Select Page

துறை – பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.
.
மரபு மூலம் – பெருமை என்பது கெடுமோ?

நெடுங்கயிறு வலந்த குறுங்கண் ணவ்வலைக்
கடல்பா டழிய வினமீன் முகந்து
துணைபுண ருவகையர் பரத மாக்க
ளிளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி
யுப்பொய் யுமண ரருந்துறை போக்கு

மொழுகை நோன்பக டொப்பக் குழீஇ
வயிர்திணி யடைகரை யொலிப்ப வாங்கிப்
பெருங்களந் தொகுத்த வுழவர் போல
விரந்தோர் வறுங்கல மல்க வீசிப்
பாடுபல வமைத்துக் கொள்ளை சாற்றிக்

கோடுயர் திணிமணற் றுஞ்சுந் துறைவ
பெருமை யென்பது கெடுமோ வொருநாள்
மண்ணா முத்த மரும்பிய புன்னைத்
தண்ணறுங் கானல் வந்துநும்
வண்ண மெவனோ வென்றனிர் செலினே

சொற்பிரிப்பு மூலம்

நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலைக்
கடல் பாடு அழிய இன மீன் முகந்து
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்

ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்
பெரும் களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறும் கலம் மல்க வீசிப்
பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக்

கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறும் கானல் வந்து நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே

அருஞ்சொற் பொருள்:

வலந்த = கட்டு, பிணி; பாடு = பெருமை; ஒய் = கொண்டு செல்; ஒழுகை = ஒழுங்கு வரிசையில் செல்வது,
வண்டித் தொடர்; அயிர் = நுண்மணல்; பாடு = கூறு, பங்கு; கொள்ளை = மிகுதி, பெருக்கம்;
சாற்றி = விலைகூறி விற்று. மண்ணா = கழுவாத;

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

தலைவன் ஒருவன் தன் காதலியைக் கடற்கரைப் புன்னை நிழலில் சந்தித்துச் செல்வது வழக்கம். என்ன காரணமோ, அவன் நீண்ட நாட்களாய் வரவில்லை. அவன் வராத காரணம் தெரியாத தலைவி கலங்கிப்போய் இருக்கிறாள். இந்நிலையில் ஒருநாள் திடீரென அவன் வந்துநிற்கிறான். “எப்பவாவது ஒருதரம் இந்தப் பக்கமும் வந்து, அரும்பு விட்டிருக்கே இந்தப் புன்ன மரம், அதப் பாத்து, ‘எப்படி இருக்க?’–ன்னு கேட்டுட்டுப் போனா கொறஞ்சா போயிடும்?” என்று தோழி தலைவனுக்குக் கேட்கிறாற் போல் தலைவியிடம் கூறுவதாக இப் பாடல் அமைந்துள்ளது.

அடிநேர் உரையும் பாடல் விளக்கமும்

நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலைக்
கடல் பாடு அழிய இன மீன் முகந்து
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி

நீண்ட கயிற்றில் கட்டப்பட்ட சிறிய கண்களையுடைய அழகிய வலையில்
கடலின் பெருமை அழிய மீன்களை முகந்து
துணையுடன் கூடிய மகிழ்ச்சியுடையோரான மீனவ மக்கள்
இளையரும் முதியருமாய்ச் சுற்றத்துடன் கூடி

மீன் வலைகளில் எத்தனையோ வகை உண்டு. இங்கே புலவர் குறிப்பிடுவது நீண்ட கயிற்றில் பிணிக்கப்பட்ட வலை. குறுகிய கண்களை உடையது. எனவே மிகச் சிறிய மீன்களையும் பிடிக்க வல்லது. ஆழ்கடல் மீன்பிடித்தல் அல்லாது கடற்கரை ஓரத்திலேயே மீன் பிடிக்க இம் மாதிரி வலைகள் பயன்படுத்தப்படும். நெடுங்கயிறு – குறுங்கண் முரண்பாடு கவனிக்க. இங்கே பாடு என்பது உயர்வு, பெருமை. உரவுத் திரைகளால் கரையை ஓங்கி அடிக்கும் கடல். எனினும் அதன் வலிமைக்கு அஞ்சாமல் அதன் உட்புகுந்து, அதன் அலைகளின் வீச்சையும் மீறி, துணிச்சலுடன் செயல்படும் மீனவர்கள் கடலின் பெருமையை அழிக்கிறார்கள் என்று புலவர் விதந்தோதுகிறார். இன மீன் என்பது ஒரே வகை மீன் திரள். ஒரே வகையைச் சேர்ந்த மீன்கள் பெருந்திரளாக கடலுக்கடியில் இரைதேடி வரும். அவ்வாறு வரும் மீன்கள் கிடைத்தால் அப்படியே அள்ளிக்கொண்டு வரலாம். அதனையே புலவர் இன மீன் முகந்து என்கிறார். இவ்வாறு இவர்கள் மீனுக்கு வலை போடுவதை ஒரு கூட்டமே கரையில் நின்று வேடிக்கைபார்த்துக்கொண்டு நிற்கும். மீன்கள் சிக்கியவுடன் அவை வலையை இழுக்க முயலும். வலை நீருள் மூழ்கும்போது கரை மாந்தர் தம் கூட்டாளிகளைக் கண்டது போன்ற களிப்புடன் ஆரவாரிப்பர். சிறுபிள்ளைகள் முதல் பெரியோர் வரை அந்த ஊரே அங்கு கூடியிருக்கும்.

உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்                5
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்

உப்பைக் கொண்டுசெல்லும் உமணர் அரிய துறைகளில் செலுத்தும்
வரிசை வண்டிகளின் வலிய காளைகளைப் போலக் குழுமி
நுண்மணல் செறிவாக அடைந்துள்ள கரையில் ஆரவாரத்துடன் இழுத்து

இளையரும் முதியருமாய்க் கூடிய பெருங்கூட்டம் பார்த்துக்கொண்டு சும்மாவா இருக்கும்? கடலை நோக்கி, வலையின் கயிற்றைப் பிடித்து ஆரவார ஒலியை எழுப்பி, ஊர்கூடித் தேர் இழுப்பதைப் போல, வலையைப் பிடித்து இழுக்கத் தொடங்கும். இக் காட்சி உமணர் தொடர்வண்டிகளின் பகடுகளைப் போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார்.

உமணர் என்போர் உப்பு விற்போர். மாட்டு வண்டிகளில் உப்பு மூடைகளை ஏற்றிக்கொண்டு ஊர்ஊராகச் சென்று உப்பு விற்று வருவர். அந்த வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும். சில வறண்ட ஆறுகளைக் கடக்கும்போது, அவை கயிற்றினால் தொடுக்கப்பெறும். துறை என்பது ஆற்றுக்குள் இறங்கும் வழி. ஆற்று மணலுக்குள் இறங்கிய வண்டிகள் மணல் பகுதியைக் கடந்து ஆற்றைவிட்டு வெளியேறும் அடுத்த கரைத் துறையை அடையும்போது மேடான பாதையை எதிர்கொள்ளும். அப்போது அனைத்து மாடுகளும் மிகவும் மும்முரமாக வண்டியை மேட்டில் இழுக்க முனைந்து செயல்படும். கடலிலிருக்கும் மீன் நிறைந்த வலையைக் கரைக்கு இழுக்க முயலும் மீனவர்கள் அந்தக் காளைகளைப் போலக் காட்சியளித்தனர் எனப் புலவர் கூறுகிறார்.

கடலில் நீரை ஒட்டிய நிலப்பகுதியில், அலைகள் மீண்டும் மீண்டும் வந்து தாக்குவதால், அதன் மேற்பரப்பில் இருக்கும் பருக்கை மணல் தள்ளிவிடப்பட்டு, மிகவும் நுண்ணிய மணலைக் கொண்ட பரப்பாகவே அது இருக்கும். ஈரமானஅந்த நுண்ணிய மணல் ஒன்றுக்கொன்று நெருக்கமாகச் சேர்ந்து இறுகிப்போய் இருக்கும். அதனையே அயிர்திணி அடைகரை என்கிறார் புலவர். அயிர் என்பது நுண்மணல் – fine sand.

பெரும் களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறும் கலம் மல்க வீசிப்
பெரிய களத்தில் (நெல்லைக்)குவித்துவைத்த உழவர் போல
இரப்போரின் வெறும் கலன்களில் நிறையச் சொரிந்து

களம் என்பது அறுக்கப்பட்ட நெற்கதிர்களைக் கொண்டுவந்து, அவற்றை அடித்து நெல்மணிகளைத் தனியே குவிக்கும் இடம். அது சிறிய களமாக இருந்தால் ஒரே ஒரு வயலின் கதிர்களை மட்டுமே அடிக்கமுடியும். அதுவே மிகப்பெரிய களமாக இருந்தால், ஒரே நேரத்தில் பல வயல்களில் கதிர் அறுப்பு நடத்திக் களத்துமேட்டில் அடிக்கமுடியும்.அவ்வாறு செய்யும்போது, ஒவ்வொருவர் நெல்லும் தனித்தனியாகக் குவிக்கப்படும்போது, அந்த இடம் பல நெற்குவியல்களைக் கொண்டதாக இருக்கும். அதைப் போலவே, ஒரே வலையில் பிடித்த மீன்களென்றாலும், அது நெடுங்கயிறு வலந்த வலை அல்லவா? அந்தக் கொள்ளை மீன்களைப் பிடித்தவர்கள் பங்குபோட்டுப் பல்வேறு
குவியல்களாகக் குவித்துவைப்பர் – பெருங்களத்து நெல் போல.

ஒரு களத்தில் நெல்லடிக்கிறார்கள் என்றாலேயே வறியவர் அங்கு குவிந்துவிடுவர் – தங்கள் வெறும் கலங்களை எடுத்துக்கொண்டு. நெல்லடித்து முடிந்தவுடன், நெல்லுக்கு உரிமையாளர் முதலில் அந்த வறியவர்களின் பாத்திரங்கள் நிறைய நெல்லை அள்ளித் தருவார். அதைப் போலவே, கடற்கரையிலும் நடக்கிறது என்கிறார் புலவர் – இங்கு நடப்பதுவும் ஒருவகையில் அறுவடைதானே – மீன் அறுவடை!

பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக்                 10
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ

பல கூறுகளாகச் செய்து தாம் கொண்டவற்றை விலைகூறி விற்று
கரை உயர்ந்த திண்ணிய மணற்பரப்பில் தூங்கும் தலைவனே!

வறியோருக்கு முதலில் தானம் அளித்த பின்னர், மீனவர்கள் மீனைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கிறார்கள். இங்கே பாடு என்பது கூறு. அன்றைய மீன்களை அங்கேயே விற்றுக் காசாக்கிவிடுகின்றனர். நெல்லடித்த உழவர், முடிந்தபின் கூலியைப் பெற்றுக்கொண்டு, வீட்டுக்குச் சென்று கேப்பைக் களி உண்பதுபோல – மீன் பிடித்த மீனவர், மீனை அங்கேயே விற்றுவிட்டு, வீட்டிலிருந்து வரும் – என்றோ பிடித்து மீந்த மீனைக் காயப்போட்ட – கருவாட்டுக் குழம்பை உண்பர் போலும்.

வேலை செய்த களைப்பும், உண்ட மயக்கமும் சேர, அவர்கள் கடற்கரையிலேயே தங்கிவிடுகின்றனர். யாரும் தொந்தரவு செய்யாத உயரமான தனி இடத்திற்குச் சென்று – ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் கட்டாந்தரையாய்க் கிடக்கும் மணற்பரப்பில் அவர்கள் படுத்துத் தூங்கிவிடுவர். இந்தக் கூட்டத்தில் நம் தலைவனும் ஒருவன்!

பெருமை என்பது கெடுமோ

நின் பெருமை என்பது குறைந்துபோகுமோ?

அடுத்தடுத்த வீட்டுத் தோழிகள். அதில் ஒருத்தி வீடு மாறிப் போய்விடுகிறாள். நல்ல உயர்ந்த நிலைக்கும் வந்துவிடுகிறாள். முன்பு இருந்த வீட்டுக்கு அடுத்த தெருவரை வந்தாலும் பழைய தோழியைப் பார்க்க அங்கு வரவில்லை. இருவரும் வேறு ஓரிடத்தில் சந்திக்கின்றனர். “எண்டீ, பக்கத்துத் தெரு வரைக்கும் வந்திருக்க – எங்க வீட்டுக்குப் பக்கம் வந்தா கொறஞ்சிபோகுமாக்கும்!” என்கிறாள் – அது இன்றைக்கும் வழக்கம். அதனையே ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் தோழி கேட்கிறாள் – தலைவனைப் பார்த்து.

ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறும் கானல் வந்து நும்
வண்ணம் எவனோ என்றனிர் செலினே                            15

கழுவப்படாத முத்துக்கள் (போல) அரும்பியிருக்கும் புன்னையின்
குளிர்ந்த மணங்கமழும் கடற்கரைச் சோலையில் வந்து, “உம்
அழகு எப்படி இருக்கிறது?” என்றவராய்க் கேட்டுவிட்டுப் போனால்.

“அரும்பு விட்டிருக்கும் இந்த புன்னை மரத் தோப்புக்கு வந்து, ‘என்ன, நலமாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டுவிட்டுப் போனால் – (பெருமை என்பது கெடுமோ?)’ “ என்று தோழி சொல்கிறாள்.

நும் வண்ணம் எவனோ என்பதில் நும் என்பது யாரைக் குறிக்கிறது? தோழி தலைவியையே குறிக்கிறாள் என்று உரைகள் சொல்கின்றன. “அப்பப்ப இந்தப் பக்கம் வந்து, ‘என்ன நல்லா இருக்கீங்களா?’-ன்னு கேட்டுட்டுப் போனா, ஒங்க பெருமை என்ன கொறஞ்சா போயிடும்?”. நும் என்பது தலைவியைக் குறிக்காமல் தலைவியுடன் இருக்கும் தோழியைக் குறிக்கும் என்றும் கொள்ளலாம். தலைவியைச் சந்திக்க வரும் தலைவன், தனிமையில் அவளைச் சந்தித்துவிட்டு, போகும்போது அவளைத் தோழி இருக்குமிடம் வரை கூட்டிச் சென்று, அங்கு அவளை விட்டுவிட்டுப் போவது வழக்கமாக இருந்திருக்கலாம். அப்போதெல்லாம், கடைசியில் ஒரு மரியாதைக்கு, அவன் தோழியைப் பார்த்து, “நும் வண்ணம் எவனோ?” என்று கேட்பது வழக்கமாக இருந்திருக்கும். தலைவன் நீண்ட நாட்கள் வராததால், அவ்வப்போது இங்கு வந்து ‘என்னை நலம் விசாரித்துச் செல்லலாம் இல்லையா’ எனத் தோழி கேட்பது தலைவியைச் சந்திக்க அடிக்கடி வாருங்கள் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடத்தான் என்று கொள்வது சிறப்பாக அமையும்.

இந்த இரு பொருள்களுமே தோழி, தலைவனை நேரிடையாகக் கேட்பதுபோல் அமைந்துள்ளன. ஆனால் பொதுவாக, இத்தகைய தருணங்களில் தலைவனின் வரவை அறிந்திருந்தும், அறியாதவள் போல் அவன் கேட்பத்
தலைவியிடம் கூறுவதுபோல் இவ்வகைக் கூற்றுகள் அமையும். இது சாடைப் பேச்சு. பாரதிராஜா படங்களில் இதனை நிறையக் காணலாம். அப்படி எடுத்துக்கொண்டால், நும் வண்ணம் என்பது புன்னை அரும்புகளைக் குறிப்பதாக
எடுத்துக்கொள்ளலாம். தலைவன் முன்பு வந்திருந்தபோது புன்னை அரும்புவிட்டிருக்கவில்லை. அவன் வராத நீண்ட இடைவெளியில் புன்னை அரும்புகள் விட்டிருக்கிறது. அவை மலராத நிலையில், கழுவப்படாத முத்துக்கள் போல
உருண்டை உருண்டையாக இருக்கின்றன. “நாங்கள்தான் பழைய ஆட்கள். எங்களைப் பார்க்கத்தான் உங்களுக்கு நேரமில்லை. புதிதாய் வந்திருக்கும் இந்த அரும்புகளையாவது வந்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லக்கூடாதா?”
என்று தோழி சாடையாகக் கேட்கிறாள் என்று கொள்வது இன்னும் சிறப்பாக அமையும்.

தோழியின் உள்ளுறை

பதினைந்தே அடிகள் கொண்ட இந்தச் சிறிய பாடலில், 11 அடிகளில் தலைவனின் அன்றாடச் செயலை விவரிக்கிறாள் தோழி. அவன் மீன் பிடித்து, கூறு போட்டு, விற்றுவிட்டு, அங்கேயே தூங்கிப்போய்விடும் செயல்களை விளக்கமாக உரைக்கிறாள். தன் வேலையிலேயே முழுதுமாய் மூழ்கிவிட்ட தலைவனுக்குத் தலைவியைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லை என்று தோழி குத்திக்காட்டுவதாகக் கொள்ளலாம். எனினும் அவள் குறிப்பிடும் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளில் வேறு எதையோ புதைத்துவைத்திருக்கிறாள் போலத் தோன்றுகிறது.

நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலையைத் தூக்கிக்கொண்டு கடலுக்குள் நுழைகிறாயே – பருவக் கயிற்றில் வலந்த பார்வை எனும் குறுங்கண் கொண்ட காதல் வலையைத் தூக்கிக்கொண்டு இந்தக் கானத்துள் வந்தது உனக்கு நினைவிருக்கின்றதா?.

கடல் பாடு அழிய இனமீன் முகந்து வருகிறாயே – பெரும் பீடு கொண்ட குடும்பத்தின் பெருமை அழிய, இனமீனாம் தலைவியைக் காதலால் முகந்துகொண்டது மறந்துவிட்டதா?.

விழுந்த மீனை இழுத்துக் கரை சேர்க்க, ஒழுகை நோன் பகடு ஒப்ப, அடைகரை ஒலிப்ப வாங்குகிறாயே – உன் காதல் வலையில் வீழ்ந்த இவளை உம் வசம் சேர்க்க, தொடர்ந்து முயன்று – ஊரார் அலர் பேச – அவளை
முழுதும் தன்வயமாக்கிக்கொண்டது நினைவிருக்கிறதா?.

பெருங்களத்து நெல்லை, இரந்தோர் வறுங்கலத்தில் நிறைப்பது போல், நீயும் மீன்களை இரப்போருக்கு வாரி வழங்குகின்றாயே – உன்னிடம் வதுவை வேண்டி நிற்கும் இவளுக்கு நீ என்ன செய்தாய்?

பாடு பல அமைத்துக் கொள்ளையைச் சாற்றுகின்றாய் – உன்னால் கூறு பல ஆகிக் கிடக்கும் இவள் மனதையும் அல்லவா கொள்ளையாய் தூக்கிச் சென்றாய்.

உன் வேலை முடிந்த பின்னர் கோடு உயர் திணி மணலில் துஞ்சப்போகிறாயே – உன் வலையில் இவளை வீழ்த்தி முடித்த பின்னர், நீ இப்போது உச்சாணிக் கிளையில் அமர்ந்துகொண்டு, நீண்ட நாட்களாய் வராமல் நிம்மதியாய் ஏன் முடங்கிவிட்டாய்?

– இதுதான் தோழி தலைவனுக்கு மறைமுகமாய் விடுக்கும் கேள்வி.

ஆனால், நேர்முகமாக அவள் விடுக்கும் கேள்விதான் – பெருமை என்பது கெடுமோ?