துறை – பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்கு வித்தது; உடம்பட்டதூஉமாம்
மரபு மூலம் – நோயின்று ஆக செய்பொருள்
தன்கடற் பிறந்த முத்தி னாரமு
முனைதிறை கொடுக்குந் துப்பின் றன்மலைத்
தெறலரு மரபின் கடவுட் பேணிக்
குறவர் தந்த சந்தி னாரமு
மிருபே ராரமு மெழில்பெற வணியுந்
திருவீழ் மார்பின் றென்னவன் மறவன்
குழியிற் கொண்ட மராஅ யானை
மொழியி னுணர்த்துஞ் சிறுவரை யல்லது
வரைநிலை யின்றி யிரவலர்க் கீயும்
வள்வா யம்பிற் கோடைப் பொருநன்
பண்ணி தைஇய பயங்கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வ தாயினுந் தெற்கேர்பு
கழிமழை பொழிந்த பொழுதுகொள் ளமையத்துச்
சாய லின்றுணை யிவட்பிரிந் துறையி
னோயின் றாக செய்பொருள் வயிற்பட
மாசிற் றூமடி விரிந்த சேக்கைக்
கவவின் புறாமைக் கழிக வளவய
லழனுதி யன்ன தோகை யீன்ற
கழனி நெல்லின் கவைமுத லலங்க
னிரம்பகன் செறுவில் வரம்பணையாத் துயல்வரப்
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை
யிலங்குபூங் கரும்பி னேர்கழை யிருந்த
வெண்குருகு நரல வீசும்
நுண்பற் றுவலைய தண்பனி நாளே
சொற்பிரிப்பு மூலம்
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை
தெறல் அரு மரபின் கடவுள் பேணி
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
வள் வாய் அம்பின் கோடை பொருநன்
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை
கவவு இன்புறாமை கழிக வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை
இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த
வெண் குருகு நரல வீசும்
நுண் பல் துவலைய தண் பனி நாளே
அடிநேர் உரை
தன்னுடைய தென்கடலில் உண்டான முத்தினால் ஆகிய மாலையும்,
பகைவர் திறைகொடுக்கும் வலிமையையுடய தனது மலையிலுள்ள
யாராலும் அழிக்கமுடியாத மரபையுடைய கடவுளாகிய முருகனுக்குப் பூசையிட்டுக்
குறவர்கள் தந்த சந்தனத்தின் மாலையும் ஆகிய
இரண்டு பெரிய மாலைகளையும் அழகுற அணிந்திருக்கும்,
செல்வம் விரும்புகின்ற மார்பின் பாண்டியனின் படைத்தலைவனான –
குழியில் (விழவைத்துப்) பிடித்த பழக்கப்படாத யானைகளை
விலங்கு மொழியால் புரியவைக்கும் குறுகிய பொழுதில் அன்றி,
(மற்ற நேரங்களில்)தனக்கெனக் கொள்ளும் நிலை இன்றி இரவலர்களுக்கு ஈயும்,
கூர்மையான வாயைக்கொண்ட அம்பினை உடைய கோடைமலைத் தலைவன் –
பண்ணி என்பான் செய்த பயன் மிகுந்த களவேள்வியைப் போல (க்காட்டிலும்)
சிறந்த பயன் நிகழுமாயினும் – தெற்கே ஏறிச்சென்று
மிகுந்த மழையைப் பொழிந்த ஞாயிறு கொண்ட அதிகாலைநேரத்தில்
வனப்பில் இனிய துணையாகிய இவளைப் பிரிந்துபோய்த் தங்கினால்,
எக்குறையும் இல்லாமல் இருப்பதாக நீ ஈட்டும் பொருள்! நல்ல பக்குவமாக,
குற்றமற்ற தூய்மையான மடிக்கப்பட்ட துணி விரித்த படுக்கையில்
தழுவி இன்புறுதல் இன்றிக் கழிக – வளமுடைய வயல்களில்
தீக்கொழுந்துகளைப் போன்ற தோடுகள் ஈன்ற
வயற்காட்டு நெல்லின் கவைத்த அடியைக் கொண்ட நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலில் வரப்புகளை அணைத்து அசைய,
தனிமைத் துயரைக் கொண்டுவரும், மாலைபொழுதைக் கொண்ட வாடைக் காற்று
மின்னுகின்ற பூக்களைக் கொண்ட கரும்பின் ஓங்கி உயந்த கழையின் மீது இருந்த
வெண்குருகு ஒலி எழுப்பும் அளவுக்கு வீசுகின்ற
நுண்ணிய பல துளிகளைக் கொண்ட குளிர்ந்த பனிக்காலத்து நாட்கள்.
அருஞ்சொற்கள்:
ஆரம் = கழுத்து மாலை; முனை = பகைவர்; துப்பு = வலிமை; தெறல் = அழித்தல்; பேணி = பூஜை செய்து; சந்து = சந்தனம்;
திரு = செல்வம்; வீழ் = விரும்பு; தென்னவன் = பாண்டியன்; மறவன் = படைத்தளபதி; மராஅ = மருவாத என்பதன் மரூஉ, தழுவாத;
மொழி = விலங்கு மொழி; சிறு வரை = குறுகிய நேரம்; வரை நிலை = வரம்பு எண்ணிக்கை; வள் = கூர்மையான; பொருநன் = வீரன்;
பயம் = பயன்; கெழு = சிறந்த; தெற்கு ஏர்பு = தெற்கில் செல்ல; கழி = மிகுதியான; அமையம் = நேரம்; வயின் = இடம்; தூ = தூய;
மடி = மடிக்கப்பட்ட (இரட்டைத்)துணி; சேக்கை = படுக்கை; கவவு = கட்டித்தழுவு; அழல் = நெருப்பு; நுதி = கூர்மையான நுனி;
தோகை = நெல், கரும்பு, வாழை போன்றவற்றின் இலை – (கரும்புச்) சோகை என்பர் இக்காலத்தில்; கவை = கிளைத்துப் பிரி;
முதல் = அடிப்பாகம்; அலங்கல் = அசைந்தாடுவது – இங்கே (அசைந்தாடும்)நெற்கதிர்; வரம்பு = வரப்பு; புலம்பு = தனிமை;
ஏர் = வளர்த்தி; கழை = கரும்பின் தண்டுப்பாகம்; நரலுதல் = கொக்குகள் எழுப்பும் ஒலி; துவலை = நீர்த்தூவலின் துளி.
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
இனிதாக இல்லறம் நடத்திக்கொண்டிருந்த தலைவன், பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்ல நினைக்கிறான். அதற்கு அவன் தேர்ந்தெடுத்த காலம் நடுக்கும் குளிர் கொண்ட கூதிர்காலம். பிரிவு ஒருபக்கம், வாடைக்காற்று ஒருபக்கம் என இருதலைக் கொள்ளி எறும்பாகத் தலைவி தவிக்கப்போகிறாளே என்று தோழி கலக்கம் அடைகிறாள். அதன் விளைவாக அவள் தலைவனிடம் கூறுவதாக அமைந்தது இப்பாடல். இப்பாடலில் ஒரு குழப்பம் உள்ளது. தோழி தலைவனைப் ‘போகக்கூடாது ‘ என்று தடுக்கிறாளா அல்லது ‘போகலாம்’ என்று அவன் போவதற்கு உடன்படுகிறாளா என்பதை உரையாசிரியர்கள் நிச்சயமாகக் கூறவில்லை. இப்பாடலுக்குத் துறைவகுத்தவர்கள் கூறுவது பாடலின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளது. ‘செலவு அழுங்குவித்தது – உடன்பட்டதூஉமாம்’ என்கிறார்கள். செலவு என்பது செல்லுதல். அழுங்குவித்தல் என்பது விலக்கு அல்லது தவிர் எனக் கூறுதல். உடன்பட்டது என்பது சரி என்று சொல்லுதல். இரண்டையும் இப்பாடல் எவ்வாறு குறிக்கும்? அந்த அளவுக்குப் புலவர் சொற்களில் இருபொருள்படப் பாடியிருக்கிறார் எனலாம் (pun on the words). ஒருவர் – உம்மிடம் வாழ்த்துப் பெற வந்தவர் – உமது காலைத் தொட்டு வணங்குகிறார். அவரைத் தூக்கிவிட்டு, “நல்லாயிரு” என்கிறீர்கள். இன்னொருவர் – உமக்குத் தீங்கு இழைத்தவர் – உம்மிடம் போலிச் சமாதானம் பேசுகிறார். “சரி, சரி, போ, போ – நல்லாயிரு” என்கிறீர்கள். அது உண்மையில் வாழ்த்துதலா? அதைப் போலத்தான் இதுவும். இது ஒரு பாலைத்திணைப் பாடல். பொதுவாக, பாலைத்திணைப் பாடல்கள் வரண்டு காய்ந்துபோன நிலத்தைப் பற்றிப் பேசும். ஆனால், இங்கோ, நன்கு வளம் பெற்ற வயல்வெளியும், விளைந்து முதிர்ந்த நெற்கதிரும் பேசப்படுகின்றன. இவை மருதத் திணைக்கு உரியன அல்லவா? பாலைத் திணையில் கொடுமையான கோடைக்காலம் பேசப்படும். இங்கோ கடுமையான பனியைக் கொண்ட வாடைக் காலம் பேசப்படுகிறது. பாலைக்கு உரிய பொழுதினை வரையறுத்த தொல்காப்பியர், ‘பின்பனி தானும் உரித்தென மொழிப’ என்கிறார். பின்பனிக் காலம் வேனிலை ஒட்டியது. ஆனால் இங்கோ வாடையும், கழி மழையும் பேசப்படுகின்றன.
இங்கு பேசப்படும் மழை, தென்மேற்குப் பருவ மழையான கார்கால மழை அல்ல. அது முடிந்த பின் வரும், வடமேற்குப் பருவமழையான கூதிர்கால – ஐப்பசி, கார்த்திகை – அடைமழை. நெற்பயிர்கள் கதிர்விடும் நேரம். மார்கழி கழிந்து தையில் அறுவடை செய்யவேண்டும். இதெல்லாம் குறிஞ்சித் திணைக்குரிய கூதிர்காலத்தைச் சேர்ந்தவை. போதாததற்குத் தெறலரும் மரபின் குறிஞ்சிமலைக் கடவுளான முருகனும், சந்தன மாலை கொணரும் குறவரும் பேசப்படுகின்றனர். பாடலே ‘தன் கடல் பிறந்த முத்தின்’ என்று நெய்தலில் தொடங்குகிறது. மாசில் தூமடி விரிந்த சேக்கையில் புலம்பொடு காத்திருக்கும் தலைவியின் நிலை முல்லைத் திணையை நினைவூட்டுகிறது. ‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’ என்ற தொல்காப்பியரின் விதிவிலக்கு நூற்பாவுக்கு விதியாய் அமைந்திருக்கும் பாடலே ஒரு குழப்பம்தான். ‘சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின்’ என்ற ஒரு அடியில் புலவர் தான் சொல்லவந்ததை அழுத்தமாகக் குறிப்பிட்டு, இது பாலைத் திணையே என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறார். இதைப் போலவே, தோழி தடுக்கிறாளா, உடன்படுகிறாளா என்ற குழப்பத்தையும் அவர் எங்கோ தெளிவுபடுத்தி இருப்பார். அது எங்கு எனப் பார்ப்போம்.
முதலில் பாண்டியனைப் பற்றியும், பின்னர் பண்ணி என்ற படைத் தலைவனைப் பற்றியும் கூறிவிட்டு, பண்ணி செய்த வேள்வியைக் குறிப்பிட்டு, அதனைப் போல அல்லது அதனைவிடச் சிறப்பான பயன் கிடைக்கும் என்றிருந்தாலும், (இவளைப் பிரிந்து செல்லவேண்டாம். எனினும்) இவளைப் பிரிந்து வாழத் துணிந்துவிட்டாய், நீ சேர்க்கும் செல்வம் குறை இல்லாமல் இருப்பதாக என்று தோழி கூறுகிறாள். இது தலைவன் பிரிந்து செல்வதற்கு அரை மனதுடன் உடன்படுவது ஆகிறது. அவ்வாறு உடன்படுவதுபோல் சொல்லிவிட்டு, “இங்க இவதான் பனிக்காலத்துல படுக்கையில தன்னந்தனியா கெடந்து தவிச்சுக்கிட்டு இருக்கப்போறா” என்று தலைவனுக்குக் கேட்கிறமாதிரியும், தனக்குத்தானே புலம்பிக்கொள்வது போன்றும் பாடலைப் புலவர் அமைத்திருக்கின்றார். “பரவாயில்லை, சொத்தும் வேணுமில்லையா? போயிட்டு வாங்க” என்று தோழி சொன்னால் பிரிந்து செல்ல எந்தத் தலைவனுக்குத்தான் மனம் வரும்? எனவே, பாடலின் இறுதியில் வைத்திருக்கும் இந்தப் பொடிவைத்த பேச்சுத்தான் தோழி செலவு அழுங்குவித்தது என்பதை உணர்த்துகிறது.
பாடலின் சிறப்பும் புலவரின் புலமைத் திறனும்
இப் பாடலில் உவமைச் சிறப்புகள் அதிகம் இல்லை. வருணனைகளும் மிகச் சிறந்தவை என்று கூறமுடியாது. உள்ளுறை உவமங்களும் அவ்வாறே. பின் இந்தப் பாடலில் வேறு என்னதான் சிறப்பு இருக்கிறது?
பிரிவுகளில் இருவகை உண்டு. ஒன்று வேனிற் பிரிவு. தலைவன் கடந்து செல்லும் பாதையின் கடுமையையும், கொடுமையையும் எண்ணிப்பார்த்து தலைவி மனம் நடுக்குறுவது வேனிற்பிரிவு. இது உள்ளத்தின் துயரம். கூதிர்காலக் கடும்பனியில் அனைத்து உயிர்களும் தம் துணையைத் தழுவி இன்புறும். அந்த நேரத்தில் தலைவன் இல்லாத தலைவியின் துயர நிலை வாடைப்பிரிவு. இது உடலின் துயரம். இங்கே தலைவியின் துயரம் இதுதான். இதைப் புலவர் எப்படிக் கூறுகிறார் பாருங்கள். பாண்டியன் மார்பில் இருபேராரங்கள் எழில்பெற விளங்கின என்கிறார் புலவர். ஒன்று கடலில் பிறந்த முத்தின் ஆரம். அடுத்தது மலையிற் பிறந்த சந்தனத்தின் ஆரம். இவற்றைக் கூறும்போது, தன் கடற் பிறந்த முத்தின் என்றும் தன் மலை — குறவர் தந்த சந்தின் என்றும் ஒவ்வொரு முறையும் தன் என்று கூறி இவை பாண்டியநாட்டுச் செல்வங்கள் என்று அழுத்தமாய்க் கூறுகிறார் புலவர். இவ்வாறு இந்த இருவகை வளங்களும் மிகுந்த பாண்டிய நாட்டைவிட்டு வெங்கடம் தாண்டி வெளிநாடு செல்லவேண்டிய தேவை இல்லை – பொருள் தேட – என்கிறார் புலவர். திரு வீழ் மார்பின் தென்னவன் என்கிறார் புலவர். திரு என்பதற்கு இலக்குமி என்று உரைகாரர்கள் கூறுவர். சங்க காலத்தில் இலக்குமி வணக்கம் இருந்ததா என்று தெளிவாகத் தெரியவில்லை. பிற்காலத்திய உரைகாரர்கள் தம் கருத்தைப் பாடலில் ஏற்றிச் சொல்லியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
திருமழை தலைஇய இருள்நிற விசும்பின் – மலை 1
என்ற மலைபடுகடாம் பாடலின் முதல் அடிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், ‘செல்வத்தை உண்டாக்கும் மழையைப் பெய்த’ என்றே பொருள் கூறுகிறார். எனவே திரு என்பதற்குச் செல்வம் என்றே பொருள்கொள்ளல் சிறந்தது. முத்தையும், சந்தனத்தையும் பாண்டியன் தேடிப்போய் அடையவில்லை. அந்தச் செல்வங்கள் தாமாக அவனைத் தேடி, விரும்பி வருகின்றன என்கிறார் புலவர். எனவே தலைவன் உள்நாட்டிலேயேதான் பொருளீட்டச் சென்றிருக்கிறான். ஆதலால் அவன் செல்லும் வழியைப் பற்றிக் கவலை இல்லை. தலைவன் சென்ற வழியை எண்ணி இரங்கி அழும் உள்ளத்துயரம் தலைவிக்கு இல்லை. அப்புறம் என்ன? பண்ணி என்பான் களவேள்வி செய்துதான் போரிடச் செல்கிறான். அதற்குப் பயன் இல்லாமலா போய்விடுகிறது? செல்வம் சேர்ப்பதும் ஒரு வேள்வியைப் போலத்தானே. அதன் பயன் வாழ்க்கையைத் துய்ப்பதுதானே. எனவே நோய் இன்று ஆக செய்பொருள் என்று தோழி தலைவனை வாழ்த்துகிறாள். எனவேதான் புலவர் பாலைநிலக் கடுமை பற்றிக் குறிப்பிடவில்லை.
இருப்பினும் பாலைத்திணையைப் பற்றிய பாடலில் பிரிவுத்துயரம் வேண்டுமே! எனவே, அடுத்த வகைத் துயரமான தனிமைத் துயரத்தைப் புலவர் கையிலெடுக்கிறார். இது கம்பிமேல் நடப்பது போன்றது. கொஞ்சம் தவறினாலும் விரகதாபத்தின் பக்கம் சாய்ந்துவிடும். எனவே இதைப் புலவர் வெகு பக்குவமாகக் கையாளுகிறார். அப்பொழுதான் தோகை ஈன்ற கழனி நெல்லின் கதிர்கள் காற்றுக்கு வேண்டுமானால் மேலும் கீழும் ஆடலாம் (அலங்கல்). ஆனால் அவையே வாடைக் காற்று வீசும் வேகத்தில் வரப்பை அணைத்துக்கொண்டு சாய்ந்து ஆடுகின்றனவாம் (துயல்வர). அப்பொழுதுதான் மணவாழ்வைத் தொடங்கிய இளம்பெண்ணுக்கு – அதுவும் மாசில் தூமடி விரிந்த சேக்கையில் படுத்திருப்பவளுக்கு – தலைவனை அணைத்திருக்கும் கவவு இன்பம் கிட்டாத நாட்கள் எவ்வாறு கழியும்? வாடைக் காற்றின் வேகத்தில் குறுகிய வளர்ச்சி கொண்ட நெல்லின் இளங்கதிரே தலைசாய்த்திருக்க, பூத்து முதிர்ந்து, உயர்ந்து வளர்ந்த கரும்பின் கழை எத்துணை வேகத்தில் தலையாட்டும்? அப்போது அதன் உச்சியில் அமர்ந்திருக்கும் வெண்குருகின் நிலை என்ன ஆகும்? வெண்குருகுக்கு அங்கென்ன வேலை என்கிறீர்களா? நெற்பயிர்கள் கதிர்விடும் அளவுக்கு வளர்ந்துவிட்டன. இனிமேல் அவற்றுக்கு ஊடே நுழைந்துசென்று இரைதேட முடியாது. அவை நெருக்கமாகவேறு வளர்ந்திருக்கின்றன (நிரம்பு அகன் செறு). எனவே அருகில் இருக்கும் கரும்பு வயலுக்குச் செல்கிறது குருகு. கரும்பின் உச்சியில் அமர்ந்தவாறு கீழே நீரில் மீன்களைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கிறது. அப்போது அதைச் செய்யவிடாவண்ணம் வாடை வீசிக் கரும்பை அலைக்கழிக்கிறது. இந்தத் துன்பத்தைத் தாங்காத குருகு குரல் எழுப்பித் தன் இயலாமையைத் தெரிவிக்கிறது. தலைவா! செல்வத்தையே எண்ணிக்கொண்டிருக்கிறாயே! இந்த வாடைத் துன்பம் உன்னை மருட்டவில்லையா? என்று தோழி கேட்கிறாற்போல் இல்லையா? எத்துணை நுட்பமாக இதைப் புலவர் கையாளுகிறார் பார்த்தீர்களா?
இதுவே பாடலின் சிறப்பும், புலவரின் புலமைத் திறனும் ஆகும்.
தமிழின் சொல் வளம்
புலவர் காட்டும் ஒரு வயல் காட்சியைப் பாருங்கள்.
————– —————- ————— வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல்லின் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர 17-20
வளமான வயலில், நெருப்புச் சுவாலை போன்ற நெல் இலைகள் ஈன்ற, கழனி நெல்லின் கவைத்த அடியைக் கொண்டு ஆடுகின்ற நெற்கதிர்கள் நிரம்பிய அகன்ற வயலில் வரப்பை அணையாகக் கொண்டு அசைய என்பது இதன் பொருள். இங்கே புலவர் வயல், கழனி, செறு என்ற மூன்று சொற்களையும் அடுத்தடுத்துப் பயன்படுத்துகிறார். இந்த மூன்றனுக்குமே வயல் என்ற பொருளே தரப்படுகிறது. இவற்றுக்கிடையே வேறுபாடு இல்லையா?
கழனி என்பது ஓர் அகன்ற நீர்நிலை விளைநிலம் என்பதைக் குறிக்கும். இதில் நெல் விளையலாம்; கரும்பு விளையலாம்; உப்பும் விளையலாம். கீழ்க்கண்ட அடிகளைப் பாருங்கள்.
நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/2
உப்பு விளை கழனி சென்றனள் அதனால் – குறு 269/6
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய – பதி 50/3
நூற்றுக்கணக்கான வயல்களைக் கொண்ட ஒரு பெரிய நிலப்பரப்பைக் காண்கிறீர்கள் எனக் கொண்டால், உங்கள் கண்ணெதிரே இருப்பது கழனி. மிகப் பரந்த பலவான விளைநிலங்கள். செறு என்பது அந்த வயல்களில் ஒன்று. அது வரப்புடன் கூடியது. அதாவது வரப்புடன் கூடிய வயல்தான் செறு. செறு என்பதற்குப் பாத்தி என்ற பொருளும் உண்டு. பாத்தி என்பது நான்கு பக்கமும் கரைகளைக் கொண்ட ஒரு பகுதிதானே. கணிதத்தில் Open set, closed set என்பர். (1,10) என்பது Open set. இது 1, 10 ஆகியவற்றுக்கிடையேயான எண்களைக் கொண்டது – வரம்பு மதிப்புகளான 1, 10 ஆகியவை இதில் அடங்காது. இதற்கு வளைவான அடைப்புக் குறிகள் இடுவார்கள். எனவே, இது 2,3,4,5,6,7,8,9 ஆகிய எண்களைக் கொண்டது. [1,10] என்று சதுர அடைப்புக் குறிகளுக்குள் இருப்பது closed set எனப்படும். இதில், முந்தைய எண்களோடு, 1, 10 என்பவையும் சேரும். ஒரு வயலை வரப்புகளோடு பார்த்தால் அது செறு. ஒரு செறுவை வரப்புகள் இன்றிப் பார்த்தால் அது வயல். செறு என்பது closed set. வயல் என்பது Open set.
இந்த சொல்வளத்தினூடே புலவரின் மின்னி மினுங்கும் வருணனை நயத்தையும் காணலாம்.
கதிர்விடும் பருவத்தில் உள்ள நெற்பயிரின் இலையை அழல் நுதி அன்ன தோகை என்கிறார் புலவர். அழல் என்பது தீக்கொழுந்து – flame. தோகை என்பது நெல், கரும்பு, சோளம் ஆகிய பயிர்களின் இலைப்பகுதி. இன்றைக்கு அதனைச் சோகை என்பர்.மயிலுக்குத் தோகை மாதிரி, இந்தப் பயிர்களின் இலைகளுக்கும் தோகை என்று பெயர்வைத்த ஒற்றுமைப் பொருத்தம்தான் என்னே! இந்தத் தோகையினின்றும் முளைத்தெழுகிறது நெற்கதிர். எனவே தோகை ஈன்ற … கவைமுதல் … என்கிறார் புலவர். நெற்கதிர் அதன் அடிப்பாகத்திலிருந்து கிளைத்து எழுகிறது என்பதை எத்துணை இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார் புலவர்! விளைந்த நெல்வயல்களைப் பார்த்திருக்கிறீர்களா? இலேசாக வீசும் காற்றில் அந்த இலைகளும், கதிர்களும் இலேசாகத் தலையசைத்து நிற்கும் அழகை நேரில் பார்த்து மகிழவேண்டும்!! எனவேதான் கவை முதல் அலங்கல் என்கிறார்.
இவ்வாறு தனித்தனியாகத் தலையாட்டிகொண்டு நிற்கும் கதிர்கள், வீசுகின்ற பெரும் வாடைக்காற்றில் ஒட்டுமொத்தமாக வரப்பில் சாய்ந்து ஒய்யாரமாய் சாய்ந்தாடம்மா பாடிக்கொண்டிருக்கின்றனவாம். என்ன அருமையான கற்பனை பாருங்கள்!
இதே பகுதியில் அலங்கல், துயல்வர என்று இரு சொற்களைக் காண்கிறோம். அலங்கு என்பதற்கு ஆடு, அசை என்ற பொருள் உண்டு. கழுத்தில் கிடந்து ஆடிக்கொண்டிருப்பதால் மாலையை அலங்கல் என்பர். கழுத்து மாலை அணிந்திருப்பவனை அலங்கல் மார்பன் என்பர். இங்கே கவைத்து வளர்ந்த நெற்பயிர்களை அலங்கல் என்கிறார் புலவர். நீண்டு வளர்ந்த நெற்கதிர்கள் வளைந்தே நிற்கும். அப்போது இலேசாகக் காற்று அடித்தால் அவை சற்றே மேலும் கீழுமாக ஆடும். அதுதான் அலங்குதல். ஒரு சிறிய மரக்கிளையில் ஒரு பெரிய பறவை வந்து அமர்ந்தாலோ, அமர்ந்திருக்கும் பறவை காலை ஊன்றி விசைத்து எழுந்தாலோ அந்தக் கிளை ஆடும் அல்லவா – அதுதான் அலங்கல். ஒரு புள்ளியை ஆதாரமாகக் கொண்டு மேலும் கீழும் அல்லது முன்னும் பின்னும் அசைந்தால் அது அலங்குதல். ஆங்கிலத்தில் இதை swing எனலாம்.
பூ உடை அலங்கு சினை புலம்ப – திரு 298
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 144
என்ற அடிகளால் இதை உணரலாம்.
துயல்வருதல் என்பது பக்கவாட்டில் அசைதல். ஆங்கிலத்தில் இதை sway எனலாம். இலேசான காற்றில் மேலும் கீழும் அலங்கிக்கொண்டிருக்கும் நெற்கதிர்கள், வேகமாக வீசும் வாடைக் காற்றால் மொத்தமாக வரப்பின் மேல் சாய்ந்து “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” என்பது போல் துயல்வருகின்றன என்கிறார் புலவர். மயில் ஆடிக்கொண்டிருக்கிறது. அப்போது காற்று வேகமாக வீசினால் உயர்ந்து விரிந்த தோகைகள் ஒருபக்கமாகச் சாயும் அல்லவா – அதுதான் துயல்வரல்.
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர – நற் 262/2
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர – அகம் 217/5
மணிகிளர் ஆரம் தாரொடு துயல்வர – கலி 135/15
என்பதன் மூலம் இதனை அறியலாம். இன்னும் துளங்குதல், நுடங்குதல் எனப் பலவகையான் சொற்கள் ஆடுதலுக்கும், இயலுதல், இரிதல், இவர்தல், ஊர்தல், துன்னுதல் எனப் பலவகையான சொற்கள் நகர்தலுக்கும் தமிழில் உண்டு என்பதைச் சங்கச் செய்யுள்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். இவை போன்ற சொற்களை மீட்டெடுத்து, அன்றாட வாழ்விலும், பாடப்புத்தகங்களிலும் பயன்படுத்துவதே தமிழை உண்மையில் வளப்படுத்துவதாகும்.