்கர் ஞாழல்
மலர் இல் மகளிர் | மணல் மேட்டில் உள்ள
ஞாழல் மரத்தில் மலர்கள் இல்லாததால் மகளிர் |
ஒண் தழை அயரும்
துறைவன் | ஒளிரும் தழையுடையை
மட்டும் அணிந்து கடல்நீராடும் துறையைச் சேர்ந்தவன் |
தண் தழை விலை
என நல்கினன் நாடே | உனது குளிர்ச்சியான
தழையுடைக்கு விலையாகத் தந்தான் தன் நாட்டையே! |
# 148 | # 148 |
எக்கர் ஞாழல்
இகந்து படு பெரும் சினை | மணல் மேட்டில் உள்ள
ஞாழல் மரத்தில் நீட்டிக்கொண்டு நிற்கும் பெரிய கிளையில் |
வீ இனிது
கமழும் துறைவனை | மலர்கள் இனிமையாக
மணங்கமழும் துறையைச் சேர்ந்தவனை |
நீ இனிது
முயங்குதி காதலோயே | நீ இனிமையுடன்
தழுவிக்கொள்வாய் காதல்கொண்டவளே! |
| |
# 149 | # 149 |
எக்கர் ஞாழல்
பூவின் அன்ன | மணல் மேட்டில் உள்ள
ஞாழல் மரத்தின் பொன்னிறப் பூவைப் போன்ற |
சுணங்கு வளர்
இள முலை மடந்தைக்கு | அழகுத்தேமல்
படர்ந்திருக்கும் இளமையான முலைகள் உள்ள தலைவிக்கு |
அணங்கு
வளர்த்து அகறல் வல்லாதீமோ | முதலில் அழகைப்
பெருகச் செய்து, பின்னர் பிரிந்து செல்லத் துணியாதீர்! |
# 150 | # 150 |
எக்கர் ஞாழல்
நறு மலர் பெரும் சினை | மணல் மேட்டில் உள்ள
ஞாழல் மரத்தின் நறிய மலரைகொண்ட பெரிய கிளையில் |
புணரி
திளைக்கும் துறைவன் | ஆரவாரிக்கும் கடலைகள்
மூழ்கியெழும் துறையைச் சேர்ந்தவன் |
புணர்வின்
இன்னான் அரும் புணர்வினனே | சேர்ந்திருக்கும்போதும்
பிரிவின் நினைவால் துன்பத்தைத் தருபவன், அதுவும் என்றோ ஒருநாள்தான் வருகிறான். |
| |
| |