துறை – பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
மரபு மூலம் – கண்டனென் யானே, புனை நெடும் தேரே
அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி
காயாஞ் செம்மற் றாஅய்ப் பலவுட
னீயன் மூதாய் வரிப்பப் பவளமொடு
மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய
வஞ்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்
திரிமருப் பிரலை புல்லருந் துகள
முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
குறும்பொறை மருங்கின் நறும்பூ வயரப்
பதவுமேய லருந்து மதவுநடை நல்லான்
வீங்குமாண் செருத்தற் றீம்பால் பிலிற்றக்
கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு
மாலையு முள்ளா ராயிற் காலை
யாங்கா குவங்கொல் பாண வென்ற
மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்
செவ்வழி நல்லியா ழிசையினென் பையெனக்
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்நிறுத்
தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே
விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
கல்பொரு திரங்கும் பல்லார் நேமிக்
கார்மழை முழக்கிசை கடுக்கு
முனைநல் லூரன் புனைநெடுந் தேரே
சொற்பிரிப்பு மூலம்
அரக்கத்து அன்ன செம் நிலப் பெரு வழி
காயாம் செம்மல் தாஅய்ப் பல உடன்
ஈயல்மூதாய் வரிப்பப் பவளமொடு
மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆரிடை மடப் பிணை தழீஇத்
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள
முல்லை வியன் புலம் பரப்பிக் கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்றக்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார் ஆயின் காலை
யாங்கு ஆகுவம்கொல் பாண என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்
செவ்வழி நல் யாழ் இசையினென் பையெனக்
கடவுள் வாழ்த்திப் பையுள் மெய் நிறுத்து
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி
கார் மழை முழக்கு இசை கடுக்கும்
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே
அடிநேர் உரை
செவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்
காயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, பலவும் ஒன்றாகச் சேர்ந்து
தம்பலப் பூச்சிகள் வரிசையாக ஊர்ந்துசெல்ல, பவளத்துடன்
நீலமணி நெருங்கி இருந்ததைப் போன்று இருக்கும் குன்றுகள் சூழ்ந்த
அழகிய காட்டின் அரிய வழிகளில் மடப்பமுடைய தம் பெண்மானைத் தழுவி
முறுக்கிய கொம்புகளை உடைய இரலை மான்கள் புல்லை உண்டு தாவி மகிழ
முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக விட்டு, கோவலர்கள்
சிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறிய பூக்களைப் பறித்துச் சூடிக்கொள்ள,
அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்
பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய,
கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற
மாலைக் காலத்திலும் நினைக்கமாட்டார் எனின், காலையில்
என்ன ஆவோமோ பாணனே! என்று சொன்ன
தலைவியின் சொல்லுக்கு எதிர்ச்சொல் சொல்ல முடியாதவனாகி,
செவ்வழிப் பண்ணை நல்ல யாழில் இசைத்தவனாய் மெல்ல,
கடவுளை வாழ்த்தி, துயரத்தை வெளிக்காட்டி,
அவர் வரும்வழியே சென்றேனாக, கண்டேன் யானே
(இழுத்து)விட்ட (அம்பு போன்ற)வேகத்தையுடைய குதிரையின் வேறுபட்ட ஓட்டம் அதிகரிக்க
கற்களில் மோதி ஒலிக்கும் பல ஆரங்களைக்கொண்ட சக்கரம்
கார்காலத்து மழையின் இடிமுழக்கின் ஒலியை ஒக்கும்
போர்முனையே தன் ஊராகக் கொண்ட தலைவனின் புனையப்பட்ட நெடும் தேரினை.
அருஞ்சொற் பொருள்:
காயா = ஒருவகை மரம், Memecylon umbellatum; சமஸ்கிருதத்தில் இது அஞ்சன் எனப்படுகிறது. பூக்கள் கருநீலமுடையவை.
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் என்று கம்பர் உருகுவது இதனை எண்ணித்தானோ?; செம்மல் = வாடிய பூக்கள்;
தாஅய் = பரவி; ஈயன்மூதாய் = தம்பலப்பூச்சி, சிவப்பு நிறமுடையது; மணி = நீல மணி; மிடை = நெருக்கமாய்க் கலந்திரு;
கவைஇய = சூழ்ந்த; ஆரிடை = கடினமான பாதை; உகள = துள்ளிவிளையாட; பொறை = குன்று; பதவு = அருகம்புல்;
மதவுநடை = ஆர்வத்துடன் கூடிய விரைவான நடை; செருத்தல் = பசுவின் மடி; பிலிற்ற = சொரிய; பயிர் = அழை;
மன்று = பசுத்தொழுவம்; பையுள் = துன்பம்; பரி = ஓட்டம்; முடுக = அதிகமாக; இரங்கும் = ஒலிக்கும்; ஆர் = சக்கரத்தின் ஆரம்;
நேமி = சக்கரம்;
பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்
இது முல்லைத்திணைப் பாடல். இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்பதே இதன் உரிப்பொருள். பிரிந்து சென்ற தலைவன் வினை முடித்துத் திரும்பி வரும் வரையில் தலைவி ஆற்றியிருப்பது. ஆற்றுதல் என்பது தணித்தல். பிரிவாற்றாமையால் பொங்கிவரும் துயரத்தை அடக்கிவைத்துப் பொறுத்திருத்தல். பொதுவாக, பிரிந்து சென்ற தலைவன் கார்காலத் தொடக்கத்தில் திரும்பி வருவான். எனவே கார்காலம் என்பதே தலைவன் திரும்பும் காலம் என்றாகிறது. கார் என்பது ஆவணி தொடக்கம். எனவே, ஆவணி பிறந்தவுடன் தலைவி உற்சாகம் கொள்கிறாள். காலையிலிருந்தே தலைவன் வருவதை எண்ணிக் காத்திருக்கிறாள். காலை முடிந்து நண்பகலாகி, எற்பாடும் முடிந்துகொண்டிருக்கிறது. மாலையின் தொடக்கம் 6 மணி. கன்றுகளை விட்டுப் பிரிந்து மேயச் சென்ற ஆநிரைகள் திரும்பும் நேரம். இதோ!, கூட்டமாய் ஆநிரைகள் வேகம் வேகமாக வருகின்றன. அதில் முன்னால் வரும் பசுவைப் பாருங்களேன். கன்றை நினைத்து அதற்கு இப்போதே மடி நிறைந்துவிட்டது. நிறைந்துவிட்ட மடி இருபுறமும் ’தளக் தளக்’ என்று ஆட, மதவு நடை நடந்து ‘அம்மா, அம்மா’என்று கன்றை விளித்துக்கொண்டே தொழுவுக்குள் நுழைகிறது. அதைத் தொடர்ந்து ஏனைய மாடுகளும் விரைந்து தொழுவத்தை நிறைக்கின்றன. வீட்டுப் பெண்டிர் அந்த நேரத்தில் தயாராகச் செம்புடன் காத்திருப்பர். கன்றுகளை முதலில் பசியாறவிட்டு, கோவலர் துணையுடன் அவற்றை இழுத்துக்கட்டிப் பால் கறந்து செம்பை நிறைப்பர். இன்றைக்குத் தலைவிக்கு அதுவும் தோன்றவில்லை. ஒரு பசுமாடு – விட்டுப்பிரிந்த தன் கன்றை நினைத்து – அதுவும் காலையில்தான் சென்ற பசு – எத்துணை விரைவாக நடந்து வருகிறது! – எத்துணை விருப்பமாகக் கன்றினை அழைத்துக்கொண்டு வருகிறது!. நம் தலைவனுக்கு – மாதக்கணக்காக நம்மை விட்டுப்பிரிந்து இருந்தவனுக்கு – நம் நினைப்பே வரவில்லையா? பக்கத்திலிருக்கும் பாணனுக்கு – தலைவனின் தோழனுக்கு – என்ன சொல்வதென்று தெரியவில்லை. “இரவு முழுக்கத் தேரை ஓட்டிக்கொண்டாவது காலையில் வந்துவிடுவாரம்மா” என்கிறான் அவன். “காலைக்குள் என் நிலை என்ன ஆகுமோ?” என்று சொல்லியவண்ணம் தலைவி வீட்டுக்குள் செல்கிறாள். என்ன செய்வான் பாணன்? மேய்க்கும்போது பொழுதுபோக்கத் தன்னிடம் வைத்திருந்த வில்லியாழை மீட்டி, செவ்வழிப் பண்ணை இசைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். “கடவுளே, ஐயா சீக்கிரம் திரும்பனுமே” என்று மனதுக்குள் வேண்டிக்கொள்கிறான். தலைவியின் துயரம் அவனையும் தாக்குகிறது. துயரம் கப்பிய முகத்துடனும், தொய்ந்துபோன நடையுடனும் அவன் மெதுவாகத் தலைவன் வரக்கூடிய பாதை வழியே நடக்க ஆரம்பிக்கிறான். அப்போது தொலைவில் கார்கால மேகங்கள் உறுமுகின்ற முழக்கம் போன்ற ஒலி கேட்கிறது. காற்றெனக் கடுகிவரும் குதிரைகள் இழுத்துவர, அவற்றின் பின்னே கற்களை நொறுக்கிக்கொண்டு விரைந்து வருகிற தலைவனின் தேரைக் காண்கிறான் அவன். இந்த அரிய அனுபவத்தை மறுநாள் மேய்ச்சல் நேரத்தின்போது தலைவனின் நண்பனாகிய பாணன் தன் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகப் பாடலை அமைத்திருக்கிறார் புலவர் ஒக்கூர் மாசாத்தனார்.
கார்காலக் காட்சிகளும் மயக்கும் மாலையும்
கார்காலம் என்பது முதுவேனிலுக்கு அடுத்து வருவது. வேனில் காலத்தில் வறண்டுகிடந்த நிலபுலன்களும், அவற்றில் வாடிப்போய்க் வதங்கிக் கிடக்கும் செடிகொடிகளும், உணவின்றித் துவண்டுபோய்த் தளர்ந்துகிடக்கும் விலங்கினங்களும் முதல் மழையிலேயே புத்துணர்வு பெற்று, புதுப்பொலிவை அடையும் காலம் கார்காலம். வெயில் காலத்தில் பதுங்கிக்கொண்டிருந்த புழுப்பூச்சிகள் மழையைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் வெளியில் வந்து ஊர்ந்துகொண்டும் பறந்துகொண்டும் சுற்றுப்புறத்தை அழகுபடுத்தும். அத்தகைய ஒரு கண்ணுக்கினிய காட்சியை முதல் ஆறு அடிகளில் அழகுற வருணிக்கிறார் புலவர்.
அது முல்லை நிலமல்லவா! செம்மண் பூமியல்லவா! செவ்வரக்கு போல செக்கச் செவேரென்று பரந்திருக்க, அதன் ஊடே வளைந்து நெளிந்து செல்கிறது வண்டிப்பாதை.
அந்தப் பாதையோரத்துக் காயாமரங்களில் ஏற்கனவே மலர்ந்து, பின் வாடிக் கீழே பாதையில் உதிர்ந்து கிடக்கின்றன மணிநிறக் காயா மலர்கள். இந்த நீலநிற காயாஞ் செம்மல்களினூடே வரிசை வரிசையாக ஊர்ந்து திரிகின்றன சிவப்பு நிற ஈயல்மூதாய்கள் எனப்படும் தம்பலப் பூச்சிகள்.
இக்காட்சி, செந்நிறப் பவளங்களுடன் நீலமணியை நெருக்கிக் கட்டிய மாலை போல் இருக்கிறது என்கிறார் புலவர். பவளம் என்பது red coral. நீலமணி என்பது sapphire.
இந்த அழகுக் காட்சியைக் கண்ட பின்னராவது தலைவனுக்குத் தான் அணிந்திருக்கும் பவளமணி மாலை நினைவுக்கு வராதா என்று தலைவி ஏங்குவதாகக் கொள்ளலாம். “ஒருவேளை, தரையில் வாடிக்கிடக்கும் நீல மலர்களில் ஊர்ந்து திரியும் சிவப்புப் பூச்சிகளைப் பார்த்து ரசிப்பதற்குத் தலைவனுக்கு நேரமில்லாவிட்டாலும், அதோ, வயிறு நிறையப் புல் மேய்ந்த மகிழ்ச்சியில் தன் இளைய துணையோடு மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருக்கும் இரலை மானைப் பார்த்த பின்னராவது தலைவனுக்குத் தன் நினைப்பு வராதா?” என்று தலைவன் வரக்கூடிய பாதைகளில் அவன் பார்த்திருக்கக்கூடிய காட்சிகளை மனதிற்குள் கற்பனைசெய்துகொண்டு கனவுலகில் மிதந்துகொண்டிருந்தாள் தலைவி.
அவளை இந்த நனவுலகத்துக்கு இழுத்து வந்தது “அம்மா, அம்மா” என்ற அழைப்புக் குரல். அது ஒரு கறவைப் பசுவின் குரல். விடியற்காலையில், தொழுவத்தை விட்டுக் கோவலர் ஓட்டிச்சென்ற ஆநிரைகள், அகன்று விரிந்த முல்லைக்காடுகளில், மலைச்சரிவுகளில் பூத்துக்கிடக்கும் நறிய மலர்களைக் கொய்து சூடியவாறு அக் கோவலர்கள் விளையாடிக்கொண்டிருக்க, அறுகம்புல்லை ஆர மேய்ந்து, மடி பெருத்துப்போன பசுமாடுகள் பொழுதுசாயும் நேரத்தில் ஊர் திரும்பும்போது, வீட்டை நெருங்கியவுடன் அடங்கா ஆர்வமுடன் தம் கன்றுகளை விளித்தவாறு, தம் மடிக் காம்புகளினின்றும் பால் தானாகச் சொரிய, வேகநடை போட்டு விரைந்து வருகின்றன. தலைவனையே எண்ணி ஏங்கிய வண்ணம் வாசலையே பார்த்துக்கொண்டிருந்த தலைவிக்கு, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல இக் காட்சி கண்ணில் பட்டது.
மாசாத்தனார் வருணனைத் திறன்
தலைவன் திரும்பும் வழியான முல்லைநிலக்காட்சிகளை முல்லைத்திணைக்கு ஏற்ப புலவர் வருணித்திருக்கும் திறனை முன்னர்க் கண்டோம். அடுத்து, பகலெல்லாம் மேய்ந்துவிட்டு மாலையில் திரும்பும் கறவைப் பசுவின் நிலையை அழகுற வருணிக்கும் திறத்தை இங்குக் காண்போம். வீடுகளில் வளரும் கறவைப் பசுக்களுக்கு இன்றைக்கும் அறுகம்புல் உண்ணத்தருவர். அறுகம்புல்லை உண்ட பசுக்கள் நிறையப் பால் தரும் என்பது மக்கள் நம்பிக்கை. வீட்டில் வாங்கிப்போட்ட கட்டுபுல்லுக்கே கறவைப்பசுக்கள் நிறையப் பால்தரும் என்றால், முல்லைப்புலத்தில் பகலெல்லாம் அறுகம்புல்லை மேய்ந்த பசுக்களின் நிலை எப்படி இருக்கும்? அவை வேகம் வேகமாக, ஆர்வம் மிக நடந்துவருவதை, புதவு மேயல் அருந்து மதவுநடை நல் ஆன் என்று புலவர் வருணிக்கும் அழகைப் பாருங்கள்! தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு, கால்களை விரைவுவிரைவாக அடியெடுத்து வைத்து, ஆர்வம் மிக அவை ஓட்டமும் நடையுமாக வருவதை மதவு நடை என்ற ஒரு தொடரால் அவர் குறிப்பிடும் திறம்தான் என்னே! பசுவிலிருந்து பால் கறப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? முதலில் கட்டிக்கிடக்கும் கன்றை அவிழ்த்துவிடுவார்கள். அது ஓடிப்போய், குனிந்து, மடியின் காம்பை வாயில் பற்றிப் பால் குடிக்க முயலும். ஒருசில பசுக்களுக்கு உடனே பால் மடிக்கு இறங்காது. பொறுமை இழந்த கன்றுக்குட்டி, பசுவின் மடியை இரண்டு மூன்று தரம் ஓங்கி முட்டும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாகப் பசு பாலை இறக்கும். பால் இறங்கிய மடி, உருண்டு கனத்து இருக்கும். பால் கறப்போர்க்கு அதுதான் அறிகுறி, உடனே, கன்றை இழுத்துக் கட்டிவிட்டுப் பால்பீய்ச்சத் தொடங்குவர். இப் பாடலில் வரும் பசு – ஏற்கனவே அறுகம்புல்லை வயிறுமுட்டத் தின்ற மாடு – கன்றை நினைத்துக் கடும் நடை போட்டு வருகையிலேயே, மடியில் பால் இறங்கத் துவங்கிவிட்டது. பால் இறங்கிய மடி, வீங்கிப் பெருத்துப் போனது. அதோடு பசு வேகமாக நடப்பதினால், இருபக்கமும் மடி ‘தளக், தளக்’கென்று அடித்துக்கொண்டு ஆட்டமிட, அந்த வேகத்தில் பால் தானாகச் சுரக்கவும் தொடங்கிவிட்டது. பசுவால் பொறுக்கமுடியவில்லை. கன்றைத் திரும்பத் திரும்ப “அம்மா, அம்மா” என்று உரக்க ஒலி எழுப்பி அழைக்கிறது. வீங்கு மாண் செருத்தல் தீம்பால் பிலிற்ற , கன்று பயிர் குரல என்ற சொற்களில் எத்துணை உணர்ச்சிகளைப் புலவர் கொட்டிவைத்திருக்கிறார் பார்த்தீர்களா!
தலைவியுடன் சேர்ந்து தலைவனை வரவேற்க அவனுடைய தோழனான பாணன் தலைவியின் அருகில் நின்றுகொண்டிருக்கிறான். “இந்த மாலையும் தலைவன் வராவிட்டால், நாளைக் காலை என் கதி என்ன ஆகுமோ?” என்று துயரத்தோடு சொன்ன தலைவிக்கு ஆறுதல் மொழி சொல்ல அவனால் முடியவில்லை. தான் வைத்திருந்த முல்லை யாழில் மாலை நேரத்துக்குரிய செவ்வழி என்னும் பண்ணை இசைத்தவாறு தலைவன் வரக்கூடிய வழியில் நடக்க ஆரம்பித்தான். தலைவியின் துயரம் அவனைத் தாக்குகிறது. அத் துயரத்தால் அவன் மேனி தளர்வுறுகிறது. நடை தடுமாறுகிறது. பையுள் மெய்ந்நிறுத்து என்ற பொருள் பொதிந்த சொற்களால் பாணனின் துயர நிலையை நம் கண்முன் காட்டும் புலவரின் திறம்தான் என்னே! அடுத்த அடியில், கண்டனென் யானே என்று அவன் மகிழ்சிக் குரலில் கூவும் சொற்களில்தான் எத்துணை மகிழ்ச்சியைப் பொதிந்துவைக்கிறார் புலவர். “கண்டனென் கற்பினுக்கணியை” என்ற கம்பன் சொற்களுக்கு முன்னோடியாக இது திகழ்வதைக் காண்கிறோம். பாடலுக்குத் திருப்புமுனையாகவும், உச்சகட்ட நிகழ்ச்சியாகவும் புலவர் காட்டும் இக்காட்சிக்கு ஒரு மாறுபாடாக (contrast) அவர் பையுளை முன் நிறுத்தியுள்ள நுட்பத்தைக் கூர்ந்து கவனியுங்கள்!
ஜல்லிக்கட்டில் பாய்ச்சலுக்கு விட இருக்கின்ற காளை, ஒரு குறுகலான பாதையில் அழைத்துவரப்பட்டு, வாடிவாசல் எனப்படும் ஒரு தட்டிக்கதவுக்குப் பின்னால் நிறுத்திவைக்கப்படும். அதற்கு வெளியே மக்கள் கூட்டம் ஆரவாரத்துடன் காத்திருக்கும். மிரண்ட காளை தன்னை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கும் கயிறை அறுத்துக்கொண்டு ஓடத் தயாராகும். ‘சட்’டென்று கதவு திறக்க, கயிறும் விடுவிக்கப்பெறும். காளை விசைப்புடன் பாய்ந்து ஓடும். காளைக்குப் பதில் ஒரு குதிரையை இழுத்துப் பிடித்து நிறுத்தியிருந்தால்? இதைச் சங்கப் புலவர் ஒருவர் ‘விட்ட குதிரை விசைப்பின் அன்ன‘ என்று வருணிப்பார். Surge forward with a sudden jerk என்று இதனைக் கூறலாம். தலைவன் வருகின்ற தேரை இழுத்துவருகின்ற குதிரைகள் இந்த மாதிரி விசைப்பில் வருகின்றன என்பதை, விடுவிசைக் குதிரை விலங்கு பரி முடுக என்று புலவர் குறிப்பிடுவது அந்தப் பாய்ச்சலை அப்படியே நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது அல்லவா!
சொல் விளக்கம்
ஈயல்மூதாய் என்பது ஒருவகைப் பூச்சி என்று முன்னர்க் கண்டோம். இதனைத் தம்பலப் பூச்சி என்றும், இந்திரகோபம் என்றும் உரைகாரர்கள் கூறுவர். இந்திர கோபம் என்பதை cochineal என்று தமிழ்ப்பேரகராதி கூறும். இது ஒருவகைப் புழு. சப்பாத்துக் கள்ளியில் இருக்கும். நிறத்தில் மிகவும் சிவப்பாக இருக்கும் இது மிகச் சிறியது. பொதுவாக ஊர்ந்து திரியாமல் கள்ளியிலேயே இருக்கும். எனவே, இது சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூதாய், ஈயல்மூதாய் ஆக இருக்கமுடியாது. எனவே, ஈயல்மூதாய் என்று இலக்கியங்கள் குறிப்பிடும் பல பகுதிகளை ஆய்ந்ததில் அது Trombidium grandissimum என்ற பெயருள்ள வெல்வெட் பூச்சியே என்று கண்டிருக்கிறேன். அதன் படமும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
செவ்வழி என்பது தமிழிசையில் பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்ற நால்வகைப் பண்களில் ஒரு பண். பண் என்பது இன்றைய கர்நாடக இசையின் இராகம் என்ற சொல்லுக்கு நேரானது என்பர். இது மாலை நேரத்தில் இசைக்கப்படும் என்பர்.
“தமிழிசையில் ‘செவ்வழி’ என்ற ராகம், ‘தொழிலாளர்களின் ராகம்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டது. கடுமையாக வேலை செய்யும் தொழிலாளர்கள் ‘ஏலஏலோ-ஏலஏலோ-ஏலேலோ’ என்ற ராகத்தில் ஏலோலம் பாடி தங்கள் வேலையின் கடுமையை மறப்பார்கள். இந்த ஏலோலப் பாடலின் ராகமே செவ்வழி ஆகும். ‘கீரைத்தண்டு பறிக்க ஏலோலப் பாட்டு எதற்கு’ என்னும் பழமொழி கூட உள்ளது. பொதுவாக கடுமையாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வெயில் காலத்தில் தான் வேலைப்பளு கூடுதலாகத் தெரியும். செவ்வழி ராகமும், வெயில் காலமான சித்திரையில் பாடப்படும் ராகமாகும். செவ்வழிக் காலம் என்பது சித்திரை மாதத்தைக் குறிக்கும். தமிழிசையில் செவ்வழிக்கு இணையான ராகம் கர்நாடக இசையில் யாதுகுலகாம்போதி ஆகும். நன்றி – தினமலர் – அறிவியல் ஆயிரம் – பதிவு செய்த நாள் : மே 12,2011.
முடுகு என்பது முடுக்கு என்பதன் தன்வினை – பழகு என்பது போல. நான் (சைக்கிள்) பழகினேன் – நான் அவனைப் பழக்கினேன் என்பது போல் வரும். முடுக்கு என்பது ஒன்றனை விரைவாகச் செயலாற்றச் செய்தல். வேட்டை நாயை முடுக்கிவிட்டால், அது விரைந்து சென்று இரையைப் பிடித்துக்கொணரும்.
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 177
என்ற மலைபடுகடாம் அடியை நோக்குக. தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் விரைவாகச் செல்லும்போது அவற்றை மேலும் விரைவாகச் செல்லுமாறு ஏவுவது முடுக்குதல். இதைத்தான் முல்லைப்பாட்டு துனைபரி துரக்கும் செலவினர் என்று கூறுகிறது. உரக்க ஒலி எழுப்பியோ, கடிவாளத்தைத் தூக்கித்தூக்கி ஆட்டியோ, சாட்டையைச் சுழற்றி ஒலி எழுப்பியோ குதிரைகளை முடுக்குவதுண்டு. முடுகு என்பது தானாக வேகத்தை மிகுத்துக்கொள்ளுதல். வேட்டைநாய் துரத்திச் செல்லும்போது முயல் வேகமாக ஓடினால், நாய் தன் வேகத்தை இன்னும் மிகுத்துக்கொள்ளுமே அதுதான் முடுகுதல்.
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கதநாய் – நற் 252/10
என்ற நற்றிணை அடியை நோக்குங்கள்.
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து – அகம் 48/20
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக – அகம் 64/6
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக – அகம் 324/13
பாம்பு என முடுகு நீர் ஓடக் கூம்பி – அகம் 390/3
என்ற அடிகளும் இதனை உறுதிப்படுத்தும்.
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக என்ற புலவரின் கூற்று ஆயத்தக்கது.
முயலை விரட்டிச் செல்லும் வேட்டைநாய்க்கு, முன்னால் ஓடும் முயல் ஒரு இலக்கு. முயலுக்கு அதன் பின்னால் வரும் நாய் ஒரு ஆபத்து. எனவே, நாய் நெருங்க நெருங்க முயல் தன் வேகத்தை அதிகரிக்க முயலும். முயல் விலக விலக நாய் தன் வேகத்தை அதிகரிக்கும். எனவே முடுகு விசைக் கதநாய் என்று கூறுவது பொருத்தம்தான். ஆனால், தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் எப்படித் தாமாய் முடுகும்? எப்படியும் இருட்டுவதற்குள் வீடு போய்ச் சேர்ந்துவிடலாம் என்று நம்பிக்கையோடு இருக்கிறான் தலைவன். குதிரைகளும் வேகமாய் ஒடிக்கொண்டிருக்கின்றன. இன்னும் வீடு வரவில்லையே என்ற கவலை தோய்ந்த முகத்துடன் தலைவன் தேரின் முகப்பில் வந்து நிற்கிறான். பொதுவாக அவன் அப்படிச் செய்வது குதிரைகளை முடுக்கிவிடுவதற்காக இருக்கலாம். எனவே, இத் தடவையும் முடுக்குவதற்காகத்தான் தலைவன் அங்கு வந்து நிற்கிறானோ என்று குறிப்பால் உணர்ந்த குதிரைகள், தாமாகவே தங்களின் வேகத்தை அதிகரித்தன. இதைக் குறிக்கத்தான் குதிரை விலங்கு பரி முடுக எனக் குறிப்பிடுகிறார் எனலாம். விலங்கு என்பதற்கு மாறுபடு என்ற பொருள் இங்கே கொள்ளப்படுகிறது. ஏற்கனவே ஓடும் வேகத்தை மாற்றி, இன்னும் வேகமாய் ஓட அவை ஆரம்பிக்கின்றன என்பது இதற்குப் பொருள்.