கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
போ
போக்கு
போகம்
போகில்
போங்கம்
போத்த(தல்)
போத்து
போதர்
போதரு(தல்)
போது
போந்து
போந்தை
போர்
போர்க்களம்
போர்ப்பு
போர்ப்புறு
போர்பு
போர்முகம்
போர்வு
போல்
போல
போலா
போலாது
போலாம்
போலாய்
போலாள்
போலான்
போலும்
போழ்
போழ்து
போழ்வு
போற்று
போறல்
போறி
போறிர்
போன்ம்
போன்றிசின்
போ
(வி) 1. அகலு, be off
2. நீங்கு, go off
3. ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்துக்குச் செல், go
4. இல்லாமல் போ, cease to exist
5. ஓங்கு, be tall
6. பரவு, spread
1
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி – கலி 94/22
“போ! சீச்சீ! அரை மனிதனே! இனி நீ இந்நிலையைக் கைவிடு!
2
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும் – பட் 99,100
தீவினை போகக் கடலாடியும்,
(பின்னர்)உப்புப் போக (நல்ல)நீரிலே குளித்தும்,
3
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர்
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும்
எழு நின் கிளையொடு போக என்று தத்தம்
கொழுநரை போகாமல் காத்து முழு நாளும்
வாயில் அடைப்ப வரும் – கலி 109/22-26
ஆடவர் எவருக்கும் இவள் அணங்கான வருத்தும் தெய்வமாக அமைவாள் என்று ஊர்ப்பெண்கள்
மோர் வேண்டாம், புளிப்புக்கு மாங்காய் ஊறுகாயை வைத்துக்கொள்வோம், இந்தப் பக்கமே வரவேண்டாம்,
உன் சொந்தபந்தங்களோடு ஊரைவிட்டுப் போய்விடு என்று அவரவருடைய
கணவன்மாரை வெளியில் போகவிடாமல் காத்துக்கொண்டு நாள்முழுவதும்
வாசலையும் அடைத்துக்கொண்டு இருக்கவேண்டி வரும்.
4
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் – கலி 144/45-47
ன்னைக் காக்காமல் கைவிட்டவனை நான் தேடிக் கண்டுபிடிக்கும் இடத்தை நீ எனக்கு விட்டுத்தராமலிருந்தால்
பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி
என் புறங்காலால் உன் நீர் எல்லாம் வற்றிப்போக இறைத்துவிடுவேன்
5
கள்ளி போகிய களரி அம் பறந்தலை – புறம் 225/7
கள்ளி ஓங்கிய களர் நிலமாகிய பாழ்பட்டவிடத்து
6
தம் பெயர் போகிய ஒன்னார் தேய – பதி 88/4
தங்கள் புகழை எங்கும் பரப்பிய பகைவராகிய கடம்பர்கள் தம் நிலையில் தாழ்வுற,
போக்கு
1. (வி) 1. போகச்செய், ஓட்டு, cause to go, send, drive
2. கொடு, give
3. நீக்கு, விலக்கு, remove, dispel
4. இல்லாமல் செய், ger rid of
5. வெளியில் அனுப்பு, send out
6. நீளச்செய், விரிவாக்கு, expand
7. அழி, destroy, ruin
8. செய்து முடி, complete, finish
9. கட்டு, bind, fasten
10. குத்து, pound
– 2. (பெ) 1. குற்றம், fault, blemish
2. போக்குதல், அழித்தல், obliteration
3. போக்கிடம், தடம், வழி, route, passage
4. கடந்துபோதல், crossing over
5. கழன்று விழுதல், get loosened and drop down
6. ஒருவர்/ஒரு பொருள் செல்லும் விதம்,
the way in which somebody behaves/something moves
7. நீர், காற்று, தேர் ஆகியவற்றின் ஓட்டம்,
the flow or movement of water, wind or a chariot
8. போதல், leaving
1.1
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ – அகம் 30/5,6
உப்பைக் கொண்டுசெல்லும் உமணர் அரிய துறைகளில் செலுத்தும்
வரிசை வண்டிகளின் வலிய காளைகளைப் போலக் குழுமி
1.2
மன்றுபடு பரிசிலர் காணின் கன்றொடு
கறை அடி யானை இரியல்_போக்கும்
மலை கெழு நாடன் மா வேள் ஆய் – புறம் 135/11-13
மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின், கன்றுடனே
கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும்
மலையையுடைய நாடனே, மா வேளாகிய ஆயே
1.3
நோக்கும்_கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார்
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து
போக்கும்_கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம்
காக்கும் இடம் அன்று – கலி 63/1-4
“பார்க்கும்போது நம்மைப் பார்த்துத் தொழுகின்றான், அதனைப் பிறர் காண்பாரே
என்று சற்றும் ஆராய்ந்துபாராதவன், ஊரார் பழி தூற்றுவர் என்று அவனை விலக்கி,
அவனை நீக்கினால், அவ்வாறு நீக்குவதால் தனக்கு ஏற்படும் வருத்தத்தை நினைந்து போகாமல் இருப்பான், மேலும், நாம்
அவனை இங்கு வராமல் காப்பது இயலாது
1.4
ஆர உண்டு பேர் அஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை மற்று அவன் – பொரு 88,89
நிறைய உண்டு, பெரிய வருத்தத்தை இல்லையாக்கி,
மகிழ்ச்சியோடே (யான்)நின்ற போது
1.5
புலி பொறித்து புறம் போக்கி – பட் 135
(பாயும்)புலி(ச்சின்னம்) இட்டு, (பண்டசாலைக்கு)ப் வெளியில் அனுப்பி
1.6
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 285
பருத்த நிலைகளைக்கொண்ட மாடங்களையுடைய உறையூர் (என்னும் தன்னூரை)விரிவாக்கி,
1.7
வன் கை பரதவர் இட்ட செம் கோல்
கொடு முடி அம் வலை பரிய போக்கி
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடு_நீர் சேர்ப்பன்_தன் நெஞ்சத்தானே – நற் 303/9,12
வலிமையான கைகளைக் கொண்ட பரதவர் வீசிய நேரான கோலையும்
வளைந்த முடிச்சுகளையும் கொண்ட அழகிய வலை அறுபடுமாறு கிழித்து
கடுமையாக முரண்பட்டுப் பாய்ந்துசெல்லும் சுறாமீன்கள் சஞ்சரிக்கின்ற
ஆழமான நீர்த்துறையையுடைய தலைவன் தன் நெஞ்சத்தில் –
1.8
நல_தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும்
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/1-4
பெண்மை நலமும் அழகும் வாய்ந்த சலவைப்பெண், கஞ்சியில் தோய்த்து எடுத்து
ஒருதரம் கல்லில் அடித்து முடித்து, குளிர்ந்த குளத்தில் இட்ட,
நீரில் அலசிவிடாத பருத்த ஆடையின் முறுக்கைப் போன்றிருக்கும்
பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்
1.9
புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள்
அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி
கை புதைஇயவளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்
போக்கி சிறைப்பிடித்தாள் – பரி 7/51-56
அனைவரும் விரும்பத்தக்க குணங்களையுடைய பாண்டியனின் வையை ஆற்றில் ஆடிமகிழ்வோருள்
ஒருத்தி, பீச்சுங்குழலுள் நீரைச் செலுத்தி மற்றவர்மேல் பீச்ச, அவர்கள் தமது தூய மலர் போன்ற கண்கள்
இமைக்காமல் விழித்து நோக்க, அங்கு அவர்களுள் ஒருத்தி
கைகளால் கண்களை மூடிக்கொண்டவளை
வெற்றியால் இறுமாந்து தன்னுடைய பொன் சரடால், கரும்பு வரையப்பட்ட அணை போன்ற மென்மையான தோள்களைக்
கட்டிச் சிறைப்பிடித்தாள்;
1.10
சுழல்மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை – அகம் 393/10-12
திரிகையினால் தேய்த்த சுளகினால் கொழிக்கப்பட்ட வெள்ளிய அரிசியை
பூண் மாட்சிமைப்பட்ட உலக்கையால் மாற்றி மாற்றிக்குத்தி
உரலில் பெய்து தீட்டிய உரலின் குழி நிறைந்த அவ்வரிசியை
2.1
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர்
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு – பொரு 85-88
இழைகளை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்,
குற்றம் அற்ற பொன்(னால் செய்த)வட்டில் நிறைய, பல முறையும்
வார்த்துத் தந்துகொண்டே இருக்க, (வழிப்போன)வருத்தம் போம்படி,
நிறைய உண்டு
2.2
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின்
தொல் மா இலங்கை கருவொடு பெயரிய
நன் மா இலங்கை மன்னருள்ளும் – சிறு 116-120
நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும்
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
(கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையினையுடைய,
பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை (தான்)தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய
நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும்,
2.3
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி
முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 112-115
பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,
குவிந்த இடத்தையுடைய வேலியில் (ஒன்றோடொன்று)பிணைக்கப்பட்ட வலைகளை மாட்டி,
முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும்
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களைப் (வேறு)போக்கிடம் இல்லாதவாறு வளைத்து(ப் பிடித்து)
2.4
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை – பெரும் 431
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
2.5
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே – நற் 136/9
கழன்று போகாத பொன்னாலான வளையல்களை என் கைகளில் செறித்தார்.
2.6
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் – நற் 165/1,2
மருண்ட பார்வையையுடைய காட்டுப்பசுவின் அரிய மார்பினில் பாயாது
குறிதப்பிய அம்பு சென்ற முறையை நினைத்துப்பார்த்த கானவன்
2.7
புரி மாண் புரவியர் போக்கு அமை தேரர் – பரி 19/13
கண்டோர் விரும்பும் மாண்புள்ள குதிரையில் செல்வாரும், நல்ல ஓட்டம் அமைந்த தேரில் செல்வாரும்,
2.8
புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி
பெருகிய செல்வத்தால் மீட்டுத்தருவது இயலுமோ? – கலி 15/10,11
பொருள்மீது விருப்பம் கொண்டு, நீ இவளைக் கைவிட்டுப் போக எண்ணி, புதிதாகச் சேர்த்துப்
பெருகிய செல்வத்தால் மீட்டுத்தருவது இயலுமோ?
போகம்
(பெ) நுகரும் இன்பம், pleasures of life
போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது – புறம் 8/2
நுகருமின்பத்தை விரும்பி, பூமி பிற வேந்தர்க்கும் பொது என்னும் வார்த்தைக்குப் பொறாது,
போகில்
(பெ) பறவை, bird
புது கலத்து அன்ன கனிய ஆலம்
போகில்_தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/1,2
புதிய மண்பாண்டத்தைப் போன்ற நிறத்தையுடைய கனிகளைக் கொண்ட ஆலமரம்,
பறவைகள் தன்னைவிட்டுப் போவதைத் தடுத்து நிறுத்தும் தன்மையுடைய கடினமான பாலை வழி
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் – ஐங் 325/1,2
வேனில் காலத்து அரசமரத்தின் இலைகள் எழுப்பும் ஒலியினைக் கேட்டு வெருண்டு
பறவைகள் தம் உணவினை உண்ணாமல், வேறிடத்துக்குப் பறந்து செல்லும்,
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் – அகம் 129/8,9
பருத்த வயிற்றினையுடைய இளங்காயைப் பேடைகட்கு அருத்தி
ஆண்பறவைகள் பிளந்து போகட்ட பஞ்சினையுடைய வெள்ளிய கொட்டையை
’போகில்கள் தம் இளம் பேடைக்கு ஊட்டிவிடும்’ என்று வருவதால், போகில் என்பது ஆண்பறவையைக்
குறிக்கும் என்பர்.
போங்கம்
(பெ) மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி – Adenanthera pavonina
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி – குறி 74
இதன் பூக்கள் சற்று நீளமாயும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும்.
கொட்டைகள் செந்நிறமாயும் பிரகாசமானவையாயும் இருக்கும்.
மஞ்சாடி விதைகளே பழங்கால இந்தியாவில் தங்கம் போன்ற பெறுமதிப்பு மிக்க மாலைகளை நிறுப்பதற்குப்
பயன்பட்டன. மஞ்சாடி விதைகள் கழுத்தணிகள், கைம்மாலைகள் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன
போத்தரு(தல்)
(வி) 1. வருவி, மீட்டுத்தா, get back
2. போகவிடு, let go
3. போ, go, proceed
4. போய்க்கொண்டுவா, go and bring, fetch
5. வெளியில்வா, come out
1
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின்
யாங்கு ஆவது-கொல் தோழி – கலி 137/24-26
காதலர் இப்படிப்பட்டவராக இருப்பதால், அவர் நமக்கு
நமது இனிய உயிரைக் காக்கும் மருத்துவராக இருப்பது
எப்படி ஆகும், தோழியே!
2
ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம்
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/17,18
படிப்படியாக இன்றி,விரைவாக உயிரைக் கவரும் உன் வடிவழகினை அறிந்தும், அதற்கு அழகூட்டி, தம்முடைய
செல்வச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?
3
நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான் – கலி 84/4,5
நீ
நமது நல்ல வாசல் வழியாகப் போன பொழுது,
4
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால்
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் – கலி 39/1-4
“விருப்பம் தரும் வகையில் வேகமாக வரும் வெள்ளத்தில் எங்களோடு நீராடிக்கொண்டிருந்தவள்
தன் தாமரை போன்ற கண்களை மூடியவாறு, அச்சங்கொண்டு கால்கள் தளர்ந்ததினால் வெள்ளத்தோடு செல்ல,
ஓர் இளைஞன், தன் நீண்ட சுரபுன்னையின் நறிய குளிர்ந்த மாலை அசைந்தாடப் பாய்ந்து, இரக்கத்தோடு
பூண் அணிந்த இவளின் மார்பைத் தன் மார்போடு அணைத்து வந்து கரைசேர்த்தான்
5
பெரும் புலர் விடியலின் விரும்பி போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என – நற் 80/4,5
பெரிய இருள் நீங்கும் விடியற்காலத்தில் விருப்பத்தோடு வந்து,
உடுக்கும் தழையும், சூடும் மாலையும் தந்தான் இவன் என்று
போத்து
(பெ) எருமை, புலி, மான் போன்ற விலங்குகளின் ஆண்,
male of animals like buffalo, tiger, deer etc.,
புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 138
ஆண்புலியை ஒத்த, குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன்
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து – நற் 186/5
வேனில்காலத்து பச்சோந்தியின், தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் முதிய ஆணானது
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து – நற் 330/1
அகன்ற கொம்புகளையுடைய எருமையின் சொரசொரப்பான பிடரியைக் கொண்ட கரிய ஆணானது,
முதலை போத்து முழு_மீன் ஆரும் – ஐங் 5/4
ஆண் முதலையானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும்
நீளிரும் பொய்கை இரை வேட்டு எழுந்த
வாளை வெண் போத்து உணீஇய நாரை – அகம் 276/1,2
நீண்ட பெரிய பொய்கையில் இரையை விரும்பிப் புறப்பட்ட
வெள்ளிய வாளைப் போத்தினை உண்ணும்பொருட்டு, நாரையானது
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர – அகம் 386/1,2
பொய்கைக்கண்ணுள்ள புலால் நாறும் பெரிய நீர்நாயின் ஆண்
நாட்காலத்தே வாளையாய இரையினை ஆராயும் ஊரையுடைய தலைவ
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி – புறம் 364/4
கரிய ஆட்டுக்கிடாயை வீழ்த்து அதன் ஊனைத் தீயிலிட்டுச் சுட்டு
போதர்
(ஏ.வி.மு) போதருக என்பதன் விகாரம், சென்று இருப்பாய் – go and be there
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ்
போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 94/40,41
ஒளிகுன்றாத பொன்தகட்டு உருவினனே! அரண்மனைக்கு வெளியே சோலையின் நுழைவிடத்துக்குப்
போயிருப்பாய்! நெஞ்சாரக் கட்டிப்பிடித்துத் தழுவிக்கொள்வோம்!
போதரு(தல்)
(வி) 1. போ, செல், go, proceed
2. வா, come
3. திரும்பு, வந்துசேர், come back, return
1
நீயும் தவறு இலை நின்னை புறங்கடை
போதர விட்ட நுமரும் தவறு இலர் – கலி 56/30,31
உன்மீதும் தவறில்லை; உன்னை வெளியே
போகவிட்ட உன் வீட்டார் மீதும் தவறில்லை;
2
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள்
போதரின் காண்குவேன்-மன்னோ – கலி 145/32,33
விரைவாக, என் காதலரை அழைத்துக்கொண்டு, கடலைக் கிழித்துக்கொண்டு காலையில்
இங்கு வந்தால் அவரைக் காண்பேன்,
3
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள
நல்ல காண்குவம் மாஅயோயே
பாசறை அரும் தொழில் உதவி நம்
காதல் நன் நாட்டு போதரும் பொழுதே – ஐங் 446
முல்லை மணக்கும் கூந்தல் மேலும் மணங்கமழ,
நல்ல இன்பங்களைக் காண்போம், மாநிறத்தவளே!
பாசறையில் தங்கிச் செய்யும் அரிய போர்த்தொழிலில் மன்னனுக்கு உதவிவிட்டு, நம்
அன்புக்குரிய நல்ல நாட்டுக்கு நான் திரும்பும் பொழுது.
போது
(பெ) 1. மலரும் பருவத்து அரும்பு, Flower bud ready to open;
2. பொழுது, நாள், time, day
1
முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது – சிறு 183
முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
கூம்பிய நிலையில் இருக்கும் மொட்டு, முறுக்கு அவிழ்ந்து, சற்றே விரிந்து மலரத்தொடங்கும் நிலையில்
போது எனப்படும். இதனைக் கீழ்க்கண்ட அடிகளால் உணரலாம்.
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை – மது 654
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/6
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை – நற் 231/7
போது அவிழ் தாமரை அன்ன நின் – ஐங் 424/3
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் – கலி 118/10
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/3
போது விரி பகன்றை புது மலர் அன்ன – புறம் 393/17
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த – அகம் 269/23
2
போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/14
அவன் ஊரின்கண் இருந்தேனாகக் கழிந்த நாட்களை அறியேனாயினேன்
போந்து
1. (வி.எ) போய், having gone
– 2. (பெ) பனை, பனங்குருத்து, பார்க்க : போந்தை – 1
1
மன்றம் போந்து மறுகு சிறை பாடும்
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க – பதி 23/5,6
ஊர்ப்பொதுவிடத்துக்குப் போய் தெருவின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற
கூத்தரும் பாணருமான மக்களின் கடும் பசி நீங்க,
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப – பதி 66/14,15
போரை மேற்கொள்ளும் வீரர்கள் பனங்குருத்தோடு சேர்ந்து தொடுத்த
கொற்றவை வாழும் வாகை மரத்தின் உச்சியில் பஞ்சினைக் கொண்ட பூவைப் போலப்
போந்தை
(பெ) 1. பனை, palmyrah palm
2. சோழநாட்டிலுள்ள ஓர் ஊர், a city in chOzha land
1
வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின்
கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு – குறு 281/1,2
வெள்ளிய மணற்பரப்பில் தழைத்த பசிய அடியையும், கருக்கினையும் உடைய
திரண்ட பனையின் உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையோடு சேர்த்து வைத்த
2
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
பெரும் சீர் அரும் கொண்டியளே – புறம் 338/4,5
நெடுவேள் ஆதன் என்பானது போந்தை என்னும் ஊரைப் போன்று
பெருத்த சீருடனே அரும் போர் உடற்றி பகைவரிடத்தே கொண்ட செல்வமுடையவள்
போர்
1. (வி) 1. அணி, தரி, உடுத்து, put on, wrap oneself in
2. மூடு, மறை, envelope, cover, hide
– 2. (பெ) 1. யுத்தம், சண்டை, fight, war, battle
2. சிறுசண்டை, quarrel
3. பொருதல், இயைந்து பொருந்துதல், joining fast together
4. குவியல், heap, accumulation
5. வைக்கோல் போர், haystack
6. சங்ககாலத்துச் சோழநாட்டு ஊர், a city in chozha country during sangam period
1.1
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 53
(தலைமயிரைத்)துணியால் கட்டிச் சட்டை அணிந்த, தூக்கக்கலக்கத்திலும் விரைப்பான நடையுடைய
1.2
கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த
மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 732,733
கொல்லும் (தன்மையுள்ள முரட்டுக்)காளையின் பதப்படுத்திய தோலை (மயிர்)சீவாமல் மூடிய
பெரிய கண்ணையுடைய முரசம் விடாமல் ஒலிக்க,
2.1
போர் வல் யானை பொலம் பூண் எழினி – அகம் 36/16
யுத்தத்தில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
2.2
குப்பை கோழி தனி போர் போல – குறு 305/6
குப்பைக்கோழிகள் தாமாகச் சண்டைபோட்டுக்கொள்வது போல
2.3
நெய் பட கரிந்த திண் போர் கதவின் – மது 354
நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய வாய் பொருதலையுடைய கதவினையும்,
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63
பொருதல் வாய்த்த (இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க;
2.4
பொதி மூடை போர் ஏறி – பட் 137
பொதிந்த பொதிகளை அடுக்கிவைத்த குவியலின்மீது ஏறி,
2.5
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத – பரி 22/11
அந் நாட்டில் சென்ற நிலம் எங்கும் நெற்போர் நிரம்பிய வயல்களில் புகுந்தது;
2.6
போர் என்ற ஊர் சங்ககாலத்துச் சோழநாட்டில் இருந்த ஓர் ஊர்.
அது போர்வை, போஒர், திருப்போர்ப்புறம் என்னும் பெயர்களால் குறிப்பிடப்பட்டு வந்தது.
இப்போது அவ்வூர் குழித்தலைக்கும் கருவூருக்கும் இடையில் உள்ள பெட்டவாய்த்தலை என்னும் ஊர் ஆகும்.
இதனைப் போஒர் கிழவோன் பழையன் என்ற சங்க காலத்திய சோழநாட்டுச் சிற்றரசன் ஆண்டான்.
இவன் வில்லாண்மையில் சிறப்புற்று விளங்கினான்.
இவனது தலைநகருக்கு அருகிலிருந்த கட்டூர் என்னுமிடத்தில் நடந்த போரில் ஏழுபேர் சேர்ந்து தாக்கி
இவனைக் கொன்றனர்.
வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன நின்
பிழையா நன் மொழி தேறிய இவட்கே – நற் 10/7-9
வெண்மையான கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான
பழையன் என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல உன்னுடைய
பொய்க்காத நல்ல சொற்களை நம்பிய இவளை –
வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன – அகம் 186/14-16
வெற்றி பொருந்திய வேலையும்
மழைத்துளி போன்ற மிக்க அம்பினையும் மேகம் போலும் கரிய கேடகத்தினையும் உடைய பழையன் என்பானது
காவிரி நாட்டிலுள்ள போர் என்னும் ஊரினை ஒத்த
கழை அளந்து அறியா காவிரி படப்பை
புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல் போல் – அகம் 326/10-12
ஓடக்கோலால் ஆழம் அளந்தறியப்படாத காவிரியின் கரையினைச் சார்ந்த தோட்டங்களையும்
நீர் நிறைந்து ஓடும் மதகுகளையும் உடைய போர் என்னுமூருக்குத் தலைவனுமாகிய
பழையன் என்பான் பகைவர் மீது செலுத்திய வேல் போல
போர்க்களம்
(பெ) போரிடும் இடம், battle field
பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய – மது 735
பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே கொன்று
போர்ப்பு
(பெ) மூடுதல், covering
போர்ப்பு_உறு முரசும் கறங்க – புறம் 241/4
தோலால் மூடுதலுற்ற முரசு முழங்க
போர்ப்புறு
(வி) மூடுதலுறு, மூடப்படு, be covered
போர்ப்புறு முரசும் கறங்க – புறம் 241/4
தோலால் மூடுதலுற்ற முரசு முழங்க
போர்பு
(பெ) 1. நெற்கதிரின் போர், கதிருடன் நெல்லை அறுத்துக் குவித்த குவியல்,
stack of straw with paddy
2. குவியல், stack, heap
1
நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து
கள் ஆர் களமர் பகடு தளை மாற்றி – அகம் 366/2,3
நீர் சூழ்ந்த அகன்ற களம் பொலிவுறப் போரினைப் பிரித்துக் கடாவிட்டு
பின் கள் உண்டு வந்த உழவர் அக் கடாக்களைக் கட்டவிழ்த்துவிட்டு
2
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு
கண நரியோடு கழுது களம் படுப்ப – புறம் 369/15,16
பேய்மகளிர் மொய்த்துச் சூழும் பிணங்கள் குவித்துவைக்கப்பாடு உயர்ந்த பல குவியலான போர்களை
கூட்டமான நரிகளும் பேய்களும் இழுத்து உண்ண
போர்முகம்
(பெ) போரின் முன்னணி, the front of an army
இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ
புபுண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/3,4
இனிய ஓசையுடன் முழங்குகின்ற முரசுகள் ஒலிக்கக் குறுந்தடியால் அடிக்கும்
முரசுகளைச் சுமப்பதால் காயம்பட்ட தோளினையுடைய வீரர்கள் போரின் முன்னணியில் தங்கியிருக்க,
போர்வு
(பெ) பார்க்க : போர்பு – 1, 2
1
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – புறம் 24/20
கயல்மீன்களை நிறைய உண்ட நாரை, நெற்போரில் சென்று தங்கும்
2
மட நடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவு மணல்
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை – ஐங் 153/2-4
இளமையான நடையைக் கொண்ட நாரை
தன் சிறகைக் கோதியதால் உதிர்ந்த இறகுகள் திரண்டுயர்ந்த மணல்
குவியலில் எடுத்துக்கொள்ளப்படும் துறையைச் சேர்ந்தவனின் உறவினை
போல்
1. (வி) ஒத்திரு, போன்றிரு, ஒப்பாகு, be similar, be equal
– 2. (இ.சொ) உவம உருபு, a particle of comparison
1
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே – குறு 103/4-6
தூவும் மழைத்துளிகளையுடைய துயரந்தரும் வாடைக்காற்றுக் காலத்திலும்
வரமாட்டார் போல இருந்தார் நம் காதலர்,
வாழமாட்டேன் போல இருந்தேன் தோழி! நானே!
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார்
தீண்ட பெறுபவோ மற்று – கலி 94/6-8
ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே! நீ என்னை
விரும்புவேனென்று தடுத்தாய், உன்னைப் போன்றவர்கள்
என்னைத் தீண்டப்பெறுவார்களோ?”
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும்
பொன் உடைநெடு நகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம் – புறம் 198/15-17
பகைவர் தேய அவருடைய பெறுதற்கரிய அணிகலத்தைக் கொண்டுவந்து, நும்முடைய
பொன்னுடைய நெடிய நகரின்கண் பொலிய வைத்த நின்னுடைய
முன்னுள்ளோரைப் போன்றிருப்பதாக இவருடைய பெரிய கண்ணோட்டம்.
இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் – கலி 47/5,6
இல்லாதவர்களின் வறுமைத் துன்பத்தைத் தன் ஈகைக் குணத்தினால் துடைக்க
வல்லவனைப் போன்றிருக்கும் பொருளாற்றலும் உள்ளவனாய்த் தோன்றுகிறான்,
போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
காந்தள் செறிந்த கவின் – பரி 18/34,35
போரில் தோற்றுக் கட்டப்பட்டவரின் கைகளைப் போன்று இருக்கும், கார்காலம் தோற்றுவித்த
காந்தள்கள் செறிந்த கவின்;
இனைய பிறவும் இவை போல்வனவும்
அனையவை எல்லாம் இயையும் புனை இழை
பூ முடி நாகர் நகர் – பரி 23/57-59
இதனைப் போன்ற பிறவும், இன்னும் இவை போன்றிருப்பனவும்,
அப்படிப்பட்டவை எல்லாம் தம்முள் பொருந்திநிற்கும், ஒப்பனை செய்யப்பட்ட அணிகலன்களையும்
பூமகளையும் தன் திருமுடியில் கொண்டுள்ள ஆதிசேடனின் கோயிலில்;
2
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/1,2
கடலில் தோன்றி, இந்த உலகத்து இருளைக் கூட்டித்தள்ளும் ஞாயிற்றைப் போல்,
உனக்கு வேண்டாதவரின் நெஞ்சம் நடுங்க அச்சந்தரும் கொடுமையும்,
போல
(இ.சொ) ஓர் உவம உருபு , a particle of comparison
சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி
ஏறு பொர சேறாகி
தேர் ஓட துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறுபட்ட வினை ஓவத்து
வெண் கோயில் மாசு ஊட்டும் – பட் 44-50
சோற்றை வடித்து வார்த்த கொழுமையான கஞ்சி
ஆற்றுநீர் போல (எங்கும்)பரவி ஓடி,
(அதைக் குடிக்க வந்த)காளைகள் தம்மில் பொருவதால் சேறாய் ஆகி,
(அச் சேற்றின் மீது)(பல)தேர்கள் ஓடுவதால் துகள்களாய் (மதில்கள் மீது)தெறித்து,
புழுதியில் விளையாண்ட (அதனை மேலே அப்பிக்கொண்ட) ஆண்யானையைப் போல,
பல்வேறுவிதமாக வரையப்பட்ட சித்திரங்களையுடைய
வெண்மையான அரண்மனை(மதில்களை) அழுக்கேறப்பண்ணும்;
போலா
(வி.மு) 1. போல் இல்லை, is not like (before)
2. போலும், it looks like
1
நனி மிக பசந்து தோளும் சாஅய்
பனி மலி கண்ணும் பண்டு போலா – நற் 237/1,2
மிகவும் அதிகமாகப் பசந்து தோளும் மெலிந்து,
நீர் நிறைந்து கண்ணும் முன்பு போல் இல்லை
2
இன்று நக்கனை-மன் போலா
——————————– ——————-
மட மா அரிவை தட மென் தோளே – நற் 346/7-11
இப்பொழுது மகிழ்ந்திருக்கிறாய் போலும்
——————————————– ———-
இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ எண்ணி.
போலாது
1. (வி.எ) போல் இல்லாமல், unlike
– 2. (வி.மு) போல் இல்லை, it is unlikely
1
மரீஇ தாம் கொண்டாரை கொண்ட_கால் போலாது
பிரியும்_கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும்
திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/12-14
விரும்பித் தான் சேர்ந்தாரைச் சேர்ந்திருக்கும்போது இன்புறச் செய்வதைப் போலல்லாமல்,
அவரை விட்டுச் செல்லும்போது மற்றவர் அவரை இகழ்ந்துபேசும்படி, தமக்கும் ஒரு பெருமையின்றிக் கைமாறிச் செல்லும்
செல்வத்தைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்?
2
கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது
போலாது என் மெய் கனலும் நோய் – கலி 146/44,45
மேகமெல்லாம் ஒன்றுதிரண்டு என் மேனியில் பெய்தாலும், குறைவது
போலில்லை என் உடம்பில் கொதிக்கும் காமநோய்;
போலாம்
(வி.மு) போலும், it is likely
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம் – நற் 392/8,9
வீறு கொண்ட நெஞ்சத்தோடு முன்பு தான் வந்துபோன
கடற்கரைச் சோலையில் இன்று மனமழிந்து நிற்கிறார் போலும்;
போலாய்
(வி.மு) போல இல்லை நீ, you don’t appear like that
எல் வளை நெகிழ மேனி வாட
பல் இதழ் உண்கண் பனி அலை கலங்க
துறந்தோன் மன்ற மறம் கெழு குருசில்
அது மற்று உணர்ந்தனை போலாய்
இன்னும் வருதி என அவர் தகவே – ஐங் 471
ஒளியுமிழும் வளைகள் கழன்று ஓட, மேனி வாடிப்போக,
பல இதழ்களைக் கொண்ட மலர் போன்ற மையுண்ட கண்கள் கண்ணீரால் அலைப்புண்டு கலங்கிப்போக,
பிரிந்துசென்றான், உண்மையாக, வீரம் பொருந்திய தலைவன்;
அதனைத் தெளிவாக உணர்ந்தவன் போல் இல்லை நீ,
இப்பொழுதும் வந்து நிற்கிறாய்; என்ன ஆயிற்று அவரின் தகுதி?
போலாள்
(வி.மு) போல் இல்லாதிருக்கிறாள், she is not like that
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள்
அளியும் அன்பும் சாயலும் இயல்பும்
முன்_நாள் போலாள் – அகம் 49/1-3
கிளி, பந்து, கழங்கு ஆகியவற்றை விரும்பியள் (இப்போது)
அருள், அன்பு, மென்மை, செயல் ஆகியவற்றில்
முன்பு போல் இல்லாதிருக்கிறாள்,
போலான்
(வி.மு) போல் இல்லாதிருக்கிறான், he is not like that
தொடி நிலை கலங்க வாடிய தோளும்
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன்
எம் வெம் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான் பேர் அன்பினனே – ஐங் 475
தோள்வளைகள் தம் நிலையிலிருந்து நெகிழ்ந்துபோகுமாறு வாடிப்போன தோள்களையும்,
மாவடு போன்ற தம் அழகை இழந்த என் கண்களையும் நோக்கி,
பெரிதும் வருந்தினான் சீறியாழ்ப் பாணன்!
எம்முடைய விருப்பமான காதலோடு பிரிந்துசென்ற
தன் தலைவரைப் போன்றவன் அல்லன் இவன்; பேரன்பினன்!
போலும்
1. (பெ.அ) போன்ற, போல இருக்கிற, like
– 2. (வி.மு) போல இருக்கிறது, it is likely, it looks like
1
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழ நின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – நற் 166/1-4
பொன்னும் நீலமணியும் போன்ற உன்
நல்ல மேனியும், மணங்கமழும் கரிய கூந்தலும்;
பூக்கின்ற மலரும், மூங்கிலும் போன்ற உன்
அழகிய மையுண்ட கண்களும், வனப்புள்ள தோள்களும்
2
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நற் 177/8-10
வந்துவிட்டது போல இருக்கிறது, தோழி! மிகவும் நொந்துபோய்
தீட்டிய அழகைக் கொண்ட மையுண்ட கண்களின் கண்மணிகள்
கேடுவிளைவிக்கும் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தும் நாள் –
போழ்
1. (வி) 1. பிள, split, cleave open
2. பிளவுபடு, பிளக்கப்படு, be cleft, split; gape;
3. ஊடுருவு, pierce
– 2. (பெ) 1. துண்டு, piece, bit
2. மடல், flat leaf (of screw pine)
3. பனங்குருத்து நார் அல்லது பட்டை, sheet of tender leaf of palmyrah
1.1
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 7,8
கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள்,
மின்னலாகிய வாள் பிளந்த வானிடத்தே பெரிய துளியைச் சிதறி,
1.2
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 287
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளவுபட்ட வாயையுடைய வாளை மீன்
முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/1,2
யாவரினும் முன்னே நினைக்கப்படுமவனைப் பின்பே நினைத்தேன் யான்,
அவ்வாறு நினைத்த குற்றத்தால், அமிழ்ந்திப்போவதாக என் உள்ளம்,
அவனை அன்றிப் பிறரைப் புகழ்ந்த என் நாவும் கருவியால் பிளக்கப்படுவதாக.
1.3
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை – பரி 20/4
தன்னொடு போரிட்டு மாறுபட்ட புலியை ஊடுருவக் குத்திய பொலிவுள்ள நெற்றியையுடைய அழகிய யானையின்
2.1
கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 511
சங்கினை அறுத்த துண்டினைக் கடைவாரும், அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,
2.2
தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி – குறி 115
தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்
2.3
போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள – கலி 117/8
பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை”; “கூடையினுள்ளே என்ன இருக்கிறது?
போழ்து
(பெ) காலம், நேரம், பொழுது, time
துறைவன்
எம் தோள் துறந்த_காலை எவன்-கொல்
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/2-4
துறையைச் சேர்ந்தவன்
என் தலைவியின் தோளைத் துறந்துசென்ற காலத்தில், எப்படி
பல நாள்களுக்கு நெஞ்சில் தோன்றுகிறது அவன் பரிவுடன் நம்மை இன்புறச் செய்த காலங்கள்
மட குறு_மாக்களோடு ஓரை அயரும்
அடக்கம் இல் போழ்தின்_கண் தந்தை காமுற்ற
தொடக்கத்து தாய் உழை புக்காற்கு – கலி 82/9-11
“சிறுமியரோடு விளையாடி மகிழ்ந்து
ஓரிடத்தில் நில்லாது ஓடித்திரிந்த நேரத்தில், இவனது தந்தை விரும்பி ஆசைகொண்ட
தொடக்க காலத்துத் தாய் ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றான்
கொலை குறித்து அன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே – அகம் 364/13,14
நம்மைக் கொல்லுதல் கருதி வருவது போன்ற மாலை
விரைந்து நம்பால் வரும்பொழுது அதனைக் கடந்துசெல்லல் அரிதாகும் அன்றோ?
போழ்வு
(பெ) பிளவு, cleft
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே – மலை 198,199
சரளைமேடுகளில் மேற்பரப்பு வெடித்து(உண்டான),கூழாங்கல்(நிறைந்த) ஆழமற்ற பள்ளங்கள்(உள்ள)பிளவுகளில்
மறைந்து பாம்புகள் சுருண்டுகிடக்கும் குழிகளும் உள்ளன;
போற்று
(வி) 1. பாராட்டு, புகழ், praise, acclaim
2. பாதுகா, பேணு, காப்பாற்று, protect, cherish, keep with great care;
3. ஒரு பொருட்டாக நினை, consider as matter of importance
4. கடைப்பிடி, பின்பற்று, observe, adhere to, hold fast to
5. கவனத்தில் கொள், pay attention to, mind
6. விரும்பு, desire
7. கருது, கருத்தில்கொள், consider
8. உய்த்துணர், infer
1
போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு – பரி 4/52,53
உன்னைப் புகழாதார் உயிரிடத்திலும், புகழுவாருடைய உயிரிடத்திலும்
முறையே மாற்றுதலும் காப்பாற்றுதலும் செய்வதில்லை, உனக்கு
2
போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை – புறம் 104/1
நும்மைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் வீரர்களே! நுமக்கு நாங்கள் அறிவிப்பேம்
3
உயிர் போற்றலையே செருவத்தானே
கொடை போற்றலையே இரவலர் நடுவண் – பதி 79/1,2
உயிரை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை, போர்க்களத்தில்;
கொடுக்கின்ற பொருள்களின் அளவை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை, இரவலர்களின் நடுவில்;
4
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமை கொண்ட வழி – கலி 12/16-19
பின்பற்றாதிருப்பாயாக, பெருமானே நீ! காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
இறப்பும் முதுமையும் எல்லாருக்கும் உண்டு என்பதனை மறந்துவிட்டவரோடு ஒன்றுசேர்ந்து
உலகியலுக்கு ஒவ்வாத மாறுபட்ட வழியை –
5
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி – மலை 471-473
வெண்ணெல்லை அறுப்போரின் முழவு(எழுப்பும் ஓசை)க்குப் பயந்து,
சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த (ஒற்றை)எருமைக்கடா,
உறுமிக்கொண்டு(வரும்) ஓட்டத்தின் வலிமையோடு (உம்மேல்)விரைவாக வரலாம் என்பதைக் கவனத்திற்கொண்டு
6
போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந – பொரு 60
விரும்பிக் கேட்பாயாக, புகழை மேம்படுத்த வல்லோய்,
7
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் – கலி 139/2,3
பிறருடைய துன்பத்தையும் தம் துன்பம் போல் கருதி, அதனால் வரும் அறப்பயனை அறிந்து வாழ்தல்
சான்றோர்கள் எல்லாருடைய இயல்பு என்பதால்,
அனையவை போற்றி நினைஇயன நாடி காண் – கலி 15/23
நான் கூறியவற்றின் நன்மைகளைக் கருத்திற்கொண்டு, நீ நினைக்கின்றவற்றையும் எண்ணிப் பார்!
8
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானை கண்டே
இரும் துகில் தானையின் ஒற்றி பொருந்தலை
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர்
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்
நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து – பரி 16/20-26
பீச்சாங்குழலைக் கொண்ட தோழியர் சுற்றிலும் வளைத்துக்கொண்டு ஒரு பரத்தையின் மீது சாய நீரைப் பாய்ச்ச,
அதனால், சிறிய இளநீரைப் போன்ற முலைகளில் பட்ட அந்தச் சாயநீரைத் துடைக்காமலிருந்தவள்,
பெருந்தகையான தலைவன் வருவதனைக் கண்டு,
நீண்ட துகிலின் முந்தானையால் நீத்துளிகளை ஒற்றியெடுக்க, “கிட்டே வராதீர்,
அவள் பூப்பெய்தியிருக்கிறாள், நீங்குக என்று தோழியர் பொய்யாகக் கூறினராக,
பூப்பெய்திய தோற்றத்தைப் போலிருந்தும், அவள் மீதிருந்த மலர் போன்று மணங்கமழும் சந்தனத்தின்
மணத்தால் பூப்பின்மையையை உய்த்தறிந்து, அவரின் பொய்யாடலுக்காக நகைத்து அவ்விடத்தை விட்டு நீங்கி,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே – பரி 13/18
முதற்புலனாகிய ஓசையினால் உணரப்படும் வானமும் நீயே!
போறல்
(பெ) போலிருத்தல், போல் இருக்கும் நிலை, being in a similar state
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம்
இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் – கலி 5/3-8
சிறு புதர்கள் அழிந்து வழியாகிப்போய், பழைய வழிகளுடன் கலந்து குழம்பவைக்கும் அரிய காட்டுவழியைக்
கடந்து சென்று நீர் ஈட்டும் பொருளைக் காட்டிலும் நாங்கள் உமக்கு
சிறந்தவர்களாவோம் என்பதனை நீர் அறிந்திருப்பீராயின்,
நீண்ட பெரிய கடலில் பெருங்காற்று மரக்கலத்தைத் தாக்கும்போது
அதனைக் காப்பாற்றும் முயற்சியில் தோற்றுப்போனோர் போன்ற நிலையிலுள்ளதைத் தவிர
எம் உறவான பெருந்தகையான உம்மோடு எவ்வாறு பலவற்றைச் சொல்லி உம்மைத் தடுப்போம்?
போறி
(வி.மு) போல்கின்றாய், போல் இருக்கிறாய், you seem to be like that
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி
ஆறு மயங்கினை போறி – கலி 95/1-3
“அங்கேயே நில்! அங்கேயே நில்! படியேறி வரவேண்டாம்! ஏடா! நீ
மணக்கின்ற கரிய கூந்தலையுடைய உன் பரத்தையர் வீட்டுக்குப் போ! இந்தப் பக்கம்
வழிதவறி வந்துவிட்டாய் போலிருக்கிறாய்!
போறிர்
(வி.மு) போல்கின்றீர், போல் இருக்கிறீர், you seem to be like that
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்
வாழலென் யான் என தேற்றி பல் மாண்
தாழ கூறிய தகை சால் நன் மொழி
மறந்தனிர் போறிர் எம் என – அகம் 29/8-12
ஆசை குறையாத மகிழ்ந்த நோக்கினை உடைய மைதீட்டிய கண்களை
நினையாது கழிந்த நாளில் சிறிதுநேரங்கூட
வாழமாட்டேன் நான்’ – என்று ஆறுதல் கூறி பல்வேறு மாண்புகளும்
தாழ்ந்துபோகும்படி கூறிய உயர்வான நல்ல சொற்களை
மறந்துவிட்டீர் போலத் தோன்றுகிறீர் எனக்கு”
போன்ம்
(வி.மு) போலும், போல இருக்கிறது, கூடும், it is likely, it looks like
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே – பதி 51/21-24
அமுதம் போன்ற மொழியினைக் கொண்ட சிவந்த வாயினையும், அசைகின்ற நடையினையும் உடைய விறலியரின்
பாடல்களை நிரம்பக் கேட்டு நீண்டநேரம் இருத்தலால்
வெள்ளிய வேலினை ஏந்திய வேந்தன் மென்மையான இயல்பினன் போலும் என்று
நினைப்பார்களோ உன்னை நன்கு தெரிந்துவைத்திராதவர்கள்? –
செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
னகார மகாரம் ஈர் ஒற்றாகும் – தொல்-எழுத். மொழி:18/2
இதன்படி பாடல்களின் முடிவில் ‘போலும்’ என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி
போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
இது ஒரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.
போன்றிசின்
(வி.மு) போல இருந்தது, it is like (something)
விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற
கரை சேர் மருதம் ஏறி
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74
வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது
பைம்பொன்னாலான ஒளிவிடும் அணிகலன்கள் மெல்லென ஒளிவீச,
கரையைச் சேர்ந்த மருதமரத்தில் ஏறி,
நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்.