கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொகுட்டு
பொகுவல்
பொங்கடி
பொங்கர்
பொங்கல்
பொங்கழி
பொங்கு
பொசி
பொடி
பொத்தி
பொத்து
பொதி
பொதியம்
பொதியில்
பொதிர்
பொதினி
பொது
பொதுச்சொல்
பொதுநோக்கு
பொதும்பர்
பொதும்பு
பொதுமகளிர்
பொதுமீக்கூற்றம்
பொதுமை
பொதுமொழி
பொதுவர்
பொதுவன்
பொதுவாக
பொதுவி
பொதுவினை
பொதுளு
பொம்மல்
பொய்
பொய்கை
பொய்த்தல்
பொய்தல்
பொய்ப்பு
பொய்ம்மருள்
பொரல்
பொரி
பொரீஇ
பொரீஇய
பொரு
பொருகளம்
பொருட்பிணி
பொருத்து
பொருந்தலர்
பொருந்து
பொருநர்
பொருநன்
பொருநை
பொருப்பன்
பொருப்பு
பொருவர்
பொருவார்
பொருள்பிணி
பொரூஉ
பொரூஉம்
பொரேரென
பொல்லம்
பொலம்
பொலன்
பொலி
பொழில்
பொழுது
பொளி
பொற்ப
பொற்பு
பொறி
பொறீஇ
பொறை
பொறைமரம்
பொறையன்
பொறையாறு
பொன்
பொன்று
பொகுட்டு
(பெ) 1. தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை,
Pericarp of the lotus or common caung flower
2. கலங்கல் நீரில் எழும் குமிழி, Bubble formed in turbid water
3. இலுப்பை போன்ற சில மரங்களின் நடுப்பகுதியில் காணப்படும் கட்டி போன்ற வீக்கம்,
a lump formed on the trunk of trees like South Indian mahua (Bassia longifolia)
4. நீர்க்குமிழி போன்ற உருவம் உடையது, a form similar to a bubble
1
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி – பெரும் 402-404
நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தியாகிய
நான்முகனாகிய ஒருவனைப் பெற்ற பல இதழ்களையுடைய
தாமரையின் பொகுட்டைப் போன்று அழகுவிளங்கத் தோன்றி,
வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்ன – புறம் 321/4
2
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின்
திரை நுரை மென் பொகுட்டு தேம் மண சாந்தின்
அரிவையது தானை என்கோ – பரி 11/26-28
அழகிய மலர்களான மேற்போர்வையினையும், முத்தாரம் தொங்கும் மார்பினைப் போன்று விளங்கும்
அலைகளின் நுரைகளாகிய மென்மையாகிய குமிழ்களையும், இனிய மணத்தோடு சேர்ந்த சந்தனக் குழம்பினையும்
உடைய
வையைப் பெண்ணின் முன்தானை என்று கூறவா?
3
பொரி கால்
பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ – அகம் 95/5-7
பொரிந்த அடியினையும்
கொட்டைகளையுடைய அரையினையுமுடைய இருப்பையினது குவிந்த குலையினின்றும் கழன்ற
ஆலங்கட்டி போலும் உள்துளையினையுடைய திரண்ட பூக்களை
இருப்பை எனப்படும் இலுப்பை மரத்தின் நடுப்பகுதியில் (trunk) கொட்டைகள் போன்ற கட்டிகள் காணப்படும்.
அவையே இங்கு பொகுட்டு எனப்படுகின்றன.
4
நீருள் பட்ட மாரி பேர் உறை
மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ண
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல் – புறம் 333/1-3
நீர்க்குள் வீழ்ந்த மழையினையுடைய பெரிய தாரையினால் உண்டாகிய
குமிழி போல கொட்டை போன்ற விழி பொருந்திய கண்ணையும்
கரிய பிடரி பொருந்திய தலையையும் பெரிய செவியையுமுடைய குறுமுயல்
பொகுவல்
(பெ) பிணம்தின்னிக்கழுகு, vulture
கவி செந்தாழி குவி புறத்து இருந்த
செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா – புறம் 238/1,2
பிணைத்தை வைத்துப் புதைக்கப்பட்ட கவிக்கப்பட்ட சிவந்த தாழியினது குவிந்த புறத்தே இருந்த
செவி சிவந்த கழுகின் சேவலும், பிணம்தின்னிக்கழுகும் அஞ்சாவாய்
பொங்கடி
(பெ) யானை, elephant
பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை – அகம் 44/17
யானைகளும் மூழ்கும் குளங்களையும், செறிந்த பசிய காவற்காடுகளையும் (உடைய
பொங்கர்
(பெ) மரக்கொம்பு, branch of a tree
கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர்
நறும் பூ கொய்யும் பூசல் – மது 296,297
கரிய அடிமரத்தைக்கொண்ட வேங்கையின் பெரியதாய்க் கிளைத்த கொம்புகளில்(பூத்த)
நறிய பூவைப் பறிக்கும் ஆரவாரமும்
பொங்கல்
(பெ) 1. பொங்குதல், swelling, ebbing
2. பஞ்சுப்பொதி, a bunch of white cotton
1
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 19,20
மழை பெய்து ஓய்ந்த பின் மேலெழுந்த, (நுரை)பொங்குதலை(ப்போன்ற) வெண்ணிற மேகங்கள்
அகன்ற பெரிய ஆகாயத்தில் சிறு தூறலாகத் தூவ
மந்தி காதலன் முறி மேய் கடுவன்
தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறை
பொங்கல் இள மழை புடைக்கும் நாட – ஐங் 276/1-3
பெண்குரங்கின் காதலனான, இளந்தளிர்களை மேயும் ஆண்குரங்கு
குளிர்ச்சியுள்ள மணங்கமழும் நறைக்கொடியினைக் கொண்டு அகன்ற பாறையில் படிந்திருக்கும்
பொங்கிவரும் நுரை போன்ற வெண்மையான மேகத்தினை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி
விண்டு சேர்ந்த வெண் மழை போல – பதி 55/14,15
மழையைப் பெய்து உலகைக் காத்த பின்பு, பஞ்சுப் பிசிறுகளாய்ப் பொங்கி மேலெழுந்து,
மலை உச்சியை அடையும் வெண் மேகத்தைப் போல,
2
தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் – அகம் 129/7-10
தாழியிடத்தே தழைத்த கொழுவிய இலையையுடைய பருத்திச் செடியின்
பருத்த வயிற்றினையுடைய இளங்காயைப் பேடைகட்கு ஊட்டி
ஆண்பறவைகள் பிளந்து போகட்ட பஞ்சினையுடைய வெள்ளிய கொட்டையை
வறுமையுற்ற மகளிர் வைத்துண்ணும் உணவாகச் சேர்க்கும்
பொங்கழி
(பெ) தூற்றித் தூய்மைப்படுத்தாத நெற்குவியல், unsifted paddy on the thrashing-floor
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் – அகம் 37/2,3
பின்னிருட்டில் ஆரவாரத்தை உடைய மிகுந்த மகிழ்ச்சியுள்ள உழவர்
தூற்றாப் பொலியை முகந்து தூற்ற எழும் கனமற்ற நுண்ணிய தூசுகள்
பொங்கு
(வி) 1. கடல் கொந்தளி, foam and rage as sea
2. மிகு, increase
3. மயிர் சிலிர், stand on end as hair or mane
4. நீர் முதலியன மேலெழு, rise in the level as backwaters
5. துள்ளு, leap, jump
6. பொலிவுறு, be bright, attractive
1
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – நற் 35/1
பொங்கி எழுகின்ற அலைகள் மோதி ஒதுக்கிய நீண்ட மணல் பரந்த கரையில்
2
தடம் தாள் தாழை குடம்பை நோனா
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/1-4
அகன்ற தாளையுடைய தாழையின் பகுதிகளாலே உண்டாக்கப்பட்ட எம் குடிலின்கண் பொறுக்கமுடியாதபடி,
சோலையில் கமழும் மலர்களைச் சூடியதால் வண்டுகள் வீழும் நறுமணமுள்ள
இருள் போன்ற கூந்தலில் மிக்க துகள் படிய
உருளும் இயந்திரம் போல எம்முன் வருதல்
3
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/3,4
முகிலின் பெரிய மழை விழுந்ததாக, சிலிர்த்த மயிரையுடைய
ஆண்குரங்கு தொட்டவுடன் வீழ்ந்த பூ மணக்கும் பலாப்பழத்தை
4
பொங்கு கழி நெய்தல் உறைப்ப – ஐங் 186/3
நீர் மேலெழுந்து வரும் கழியின் நெய்தல் பூக்கள் நீர்த்துளிகளை உதிர்க்க
5
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் – அகம் 106/2
நெற்பொரி தெரித்தால் போன்று துள்ளும் பல சிறிய மீன்களை
6
என் அரை
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை
புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ – புறம் 398/18,20
என் இடையில்
சிதர்ந்து நார்நாராய்க் கிழிந்திருந்த உடையை நீக்கி, தன் அரையில் உடுத்திருந்த
புகையை விரித்தாற் போன்று பொலிவுறும் உயர்ந்த உடையைத் தந்து என்னை உடுப்பித்து
பொசி
(வி) கசி, கசிந்து வெளிப்படு, ooze out, percolate
தகரம்
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று
துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று – பரி 12/96-98
மணப்பொருளுடன்,
மார்பிலிருந்து வழித்து எறியப்பட்ட சந்தனக் குழம்பால் ஆற்றோர மணல் சகதியாய்ப்போனது;
ஆடையிலிருந்து சிந்திய நீர்த்துளிகளால் கரை மழைபெய்த பூமியாயிற்று;
பொடி
1. (வி) 1. தூளாகு, be broken to pieces, become pulverised;
2. தீய்ந்துபோ, be blighted, as gram
3. வெறு, despise, dislike
– 2. (பெ) 1. நுண்ணியது, சிறியது, anything that is small or minute
2. நீறு, சாம்பல், ash
1.1
கல் கண் பொடிய கானம் வெம்ப
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க
கோடை நீடிய பைதறுகாலை – புறம் 174/24-26
மலையிடம் புழுதிக்காடாக, காடு தீ மிக
மிக்க நீர் எல்லையையுடைய நீர்நிலைகள் பலவும் காய்ந்துபோக
இவ்வாறு கோடை நீடப்பட்ட பசுமையற்ற காலத்து
1.2
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர் பொறாதார்
தம் கண் பொடிவது எவன் – கலி 105/58-60
அந்த எருமைக் கூட்டத்து ஆயர் மகனோடு நாம் காதல்கொண்டதனுக்கு
எம்மிடம் எம் சுற்றத்தார் பொறுத்துக்கொண்டனர்; அது பொறுக்காத இவ்வூரார்
கண்கள் தீய்ந்துபோவது ஏன்?
1.3
புல் உளை குடுமி புதல்வன் பன்மாண்
பால் இல் வறும் முலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும்
வினவல் ஆனாள் ஆகி நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப – புறம் 160/18-26
புல்லிய உளைமயிர் போலும் குடுமியை உடைய புதல்வன் பலமுறை
பால் இல்லாத வறுவிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்
கூழையும் சோற்றையும் வேண்டி விரைந்து முறைமுறையே
உள்ளே ஒன்றுமில்லாத வறிய அடுகலத்தைத் திறந்து அங்கு ஒன்றும் காணாது அழ, அதனைப் பார்த்து
மறத்தை உடைய புலியை வரவு சொல்லி அச்சமுறுத்தியும், அம்புலியைக் காட்டியும்
அவற்றால் தணிக்க இயலாமையின் வருந்தினளாய், நின் பிதாவை நினைத்து
வெறுத்த நின் செவ்வியைக் காட்டு எனச் சொல்லி மிகுதிப்பட
கேட்டல் அமையாளாய் நனவின்கண்ணும்
துயரமுறுவோள் வளப்பம் மிக
2.1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
வண்டல் பாவை வௌவலின்
நுண் பொடி அளைஇ கடல் தூர்ப்போளே – ஐங் 124
கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
மணற்பாவையைக் கடலலை கவர்ந்துசெல்ல
நுண்ணிய குறுமணலை வாரியெடுத்துக் கடலை நோக்கி வீசிக் கடலைத் தூர்க்க முயல்கின்றவளை –
2.2
கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற
பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை – கலி 54/1,2
கொடியிலும் கொம்புகளிலும் நீரினால் நிறம் பெறும் பூக்களைப் போலன்றி, நீரின்றி அழகு பெற்ற
நீறு பூத்த நெருப்பினால் செய்யப்பட்ட பூவாத பூவாகிய பொன் மலர் மாலையையும்
பொத்தி
(பெ) ஒரு சங்க காலப் புலவன், a sangam poet
இந்தப் புலவர் பொத்தியார் எனப்படுவார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனின் நண்பனாவார்.
கோழியோனே கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ
வாய் ஆர்பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/8-10
உறையூர் என்னும் படைவீட்டில் இருந்தான் கோப்பெருஞ்சோழன்
குறைபாடு இல்லாத நட்பினையுடைய பொத்தி என்னும் புலவனோடு கூடி
மெய்ம்மை ஆர்ந்த மிக்க மகிழ்ச்சியை நாள்தொறும் மகிழ்ந்து
பொத்து
1. (வி) 1. தைத்துமூட்டு, stitch, mend, patch, botch, as baskets or bags
2. உள்ளடக்கு, பொதி, hold, contain
3. தீ மூட்டு, light fire
4. மோது, hit
5. மறை, hide, conceal
6. மூள், தீ, கோபம், ஐயம் முதலியன உருவாகு, be stirred up as anger, doubt
7. நிறை, get filled
– 2. (பெ) 1. பொந்து, hole, hollow
2. குறைபாடு, தவறு, defect, fault
1.1
பொல்லம் பொத்திய பொதி_உறு போர்வை – பொரு 8
இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்து மூட்டிய (மரத்தைத் தன் அகத்தே)பொதிதலுறும் போர்வையினையும்;
1.2
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 96-99
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி,
வலிய வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த (என்)உள்ளம் உவக்கும்படியும்,
1.3
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட வள மனை
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர்
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 223-226
ஆம்பல் மலரின் அழகிய இதழ்கள் தளையவிழவும், செல்வம் நிறைந்த இல்லங்களில்
பொலிவுள்ள வளையல் அணிந்த மகளிர் விளக்கின் திரியை ஏற்றி
அந்திக்கடனை அந்தணர்(போல்) ஆற்ற, காட்டில் வாழ்வோர்
வானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கொள்ளிகளை மூட்ட,
1.4
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி
மையல் மட பிடி இனைய
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே – நற் 114/9-12
மிகுந்த ஓசையுடைய இடியின் பேராரவாரத்தைக் கொண்ட பெருத்த இடிமுழக்கம்
பாம்பிற்கு அழகாக விளங்கும் அதன் படத்தை அழிக்கின்ற, உயர்ந்த மலைமேல் மோதிக்
கரிய இளம் பெண்யானை வருந்துமாறு
தன் துதிக்கையை ஊன்றி இறங்குகின்ற களிற்றினைத் தாக்கிக் கொல்ல –
1.5
கூறுவென் வாழி தோழி முன் உற
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி
ஆன்றோர் செல் நெறி வழாஅ
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/6-9
கூறுவேன், வாழ்க, தோழியே! இனி அவன் உன் முன்னால் நிற்கும்போது
உன் அன்புடைய நெஞ்சத்தில் இருக்கும் காதலை மறைத்து,
ஆன்றோர் செல்லும் வழியில் வழுவாது
சான்றோனாக அவன் இருத்தலை நன்கு அறிந்து தெளிந்துகொள்வாயாக.
1.6
நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்
இறை இறை பொத்திற்று தீ – கலி 145/57,58
நிறைந்த வளையல்களையெல்லாம் தொளதொளக்கச் செய்தவன் செய்த துயரினால்
என் உடம்பின் மூலை முடுக்கெல்லாம் மூண்டுநிற்கிறது காமத்தீ!
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி
மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை – பதி 16/7,8
மதம் சொரிந்து மிகுதியான கோபம் மூண்டு
பகைவரின் கணையமரம், காவல்மரம் ஆகியவற்றை அழிக்கும் இளம் யானைகள் முழங்கும் பாசறை
1.7
இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்
வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர்
காஞ்சி அம் குறும் தறி குத்தித் தீம் சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடும் சிறை
மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பய
பார்வல் இருக்கும் .. .. – அகம் 346:1-11
கூரையின் உட்பக்கச் சாய்ப்பின் மேலுள்ள
மாரிக்காலத்துச் சுண்ணச் சாந்து பூசிய ஈரமான வெளிப்புறத்தை ஒத்த
இறகினையுடைய குறுகக் குறுகப் பறக்கும் கொக்கின் சேவலானது,
வெள்ளியாலான வெண்மையான பூவிதழ் போன்ற கயல் மீனைப் பெறுவதற்காக,
கள்ளை மிகுதியாக உண்ட களிப்பினால் மிக்க செருக்கினைக் கொண்ட உழவர்,
காஞ்சி மரத்தின் குறிய துண்டுகளை நட்டு, இனிய சுவையுடைய
மெல்லிய தண்டையுடைய கரும்பின் சிறந்த பல கழிகளைக் குறுக்கே வைத்துக் கட்டி
பெரிய நெற்பயிரையுடைய வயலில் பசிய பள்ளங்களில் நீரை நிறைத்து,
சிரமப்பட்டுச் செய்த, உறுதியான திறப்புக்களின் வளைந்த தடுப்பின்
மேலே பொங்கி வழிந்து விரையும் நீரைப் பார்த்து, மெல்ல மெல்லச் சென்றவாறு
கூர்த்து நோக்கியிருக்கும்
2.1
பொத்த அறையுள் போழ் வாய் கூகை – புறம் 240/7
பொந்தாகிய தான் வாழுமிடத்து போழ்ந்தாற்போலும் வாய் அலகையுடைய பேராந்தை
பொத்து இல் காழ அத்த யாஅத்து – குறு 255/1
பொந்துகள் இல்லாத வயிரம்பாய்ந்த, பாலைவழியில் உள்ள யாமரத்தின்
2.2
கோழியோனே கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ
வாய் ஆர்பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/8-10
உறையூர் என்னும் படைவீட்டில் இருந்தான் கோப்பெருஞ்சோழன்
குறைபாடு இல்லாத நட்பினையுடைய பொத்தி என்னும் புலவனோடு கூடி
மெய்ம்மை ஆர்ந்த மிக்க மகிழ்ச்சியை நாள்தொறும் மகிழ்ந்து
பொதி
1. (வி) 1. நிறை, நிரம்பியிரு, உள்ளமைந்திரு, be full
2. உள்ளடக்கு, hold, contain
3. மூடு, மறை, cover up, conceal
4. கொத்தாகப்படிந்திரு, settle heavily
– 2. (பெ) 1. பெரியமூட்டை, bundle, load
2. கொத்து, cluster
3. முளை, tender shoot as of paddy, பீள், இளங்கதிர், tender ears of corn
4. தளை, கட்டு, பிணிப்பு, tie, fastening
5. பருமன், stoutness
6. மறைப்பு, covering up
7. பட்டை, மேல்தோல், bark
8. நிறைவு, fullness, perfection
9. பந்தயப்பொருள், gambling material/money
10 உடம்பு, body
11. அரும்பு, flower bud
12. உள்ளே பெறுதல், getting inside
13. பொதிகை மலை, the pothigai hills
14. பொதியில், பொது அரங்கம், அம்பலம், public hall
1.1
அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 191,192
அழகு நிரம்பிய தக்கோலக் காயைக் கலந்து, காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின கண்ணியினை உடைய;
1.2
பொல்லம் பொத்திய பொதி_உறு போர்வை – பொரு 8
இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த (மரத்தைத் தன் அகத்தே)உள்ளடக்கிய போர்வையினையும்;
ஐது அகல் அல்குல் மகளிர் இவன்
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/10,11
மெல்லிதாக அகன்ற அல்குலையும் கொண்ட மகளிரே! இவனுடைய
பொய்களை உள்ளடக்கிய கொடிய சொற்களினின்றும் உங்களைக் காத்துக்கொள்வீராக என்று
1.3
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 283-287
பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய தலையில் வலித்துக் கட்டின
நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
முள்ளை மறைத்திருக்கும் இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
முயங்கி பொதிவேம் முயங்கி பொதிவேம்
முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம்
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே – கலி 106/34-36
கட்டியணைத்து மூடிக்கொள்வோம், கட்டியணைத்து மூடிக்கொள்வோம்,
எம்முடைய முலையால் வேதுகொடுத்து ஒற்றியெடுத்துக் கட்டியணைத்து மூடிக்கொள்வோம்,
கொலைகாரக் காளை குத்திய புண்ணை, என் தோழியே!
1.4
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே – புறம் 285/12
பிணங்களிடையே நின்று பொருதலால், நிணம் கொத்தாகப்படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான்.
2.1
மிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர் – மலை 252
மீதம்வைத்த தசையைக் கொண்ட பருத்த வடிவுடைய மூட்டையுடையராய்
2.2
அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை – மலை 121
அவல் இடிக்கும் பக்குவம் பெற்றன, அழகிய கொத்துக்கொத்தான மூங்கில்நெல்;
2.3
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463
(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை
வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய – அகம் 335/16
வாளை வடித்துவைத்தாற் போன்ற வயிற்றினையுடைய இளங்குருத்தின்கண்ணவாய
2.4
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/6
மொட்டுகள் தளையவிழ்ந்த ஒளிவிடும் செங்காந்தள்,
2.5
தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி – அகம் 129/7,8
தாழியிடத்தே தழைத்த கொழுவிய இலையையுடைய பருத்திச்செடியின்
பருமனான வயிற்றினையுடைய இளங்காயைப் பேடைகட்கு அருத்தி
2.6
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை – அகம் 147/2,3
வேங்கை மரத்தின் வெறி கமழும் பூவுடன் கூடிய தழையை வேருவேறாக வகுத்துவைத்ததைப் போன்ற
தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தினையுடைய (புலிக்)குட்டிகள்
2.7
எழா நெல்
பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின்
வளை இல் வரும் கை ஓச்சி – புறம் 253/2-4
நெல் எழாத
பசிய மூங்கில் பட்டை ஒழித்தாற்போன்ற வெளுத்திருந்த
வளையல் இல்லாத வறிய கையைத் தலைமேலே ஏற்றிக்கொண்டு
2.8
புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை
பழ அணி உள்ளப்படுமால் தோழி – அகம் 391/6-8
ஒப்பனைசெய்யப்பட்ட என
நிறைவான மாண்பினையுடைய கூந்தல் குடியைக் காணுந்தோறும் முன்புள்ள
எனது பழைய அழகு நினைக்கப்படுகின்றது தோழி
2.9
முட தாழை முடுக்கருள் அளித்த_கால் வித்தாயம்
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள்
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/9-12
வளைந்து கிடக்கும் தாழையின் குறுகிய வெளியில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சிறு தாயம் வேண்ட
உருட்டும்போது அதனையே கிடைக்கக் கண்டவனின் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
கொடுப்பதில் சிறந்தவனே! நீ பிரிய எண்ணினால், சிறு தாயம் வேண்டியபோது பெரும் எண்ணிக்கை பெற்று
கட்டிவைத்த பந்தயப் பொருளை இழந்தவனைப் போலப் பெரும் துயரில் வருந்தமாட்டாளோ?
2.10
மா வதி சேர மாலை வாள் கொள
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து
செம் தீ செ அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்
மாலை என்மனார் மயங்கியோரே – கலி 119/11-16
விலங்குகள் தாம் தங்குமிடங்களை அடைய, மாலைக்காலம் பலவகையிலும் ஒளிபெற்று விளங்க,
அந்திக்காலத்தை அந்தணர்கள் தமக்குரிய சடங்குகளைச் செய்து எதிர்கொள்ள,
மகளிர் செந்தீயால் உண்டான விளக்கை ஏற்றத் தொடங்க, இவ்வாறாக வந்த பொழுது
தூய்மையான அணிகலன் அணிந்த, பிரிந்து வாழும் மகளிரின் உயிரை அவர் உடலிலிருந்து போக்கும்
தருணமாக இருப்பதை அறியமாட்டாதவராய்
மாலைக் காலம் என்கின்றனர் மனமயக்கம் கொண்டவர்கள்.
2.11
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் – கலி 52/22,23
அதனால், அரும்புகள் மலரும் அதிகாலையில் வந்து நீ உன் விருப்பத்தைக் கூறி
மணம் பேசி முடிக்க வேண்டும்,
2.12
புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா
முகை வெண் பல் நுதி பொர முற்றிய கடும் பனி – கலி 31/19,20
புகை படிந்தது போல் புதர்கள்தோறும் படர்ந்து, இனிய தேன் உள்ளே பெறுதல் அற்ற
அரும்பாகிய வெள்ளிய பற்களின் முனை ஒன்றோடொன்று அடித்துக்கொள்ளும்படி சூழ்ந்துகொண்ட கடும் பனி?
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின் – குறு 85/4
தேன் உள்ளே இருத்தலைக் கொண்ட இனிய கோலையுடைய கரும்பினது
2.13
பொதியின் செல்வன் பொலம் தேர் திதியன் – அகம் 25/20
பொதிகை மலைத் தலைவன் – பொன்னால் ஆன தேரை உடைய – திதியனின்
2.14
அவை இருந்த பெரும் பொதியில்
கவை அடி கடு நோக்கத்து
பேய்மகளிர் பெயர்பு ஆட – மது 161-163
அவையத்தோர் இருந்த பெரிய அம்பலத்தில்
இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய
பேய்மகளிர் உலாவி ஆட
பொதியம்
(பெ) பொதிகை மலை, the pothigai hills
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே – புறம் 2/24
பொற்சிகரங்களையுடைய இமயமலையும் பொதிகை மலையும்போன்று.
பொதியில்
(பெ) 1. பொது அரங்கு, அம்பலம், public hall
2. பொதிகை மலை, the hill pothigai
1
சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர் – அகம் 287/5
சுரைக்கொடி படர்ந்த அம்பலத்தின்கண்ணே அழகிய குடியிருப்பினையுடைய சீறூரிலுள்ளோர்
2
பொதியில் முனிவன் புரை வரை கீறி
மிதுனம் அடைய – பரி 11/11,12
பொதிகை முனிவனின் பெயர்கொண்ட அகத்தியன் என்னும் மீன் தன் உயர்ந்த இடத்தைக் கடந்து
மிதுன ராசியைச் சேர,
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில்
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் – அகம் 138/7,8
திருந்திய இலையைக்கொண்ட நெடிய வேலையுடைய பாண்டியனது பொதிகை மலையில்
அடைதற்கரிய உச்சியினின்றும் இழியும் ஆரவாரித்து வருதலையுடைய அருவி ஒலிபோல
பொதிர்
(வி) பருத்திரு, swell, increase in size, become large
பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம்
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/25,26
பருத்தெழுந்த தன் முலையின்மேல் சந்தனத்தைப் பூசி, பின் காய்ந்துபோன அச் சந்தனத்தை
உதிர்த்துவிட்டு மேலும் நிறைய சந்தனத்தைப் பூசுபவளின் காம விருப்பமும்,
பொதினி
(பெ) ஒரு சங்ககால ஊர்/மலை, a town/hill in sangam period
இன்றைய பழனி சங்ககாலத்தில் பொதினி என்று அழைக்கப்பட்டது.
இது ஊரையும், ஊரை அடுத்துள்ள மலைக்கும் பொருந்தும்.
ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி.
இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சங்ககால மன்னன் நெடுவேள் ஆவி.
நெடுவேள் ஆவி என்பது முருகன் பெயர்களில் ஒன்று. இப்பெயரைக் கொண்டவன் இந்த அரசன்.
மற்றும் வையாவிக்கோப் பெரும்பேகன், வேளாவிக்கோமான் பதுமன் ஆகியோரும்
இவ்வூர் ஆவியர் குடிமக்களின் அரசர்கள்.
பொதினி நகரில் வைரக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் நடைபெற்று வந்தது.
பொதினி குன்றம் மகளிர் மார்பக முகடு போல் பொலிவுடன் திகழ்ந்தது.
அத்துடன் பொன்வளம் கொழிக்கும் ஊராகவும் விளங்கிற்று.
வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவ குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம்
மறந்தனர்-கொல்லோ தோழி – அகம் 1/1-7
வண்டுகள் மொய்ப்பதால் சிதைவுண்ட தலைமாலையையும், ஒளிரும் கழலையும்,
அச்சம்தரும் குதிரைகளையும் உடைய மழவரை ஓட்டிய,
முருகனைப் போன்ற நல்ல போர்த்திறம் கொண்ட நெடுவேள் ஆவியின்
அறுக்கப்பட்ட தந்தங்களையுடைய யானைகளைக் கொண்ட பொதினியில் உள்ள
சாணைபிடிக்கும் சிறுவன் அரக்குடன் இணைத்துச் செய்த
சாணைக்கல் போல் (உன்னைப்) ‘பிரியமாட்டேன்’ என்ற சொல்லைத் தாம்
மறந்துவிட்டாரோ! தோழி!
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி
பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின்
ஒண் கேழ் வன முலை பொலிந்த
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 61/13-18
விழாக்களையுடைய மிக்க சிறப்பு வாய்ந்த திருவேங்கட மலையைப் பெறினும்,
அந்த இடம் பழகிப்போய் அங்கேயே தங்கியவராதல் நடவாததாகும் – மிகப் பழமையான,
முரசைப்போன்ற திணிந்த தோள்களையுடைய நெடுவேளாகிய ஆவி என்பானின்
பொன் மிகுந்த பெரிய நகரமாகிய பொதினியைப் போன்ற உனது
ஒளி விளங்கும் அழகிய முலைகளில் பொலிவுற்று விளங்கும்
நுண்ணிய பூணினை அணிந்த மார்பினில் பொருந்துதலை மறந்து
பொது
(பெ) 1. இயல்பானது, that which is natural or usual
2. சிறப்பின்மை, lack of distinction
3. திருமணம் போன்ற பொதுவான நிகழ்ச்சிகள், the usual events like marriage etc.,
4. எல்லாருக்கும் உரியது, that which is common
1
விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம்
செய்கின்றே செம் பூ புனல் – பரி 7/20-22
விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவன் செய்த மேனிப் பூச்சுக்குரிய கலவையைப் போல,
இயல்பான மணத்தை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு, புதிய ஒரு மணத்தைச்
செய்து வந்தது சிவந்த அழகிய புதுப்புனல்;
2
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ
பொது கொண்ட கவ்வையின் பூ அணி பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை – கலி 66/9-12
தலையணை போன்ற மென்மையான தோள்களைக் கொண்ட நாம் வருந்தியிருக்க, நீ விரும்பும்
துணையைக் கூடி, நீ
மணக்கோலம் பூண்ட அந்த மனையில் இருக்கின்றாய் என்று உனக்குக் கிடைத்த பெரும்பேச்சைக் காட்டிலும்
சிறந்ததன்றோ,
சிறப்பில்லாத இரைச்சலுக்கிடையே, பூமாலையை அணிந்துகொண்டு பொலிவுற்றிருந்த உன்
பரத்தையருடனான திருமணத்தினால் கமழ்கின்ற மணத்தோடு இங்கு வர, அதை விடியற்காலத்தில்
நான் பெற்றது
3
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தர – அகம் 86/9-11
தலையுச்சியில் குடத்தினையுடையவரும், கையினில் புதிய அகன்ற மண்டை என்ற கலத்தினையுடையவரும்
மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர்
முன்னே தருவனவும் பின்னே தருவனவும் முறைமுறையாகத் தந்திட
– வேங்கடசாமி நாட்டார் உரை
பொதுப்பணி செய்வதில் ஆர்வமும் ஆரவாரமும் உடைய முதுமையுடைய மங்கல நாண் உடைய
பேரிளம் பெண்டிர்
– பொ. வே. சோமசுந்தரனார் உரை
4
சின போர் வழுதி
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து- புறம் 51/4,5
சினம் பொருந்திய போரையுடைய வழுதி
குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது என்று கூறப்பெறானாய் போரை ஏற்று
பார்க்க : பொதுச்சொல், பொதுநோக்கு, பொதுமகளிர், பொதுமீக்கூற்றம், பொதுமொழி, பொதுவாக, பொதுவினை
பொதுச்சொல்
(பெ) உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை,
Word implying common possession, as of the world;
போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப – புறம் 8/2,3
நுகரும் இன்பத்தை விரும்பி, பூமி பிற வேந்தர்க்கும் பொது என்னும் வார்த்தைக்குப் பொறாஅது
தன் நாடு இடம் சிறிது என்னும் மேற்கோள் செலுத்த
பொதுநோக்கு
(பெ) அனைவரையும் ஒரே தரத்தில் பார்த்தல், treating/seeing all as equal
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை
பலரும் வருவர் பரிசில்_மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல்
அது நற்கு அறிந்தனை ஆயின்
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே – புறம் 121
ஒரு திசைக்கண் வள்ளியோனாகிய ஒருவனை நினைத்து, நான்கு திசையிலுமுள்ள
பரிசில் மாக்கள் பலரும் வருவர்
அவர் வரிசை அறிதல் அரிது.மிகவும்
கொடுத்தல் எளிது, பெரிய வண்மையையுடைய தலைவனே,
நீ அவ் வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின்
வரிசை கருதாது அனைவரையும் ஒரு தரமாகப் பார்த்தலைத் தவிர்ப்பாயாக, அறிவுடையோரிடத்து
பொதும்பர்
(பெ) சோலை, grove
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – பெரும் 374
வெயில் நுழைந்து அறியாத, குயில் நுழையும் சோலையில்,
பொதும்பு
(பெ) சோலை, grove; பார்க்க : பொதும்பர்
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில் – நற் 243/3,4
ஆடுகின்ற கிளைகளில் நெருக்கமாய்த் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரத்துச்
சோலைதொறும் தங்கும் அழகிய கண்களையுடைய கரிய குயில்,
பொதுமகளிர்
(பெ) இடைக்குலப்பெண், Shepherdess
ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார்
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும்
முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரோடு
எல்லாம் புணர் குறி கொண்டு – கலி 101/47-50
இப்பொழுது காளைகளும் சோர்ந்தன, இடையர்களும் மிகவும் காயம்பட்டிருக்கின்றனர்,
மணக்கின்ற கரிய கூந்தலையுடைய ஆயமகளிர் எல்லாரும்
முல்லைப்பூக்கள் பூத்துக்கிடக்கும் அழகிய குளிர்ந்த சோலைக்குள் புகுந்தனர், இடையரோடு
தாம் சேர்வதற்குரிய இடங்களைத் தேடிக்கொண்டு.
பொதுமீக்கூற்றம்
(பெ) யாவராலும் பொதுவாக மேலாய சொற்களால் பாராட்டப்படும் புகழ்,
fame, which is commonly praised by all
பொதுமீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/22
யாவரும் ஒப்பப் புகழும் நாட்டையுடையாய்.
பொதுமை
(பெ) பொதுவுடைமை, common property
பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை
துற்றுவ துற்றும் துணை இதழ் வாய் தொட்டி – பரி 20/50,51
உன் பெண்மை யாவர்க்கும் பொதுவாகிப்போனதால் காப்பு என்று ஒருவரும் இல்லாதவளே! ஐம்புல
இன்பத்தை மட்டும்
நுகரும் இயல்புடைய காமுகப் பன்றிகள் நுகரும் இரண்டு உதடுகளையுடைய வாயைத் தொட்டியாக
உடையவளே!
பொதுமொழி
(பெ) 1. உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை,
Word implying common possession, as of the world
2. சிறப்பில்லாச்சொல், unworthy speesh or word
1
பொதுமொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் – கலி 68/1,2
இந்த உலகம் பொதுவானது என்ற பேச்சே பிறர்க்கு இல்லாமல் உலக முழுதும் ஆளும் மா மன்னர்க்கு
அறிவு நிறைந்த அறவுரைகள் கூறும் இயல்புள்ள அமைச்சர்கள் போல,
2
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி
குடி புறந்தருகுவை ஆயின் நின்
அடி புறந்தருகுவர் அடங்காதோரே – புறம் 35/31-34
கோள்சொல்பவர்களின் சிறப்பில்லா வார்த்தையை உட்கொள்ளாது
ஏரைப் பாதுகாப்பாருடைய குடியைப் பாதுகாத்து
ஏனைக் குடிகளையும் பாதுகாப்பாயாயின், நின்
அடியைப் போற்றுவர் நின் பகைவர்.
பொதுவர்
(பெ) இடையர், herdsmen
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/5
பல பசுக்களையுடைய இடையர்கள் வேகமுள்ள காளையை அடக்குவதைக் காண்பதற்காக,
பொதுவன்
(பெ) இடையர்மகன், herdsman
காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை – கலி 103/52
காயாம்பூவாலான கண்ணியைச் சூடிய இடையனது அழகைப் பாராய்!
பொதுவாக
(வி.அ) எல்லாரும் சேர்ந்து, all people together (in common)
இது ஆகும் இன் நகை நல்லாய் பொதுவாக
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்
பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று அ காவில்
துனை வரி வண்டின் இனம் – கலி 92/24-29
“இது சரி, இனிக்கும் சிரிப்பினைக் கொண்ட நல்லவளே! எல்லாரும் சேர்ந்து
தாமே கொடிபோன்றிருக்கும் அந்த மங்கையர், தாவி எழுந்து ஒரு
பூங்கொடியை வளைத்துப் பிடித்துப் பூங்கொத்துக்களைக் கொய்ய, அப்பொழுது
கிளைகளில் மலர்கள் மலர்ந்த வேப்பம்பூவினுக்குரிய பாண்டியன் போரிட்ட
போர்க்களத்தில் பகைவரின் பாதுகாப்புப் போல உடைந்து சிதறியது அந்த சோலையில் இருந்த
விரைகின்ற, வரியினையுடைய வண்டுக்கூட்டம்;
பொதுவி
(பெ) பொதுமையுடையவள், பொதுமகள், கணிகை, whore, harelet
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி – பரி 20/55-58
இணக்கமுள்ள செழித்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு,
தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி, இளமைபொருந்திய விரல்களால்
பொருள்கொடுப்போருக்கு யாழினை இசைத்து இசையெழுப்பி இன்பமூட்டும் பொழுதே, என் அணிகலன்களையும்
அணிந்து, மகிழ்விக்கும், இன்பம் வழங்குவதில் பொதுமையுடையவளே!
பொதுவினை
(பெ) 1. ஊர்க்குப் பொதுவான காரியங்கள், public affairs
2. பல ஊர்களுக்குப் பொதுவான ஒரு காரியம், a single act common to many places
1
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண்
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப
கோலின் எறிந்து காலை தோன்றிய
செம் நீர் பொதுவினை செம்மல் – நற் 130/1-4
குற்றமின்றி நல்லிலக்கணங்கள் நிறைந்த குதிரைகளைப் பூட்டிய தேரில், தெளிந்த கண்ணையும்
மடிக்கப்பட்ட வாயையுமுடைய தண்ணுமைப் பறை இடையிடையே ஒலிக்க
கோலால் குதிரைகளை அடித்து விரட்டிக் காலையில் இங்குத் தோன்றிய
செவ்விய பண்புகளைக் கொண்ட, பொதுக்காரியங்களைச் செய்யும் நம் தலைவர்
2
ஏழ் ஊர் பொதுவினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போல
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/5-7
ஏழு ஊர்களிலுள்ள பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
உலையில் மாட்டிய துருத்தியைப் போல
எல்லை அறியாமல் வருந்தும் என் நெஞ்சே!
பொதுளு
(வி) 1. தழை, செழி, be luxuriant; prosper, thrive, flourish
2. நிறை, be possessed of, filled;
3. நெருங்கு, நெருக்கமாக இரு, be thick, close or crowded
1
இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 10
இருள் உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்
நுண் முள் வேலி தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி – நற் 277/6,7
நுண்மையான முட்களாலாகிய வேலியில் படர்ந்த, தாதுடன் செழித்துத் தழைத்த,
கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பீர்க்கின் மஞ்சள் நிறப் பூவில் தேன்குடித்து,
2
முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர்
விதை குறு வட்டி போதொடு பொதுள
பொழுதோ தான் வந்தன்றே – குறு 155/1-3
பழமையான தினைப்புனத்தை உழுத ஆரவாரம் மிக்க உழவரின்
விதைகளை வைக்கும் சிறிய வட்டிகள், முல்லைமொட்டுக்களால் நிறைய
கார்ப்பருவம் வந்துவிட்டது;
3
பொம்மல் ஓதி பொதுள வாரி – அகம் 257/5
பொலிவுற்ற கூந்தலை நெருங்க வாரி
பொம்மல்
(பெ) 1. மிகுதி, Abundance, copiousness
2. சோற்றுக்குவியல், abundant food
3. பொங்குதல், swelling
4. திரள், crowd
5. தோற்றப் பொலிவு, fineness of appearance
1
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு
கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/4-6
கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை
உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன்
கையகத்தில் ஏந்தி வாய் கொள்ள உண்டு,
2
பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 168,169
பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன்,
(மிகுந்த)நிறங்கொண்ட கண்போன்ற (பருக்கைகளாலான)தினைச்சோற்றுக் குவியலைப் பெறுவீர்
3
பொம்மல் படு திரை நம்மோடு ஆடி – நற் 96/4
பொங்கியெழுந்து முழங்கும் கடல் அலையில் நம்மோடு கடலிற்குளித்து
4
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – நற் 272/3
திரளான அடும்பு படர்ந்த வெண்மையான மணலின் ஒருபக்கத்தில்,
5
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/11
பொலிவுபெற்ற கூந்தலையுடையவள் பேரவாவினால் நடுங்கி வருந்துமாறு
பொம்மல் ஓதி என்ற தொடர் சங்க இலக்கியங்களில் 13 இடங்களில் காணப்படுகிறது.
இதற்கு, மிகுதியான, திரளான என்ற பொருள்களும் ஒத்து வருவன.
பொய்
1. (வி) 1. வேடிக்கைக்குப் பொய்மொழி பேசு,
utter falsehood for fun (to children to convince them)
2. உண்மைக்கு மாறானவற்றைச் சொல், utter an untruth
3. மழை, நிமித்தம், சொல், நம்பிக்கை ஆகிய பிழை, தவறு,
fail, as a prediction or omen; to deceive hope, as clouds;
– 2. (பெ) 1. உண்மை இல்லாதது, தவறானது, lie, falsehood
2. போலியானது, sham, that which is false or counterfeit, pretence, feigning
1.1
தீவிய மிழற்றி
முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள்
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி
வருகுவை ஆயின் தருகுவென் பால் என
விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூ_கொடி நிலையே – அகம் 54/16-22
இனிய மொழிகளைக் கூறி,
வளரும் நிலவினால் விளங்கும் பிறைமதியே!
(கழுத்தில்)பொன்சங்கிலி அணிந்த என் மகன் இருப்பிடம் தெரிந்து
வந்தால் (உனக்குப்) பால் தருவேன் என்று
ஓரக்கண்ணால் பார்த்தவளாய் விரலால் (நிலவை) மீண்டும் மீண்டும் அழைத்து,
தேமல் படர்ந்த அல்குலையுடைய என் காதலி,
புதல்வனிடம் பொய்யாகக் கூறும் பூங்குடியின் நிலையை(காண்போம் பாகனே)
1.2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு
யான் எவன் செய்கோ பொய்க்கும் இ ஊரே – ஐங் 154
வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
கடற்கரைச் சோலையில் தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனோடு
நான் எதனைச் செய்வேன்? (அவன் நல்லவன் என்று)பொய்கூறுகிறது இந்த ஊர்!
1.3
தண் இயல் எழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே – பதி 18/10-12
குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய்,
மாரிக்காலத்தில் பெய்யாமல் தவறிவிட்டாலும்
சேரலாதன் நிறைவேற்றாமலிருக்கமாட்டான் உமது விருப்பத்தை
2.1
பெரிய கூறி நீப்பினும்
பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே – ஐங் 283/4,5
பெற்றோர் வாய்மையுடைய உறுதிமொழிகள் பலவற்றைக் கூறி விலக்கினாலும்,
காதலரின் பொய்மொழிகளான வலையில் விழும் பெண்கள் மிகவும் அதிகமானோர்.
2.2
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் – மலை 107,108
பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின் (ஒன்றோடொன்று)பின்னிப்பிணைந்த துதிக்கைகள் போல,
கொய்யப்படும் பக்குவம் பெற்றன பிணைந்துகிடக்கும் கதிர்களையுடைய தினை;
பொய்கை
(பெ) இயற்கையாக அமைந்த சிறிய நீர்த்தேக்கம், natural pond
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 171,172
செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்
யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர,
பொய்த்தல்
(பெ) பொய்கூறுதல், uttering falsehood
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை – குறு 184/1
தாம் அறிந்ததனை மறைத்துப் பொய்கூறுதல் சான்றோர்க்கு இயல்பில்லை
பொய்தல்
(பெ) மகளிர்/இளம்பெண் விளையாட்டு, women’s/young girls’ game
பொய்தல் என்பது ஆற்றங்கரையில் அல்லது கடற்கரையில் மணலில் இளம்பெண்கள் அல்லது சிறுமியர்
ஆடுகின்ற விளையாட்டு என இலக்கியங்கள் கூறுகின்றன. எனவே, ஈரமான மணலில் சிற்றில் கட்டி
இன்றைக்கும் சிறுமியர் விளையாடும் விளையாட்டு என்பது பெறப்படும்.
கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர்
யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர்
பனி துறை குவவு மணல் முனைஇ மென் தளிர்
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர – மது 582-589
(தம்மைக்)கண்டோருடைய
நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்,
யாமத்திற்குரிய நல்ல யாழ்களுக்கு நடுவே (அவற்றின் இசையோடு இயைந்து)நின்ற
முழவின் முழக்கத்திற்கு மகிழ்ந்தனராய் ஆடி, ஆழமான நீரினையுடைய
குளிர்ந்த துறையிடத்துக் குவிந்த மணலில் தீவிரமாக ஆடி, மெல்லிய தளிர்களைக்
கொழுவிய கொம்புகளிலிருந்து கொய்து, நீரின் (அகத்தேயுள்ள)அரும்பொடு சேரக்கட்டின
நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை வடிம்பிலே விழும்படி செருகி,
மணம் கமழும் (தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய –
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம்
துறை கெழு கொண்கன் நல்கின்
உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊரே – ஐங் 181
நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்களையும், அழகாக இறங்கும் பருத்த தோள்களையும் உடையவரான
மணல்வீடு கட்டி விளையாடிய, பொய்யுரையை அறியாத மகளிர்
குவிந்திருக்கும் வெண்மையான மணலில் குரவைக் கூத்துக்காக நின்றுகொண்டிருக்கும்
துறையைப் பொருந்திய தலைவன் நம்மீது அன்புசெய்தால்
வாழ்வதற்கு இனியதாயிருக்கும் இந்த ஆரவாரமுள்ள ஊர்.
மகளிர் கோதை மைந்தர் புனையவும்
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர்
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி – பரி 20/20-24
மகளிர் அணிதற்குரிய மாலைகளை மைந்தர் அணிந்துகொள்ளவும்,
மைந்தர்களின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும்,
முந்திச் செல்லவேண்டும் என்ற விருப்பத்தினால் அணிகளை அணியும் முறைகளை மறந்து மாற்றி
அணிந்தவராய்,
சிற்றில் செய்து விளையாடுவோர் விளையாடிய, அழகிய வண்டுகள் பாடித்திரிந்த மணலைக் கொண்ட
ஒரோவழி, சிறுவர்களும் பொய்தல் விளையாட்டு விளையாடுவர் என்கிறது நற்றிணை.
பொலம் தொடி புதல்வனும் பொய்தல் கற்றனன் – நற் 166/7
பொன்னாலான தோள்வளை அணிந்த புதல்வனும் விளையாடக் கற்றுக்கொண்டான்;
பொய்ப்பு
(பெ) 1. பொய்கூறுதல், uttering falsehood
2. பொய்படுதல், (சொல்)பிழைத்தல், failing in (promising) words
1
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே – பதி 20/8,9
கண்ணுக்கு முன்னால் மகிழ்ச்சியைக் காட்டி, தம் மனம் திறந்து அன்புசெலுத்தாத
உட்பகைகொண்டாரின் நாட்டினிலும் பொய்கூறுவதை அறியான்,
2
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே – பதி 63/6,7
நிலங்கள் தம் இயல்பினின்றும் மாறுபடும் காலம் என்றாலும்
சொன்ன சொல் பொய்படுதலை நீ அறியமாட்டாய்;
பொய்ம்மருள்
(வி) பொய்யை மெய்யென மயங்கு, get allured by lies
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு
—————————————————–
குவளை உண்கண் என் மகள்
——————– —————-
மாலை விரி நிலவில் பெயர்பு – நற் 271/3-10
செழுமையும் குளிர்ச்சியும் உள்ள வீட்டோடு நான் இங்கே தனித்திருக்க,
தன்னுடன் வருகின்ற பெரிய காளைபோன்றவனின் பொய்மொழிகளில் மயங்கி,
—————————— ———————–
குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகள்,
—————————– ————————–
மாலைக் காலத்து விரிந்த நிலவில் செல்ல
பொரல்
(பெ) போரிடுதல், fighting, battling
பொரல் அரும் தித்தன் காண்க தில் அம்ம – புறம் 80/6
போரிடுதலுக்கு அரிய தித்தன் காண்பானாக
மேல்
பொரி – 1. (வி) 1. மரப்பட்டை, தோல் ஆகியவற்றில் பொருக்கு வெடி,
be dried up and shrivelled, as the skin/bark of a tree
2. அனலில் அல்லது சூட்டில் நெல், சோளம் முதலியன வெந்து, பெரிதாகி வெடி,
be parched or puffed
3. எண்ணெயில் வறு, fry in oil
1.1
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் – நற் 3/2
பொரிந்துபோன அடிமரத்தை உடைய வேம்பின் புள்ளிபுள்ளியான நிழலில்
1.2
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும் – அகம் 1/12,13
நீர் அற்ற பசுமையான சுனைகள் ஈரப்பசையே இன்றிக் காய்ந்துபோனதால்
நெல்விழுந்தால் பொரிந்துபோகும் அளவு வெம்மையுடைய –
1.3
மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் – பட் 176,177
மீனை வெட்டி, (அதனுள் இருக்கும்)வேண்டாத பகுதிகளை நீக்கி,
(அதன்)தசையினைப் பொரிக்கும் ஓசையெழும்பும் முற்றத்தினையும்,
2
முன்றில்
நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன – குறு 53/1-4
திறந்த வெளியில்,
அரும்புகள் முதிர்ந்த புன்கமரத்தின் பூக்கள் உதிர்ந்துகிடக்கும் வெள்ளை மணல்,
வேலன் ஒப்பனைசெய்த வெறியாடும் களங்கள்தோறும்
செந்நெல்லின் வெள்ளைப் பொரி சிதறியதைப் போல் தோன்றும்,
பொரீஇ
(வி.எ) பொருந்தி, பொருத்தி, ஒப்பிட்டு – சொல்லிசை அளபெடை comparing
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும்
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 30-32
(நாமாக)மணந்தால் நன்கு அமையுமோ என்பதையும்,(தலைவனின்)குடும்பம் ஒத்ததாக இருக்குமோ என்பதையும்,
(தலைவன்)இனத்தாரையும் கூட்டாளிகளையும் (நம்மவருடன்)ஒப்பிட்டுப்பார்த்தும், யோசித்துப்பாராமல்,
நாங்களாக(வே) துணிந்துசெய்த (தலைவிக்கு)ஆபத்தற்ற (இந்த)சிறப்பான செயல்
பொரீஇய
(வி.எ) செய்யிய எனும் வாய்பாட்டு வி.எ. – பொர – to fight with
நாளவை இருந்த நனை மகிழ் திதியன்
வேளிரொடு பொரீஇய கழித்த
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே – அகம் 331/12-14
நாளோலக்கம் கொண்டிருந்த கள்ளின் மகிழ்வினையுடைய திதியன் என்பான்
வேளிரோடு போரிட உருவிய
வாளின் வாயினை ஒத்த கொடுமையையுடைய வறண்ட சுரத்தினை கடந்து
பொரு
1. (வி) 1. போரிடு, fight, contend in warfare, engage in battle
2. முட்டு, எட்டு, reach, extend
3. தாக்கு, மோது, come in collision with, dash against, as waves
4. மாறுபடு, எதிர்த்துநில், compete, vie with
5. உறை, தாக்கிப்பயன்விளை, affect
6. சந்தி, சேர், meet, join, unite
7. குத்து, stab, strike, pound
8. தடு, தடைசெய், hinder
9. தேய், உரசு, reduce by friction, rub away
– 2. (பெ) ஒப்பு, equality
1.1
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய – பெரும் 415
நூற்றுவரும் போரிட்டுப் போர்க்களத்தே அழியும்படி
1.2
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267
விண்ணைத் தீண்டும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சிநிலத்திற்கு உரிமையுடையோனே,
1.3
புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும் – அகம் 237/14
நீர் மோதுகின்ற மதகுகளையுடைய உறையூரையே அடைவதாயினும்
1.4
பொரு கயல் முரணிய உண்கண் – குறு 250/5
ஒன்றற்கொன்று எதிர்த்துநிற்கும் கயல்களைப் போன்றிருக்கும் மையுண்ட கண்களையும்
1.5
பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும் நோய் பொர
கண்டிசின் வாழி தோழி – குறு 240/1-5
குளிர்ந்த புதரில் படர்ந்த பச்சைக் கொடியையுடைய அவரையின்
கிளி வாயைப் போன்று ஒளிவிடும் பலவாகிய மலர்கள்
காட்டுப்பூனையின் பல் போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக
வாடைக்காற்று வந்ததன் மேலும், காமநோய் என்னைத் தாக்கி வருத்தும்படி
காண்பாயாக! வாழ்க தோழியே!
1.6
கண் பொர மற்று அதன்_கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே – குறு 364/7,8
இருவர் கண்களும் சந்தித்துக்கொள்ள, அதனால் அவரை
மீண்டும் என்பால் சேர்த்துக்கொள்வதற்காக மெல்லமெல்ல வரும் மள்ளர்களுக்கான சேரிப்போர்.
1.7
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் – ஐங் 319/1
கண்டோர் கண்ணைக் குத்தும்படி ஒளிவிடும் கதிர்கள் நெருப்பாய்ச்சுடும் பாழ்நிலத்தினையுடையதாய்
1.8
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை
சிறு கண் யானை உறு பகை நினையாது
யாங்கு வந்தனையோ பூ தார் மார்ப
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
இருள் பொர நின்ற இரவினானே – ஐங் 362
பிணங்களின் மீதான கற்குவியல்களைக் கொண்ட ஒதுங்கிச் செல்வதற்கும் அரிய கிளைத்த வழிகளில்,
சிறிய கண்களைக் கொண்ட யானையினால் ஏற்படும் கெடுதலையும் எண்ணிப்பாராமல்
எவ்வாறு வந்தாய் பூமாலை அணிந்த மார்பினையுடையவனே! –
எமக்கு அருள்செய்யவேண்டும் என்ற நெஞ்சம் தூண்டிவிட,
இருள் தடுத்தற்குச் செறிந்து நின்ற இந்த இரவினில் –
1.9
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை – பதி 90/32,33
சிறந்த வேலைப்பாட்டையுடைய வில்லை மார்பினைத் தொடுமாறு இழுத்து வளைக்கும்போது
வில்லின் நாண் தேய்ப்பதால் ஒளிர்ந்து பிரகாசிக்கும் வலி பொருந்திய பெரிய கையினையும்,
2
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி – நற் 44/1
ஒப்பற்ற தோழியருடன் அருவியில் நீராடி,
பொருகளம்
(பெ) போர் நடக்குமிடம், field of battle
இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழிய – அகம் 246/11
மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க்களத்தே ஒழிந்துகிடக்க
பொருட்பிணி
(பெ) பார்க்க : பொருள்பிணி
மேல்
பொருத்து
(வி) பொருந்தச்செய், fit
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ
துணை மாண் கதவம் பொருத்தி – நெடு 80,81
பெரிய (ஆணிகளும் பட்டங்களுமாகிய)இரும்பால் கட்டி, சாதிலிங்கத்தைப் பூசி வழித்து,
இரட்டையான பெரிய கதவுகளைச் சேர்த்தி,
பொருந்தலர்
(பெ) பகைவர், ஒத்துவராதவர், those who do not consent, foe
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் – அகம் 266/12
பொருந்து
(வி) 1. நெருங்கு, ஒன்றோடொன்று சேர், come into close contact
2. மனம் இசை, consent, agree
3. அடை, reach, approach
4. தகுதியாகு, be suitable, worthy of
5. ஒட்டிக்கொண்டிரு, stick to, be glued to
6. புணர், கூடு, cohabit with
7. தங்கியிரு, abide, dwell
8. அளவொத்திரு, be of same size
1
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன் துறை ஊரனும் வந்தனன் – நற் 40/6-11
ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த,
பசுநெய் தடவிய மென்மையான உடம்பினையுடைய,
சிறப்புப் பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க,
நள்ளென்ற இரவில் கள்வன் போல,
அகன்ற துறையையுடைய தலைவனும் வந்தான்,
2
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய – மலை 488
(மன்னனோடு)இசைந்துபோகாத பகைவரின் கரிய தலைகள் துண்டிக்கப்பெற
3
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த – பரி 11/4-6
மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர,
மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க, பொருள்களை ஆராய்ந்தறிகின்ற
புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க
4
பணை தாள் ஓமை படு சினை பயந்த
பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக – நற் 318/2,3
பருத்த அடிமரத்தைக் கொண்ட ஓமை மரத்தின் தாழ்ந்த கிளை தந்த
நிழல் என்ற சொல்லுக்கே தகுயில்லாத வரிவரியான நிழலில் இருக்கும்போது
5
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே – நற் 333/10-12
சிறந்த புகழையுடைய நல்ல இல்லத்தின் ஒளிபொருந்திய சுவரில் ஒட்டிக்கொண்டு
விரும்பத்தக்க குரரையுடைய பல்லி
நள்ளென்னும் நடு இரவில் நாம் நினைக்கும்போதெல்லாம் கௌளிசொல்லும்
6
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்
கை உடை நன் மா பிடியொடு பொருந்தி
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும் – குறு 319/1-4
ஆண்மான்கள் தம் மடப்பம் பொருந்திய பெண்மான்களைத் தழுவி, மயக்கம் மிக்கு
காட்டில் சேர்ந்த புதர்களில் மறைந்து ஒதுங்கவும்,
துதிக்கையையுடைய நல்ல களிறுகள் தன் பெண்யானைகளோடு கூடி
முகில்களை அணிந்த பக்கத்தையுடைய மலையில் சேரவும்,
7
கானத்து
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும் – பதி 58/12-14
காட்டினில்
ஒலிக்கின்ற ஓசையையுடைய சிள்வண்டுகள் பொரிப்பொரியான அடிப்பகுதியில் தங்கியிருக்கும்
சிறிய இலைகளைக் கொண்ட வேல மரங்கள் மிகுதியாய் இருக்கும்
8
பொருந்து மலர் அன்ன என் கண் அழ – ஐங் 18/3
அளவொத்த மலர்களைப் போன்ற என்னுடைய கண்கள் அழும்படியாக
பொருநர்
(பெ) 1. பொருவார், பகைவர், enemy, foe
2. கூத்தர், actors, dancer-singers
1
பொருநர் தேய்த்த போர் அரு வாயில் – திரு 69
பொருவாரை இல்லையாக்கிய போர்த்தொழில் அரிதாகிய வாயிலினையும்
2
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை
அவை புகு பொருநர் பறையின் ஆனாது
கழறுப என்ப அவன் பெண்டிர் – அகம் 76/3-6
இனிய கடிய கள்ளினையுடைய அஃதை என்பானது யானைகளையும்
நல்ல அணிகளையும் (பரிசிலர்க்கு) வழங்கும் மகிழ்ச்சிபொரிந்திய நாளோலக்கத்தையுடைய
அவையில் புகும் பொருநரது பறையைப் போல ஒழியாது
என்னை இகழ்வர் என்று கூறுவர் அவன் பெண்டிர்
பொருநன்
(பெ) 1. போரிடுவோன், போர்வீரன், warrior, hero
2. அரசன், king
3. கூத்தன், actor, dancer-singer
1
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருந குருசில் என பல
யான் அறி அளவையின் ஏத்தி – திரு 275-277
சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய்,
போர்த்தொழிலில் மிகுகின்ற வீரனே, தலைவனே’, என்று பலவற்றையும்
நான் அறிந்த அளவாலே புகழ்ந்து
2
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே – புறம் 58/9
அறம் தங்கும் உறையூரின்கண் அரசன் இவனே
3
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 1-3
இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,
விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேற்றுப்புலத்தை எய்த நினைத்த விவேகத்தை அறிந்த கூத்தனே,
பொருநை
(பெ) சேரநாட்டிலுள்ள ஓர் ஆறு, a river in the Cera countery
தண் பொருநை புனல் பாயும்
விண் பொரு புகழ் விறல் வஞ்சி – புறம் 11/5,6
குளிர்ந்த ஆன்பொருந்தத்து நீரின்கண் பாய்ந்து விளையாடும்
வானை முட்டிய புகழினையும் வென்றியையுமுடைய கருவூரின்கண்
பொருநை என்பது ஆன்பொருநை என்றும் அழைக்கப்படும். இது இன்றைய கரூர் நகரையொட்டிப் பாயும்
அமராவதி நதி என்பர்.
பொருப்பன்
(பெ) பொதிய மலைக்கு உரியவன், பாண்டியமன்னன்,
king Pandiyan, who possesses the hill pothigai
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த
களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர – பரி 22/1,2
ஒளிவீசும் வாளினையுடைய பாண்டியன் சினந்து போரில் இறைப்பொருளாகப் பெற்ற
களிறுகளை நெருக்கமா நிறுத்திவைத்தது போன்று மேகங்கள் நெருங்கியிருக்க,
(பரிபாடலில் வையை ஆற்றைப் பற்றிய பாடல்)
பொருப்பு
(பெ) மலை, mountain
வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 42
மலைச்சாரலில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனே
பொருவர்
(பெ) போரிடுவோர், பகைவர், enemies, foes
பொருவர்
செல் சமம் கடந்த செல்லா நல் இசை – அகம் 231/10,11
பகைவரது
எதிர்ந்த போரினை ஒழித்த கெடாத நல்ல புகழினையும்
பொருவார்
(பெ) போரிடுவோர், பகைவர், enemies, foes
பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர் தொண்டையர் – குறு 260/4-6
பகைவரது
நிலத்தை வென்று அதன்கண் பயனை உண்ணுகின்ற தலைமையையுடைய யானையையும்
வளவிய தேரையும் உடைய தொண்டைமான்களுக்குரிய
பொருள்பிணி
(பெ) பொருள்பாற்சென்ற வேணவா, பொருளை ஈட்டுதலில் உள்ளம் கொண்ட பிணிப்பு,
the great desire one had to earn huge wealth
நில்லா பொருள்பிணி பிரிந்திசினோரே – நற் 241/12
நிலையில்லாத பொருளை ஈட்டுதலில் உள்ளம் பிணிப்புண்டு எம்மைப் பிரிந்து சென்ற காதலர்
பொரூஉ
(வி.எ) பொருது, being hit by
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/10
கல்லைப் பொருது மெலிவுறாத ஓசை இனிய வலிய அடியினையுடையவனும்
பொரூஉம்
1. (வி.மு) மோதுகின்றது, dashes against
– 2. (பெ.எ) மோதுகின்ற, போரிடும், போரிடுகின்ற, dashing, warring
1
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய்
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/9,10
இவ்வாறு வந்து மதுரை நகரின் மதிலை மோதுகின்றது, தூய மலர்களைப் பரப்பிக்கொண்டு
அழகிய குளிர்ந்த நீரையுடைய வையையாறு என்று சொல்லக் கேட்டு,
2
தார் முற்றியது போல தகை பூத்த வையை தன்
நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார்
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் – கலி 67/3-5
மாலை சூடியது போல அழகைப் பூத்துக்கொண்டு வரும் வையை, தன்
நீரினால் சூழ்ந்துகொண்டு மதிலுடன் மோதுகின்ற பகையே அன்றி, பகைவர்
போருக்காக வளைத்துக்கொள்வது என்ற ஒன்றை அறியாத மதில்கள் சூழ்ந்த நீரையுடைய ஊரினன்,
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை – மலை 335
காளைகள் சண்டையிடும் கல்லென்ற ஆரவாரமும்
பொரேரென
(வி.அ) விரைவுக்குறிப்பு, a term indicating suddennes
வண்டு பொரேரென எழ
வண்டு பொரேரென எழும் – பரி 23/30,31
கைவளையல்கள் திடீரென மேலே உயர்வதால்
வண்டுகள் திடுமென மேலே எழும்
பொல்லம்
(பெ) இணைத்தல், தைத்தல், stitching, joining as in tailoring
பொல்லம் பொத்திய பொதி_உறு போர்வை – பொரு 8
பொலம்
(பெ) 1. பொன், gold
2. வனப்பு, அழகு, loveliness, beauty
1
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 312
நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை
பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம் – மது 719
பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம்
2
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/14
பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, நேர்த்தியான தேரினைக் கொண்ட நன்னனின்
பொலன்
(பெ) 1. பார்க்க : பொலம்
2. பொன்னைப்போன்றது, golden
1
பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை – கலி 54/2
நீறு பூத்த நெருப்பினால் செய்யப்பட்ட பூவாத பூவாகிய பொன் மலர் மாலையையும்
2
நன்றே காதலர் சென்ற ஆறே
நிலன் அணி நெய்தல் மலர
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே – ஐங் 435
நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
நிலத்தை அழகுசெய்யும் நெய்தல்பூக்கள் மலர,
பொன்னைப்போல் அழகிய கொன்றையையும் பிடவத்தையும் கொண்டுள்ளது.
பொலி
1. (வி) 1. மிகு, பெருகு, abound, increase
2. செழி, flourish, prosper
3. மலர்ச்சியுறு, விளங்கு, bloom, shine
4. சிற, excel, be lofty, great, be celebrated
1.1
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி – நற் 374/2
உயர்ந்து தோன்றும் உமணர்கள் மிகுந்திருக்கும் சிறிய ஊரினரின்
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க – ஐங் 1/2
நெல் பலவாக விளைந்து பெருகுக; பொன்வளம் பெரிதும் சிறப்பதாக
1.2
புலவு வில் பொலி கூவை – மது 142
புலால் நாறும் வில்லினையும், செழித்து வளர்ந்த கூவைக்கிழங்கையும்
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை
வித்தி அலையில் விளைக பொலிக என்பார் – பரி 10/85,86
சங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன் ஆகியவற்றின் பொன்னாற்செய்த உருவங்களை
அலைகளோடு வரும் நீரிலிட்டு, ‘கழனிகள் விளைக, வளம் செழிக்க’ என்பார் சிலர்;
1.3
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து – பதி 31/7
வண்டுகள் சுற்றிவரும் மலர்ச்சியுற்ற மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும்,
புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு – மது 602
புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து மலர்ச்சியுற்ற சுற்றத்தாரோடு
1.4
நீள் நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉ போல – புறம் 331/8,9
நீண்ட நெடிய பந்தர்க் கீழே இருத்தி உணவை முறைமுறையாகத் தந்து உண்பிக்கும்
இல வாழ்க்கையில் சிறந்த மகளைப் போல
ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே – நற் 198/12
அவளைப் பெற்றவள் நான்; சிறந்து விளங்குக உமது பெயர்.
பொழில்
(பெ) 1. சோலை, grove
2. நாட்டின் ஒரு பகுதி, division of a country
1
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10
இனிதாக நகை செய்தபடி நாம் விளையாடிய சோலை
2
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை – பரி 5/8
இந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும்
பொழிலில் உள்ள
பொழுது
(பெ) 1. காலம், நேரம், time
2. தக்க சமயம், opportune moment
3. சூரியன், sun
4. நாள், day
1
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் – முல் 55
காலத்தை அளந்து அறியும், உண்மையே பேசுகின்ற மக்கள்
இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – நற் 3/8,9
இனியவள்,
மனைக்கு மாட்சிதரும் விளக்கினை ஏற்றிவைத்து நம்மையும் நினைத்துப்பார்க்கும் நேரம் இது என்று
2
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த
புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின் – மலை 64-66
நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன்
(அவனையே)நினைத்தவராக (அவனிடம்)சென்றடைந்தால், நல்லநேரத்தை எதிர்கொண்ட
(பறவையால் தோன்றிய)நல்ல சகுனம் பெற்றவர் ஆவீர், எம்மைச் சந்தித்ததால் –
3
இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி – நற் 187/4
வரிசையான மணிகள் ஒலிக்க, சூரியன் சாய தேரில் குதிரையைப் பூட்டி
4
வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய – பதி 68/5,6
கண்டோர் விரும்பும் அழகிய கோலங்கள் நிலையாய் அமைந்த பகைவர் மதிலை அழித்தாலொழிய
உண்பதில்லை என்று அடுக்கிக்கொண்டே சென்ற நாள்கள் பல கழிய,
பொளி
1. (வி) 1. உளியால் கொத்து, chisel, pick
2. கிழி, tear into strips
-2. (பெ) உரிக்கப்பட்ட மரப்பட்டை
1.1
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 482
கல்லை உளியால் கொத்திக் குடைந்தது போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையை
1.2
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து
களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல் – அகம் 257/15,16
நாரினையுடைய அடிமரத்தில் நீர் வரும்படி உரித்து
களிற்றியானை சுவைத்துப்போகட்ட சக்கையாகிய சுள்ளிகள்
பிடி பசி களைஇய பெரும் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே – குறு 37/2-4
(தன்)பெண்யானையின் பசியைப் போக்க ,பெரிய கையையுடைய களிறுகள்
மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரிக்கும்
அன்புடையனவாம், தோழி! அவர் சென்ற வழியிலே.
2
இன்னா வேனில் இன் துணை ஆர
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட – அகம் 335/6,7
கொடிய வேனிலில் தனது இனிய துணையான பெண்யானை உண்ணும்படி
பட்டுப்போன கிளைகளையுடைய யா மரத்தின் உரிக்கப்பட்ட பட்டையைக் கிழித்து ஊட்ட
பொற்ப
1. (வி.எ) பொலிவுபெற, அழகுற, magnificiently, gracefully
– 2. (உவம உருபு) போல, like
1
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 85,86
மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெற
ஒளி தங்கி அசையும் வகையாக(-நன்றாக) அமைந்த பொன்னாலான மகரக்குழை
2
கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும்
வான் பறை குருகின் நெடு வரி பொற்ப
கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு – பதி 83/1-3
கரிய மேகங்களுக்கு முன்பாக, ஒழுங்கு குலைந்து எழுகின்ற
வெண்மையான சிறகுகளைக் கொண்ட கொக்குகள் பின்பு நீண்ட வரிசையாய்ச் செல்வதைப் போன்ற
கொல்லுகின்ற யானைப்படைகளினூடே செறிந்து கலந்த பலவான கேடகப் படையுடன்
பொற்பு
(பெ) அழகு, பொலிவு, beauty, loveliness, magnificience, excellence
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை
குரங்கு உளை புரவி குட்டுவன் – அகம் 376/16,17
துய்யினைத் தலையிலே உடைய வளைந்த இறாமீன் பாயும் இடமான, அழகு பொருந்திய
வளைந்த பிடரி மயிரினையுடைய குதிரைகளையுடைய குட்டுவனது
பொற்பு விளங்கு புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்த – மது 778
பொலிவு விளங்குகின்ற புகழினையுடைய அரசவை உன்னைப் புகழ்ந்து வாழ்த்த
பொறி
1. (வி) 1. கல், மரம், உலோகம் ஆகியவற்றில் உருவம், எழுத்து ஆகியவற்றைச் செதுக்கு, வெட்டு,
inscribe, engrave, impress, stamp
2. எழுது, வரை, சித்தரி, write, delineate, paint, sketch
3. முத்துமுத்தாகத் தோன்று/அரும்பு, appear as pearls
– 2. (பெ) 1. உடலில் காணப்படும் நலமான குறி, auspecious mark on the body
2. மயில் தோகையிலுள்ள கண், ஆகுபெயராகப் பீலியை உணர்த்தும்,
spot on the peacock’s tail
3. திரட்சி, roundness, rotundity
4. முத்திரை, இலச்சினை, stamp, seal, signet
5. ஐம்புலன்களில் ஒன்று, organ of sense
6. விலங்கு, பறவை ஆகியவற்றைச் சிக்கவைக்க வைக்கப்படும் கருவி, trap
7. கோழி, மான், போன்ற பறவை, விலங்குகள் ஆகியவற்றின் மேனியில் காணப்படும் புள்ளி
spot, speck, dot
8. தேமல், சுணங்கு, beauty spot on the body of a person, especially ladies
9. நல்லபாம்பின் படத்திலுள்ள புள்ளிகள், spots on the hood of a cobra
10. புலி போன்ற விலங்குகளின் மேனியில் உள்ள வரி, stripe
11. எந்திரம், machine
12. மூட்டு, joint
13. தீப்பொறி, தீயின் துகள், spark
14. ஒளிர்வு, brightness
1.1
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 48,49
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைச்) செதுக்கிய
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
1.2
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை – மது 416
சந்தனக்குழம்பால் எழுதப்பட்ட சுணங்கு தோன்றின இளைய முலைகளையும்,
1.3
நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடை கூட்டம் வேண்டுவோரே – நற் 41/7-10
நெய் பெய்து சமைத்த
கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில்
சிறிய நுண்ணிய பல வியர்வைத் துளிகள் முத்துமுத்தாக அரும்ப
குறுகுறுவென நடக்கும் நடையினையுடைய உனது உறவை விரும்பும் உன் காதலர்
2.1
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய —————– —————
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 104-106
ஆரத்தைத் தாங்கிய அழகுடைய பெரிய மார்பிடத்தே கிடக்கின்ற
உத்தம இலக்கணமாகிய சிவந்த மூன்று வரிகளையும் தன்னிடத்தே வந்து விழும்படி வாங்கிக்கொண்ட,——–
வளவிய புகழ் நிறையப்பெற்று, வளைந்து நெளிந்து(உருண்டு திரண்ட) நிமிர்ந்த தோள்கள்
2.2
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – திரு 122
பல பீலியையுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து அகவ,
2.3
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13
புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ
2.4
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ – நெடு 126,127
புலியின் உருவமுத்திரை பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற
தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு
புலி பொறி போர் கதவின்
திரு துஞ்சும் திண் காப்பின் – பட் 40,41
புலிச் சின்னத்தையும் (பலகைகள் தம்மில் நன்கு)பொருதும் (இரட்டைக்)கதவுகளையும் (உடைய),
செல்வம் தங்கும் திண்மையான மதிலையும்(உடைய),
கயிறு பிணி குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/7,8
கயிற்றால் பிணித்தலையுற்ற குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கோடற்கு
அக்குடத்தின் மேல் இட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும் அவ்வோலையைத் தேரும் மாக்கள்
2.5
அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் – பட் 101,102
நண்டுகளை அலைக்கழித்தும், தொடர்ந்து வரும் அலைகளை மிதித்து விளையாடியும்,
(ஈர மணலில்)உருவங்களை உருவாக்கியும்; ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும்
2.6
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி
புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர்
அரும் பொறி உடைய ஆறே – மலை 193-195
விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால்,
(அப்)பன்றிகளுக்குப் பயந்து,
(அவை நுழையும்)ஒடுங்கிய வழிகள்தோறும் மாட்டிவைத்த பெரிய கல் பலகையால் செய்த அடார்
(என்னும்)சிறந்த பொறிகளை உடையன வழிகள்,
2.7
அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி
காமரு தகைய கான வாரணம் – நற் 21/7,8
அரித்தெழும் குரலையுடைய தொண்டையினைக் கொண்ட அழகிய நுண்ணிய பலவான
பொறிகளைக் கொண்ட
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி
புன் புறா உயவும் வெம் துகள் இயவின் – நற் 66/3-5
தனித்திருந்த நீண்ட கிளையில் ஏறி, தன் பெடையை நினைத்து, தன்
புள்ளிகள் விளங்கும் பிடரிமயிர் மணங்கமழத் தேய்த்துவிடும்
புல்லிய புறா வருந்தும் வெம்மையான புழுதியையுடைய காட்டுவழியில்
பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும் – அகம் 67/1,2
புள்ளிகளையும் வரிகளையுமுடைய
வானம்பாடிப்புள் பாடவும்
பல் பொறி
சிறு கண் யானை திரிதரும் – ஐங் 355/3,4
பல புள்ளிகளையும்
சிறிய கண்களையும் கொண்ட யானைகள் நடமாடும்
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து – பதி 74/8-10
அலைந்துதிரிவோர் பிடித்துக்கொண்டு வந்த பரவலான பளிச்சென்ற புள்ளிகளையுடைய,
கிளைத்துப் பிரிந்த கோலைப் போன்ற பிளவுபட்ட கொம்பினையுடைய,
புள்ளி மானின் தோலை உரித்து, அதினின்றும் ஊனை நீக்கி,
செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை – கலி 101/27
காதில் மச்சம் உள்ள, இடையர்கள் நேர்ந்துவிட்ட, மின்னும் நுண்ணிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட
வெள்ளைக்காளையின்
2.8
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல – நற் 55/4,5
நேரக்கூடிய தீங்குகளை எண்ணிப்பாராமல், இரவில் வந்து இவளின்
புள்ளித்தேமல் படர்ந்த மார்பகத்தைத் தழுவிச்செல்ல
2.9
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் – நற் 75/2,3
அழகிய புள்ளிகள் பெற்று விளங்குகின்ற நஞ்சைக் கக்கும் அகன்ற படத்தையுடைய
பாம்பு உயிர்களைக் கொல்வது போன்று
2.10
பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 104/1
அழகிய வரிகளையுடைய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்
2.11
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/3,4
இருளைப் போன்ற கூந்தல்களில் உள்ள மிகுதியான பூந்துகள்களில் மூழ்கியெழுந்து
கீழே விழுந்து, உருளும் எந்திரத்தைப் போல எம்மிடத்தில் வருதலையுள்ள
2.12
எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு
வம்மோ தோழி – நற் 363/3-6
சிறிதளவும்
மேற்கொண்டுள்ள தொழிலில் தளர்ச்சியடையாமல், சோர்வின்றி இருக்கும் கம்மியன்
மூட்டுகள் அற்றுப்போனவிடத்தில் அவற்றைச் சேர்த்து வார்ப்புச் செய்ய உருக்குமண்ணைக் கொண்டு
வருவீராக! தோழியே!
2.13
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர
———————— —————————–
தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/28-31
பாகரின் ஏவுதலின்படி, கால் மிதித்து எழுகின்ற தூசியின் ஒளிவிடும் துகள்கள் தீப்பொறி போலச்
சிதறும்படியாக,
————————– ————————————————–
வேண்டும் தொழிலை விரும்பிச் செய்யும் யானைகள் பலவற்றைக் கொடுப்பான்.
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதைய பொத்தி – அகம் 39/6,7
ழைத்த மூங்கில்கள் உரசிக்கொண்டதால், மூங்கில்கழை சொரிந்த ஒள்ளிய தீப்பொறி
மிகுந்த சருகுகளுக்குள் விழுந்து தீ மூள,
2.14
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் – கலி 103/13,14
விண்மீன்கள் தோன்றி ஒளிசிந்தும் அந்திக்காலத்து மேகத்தையுடைய சிவந்த ஆகாயம் போன்று
அழகிய ஒளிர்வு பரந்த வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட காளையும்,
பொறீஇ
(வி.எ) பொறுத்துக்கொண்டு, tolerating
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/11
பொறுத்துக்கொள்ள முடியாத காம நோயை உண்டாக்கியிருக்கிறாய். அதனைப் பொறுத்துக்கொண்டு
நிற்க முடியவில்லை
பொறை
(பெ) 1. பொறுத்தல், தாங்குதல், enduring, forbearing
2. சுமை, பாரம், burden, load
3. பொறுமை, patience, forbearance
4. குன்று, small hill, hillock
5. பாறை, rock
6. போற்றாரைப் பொறுத்தல், forbearing those who don’t praise
1
பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 30
பொலிவினையுடைய மகரக்குழையினுடைய அசைவினைப் பொறுத்தல் அமைந்த காது
2
தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் – பெரும் 77-80
வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட
சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே – செல்கின்ற
3
முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே – நற் 59/8-10
முல்லையின்
நுண்ணிய அரும்பு மலர்ந்த புறவின்கண்ணதாகிய ஊரிலிருந்தாலும்
அவளுள்ளம் பொறுமையைக் காத்துநிற்கிறது, இனியும் தாமதித்தால் மிகவும் வருந்துவள்.
4
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை – நற் 157/8
சிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
5
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து
குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் அ
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர் – நற் 95/5-7
பெரிய பாறையின் கண்ணுள்ள மூங்கில் மீது ஏறி விசைத்து எழுந்து
குறவர்களின் சிறுவர்கள் தாளம் கொட்டும் அந்தக்
குன்றின் அகத்தது கூட்டமான காவற்காடு சூழ்ந்த சிற்றூர்;
6
பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் – கலி 133/14
பொறை எனப்படுவது தம்மைப் போற்றாதவரையும் பொறுத்துக்கொள்ளுதல்,
பொறைமரம்
(பெ) காவுதடி, காவடி, weight carrying balancing pole
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு
சாந்தம் பொறைமரம் ஆக நறை நார்
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு – அகம் 282/8-10
வெவ்வேறாகிய மூன்று பண்டங்களையும் ஒரு சேரக் காவிக்கொண்டு
சந்தனமரம் காவு மரமாக, நறைக்கொடியாகிய நாரினால்
வேங்கை மலரைத் தொடுத்த கண்ணியையுடையனாய் இறங்கிவரும் நாட்டையுடைய நம் தலைவனுக்கு
பொறையன்
(பெ) சேர அரசரின் இரு மரபினரில், ஒரு மரபினர், one of the two lineages of ceRA kings
சேர மன்னர்கள், திதியன் மரபினர், இரும்பொறை மரபினர் என இருவகைப்படுவர்.
அவர்களுள் இரும்பொறை மரபினரைப் பொறையன் என்று அழைப்பது வழக்கம் என்று தெரிகிறது.
1.
மாந்தரம் பொறையன் கடுங்கோ என்பவனே, இரும்பொறை மரபினரின் முதல்வனாதல் வேண்டும்
என ஆராய்ச்சியாளர் கருதுவர்.
மாந்தரன் ஆண்ட நாடு, அவன் காலத்தே வாழ்ந்த பிற அரசர், அவன் பெற்ற வெற்றிகள், இன்ன பிற
வரலாறுகள் எதையும் அறியம் சான்றுகள் கிடைத்தில. இவனைப்பற்றிய குறிப்புகள் பதிற்றுப்பத்து 90,
அகநானூறு 142 ஆகிய பாடல்களில் கிடைக்கின்றன.
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக – பதி 90/12,13
அறவோர் வாழ்த்த, நன்றாக ஆண்ட
வெற்றியையுடைய மாந்தரன் என்பவனின் சிறந்த வழித்தோன்றலே!
நிறைஅரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்ற
குறையோர் கொள்கலம் போல – அகம் 142/4-6
நிறுத்தற்கரிய சேனையினையுடைய போர் வெல்லும் மாந்தரம்
பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச்சென்ற
வறியோரது பிச்சையேற்கும் கலம் போல
2.
பொறையன் என்று பெயர்கொண்ட மன்னர்க்குத் தொண்டி என்பது துறைமுகநகரமாக இருந்தது.
திண் தேர் பொறையன் தொண்டி – நற் 8/9
திண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச்
கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல்
தெறல் அரும் தானை பொறையன் பாசறை – நற் 18/4,5
கடற்கரைச் சோலையைக் கொண்ட தொண்டியின் தலைவனான, வெல்லும் வேற்படையையுடைய
கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை – குறு 128/2
திண்ணிய தேரினைக் கொண்ட சேரனின் தொண்டியின் துறைக்கு முன் உள்ள
திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம் – அகம் 60/7
திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டிநகரைப் போன்ற எமது
3.
பசும்பூண் பொறையன்’ என்றும் ‘வென்வேல் பொறையன்’ என்றும் போற்றப்பட்ட பொறையன்
கொல்லி நாட்டில் படை நடத்தினான். கொல்லியை நூறினான் (அழித்தான்). வென்று தனதாக்கிக்கொண்ட பின்
பொறையன் கொல்லி மலைக்கு அரசன் ஆனான்.
இரவலர் மெலியாது ஏறும் பொறையன்
உரை சால் உயர் வரை கொல்லி குட_வயின் – நற் 185/6,7
இரவலர்கள் வருத்தமின்றி ஏறுகின்ற பொறையனாகிய சேரமானின்
புகழ் பெற்ற உயர்ந்த மலையான கொல்லிமலையின் மேற்கே
நிறை_உறு மதியின் இலங்கும் பொறையன்
பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி – நற் 346/8,9
நிறைவோடு பொருந்தி விளங்கும் திங்களைப் போல ஒளிரும் பொறையனின்
மிகவும் குளிர்ச்சியுடைய கொல்லிமலையிலுள்ள சிறிய பசிய காட்டுமல்லிகையின்
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி – குறு 89/4
பெரிய பூணையுடைய சேரனின் அச்சம் மிகுந்த கொல்லிமலையில்
களிறு கெழு தானை பொறையன் கொல்லி – அகம் 62/13
யானைகள் மிக்க படையினையுமுடைய சேரனது கொல்லி மலையின்
மறம் மிகு தானை பசும் பூண் பொறையன்
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை
மா இரும் கொல்லி – அகம் 303/4-6
வீரம் மிக்க சேனையையுடைய பசும் பூண்களையுடைய பொறையனது
மேகம் விரும்பி மழை பெய்த தெய்வம் விரும்பியுறையும் அகன்ற இடத்தினையுடைய
மிகப் பெரிய கொல்லிமலையின் உச்சியில்
துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன்
அகல் இரும் கானத்து கொல்லி போல – அகம் 338/13,14
பகைவரால் கிட்டுதற்கரிய வலியினையுடைய வென்றி பொருந்திய வேலினையுடைய சேரனது
அகன்ற கரிய காட்டினையுடைய கொல்லிமலையைப் போல
4
எனை பெரும் படையனோ சின போர் பொறையன்
என்றனிர் ஆயின் – பதி 77/1,2
எந்த அளவு பெரிய படையைக் கொண்டவன், சினத்துடன் போரிடும் இரும்பொறை
என்று கேட்பீராகில்,
பதிற்றுப்பத்துப் பாடல்களின் எட்டாம் பத்தில் உள்ள இந்தப் பாடல் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
என்ற சேர மன்னனைப் புலவர் அரிசில்கிழார் பாடியது.
5
உறல் உறு குருதி செரு_களம் புலவ
கொன்று அமர் கடந்த வெம் திறல் தட கை
வென் வேல் பொறையன் என்றலின் – பதி 86/1-3
கொட்டிப்படிந்த குருதியால் போர்க்களம் புலால்நாற்றம் வீச,
பகைவரைக் கொன்று போரில் வென்ற மிகுந்த திறம் பொருந்திய பெரிய கையையும்,
வெற்றியையுடைய வேலினையும் கொண்ட பொறையன் என்று எல்லாரும் சொல்லுவதால்
சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல்
ஒய்யும் நீர் வழி கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால் அளியே – பதி 87
செல்வாயாக பாடினியே! நல்ல அணிகலன்களைப் பெறுவாய்!
சந்தனம், அகில் ஆகியவற்றின் கட்டைகளோடு பொங்குகின்ற நுரையையும் சுமந்துகொண்டு,
தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், நுரையால் வெண்மையான தலையைக் கொண்ட சிவந்த புதுவெள்ளம்
இழுத்துக்கொண்டுவரும் நீர்மேல் மிதந்து வரும் வேழக் கரும்பைக் காட்டிலும்
பல வேற்படையினைக் கொண்ட பொறையன் வல்லவன் துணைபுரிவதில்.
பதிற்றுப்பத்துப் பாடல்களின் ஒன்பதாம் பத்தில் உள்ள இந்தப் பாடல்கள் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
என்ற சேர மன்னனைப் புலவர் பெருங்குன்றூர்க்கிழார் பாடியவை.
பொறையாறு
(பெ) ஓர் ஊர், a city
பொறையாறு சங்ககால ஊர்களில் ஒன்று. இக்காலத்தில் தரங்கம்பாடியை அடுத்து உள்ள பொறையாறு என்னும்
ஊர்தான் அது.
சங்ககாலத்தில் பெரியன் என்னும் பெயர் கொண்ட மன்னன் இங்கு இருந்துகொண்டு ஆண்டுவந்தான்.
இவன் சிறந்த கொடைவள்ளல்.
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே – நற் 131/7-9
நறவுண்டு மகிழும் அரச அமர்வையுடைய நல்ல தேரினைக்கொண்ட பெரியன் என்பானின்
தேன் மணக்கும் பொறையாறு என்ற ஊரைப் போன்ற என்னுடைய
என் தலைவியின் நல்ல தோள்கள் மெலிய நீவிர் எம்மை மறப்பதற்கு –
பொன்
(பெ) 1. தங்கம், gold
2. தங்கம் போன்ற நிறத்தது, golden coloured
1
பவள செப்பில் பொன் சொரிந்து அன்ன – அகம் 25/11
பவளச் செப்பில் தங்கத்துகளைச் சொரிந்தது போன்ற,
2
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181
புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற)
மீன்கொத்தியின்
பொன்று
(வி) 1. கெடு, அழி, perish, be ruined
2. இற, die
1
புன் பொதுவர் வழி பொன்ற
இருங்கோ_வேள் மருங்கு சாய – பட் 281,282
வளங்குன்றிய முல்லைநில மன்னர் கிளை(முழுதும்)கெட்டுப்போக,
இருங்கோவேளின் குலம் (முழுதும்)அழிய –
2
கரை கவர் கொடும் கழி கண் கவர் புள் இனம்
திரை உற பொன்றிய புலவு மீன் அல்லதை
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும் – கலி 131/31-33
“கரையை இடித்துக் கவர்ந்துகொள்ளும் வளைவான கழியினில், கண்களைக் கவரும் அழகிய பறவைத் திரள்
அலைகள் மோதுவதால் இறந்துபோன புலால் நாறும் மீன்களையன்றி,
தமக்கு இரையாக உயிருள்ள மீன்களைக் கொன்று உண்ணாத துறையைச் சேர்ந்தவனை, நாம் பாடும்
இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/11
இன்றுதான் இரங்கத்தக்க நான் இறந்தொழியும் நாளோ?