கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா
மாக்கள்
மாகதர்
மாகம்
மாங்காடு
மாங்குடி
மாங்குடிமருதன்
மாசு
மாசுணம்
மாட்சி
மாட்டு
மாட்டுமாட்டு
மாட்டை
மாடம்
மாடோர்
மாண்
மாண்பு
மாணாக்கன்
மாணை
மாத்திரம்
மாத்திரை
மாதர்
மாதரார்
மாதராள்
மாதவர்
மாதிரம்
மாது
மாதுளம்
மாதோ
மாந்தர்
மாந்தரஞ்சேரல்
மாந்தரம்
மாந்தரன்
மாந்தி
மாந்தீர்
மாந்து
மாந்தை
மாமை
மாய்
மாயம்
மாயவள்
மாயவன்
மாயோய்
மாயோள்
மாயோன்
மார்க்கம்
மார்பம்
மார்பினை
மார்பு
மார்வம்
மாரன்
மாரி
மால்
மால்பு
மாலிருங்குன்றம்
மாலை
மாவன்
மாவிலங்கை
மாழ்கு
மாழா
மாழை
மாள
மாற்கு
மாற்றம்
மாற்றல்
மாற்றலர்
மாற்றார்
மாற்றாள்
மாற்று
மாற்றுமை
மாற்றோர்
மாறன்
மாறு
மாறுகொள்
மாறுபடு
மாறுமாறு
மான்
மான்மதசாந்து
மான்ற
மான்றமை
மான்றன்று
மான்றால்
மான்று
மான
மானும்
மா
1. (பெ.அ) 1. பெரிய, large, extensive
2. கரிய, dark
3. அழகிய, beautiful
4. சிறந்த, fine, cexcellent
– 2. (பெ) 1. மாமரம், mango tree
2. நில அளவை – நூறு குழி, a land measure equal toone third of an acre
3. குதிரை, horse
4. விலங்கு, animal, beast
5. இலக்குமி, திருமகள், Lakshmi
6. அரிசி, கிழங்கு போன்றவற்றின் மாவு, பொடி, flour, powder
7. மாமை நிறம், மாந்தளிர் போன்ற நிறம், colour as that of a tender mango leaf
8. மான், deer
9. வண்டு, bee
1.1
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
பெரும் இருள் (சூழ்ந்த)உலகம் குற்றமில்லாததாய் விளங்க
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்
1.2
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7
கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்ட கரிய மேகங்கள்,
மா முக முசு கலை பனிப்ப – திரு 303
கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க
1.3
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203
சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகிய தழையை
1.4
மாரி ஈங்கை மா தளிர் அன்ன
அம் மா மேனி ஆய் இழை மகளிர் – அகம் 206/7,8
மாரிக் காலத்து ஈங்கைச் செடியில் தோன்றும் சிறந்த தளிரினை ஒத்த
அழகிய மாமை நிறத்தினையுடைய மேனியினையும் ஆய்ந்த அணியினையும் உடைய மகளிரது
(ந.மு.வே.நாட்டார் உரை)
2.1
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்
2.2
மா_மாவின் வயின்_வயின் நெல் – பொரு 180
ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின்
2.3
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள்
வாண் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 259,260
குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும்,
ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து
2.4
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் – பெரும் 497
மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முற்றத்தில்
2.5
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 2
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
மா மறுத்த மலர் மார்பின் – புறம் 7/5
திருமகள் பிறர் மார்பை மறுத்தற்கேதுவாகிய பரந்த மார்பினையும்
2.6
மா இருந்து
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழிதொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 126-128
(முற்றி)மாவாகும் தன்மை பெற்று,
வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும்,
சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு;
2.7
செயலை அம் தளிர் அன்ன என்
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே – நற் 244/10,11
அசோகமரத்தின் அழகிய தளிரைப் போன்ற என்
வலிமை அற்ற மாமைநிறங்கொண்ட மேனியில் பசலை நோயையும் பார்த்துவிட்டு
நறும் தண்ணியளே நன் மா மேனி – குறு 168/4
மணமும் குளிர்ச்சியுமுள்ளவள் நல்ல மாமைநிறமுள்ள மேனியுள்ள தலைவி
2.8
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
மானின் பார்வையை ஒத்த மருண்ட பார்வையையும் கொண்டு, மயில் போன்ற சாயலில் நடமாடி,
2.9
மனை இள நொச்சி மௌவல் வால் முகை
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் – அகம் 21/1,2
இளமையான, வீட்டு நொச்சிச் செடியில் (படர்ந்த) காட்டுமுல்லையின் வெள்ளிய மொட்டுகளை
இரண்டிரண்டாய் வரிசையாக வைத்ததைப் போன்ற, வண்டுகள் விரும்பும் வெள்ளைப் பற்கள்
மா என்ற சொல் பொதுவாக எந்தவொரு விலங்கையும் குறிக்குமாதலால், இதனுடன் பல அடைமொழிகளைச்
சேர்த்து அந்தந்த விலங்குகளைக் குறிப்பிட்டனர்.
அ. கடுமா – குதிரை,
கடு மா பூண்ட நெடும் தேர் – நற் 91/11
ஆ. கலிமா – குதிரை
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா – நற் 121/8
இ. பரிமா – குதிரை
பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/2
ஈ. வயமா – குதிரை
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18
உ. கயமா – யானை
கய_மா பேணி கலவாது ஊரவும் – பரி 20/19
ஊ.கைம்மா – யானை
இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் – கலி 23/1
எ. மதமா – யானை
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி – பரி 10/49
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18
ஏ. கோட்டுமா – காட்டுப்பன்றி, யானை
கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சி – நற் 75/6
கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/5
ஐ. முளவுமா – முள்ளம்பன்றி
முளவு_மா தொலைச்சிய பைம் நிண பிளவை – மலை 176
ஒ. கோள்மா – சிங்கம், புலி
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி – புறம் 58/30
ஓ. மடல்மா – காதலியின் கவனத்தைக் கவர்வதற்காக இளைஞர் ஊர்ந்து வரும் பனை மடலால் செய்த குதிரை
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி – நற் 377/1
மாக்கள்
(பெ) 1. மனிதர், men, people, human beings
2. சிறுவர், குழந்தைகள், children
1
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும் – குறு 207/3,4
தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிந்த அழைப்பொலி
அவ்வழியில் செல்லும் மக்களுக்கு வழித்துணையாகும்
2
குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் – நற் 95/6
குறவர்களின் இளஞ்சிறுவர்கள் தாளம் கொட்டும்
மாகதர்
(பெ) அமர்ந்த நிலையில் அரசனின் புகழ் பாடுவோர், Professional ministrels who assuming a
sitting posture in the presence of sovereigns sing their praises and exploits,
சூதர் வாழ்த்த மாகதர் நுவல – மது 670
நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல
மாகம்
(பெ) 1. திசைகள், directions
2. நிலத்திற்கும், விசும்புக்கும் இடையிலுள்ள வெளியிடம், the space between earth and the
upper space.
1,2
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பல் நாள் – பதி 88/37,38
திசைகளெல்லாம் ஒளியால் விளங்க கரிய வானத்தில் உயரே எழுகின்ற
ஞாயிற்றைப் போல சிறப்புடன் வாழ்வாயாக, பல நாட்கள்;
மாகம் – திசை, இனி, நிலத்துக்கும் விசும்புக்கும் இடையிலுள்ள வெளியிடமென்றுமாம் – ஔவை.சு.துரை. உரை
இந்த மாகம் என்ற சொல் விசும்பு என்ற சொல்லுடனேயே பயின்று வருகிறது.
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய – மது 454
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/50
மழை கால் நீங்கிய மாக விசும்பில் – அகம் 141/6
கடல் கண்டு அன்ன மாக விசும்பின்
அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க – அகம் 162/3,4
மாக விசும்பின் மழை தொழில் உலந்து என – அகம் 317/1
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு – புறம் 35/17,18
இங்கு, மாகம் என்பது எழிலி, மழை, கொண்மூ ஆகிய மேகங்களைக் குறிக்கும் சொற்களுடனும், மின்னலுடனும்
சேர்த்துக் குறிப்பிடப்படுவதால், இச்சொல் நிலத்தை ஒட்டி இருக்கக்கூடிய வானவெளியைக்
குறிப்பதாகக் கொள்லலாம்.
அடுத்து,
மாக விசும்பின் திலகமொடு பதித்த
திங்கள் அன்ன நின் திருமுகத்து – அகம் 253/24,25
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/2
பன் மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 270/1
மாக விசும்பின் வெண் திங்கள் – புறம் 400/1
என்ற அடிகளில், திங்கள், கோள்மீன், நாள்மீன் ஆகியவை உள்ள பகுதி மாக விசும்பு என்று குறிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றும் நிலவுலகிலிருந்து வெவ்வேறான தொலைவுகளில் விசும்பில் உள்ளவை என்று இன்று நாம்
அறிந்திருப்பினும், அன்றைய மக்கள் இவை அனைத்துமே விண்ணில் ஒரே தொலைவில் உள்ளனவாக
எண்ணியிருந்தனர் என்று கொள்ளமுடிகின்றது. எப்படியிருப்பினும் இவை மூன்றும் மேகங்களுக்கும் அப்பால்
வெகுதொலைவில் உள்ளனவாதலால், மேகங்களுக்கு அப்பால் உள்ள விசும்பின் பகுதியும் மாகம் என்பதைக்
குறிக்கும் எனக் கொள்ளவேண்டியுள்ளது.
மாங்காடு
(பெ) மகளிர் மட்டும் வழிபடும் ஓர் இறையிடம்.
an worship place where only ladies worship.
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்
பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும்
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து
மகளிர் மாங்காட்டு அற்றே – அகம் 288/12-15
மெல்லிய தலையினையுடைய மந்தியின் வருத்தும் பசியினை நீக்குமாறு
அதன் குட்டியினது தந்தையான கடுவன் பலாப்பழத்தின் சுளையினைத் தோண்டினும்
மிக்க துன்பம் வந்து பொருந்தும் நடுக்கம் மிக்க (தெய்வமுடைய) பக்கமலையில் உள்ள
கன்னியர் உறையும் மாங்காடு என்னும் ஊரின் காவலை ஒத்தது.
விலங்கினத்திற்குட்பட்ட குரங்கு இன்றியமையாக கடப்பாடுபற்றிப் பழச்சுளை தொட்டதாயின், ஆண்டுறையும்
தெய்வத்தால் அதற்கும் துன்பம் உண்டாகும். எனவே மகளிரே உறையும் மாங்காடு என்னும் பதி, தெய்வத்தின்
காப்பு மிக்குடையதென்பது போதரும்.- ந.மு.வே.நாட்டார் உரை
மாங்குடி
(பெ) ஒரு சங்ககால ஊர், a city in sangam period
மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/14
சங்க காலப்புலவர்களில் சிறந்தவர் மாங்குடி மருதனார் , இவரது பிறந்த ஊரான மாங்குடி, ராஜபாளையத்தில்
இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்திலிருந்து
ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கிறது.
மாங்குடி மருதனாரைச் சிறப்பிக்க மாங்குடியில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
மாங்குடிமருதன்
(பெ) ஒரு சங்ககாலப் புலவர், a poet in sangam period
மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/14
சங்க காலப்புலவர்களில் சிறந்தவர் மாங்குடி மருதனார்.
மாங்குடி மருதனார் பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர்.
பாண்டிய மன்னரான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் அரசவையில் புலவராக இருந்தவர்,
புறநானூற்றில் இவரது பெயர் ‘மாங்குடி கிழார்’ என்று உள்ளது. மதுரைக்காஞ்சி தவிர,
நற்றிணையில் இரண்டு பாடல்கள் (120, 123), குறுந்தொகையில் மூன்று பாடல்கள் (164, 173, 302),
அகநானூற்றிலே ஒரு பாட்டு (89), புறநானூற்றிலே ஆறு பாடல்கள் (24, 26, 313, 335, 372, 396) என மொத்தம் 13
பாடல்கள் இவர் பெயரில் உள்ளன.
திருவள்ளுவமாலையில் ஒரு பாடல் மாங்குடி மருதன் பெயரால் இடம் பெற்றுள்ளது.
இவர் பாடல்களில், கோதை, குட்டுவன், எவ்வி, பழையன் மாறன், மானவிறல்வேள், வாட்டாற்று எழினியாதன்,
வாணன், கோசர், மழவர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மாசு
(பெ) 1. குற்றம், fault, defect
2. தூசு, அழுக்கு, தூய்மைக்கேடு, dirt, stain
3. களங்கம், blot, blemisg, spot
1
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
குற்றமில்லாத மகளிரோடு கறை இன்றி விளங்க
2
வலம்புரி புரையும் வால் நரை முடியினர்
மாசு அற இமைக்கும் உருவினர் – திரு 127,128
வலம்புரிச்சங்கினை ஒத்த வெண்மையான நரைமுடியினை உடையவரும்,
அழுக்கு அற மின்னும் உருவினரும்
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும்
3
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157
திங்கள் ஏக்கமுறுகின்ற களங்கமற்ற அமைதியினையுடைய முகத்தினையும்
மாசுணம்
(பெ) மலைப்பாம்பு, python
துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261
விழுந்துகிடக்கும் மரத்தைப்போன்ற மலைப்பாம்பினின்றும் ஒதுங்கி
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம் – நற் 261/6
யானையை இறுக வளைத்த பெரிய சினங்கொண்ட மலைப்பாம்பு
மாட்சி
(பெ) 1. மகிமை, மாண்பு, பெருஞ்சிறப்பு, Glory, greatness, magnificence, splendour, majesty
2. அழகு, loveliness, beauty
3. இயல்பு, தன்மை, nature
1
நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நன்_நுதல் கணவ – பதி 42/3-7
நெடிய வெண்மையான ஊசி
நீண்ட பிளவினில் தைத்த தழும்பு இருக்கின்ற மார்பினைக் கொண்ட,
அம்புகள் தைத்த உடம்பினையுடையவராய்ப் போரிட வந்தவரோடு அல்லாமல்,
மற்றவரோடு தும்பை மாலை சூடிப் போரிடாமல், மேற்சொன்னவரோடு மட்டும் போர்செய்யும் மாட்சியையுடைய
அத்தகையவருக்குத் தலைவனே! நல்ல நெற்றியையுடைவளுக்குக் கணவனே!
2
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 487,488
(குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், திருமாலின் பாற்கடலில்
சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள்
3
காணுநர் கைபுடைத்து இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/26,27
காண்போர் கைகொட்டிப் பிசைந்து வருந்த
கெட்டழிந்த தன்மையுடையவாயின, பலவகையாலும் மாட்சிமையுற்றிருந்த இந் நாடுகள்
மாட்டு
1. (வி) 1. தீமூட்டு, விளக்கேற்று, make fire, light a lamp
2. (தீயினைத்)தூண்டிவிடு, kindle (a fire)
3. செருகு, insert, thrust
4. இணை, பொருத்து, fasten
5. அழி, destroy
6. கொல், kill
7. தாழிடு, bolt, latch
8. திறன்பெறு, be proficient
– 2. (இ.சொ) பால்,மீது, மேல், இடம்
1.1
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்
கரும் புகை செம் தீ மாட்டி – சிறு 155,156
மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்
கரிய புகையையுடைய சிவந்த நெருப்பை மூட்டி
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 246,247
சிறைப்பிடித்துவந்த மகளிர் நீருண்ணும் துறையில் சென்று முழுகி,
(அவர்கள்)அந்திக்காலத்தே கொளுத்தின அணையாத விளக்கினையுடைய
1.2
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 48-50
நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி
(பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட –
நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும்,
1.3
திண் திமில்
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர்
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன்
கோள் சுறா கிழித்த கொடு முடி நெடு வலை – அகம் 340/18-21
வலிமை பொருந்திய படகுகளுடன்
பகற்பொழுதில் கடலிலே மீன்வேட்டைக்குச் சென்ற வலிய செயலையுடைய மீன்பிடிப்போர் எறிந்த
கூர்மையான உளி கடிய விசையுடன் செருகிக்கொண்டதால், ஒருங்கே பாய்ந்து
கொலைத்தொழிலையுடைய சுறாமீன்கள் கிழித்த வளைந்த முடிகளைக் கொண்ட நீண்ட வலைகள்
1.4
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி
முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 112-115
பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,
குவிந்த இடத்தையுடைய வேலியில் (ஒன்றோடொன்று)பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி,
முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும்
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி
புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் – மலை 193,194
விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால், (அப்)பன்றிகளுக்குப்
பயந்து,
(அவை நுழையும்)ஒடுங்கிய வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார்
1.5
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ
படு நீர் புணரியின் பரந்த பாடி – முல் 24-28
காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி,
வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து, காட்டிலுள்ள
இடுமுள்ளாலான மதிலைக் காவலுறும்படி வளைத்து,
ஒலிக்கின்ற கடலலை போல் பரந்த பாசறையில் –
1.6
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிர கெண்டி
நாள்_இரை கவர மாட்டி தன்
பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/8-12
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில்
புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி
அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று
தன் பெடையை நோக்குகின்ற பெருமை வாய்ந்த நிலையினை
1.7
காவல் செறிய மாட்டி ஆய் தொடி
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே – நற் 320/8-10
வீட்டுக்கதவுகளை இறுக்கத் தாழிட்டு, அழகிய வளையணிந்த
எழில் மிக்க மாந்தளிர் மேனியையுடைய மகளிர்
தப்பித்தனர் தமது கணவன்மாரைக் காத்துக்கொண்டு
1.8
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி
என் வாய் நின் மொழி மாட்டேன் – நற் 342/1-3
குதிரை எனக் கருதிப் பனைமடலால் செய்த குதிரையில் ஏறி வருவாரைப் போலவும்
கோட்டை மதில் எனக் கருதி பேய்த்தேரைத் தாக்கி மோதுவதைப் போலவும் என்னிடம் வருதலால்,
என் வாயால் நீ கூறவேண்டியதைக் கூற வல்லேனல்லேன்
2
நின்_மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது – பதி 89/13,14
நின்பால்
அன்புகொண்டு அடங்கிய நெஞ்சம் குற்றப்படுதலை அறியாமல்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்_மாட்டு
இவளும் இனையள் ஆயின் – அகம் 2/12,13
கட்டுப்படுத்த எண்ணியும் அடங்காத நெஞ்சமுடன், உன்னிடம்
இவளும் இத்துணை காதல் கொண்டவளாயின்,
மாட்டுமாட்டு
(பெ) ஆங்காங்கு, இடந்தோறும், every place
மாட்டுமாட்டு ஓடி மகளிர் தர_தர
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்
பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் – கலி 98/4-7
அங்கேயும் இங்கேயும் ஓடிச் சென்று மங்கையரைக் கொண்டுவந்துகொண்டேயிருக்க,
எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் உன் திண்ணிய தேர் ஓடுகின்ற தெருக்களிலெல்லாம்
உன்னைப் பற்றிய பேச்சுத்தான் எழுவதற்குக் காரணமான உன் மாய்மாலப் பரத்தைத்தன்மையைக்
காட்டுவதற்காக வந்திருக்கிறதைக் கையும்மெய்யுமாகப் பிடித்துவிட்டேன்!
மாட்டை
(பெ) பங்கு, உரிய பகுதி, share
பருகீத்தை
தண்டுவென் ஞாயர் மாட்டை பால் – கலி 85/35,36
பருகுவாயாக
வற்புறுத்திக்கேட்கிறேன், செவிலித்தாயின் பங்காக இருக்கின்ற பாலை.
மாடம்
(பெ) 1. மேல்தளங்களைக் கொண்ட வீடு, storeyed house
2. அரண்மனை போன்றவற்றின் மாடிப்பகுதி, upper storey
3. பள்ளி ஓடம், a kind of boat
4. மொட்டை மாடி, terrace
1
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71
மாடிவீடுகள் மிகுந்திருக்கும் தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில்
2
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 355,356
முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு,
வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/5,6
கரை உயர்ந்த செறிந்த மணலையுடைய அகன்ற துறைக்கண், நாவாய் ஓட்டுவான்
மாடத்தின் மீதுள்ள ஒள்ளிய விளக்கினால் இடம் அறிந்து செலுத்த
3
நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் – பரி 10/27
புதுவெள்ளத்தின் அழகைக் காண்போரும், வரிசையான நீரணி மாடங்களில் ஊர்ந்துசெல்வோரும்
4
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 348-350
விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது மாடத்தில்,
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்
மாடோர்
(பெ) மேலுலகத்தார், தேவர்கள், celestials
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/23,24
தேவர்கள் வாழும் விண்ணுலகத்திலும் கேட்கும்படியாக
இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை
மாடு – பொன். அந்தப் பொன்னுலகினையுடைய தேவரை ‘மாடோர்’ என்றார் – ஔவை.சு.துரை. உரை
மாண்
1. (வி) 1. மாட்சிமைப்பட்ட குணங்களைக்கொண்டிரு, மேன்மையடை, சிறப்புறு,
possess excellent character, become great, glorious, excellent
2. நன்கு அமையப்பெறு, be formed well, be formulated well, be established well
3. நிறை, be full, abundant
4. உயர், be lofty, great
– 2. (பெ) 1. மாட்சிமை, பெருமை, சிறப்பு, சீர்த்தி, Greatness; glory; splendour; excellence; dignity
2. தடவை, மடங்கு, அளவு, turn, times
3. அழகு, beauty
1.1
காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/2,3
காப்புடைய சகடந்தான் அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்
ஊறுபாடு இல்லையாய் வழியை இனிதாகச் செல்லும்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3
மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினர்
கடவுள் எழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஅயோளே – அகம் 62/15,16
தெய்வமாக அமைந்த கொல்லிப்பாவையினைப் போன்ற
மடப்பத்தால் சிறப்புற்ற கரியளாய தலைவி
கடும் இனத்த கொல் களிறும் கதழ் பரிய கலிமாவும்
நெடும் கொடிய நிமிர் தேரும் நெஞ்சு உடைய புகல்மறவரும் என
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/11,12
கடிய சினத்தை உடையவாகிய கொல்களிறும், விரைந்த செலவையுடையவாகிய மனம் செருக்கிய குதிரையும்
நெடிய கொடியை உடையவாகிய உயர்ந்த தேரும் நெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென
நான்கு படையும் கூட மாட்சிமைப்பட்டதாயினும், மாட்சிமைப்பட்ட
அறநெறியை முதலாக உடைத்து வேந்தரது வெற்றி
ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன்
வாய் உள்ளின் போகான் அரோ – கலி 81/19-21
ஓயாமல் அடுத்தடுத்து ‘அப்பா, அப்பா’ என்று சொல்லும் மகனை, மாட்சிமைப்பட
நம் மூங்கில்போன்ற மென்மையான தோள்களில் தூக்கி அமர்த்திக்கொண்டாலும், இவன்
வாயிலிருந்து போகமாட்டான் நம் தலைவன்?
மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ – கலி 117/1
மாட்சிமைப்பட உருக்கிய பசும்பொன்னின் நடுவே நீலமணிகளை அழுந்தப் பதித்து
1.2
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194
குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை
வினை மாண் பாவை அன்னோள் – நற் 185/11
செயல்திறன் நன்குகொண்ட கொல்லிப்பாவையைப் போன்றவள்
1.3
மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/2
இளமையுடைய பெரிய பெண்குரங்கு, வளர்ச்சி முற்றாத தன் வலிய குட்டியோடு
1.4
காணுநர் கைபுடைத்து இரங்க
மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/26,27
காண்போர் கைகொட்டிப் பிசைந்து வருந்த
தாழ்வுற்ற தன்மையுடையவாயின, பலவகையாலும் மாட்சிமையுற்றிருந்த இந் நாடுகள்
2.1
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி – நற் 81/3
மன்னர்கள் மதிக்கும் மாட்சிமையான போர்வினையில் மேம்பட்ட குதிரைகளின்
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே – அகம் 34/18
நாணம் மிக்க நம் தலைவியின் மாண்புள்ள அழகினை நுகர்வதற்கு
2.2
அம்ம வாழி தோழி பல் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் – ஐங் 115/1-3
கேட்பாயாக, தோழியே! பல தடவை
நுண்மணல் செறிந்த கரையில் நம்மோடு விளையாடிய
குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/7,8
விழுமிய கடல்சூழ்ந்த இந்த அகன்ற உலகத்தையே அளக்கும் கருவியாகக் கொண்டு
அந்த அளவில் ஏழு மடங்கு பெறுமான விழுமிய நிதியைப் பெற்றாலும்
2.3
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய் பேஎய் – நற் 73/1,2
வேனில்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற
அழகற்ற விரல்களைக் கொண்ட, வலிய வாயைக் கொண்ட பேய்,
மாண்பு
(பெ) மாட்சிமை, பெருமை, சிறப்பு, சீர்த்தி, Greatness; glory; splendour; excellence; dignity
பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான்
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே – நற் 128/1-5
பகற்பொழுதில் எரிகின்ற விளக்கின் ஒளியைப் போல் மேனியழகு மங்கித் தோன்றவும்
பாம்பு கவர்ந்த மதியைப் போள நெற்றியின் ஒளி மறைபடவும்.
எனக்கு நீ கூறினாய் இல்லை, உனக்கு யான்
ஓருயிரை இரு உடம்புகளுக்குள் பிரித்து வைத்தாற் போன்ற சிறப்புற்றவளாதலினால்
நீ மறைத்துவைத்திருப்பதை அறிந்திருக்கிறேன் நான்
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று – ஐங் 394/1,2
மாட்சிமை சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று
மாணாக்கன்
(பெ) மாணவன், படிக்கும் சீடன், pupil, student
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ – குறு 33/1,2
தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்.
தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ?
பாணன் வாயிலாகப் புக்குத் தலைவன் பெருமையைச் சொல்வன்மை புலப்படப் பாராட்டினளாதலால், அவன்
கல்வியைச் சிறப்பிக்க எண்ணி, ‘இளமாணாக்கன்’ என்றாள் – உ.வே.சா. உரை விளக்கம்
மாணை
(பெ) கட்டுக்கொடி, a creeper used for binding/bundling, Cocculus hirsutus(Linn)Diels
துறுகல் அயலது மாணை மா கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன் – குறு 36/1,2
குத்தாக நிற்கும் பாறாங்கல்லுக்குப் பக்கத்திலுள்ள மாணை என்னும் பெரிய கொடி
துயிலும் ஆண்யானையின் மேல் ஏறிப்படரும் குன்றுகளுள்ள நாட்டுக்காரத் தலைவன்
மாணை என்பது ஒருவகைக் கொடி. இக்காலத்தில் அதனைக் கட்டுக்கொடி (Cocculus hirsutus(Linn)Diels) என்பர்.
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி,
விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு.
இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர்
விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும். இது கிராமங்களில் எளிதில் கிடைக்கக்
கூடியது. இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும். நீண்டு வளர்ந்து இருக்கும். இதன் இலை நாக்கு
வடிவத்தில் காணப்படும். பனை மரம், ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும்.
வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால்
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – கம்பராமா.அயோ.வனம்புகு.36/1,2
கூட்டிய விரல் திண் கையால் குரங்குகள் இரங்க குத்தி
மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கி – கம்பராமா.யுத்.ஒற்று.26/1,2
என்ற அடிகள் மாணைக்கொடி ஒரு கட்டுக்கொடி என்பதனை உறுதிசெய்யும்.
மாத்திரம்
1. (பெ) அளவு, எல்லை, limit, extent
– 2. (இ.சொ) மட்டும், only
1
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி
மற்று அவன் மேஎ_வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24
அவன் நின்னை முயங்கும் அளவைத் தன் நெஞ்சாலே கைக்கொண்டுவிட்டான், வா என்று
கூறுவாள் போல அவனுக்கு ஒரு பொய்க்குறியைக் காட்டி
அவன் மேவின வழியிலே நெஞ்சே மேவுவாயாக என்றாள். – நச். உரை
2
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி
மற்று அவன் மேஎ_வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24
அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று
கூறுவது போல் காட்டி
பின்னர் அவன் விருப்பப்படி நடந்துகொள்வாய் நெஞ்சமே! – புலி.கேசிகன் உரை
மாத்திரை
(பெ) கால எல்லை, அளவு, measure, limit – as of time
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி
முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 139-142
சிங்கம் (ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது –
இளமை(பொங்கும்) தோள்களின் மிகுந்த வலிமையால் செருக்கி,
முலையுண்டலைக் கைவிடாத அளவிலே(யே) கடுகப் பாய்ந்து,
(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற – புறம் 376/7,8
இமைத்த கண் விழிக்கும் அளவிலே விரைவாக
கிழக்கேஎழுந்த மதியம் செறிந்திருந்த இருளை நீக்க
மாதர்
(பெ) 1. அழகு, beauty
2. காதல், love
3. பெண், பெண்கள், woman, women
1
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – நற் 166/3,4
பூக்கின்ற மலரும், மூங்கிலும் போன்ற உன்
அழகிய மையுண்ட கண்களும், வனப்புள்ள தோள்களும்
2
பயில் இதழ் மலர் உண்கண்
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று
தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ – கலி 103/60-62
நிறைந்த இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மைதீட்டிய கண்களையுடைய
காதலையுடைய மகளிரும் அவரின் கணவர்களும் விருப்பத்துடன்
சாணம் மெழுகிய மன்றத்தில் குரவைக்கூத்து ஆடுவதற்காகத் தழுவிக்கொண்டு,
3
ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய்
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் – கலி 111/14-17
யாரோ ஒருவர் கொடுத்த பூவைக் கையில் கொண்டிருக்கிறாய், மிக மிகப்
பெரிய பேதையாய் இருக்கிறாயே! என்றேன், “பெண்ணே!
வியக்கும் வகையில் பரந்திருக்கும் அழகுத்தேமல் புள்ளிகளை அழகாக உடைய மென்மையான முலைகளின் மேல்
தொய்யில் குழம்பால் கோலம் வரையவோ?” என்றான்,
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல்
சே இழை மாதரை உள்ளி நோய் விட
முள் இட்டு ஊர்-மதி வலவ நின்
புள் இயல் கலி_மா பூண்ட தேரே – ஐங் 481
வளைந்து இறங்கிய பருத்த தோள்களையும், அழகிய வரிகளைக் கொண்ட அல்குலையும் கொண்ட,
சிவந்த அணிகலன் அணிந்த தலைவியை எண்ணி, அவளின் நோய் தீர,
தார்க்குச்சியின் முள்ளால் குத்தி, விரைவாகச் செலுத்து, பாகனே! உன்
பறவைகளின் தன்மை கொண்டு விரைந்துசெல்லும் குதிரைகள் பூட்டிய தேரை.
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து – பரி 7/36,37
ஊடலைத் தீர்ப்பதற்கு உணர்த்திக்கூறியும் உணராத ஒளிரும் இழையணிந்த பெண்களைச்
சேர்வதற்கான எழும் ஆடவரின் ஆசைப் பெருக்கினைப் போல வெள்ளம் பெருகி விரைய,
மாதரார்
(பெ) பெண்கள், women
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4
மகளிரின் பற்கள் போல் மணக்கின்ற காட்டு முல்லை அரும்புகள் மலரவும்,
மாதராள்
(பெ) பெண், woman
என்
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது
ஆணையால் வந்த படை – கலி 139/20-23
என்
ஆண்மைப் பொலிவு என்ற கோட்டையை முற்றுகையிட்டு அதனை உடைத்து என் உள்ளத்தை அழிக்கிறது,
சிறந்த அணிகலன்களையுடைய மங்கையின் அழகு என்ற வடிவில் காமனது
ஆணையால் வந்திருக்கும் படை;
மாதவர்
(பெ) முனிவர், Ascetics, as observing great austerities
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் – பரி 5/46
குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர்
மாதிரம்
(பெ) 1. விசும்பு, வானம், atmosphere, sky
2. திசை, direction, point on the compass
1
வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5
வலமாக விசும்பிடத்தே காற்றுச் சுழல
2
முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை
மாதிர நனம் தலை புதைய பாஅய் – நற் 347/1,2
முழங்குகின்ற கடல் முகந்த நிறைந்த கருக்கொண்ட கரிய மேகம்
திசைகளெங்குமுள்ள பரந்த இடங்கள் மறையுமாறு பரந்து
மாது
(இ.சொ) அசைநிலை, an expletive
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14
கலங்கிற்று, அவரைப் பிரியாரென்று தெளிவுற்றிருந்த என் மனம்
மாதுளம்
(பெ) மாதுளை, Pomegranate, Punica granatum
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்பு_உறு பசும் காய் போழொடு கறி கலந்து – பெரும் 306,307
சிவலைப் பசுவின் நறிய மோரில், வெண்ணெயில் (வெந்த)மாதுளையின்
வெம்மையுற்ற பசிய காயின் வகிரோடு, மிளகுப்பொடி கலந்து,
மாதோ
(இ.சொ) மாது + ஓ, அசைநிலை, an expletive
பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோ – குறு 144/5
பருக்கைக்கற்கள் தன் அடியின் அழகைச் சிதைக்கும் வண்ணம் சென்றனள்
மாந்தர்
(பெ) 1. மக்கள், human beings, people
2. ஆடவர், male persons
1
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சா செய்யார் உயர் தவம் – நற் 226/1,2
ஒரு மருந்துமரம் பட்டுப்போகும் அளவுக்கு அதினின்றும் மருந்தைக் கொள்ளமாட்டார்கள்; மக்கள்
தம் உடல்வலிமை கெட்டுப்போகுமாறு செய்யமாட்டார்கள் உயர்ந்த தவத்தை
2
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – கலி 145/13
மகளிரின் தோளைச் சேர்ந்த ஆண்கள், அவரின் வருத்தம் மிகும்படியாக அவரைவிட்டுப் பிரிதலும்
மாந்தரஞ்சேரல்
(பெ) ஒரு சேர மன்னன், a cEra king
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே – புறம் 22/34
மாந்தரஞ்சேரல் இரும்பொறை பாதுகாத்த நாடு
இவனது முழுப்பெயர் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இவன் சேரமான் அந்துவஞ்சேரல்
இரும்பொறை என்பவனின் மகன். சேரமான் கடுங்கோ வாழியாதன் இவனின் மூத்த உடன் பிறந்தோன்
இவன், கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டவன். யானை போலப் பெருமித நோக்கு
உடையவன் ஆதலால் இவனை ‘யானைக்கட் சேய்’ என்றனர்.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான்.
குழியில் விழுந்த யானை குழியை இடித்துக்கொண்டு ஏறி வந்தது போல இந்தப் பொறையன் சிறையைத்
தகர்த்துக்கொண்டு தன் நாட்டுக்கு வந்து அரசனானானாம். இவன் கொடைமுரசு முழக்கிப் இரவலர்களை
வரவழைத்துப் பரிசில் நல்குவானாம் (புறம் 17).
புறநானூற்றில் பாடப்பட்டிருக்கும் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (புறம் 50), சேரமான்
குடக்கோச் சேரல் இரும்பொறை (புறம் 210,211), சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (புறம் 53),
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (புறம் 125), கோச்சேரமான் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல்
இரும்பொறை (புறம் 220), சேரமான் கோக்கோதை மார்பன் (புறம் 48,49 ), சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாள்
கோப்பெருஞ்சேரல் இரும்பொறை (புறம் 5) ஆகிய அனைத்துப் பெயர்களும் இவன் ஒருவனையே குறிக்கும் என்பர்
(பேரா.சாலமன் பாப்பையா – புறநானூறு புதிய வரிசை வகை – பக்.31)
குறுங்கோழியூர் கிழார் (புறம் 17,20,22), பேரிசாத்தனார் (புறம் 125),
பொருந்தில் இளங்கீரனார் (புறம் 53), கூடலூர் கிழார் (புறம் 229) ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.
மாந்தரம்
(பெ) சேரநாட்டைச் சேர்ந்த ஒரு மலை/ஊர், a hill/city in cEra country
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்ற
குறையோர் கொள்கலம் போல – அகம் 142/4-6
நிறுத்துதற்கரிய சேனையினையுடைய போர்வெல்லும் மாந்தரம்
பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற
வறியோரது பிச்சை ஏற்கும் கலம்போல
பொறை நாடு என்பது, மலையாள மாவட்டத்தில் உள்ள பொன்னானி, பாலைக்காடு, வைநாடு, வள்ளுவ நாடு,
குறும்பர் நாடு, கோழிக்கோடு, ஏர் நாடு ஆகிய வட்டங்களைத் தன்கண் கொண்டது.
இப் பொறை நாட்டில், குறும்பர் நாட்டுப் பகுதியில், மாந்தரம் என்றொரு மலைமுடியும் அதனை யடுத்து மாந்தரம்
என்றோர் மூதூரும் உண்டு.
அவ் வூரைத் தலைநகராகக் கொண்டு வேந்தர் சிலர் ஆண்டு வந்தனர். அவர்களும் பொறை நாட்டரசர்களேயாதலால்,
மாந்தரன் என்றும், மாந்தரம் பொறையன் என்றும், மாந்தரம் சேரல் இரும்பொறை என்றும் சான்றோர்களால்
அவர்கள் வழங்கப்பெற்றனர்.
மாந்தரம் மாந்தை எனவும் வழங்கிற்று
மாந்தரன்
(பெ) ஒரு சேர மன்னன், a cEra king – பார்க்க :மாந்தரம்
விறல் மாந்தரன் விறல் மருக – பதி 90/13
விறலையுடைய மாந்தரன் என்னும் சேரமானது மேம்பட்ட வழித்தோன்றலே.
மாந்திர்
(வி.வே) மாந்தர்களே, Oh, people!
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்_கால் முகனும் தாம்
கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும்
புதுவது அன்றே புலன் உடை மாந்திர் – கலி 22/1-4
உண்பதற்குரிய பொருளைப் கடனாகப் பெறப் பணிந்து பேசி, இரந்து கேட்கும்போது இருக்கும் முகமும், தாம்
வாங்கிக் கொண்டதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருக்கும் முகமும் வேறுபடுதல்
பண்டைக் காலத்திலும் இந்த உலகத்துக்கு இயற்கை, அது இக்காலத்தவர்க்கும்
புதியது அன்று, அறிவுடைய மாந்தர்களே!
மாந்தீர்
(வி.வே) மாந்தர்களே! Oh, people!
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/28,29
பொன்னால் புனையப்பட்ட ஆடையினை அணிந்திருப்போன் தன் முன்னோனுடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் நிலையை
நினையுங்கள் மாந்தர்காள்! கேளுங்கள்! மணம்பொருந்திய அதன் சிறப்பை!
மாந்து
(பெ) அளவுக்கதிகமாய் உண்/குடி, eat/drink excessively
பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர் – புறம் 61/4-8
பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை
புதிய நெல்லினது வெள்ளிய சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு
விலாப்புடைப் பக்கம் விம்ம உண்டு
நெடிய கதிரையுடைய கழனியிடத்துச் சூட்டை இடுமிடமறியாது தடுமாறும்
வலிய கையையுடைய உழவர் புல்லிய தலையையுடைய சிறுவர்
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம் – நற் 388/8,9
தேன் மணக்கும் தெளிந்த கள்ளைச் சுற்றத்தாரோடு நிரம்பக் குடித்து,
பெருமகிழ்ச்சிகொள்ளும் துறையைச் சேர்ந்தவனாகிய காதலன்
மாந்தை
(பெ) பார்க்க : மாந்தரம்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய – நற் 35/7,8
நீர்த்துறை பொருந்திய மாந்தைநகர் போன்ற இவளது மேனி நலம்
முன்பொழுகிய களவுக்காலத்தும் இப்பெற்றியே இருந்தது, காண்
மாந்தை சேரநாட்டுக் கடற்கரை நகரங்களுள் ஒன்று. இடைக்காலத்தே அது மாதை எனக் குறுகி மறைந்து, இப்போது
பழையங்காடி என்ற புகைவண்டி நிலையத்துக்கு அண்மையில் உள்ளது.- ஔவை.சு.து – உரை விளக்கம்
கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனையல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/9,10
கடற்கரையில் உள்ள மாந்தை என்னும் நகரத்தைப் போன்ற எம்மை
விரும்பினாயல்லையாகலான் நின்பொருட்டாலிழந்த எம் நலத்தைத் தந்து செல்வாயாக
இங்கு வரும் மாந்தை என்ற சொல்லை, மரந்தை என்று கொள்வார் ஔவை.சு.து. அவ்வாறு கொண்டு,
மரந்தை, சேரநாட்டுக் கடற்கரை ஊர்களுள் ஒன்று. இது மருண்டா (Marunda) என யவனர் குறிப்புக்களுள்
காணப்படுகிறது என்பார்
மாமை
(பெ) மாந்தளிர் போன்ற நிறம், the colour of a tender mango leaf, reddish or yellow black
1
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 35-37
நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், மாமை நிறத்தில்
களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,
வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை
இந்த உவமையை வைத்து, களங்கனி கருப்பாக இருப்பதால், மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்வர்.
ஆனால், களங்கனி மிகவும் பழுத்து கருப்பாக ஆவதற்கு முன்னர், பச்சை நிறக் களாக்காய், நிறம் மாறி சற்று
சிவப்பு அல்லது மாநிறத்துக்கு வரும். அதனையே மாமை களங்கனி என்று புலவர் அழுத்திக் கூறுகிறார் எனலாம்.
இங்கு, களங்கனி மாமை என்னாமல், மாமை களங்கனி என்று புலவர் குறித்திருப்பதை ஊன்றிக் கவனிக்க
வேண்டும். எனவே மாமை களங்கனி என்பதை மாந்தளிர்நிறக் களங்கனி என்று கொள்வது சிறப்பாகும்.
2
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை – குறு 147/1,2
வேனில்காலத்துப் பாதிரியின் வளைந்த மலரைப் போன்று
மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாநிறமும்
பாதிரியில் மூன்று வகை உண்டு. அவை 1. பழுப்பு நிறம் (purple) 2. வெள்ளைநிறம் 3. பொன் நிறம்.
இவற்றில் இங்கு புலவர் குறிப்பிடுவது பழுப்பு வகைப் பாதிரியே. அதுவே மாமை நிறத்தை ஒட்டி உள்ளது.
3
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே – நற் 205/9-11
வளைந்த முள்ளையுடைய ஈங்கையின் நீண்ட கரிய அழகிய தளிரின் மீது
மிக்க நீருடன் விரைவாகப் பெய்யும் மழை பொழியும்போது உண்டாகும்
அழகிய நிறம் போன்ற இவளின் மாமையின் அழகுதானே
பொதுவாக, தளிர்கள் இளம் பச்சைநிறத்திலோ, மாநிறத்திலோ தான் இருக்கும். கருமையாக இருக்க
வாய்ப்பில்லை. எனவே ஈங்கையின் தளிரும் மாநிறத்ததுவே எனக் கொள்லலாம்.
4.1
மென் சிறை வண்டின் தண் கமழ் பூம் துணர்
தாதின் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய
நுண் பல் தித்தி மாஅயோளே – அகம் 41/13-16
மெல்லிய சிறகினையுடைய வண்டுகளையுடைய குளிர்ச்சியையுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள
தாதுடன் கூடிய தேன் துளி தளிரில் ஒழுகியது போல
சிறிய பல தேமல்புள்ளிகளையுடைய நம் கிழத்தி
இங்கே குறிப்பிடப்படும் தளிர் இன்ன மரத்தது என்று குறிப்பிடப்படாவிடினும், இது மாந்தளிர் என்று கொள்வதில்
தவறில்லை. இதனை மாமரம் என்றே கொள்வர் ச.வே.சு
4.2
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க – அகம் 135/1
இந்தத் தளிரையும் மாந்தளிர் என்றே கொள்வர் ச.வே.சு
5
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற் 6/1,2
நீரில் வளரும் ஆம்பலின் உள்துளையுள்ள திரண்ட தண்டின்
நாரை உரித்து நீக்கினாற் போன்ற அழகு குறைந்த மாமைநிறத்தவளும்,
அம்ம வாழி தோழி நம் ஊர்
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35
தோழியே கேட்பாயாக! நம் ஊரின்
பொய்கையில் பூத்த ஆம்பல் மலரின் நார் உரிக்கப்பெற்ற மெல்லிய தண்டின்
நிறத்தைக் காட்டிலும் ஒளியுடையதாக இருந்து,
இப்போது பசந்துபோயிற்று, என் மாநிற மேனியழகு.
ஆம்பல் மலரில் இருவகை உண்டு. 1. நீல ஆம்பல், 2. செவ்வாம்பல். செவ்வாம்பல் தண்டு சிவப்பு நிறத்தில்
இருக்கும். இதனை உரித்தால் அது சற்றே நிறம் வெளுத்து இருக்கும். இதுவே குறைந்த மாமைநிறம்.
எனவே செவ்வாம்பல் தண்டின் சிவப்பு நிறத்துக்கும், அதனை உரித்த பின் இருக்கும் வெளிர் சிவப்புக்கும்
இடையிலான நிறமே மாமை என்பது பெறப்படும். இதனை மாந்தளிர் நிறம் எனக் கொள்ளலாம்.
ஆம்பல் மலரைப் பார்ப்பதே அரிது. அதன் தண்டை எடுத்து அதன் நாரை உரித்து யார் பார்ப்பர் என்று
எண்ணத்தோன்றும். இன்றைய கேரளாவில் நாரை உரித்த ஆம்பல் தண்டினை நறுக்கிச் சமையலுக்குப்
பயன்படுத்துவர். படத்தைப் பாருங்கள். புலவரின் உவமை கற்பனையல்ல என்பது தெரியும்.
6
மணி மிடை பொன்னின் மாமை சாய என்
அணிநலம் சிதைக்குமார் பசலை – நற் 304/6,7
நீலமணி இடைப்பட்ட பொன் போல எனது மெய்யின் மாந்தளிரின் தன்மை கெட என்
அழகையும் நலத்தையும் பசலை தோன்றிக் கெடுக்காநிற்கும் – பின்னத்தூரார் உரை.
இங்கே, மணி – பொன், மாமை – பசலை என்ற இரண்டு இணைகள் (pairs) உள்ளன. பசலையால் மாமை கெட்டது
என்பது உண்மை. ஆனால் மணியினால் பொன் கெட்டதா, பொன்னினால் மணி கெட்டதா என்பது விளக்கமாகக்
கூறப்படவில்லை. பசலை பொன் நிறத்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே, பொன் போன்ற பசலை
மணி போன்ற மாமையைக் கெடுத்தது என்று கொள்வதற்கு ஏதுவாகும். இங்கே மணி என்பது நீலமணி என்று
கொள்ளப்படுகிறது. எனவே, மாமை என்பது கருமை நிறம் எனக் கொள்ள ஏதுவாகிறது. ஆனால் ஔவை.சு.து.
அவர்களின் உரை,
மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல என் மாமைக்கவின் ஒளியிழக்குமாறு என்
அழகிய நலத்தைப் பசலை போந்து கெடுக்கும்( – ஔவை.சு.து)
என்று கூறுகிறது. இதனையே,
மணிகள் பதித்தலால் பொன்னின் ஒளி மழுங்குதல் போல, பசலை படர்ந்ததால் என் மாமைக்கவின் ஒளியிழந்தது
என்று கொள்ளலாம். எனவே மணி என்பது பசலைக்கும், பொன் என்பது மாமைக்கும் ஒப்பு ஆகின்றன. ஆனால்
மாமை பொன் நிறத்தது அல்ல. எனவே இங்கு மணியின் நிறமோ, பொன்னின் நிறமோ ஒப்பிடப்படாமல்,
பதித்தலும் படர்தலும் ஆகிய செய்கைகள் ஒப்பிடப்பட்டுள்ளன எனக் கொள்ளலாம். பதித்த மணி பொன்னின்
அழகைக் கெடுப்பது போல் படர்ந்த பசலை மாமையைக் கெடுத்தது என்று கொள்ளலாம்.
7.
இதே போன்று, ஆனால் இதற்கு மாறுபட்ட உவமையைக் கலித்தொகையில் காண்கிறோம்.
பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/16,17
பலநாளும் நினைவு வருத்துகையினாலே பசலையாலே நுகரப்பட்டவளுடைய
பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண்.
அது செய்த பழிகள் உண்டோ? (இல்லையே) – நச்சினார்க்கினியர் உரை
மணி மிடை பொன்னின் மாமை என்ற நற்றிணை உவமை போல் அன்றி, பொன் உரை மணி அன்ன மாமை
என்று இங்குக் காண்கிறோம்.
பொன்னை உரைத்த மணியும், பசலை படர்ந்த மாமையும் ஒப்பிடப்பட்டுள்ளன. எனவே பசலை பொன்னுக்கும்,
மாமை மணிக்கும் ஒப்பிடப்பட்டுள்ளன.
பசலை பொன் நிறத்தது என்பது உண்மை. எனவே மாமை மாநிறத்தது எனக் கொள்ளலாம். இங்கே மணியை
நீலமணி என்று கொண்டால், மாமை கருமை நிறமாகிறது. ஆனால், இவ்வுரைக்கு விளக்கம்
எழுதிய பெருமழைப்புலவர், மணி – ஈண்டு நீலமணி, மாமை – மாநிறம் என்று எழுதுகிறார். மணி என்பது
நீலமணியாயின் அதனைப் போன்ற மாமை என்பது எவ்வாறு மாநிறம் ஆகும்?
எனவே, நச். உரைக்கு மாற்று உரை காணவேண்டும், அல்லது பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று விளக்கம்
காணவேண்டும்.
முதலில் நச். உரைக்கு மாற்று காண்போம்.
’பொன் உரை மணி அன்ன மாமை’ என்பதற்கு, ’பொன்னை உரைத்த மணியை ஒத்த’ என்று நச். உரை காண,
புலியூர்க்கேசியார், இதனை, ‘பொன்னிலே பொதிந்த மணி போன்ற அவளது தேமல்’ என்று பொருள்
கொண்டிருக்கிறார்.
செங்கை பொதுவன் அவர்கள், இதனை , ’பொன்னில் பதிக்கப்பட்டிருக்கும் மணிக்கல் போல அவளது மாமை
நிறக் கண் பசலை நோயால் வருந்துகிறது’ என்று பொருள் கொண்டிருக்கிறார்.
எனவே இங்கு மணி, பொன்னில் பொதிந்தது அல்லது மணி, பொன்னில் பதிக்கப்பட்டது என்று
கொண்டு, மாமையில் படர்ந்த பசலையைப் பொன்னிலே பொதிந்த மணிக்கு ஒப்பிடவேண்டியுள்ளது. இப்படிக்
கொண்டால், இது மேற்கூறிய நற்றிணை உவமை போல் ஆகும்.. அதன்படி, மாமை மாந்தளிர் நிறம் ஆகிறது
அடுத்து, பெருமழைப்புலவர் விளக்கத்துக்கு மாற்று காண்போம்.
அவர், மணி – ஈண்டு நீலமணி, மாமை – மாநிறம் என்று எழுதுகிறார். இது குழப்பத்தைத் தரும் என்று கண்டோம்.
இப்போது,
திரு மணி புரையும் மேனி மடவோள் – நற் 8/8
என்பதற்கு, ஔவை.சு.து. அவர்கள்,
அழகிய மணி போலும் மேனியையுடைய இளமகள்
என்று பொருள் கொள்கிறார். அத்துடன்,
மணி, ஈண்டுச் செம்மணியின் மேற்று என்றும் விளக்குகிறார்.
ஆக, பொருத்தமான இடங்களில் மணி என்பது செம்மணியையும் குறிக்கும் என்றாகிறது. எனவே,
பெருமழைப்புலவர் மணி – நீலமணி என்று கொண்டிருப்பதைவிட ஔவை.சு.து. அவர்களின் விளக்கத்தை இங்குக்
கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. எனவே,
பொன் உரை மணி அன்ன மாமைக்கண் – கலி 48/16,17
என்ற அடிக்கு,
பொன்னை உரைத்ததொரு மணியுண்டாயின் அதனை ஒத்த பசலை படர்ந்த மாமை நிறத்தின்கண்.
என்ற பொருளில், மணி என்பதைச் செம்மணி என்று கொண்டால், பொன்னிறப் பசலை படர்ந்த மாமையை
பொன் துகள் படர்ந்த செம்மணி என்று கலித்தொகைப் புலவர் கூறியிருக்கிறார் என்று கொள்வது பொருத்தமாகத்
தோன்றுகிறது. எனவே இங்கும், மாமை என்பது செம்மணியின் மாந்தளிர் நிறம் என்றாகிறது.
8
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்
நறிய கமழும் துறைவற்கு
இனிய மன்ற என் மாமை கவினே – ஐங் 146
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள்
நறுமணத்தோடு கமழும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இன்பமானது, உறுதியாக, என் மாநிற மேனியழகு.
ஞாழல் மலர்ந்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் மாமைக் கவின் இனிக்கிறது என்கிறார்
புலவர். எத்தனையோ மலர்கள் இருக்க, புலவர் ஞாழல் மலரைத் தேர்ந்தெடுப்பானேன்? இந்த இரண்டுக்கும் ஏதோ
ஒற்றுமை இருப்பது போல் தெரிகிறது.
ஞாழல் மலர் பெரும்பாலும் பொன் நிறத்தில் இருக்கும். சிவப்பு நிற ஞாழலும் உண்டு.
செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை – அகம் 240/1
என்ற அகநானூற்று அடியால் இதனை அறியமுடிகிறது. படத்தைப் பாருங்கள்.
சிவந்த ஞாழல் மலர்கள் பூத்திருக்கும் துறையைச் சேர்ந்த தலைவனுக்குத் தலைவியின் சிவப்பு நிறத்தை ஒட்டிய
மாந்தளிர் நிற மாமையின் கவின் இனித்திருப்பதில் வியப்பென்ன?
இதைத்தவிர, ஞாழலுடன் மாமையை முடிச்சுப்போடும் மேலும் இரண்டு பாடல்கள் உண்டு.
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே
தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே – ஐங் 103
அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையோடு
ஞாழலும் பூக்கும் குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்
இவளுக்கு உரியவனாக அமைந்துவிட்டான்; எனவே
இவளிடம் நிலைத்துவிட்டது இவளது மாநிற மேனியழகு.
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்
தனி குருகு உறங்கும் துறைவற்கு
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 144
மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பூங்கொத்துள் தோன்றும் பொழிலில்
தனியே ஒரு நாரை உறங்கும் துறையைச் சேர்ந்தவனை எண்ணி,
இப்போது பசந்துபோகிறது என் மாநிற மேனியழகு.
பாருங்கள், செந்நிற ஞாழல் மலர்கள் பூத்துக்கிடக்கும் அழகை, ஒரு பழுப்பு நிறக்கொக்கு கெடுப்பது போல
மாந்தளிர் நிற மாமையின் அழகைப் பொன்னிறப் பசலை கெடுக்கிறதாம்.
மாமை எனப்படும் மாந்தளிர் நிறம் இதுதான்.
மாய்
(வி) 1. மறை, hide, conceal
2. ஒளிகுன்று, lose brightness
3. கொல், kill
4. அழி, சிதை, destroy, devastate
5. முடிவுக்கு வா, come to an end
6. ஒழி, இல்லாமற்போ, cease to exist, disappear
7. இற, உயிர்விடு, die
8. தீட்டு, கூராக்கு, grind and sharpen
9. கெடு, தப்பு, become spoiled, fail
1
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 452
மேகங்களில் மறையும் திங்களைப் போன்று தோன்றித்தோன்றி மறைய
களிறு மாய்க்கும் கதிர் கழனி – மது 247
யானையை மறைக்கும் அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,
2
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை – நற் 321/5
மலையில் ஞாயிறு சேரும் கதிர்கள் மழுங்கிய மாலையில்
3
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா – மலை 220
விழுந்தவரைக் கொல்லும் ஆழமான பொய்கையின் அருகே
4
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/6
சுரத்தின்கண் தங்கியிருந்தபோது நமது உள்ளத்தின் திண்மை சிதையத் தோன்றிய மாலை
5
பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து – அகம் 48/23
பகற்பொழுது முடியும் அந்தியாகிய ஞாயிறு மறையும் பொழுதிலே
6
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் – அகம் 395/7
தீ கவர்ந்து உண்டமையால் மரங்களின் நிழல் ஒழிந்த நெறியில்
7
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை – புறம் 242/5
வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு
8
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர – அகம் 5/12-14
(சாணையால்) தேய்க்கப்பட்டது போல் மழுங்கிய நுனைகளை வெளியே காட்டி,
பாத்திகட்டியதைப் போல் இருக்கும் குடுமியை உடைய கூர்மையான கற்கள்
விரல்களின் நுனியைச் சிதைக்கும் நிரைத்த நிலையிலுள்ள வழிகள் உடைய
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/6,7
வன்கண்மையுடைய மறவர் தம் அம்புகளைத் தீட்டியதாக
பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடுகல்லில்
9
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன் – நற் 103/6,7
பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,
குறிதப்பாத/கெடாத வேட்டையை மேற்கொண்டு சென்ற, கணவனான ஆண்நாய்
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்
மாயா இயற்கை பாவையின் – நற் 201/10,11
பெரிய இந்த நிலம் நடுங்கி மேலே எழுந்தாலும், தன் அழகிய நல்ல வடிவம்
கெடாத தன்மையுள்ள கொல்லிப்பாவை போல
மாயம்
(பெ) 1. பொய், falseness
2. வஞ்சனை, கபடம், deception, deceit
3. ஏமாற்று, treachery
4. பொய்த்தோற்றம், false appearance
5. அழகு, beauty
6. மாமை நிறம், the colour of tender mango leaf
7. மயக்கம், மந்திரம், வசியம், charm, spell
8. கனவு, dream, vision
1
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி ——————-
——————- ————————
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294
தீயையும் தென்றலையும் ஒன்றுசேர ஆகாயம் பெற்றிருப்பதைப் போல,
நோயையும், இன்பத்தையும் கொண்டிருக்கிறதல்லவா!
பொய் இல்லை இது தோழி! ——————–
——————————— —————-
இலங்குகின்ற மலைநாடனின் அகன்ற மார்பு
2
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்
உடன்ற_கால் – கலி 2/3-5
கூற்றுவன் போல் சினங்கொண்டு, வஞ்சனையைச் செய்கின்ற அரக்கர்களைக்
கொன்று அழிக்கும் ஆற்றலோடு, முக்கண்ணனாகிய சிவன் அந்த அரக்கர் வாழும் திரிபுரக் கோட்டைகளைச்
சினந்து நோக்கிய பொழுது
3
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்
மாயம் மருள்வார் அகத்து – கலி 88/6,7
“வேலை மெனக்கிட்டு உண்மையல்லாத பிதற்றல்களை இங்கே சொல்லாதே! அவற்றைக் கூறு உன்
ஏமாற்றுவேலையைக் கண்டு மயங்குவாரிடம்”;
4
பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/5,6
பகைப்புலத்தைச் சுட்டெரித்த பசிய பிசிர்களுடன் ஒளிவிடும் நெருப்பானது
பல ஞாயிறுகளைப் போன்ற மாயத்தோற்றத்துடன் சுடர்விட்டுத் திகழ,
5
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11
அழகிய இளம்புதல்வியின் மலர் போன்ற கண்கள் – பின்னத்தூரார் உரை
6
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11
மாமை நிறமுடைய என் இளமகளின் மலர் போன்ற கண்கள் – ஔவை.சு.து. உரை
7
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து – நற் 323/4
நின்பால் மயக்கமுற்ற நட்பினால் மாட்சிமையுடைய இனிய நலத்தையும் ஒழியவிட்டு- பின்னத்தூரார் உரை
8
வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும்
மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க
சேய் உயர் வெற்பனும் வந்தனன் – கலி 39/49-51
மூங்கிலைப் போன்ற மென்மையான தோள்களின் பசலையும், ஊரார் பழிச்சொல்லும்,
பொய்யாகக் கனவில் காணும் சந்திப்புகளும் எல்லாம் ஒருசேர நீங்கிப்போகும்படியாக,
மிக உயர்ந்த மலைக்கு உரியவன் பெண்கேட்டு வந்தான்;
மாயவள்
(பெ) மாமை நிறத்தவள், woman with a colour as that of a tender mango leaf
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/7,8
மா மரம் துளிர்விட்ட தளிரின் மேல், மாமை நிற மகளிரின் அழகுத் தேமல் போல,
அழகிய இதழ்களைக் கொண்ட பலவான மலர்களின் மென்மையான மகரந்தப்பொடிகள் படிந்திருக்க,
மாயவன்
(பெ) திருமால், Lord Vishnu
பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர – கலி 145/63,64
அவளது தூக்கத்தை வாங்கிக்கொண்டு அவளை நினையாமற் போனவர் திரும்பி வரக்கண்டு,
திருமாலின் மார்பில் திருமகள் சேர்ந்தது போல் அவள் அவனிடம் சேர,
மாயோய்
(வி.வே) 1. மாயவனே!, Oh! Lord Vishnu!
2. மாநிறத்தவளே!, Oh! woman with a colour as that of a tender mango leaf!
3. கருப்பு நிறத்தவளே!, Oh! dark coloured woman!
1
மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/10
மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்
2
பருவரல் எவ்வம் களை மாயோய் என – முல் 21
துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’, என்று
3
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் – கலி 108/38,39
மயில் கழுத்தின் நிறத்தையுமுடைய கருப்பழகியே! இந்த
வெயிலில் எங்கே விரைந்து செல்கிறாய்? இங்கே அருகில் பார்!
மாயோள்
(பெ) மாமை நிறத்தவள், woman with a colour as that of a tender mango leaf
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் – நற் 139/7,8
நுனிசுருண்ட செழித்த கூந்தலையுடைய மாமைநிறத்தவளோடு
சேர்ந்து இனிமையை அனுபவித்த மலைச்சரிவையுடைய நல்ல ஊரில்
வல்லோன்
எழுதி அன்ன காண்_தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே – நற் 1460/8-11
சித்திரம் வரைவதில் வல்ல ஒருவன்
தீட்டிவைத்ததைப் போன்ற காண்பதற்கினிய அழகினையுடைய
மெல்லியளாகிய மாமை நிறத்தையுடையவள் வருத்திய
மயக்கத்தையுடைய நெஞ்சமே! என் சொல்லை ஏற்றுக்கொள்ள விரும்பினால்
மாயோன்
(பெ) 1. திருமால், Lord Vishnu
2. கரு நிறத்தவன், black coloured man
1
மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591
திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில்,
2
தூ வெள் அறுவை மாயோன் குறுகி – புறம் 291/2
தூய வெள்ளிய ஆடையையுடைய கரியவனை அணுகி
மார்க்கம்
(பெ) நடை, walking style
வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/51
வெற்றிக்குக் காரணமான ஓட்டத்தையுடைய குதிரைகளின் நடையினைக் கொண்டனர்,
மார்பம்
(பெ) மார்பு, chest, bosom
எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல
இடைச் சுரத்து இறுத்த மள்ள – புறம் 254/2,3
யான் எழுப்பவும் நீ எழுந்திராயாய், நினது மார்பு நிலத்தைப் பொருந்த
சுரத்திடை மேம்பட வீழ்ந்த இளைஞனே
மார்பினை
1. (வி.வே) மார்பினையுடையவனே!, oh! you with (a broad) chest!
– 2. (பெ) மார்பினையுடையவன், (you) having your chest (smeared with sandal)
1
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
நீ சில மொழியா அளவை – சிறு 232-235
’வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும்,
‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்’ எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும்,
நீ சில (புகழினைக்)கூறி முடிக்காத அளவில்
2
ஆரம் கமழும் மார்பினை
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/10,11
சந்தனம் கமழும் மார்பினையுடையவனாகிய நீ
மலைச் சாரலிலுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்துக்கு நீ வருவது –
மார்பு
(பெ) 1. நெஞ்சு, bosom, chest
2. உயரமான, உருண்டையான பொருள்களின் கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி, வடிம்பு
the portion lower to the neck of a tall, cylindrical object
3. தடாகம், சுனை,
1
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/12
வானத்தைத் தொடும் மலைநாட்டினனின் மார்பு என்னை வருத்தியது என்று
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே – ஐங் 255/4
சிவந்த வாயினை உடையவள், மார்பினில் அழகுத்தேமலைக் கொண்டவள்
2
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின்
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 243-247
எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைக்
கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,
ஏணிக்கும் எட்டாத மிக நெடிய வடிம்பினையும்,
தலையைத் திறந்து உள்ளே சொரியப்பட்ட பழையவாகிய பல நெல்லினையும் உடைய,
கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்
தானியங்கள் சேர்த்துவைக்கும் உயர்ந்த குதிர்களில், அதன் கழுத்துக்குக்கும் கீழ்ப்பட்ட பகுதி
இங்கே மார்பு எனப்பட்டது.
3
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு_உறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே – பரி 15/8-10
அந்தச் சில மலைகளிலும் சிறந்து விளங்குவன தெய்வங்கள் விரும்பும்
மலர்களையுடைய அகன்ற சுனைகளையுடைய மேகங்கள் படியும் உச்சிகளையுடைய
குலமலைகள் சிலவே
இங்கு உள்ள மார்பின் என்ற சொல்லுக்குச் சுனைகள், தடங்கள் என்று உரைகள் கூறுகின்றன.
தமிழ்ப் பேரகராதியும் (Tamil Lexicon) அவ்வாறே குறிப்பிடுகிறது. ஆனால், இந்தச் சுனைகள்
மலையின் மார்புப்பகுதியில் (உச்சிக்கும் கீழே, அடிவாரத்துக்கு மேலே) இருப்பதால்
இங்கு மார்பு என்று குறிக்கப்பட்டிருப்பதற்கு எண்-2 -இல் உள்ள பொருளையும் கொள்ளலாம்.
மார்வம்
(பெ) மார்பு, chest, bosom
மைந்தர் மார்வம் வழி வந்த – பரி 8/122
அந்த மைந்தரின் மார்பினைத் தழுவிப்பெற்ற இன்பத்தின் வழியாக வந்த பெருமகிழ்ச்சி
மாரன்
(பெ) மன்மதன், காமன், Kama, the god of love
கூர் ஏயிற்றார் குவி முலை பூணொடு
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி – பரி 8/118,119
கூர்மையான பற்களைக் கொண்டோரின் குவிந்த முலையில் அணிந்திருந்த பூண்களோடு
மன்மதனைப் போன்றவராகிய கணவன்மார்களின் மார்பில் அணிந்த அணிகலன்கள் கலந்திருக்க,
மாரி
(பெ) 1. மழைக்காலம், rainy season,the monsoon
2. மழை, rain
3. மேகன், cloud
4. மழை நீர், rain water
1
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன – பெரும் 49
மழைக் காலத்து மலை முகிலைச் சுமந்தாற் போன்று,
2
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/2
மழை காலம் தவறாமல் பெய்யட்டும்; வளம் மிகுந்து சிறக்கட்டும்
3
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண்
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் – கலி 131/21,22
கார்மேகமும் விரும்பும் கருங்கூந்தலையும், மதர்த்த பார்வையைக் கொண்ட அழகிய மைதீட்டிய கண்களையும்,
ஆழமான கடலில் பிறந்த முத்தின் அழகைப் போன்ற முறுவலையும் உடையவளே!
4
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/1-3
குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும்
மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
மால்
1. (வி) 1. மயங்கு, கல, get mixed up
2. மயங்கு, மனம் கலங்கு, get baffled, be distressed
3. மயக்கு, மருளவை, bewilder, mystify
– 2. (பெ) 1. திருமால், Lord Vishnu
2. பெருமை, greatness
3. கருமை, blackness
4. மயக்கம், மருட்சி, மனத்திரிபு, confusion,
1.1
மான்ற மாலை வழங்குநர் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி – நற் 29/4,5
இருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல
ஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்
1.2
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/2-5
கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
மிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
வளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
மனம் கலங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,
மான்று மயங்கி; தன் பெட்டையைப் பிரிதலால் ஆண் கழுகு மயங்கி – புலவர் மாணிக்கம் உரை
1.3
ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/6-10
மிடுக்கான நடையையும்
மிகுந்த பெருமிதத்தையும் கொண்ட யானைப் படையையுடைய நெடுமான் அஞ்சி
இரக்கமுள்ள நெஞ்சத்தோடு, தனது புகழ் நெடுந்தொலைவுக்கு விளங்க
தேர்களை வாரிவழங்கும் அவனது அரசிருக்கை காண்போரை மயங்க வைப்பது போல
மேகங்கள் மழையைப் பெய்து நிலைகொண்டு என்னை மயக்குகின்றன.
2.1
நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – முல் 1-3
சக்கரத்துடன்
வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
(மாவலி வார்த்த)நீர் (தன் கையில்)சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல,
2.2
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,
2.3
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 487,488
(குதிரை இலக்கண)நூல்கற்றோர் புகழ்ந்த மாண்புடையனவாய், கரிய கடலில்
சங்கைக் கண்டாற் போன்ற வெண்மையான தலையிறகுகளை உடைய குதிரைகள்
2.4
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 95-97
கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து)
2.5
மால் கொள
———————— —————————————-
கொடு வாய் பேடை குடம்பை சேரிய
உயிர் செல கடைஇ புணர் துணை
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – நற் 338/6- 12
எனது காம மயக்கம் பெருகிட,
———————– ————————————–
வளைந்த வாயையுடைய தன்னுடைய பேடையைக் கூட்டுக்கு வரும்படி
உயிரே போகும்படியாக கூவிக்கொண்டு, தான் சேரும் துணையை
மீண்டும் மீண்டும் விடாது அழைக்கிறது, துயரத்தைக் கொண்ட அழகிய குருகு –
சங்க இலக்கியத்தில் மால் என்ற சொல் 54 முறை வருகிறது. அவற்றுள் மால் வரை என்ற தொடர் 26 முறை
வருகிறது என்பது உற்றுநோக்கற்குரியது.
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 21
ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 99
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 205
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் – பெரும் 330
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/10
மாயோன் அன்ன மால் வரை கவாஅன் – நற் 32/1
மால் வரை மறைய துறை புலம்பின்றே – நற் 67/2
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை – நற் 225/5
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி – நற் 373/3
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி – குறு 95/1
நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/6
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ – ஐங் 289/4
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/9
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து – கலி 44/2
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/9
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் – அகம் 171/8
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே – புறம் 151/12
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து – புறம் 200/4
பொன் படு மால் வரை கிழவ வென் வேல் – புறம் 201/18
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் – புறம் 374/5
மால்பு
(பெ) கண்ணேணி, ஒற்றை மூங்கிலில் கணுக்களில் புள்(படி) செருகியிருக்கும் ஏணி,
பொதுவாக மலைநாட்டு மக்கள் தேன் எடுக்கப் பயன்படுத்துவது,
ladder made of a single bamboo with steps inserted at the joints,
used by hill people to take honey.
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை – மலை 315-317
ஆண்கருங்குரங்கு(ம்) (ஏறமுடியாதென்று)கைவிட்ட, பார்ப்பதற்கு இனிய உயர்ந்த மலையில்,
உறுதியாக நட்டுச் சார்த்திய கணுக்களைக்கொண்ட மூங்கிலே வழியாகக்கொண்டு,
பெரும் பலனாக எடுத்துச்சேர்த்த இனிய (தேன் கூட்டினின்றும்)கொள்ளையாகக் கொண்ட பொருட்காக
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல – குறு 273/5,6
பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின் மேல்
அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல
மாலிருங்குன்றம்
(பெ) திருமாலிருங்குன்றம், a hill called azhagarmalai near Madurai
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின்
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் – பரி 15/22-24
சிலம்பாற்றினை அழகு செய்ய, அழகு பொருந்திய திரு என்ற சொல்லோடும்
சோலை என்ற சொல்லோடும் தொடர்மொழியாக வருகின்ற மாலிருங்குன்றத்தில்
மக்கள் தாம் விரும்பும் இச்சைகளை உன்முன்னே விதைத்து, அதன் விளைவான பயனைக் கொள்வர்;
மதுரைக்குக் கிழக்கே 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை
என்றழைக்கப்படும்.
அழகர் மலை என்று வழங்கும் இடம், இரண்டு அழகர்களுக்கும் உரிய தலமாக விளங்குகிறது.
ஒர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தரராஜப் பெருமாள்; மற்றொருவர், ‘என்றும் இளையாய் அழகியாய்’
என்று போற்றப்படும் முருகன்.
சோலைமலை, திருமாலிருஞ்சோலை மலை, திருமாலிருங்குன்றம் என்றும் இந்த மலைக்குப் பெயர்கள் உண்டு.
பரிபாடல் இதன் புகழைப் பாடுகிறது.
அழகர் கோயில் மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது. இதை ‘நூபுர கங்கை’ என்றும்
சொல்வர்.
மதுரையைச் சுற்றிச் சமணர்கள் வாழ்ந்த எட்டுக் குன்றுகளில் இது இருங்குன்றம் என்று அழைக்கப்படுகிறது.
மாலை
(பெ) 1. அந்திநேரம், evening
2. பூ, மணிகள் போன்றவை தொடுக்கப்பட்டது
3. ஒழுங்கு, வரிசை, order, row
4. இயல்பு, தன்மை, nature, quality, proprty
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் – பொரு 96,97
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
2
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த
பல் நூல் மாலை பனை படு கலி_மா – குறு 173/1,2
பொன்னைப்போன்ற நிறமுடைய ஆவிரையின் புதிய பூக்களைச் செறித்துக் கட்டிய
பலவாகிய நூல்களையுடைய மாலையை அணிந்த பனைமடலால் இயற்றிய குதிரையில்
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184
நூலால் சட்டத்தே கட்டின முத்துமாலையை உடைய கொற்றக்குடை
வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
3
அருவி தாழ் மாலை சுனை – பரி 8/16
அருவிநீர் தங்கும் வரிசையாக அமைந்த சுனை;
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் – நற் 58/6
முரசு இருக்கும் கட்டிலிடத்தே ஏற்றி வரிசையுற வைத்த விளக்கினைப் போன்ற
4
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்
வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/112-114
திங்களானது, மாலைக்காலத்து மயக்கந்தரும் இருளைக் கூட்டித்தள்ள, மதுரை நகருக்குள்
தங்கும் இயல்பினை நினைத்து, அவ்விடத்தைவிட்டு நீங்கிப்போகும் செயலால், புதிய இயல்பினையுடைய
நீராட்ட நாளுக்கான அணிகலன்களை நீக்கி, சிரிக்கும் இயல்பினையுடைய மலர்ந்த பூக்களைச் சூடிக்கொண்டு,
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்
வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை – கலி 9/4,5
ஐம்பொறிகளும் தமக்கு ஏவல் செய்தலை இயல்பாக உடைய கொள்கையையும் ஒழுக்கத்தையும் உடைய
அந்தணர்களே!
வெப்பம் மிக்க இந்தக் காட்டு வழியில் செல்வதை இயல்பாகக் கொண்டு ஒழுகிநடப்பவர்களே!
மாவன்
(பெ) ஒல்லையூர் தந்த பூதப்பண்டியன் அரசவையில் இருந்தவன், a person in the chamber of council
of a Pandiyan king
மலி புகழ்
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும் மன் எயில் ஆந்தையும் – புறம் 71/9-12
மிக்க புகழையுடைய
வையையாற் சூழப்பட்ட செல்வம் பொருந்திய ஊர்களில்
பொய்யாத புதுவருவாயையுடைய மையலென்னும் ஊர்க்குத் தலைவனான
மாவனும் நிலைபெற்ற எயிலென்னும் ஊரையுடைய ஆந்தையும்
இவன் பாண்டிய மன்னன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நண்பர்களுள் ஒருவன்.
மாவன் என்னும் பெயர் குதிரையை உடையவன் என்ற பொருளைத் தருகிறது. எனவே இந்த மாவன்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் குதிரைப்படைத் தலைவன் எனலாம் என்கிறது விக்கிப்பீடியா கட்டுரை.
மாவிலங்கை
(பெ) ஒரு சங்க கால ஊர், a city during sangam period.
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக்கோடனை
உடையை – புறம் 176/6-8
பெரிய மாவிலங்கை என்னும் ஊர்குத் தலைவன், சிறிய யாழையுடைய
வறியோர் தொடுக்கும் புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனைத்
துணையாக நீ உடையை.
இன்றைய திண்டிவனம் பகுதி சங்க காலத்தில் ஓய்மாநாடு என்று அழைக்கப்பட்டது. அந்த நாட்டை ஆண்ட
ஓய்மான் நல்லியக்கோடன் என்ற அரசனின் தலைநகரம் மாவிலங்கை.
மாழ்கு
(வி) சா, die, மயங்கு, faint
பூ கொடி அவரை பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி
மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய
புன் தலை சிறாரோடு உகளி – அகம் 104/8–11
பூவையுடைய அவரைக் கொடியிலுள்ள பொய்த்தோல் போன்ற
உள்ளீடல்லாத வயிற்றினையுடைய வெள்ளாட்டின் வெள்ளிய குட்டிகள்,
மயங்கிக்கிடந்தாலொத்த தாழ்ந்து தொங்கும் பெரிய செவியினைக் கொண்டனவாய்,
புற்கென்ற தலையினையுடைய சிறுவர்களோடு குதித்துச் சென்று
மாழா
(வி) 1. மயங்கு, become unconscious
2. மயங்கு, be confused, bewildered
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர்
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு பேர் அஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி
—————– ———————————-
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 85-98
இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்,
குற்றம் அற்ற பொன்(னால் செய்த)வட்டில் நிறைய, பல முறையும்
வார்த்துத் தந்துகொண்டே இருக்க, (வழிப்போன)வருத்தம் போம்படி,
நிறைய உண்டு, பெரிய வருத்தத்தைப் போக்கி,
மகிழ்ச்சியோடே (யான்)நின்ற போது – மேலும், அம் மன்னனுடைய
செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து,
————————————- —————————————————-
வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,
கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து,
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி,
1.
மாழாந்து – மயங்கி என்னும் பொருட்டு; ஈண்டுப் பொறிகள் மயங்குதற்குக் காரணமான துயிலை ஆகுபெயரான்
உணர்த்தி நின்றது – பொ.வே.சோ.உரை.
2.
நச். இதனை,
காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
மாழாந்து –
அவனைக் கண்ட மற்றை நாட்காலத்தில்
என்னைக் கண்டவர் …… …மருளுதற்குக் காரணமான வண்டுகள் இடையறாது மொய்க்கின்ற தன்மையையும்
யான் கண்டு மயங்கி
என்று பொருள்கொள்வார்.
மாழை
(பெ) 1. இளமை, youth
2. மாவடு, tender unripe mango fruit
1
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் – கலி 131/12,13
இளமையும், மடமையும் உள்ள பெண்மானின் தன்மையை வென்றவளே! நீ உட்கார்ந்திருக்கும் ஊஞ்சலைத்
தள்ளிவிட்டு நான் தாழ்த்தி ஆட்டிவிட, நெடுநேரம் ஆடிக்கொண்டிருப்பாய்,
2
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8
மாவடுப் போன்ற கண்ணினையும் முத்துவடம் அசையும் அழகிய முலையினையும்
மாள
(இ.சொ) முன்னிலை அசைச்சொல், An expletive used with verbs in second person
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே – நற் 11/5
பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/32
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10
மாற்கு
(விகாரம்) மானுக்கு – மான்+கு – புணர்ச்சியில் வரும் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகிய விகாரங்கள்,
Change in the letters of words in canti, of three kinds, viz., tōṉṟal, tirital, keṭutal
அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/7,8
பாலைவழியில் இருக்கும் குமிழமரத்தின் வளைந்த மூக்கையுடைய நன்கு விளைந்த பழம்
துள்ளிக்குதிக்கும் இளைய மானுக்கு உணவு ஆகும்
மாற்றம்
(பெ) வஞ்சினமொழி, World of challenge; vow
மாற்றம் மாறான் மறலிய சினத்தன் – புறம் 341/7
தான் கொண்ட வஞ்சின மொழிகளைத் தப்பானாய், போர்குறித்து உண்டாகிய சினமுடையனாய்
மாற்றல்
(பெ) மாற்றுதல், changing
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம்
ஏகுவர் என்ப தாமே தம்_வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/9-12
வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிடும் அரிய காட்டுவழியில்
செல்வேன் என்கிறார் அவர்; தம்மிடத்தில்
இல்லையென்று கேட்போரின் இன்மையை மாற்ற முடியாத
இல்வாழ்க்கையை வாழமாட்டாதார்.
மாற்றலர்
(பெ) பகைவர், enemies
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/42,43
திறனில்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மறப்பண்பும், உனக்குப் பகையாயினாருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!
மாற்றார்
(பெ) பகைவர், enemies
மா இரு விசும்பில் பன் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி – பதி 64/12-14
கரிய பெரிய வானத்தே பலவாகிய விண்மீன்களின் ஒளி கெட்டுப்போக
ஞாயிறு எழுந்து தோன்றியதைப் போல, பகைவரது
மிக்க மாறுபாட்டைக் கெடுத்த நின்னுடைய வலிய தாளை வாழ்த்தி
மாற்றாள்
(பெ) சக்களத்தி, co-wife, rival wife
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/34,35
தலைவியின் காணாமற்போனதாகச் சொல்லப்பட்ட அந்த நகைகளை அந்தப் பரத்தை மேனியில் அணிந்திருப்பதைக்
கண்டு,
நொந்துபோய் தலைவியின் மாற்றாள் இவள் என்று அந்தப் பரத்தையைக் கூர்ந்து நோக்க,
மாற்று
1. (வி) 1. விலக்கு, தடு, prevent, obstruct
2. பதிலீடு செய், substitute, replace
3. வேறுபடுத்து, change, alter
– 2. (பெ) 1. நோயின் தீயவிளைவுகளை மாற்றும் மருந்து, remedy
2. கொல்லுதல், ஒழித்தல், killing, exterminating
3. மறுமொழி, reply
4. மறுதலை, மாறுபாடான நிகர், equal rivals
1.1
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 81,82
கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி
1.2
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார் – மது 459
பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு
1.3
வச்சிய மானே மறலினை மாற்று – பரி 20/84
“வசிகரிக்கும் மானே! இவ்வாறு எதிர்த்து உரையாடுவதை மாற்றிக்கொள்,
2.1
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே – குறு 377
மலர் போன்ற அழகிய மையுண்ட கண்களின் சிறப்புமிக்க நலம் தொலைய,
வளையல்கள் அழகிய மென்மையான தோள்களில் நெகிழ்ந்துபோனபோதும்
என் நோய்க்கு மாற்றான மருந்துஆகின்றது தோழி! உனக்குப் பொறுக்கமுடியவில்லையா?
நம்மால் அறிந்துகொள்வதற்கு முடியாத தலைவனோடு
நாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பு
2.2
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு – பரி 4/52,53
உன்னைப் போற்றாதவரின் உயிரிடத்திலும், போற்றுவாருடைய உயிரிடத்திலும்
முறையே கொல்லுதலும் காப்பாற்றுதலும் செய்வதில்லை, உனக்கு
2.3
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/5
“கடுமையாயிருப்போர்க்கு யாரால் சொல்ல முடியும் மறுமொழி?”
2.4
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே – புறம் 42/24
நினக்கு மறுதலையாகிய இரு வேந்தருடைய நிலத்தைக் கொள்ள நோக்கினாய்
மாற்றுமை
(பெ) மாறுபாடு, எதிர்நிலை, contrariety
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமை கொண்ட வழி – கலி 12/16-19
பின்பற்றாதிருப்பாயாக, பெருமானே நீ! காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
இறப்பும் முதுமையும் எல்லாருக்கும் உண்டு என்பதனை மறந்துவிட்டவரோடு ஒன்றுசேர்ந்து
உலகியலுக்கு ஒவ்வாத மாறுபட்ட வழியை
மாற்றோர்
(பெ) பகைவர், enemies
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை
உளன் என வெரூஉம் ஓர் ஒளி
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/5-7
கெடுதற்கரிய வலியினையுடைய பகைவர், பாசறைக்கண்ணே
உள்ளான் எனக் கேட்டு நெஞ்சு நடுங்குதற்கேதுவாகிய சிறந்ததோர் ஒளியானது
வெற்றியால் உயர்ந்த நெடிய வேலையுடைய என் தலைவன் பாலே உளது
மாறன்
(1) 1. பாண்டிய மன்னர்களின் சிறப்புப் பெயர்களிலொன்று, a title name of the Pandiya kings.
2. பாண்டிய மரபைச் சேர்ந்த சங்க காலக் குறுநில மன்னன், a chieftain of sangam period
with Pandiya lineage
1
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்
உரு கெழு கூடலவரொடு வையை
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்_கால் – பரி 24/91-93
அச்சம் வரக்கூடிய கொல்லும் தொழிலையுடைய யானைகளையும், புடைத்த தோள்களையும் உடைய பாண்டியன்
அழகு பொருந்திய தன் மதுரை மாந்தருடனே, வையையில்
வருகின்ற நீரில் புனலாடிய தன்மையை ஒப்பிடுங்கால்
மாறன் என்பது பாண்டியர் பெயர்களுள் ஒன்று. முடத்திருமாறன், பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்,
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், மாறன் வழுதி, கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, மாலைமாறன்,
ஆகியோர் மாறன் என்ற பெயர் கொண்ட சங்க காலப் பாண்டிய மன்னர்கள்
2
பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்
பெரும் பெயர் மாறன் தலைவனாக – மது 771,772
பொய்யாக்கப்படாத நல்ல புகழை உலகிலே நிறுத்தின, அலங்கரித்த மாலையினையும்,
பெரிய பெயரினையும் உடைய மாறன் (எனும் பழையன் தமக்குத்)தலைவனாயிருப்ப,
இந்த மாறன் மோகூர்ப் பழையன் மாறன் எனப்படுவான். இவன் ஒரு குறுநில மன்னன். இவன் பாண்டிய
மரபினன். பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனுக்கு நண்பன். இவன் அவையகத்தே
இளம்பல் கோசர் என்பார் சிறந்த வீரராய்த் திகழ்ந்தனர்.
மாறு
1. (வி) 1. நீங்கு, cease
2. தவிர், விலகு, abstain, refrain
3. பண்டமாற்றாக வில், sell in exchange
4. வேறுபடு, become changed, altered
5. பின்னிடு, பின்வாங்கு, withdraw, retreat
6. இடம் வேறாகு, have a change of place
7. உரு, தோற்றம், தன்மை ஆகிய ஒன்றில் வேறாகு, be transformed, converted
– 2. (பெ) 1. மறுதலை, எதிர்ப்பக்கம், oppsoite side
2. மாறுபாடு, பகை, enmity
3. மாறானது, ஒவ்வாதது, that which is not acceptable, that which is unsuitable
4. கூற்று, பதில், statement, reply
5. ஒரே ஆள்/பொருள் இரண்டு செயல்களை மாறிமாறிச் செய்வது, one person or object
doing two things one after another continuosly, Do something in turns, alternate
6. வற்றி உலர்ந்த முட்கள், dry thorn
– 3. (இ.சொ) இடைச்சொல், a particle
1.1
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் கணவன் – குறு 49/3,4
இப் பிறவி நீங்கப்பெற்று இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்,
1.2
தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலை தலைய கடல் காவிரி – பட் 3-6
தன்னை(மேகத்தை)ப் பாடிய, நீர்த்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழையைப் பெய்தலைத் தவிர்ந்து
மேகம் பொய்த்தாலும் தான் பொய்யாத (காலந்தோறும் வருகின்ற),
(குடகு)மலையை உற்பத்தியிடமாகக்கொண்ட கடற்பக்கத்துக் காவிரி(யின்)
1.3
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனி சென்றனள் – குறு 269/5,6
உப்பை விற்று அதற்கு மாற்றாக வெண்ணெல் வாங்கி வருவதற்காக
உப்பு விளையும் உப்பளத்திற்குச் சென்றாள்
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள்
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 159-163
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்,
சிறிய குழை அசைகின்ற காதினையும், மூங்கில் போன்ற தோளினையும்,
குறிதாகிய சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள்,
மோரை விற்றதனாலுண்டான உணவால் சுற்றத்தாரைச் சேர்த்து உண்ணப்பண்ணி,
1.4
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – சிறு 170,171
முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து,
ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து
1.5
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம் – நற் 164/6-10
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
மிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
பின்னிட்டுத் திரும்பிச்செல்லும் பாலைவழியில்
ஒண் பொறி கழல் கால் மாறா வயவர் – பதி 19/3
ஒளிரும் புள்ளிகளையுடைய கழல் அணிந்த கால் முன்வைத்ததைப் பின்னால் எடுக்காத வீரர்கள்
1.6
நனை ஞாழலொடு மரம் குழீஇய
அவண் முனையின் அகன்று மாறி
—————– ———————————–
நல் புறவின் நடை முனையின்
சுற வழங்கும் இரும் பௌவத்து
இறவு அருந்திய இன நாரை – பொரு 197-204
தளிர்விட்ட ஞாழலோடு, (ஏனை)மரங்களும் கூட்டமாய் உள்ள
அந்நாட்டை வெறுத்தனவாயின், அவ்விடத்தைவிட்டு அகன்று மாறிப்போய்,
——————————- ———————————————-
நல்ல முல்லைக் காட்டில் சென்றும் (அந்நில ஒழுக்கத்தையும்)வெறுத்தனவாயின்,
சுறாமீன் திரியும் கரிய கடலில்
இறவினைத் தின்ற திரண்ட நாரைகள்
1.7
பல் பூ செம்மல் காடு பயம் மாறி
அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டு – பதி 30/26,27
பலவகைப் பூக்களும் உதிர்ந்து வாடிக்கிடக்கும் காடுகளின் பயன்படும் தன்மை மாறிப்போய்,
செவ்வரக்கு போன்ற நுண்ணிய மணல் பொருந்திய மண்மேடுகளைக் கொண்டு,
2.1
ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22
வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம் – நற் 164/6-10
செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்
வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,
மிக்க பசியையுடைய குள்ளநரி அருகில் செல்லாமல்
பின்னிடும் பாலைவழியில்
புறக்கொடுத்தல் என்பது முதுகாட்டிச் செல்லுதல். மாறு புறக்கொடுத்தல் என்பது அதன் மறுதலை. அதாவது,
முதுகைக் காட்டாமல் எதிரில் பார்த்தவாறே சிறிது சிறிதாகப் பின்னாக அடியெடுத்து வைத்துச் செல்லுதல்.
மாறு புறக்கொடுக்கும் (நாற்றம் பொறாது) பின்னே சென்று நிற்கும் – ஔவை.சு.து. உரை
மாறு – ஏதுப்பொருள்பட வந்த இடைச்சொல் என்பர் ஔவை.சு.து. தம் விளக்கவுரையில்.
வைதேகி ஹெர்பர்ட் அம்மையார் இதனைக் காரணப் பொருள் உணர்த்தும்) இடைச்சொல்,
a particle which implies reason என்பார்
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய் புரி பழம் கயிறு போல – நற் 284/9,10
ஒளிவிடும் ஏந்திய கொம்புகளைக் கொண்ட யானைகள் ஒன்றோடொன்று மாறாகப் பற்றி இழுத்த
தேய்ந்த புரிகளைக் கொண்ட பழைய கயிற்றினைப் போல – பின்னத்தூரார் உரை
களிறு மாறு பற்றிய – இரண்டு களிறுகள் இருதலையும் தனித்தனியே பற்றி ஈர்த்தலால்
2.2
ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 63-65
பகைவருடைய
நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்,
கண்ணுக்கு அழகான கண்ணியினையும் உடையானும் ஆகிய கடிய தேரினையுடைய பாண்டியனின்
2.3
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி – மலை 62
தன் அறிவிற்கு மாறானவற்றை நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடைய
2.4
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால்
தலை தொட்டேன் தண் பரங்குன்று – பரி 6/94,95
“இந்த வையை ஆறு என்ற கூற்று எதனால்? என் கையால்
உன் தலையைத் தொட்டுக் கூறுகிறேன், குளிர்ந்த திருப்பரங்குன்றத்தின் மீது ஆணை”
2.5
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப – குறு 293/5,6
நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை
தேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க
நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர
உண்கும் – புறம் 125/2-4
நெருப்பு தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய நிணம் அசைந்த கொழுவிய தடிகளை
பெரிய உடலிடத்தையுடைய கள் வார்ந்த மண்டையொடு முறை முறையாக ஒன்றற்கொன்று மாறுபட
உண்பேமாக
2.6
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் – புறம் 359/1
முற்றவும் கெட்டுத்தேய்ந்தழிந்த பல முட்கள் கிடக்கின்ற பக்கத்தில்
மாறு வற்றியுலர்ந்த முட்கள் – ஔவை.சு.து. உரை விளக்கம்
3
அம்ம வாழி தோழி நம் ஊர்
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன்
இன் இனி வாரா மாறு-கொல்
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/3
தோழியே கேள்! நம் ஊருக்கு
அடுத்தடுத்து வந்து நம்மோடு தங்கும் நறிய குளிர்ந்த மார்பினையுடையவன்
இப்போதெல்லாம் வருவதில்லையாதலாலோ என்னவோ
சிலவாய் ஒழுங்குபட்ட கூந்தலையுடைய என் நெற்றியில் பசலை பாய்ந்தது.
மாறு – ஏதுப்பொருட்டாகிய ஓர் இடைச் சொல் – பொ.வே.சோ. உரை விளக்கம்
(பார்க்க : 2.1)
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே – நற் 47/10,11
அன்னையானவள் எடுப்பித்த முருகவழிபாடு உன்
பொன்னைப் போன்ற பசலைக்கு பயன்படாததால்
மாறு – ஏதுப்பொருள்பட வந்ததோர் இடைச்சொல். ஔவை.சு.து உரை விளக்கம்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/12
சிறந்த தந்தையின் பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் –
மாறு – மூன்றனுருபின் பொருள்படுவதோர் இடைச்சொல். பின்னத்தூரார் உரை விளக்கம்
மாறுகொள்
(வி) 1. மாறுபடு, எதிராகு, be opposed
2. பகைமைகொள், be inimical
3. வேறுபடு, be different
1
தன் ஐயர்
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி
குருதியொடு பறித்த செம் கோல் வாளி
மாறு கொண்டு அன்ன உண்கண் – குறு 272/4-7
தன் தமையன்மார்
முழக்கமிடும், மிகுந்த வேகத்தையுடைய ஆண்மானின் மேல் அழுந்துமாறு எய்த,
குருதியோடு பிடுங்கிய சிவந்த கோலையுடைய அம்புகள்
எதிரிட்டு நின்றதைப் போன்ற மையுண்ட கண்களையும்
2
மாறுகொண்டோர் மதில் இடறி – புறம் 387/5
பகைமைகொண்டோருடைய மதில்களைத் தகர்த்து
3
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136
(குடிப்பதற்கு)மாற்றுப்பொருளாக (நீர்)சொரிந்தன, ஊறுகின்ற நீரையுடைய உயவைக்கொடி
நீரோடே மாறுகொள்ளுமாறு படர்ந்தன விடாய்க்காலத்தே உண்டார் வாய் நீர் ஊறுதற்குக் காரணமான
உயவைக்கொடி – நச். உரை
தாகத்தைத் தணிக்க நீரிலிருந்து மாறுபட்டுப் படர்ந்திருந்த,உண்டால் வாயில் நீர் ஊறும் தன்மை கொண்ட
உயவைக் கொடி. – பொ.வே.சோ. உரை
மாறுபடு
(வி) 1. மாறிப்போ, be changed
2. எதிராகு, be opposed
1
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின்
மாறுபட்டு ஆங்கே மயங்குதி – கலி 91/19,20
நான் உன்னுடன் வேறுபட்டு நிற்கும்போது நெஞ்சு கலங்குகின்றாய்! உன் கைக்குள் அகப்பட்டுக்கிடந்தால்
மனம் மாறிப்போய் வேறு மங்கையர்பால் மயங்கித்திரிகின்றாய்!
நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் – மலை 241
ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக எட்டெடுத்துவைக்கும் காலடிகள் வழி மாறிப் போகலாவீர்
2
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும்
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே
பூ போல் உண்கண் பொன் போல் மேனி
மாண் வரி அல்குல் குறு_மகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே – குறு 101
விரிந்த அலைகளையுடைய பெரிய கடலால் சூழப்பட்ட இந்த உலகமும்,
மிகவும் அரிதில் பெறக்கூடிய சிறப்புமிக்க தேவருலகமும்,
இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் இதற்கு ஒப்பாகமாட்டா –
பூப்போன்ற மைதீட்டிய கண்களும், பொன்னைப் போன்ற மேனியும்,
சிறப்பு மிக்க வரிகளைக் கொண்ட அல்குலும் உடைய தலைவியின்
தோள்கள் (தழுவுதலால்)மாறுபடும் நாளொடு எமக்கு-
தோள் மாறுபடுதலாவது ஒருவர் இடத்தோள் மற்றவர் வலத்தோளிலும், ஒருவர் வலத்தோள் மற்றவர்
இடத்தோளிலும் பொருந்தத் தழுவுதல். – உ.வே.சா உரை விளக்கம்.
மாறுமாறு
(பெ) பதிலுக்குப்பதில், tit for tat – An equivalent given in return
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/19,20
அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்;
அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் பதிலுக்குப்பதில் அதிர முழங்கும்
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
குன்றம் குமுறிய உரை – பரி 8/34,35
மணவிழா முரசுகள் முழங்க முழங்க, அம் முழக்கத்திற்குப் பதிலுக்குப்பதில் முழங்கும் உன்
திருப்பரங்குன்றம் முழங்கிய முழக்கம்;
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப
அல்லாந்தான் போல பெயர்ந்தான் – கலி 111/20,21
அவன் சொல்லிய சொற்களுக்கெல்லாம், பதிலுக்குப்பதில் நான் சொல்ல,
மனம் கலங்கியவன் போல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்,
மான்
1. (வி) 1. ஒப்பாகு, equal, resemble
2. தோன்று, appear
– 2. (பெ) 1. விலங்கு, animal
2. deer, antelope
3. குதிரை, horse
1.1
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6
பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும் – உ.வே.சா உரை
6. கண்ணின் – இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு உவம உருபோடு வந்தது (தொல்.உவம.11.பேர்);
மான என்பது வினை, உவமத்தின் கண் வந்தது (தொல்.உவம.12.பேர்) – உ.வே.சா உரை விளக்கம்
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல்கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோஅகம் 265/1-3
புகை போலப் பொலிவுற்று அகன்ற வானில் உயர்ந்து
பனி தவழும் தீச்சுடரை ஒப்பத் தோன்றும்
இமயமாய செவ்விய மலையினை ஒக்குமோ
1.2
வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்நற் 389/1,2
வேங்கை மரங்களும் புலிபோல் தோன்றும் பூக்களை விளைவித்தன; அருவிகளும்
தேன் மணம் மிகுந்த நெடிய மலையில் நீலமணி போலத் தோன்றுகின்றன – புலியூர்க் கேசிகன் உரை
மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது – வைதேகி ஹெர்பெர்ட் உரை
2.1
ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 139
சிங்கம் (ஆகிய)நல்ல விலங்கின், வருத்துதலை உடைய குருளையானது
2.2
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
மடப்பத்தையுடைய மான்(போலும்) பார்வையையும்; ஒளியுள்ள நெற்றியையும் (உடைய)விறலியரின்
2.3
பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே – நற் 311/1,2
மழை பெய்தால், விடுபட்ட குதிரையின் பிடரிமயிரைப் போன்று செறிவாகச் சாய்ந்து அடித்து,
பெரிய கதிர்களையுடைய நெல்லின் புது அறுவடையைக் கொடுக்கும்;
மான் என்ற சொல்லுக்கு அடைமொழி கொடுத்து, அது இன்ன விலங்கு என்று குறிப்பிடப்படுவதும் உண்டு.
1. சிஙகம் – வயமான், அரிமான்
பொறி வரி புகர்_முகம் தாக்கிய வய_மான் – பெரும் 448
‘ஆழமாய்ப்பதிந்த இரேகைகளும், புள்ளிகளும் உள்ள முகத்தினையுடைய யானையைப் பாய்ந்த அரிமா
அரி மான் வழங்கும் சாரல் பிற மான்
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு – பதி 12/5,6
சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில், பிற விலங்குகளின்
திரளாகக் கூடும் இனங்களைக் கொண்ட கூட்டம் நெஞ்சதிர நிற்பதைப் போல
2. குதிரை – கடுமான், கலிமான்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே – நற் 14/11
கடிதாகச் செல்லும் குதிரையையுடைய புல்லி என்பானது வேங்கடமலையைக் கடந்து சென்றவர்
விரி உளை கலி_மான் தேரொடு வந்த – கலி 75/16
அடர்ந்த பிடரி மயிரும், மன ஊக்கமும் கொண்ட குதிரை பூட்டிய தேரோடு அவன் கூட்டி வந்த
3. முள்ளம்பன்றி – முளவு மான், எய்ம்மான்
வன் கை கானவன் வெம் சிலை வணக்கி
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு – நற் 285/3,4
ஆற்றல் மிக்க கைகளையும் கொண்ட கானவன், தன் கடுமையான வில்லை வளைத்து,
மார்பில் செலுத்தி வீழ்த்திய ஆண் முள்ளம்பன்றியோடு
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை – புறம் 177/13
மறவர் எய்து கொடுவரப்பட்ட முள்ளம்பன்றியினது கடியப்பட்ட தசையினது
4. யானை – நெடும் கை வன் மான், அடுமான்
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த – குறு 141/4
நீண்ட கையையுடைய யானையின் கடிய பகையினால் வருந்திய
அனையை அல்லை அடு_மான் தோன்றல் – புறம் 213/8
அத்தன்மையாகிய பகைவனல்லை, பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ
5. வரையாடு – வருடை மான்
செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1
செம்மையான மலையில் வாழும் வரையாட்டின் குட்டி
6. புலி – வரி கிளர் வயமான்
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் – அகம் 0/14,15
கோடுகள் அழகுடன் விளங்கும் வலிய புலியின் தோலை உடுத்த;
யாழ் (இசையின் இனிமை)வாய்ந்த நீலமணி(போன்ற) மிடற்றை உடைய அந்தணன்
மான்மதசாந்து
(பெ) கஸ்தூரி, musk
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து
வடு படு மான்மதசாந்து ஆர் அகலத்தான் – பரி 16/43,44
மீண்டும் மீண்டும் நீராடும் பரத்தையரைத் தழுவியதால், குழைந்துபோய்
உருக்குலைந்துபோன கத்தூரிச் சாந்து நிறைந்த மார்பினையுடைவன்,
மான்ற
(பெ..எ) மால் என்ற வினையின் அடியாக எழுந்தது.
மயங்கிய, விரவிய, கலந்த, mix, mingle, bled
1
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் – நற் 239/1,2
மேற்றிசையில் சாய்ந்த ஞாயிறு மேலை மலையில் மறையவும்
இருள் மயங்கிய மாலைப்போதில் கள்குடித்து மகிழ்ந்த பரதவர்கள்
ஞான்ற, மான்ற என்பன ஞால், மால் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்ச வினை
இருள் விரவிய அந்திமாலை மான்ற மாலை எனப்பட்டது. – ஔவை.சு.து.உரை/உரை விளக்கம்
2
மாலை மான்ற மணல் மலி வியல் நகர் – நற் 361/6
மாலையொளி மயங்கிய மணல் பரந்த அகன்ற மனைக்கு
மான்ற : மால் என்பதல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினை – ஔவை.சு.து.உரை/உரை விளக்கம்
3
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என்
நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் – கலி 139/4-7
சன்றோர்களே! உங்களுக்கு ஒன்றனை எடுத்துச் சொல்வேன்! மயங்கவைக்கும்
மழையிடையே வரும் மின்னலைப் போல் தோன்றி, ஒருத்தி
தன் ஒப்பனையுடன் தன் உருவத்தையும் எனக்குக் காட்டுமளவுக்கு என்மேல் கருணைகொண்டாள், என்
நெஞ்சத்தை வழியாகக் கொண்டு என்னுள் வந்துவிட்டாள், அது முதல் துயில்கொள்ளேன்,
பார்க்க :மால் – 1. (வி) 1,2,3
மான்றமை
(பெ) மயங்கினமை, blending
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 238/1
மரங்கள் ஒன்றோடொன்று பின்னியிருத்தல் அறியப்படாதவாறு நெருங்கியுள்ள காட்டின்கண்
மான்றன்று
(வி.மு) 1. மயக்குகின்றது, confuses
2. (மழை)பெய்கின்றது, rains, showers
3. (பொழுது)மயங்கிவிட்டது, வேறாகிவிட்டது, has changed, (day) has darkened
1
ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/6-10
மிடுக்கான நடையையும்
மிகுந்த பெருமிதத்தையும் கொண்ட யானைப் படையையுடைய நெடுமான் அஞ்சி
இரக்கமுள்ள நெஞ்சத்தோடு, தனது புகழ் நெடுந்தொலைவுக்கு விளங்க
தேர்களை வாரிவழங்கும் அவனது அரசிருக்கை காண்போரை மயங்க வைப்பதைப் போல
மழைமுகில் மாரியைப் பெய்து நின்று என்னை மயக்குகின்றது – ஔவை.சு.து.உரை
மான்றன்று: மால் என்பதன் அடியாகப் பிறந்த இறந்தகால முற்றுவினைத் திரிசொல் – ஔவை.சு.து.உரை விளக்கம்
2
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/9-10
இரவலர்க்குத் தேர்களைப் பரிசுகொடுக்க இருக்கின்ற நாளோலக்கம் போல
மேகம் மழைபெய்யத் தொடங்கி மாறாது ஒரு தன்மையாய்ப் பெய்யாநின்றது – பின்னத்தூரார் உரை.
3
துறையும் மான்றன்று பொழுதே – அகம் 300/16
நீர்த்துறையிலும் பொழுது மயங்கிவிட்டது
மான்றால்
(வி.எ) மான்று + ஆல் , ஆல் அசை, பார்க்க மான்று –
1
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/13
தொங்குவது போலத் தோன்றும் ஞாயிறு மயங்கி மறைந்திட்டதாக
மான்று
(வி.எ) 1. (இருளோடு மயங்கி) கலந்து, இருட்டிக்கொண்டு, mixed with darkness, darkening
2. (கார்காலம் என்று மயங்கி) குழம்பி, getting confused
3. (மனம் மயங்கி) வருந்தி, being distressed
1
மான்று உடன்
உரவுரும் உரறும் நீரில் – நற் 238/7,8
எங்கும் இருள் மயங்க
வலிய இடி முழங்கும் இயல்பினால் – ஔவை.சு.து.உரை
2
மழையும் தோழி மான்று பட்டன்றே – குறு 289/5
தோழி! மழையும் (கார்ப்பருவம் என்று) மயங்கிப் பெய்கின்றது
3
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/2-5
கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில்
மிக்க பாதுகாப்பை உடைய அகன்ற இடத்தில் குஞ்சுபொரித்துக் காத்துக்கிடக்கும்
வளைந்த அலகினை உடைய (தன்)பேடைக்கு இருப்பு உணவைக் கொண்டுவர,
மயங்கி இரையை விரும்பி எழுந்த சிவந்த காதுகளை உடைய எருவைப் பருந்து,
மான
(இ.சொ) ஓர் உவம உருபு, A word of comparison
புலவு நுனை பகழியும் சிலையும் மான
செ வரி கயலொடு பச்சிறா பிறழும் – பெரும் 269,270
புலால் நாறும் முனையினையுடைய அம்பையும் வில்லையும் ஒப்பச்
சிவந்த வரியினையுடைய கயல்களோடே பசிய இறாப் பிறழ்ந்துநின்ற,
கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து – மது 568
மழைக்கு மலர்ந்த மலர்களின் குவியலைப் போல (ஏனைப்)பூக்களையும் பரக்கச்சூடி
மானும்
(வி.மு) பார்க்க : மான் – 1.1, 1.2
1
வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும் – நற் 389/1,2
வேங்கை மரங்களும் புலிபோல் தோன்றும் பூக்களை விளைவித்தன; அருவிகளும்
தேன் மணம் மிகுந்த நெடிய மலையில் நீலமணி போலத் தோன்றுகின்றன – புலியூர்க் கேசிகன் உரை
மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது – வைதேகி ஹெர்பெர்ட் உரை
2
பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6
பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும் – உ.வே.சா உரை
6. கண்ணின் – இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு உவம உருபோடு வந்தது (தொல்.உவம.11.பேர்);
மான என்பது வினை, உவமத்தின் கண் வந்தது (தொல்.உவம.12.பேர்) – உ.வே.சா உரை விளக்கம்
3
புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல்கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோ – அகம் 265/1-3
புகை போலப் பொலிவுற்று அகன்ற வானில் உயர்ந்து
பனி தவழும் தீச்சுடரை ஒப்பத் தோன்றும்
இமயமாய செவ்விய மலையினை ஒக்குமோ