துறை – பிரிவிடை ஆற்றாளாயினாளென்று பிறர் சொல்லக் கேட்டு வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
மரபு மூலம் – சென்றார் என்பிலர் தோழி
நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி
நிலம்புடை பெயர்வ தன்றுகொல் லின்றென
மன்னுயிர் மடிந்த மழைமா றமையத்
திலையில வோங்கிய நிலையுயர் யாஅத்து
மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்குக்
கல்லுடைக் குறும்பின் வயவர் வில்லிட
நிணவரிக் குறைந்த நிறத்த வதர்தொறுங்
கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்ன
புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண்ணுமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் என்பிலர் தோழி வென்றியொடு
வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கு
மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே
சொற்பிரிப்பு மூலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி
நிலம் புடைபெயர்வது அன்றுகொல் இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேல் கவட்டு இருந்த பார்ப்புஇனங்கட்குக்
கல் உடைக் குறும்பின் வயவர் வில் இட
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே
அருஞ்சொற் பொருள்:
உருப்பு = வெம்மை; அவிர் = மின்னு; மண்டிலம் = சூரியன்; மடங்க = தீய்ந்துபோக; தெறுதலின் = சுடுவதினால்;
ஞொள்கி = குறைபட்டு; புடைபெயர்வது = இடம்பெயர்வது; கவட்டு = கவர்த்த இடத்தில்; பார்ப்பு = குஞ்சு;
குறும்பு = அரண்; வயவர் = போர் மறவர்; கணவிரம் = செவ்வலரிப்பூ, red oleander, என்பு = என்று சொல்லுதல்.
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
இது பாலைத்திணைப்பாடல். பிரிவினால் ஏற்படும் இரங்கலைக் குறித்தது. 15 அடிகள் கொண்ட இப்பாடலில் 11 அடிகளில் பாலைநிலத்தின் கொடுமை கூறப்படுகிறது. இத்தகைய பாலைநிலத்தையும் கடந்து, இவளைவிட்டுப் பிரிந்துசெல்லத்தான் வேண்டுமா என்று சென்றவரைப் பற்றிப் பேசாமல், சென்றவரை நினைத்து வாடும் என் நிலையைப் பற்றியே இந்த ஊர்மக்கள் பேசுகின்றனரே என்ற அங்கலாய்ப்புடன் தலைவி தோழிக்குச் சொல்லுவதாக அமைகிறது இப் பாடல்.
அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி
நிலம் புடைபெயர்வது அன்றுகொல் இன்று என
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து
தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு
விளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய்
நிலம் நிலைபெயருமோ இன்று என
உலகத்து உயிர்கள் மடிந்துபோக மழை அற்றுப்போன இக் காலத்தில்
உருப்பு அவிர் மண்டிலம் என்பது நண்பகல் ஞாயிறு. உச்சிவேளைச் சூரியன் நெருப்பாய்க் கொட்டுவான். ஆனால் சிவந்து இருக்கமாட்டான். எனவே இங்கு சிவந்த என்பதற்கு சினந்த என்றுதான் பொருள்கொள்ளப்படுகிறது. நெருப்பின் சுடும் தன்மை, கடுமை ஆகியவே இங்கு உவமிக்கப்படுகின்றன – அதன் நிறம் அல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் விளைநிலங்கள் கருகிப்போயின என்பதையே புலம்கடை மடங்க என்கிறார் புலவர். புலம் கடை மடங்க – புலங்களின் கடைசிமட்டும் காய்ந்துபோக. ஞொள்குதல் என்பது குன்றுதல் , be abated. ஒரு விவாதம் நெடுநேரம் குன்றாமல் நடந்தால், the argument went on unabated என்று சொல்வர். அப்படியின்றி, போகப்போக வீரியம் (intensity) குறைந்தால் அதுவே ஞொள்குதல். ஞொள்கு என்ற இச் சொல் வேறு எந்த சங்க இலக்கியத்திலும் காணப்படவில்லை. நிலம் சூடு ஆக ஆக, வற்றிச் சுருங்கிப்போய், அங்கங்கே பாளம் பாளமாக வெடித்துப் பிளவினால் பகுதி பகுதியாகத் தரை விலகியிருக்கும். அதுவே ஞொள்கி நிலம் புடைபெயர்வது. மடிந்த என்பதற்கு இறந்துபோன என்ற பொருள் இருந்தாலும், இங்கே தளர்ந்த, ஊக்கம் குன்றிய என்ற பொருளே அமையும்.
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து 5
மேல் கவட்டு இருந்த பார்ப்புஇனங்கட்குக்
இலைகள் இல்லாதுபோய், நிமிர்ந்த நிலையில் உயர்ந்து நிற்கும் யா மரத்தின்
உச்சிக் கவட்டில் இருந்த தன் குஞ்சுகளுக்கு
வெயில் காலமாதலால், மரங்கள் இலை உதிர்த்து நிற்றலால், இலை இல மரம் என்றார். யா மரங்கள் வளைந்து நெளிந்து வளர்வதில்லை. அதனை ஓங்கிய நிலை என்கிறார். அது நிமிர்ந்து நிற்கும் நிலை. மேலும் யா மரங்கள் மிகவும் உயரமாக வளர்பவை. உயர் யா என்கிறார். இவ்வாறு சிறு சிறு சொற்களால் ஒரு பொருளின் ஒவ்வொரு நுணுக்கமான பண்பையும் விவரிக்கும் அழகுதான் சங்க இலக்கியங்களின் தனிச் சிறப்பு. கவடு என்பது கிளைவிட்டுப் பிரிந்து நிற்பது. கவர்த்தல் என்பதுவும் பிரிதல், கிளைவிடுதல்தான். ஆனால், ஒரு பெரிய கிளை நீண்டு செல்ல, அதினின்றும் ஒரு கிளை பிரிந்தால் அது கவர்தல் – branch off. ஆனால் கவடு என்பது ஒரு பகுதி இரண்டு, அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கிளைகளாகப் பிரிதல், divide into two or more like a fork. நமது உடல், இடுப்புக்குக் கீழே இரண்டு தொடைகளாகப் பிரிகிறதே அது கவடு. சடுகுடு ஆடும்போது, “கவட்டுல குடுத்துத் தூக்குடா”என்பர். ஏறக்குறைய மரத்து உச்சியில் இவ்வாறான கவடுகள் காணப்படும். அதனையே மேல் கவட்டு இருந்த என்கிறார் புலவர்.
கல் உடைக் குறும்பின் வயவர் வில் இட
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 10கண் உமிழ் கழுகின் கானம் நீந்திச்
சென்றார் என்பு இலர் தோழி
கல்லை உடைய சிற்றரணில் இருக்கும் மறவர்கள் வில்லால் (அம்பினை) எய்ய
நிணம் ஒழுகும் பொலிவற்ற நிறமுள்ள வழிகள்தோறும்
செவ்வலரி மாலை இட்டவாறு இறந்துகிடந்தாற் போல
புண் சொரியும் குருதி சூழ்ந்து பரவக் கிடந்தோரின்
கண்களை (க் கொத்திச் சென்று) ஊட்டிவிடும் கழூகுகளையுடைய காட்டைக் கடந்து
சென்றார் என்று கூறுதல் இலர், தோழி!
குறும்பு என்பதற்குப் பாலை நிலத்துச் சிற்றூர் என்றும் ஒரு பொருளும் உண்டு. அங்கு வாழும் வயவர் என்றும் கொள்ளலாம். எனினும், கல் உடைக் குறும்பு என்பதால், குறும்பு என்பது சிறிய அரண் என்றே பொருள்படும். பாலைநில வழிகளின் ஓரத்தில், கற்களை அடுக்கிச் சிறிய மதில்போல் எழுப்பியிருப்பர். காட்டு விலங்குகளை வேட்டையாடவும், வழிச்செல்வோரைக் கொள்ளையடிக்கவும் இந்தக் குறும்புகளில் வயவர் ஒளிந்திருப்பர். வழிச்செல்வோர் அருகில் வந்தவுடன் எழுந்துநின்று அவர் மீது அம்பெய்து அவரைக் கொன்று அவரின் பொருள்களைக் கொள்ளையிடுவர். அவரின் பிணங்கள் அங்கேயே கிடக்கும். பொதுவாகக் கழுத்துக்கோ, மார்புக்கோ குறிவைத்து அம்பெய்வர் என்பதால், வீழ்ந்து கிடப்பவரைச் சுற்றிக் குருதி பெருக்கெடுத்தோடியிருக்கும். அது அவர்கள் சிவந்த அரளிப்பூ மாலை சூட்டிக்கொண்டு படுத்திருப்பது போல் தோன்றுகிறதாம். கணவீரம் என்பது செவ்வலரி. இந் நாளில் அலரி என்பது அரளி எனப்படுகிறது. கழுகு, இந்தப் பிணத்தின் கண்ணைத் தோண்டிச் சென்று தன் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும் என்கிறார் புலவர்.
தலைவியை விட்டுப் பிரிந்து, இப்படிப்பட்ட கானத்தைச் கடந்து சென்றுவிட்டாரே தலைவர் என்று ஊரார் தலைவனைப் பழிப்பது இல்லையே என்று இரங்கிக் கூறுகிறாள் தலைவி தன் தோழியிடம். மாறாக, அவனுக்காகவும், அவன் சென்றிருக்கும் வழியின் கடுமையை எண்ணியும் வருந்திப் புலம்பும் தன்னைப்போய் ஊர் பழித்துப் பேசுகிறதே என்பது தலைவியின் குற்றச்சாட்டு.
வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே, 15
(சென்றார் என்பு இலர் தோழி) 12
வெற்றியோடு
வில்லால் (பகைவரை)அழித்து (அவரின் செல்வத்தைத்)துய்க்கும் வலிய ஆண்மையுள்ள வாழ்க்கை உடைய
தமிழ் மன்னர் மூவர் காக்கும்
தமிழ் மொழியின் வேறான மொழிவழங்கும் தேயங்களின் பல மலைகளையும் கடந்து.
(சென்றார் என்பு இலர் தோழி)
புலவர் காலத்திய மூவேந்தரும் மிகச் சிறந்த விற்படையைக் கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. அவர்கள் இந்த விற்படையைக் கொண்டே பகைவரை வீழ்த்தி, அவரின் திறைப் பொருளைப் பெற்றனர் என்றும் தெரிகிறது. வடக்கே வேங்கடமும், மேற்கே குடமலைத்தொடரும் தமிழகத்தைச் சூழ்ந்து இருப்பதால் மொழிபெயர் தேயம் எதற்கும் செல்ல, தமிழர் மலைகளைக் கடந்தே செல்லவேண்டி இருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலை வளப்பமுள்ள தொடர் என்றாலும், அதன் கிழக்குச் சரிவு மழை மறைவுப் பகுதியாக அமைந்துவிட்டதால், மழை மாறு அமையங்களில் அன்றைய தமிழகமும் வேற்று நாடுகளை நம்பியே இருந்திருக்கிறது என்பதுவும் புலனாகிறது. இந்த மூவேந்தர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டுக்கொண்டனர் என்றாலும், வறட்சிக் காலத்தில் இவர்கள் ஒற்றுமையாக இருந்து தம் நிலத்தைக் காத்திருக்கிறார்கள் என்றும், மூவருமே அண்டை நாடுகளிடம் போரிட்டு அவரை வென்று அவரின் செல்வத்தால் தம் மக்களை வாழ்வித்தனர் என்றும் தெரிகிறது.
பாடலின் தனிச்சிறப்பு
பொறியாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று நிலத்திணை புகைப்படக்காரராகப் (landscape photographer) புகழ்பெற்று விளங்கும் திரு. பாலபழனி கூறுகிறார், ”நிலத்தில் அள்ள அள்ளக் குறையாத அழகை நெய்து வைத்திருக்கிறது இயற்கை. குமுறி நிற்கிற மலை, பசுமை போர்த்திய வனம், நீர்க்கோடு போடும் அருவிகள், வளைந்தும் நெளிந்தும் பாம்புபோல ஊர்கிற நதிகள், ரகசியங்களைப் பதுக்கிவைத்தபடி மடிந்துகிடக்கிற பாலைவனங்கள், மண்ணைப் பிளந்து தலைநீட்டிச் சிரிக்கிற செடிகொடிகள் .. ஒவ்வொன்றுக்கும் காரண காரியங்களைத் தேடிக்கொண்டிராமல் இலக்கற்ற நாடோடியைப் போலப் பயணித்து அந்த இயற்கையின் பேரழகில் லயித்துப்போகிறவர்களால்தான் தங்கள் ஆத்துமாவில் கலந்திருக்கிற இயற்கையைத் தரிசிக்க முடியும்.”
இப்படித் தங்கள் ஆத்துமாவில் கலந்துவிட்ட இயற்கையைத் தரிசித்த சங்கப் புலவர்கள் மிகச் சிறந்த நிலத்திணை புகைப்படக்காரர்களாகத் தீட்டியிருக்கும் சொல்லோவியங்களைக் கொண்டவையே சங்க இலக்கியங்கள். இப்பாடலில் அப்படிப்பட்ட நிலத்திணைப் படங்கள் பல இருக்கின்றன.
மழை பெய்யவில்லை. எங்கும் வறட்சி. மன்னுயிரெல்லாம் வாடிவளைந்து நிற்கும் நிலை. வானம் மேகமின்றி வெறித்துக்கிடக்கிறது. சூரியன் நெருப்பைக் கொட்டுகிறது. கண்ணுக்கெட்டியவரை விளைநிலங்களெல்லாம் காய்ந்து சுருண்டுகிடக்கின்றன. வெடித்துப் பிளந்துவிடுமோ என்கிற நிலையில் பூமியே சுருங்கிப்போய்க் கிடக்கிறது. பாடலின் ஆரம்ப அடிகளை நிறுத்தி நிதானமாகப் படித்துப் பாருங்கள்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
‘நிலம் புடைபெயர்வது அன்றுகொல் இன்று’- என
மன் உயிர் மடிந்த, மழை மாறு அமையத்து
வறட்சியின் கொடுமையை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் சொல்லோவியமன்றோ இது. எனவேதான் இவ் அடிகளுக்கு ஆறு புகைப்படங்கள் தேடியெடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கண்களை மூடிக்கொண்டு புலவர் கூறுவதைக் கற்பனை செய்துபாருங்கள். A good photographer makes other people see through his eyes – என்ற வரையறையை அப்படியே நிறுவுவதுபோல் இல்லையா புலவரின் இந்த வருணனை? தான் நேரிலோ அல்லது மனத்தளவிலோ கண்டதை, புலவர் எப்படி உணர்ந்தாரோ அப்படியே நாமும் உணரும் வகையில் சொல்லால் இங்கு வடித்துக்கொடுத்திருக்கிறார். இதுதான் இந்தப் புலவரின் வெற்றி.
Photography is the art of frozen time… the ability to store emotion and feelings within a frame
-Meshack Otieno
என்றும் கூறுவர். இந்த நான்கு வரிகளுக்குள் எத்துணை உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் பொதிந்துவைத்திருக்கிறார் புலவர் என்று பாருங்கள். நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் என்ற தொடரைப் படிக்கும்போதே கண்கூசும் சூரியனின் கடுமையான வெப்பத்தை உணர்கிறோம் இல்லையா?
புலம்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி என்று ஏற்றி இறக்கும்போது நம் மனமே சுருண்டுவிடவில்லையா? நிலம்புடைபெயர்வது அன்றுகொல் இன்று என்ற அடியில் அச்சமும், வியப்பும், நடுக்கமும் ஏற்படவில்லையா? மன் உயிர் மடிந்த என்ற தொடரில் இருக்கும் சோகத்தைப் பாருங்கள். மழை மாறு அமையத்து என்பது எத்தனை ஏக்கத்தைச் சுமந்துநிற்கிறது? வெறும் தட்டையான வருணனையாக மட்டும் இல்லாமல் உயிர்த்துடிப்புள்ள ஓவியமாக அல்லவா இது இருக்கிறது!
அடுத்து அங்குநிற்கும் யா மரங்களைப் பற்றிப் புலர் கூறுவதைப் பாருங்கள். இலை இல என்பது உருப்பு அவிர் மண்டிலத்தால் புலங்கடை மடங்கி மரமே ஞொள்கிப்போய் இருப்பதை the cause and the effect என்ற முறையில் விளக்கி நிற்கிறதே! ஓங்கிய என்ற சொல் நம்மை நிமிர்ந்து பார்க்கவைக்கிறதே! நிலை உயர் என்ற சொற்கள் நம்மை அண்ணாந்து பார்க்கவைக்கிறதே! இவ்வாறு மூன்றே அடைமொழிகளில் ஒரு முழு மரத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் புலவரின் தேர்ந்த சொற்றிறம் நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது.
கல் உடைக் குறும்பின் வயவர் வில் இட
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்
கணவிர மாலை இடூஉக் கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
ஓர் அருமையான landscape photography. தொலைவில் கற்களை அடுக்கி எழுப்பப்பட்ட சுவர் – சற்றுப் பாழடைந்த நிலையில். அதன் பின்னர் வில்லை ஏந்தி நிற்கும் வயவர் நிழலுருவமாகத் தெரிகிறார்கள். அதை ஒட்டி நெடுகச் செல்லும் பாலைநிலப் பாதை. அங்கங்கே மனிதக் குறை உடல் பகுதிகள் – அழுகிய நிலையில். படத்தின் ஒரு பகுதியில் அப்பொழுதுதான் கொல்லப்பட்ட ஒரு மனிதனின் உடல். புடைத்து நிற்கும் அதன் மார்புப் பகுதியிலிருந்து பொங்கிவந்த குருதி கழுத்துப் பக்கங்களில் இறங்கி ஓடியிருக்கிறது – ஒரு செவ்வரளி மாலையைக் கழுத்தில் சுற்றியிருப்பது போல. பார்ப்பவருக்கு (படிப்பவருக்கு) அச்சத்தையும், கழிவிரக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா? பாலபழனி மேலும் கூறுகிறார், “லேண்ட்ஸ்கேப் போட்டோகிராபியில் கலர் முக்கியம். ஒரு காட்சியை மனசுக்கு நெருக்கமா கொண்டுபோக, கண்ணுக்கு மீடியமா இருக்கிறது வண்ணம்தான். வண்ணத்தைச் சிதையாமக் காப்பாத்துறது ஒளி. ஒளியைத் தேர்வுபண்ணக் கத்துக்கிறதுதான் போட்டோகிராபியில் பெரிய தொழில்நுட்பம்”. (குங்குமம் – 3-6-2013, பக்கம்:92-96).
கருங்கல் அரண் – அதன் அருகில் வழிந்தோடும் நிணம். பொலிவற்ற பாலைநிலப் பாதை. மாநிற மேனியில் மாலையாக வழிந்து ஓடிய செங்குருதி. என்ன ஒரு வண்ணக்கலவை! புகைப்படத்தில் வண்ணத்தைக் கண்ணுக்குச் சுமந்து செல்வது ஒளி. செய்யுளில் வண்ணத்தைக் கருத்துக்குச் சுமந்துசெல்வது சொல். பாலபழனியின் சொற்களில் – இந்த சொற்களைத் தேர்வுபண்ணக் கத்துக்கிறதுதான் காட்சிப்படுத்துதலில் பெரிய தொழில்நுட்பம். இதில் கரைகண்டவர்கள் நம் சங்கப் புலவர்கள்.