தீம்பால்
மாலைநேரம். பொழுதுசாய இன்னும் சில நாழிகைகளே இருந்தன, இருப்பினும் வெயில் காலமாதலால் இன்னும் வெயில் சற்று ஓங்கி அடிக்கத்தான் செய்தது. வெளியில் சென்றிருந்த முல்லையின் அப்பா இன்னும் வீடு திரும்பவில்ல. முல்லை நடையில் ஒரு தூணில் சாய்ந்தவண்ணம் ஒரு காலை நீட்டியும் ஒரு காலை மடக்கியும் வைத்து, உயர்த்தி மடக்கிய காலில் கைகள் இரண்டையும் சேர்த்து வைத்து அதன் மேல் தலையைச் சாய்த்தவண்ணம் உட்கார்ந்திருந்தாள். அப்போது அங்கே அவளின் தாய் வந்தாள்.
“என்னம்மா முல்லை, பொழுது சாயுற நேரத்தில முகத்த-இகத்தக் கழுவி, தலையைச் சீவி, கொஞ்சம் பூவ வச்சுக்கிட்டு சிரிச்ச மொகமா அங்க இங்க நடமாடிக்கிட்டு இருந்தா என்ன? ஒரு கொமரிப் பொண்ணு இப்படியா ஒக்காந்திருப்பாக” என்று கொஞ்சம் கனிவாகவும் கொஞ்சம் கண்டிப்பாகவும் முல்லையின் தாய் கூறினாள்.
“பூவெல்லாம் தீந்துபோச்சு, வீட்லயும் பூக்கல”
“ஏன், பொன்னிய வரச்சொல்லி நந்தவனத்துக்குப் போயி கெடய்க்குறதப் பிடுங்கிக்கிட்டு வரலாம்’ல”
முல்லை ஒரு பெருமூச்சு விட்டாள்.
“ம்ச்சு, அங்கெல்லாம் போய்ட்டு வர நேரமில்ல”
“என்னம்மா, நானும் கொஞ்ச நாளாப் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். ஏதோ முனி பிடிச்சவ கெணக்கா சுரத்தில்லாமத் திரியறவ”
“ந்தா பாரு, முனி கினி’ன்னு பேசிக்கிட்டு இருந்தாக் கெட்ட கோவம் வரும் எனக்கு. இப்ப என்னத்தக் கண்டுபிட்ட எங்கிட்ட?”
“அடியாத்தே, என்னாம்மா ஒனக்கு இப்படிக் கோவம் வருது. அம்மான்’னுகூடப் பாக்காம எரிஞ்சு எரிஞ்சு விழுகிறவ. முனிதான் பிடிச்சுருக்கு, அப்பா வந்தப்புறம் பூசாரிக்குச் சொல்லிவிடணும். அவரு வந்து வேப்பிலயில நாலு தட்டுத் தட்டுனா எல்லாஞ் சரியாப்போயிரும்”
அப்போது வாசல் பக்கம் சத்தம் கேட்டது. யாரோ கூப்பிட்டார்கள்.
முல்லையை விட்டுவிட்டு வாசல் பக்கம் வந்த அம்மா, அங்கே பொன்னி நிற்பதைப் பார்த்தாள்.
“வாம்மா பொன்னீ, சரியான நேரத்துலதான் வந்திருக்க” என்று ஆரம்பித்தவள் பொன்னியின் கையைப் பார்த்தாள்.
“என்னாது கையில சொம்போட வந்திருக்கவ? சொம்புல என்னா’ருக்கு?” என்று வினவினாள்.
“சீம்பாலு’ம்மா, வீட்டுல பசுமாடு நேத்துக் காலயில ஈனுச்சு, கெடரிக்கன்னு’ம்மா. அதான் சீம்பாலு கொண்டாந்திருக்கேன்” என்றாள் பொன்னி.
“சீம்பாலா, முல்லை அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படி தூணு ஓரத்தில வையி. முத்தம்மாகிட்டச் சொல்லிக் காய்ச்சச் சொல்லலாம்”
உள் நடையில் ஒரு தூண் மறைவில் தன் செம்பை வைத்த பொன்னி, எதிர்ப்பக்கம் இருந்த முல்லையைக் கவனித்தாள்.
“அம்மா, செத்த முல்லையிட்ட பேசிட்டு வர்ரேன்” என்று சொல்லிவிட்டு, முல்லையை நோக்கி நடந்தாள் பொன்னி.
“என்னடீ, இப்படி ஒக்காந்திருக்க?” என்று அருகில் சென்ற பொன்னி, திரும்பிப் பார்த்த முல்லையைக் கண்டு திடுக்கிட்டாள்.
முல்லையின் ‘பளபள’-வென்ற கன்னங்கள் ஒளிமங்கிப்போய் சப்பிப்போய்க் கிடந்தன. பூப்போல் எப்போதும் மலர்ந்திருக்கும் கண்கள் சற்றுக் குழிவிழுந்துபோய் இருந்தன. ஒளிபொருந்திய நெற்றி சீவாமல் கலைந்து விழுந்து கிடந்த கூந்தலினால் களையிழந்துபோய் இருந்தது.
“ஏண்டீ, பத்துநாளா இந்தப் பக்கம் வராமப் போயிட்டேன். இப்படி ஆளே உருக்கொலஞ்சுபோயி இருக்கயீடீ” என்று பதறினாள்.
“ஒங்க வீட்ல ஒண்ணும் சொல்லலியா ஒன்னயப் பாத்துட்டு” என்றும் விசாரித்தாள் பொன்னி.
“முனி பிடிச்சுருக்காம், சாமியாடியக் கூட்டிக்கிட்டு வந்து மந்திரிக்கப் போறாங்களாம், அவங்களுக்கெங்க நெசமான காரணம் தெரியப்போகுது” விரக்தியாகச் சிரித்தாள் முல்லை.
பொன்னிக்குப் புரிந்தது. “ஏண்டீ, அண்ணங்கிட்ட’ருந்து சேதி ஏதாவது வந்துச்சா?”
“இல்லடீ, அவரு போயி ஆறு மாசம் ஆச்சு. கல்யாணத்துக்குக் காசு சேத்துக்கிட்டு வர்ரேன்’னு சொல்லிப்போன மனுசங்கிட்டயிருந்து ஒரு சேதியும் தெரியலிடி”
“இப்படி எளச்சுத் துரும்பாப் போயிட்டேயடி” என்று பொன்னி சொல்லிக்கொண்டிருந்தபோது வாசல் பக்கம் கலீர் என்ற பெருஞ்சத்தம் கேட்டது. சலிங் என்ற சத்தத்தோடு பொன்னி கொண்டுவந்திருந்த செம்பு முற்றத்தில் பாவியிருந்த கற்களில் உருண்டோடியது. செம்பிலிருந்து சிதறி விழுந்த பால் செம்பு உருண்ட வழியெல்லாம் கோடுபோட்டவண்ணம் சிந்திக்கொண்டே சென்றது.
ஓடிச் சென்ற பொன்னி செம்பைத் தூக்கியெடுத்தாள். செம்பின் தூரில் கொஞ்சம் பால் ஒட்டிக்கொண்டிருந்தது. அவ்வளவுதான்.
முல்லையின் தாயும், முத்தம்மாவும் பதறிக்கொண்டு வந்தார்கள்.
“என்ன ஆச்சு, சொம்ப யாரு தட்டிவிட்டா?” முல்லையின் தாய் முத்தம்மாவைப் பார்த்துக் கேட்டாள்.
“நாந்தாம்மா. தூணுக்குப் பக்கத்துல சொம்பு இருந்தத நாம் பார்க்கல. சீல முந்தானிய ஒதறும்போது இழுத்துவிட்டுருச்சு போல.
அம்புட்டுப் பாலும் போச்சே” என்று அரற்றினாள் முத்தம்மாள்.
“போனாப்போகட்டும். நாளக்கிக் காலயில வேற பாலு கொண்டாரேன்” என்று பொன்னி சமாதானப்படுத்தினாள்.
“தூணுப்பக்கத்துல அத்தனத்தண்டி சொம்பு இருக்கிறது கண்ணுக்குத் தெரியல, கண்ண என்ன பொடரியிலயா கொண்டுபோயி வச்சுருக்க” என்று கோபித்துக்கொண்ட முல்லையின் தாய், “அந்தச் சொம்ப வாங்கிக் கழுவிக்குடு. எடத்தையும் நல்லாக் கழுவிவிடு” என்று முத்தம்மாவுக்கு ஆணையிட்டபடி வாசல்பக்கம் சென்றாள். முத்தம்மா வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
முல்லையின் அருகில் வந்த பொன்னி, விட்ட இடத்தைப் பிடித்துத் தொடர நினைக்கும்போது முல்லை தனக்குள் சிரித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
சற்றுத் தணிந்த குரலில் பொன்னி பேசினாள்.
“கொண்டுவந்த அம்புட்டுப் பாலும் சிந்திப்போச்சு, நீ என்னடி சிரிச்சுகிட்ட இருக்க?” புரியாமல் வினவினாள் பொன்னி.
இழுத்து ஒரு பெருமூச்சுவிட்டாள் முல்லை.
“இப்ப என் நிலையும் இப்படித்தாண்டி சிந்திச் சீரழிஞ்சுக்கிட்டு இருக்கு. பேசாம அந்தக் கன்னுக்குட்டியாவது குடிச்சிருக்கும். இல்ல, காச்சிந்தந்தா யாராவது குடிக்கவாவது செஞ்சிருப்பாக. இப்படித் தரையில சிந்திக்கெடக்குற பாலப் பாத்தேன். எனக்கு என் நெனப்புத்தான் வந்துச்சு”
“ஏண்டீ சிந்துன பாலும் நீயும் ஒண்ணா?” என்றாள் பொன்னி.
“ஆமாண்டீ, எம் மேனியழக எப்படி நீ மெச்சுவ! நானும் எப்படியெல்லாம் சீவிச் சிங்காரிச்சுக்கிட்டு இருப்பேன். இப்ப எங்க போச்சு அதெல்லாம்? அவருதான் என்னப்பாத்து எப்படியெல்லாம் கொஞ்சுவாரு. மொகத்தத் திருப்பித் திருப்பிப் பாப்பாருடீ, முன்னழகயும், பின்னழகயும் அப்படி மெச்சுப்போவாரு! இப்ப என்னன்னா, எனக்கும் ஆகாம, அவருக்கும் இல்லாம, இந்த பாழாப்போன ஏக்கநோயில்ல எல்லாத்தயும் தின்னுகிட்டு இருக்கு. இப்பச் சொல்லுடீ, கன்னுக்குட்டிக்கும் இல்லாம, காச்சியும் குடிக்காமத் தரையில சிந்திப்போன பாலு கணக்க நான் இல்லையா?”
பாடல் : குறுந்தொகை 27 – ஆசிரியர் : வெள்ளி வீதியார் – திணை : பாலை
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே
அருஞ்சொற்பொரூள்
கலம் = பாத்திரம்; ஆன் = பசு; உக்காங்கு – சிந்தியதைப் போல்; ஐ = தலைவன்; பசலை = பிரிவு ஏக்கத்தால் வரும் நோய் – Love sickness; உணீஇயர் = உண்ண; திதலை = அழகுத்தேமல்; அல்குல் = பின்பக்கம்; மாமை = மாந்தளிர்; கவின் = அழகு.
அடிநேர் உரை
கன்றும் உண்ணாமல், பாத்திரத்திலும் வீழாமல்
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்
எனக்கும் பயன்படாமல், என் தலைவனுக்கும் இன்பம் செய்யாமல்,
பசலைநோய் உண்பதை விரும்பும்
தேமல் படர்ந்த என் அழகிய பின்புறத்தின் மாந்தளிர் போன்ற அழகு.
Like the sweet milk of a fine cow is spilled on the floor
Without it being fed to the calf or being poured on a vessel – T
he brown beauty of my rising waist with the lovely yellow spots
Is neither good to me, nor is it useful to my chief,
And is gulped by my love-sickness.