துறை - இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது மரபு மூலம் - உரிதினின் பெயர்தல் வேண்டும் வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப் புள்ளிறை கூரும் மெல்லம் புலம்ப 5 நெய்த லுண்கண் பைதல கலுழப் பிரித லெண்ணினை யாயி னன்று மரிதுதுற் றனையாற் பெரும வுரிதினின் கொண்டாங்குப் பெயர்தல் வேண்டுங் கொண்டலொடு குரூஉத்திரைப் புணரி யடைதரு மெக்கர்ப் 10 பழந்திமில் கொன்ற புதுவலைப் பரதவர் மோட்டுமண லடைகரைக் கோட்டுமீன் கொண்டி, மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளங்கெழு தொண்டி யன்னவிவள் நலனே சொற்பிரிப்பு மூலம் வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய, மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த, முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை, புள் இறைகூரும் மெல்லம் புலம்ப! 5 நெய்தல் உண்கண் பைதல கலுழப் பிரிதல் எண்ணினை ஆயின், நன்றும், அரிது துற்றனையால். பெரும!- உரிதினின் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும் கொண்டலொடு குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் 10 பழம் திமில் கொன்ற புது வலைப் பரதவர் மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கொண்டி, மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே அடிநேர் உரை பெரிய கடல்பரப்பினின்றும் எழும் நீர்த்திவலைகளுக்கு எதிர்நின்ற, விண்மீன்களைக் கண்டாற் போன்ற, மெல்லிய அரும்புகள் மலர்ந்த கூனல்பட்டு முதிர்ந்த புன்னைமரத்தின் பெரிதாய் நின்ற கரிய கிளைகளில் பறவைகள் அடைந்துகிடக்கும் நெய்தல் நிலத் தலைவனே! 5 நெய்தல் மலரைப் போன்று மை உண்ட கண்கள் துன்பத்துடன் கலங்க, (தலைவியைப்)பிரிதலை நினைத்தாயாயின் மிகவும் அரியசெயலைச் செய்யவேண்டியவன் ஆனாய், பெருமானே!, உரிமையுடன் எடுத்துக்கொண்டு உன் ஊருக்குப் போகவேண்டும், கீழ்க்காற்றால் கலங்கி நிறம் மாறிய கடல் அலைகள் உடைக்கும் மணல்மேட்டின் 10 பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர் மேடான மணலால் ஆன அடைகரையில் வந்த சுறாமீனைக் கைப்பற்றி, மணம் கமழும் பாக்கத்தில் உள்ளோருக்குப் பகிர்ந்தளிக்கும் வளம் மிக்க தொண்டியைப் போன்ற அழகிய இவளது நலனை. அருஞ்சொற்கள்: வான் கடல் = பெரிய கடல்; தூவல் = அலையின் நீர்த்திவலைகள்; மீன் = விண்மீன்; ஊழ்த்த = மலர்ந்த; முடவு முதிர் = முடம்பட்ட வயதான; தடவுநிலை = அகன்ற நிலை; மா = கரிய/பெரிய; சினை = கிளை; புள் = பறவை; இறைகூரும் = நெருக்கமாகக் குடியிருக்கும்; மெல்லம்புலம்பன் = நெய்தல்நிலத் தலைவன்; உண்கண் = மையுண்ட(மையிட்ட) கண்கள்; பைதல = துன்புற்றனவாய்; கலுழ = கலங்க; அழ; துற்றனை = ஒரு காரியத்தை மேற்கொண்டனை; கொண்டல் = கிழக்குக் காற்று (ஊதல் காற்று); குரூஉ = நிறமுள்ள; திரை = வளைந்து எழுகின்ற, புணரி = கடல் அலை; எக்கர் = மணல் மேடு; திமில் = கட்டுமரம், படகு; மோட்டுமணல் = மேட்டுப்பாங்கான மணல்; அடைகரை = அடைத்துவைக்கும் கரை; கோட்டுமீன் = சுறா மீன்; கொண்டி = கொள்ளைப் பொருள்; பகுக்கும் = பகிர்ந்தளிக்கும்; பாடலின் பின்புலமும் பொருள் முடிபும் தலைவியை இரவுக்குறியில் சந்தித்துவிட்டுத் தலைவன் திரும்பும் நேரம். தலைவியின் தோழி, சற்றுத் தொலைவிலிருந்து இவர்களைக் கவனித்துக்கொண்டும், யாராவது வருகிறார்களா என்று கண்காணித்துக்கொண்டும் இருக்கிறாள். இறுதியில், தலைவி கண்கலங்க, தலைவன் விடைபெற்று வருவதைக் கவனிக்கிறாள் தோழி. ஒருவேளை, ‘இனிச் சிறிது நாட்களுக்கு வரமாட்டேன்’ என்று தலைவியிடம் தலைவன் சொல்லியிருக்கிறானோ என்று ஐயப்படுகிறாள் தோழி. தலைவனை எதிர்ப்பட்டுத் தலைவியைச் சீக்கிரம் மணம் முடிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறும் தோழியின் கூற்றாக அமைகிறது அம்மூவனாரின் இந்த நெய்தல் திணைப் பாடல். “மெல்லம்புலம்பனே! தலைவியைக் கண்கலங்கவிட்டு நீ பிரிந்து இருக்க நினைத்தால், ஓர் அரிய செயலைச் செய்யவேண்டியவனாய் இருக்கிறாய். பெரும! தலைவியின் நலனை உன்னுடைய உரிமைப் பொருளாக்கிக்கொண்டு, அவளை உன்னுடைய ஊருக்கு அழைத்துப் போ” என்கிறாள் தோழி. நெய்தல் திணையின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகியவற்றுள், நிலமான கடலும் கடல் சார்ந்த இடமும், பொழுதான புள் உறையும் எற்பாடும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கருப்பொருள்களான புன்னை, நெய்தல் மலர், எக்கர், திமில், கோட்டுமீன், பரதவர், பாக்கம் ஆகியவை இடம்பெற்று, இப்பாடல் நெய்தல் திணைக்குரியதே என்பதை உறுதிப்படுத்துகின்றன. நெய்தல் உண்கண் பைதல கலுழப் பிரிதல் எண்ணினையாயின் என்ற அடிகளில் உரிப்பொருளான இரங்கலும் நேரடியாகவே காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு எல்லாவற்றையும் நேரடியாகக் கூறிக் குறிப்பாக எதனையும் உணர்த்த முயலாத இப் பாடலில் வேறு என்ன சிறப்பு இருக்கிறது? பாடலின் சிறப்பு பாடலில் இரண்டு கடற்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டும் ஒன்றற்கொன்று தொடர்புடையவை. கதிரவன் மறையும் நேரம். இரை தேடிச்சென்ற புள்ளினம் தம் உறைவிடம் திரும்பும் சமயம். கடற்கரையில் ஒரு பெரிய முதிய புன்னை மரம் கோணல்மாணலாய் நின்றுகொண்டிருக்கிறது. தாழ்ந்து நீண்ட அதன் கரிய கிளைகளில் முகிழ்த்திருக்கும் மெல்லிய அரும்புகள் மலரும் நேரம். சடாரென்று ஒரு பெரிய அலை அடைகரையில் மோதித் தெறிக்கிறது. தெறித்த அந்த அலையின் நீர்த்திவலைகள் உயர எழுந்து ஓரத்து மரத்தின் தாழ்ந்த கிளையின் மலர்க்கொத்துகளில் பட்டுச் சிதறுகின்றன. துவலையில் நனைந்த அந்த வெள்ளை அரும்புகள் மாலை வெயில் பட்டுப் பளபளத்து, வானத்து நட்சத்திரங்களைப் போல் மின்னுகின்றன. இதைப் பார்த்த புள்ளினங்கள் இரவுதான் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதோ என்று எண்ணி, மரத்தில் கூட்டங்கூட்டமாய் அடைகின்றன. சங்கப் புலவருக்கே உரித்தான அத்துணை நயத்துடன் அமைந்த வருணனை, ஓர் அழகிய மாலைநேரத்துக் கடற்கரைக் காட்சியை அப்படியே நம் கண் முன் கொண்டுவந்து காட்டவில்லையா? அத்துடன், முடவு முதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை என்று ஒரு முதிய புன்னைமரத்தை ஓவியம்போல வரைந்து காட்டுகிறார் புலவர். சாதாரணமாகவே, ஏனைய மரங்களைப் போல் ஓர் ஒழுங்கான அமைப்பு இன்றி, புன்னைமரங்கள் ஒழுங்கற்ற அமைப்பினவாய் இருக்கும் என்று அறிகிறோம். அதைப் பற்றிய செய்தி இதோ. Mastwood எனப்படும் புன்னை அல்லது புன்னாக மரத்தின் அறிவியல் பெயர் Calophyllum inophyllum. இது வறண்ட மணற் பாங்கான கடற்கரையோரங்களில் வளரக்கூடியது - ஒழுங்கற்ற ஓர் உருவத்தை உடையது – பரந்த கிளைகளை உடையது – நறுமணமுள்ள பூக்களையும், அழகிய இலைகளையும் உடையது - எனத் தாவரவியலார் கூறுகின்றனர் (Calophyllum inophyllum is a low-branching and slow-growing tree with a broad and irregular crown. Because of its decorative leaves, fragrant flowers and spreading crown, it is best known as an ornamental plant) இதோ அந்தப் புன்னை! இத்தகைய புன்னை மரங்கள் நிறைந்த கடற்கரை நிலத்தில் வாழும் மெல்லம் புலம்பனே என்று தோழி தலைவனை விளிக்கிறாள். புன்னைமரக் கிளைகளில் பறவைகள் தங்கும் என்று கூறாமல், முடவு முதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினை புள் இறைகூரும் என்று, புலவர் இங்கே வயதாகி வளைந்து நெளிந்து நிற்கும் ஒரு புன்னை மரத்தைக் குறிப்பிடுவது ஏன்? இப்படிக் கூறுவதன் மூலம் தோழி தலைவனுக்கு ஒரு செய்தியைக் கூற விழைகிறாள். வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய மீன் கண்டன்ன மெல்லரும்பு ஊழ்த்த – மிகுந்த வளம் நிறைந்த கடலின் ஒரு சிறு பகுதி மீன்களைப் பிடித்து வந்து, அதனால் பெரும் செல்வத்தை ஈட்டி, பலரும் புகழ சிறப்பாக வாழ்கின்ற முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச்சினை – பன்னெடுங்காலமாக வாழும் தொன்மையான குடும்பத்தில் , பரந்து விரிந்த கிளையாம் மிக்க உறவினர்களுடன் வாழும் தலைவனின் குடியில் புள் இறைகூரும் – பலவகை ஏவல் இளைஞோரும், காவலரும், பணியாட்களும் அண்டிப்பிழைக்கும் மெல்லம் புலம்ப – நெய்தல் நிலத் தலைவனே! ஆக, தோழி மறைமுகமாகத் தலைவனின் உயர்ந்த குடியைப் போற்றிப் பேசுகிறாள். இருப்பினும் அவள் கூறவந்த செய்தி வேறு. இவ்வாறு பலரும் அண்டிப் பிழைக்கும் உனது குடும்ப மரத்தில் உன் காதல் கிளிக்கு இடம் இல்லாமலா போய்விடும்? எனவேதான், அடுத்த சில அடிகளில், உரிதினின் கொண்டு ஆங்குப் பெயர்தல் வேண்டும் என்று தோழி நேரிடையாகவே தலைவனைப் பார்த்துக் கூறுகிறாள். ‘அதற்கு இப்போது என்ன அவசரம், இன்னும் கொஞ்சநாள் கழித்துப் பார்க்கலாம்’ என்று தலைவன் எண்ணியதாகத் தலைவி கண்கலங்குகிறாள். எனவே, தோழி அடுத்துக் கூறுவது இன்னொரு நெய்தல் செய்தி. “இதோ பார், நீ பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் என் தலைவியும் இலேசுப்பட்டவள் அல்ல. வளம் மிக்க தொண்டிப் பட்டினத்தைப் போன்ற சிறப்பு மிக்கவள்” என்கிறாள் தோழி. தொண்டி என்பது மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்த முக்கியமான துறைமுகப் பட்டினம் ஆகும். இறக்குமதியாக வந்து சேரும் வெளிநாட்டுப் பண்டங்களும், ஏற்றுமதிக்காக வந்து குவிந்திருக்கும் உள்நாட்டுப் பொருள்களும், மேலை நாட்டு வணிகர்களும் உள்நாட்டுச் சாத்தர்களும் நிறைந்து மிக்க செல்வம் கொழிக்கும் ஊராக அது இருந்தது. அதைப் போன்ற பலவித நற்குணங்களும், அழகும் நிறைந்தவள் உன் காதலி என்கிறாள் தோழி. ஆனால் தலைவன் அங்கு வந்துபோவது ஊருக்கே தெரிந்து, ஊர்மக்கள் அலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இனியும் தாமதிப்பது அவளுக்குக் கேடாக முடியும் என்று கூறவருகிறாள் தோழி. கீழ்க்காற்று வேகமாக வீசுவதால் அலைகள் எழுந்து ஆர்ப்பரிக்க, அதனால் கலங்கிப்போன அலைநீர் மோதி உடைக்கும் மேட்டுப்பாங்கான மணற்பரப்பில் (குரூஉத்திரைப் புணரி உடைதரும் எக்கர்) பழைய கட்டுமரங்கள் பயனற்றுக் கிடக்கின்றன. அவற்றை உடைத்து விற்றுப் (பழந்திமில் கொன்று) புதிய வலையைப் பரதவர் வாங்குகின்றனர். கட்டுமரம் இல்லாமல் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லமுடியாதே! எனவே, உயர்ந்த மணல்மேடுகளைக் கரையாகக் கொண்ட உப்பங்கழிகளில் (மோட்டுமணல் அடைகரை) தானாக வந்து மாட்டிக்கொண்ட சுறாமீனை (கோட்டுமீன்) வலைபோட்டு மீனவர் பிடிக்கின்றனர். அதனை வெட்டிக் கூறுபோட்டு பாக்கம் முழுக்கப் பகிர்ந்து கொடுக்கின்றனர் (கொண்டி, மணங்கமழ் பாக்கத்துப் பகுக்கும்). ஆழ்கடலுக்குள் துணிந்து சென்று, வலைகளை அறுத்துச் செல்லும் பெரும் மீன்களையும் வளைத்துப் பிடித்து வந்து, ஊருக்கே கொடுத்தால் அது பரதவருக்குப் பெருமை. ஆனால், இப்படியும் பரதவர் இதே தொண்டியில் இருக்கிறார்களே என்னும் வகையில் தோழி பேசுவதன் மறைபொருள் என்ன? காதல்வயப்பட்ட நீ, துணிவுடன் உன் காதலியைக் கடிமணம் செய்திருக்கவேண்டும். அது ஊருக்குத் தெரிந்தால் ஊரே உன்னை மெச்சும். மாறாக, கீழைக்காற்று எலும்பை ஊடுருவி நடுக்குவது போல, தலைவி வீட்டாரின் எதிர்ப்பு உன்னை நடுக்குகின்றது. கலக்கமுற்ற உன் மனம் உன் மனவுறுதியை உடைத்துவிட்டது. உன் நேரிய ஒழுக்கத்தைத் தொலைத்துவிட்டாய். காதலியை இரவுநேரத்தில் வந்து காணப் புதிய உபாயங்களைத் தீட்டுகிறாய். உன் காதல் வலையில் வலிய வந்து விழுந்த தலைவியுடன் களவொழுக்கம் கொண்டு – அதனையும் பலர் அறியச் செய்து – பலரும் அலர் கூறும்படி செய்துவிட்டாய். இப்படியாக நேரிடையாகத் தலைவனிடம் சொல்லாமல், தொண்டியைப் பற்றிக் கூறுவது போல் தோழி உள்ளுறையாகக் கூறுகிறாள். வீட்டில் சில பெரியவர்கள் தவறு செய்த இளையோரைக் கடிந்துரைத்து, ‘சொல்லுவதைச் சொல்லிவிட்டேன், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்பார்கள். மாடுகளை உழவுக்கோ, வண்டி இழுக்கவோ பழக்குகிறவர்கள், அந்த மாடு தவறு செய்யும்போது சிறிய அளவில் சூடு போடுவார்கள். திரும்பத் தவறு செய்தால் மீண்டும் சூடு போடுவார்கள். அறிவுள்ள மாடுகள் ஒரு சூட்டுடன் கற்றுக்கொடுப்பதைப் புரிந்துகொள்ளும். இவ்வாறு தொடர்புடைய பழமொழி வாயிலாக அறிவுறுத்துவது தமிழ் மரபு. அது போலவே, பழமொழிக்குப் பதிலாகத் தொடர்புடைய ஒரு செய்திவழியாக அறிவுறுத்துவது சங்கச்செய்யுள் மரபு. இத்தகைய உள்ளுறை உவமங்களும் இறைச்சிகளும் செய்யுளுக்கு அழகூட்டுகின்றன. நெய்தல் மலர் போன்ற அவளின் மையுண்ட கண்கள் துன்புற்றுக் கலங்குகின்றன. இவளது நலன் இதுவரை இவள் வீட்டாரின் உரிமையாய் இருந்தது. அவளை மணங்கொண்டு, அவள் நலத்தை உனதாக உரிமைப்படுத்தி, இவளை அழைத்துக்கொண்டு உன் ஊருக்குப்போ என்கிறாள் தோழி. இந்த மையக் கருத்தை 13 அடிகள் கொண்ட பாடலின் 7-ஆவது அடியாக மையத்தில் வைத்து, முதல் 6 அடிகளில் தலைவனின் குடிப்பெருமையைக் காட்டி அவனை உயர்த்தியும், இறுதி 6 அடிகளில் தலைவனது செயலின் சிறுமையைக் காட்டி அவனை இடித்துரைத்தும், தலைவிக்காகப் பரிந்துபேசும் தோழியின் கூற்றாய் அமைந்த பாடலைப் புனைந்திருக்கும் அம்மூவனாரின் கற்பனைத்திறம் வியந்து போற்றற்குரியது.