Select Page

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சாப்பிடு, சாப்பாடு போன்ற சொற்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆனால் அவற்றில் ஏதேனும் ஒரு திட அல்லது திரவப் பொருளை உட்கொள்ளுதலுக்குப் பல்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

1. உண்ணுதலும் தின்னுதலும் ( உண் versus தின் )

முதலில் தின் என்ற சொல்லைப் பார்ப்போம். மனிதர் அல்லாத வேறு உயிருள்ள உயிரற்ற பொருள்களும் தின்பதாகப் பாடல்கள் கூறுகின்றன. எனவே அவற்றில்தான் இதன் உண்மைப் பொருள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

1.அ. உயிரற்ற பொருள்கள் தின்னல்

ஒரு சன்னமான இரும்புக் கம்பியை எடுத்து அதன் ஒரு முனையை அரத்தால் சுற்றிச் சுற்றித் தேய்த்து ஊசியை உருவாக்குகிறார்கள். இதனை அரம் தின் ஊசி என்கிறது ஒரு அகநானூற்றுப் பாடல்.

அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன – அகம் 199/8

பெரிய அளவில் தயிர் கடையும்போது, ஒரு பெரிய பானையில் தயிரை இட்டு, நீண்ட ஒரு கழியில் செறுகிய மத்தத்தில் கயிற்றைச் சுற்றி, அந்தக் கயிற்றை இரண்டு கைகளாலும் மாறி மாறி இழுக்க மத்தம் சுழன்று வெண்ணெய் பிறக்கும். இவ்வாறு நீண்ட நாள்கள் தயிர் கடையும்போது அந்தக் கயிற்றின் சுழற்சியால் அந்த மரக்கழி கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துகொண்டே வரும். இதனை, அந்தக் கயிறு மரக்கழியைத் தின்பதாகப் புலவர் கூறுகிறார்.

பாசம் தின்ற தேய் கால் மத்தம் – நற் 12/2

பாசம் என்பது கயிறு. கால் என்பது மத்தம் செறுகிய கழி. பாதையோரத்துப் பலாமரம் காய்த்திருக்கிறது. வெயிலோ ‘சுள்’-ளென்று அடிக்கிறது. நிலத்திலோ நீர்வளமுமில்ல. எனவே வெளிவந்த பிஞ்சுக்காய்கூடக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருகிப்போகிறது. வெயில் அந்தப் பிஞ்சைத் தின்றுவிட்டதாக ஐங்குறுநூறு கூறுகிறது.

அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய் – ஐங் 351/1

இன்னும் சில ‘தின்’-கள் இங்கே:

விழுத் தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170
நிற புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின் – மலை 245
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை – பதி 12/20
கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி – மது 436
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த – மது 592
சாணம் தின்ற சமம் தாங்கு தட கை – மது 593
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற/பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்ன – நற் 84/6,7
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் – அகம் 288/5

இங்கே எரி தின் கொல்லை என்ற சொல்லைக் கவனித்துக்கொள்ளுங்கள். ஒரு புன்செய்க்காட்டில் அறுவடை முடிந்த பின்னர், அடிக்கட்டைகள் அப்படியே இருக்கும். அதைத் தோண்டியெடுத்து என்ன செய்வது? அவற்றை அப்படியே விட்டுவிட்டுக் காய்ந்தபின் கொல்லையில் தீவைப்பார்கள். அந்த அடிக்கட்டைகள் எரிந்து கரியாகிப்போகும். பின்னர் அடுத்த வெள்ளாமைக்கு உழும்போது அந்த கரிக்கட்டைகள் உரமாகிப்போகும். இதுவே நெருப்பு தின்ற கொல்லை.

ஆக, தின்னுதல் என்பது உட்கொள்ளுதல் என்பதைவிட, கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமற்செய்தல் (consume) என்ற பொருளே சரி எனத் தோன்றுகிறது. உயிரற்ற பொருள்களில் இந்த consume உருவகமாகக் கொள்ளப்படுகிறது.

இனி, இவ்வாறு உயிரற்ற பொருள்கள் எதையேனும் உண்ணுமா என்பதைப் பார்ப்போம்.

1.ஆ. உயிரற்ற பொருள்கள் உண்ணல்

பாலைநிலத்து மரங்கள் ஏற்கனவே இலை தழைகள் அதிகமின்றி இருக்கும். அதுவும் நல்ல வெயில்காலத்தில் இருக்கிற இலைகளும் உதிர்ந்துபோயிருக்கும். இப்பொழுது ஒரு காட்டுத்தீ உருவாகி காடே பற்றிக்கொண்டு எரிகிறது. பின்னர் அந்தப் பாலைநிலம் எப்படி இருக்கும்? அங்கங்கே நீட்டிக்கொண்டிருக்கும் கரிந்துவிட்ட மரக்குச்சிகள்தான் எங்குமிருக்கும். பாலைநிலத்தின் கொடுமையைக் கூறவந்த புலவர் அனைத்தையும் சேர்த்துக்கூறுகிறார்.

எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 324/1

என்றூழ் என்பது கடுமையான கோடை. Fire had devoured the dryland forest என்பதனையே இவ்வாறு கூறுகிறார் எனலாம்.

அழல் கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம்
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை – அகம் 381/6

நிலத்தில் வெப்பக்கதிர்கள் மேலெழுந்து ஆடுகின்றனவாம். கானல்நீர் என்கிறோமே அது. அந்த அளவுக்கு தகிக்கின்ற சூரியன் மரத்தின் நிழலைக்கூடத் தோண்டியெடுத்து உண்டுவிடுகிறதாம். இது கொஞ்சம் கொஞ்சமாகத் தின்பது அல்ல. அப்படியே விழுங்கிவிடுவது. இதனையே வேறுவிதமாக இன்னொரு புலவர் கூறுகிறார்.

அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் – அகம் 395/7

தலைக்குக் குளித்த பெண்கள், கூந்தலை நன்கு துவட்டிய பின், கூந்தலுக்குச் சாம்பிராணிப்புகை காட்டுவார்கள். இருக்கிற கொஞ்சநஞ்ச ஈரமும் போய், கூந்தலும் மணம் பெறும். கூந்தலுக்கு மணம் ஊட்டுதல் என்றும் இதனைச் சொல்வார்கள். நாம் குழந்தைக்குச் சோறு ஊட்டும்போது, குழந்தை சோறு உண்கிறது அல்லவா! அதைப்போலக் கூந்தலுக்குப் புகை ஊட்டும்போது, கூந்தல் அந்தப் புகையை உண்ணுகிறதாம். அகில் என்பது உயரமான மலையில் வளரும் ஒருவகை வாசனை மரம். அதன் கட்டையைக் காயவைத்துத் துண்டுகளாக்கிப் புகை போட்டு பெண்கள் தங்கள் தலைக்கு ஏற்றிக்கொள்வர். அது விலையுயர்ந்தது. சாதாரண மக்கள் பயன்படுத்தமுடியாதது. பயன்படுத்தினாலும் ஏதோ கொஞ்சம் வாசனைக்குப் போட்டுக்கொள்வர். ஆனால் செல்வர் வீட்டு மகளிரோ, அப் புகையை வேண்டுமளவு ஏற்றிக்கொள்கிறார்களாம். அதாவது, அவர்களின் கூந்தல் அந்தப் புகையை வேண்டுமளவுக்கு உள்வாங்கிக்கொள்கிறதாம். சிறுபாணாற்றுப்படைப் புலவர் கூறுகிறார்:

அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் – சிறு 263

பொருளீட்டத் தலைவன் வேறூர் செல்ல எண்ணுகிறான். அவன் பிரிவைத் தாங்க இயலாதென்று தலைவி முதலில் மறுக்கிறாள். பொருள் ஈட்டவேண்டியதன் கட்டாயத்தை அவளுக்கு எடுத்துக்கூறுகிறான். அவள் மனம் சிறிதே அதனை ஏற்றாலும் அவள் முழுதும் உடன்படவில்லை. வருகிற கார்காலத்து மலர்கள் பூக்கும் பருவத்திற்குள் கட்டாயம் வந்துவிடுவதாக உறுதியளிக்கிறான். இறுதியில் அவள் நெஞ்சு அவன் கூறுவதை ஏற்றுக்கொள்கிறது.

அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல்போது
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி – நற்றிணை 214: 4-6

அவன் கூற்றைத் தலைவியின் நெஞ்சு முழுவதுமாக ஏற்று உள்வாங்கிக்கொள்கிறதாம். இதுவும் ஒருவகை உண்ணுதல்தானே!

பழுத்த இரும்பைச் சிறிதளவு நீரில் இட்டால் ‘சுர்’-என்று நீர் ஆவியாகி மறையும். இப்படி மறைகின்ற நீரை அந்த இரும்பு உண்கிறதாம்.

இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/8

என்கிறது ஒரு புறப்பாடல். இதுவரை உயிரற்ற பொருள்கள் தின்பதையும் உண்பதையும் பார்த்தோம்.

அடுத்து, மனிதர் அற்ற வேறு உயிரினங்கள் தின்பதைப் பற்றிப் பார்ப்போம்.

1. இ. (மனிதர் அல்லாத வேறு) உயிரினங்கள் பொருள்கள் தின்னல்

உயிரினங்கள் ஒரு திடப்பொருளைக் கடித்துக் கடித்து மென்று விழுங்குவதுவே தின்னுதல். தன் குட்டியையே கடித்து மென்று விழுங்குமாம் முதலை.

பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர் – ஐங் 24/2
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு – ஐங் 41/1

வயலைக்கொடியைக் கண்ட ஒரு பசு அதைக் கடித்து இழுக்கிறது. பின்னர் வாயினின்றும் தொங்கிக்கொண்டிருக்கும் இலையுடன் கூடிய கொடியைக் கடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிழுத்து, மென்று மென்று விழுங்குகிறது.

இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1

மூங்கிலை ஒடித்த யானை அதனை அப்படியே விழுங்கிவிடாது. மென்றுதானே உட்கொள்ளமுடியும்.

கழை தின் யானை கால் அகப்பட்ட – புறம் 73/9

இப்பொழுது இதுபோன்ற உயிரினங்கள் எதனை உண்ணும் என்று பார்ப்போம்.

1. ஈ. உயிரினங்கள் பொருள்கள் உண்ணல்

மனிதர்கள் நெல்லிக்காயைக் கடித்துக் கடித்துத் தின்கிறோம். ஆனால் புறா அதனைக் குடைந்து குடைந்து உண்கிறதாம். கொக்கு மீனைக் கொத்தி ஒரே ‘லபக்’.

புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி – அகம் 315/10
மீன் உண் குருகு_இனம் கானல் அல்கும் – ஐங் 184/2

காயைக் கடித்துத் தின்னலாம். பழத்தை? அந்த அளவுக்குக் கடிக்கத் தேவையில்லை. சில கடிகள் போதும். பின்னர் சுவைத்து உண்ணலாம். குமிழம் பழத்தை அவ்வாறு சுவைத்து உண்கிறதாம் வெள்ளாடு.

குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த – புறம் 324/9
புறாக்கள் குடைந்து உண்ணும் நெல்லிக்காயை மனிதர்கள் கடித்துத் தின்கிறார்கள்.
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று – நற் 271/6
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க – குறு 262/4

அடுத்து, விலங்குகளுக்கு மேல், மனிதருக்கும் கீழ் உள்ள உயிரினங்கள் எதனைத் தின்னும், எதனை உண்ணும் எனப் பார்ப்போம். அது எந்த வகை உயிரினம்? பாருங்கள்.

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 56
பிணம் தின் யாக்கை பேய்மகள் துவன்றவும் – பட் 260

இவ்வாறு பிணத்தையும், பிணத்திலுள்ள நிணத்தையும் தின்கின்ற பேய்கள்,, சில நேரங்களில் நிணத்தை அப்படியே அள்ளி அள்ளி வாய்க்குள் அப்பிக்கொள்கின்றனவாம்.

கருமறிக் காதின் கவை அடிப் பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல – சிறு 197,198

எனவே, உண்ணுதலுக்கும், தின்னுதலுக்கும் உள்ள வேற்றுமை தெரியும்போது, இந்த இரு பாடல் வரிகளில் புலவர் சொல்ல வந்ததன் உண்மைப் பொருளை உணர்ந்து மகிழலாம்.

1. உ. மனிதர் பொருள்கள் தின்னலும் உண்ணலும்

அடுத்து மக்கள் வாழ்வில் இந்த உண்ணலும் தின்னலும் எவ்வாறு அமைந்திருந்தன எனப் பார்ப்போம்.

மக்களில் உயர்வு தாழ்வு சங்க காலத்தில் இருந்ததில்லை என்பதே பெரும்பாலான அறிஞர் கருத்து. ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையில் வேறுபாடுகள் இருந்தன. காடுகளில் விலங்குகளையும், மனிதர்களையும் வேட்டையாடிக் கொள்ளை கொண்டு வாழ்ந்து வந்த மனிதர் கூட்டத்தின் வாழ்க்கை முறைக்கும், நாட்டில் உழுது பயிரிட்டு வேளாண் அறநெறி வாழ்ந்த மாந்தரின் வாழ்க்கை முறைக்கும் பெருத்த வேறுபாடு இருந்தது. மேலும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ற வகையிலும் அவர்கள் உண்ணும் முறைகளும் உணவுப் பழக்கங்களும் வேறுபட்டு இருந்தன.

ஒரு சிறு குழந்தையிடம் ஒரு முறுக்கைக் கொடுத்தால் அப்படியே வாயில்போட்டுக் கடிக்கும். பெரும்பாலான குழந்தைகள் அதனை வாயை விட்டு எடுக்காமல் ‘நறுக் நறுக்’-என்று கடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மென்று விழுங்கிவிடும். இது முறுக்கைத் தின்னுதல்.

ஒரு பெரியவரிடம் ஒரு முறுக்கைக் கொடுத்தால், பெரும்பாலானவர்கள் முதலில் அதினின்றும் ஒரு சிறு துண்டை ஒடிப்பார்கள். அந்தத் துண்டைத்தான் வாயில் முழுதுமாகப் போட்டு மென்று விழுங்குவார்கள். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து ஒவ்வொரு துண்டாக மென்று விழுங்குவார்கள். இது முறுக்கை உண்ணுதல்.

ஒரு வயலில் கதிர் அறுத்துச் சூடடிக்கிறார்கள். அப்போது கதிர்களோடு சேர்த்து அறுத்து வந்த ஆம்பல் மலர்களைத் தூக்கி எறிகிறார்கள். அவ்வாறு அறியப்பட்ட அந்தப் புதிய பூக்களை கன்றுடன் இருக்கும் ஒரு தாய்ப்பசு தின்கிறது. அப் பசு தின்றுவிட்டுப்போட்ட மிச்சத்தை, அங்குச் சூடடித்து ஓய்வுக்காகக் கழற்றிவிடப்பட்டிருந்த காளை ஆசையுடன் தின்கிறதாம்.

வயல் வெள்ளாம்பல் சூடு தரு புதுப்பூக்
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில்
ஓய்விடு நடைப்பகடு ஆரும் – நற் 290/1-3

இப்போது இன்னொரு காட்சி. விருந்தோம்பல் பண்பு மிக்க ஒரு தலைவனும் தலைவியும் வீட்டில் நிறையச் சோறு ஆக்கி, இறைச்சியோடு சேர்த்து, விருந்தினருக்கெல்லாம் படைத்து, பின்னர் மீந்துபோனதை உண்கிறார்களாம்.

சாறு அயர்ந்தன்ன மிடாச் சொன்றி
———————- ————————–
மலர்த் திறந்த வாயில் பலர் உண
பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
———————————–
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னொடு உண்டலும் புரைவது – குறிஞ் 201-207

முன்னது புனிற்று ஆ தின்ற மிச்சில். பின்னது விருந்து உண்டு எஞ்சிய மிச்சில். தின்ற மிச்சிலுக்கும், உண்ட மிச்சிலுக்கும் வேறுபாடு என்ன? தின்ற மிச்சில் என்பது எச்சில். அதையும் பகடு தின்னும் என்பது இகழ்வுக்குறிப்பு. உண்ட மிச்சில் என்பது அப்படியல்ல. அது மீந்துபோனது.

முறுக்கின் எடுத்துக்காட்டில், முறுக்குத் தின்னும்போது குழந்தையின் கையில் மீந்து இருப்பது எச்சில். பெரியவரின் (அடுத்த) கையில் மீந்து இருப்பதை வேறு யாரும் வாங்கியுண்ணலாம். அது இகழ்வு அல்ல.

ஒரு பொருளை, அதன் முழுப்பகுதியிலிருந்து ஒரு சிறு பகுதியைப் பிரித்தெடுத்து, அந்த முழுப்பகுதிக்கு அழிவு வராமல், அப்படிச் சிறு சிறுபகுதிகளாக உட்கொள்ளுதல் என்பதுதான் உண்ணுதல். மீந்திருக்கும் முழுப்பகுதியை வேறு யாரும் அருவருப்பின்றி உண்ணலாம்.

இவ்வாறு உண்ணுதல் திடப்பொருளுக்கு மட்டுமன்றித் திரவப்பொருளுக்கும் ஆகிவரும். ஊர் முழுதும் உண்ணும் நீரையுடைய குளம்தானே ஊருணி.

ஊர் உண் கேணி உண்துறை தொக்க – குறு 399/1
அரிது உண் கூவல் அம் குடி சீறூர் – புறம் 306/2
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப – புறம் 364/6
அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி – குறு 201/1
உண்மின் கள்ளே அடுமின் சோறே – பதி 18/1

ஆக, உண்ணுதலின் முழுப்பொருள் பலவகைகளில் வெளிப்படுவதைக் காணலாம். இன்றைக்குப் பிரியாணி என்று நாம் சொல்லும் ஊன்சோற்றில், சோற்றை நாம் உண்கிறோம், இறைச்சியைத் தின்கிறோம்.

சங்க இலக்கியங்களில் மனிதர்கள் தின்பதாக வருமிடங்களில் பெரும்பாலும் இறைச்சியே கூறப்படுகிறது.

எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி – பொரு 118

விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் – அகம் 89/10

விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க – அகம் 265/15

விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர் – புறம் 359/5

கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் – அகம் 129/12

நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற
புலவு களம் துழைஇய துகள் வாய் கோடை – அகம் 249/13,14

புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய் – புறம் 324/2

அழித்து ஆன கொழும் திற்றி
இழித்து ஆனா பல சொன்றி
உண்டு ஆனாக் கூர் நறவின்
தின்று ஆனா இன வைகல் – மதுரைக்காஞ்சி 211-214

இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை
————————————– ————————— ———————————–
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின் – புறம் 150/9-13

இருப்பினும் சில இடங்களில் இறைச்சி உண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப்
புலவுப் புழுக்கு உண்ட வான்கண் அகலறை – அகம் 309/5,6
கடல் இறவின் சூடு தின்றும்
வயல் ஆமை புழுக்கு உண்டும் – பட் 63,64

அவ்வாறு வருமிடங்களில் இறைச்சியின் புழுக்கை உண்டதாகக் கூறப்பட்டுள்ளது. புழுக்கு என்பது புழுங்க வெந்த உணவு. அது பெரும்பாலும் சிறிய துண்டங்களாகவும் குழைய வெந்ததாகவுமே இருக்கும். அதனைத் தின்பது என்பதைக் காட்டிலும் உண்பது என்பதுவே பொருத்தமானதாகும்.

ஒரே நேரத்தில் உண்ணலும் தின்னலும் நடைபெறலாம்.

உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது
———————– ——————— —————–
எஃகுறச் சிவந்த ஊனத்து யாவரும்
கண்டு மதிமருளும் வாடாச் சொன்றி – பதி 24/18

விழுக்கொடு விரைஇய வெள் நிணச் சுவையினள்
குடர் தலை மாலை சூடி உணத் தின
ஆனாப் பெருவளம் – புறம் 371/23-25

உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் – புறம் 166/30
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
காயம் கனிந்த கண் அகன் கொழுங்குறை
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும் – புறம் 364/4-7

என்னும் அடிகள் பொதுவாக இறைச்சியுணவின்போது உண்ணலும் தின்னலும் உண்டு என்பதைத் தெரிவிக்கின்றன.